in ,

விடியலைத் தேடி…(சிறுகதை) – ✍ தெட்சணாமூர்த்தி கரிதரன்(சம்பூர் சமரன்), இலங்கை

விடியலைத் தேடி…(சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 115)

இரவு எட்டு மணியிருக்கும் படிப்பறையின் ஓரத்தில் ஒரு அழுகை குரல். விம்மி விம்மி அழும் சத்தம் கேட்ட பிரபு அங்கு சென்று பார்க்கிறான்.

அங்கே கௌசிகன் புத்தகத்தை மார்போடு அணைத்த வண்ணம் அழுதுகொண்டிருந்தான்.

“ஏன் அழுவுற என்ன நடந்து இங்கு யாரு உனக்கு அடிச்சாங்களா” கௌசிகன் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான்.

மீண்டும் பிரபு, கௌசிகன் அருகில் வந்து “என்ன நடந்த சொன்னா தானே தெரியும், நானும் உண்ட வகுப்பு தான், உன்னையும் எங்க பள்ளிக்கூடத்துல தான் சேர்க்கப் போறாங்க, என்னோட வகுப்புல தான் நீயும் சேர்ந்து படிக்கப் போற, எண்டு ஐயா சொல்லி இருக்கார், திங்கட்கிழமை நம்ம ஒண்ணா தான் பள்ளிக்குப் போவோம்” என்று ஆறுதலாக அருகிலிருந்து சொன்னான்.

அதற்கு பதிலளித்த கௌசிகன், “நான் அம்மா, அப்பாவை விட்டு ஒருநாளும் பிரிஞ்சி இருந்ததில்ல, அதனால தான் கவலையா இருக்கு, அதோட நான் அவங்கள விட்டு எவ்வளவு நாள் இருக்க போறானோ எண்டு நினைக்க பயமா இருக்கு, என்னை வீட்ட போக விடுவாங்களா?”

“நம்ம இப்ப எட்டாம் வகுப்பு படிக்கிறம், ஆனா என்னைய ரெண்டாம் ஆண்டு படிக்கும் போதே கொண்டு இங்க விட்டுதாங்க, எனக்கு அப்பா இல்லை வயலிலே வேலை செய்யக்குள்ள பாம்பு கடிச்சி செத்திற்றாரு, அம்மா என்னை நம்பி என்னைய நல்லா படிக்கணும் எண்டு தான் இந்த ஹோம்ல கொண்டு விட்டாங்க, நானும் முதல் உன்னை போல தான் கிடந்து புரண்டு புரண்டு அழுதன்

தங்கச்சிகளை பார்க்காமல் ஒருமாதிரியா இருக்கும், அப்படியே இருந்து அது பழகி போச்சு, ஒவ்வொரு தவணை தீவுக்கும் வீட்ட போறதுக்கு விடுவாங்க, அப்பத்தான் எனக்கு சந்தோசமா இருக்கும். நீயும் இப்பதானே இங்க வந்திருக்க உனக்கும் போகப் போக அதுவே பழகிடும்” இங்கே இருந்து படிச்சி நல்ல நிலைக்கு வரலாம் எண்டு அம்மா சொல்லுவா”

“ஆ, எனக்கும் தான் வீட்ல சரியான கஸ்டம் ரெண்டு அக்காவும் ஒரு தம்பியும் எனக்கு இருக்கு. நான் நல்லா படிப்பன் ஆனா வீட்டால என்ன படிக்க வைக்க வசதி இல்ல. அதனால எங்க டீச்சர் மூலமா இந்த ஹோம்ல என்னைய அப்பா சேர்த்துவிட்டார். இங்க வாறதுக்கு முதல் சந்தோசமாத்தான் இருந்தன், ஆனா இப்ப வீட்டு நினைப்பாவே இருக்கு அதான் அழுகையா வருது”

“கவலப்படாத இங்க நம்மளப் போல 30 பேர் இருக்காங்க, எல்லோரும் கஸ்டத்தால தான் இங்க வந்து இருக்காங்க, இந்த ஹொம் நல்லம், நல்ல சாப்பாடு, நல்ல இடம், நல்லா கவனிப்பாங்க, இந்த ஹோமுக்கு பொறுப்பான ஐயா நல்ல மனிசன், ஒவ்வொரு நாளும் பின்னேரம் நம்ம எல்லோரையும் பார்க்க வரும் போது வடை, கேக் எண்டு சாப்பிட கொண்டுவருவார். நம்மள நல்லா படிக்க சொல்லுவார்”

“ம்ம்ம்… நானும் நல்லா படிச்சு அம்மா அப்பாவை வைச்சி பாக்கணும், பாவம் அவங்க எங்கள வளர்க்க சரியா கஸ்டப்படுறாங்க”

“சரி நேரம் போயிட்டு நித்திரை கொள்ள போவம், இங்கே எல்லாமே டைம் டேபிள் படிதான் நடக்கும் நம்மளும் அதுக்கு ஏத்த போல நடக்கணும் சரியா”

“ஓம் சரி” என்று இருவரும் நித்திரைக்கு சென்றார்கள். கௌசிகன் மிகவும் கஸ்டப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா சாதாரண கூலித்தொழிலாளி அவனுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனும் உண்டு

கௌசிகன் படிப்பில் கெட்டிக்காரன், பாடசாலையில் எப்போதும் முதலாம் பிள்ளையாகவே வருவான். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கூட வெட்டுப்புள்ளியை விட 2 புள்ளிகள் குறைவாகப் பெற்று சித்தி அடையாமல் விட்டாலும் கூட தனது திறமையை அதில் அவன் வெளிக்காட்டியிருந்தான்.

இப்போது தரம் எட்டில் படிக்கிறான். அவனது எதிர்காலத்தை எண்ணி பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் கவலைப்படுவதுண்டு. நல்லா படிக்கிற பிள்ளை அவனுக்கு நம்ம ஊக்கம் கொடுத்தா நல்லா இருப்பான். என்று அப்பா ஒவ்வொரு நாளும் அம்மாவிடமும் சொல்லுவார்.

கௌசிகனின் வகுப்பாசிரியரிடமும் இது பற்றி கூறினார். வகுப்பாசிரியரும் கௌசிகனிடம் நல்ல அன்பாகப் பழகுவார். அவனின் எதிர்கால படிப்பு பற்றி சிந்தித்து தனக்கு தெரிந்த ஒரு சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மூலமாக அவனை இந்த ஆதரவற்றோர் பிள்ளைகள் படிக்கின்ற இல்லத்தில் சேர்த்து விட்டார்.

அன்று தான் அவனை சேர்த்துவிட்டு பெற்றோர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். ஆனால் பெற்றோரை விட்டுப்பிரிந்து இருக்கின்ற சோகத்தில் கௌசிகன் அழுது கொண்டிருந்து உறக்கத்திற்குச் சென்று விட்டான்

கௌசிகன் இருக்கின்ற இல்லத்து முகாமையாளர் அடுத்த நாளே நகரத்தின் பெரிய ஆண்கள் பாட சாலையில் அவனைச் சேர்த்து விட்டார். முதலில் வகுப்பில் நுழைந்தவுடன் எல்லோருமே  அவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அவனிடம் அவர்கள் பழக்கமானார்கள்

அந்த முறை இடம்பெற்ற தவணைப் பரீட்சையில் வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தான். எல்லோரும் அதிசயித்துப் போனார்கள். அவ்வாறே தொடச்சியாக கா.போ.த சாதாரண தரம் வரை வகுப்பில் முதலாவதாகவே அவன் வந்தான்.

அதிபர் ஆசிரியர் உட்பட எல்லோரிடமும் அவனுக்கு நல்ல மதிப்பு இருந்தது.
கௌசிகனின் இல்லத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு. காலையில் வேன் மூலமாக பாடசாலை  நுழைவாயிலிலேயே கொண்டு விடுவார்கள்

பின்னர் பாடசாலை மூடும் நேரம் வந்து அந்த வேன் ஏற்றிச் செல்லும். நண்பர்கள் பாட சாலைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே யாருடனும் பழக வாய்ப்பில்லை.

மாலை நேர வகுப்புகள் கூட அவர்களது இல்லத்துக்குள் தான் நடைபெறும். இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையுண்டு.

சிலர் தாய் தந்தையை இழந்தவர்கள், தாய் – தந்தை பிரிவு, குடும்ப வன்முறை, குடும்ப ஏழ்மைநிலை மற்றும் விசேட தேவை என்று பல காரணங்கள் அவர்களின் பின்னே இருக்கும்.

இருந்தாலும் இல்லத்தில் ஒரே குடும்பமாக அவ்வப்போது சிறுசிறு சண்டை கோபங்கள், மகிழ்ச்சி என்று தருணங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்.
இங்கு சாப்பாடு சுமாராக இருக்கும், நினைத்த உணவு கிடைக்காது கிடைப்பதை தான் அவர்கள் உண்ண வேண்டும்.

யாராவது ஒருவரின் வீட்டிலிருந்து பார்க்க வரும் போது உணவு கொண்டு வந்தால் அதை ஒன்றாக பகிர்ந்து உண்ணுவார்கள். விடுமுறை தினங்களில் இல்ல முகாமையாளர் பிள்ளைகளை கோயிலுக்குக் கூட்டிச் செல்வார்.

இப்படி சில கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் நிறைந்த இடத்தில் எதற்குமே ஆசைப்படாமல் படிப்பு ஒன்று மட்டுமே தனது எதிர்கால வாழ்வுக்கான மூலதனம் என்று கௌசிகன் கடுமையாக படித்து கா.போ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுடன் சித்தியடைந்தான்.

அவனது குடும்பத்தினர், இல்லத்தினர், அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். தனது சிறுவயதுப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் மிகப் பெரிய வெற்றியாக அவன் இதனை கருதினான்

கௌசிகனின் பாடசாலை அதிபர் மிகவும் கண்டிப்பானவர், அவனிடம் தனி அக்கறை காட்டுவார். உயர்தரம் படிப்பதற்கான பாடப்பிரிவை தெரிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் அவன் கலைப்பிரிவை தெரிவு செய்திருந்தான்.

குடும்பத்தினரோ அவனை வர்த்தகப் பிரிவினை படிக்கச் சொன்னார்கள், ஏனென்றால் அதில் வங்கித்துறை சார்ந்த வேலை வாய்ப்புக்களும் வர்த்தகம் சார்ந்த வேலை வாய்ப்புகளும் அதிகம் உள்ளது என்பதால். ஆனால் அதிபரோ, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அவனை படிக்குமாறு அவனிடம் கூறினார்.

“அதற்கு தன்னால் முடிந்த உதவிகளையும் பெற்று தருவேன்” எனவும் உறுதியளித்தார். என்றாலும் கௌசிகன் தனது மனதையும் முடிவையும் மாற்றிக் கொள்ளவில்லை.

அதிபர் கூறியதையோ அல்லது குடும்பத்தினர் சொன்னதையோ அவன் கேட்கவில்லை, இருந்தாலும் மனதில் ஒரு பயம் பற்றிக் கொண்டது. ஏனென்றால் ஏனைய பாடப் பிரிவுகளை விட கலைப் பிரிவில் அதிக பரீட்சார்த்திகளுடன் போட்டி போட வேண்டும்

அத்தோடு பல்கலைக்கழக வாய்ப்பு என்பது அதிகமானவர்கள் என்பதால் கடினமாக இருக்கும்  எனவே கலைப்பிரிவில் கூடிய திறமையை தான் காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அவ்வாறு வெற்றி பெற முடியாவிட்டால் அதிபர் மற்றும் தன் குடும்பத்தினர் மனவேதனை அடைவார்கள் மேலும் அவர்கள் படிக்கச் சொல்லிய துறையில் முயன்றிருந்தால், உதவியும் கிடைத்திருக்கும் அத்தோடு அவர்களும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

மேலும் வேலை வாய்ப்பும் அதிகமாக இருந்திருக்கும் என்று பலவித எண்ணங்களும் இடையிடையே வந்து சென்றன. இருந்தாலும் தன் விடியலுக்கான வழியை தன் முடிவினாலே கண்டுபிடித்து விடுவேன் என்ற வைராக்கியம் அவனை வலிமைப்படுத்தியது. எனவே கலைத் துறையிலே தனது விடியலினை  அவன் தேட முற்பட்டான்.

கலைப்பிரிவில் படிக்கும் போது இல்லத்தினரால் மாலை நேர வகுப்புக்களுக்குத் கௌசிகன் அனுப்பப்பட்டான். வகுப்பிற்கான கட்டணங்களை இல்லத்தில் ஒரு பகுதியும் வீட்டாரிடமிருந்தும் பெற்றுக் கொண்டான்.

உயரத்திலும் தனது திறமையினால் வகுப்பில் முதலாவதாகவே வந்தான். ஒவ்வொரு தவணை முடிவிலும் மாணவர் தேர்ச்சி அறிக்கை அதிபரால் வழங்கப்படும் போது அவர் கௌசிகனின் தவணை புள்ளிகளை மட்டும் நன்றாக உற்று நோக்கி விட்டு தான் கொடுப்பார்.

இறுதித் தவணையின் போது துரதிஸ்டவசமாக அதிபர் தனது வயது மூப்பினால் ஓய்வூதியகாரராக மாறிவிட்டார். அம்முறை புள்ளிகளை கண்காணிக்க யாருமே இல்லை.

கௌசிகனின் வகுப்பாசிரியர் அவனின் தேவைகளுக்காக அவ்வப்போது பண உதவிகளும் செய்தார். அத்தோடு அவனது நாடகப் பாட ஆசிரியரும் அவனில் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார். அவனை நன்றாக ஊக்குவிப்பார்.

 கட்டாயம் கௌசிகன் பல்கலைக்கழகம் செல்வான் என அடிக்கடி வகுப்பில் உள்ள ஏனைய மாணவர்களிடமும் சக ஆசிரியர்களிடமும் அவர் சொல்லுவார். அவனும் அதற்கேற்றாற் போல் பாடசாலை மட்ட, வலய மட்டப் போட்டிகளிலும் பாடசாலை சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவான்

இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தன்னை அவன் சிறந்த முறையில் தயார்படுத்தி வந்தான். வகுப்பில் உள்ள அவனது நண்பர்களும் அவனுக்கு சில பாடம் சம்பந்தமான நூல்களை கொள்வனவு செய்ய உதவி செய்வார்கள்.

வகுப்பில் ஏனைய நண்பர்களை விட, அவனுடன் நால்வர் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இவர்கள் ஐவரும் இடைவேளை நேரம் கூட ஒன்றாகத் தான் திரிவார்கள்.

அந்நேரங்களில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலையில் பகோடா, பற்றிஸ், வடை, சோடா என பலவகைப்பட்ட உணவுகள் விற்பார்கள். நகரத்துப் பிள்ளைகள் இந்த பாடசாலையில் அதிகம் படிப்பதனால் சற்று பணவசதி கூடியவர்களாக இருந்தார்கள்.

அதனால் மற்றைய பிள்ளைகள் நினைத்த உணவை வாங்கி உண்பார்கள். சிலர் கௌசிகனிடம் பணம் கொடுத்தால் அதை அவன் வாங்கி தனது மேலதிக வகுப்பு கட்டணமாக பயன்படுத்திக் கொள்வதற்காக பத்திரப்படுத்திக் கொள்வான்

நண்பர்கள் ஐவரும் கஸ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிற்றுண்டிச்சாலை பக்கம் செல்ல அவர்கள் எத்தனிப்பதில்லை. சில வேளைகளில் ஐந்து அல்லது பத்து ரூபாய் வரை யாரிடமாவது இருந்தால் இரண்டு பகோடா பக்கெட்டுகளை வாங்கி அதனை ஒன்றாக பகிர்ந்து உண்பார்கள்.

அது தான் அவர்களின் அதிகபட்ச செலவாக இருக்கும். பெரும்பாலும் தண்ணீர் குழாய் அடியில் நிலத்தடி நீர் குழாய் என்பதால் ஒவ்வொருவர் மாறி ஒருவர் தண்ணீர் அடித்து அதனை பருகுவார்கள்.

அந்த தண்ணீர் அவர்களைப் பொறுத்தவரை இடைவேளைக்கான உற்சாக பானமாக இருக்கும், இவ்வாறு பலவித அனுபவங்களை சுமந்தது கௌசிகனின் வாழ்வு. கௌசிகனது இல்லமும் சரி அவனது பாடசாலையும் சரி அதிகமாகவே அவனுக்கு பல அனுபவங்களைக் கொடுத்தது எனலாம்

தன் பாடசாலையின் மீது அவனுக்கு அதிக பற்று இருந்தது. காலை நேர கூட்டத்தில் கூட பாடசாலை கீதம் இசைக்கப்படும் போது ஏதோ நாட்டின் தேசியகீதம் இசைப்பது போல பெருமிதத்துடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கீதத்தை பாடுவான்.

இவ்வாறு காலம் நகர்ந்து உயர்தரப் பரீட்சைக்கான காலமும் நெருங்கி வந்தது. இன்னும் நான்கு மாதங்களே அதற்கு இருந்தன.

 பரீட்சைக்காக எல்லோரும் தீவிரமாக படிக்கின்ற காலப்பகுதியாக அது இருக்கும். சில வகுப்புநிலையங்களில் இறுதிக் கட்ட மீட்டற் பயிற்சிகள் தீவிரமாக இருக்கும்.

அதேநேரம் இறுதி கருத்தரங்குகளும் நடைபெறும். அதிலே அனைத்து பாடங்களையும் ஒரே நாளிலே மீட்டிப்பார்த்து மீட்டற்பயிற்சிகளை வழங்கி அதற்கான விளக்கமும் கொடுப்பார்கள்

கௌசிகன் குறித்த கருத்தரங்கு ஒன்றிற்காக தனது நண்பர்களுடன் சைக்கிளில் நகரத்தின் வீதிவழியே அவசர அவசரமாகச் சென்று கொண்டிருந்த வேளை வளைவான சந்தி ஒன்றில் முன்னே சென்ற சைக்கிளை அவன் சற்று முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்பாராமல் எதிரே வந்த முச்சக்கரவண்டி ஒன்று கௌசிகனின் சைக்கிளோடு வந்து மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துவிட்டது.

கீழே விழுந்தவனின் காலில் முச்சக்கர வண்டியின் முன் சில்லு ஏறிவிட்டது. வலி தாங்க முடியாமல் வீதியில் கிடந்து துடிதுடித்தான். அவனுடன் சென்ற நண்பர்கள் அந்த முச்சக்கர வண்டி சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதே வண்டியில் உடனடியாக அவனை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றார்கள்.

தகவல் அவசரமாக   கௌசிகனின் இல்லத்திற்கும் அவனது வீட்டிற்கும் விரைந்தது. குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு வந்தார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சத்திரசிகிச்சை இடம்பெற்றது. முச்சக்கர வண்டியின் முன்சில்லு காலில் ஏறிச் சென்றதால், கால்எலும்பின் மூட்டுகள் விலகி எலும்பில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள்.

அதைக் கேட்டு அனைவரும் பயந்து போனார்கள், எப்படியும் எழுந்து நடக்க மூன்று மாதங்கள் வரை செல்லலாம் என வைத்தியர்கள் தெரிவித்தார்கள். வைத்தியசாலையில் ஒரு வாரம் இருந்து சிகிச்சை பெற்ற பின்னர் கௌசிகன் இல்லத்தினரின் அனுமதியுடன் அவனது வீட்டுக்கு அனுப்பப்பட்டான

அம்மாவும் அப்பாவும் கௌசிகனது நிலையைக் கண்டு நிதமும் கண்ணீர் விட்டு அழுதார்கள். கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை வைத்தார்கள். தமது பிள்ளை மீண்டும் பூரண நலம் பெற்று வரவேண்டும் என்பதே அவர்களது பிரார்த்தனையாக இருந்தது.

கௌசிகனின் கால் முறிந்தாலும் கூட மனம் முறிந்து தளர்ந்து போகவில்லை. தனது பாடக் குறிப்புகளை வீட்டிற்கு நண்பர்கள் மூலமாக கொண்டு வரச்செய்து, மிகுந்த வேதனை இருந்தாலும் கூட நம்பிக்கையை விடாமல் படிக்க தொடங்கினான்.

காலை மாலை என்று உணவு உண்ணுவதற்கு கூட நேரமில்லாமல் படித்த பாடங்களை கவனமாக குறிப்பெழுதி நன்றாக மனனம் செய்தான்.
ஒரு விடியலுக்கு இவ்வளவு தடைகளா?

பல்கலைக்கழக வாய்ப்பான அந்த விடியலுக்கு இன்னும் அதிகம் போராட வேண்டியிருந்தது. காயமும் வலியும் உடலுக்கு தானே மனசுக்கு இல்லையே! எனவே கனவு சிதைந்து போக அவன் இடம் கொடுக்கவில்லை.

தான் விரும்பித் தெரிந்த அவனது பாடத்துறை எப்படி விடிவு பெறாமல் போகும்;. அவனது தன்னம்பிக்கைக்கு சவாலான தருணம் அது

இவ்வாறு மூன்று மாதங்களாக உழைத்த கடின உழைப்பின் அரங்கேற்றம் உயர்தரப் பரீட்சையின் போது அரங்கேறியது. கௌதமின் உடல் இப்போது சற்று தேறிவிட்டது. மனமும் அதை மீறிவிட்டது.

எவ்வித சலனமுமின்றி உயர்தரப் பரீட்சையை சிறப்பாக செய்து முடித்தான். பரீட்சைப் பெறுபேறு வருவதற்கான காலம் வரும் வரை இலக்கிய வானில் சற்று சஞ்சரித்தான்.

கவிதை, கட்டுரைகள் என அதிகம் எழுதினான். அதற்கான அங்கீகாரமும் ஆங்காங்கே சில இடங்களில் அவனுக்கு கிடைத்துக் கொண்டு தான் இருந்தது.

இன்று பரீட்சையின் முடிவுகள் வெளிவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்போடு கௌசிகனும் அவனது குடும்பத்தினரும் காத்திருந்தார்கள்.

மாலை ஆறு மணியளவில் பரீட்சை முடிவுகள் வெளியாகின. கைபேசியின் ஊடாக தனது சுட்டெண்ணை பதிவு செய்து விட்டு கண்களை மூடிக் கொண்டான். எங்கும் இருள்மயம் அவன் உலகம் இருண்டிருந்தது.

பரீட்சை முடிவுகள் தொலைபேசி திரையில் விழுந்தது. கண்களைத் திறந்தான் உலகமும் விடிந்தது. இருள் விலகியது, அவனது உழைப்பின் அறுவடை மிகை விளைச்சலை கொடுத்திருந்தது

ஆம், மாவட்ட நிலையில் முப்பத்தியொராவது இடம் கிடைத்திருந்தது. இரண்டு அதிவிசேட சித்திகள் ஒரு விசேட சித்தியும் பெற்றிருந்தான். மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதித்தது. கால்கள் துள்ளிக்குதிக்க முடியாமல் தடுமாறியது.

குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சந்தோஷ மிகுதியால் அப்பா கடைக்கு சென்று பட்டாசு வாங்கி வந்து கொளுத்தினார். கௌசிகன் தொலைபேசியை எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முதல் அழைப்பாக தனது அதிபரை அழைத்து தனது உயர்தர பரீட்சை பெறுபேற்றை கூறினான்

அதிபர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்

“பரவாயில்லை நாங்க சொல்லியும் கேட்காம நீ உண்ட விருப்பத்துக்கு தேர்ந்தெடுத்த பாடப்பிரிவில் வென்று விட்டாய் மகனே, உனக்கு விடியல் பிறந்து விட்டது” என்று வாழ்த்தினார்.

பல்கலைக்கழக வாய்ப்பு நிச்சயமாக உண்டு எனவும் கூறினார். அதை கேட்டவுடன் கௌசிகனுக்கு அவனது விடியலை வென்றுவிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

இவ்வளவு நாட்களாக குடும்ப வறுமையை தாங்கிக் கொண்டு ஆதரவற்றோர் இல்லத்தின் ஆதரவையும் ஏற்றுக் கொண்டு நல்ல பல உள்ளங்களின் உதவியினையும் பெற்று தன் வாழ்வு விடிந்து அதிகாலை விடியலின் கீற்றுக்கள் வானில் தெரிவதைப் போல மனதிலே புது வசந்தம் பிறந்தது.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. விடியலைத்தேடி .சிறுகதை.
    கதைஆசிரியர்.தெட்சிணாமூர்த்திகரிதரன் (சம்பூர் சமரன்.)
    அழகான கதை..ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்துனை ஏழ்மை நிலையில் இருந்தாலும் .அவன் ஜெயிக்க வேண்டும் வாழ்வில் என முடிவு செய்து முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றியை தொடலாம் .என்ற நல்ல கருத்துடன்.இன்றைய பிள்ளைகள் படிக்காமல் ஊர் சுற்றுவதற்கும் எடுததுககாடடாக தன்னம்பிக்கை சிறு கதையாக எழுதிய எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் .

அதையும் தாண்டி (சிறுகதை) – ✍ மாலா உத்தண்டராமன், கடலூர் மாவட்டம்

வரன் (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்