sahanamag.com
சிறுகதைகள்

வரன் (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்

மாதப் போட்டிக்கான பதிவு – நவம்பர் 2021

“தம்பி சீக்கிரம் கிளம்பி வா, பொண்ணு வீட்ல தான் இருக்கு. அப்படியே நேர்ல பார்த்திடலாம்” என்று மரகதம் அலைபேசியில் சொன்னாள்.

“யம்மா ஜாதகம் வாங்க தான போனீங்க, திடீர்னு பொண்ணு பாக்க வர சொல்றீங்க. அதெல்லாம் முடியாது” என்று மறுத்தான் வெற்றி

“சொன்னா கேளு பொண்ண எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீயும் வந்து பாரு, உனக்கும் புடிக்கும். குடும்பமும் நல்ல குடும்பம், ஜாதகமும் ஒத்து போகணும்னு எனக்கு ஏதோ மனசுல தோனுது. நீ உடனே கெளம்பி வா, அப்பா தான் உன்னைய வர சொன்னாரு”

“எனக்கு ஏதோ இது வேண்டாத வேல மாதிரி தெரியுது. கொஞ்சம் பயமா இருக்கு, ஜாதகத்த மட்டும் வாங்கிட்டு என் போட்டோவ அவங்க மொபைலுக்கு அனுப்பிட்டு வாங்கம்மா”

“ஏன் உனக்கு கலெக்ட்டர் ஆபிஸ்ல கையெழுத்து போடுற வேல எதும் இருக்கா. வெத்தல பாக்கு வச்சு உன்னைய கூப்புடனுமோ, வான்னு சொன்னா வா” கோபப்பட்டு திட்டினாள் வெற்றியின் அன்னை மரகதம்

“நான் பொண்ணு பார்க்கலாம் வரல. எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. சொல்றதை கேளுங்கம்மா”

“அப்பா தான் உன்னைய வர சொன்னாரு, மறுபேச்சு பேசாம கிளம்பி வா. உன் ஃபிரண்டு வெங்கிய கூட்டிட்டு வராம, தனியா சீக்கிரமா வா”னு சொல்லிட்டு போனை வைத்தாள் மரகதம்

போனை அணைத்து  விட்டு யோசித்தான். சட்டென்று தன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது, கூடவே அப்பாவை நினைத்து பயமும் வந்தது.

நேற்றைய தினம் அம்மா பெண் பார்க்க போகிற செய்தியை சொல்லி, போட்டோ காட்டிய போதே ஏற்பட்ட பயம். காரணம் இவன் ஏற்கனவே முகநூலில் அந்த பொண்ணுகிட்ட பேசி இருக்கான். போன் நம்பர் கேட்டு இருக்கான். அது பலவித சிக்கல்களை ஏற்படுத்திருக்கு.

இப்போ, ‘அந்த பொண்ணை எப்படி பார்க்க போறோம்’ என்று பயந்தான்.

அந்த பெண் தன்னை நேரில் பார்த்து, “பேஸ்புக்குல என்கிட்ட இவன் பேசிருக்கான். போன் நம்பர் கேட்டு டார்ச்சர் பண்ணிருக்கான், எனக்கு இந்த மாப்ளய பிடிக்கல”னு சொல்லிட்டா, தன்னோட மானம் காத்துல பறந்துரும்னு ரொம்ப பயந்தான்.

ஒருவேளை அப்படி எதும் நடந்தா, அப்பா என்னைய சும்மா விட மாட்டார். கொன்னுடுவாருங்கிற பயம் தான் அதிகமா இருந்தது.

அப்பா கூப்புட்டாரு, வரலன்னா திட்டுவாருங்கிற ஒரே காரணத்துக்காக பயம்  மனசுக்குள்ள இருந்தாலும், முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டிக்காம கிளம்பி போனான்.

மெயின் ரோடு வழி இரண்டு கிலோ மீட்டர் சென்று, காமராஜர் காலனி முதல் தெருவுக்கு வந்து சேர்ந்தான்

“ஹெட் மாஸ்டர் மருதுபாண்டியன் வீடு எங்க இருக்கு?” என்று வண்டியை நிறுத்தி வீட்டின் முன் நின்று கொண்டிருந்தவரிடம் வெற்றி கேட்டான்.

 “பொண்ணு ஊட்டயா கேக்குறீங்க?”

“இல்லங்க. ஹெச்சம் மருது பாண்டியன்னு ஒருத்தங்க இருக்காங்களாமே, அவுங்க வீட்டக் கேட்டேன்”

“அவுங்க பொண்ணு பேரு தான் ஐஸ்சு”

அவர் நின்ற தோரனையும் பேச்சும் எரிச்சலை ஏற்படுத்தியது. எரிச்சலை வெளிக்காட்டாமல் “நான் என்ன கேட்குறேன்னு தெரியுமா?” வெற்றி நிதானமாக கேட்டான்

லேசாக சிரித்துக் கொண்டே அந்த ஆள் சொன்னார். “நீங்க சொல்ற ஆளும் நான் சொல்லுற பொண்ணும் ஒரே வீட்டு குடும்பம் தான். அவரோட பொண்ணு தான் ஐஸ்சு. அது இந்த வீடு தான்” மீண்டும் சொல்லி சிரித்தார்.

அருகில் இருந்த வேப்பமரத்தடியில் அப்பாவின் மோட்டார் பைக் நிற்பதை பார்த்தான். வண்டியை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சுத்தி முத்தி பார்த்தான்.

பொண்ணோட அம்மா அப்பா  வீட்டிலிருந்து வெளியில் வந்து வரவேற்றாங்க. தயங்கி தயங்கி உள்ளே சென்றான். உள்ளே சோபாவில் அம்மா அப்பா உட்காந்திருப்பதை கவனித்தான்.

ஸ்வீட், காரம் சாப்பிட்டு விட்டு என் சம்மதத்தை கேட்டு  மத்த விஷயங்களை பேச தயாரா இருக்க மாதிரி உட்காந்திருந்தாங்க

“நான் சொல்லுற பொண்ண தான் நீ கட்டிக்கணும்” என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்ததும் லேசாகச் சிரித்தான்

“தாய் கிழவி நினைச்சத சாதிச்சிருச்சு” என்று முணுமுணுத்தான்.

பெண் பார்க்க வந்த வெற்றியை கதவு ஓரமாக நின்று ஐஸ்வர்யா பார்த்தாள்.  உடன் அவள் தங்கையும் நின்றாள். அவர்களை பார்த்து வெற்றி கவனித்தும் கவனிக்காதது போல இருந்தான்.

பெண் அப்பா வழி சொந்தம். எதிர்வீட்டில் இருக்கும் ருக்குமணி அக்கா என்பவர் மூலமாக கிடைத்த செய்தி பெண் கேட்டு மாப்பிள்ளை வருகிறார் என்ற தகவல் தெரிந்த போது எல்லாருக்கும் சந்தோசமாகவும் இருந்தது.

ஆனால் மாப்பிள்ளையைப் பார்த்த பிறகு ‘இவனா’ என்று பெண்ணுக்கு ஆச்சரியமாகவும், என்ன சொல்வதென்ற குழப்பமும் இருந்தது.

ஐஸ்வர்யாவோடு பிறந்தது ஒரு தங்கை. இரண்டு மாடி வீடு. பெண்கள் பெயரில் தனித்தனியாக நகை, பணம், இடம் சேர்த்து வைத்திருந்தார்கள்

“சொத்து பத்து குறையில்ல, தாராளமா சீர் வரிச செய்வோம்” என்று சொன்னார் ஐஸ்சுவின் மாமா.

“பொண்ணு பாக்க லட்சணமாவும் இருக்கா, அதனால வேறு யாரும் கேட்க்குறதுகுள்ள நம் மகனுக்கு முடிக்கணும்” என்று வெற்றியின் அம்மா அப்பா நினைத்துக் கொண்டு வந்தார்கள்.

அதுவுமில்லாமல் வெற்றிக்கு ஏற்கனவே சொந்த பந்தத்தில் பெண் கேட்ட இரண்டு இடமும் எந்த பதிலும் சொல்லவில்லை

இந்த வீட்டுக்காரங்க ‘ஜாதகம் சரியில்ல’, ‘தோசம் இருக்கு’ என்று ஜோசியர் சொல்லி பெண் தராமா போயிடுவாங்க என்று ஜாதகம் பார்க்காமல், மகனை உடனே வர சொல்லி பாக்கு வெத்தலை மாத்த நினைச்சாங்க.

வெற்றியும், “பொண்ணை பார்த்துட்டு ஹைட் வெயிட் எல்லாம் எனக்கு மேச்சிங்கா இருந்தா தான், ஓகே” சொல்லுவதாக சொல்லவும், அவனையும் வர சொல்லி பார்க்க ஏற்பாடு பண்ணாங்க

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க “ஏன் இவ்வளவு அவசரபடுத்துறாங்க” என்று குழப்பமான மனநிலை இருந்தது.

“நீங்க என்ன தான் சொன்னாலும் ஜாதகத்த ஒரு தரம் பாத்துக்கலாம், பார்த்துட்டு அப்பறம் முடிவு பண்ணலாம்” என்று ஐஸ்வர்யா அம்மா சொன்னாள்.

“எப்படியும் இந்த சம்பந்தத்தை முடிக்கனும்” என்று ஒரு முடிவாக, “தாரளமா நம்ம காரப்பட்டி ஜோசியங்கிட்டயே பாத்துக்கலாம்” என்று மரகதம் சொன்னாள்.

முதலில் தயங்கிய வெற்றிக்கு, பிறகு மனதில் ஏதோ தைரியம் வந்தது

“நாம என்ன மத்த பசங்க மாதிரி லவ் பண்ணி ஏமாத்துனோமா, இல்ல பொண்ணு கைய புடிச்சு இழுத்தனா. போன் நம்பர் தானே கேட்டேன், அதுக்கு எதுக்கு இப்படி சுருண்டு போன மாதிரி உட்கார்ந்து இருக்குகேன். எது நடந்தாலும் பாத்துக்கலாம்” என்று கூனி உட்கார்ந்திருந்த வெற்றி, சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“மருதண்ணே வீட்டு பொண்ண என் புள்ளக்கி பாக்க போறேன்னு எங்க அம்மாச்சிகிட்ட சொன்னேன். உடனே அவுங்க ‘எதுக்கு போய் பாத்துகிட்டு, என் புள்ள மாதிரி மருது. தங்கத்த ஒரசி பாக்குற மாதிரி, அவ மகளும் குணமான பொண்ணு. நல்ல சம்பந்தம் உனக்கு அமைய போதுன்னு’ சொன்னாங்க” என்று மரகதம் சொன்னாள்.

அவர்கள் பெருமையாக சொல்வதை கேட்டு தலை குனிந்தபடி, மெல்ல புன்னகை செய்தார் மருது

‘இது எப்ப?’ என்பது போல வெற்றி அம்மாவை ஒரு பார்வை பார்த்தான்.

“விட்டா இவ எதாவது பேசிட்டே இருப்பா” என்று வெற்றியின் அப்பா சொன்னார்.

“தம்பிக்கு வேல எப்புடி ?” என்று ஐஸ்சுவின் அம்மா கேட்டார்.

அவர்கள் எதற்காக கேட்கிறாள் என்பதை புரிந்து, “இப்ப நம்ம ஊரு ரணே மெக்கானிக்கல்ல வேலைக்கு போறான். வெளிநாட்டு வேலைக்கும் சொல்லி வச்சுருக்கோம், கிடைச்சா போயிடுவான். கல்யாணத்துக்கு அப்பறம் விசா எடுத்து  பொண்ணையும் கூட்டிட்டு போற மாறி ஏற்பாடு பண்ணிடலாம்” என்று உயர்த்தியே  பேசினார் வெற்றியின் அப்பா

“சரி பொண்ண வர சொல்லுங்க பையன் பாக்கட்டும்” என்றாள் மரகதம்

தட்டில் ஜூஸ் டம்பளரோடு வைத்து வந்து வெற்றியிடம் நீட்டினாள். அதுவரை நிமிர்ந்திருந்தவன், அவளை பார்த்ததும் பதட்டத்தில் எழுந்து நின்று டம்பளரை எடுத்தான்.

எழுந்து நின்று பதட்டத்துடன் வாங்குவதை பார்த்தவுடன், அவளுக்கு சிரிப்பு வந்தது. கொடுத்துவிட்டு கதவருகே வந்து நின்றாள்.

“மாப்புள்ளய புடிச்சிருக்காம்மா உனக்கு?” என்று வெற்றியின் அப்பா கேட்டார்.

தலையை குனிந்தவாறே அமைதியாக நின்றாள் ஜஸ்வர்யா

“சரிங்க, நாங்க என் பொண்ணுகிட்ட கலந்து பேசிட்டு முடிவு சொல்லுறோம்” என்று வழவழ பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தார் மருது

ஜூஸ் குடித்து முடித்து விட்டு டம்ளரைக் கீழே வைக்கும் போது அண்ணாந்து ஒருமுறை பெண்ணை பார்த்தான் வெற்றி

பின் அனைவரும் எழுந்து “போயிட்டு வரோம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்

வரும் வழியில் அவனுக்கு தோன்றியது இது தான், ‘எப்படியும் இந்த சம்பந்தம் நடக்காது, அவ கண்டிப்பா என்னைய வேணாம்னு தான் சொல்லுவா” என்று நினைத்துக் கொண்டே வந்தான் வெற்றி

வீட்டிற்கு வந்து நண்பன் வெங்கிக்கு போன் செய்து நடந்தவற்றை சொன்னான்.

“வாழ்த்துக்கள் டா”

“அட ஏன்டா… எப்படியும் அவ என்ன வேணாம்னு சொல்லுவான்னு நினைக்கிறேன்”

“டேய் நீ என்ன கொலையா பண்ண, போன் நம்பர் தானே கேட்ட. அதெல்லாம் அந்தந்த வயசு. நீ நல்லவன்டா, சரக்கடிச்சதில்ல, சிகரெட் புடிச்சதில்ல… வேணா பாரு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டா”

“சரி  பார்ப்போம்”

“நாமெல்லாம் பியூர் 90’s கிட்ஸ். நம்மள மாதிரி ஆட்கள் தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீ வேணா வெயிட் பண்ணி பாரு” என்றான் வெங்கி.

 “சரி” என்று சிரித்து விட்டு வெற்றி போனை வைத்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்திருந்தாள் ருக்குமணி. வெற்றியின் அம்மா ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு போன் செய்வதற்காக அவசரமாக மொபைலை தேடினாள்.

“யம்மா பொண்ணு வீட்ல இருந்து போன் வராதப்பவே தெரியலையா, அவங்களுக்கு நம்ம சம்பந்தம் பிடிக்கல போல இருக்கு. அதனால இத்தோட விட்டுடுங்க” என்றான் வெற்றி.

“லூசா நீ… பொண்ணு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லிருக்கு. நாங்கள் பாக்கு வெத்தல மாத்த, நிச்சயம் கல்யாணத்துக்கு எப்புடி, எங்கன்னு பேச்சுவார்த்தை நடத்த எப்ப வரதுனு கேட்க போனை தேடுறேன்” என்றாள்.

என்ன சொல்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. துள்ளிக் குதித்த சந்தோஷம்.

“உன்ன மாதிரி அமைதியா இருக்க பையன தான் அவங்க வீடும் எதிர்பாத்தாங்க. அப்பறம் நா எதுக்கு இருக்கேன், பாக்கிய நான் பேசி முடிச்சு வச்சுட்டேன்” என்று சிரித்து கொண்டே சொன்னாள் எதிர் வீட்டு ருக்மணி 

அப்போது போன் ரிங் அடித்தது. எடுத்து பார்த்தான், நம்பர் புதிதாக இருந்தது. ஆன் செய்து பேசினான்.

“ஹலோ…யாருங்க?”

“ஹலோ நான் தான் ஐஸ்வர்யா” என்றாள்.

“சொல்லுங்க” என்று மெல்லிய புன்னகை செய்தான்.

“சாப்டீங்களா ?”

“ம்… நீங்க”

“சாப்டேன்”

“அப்பறம்?”

“என்னைய ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னீங்கன்னு ருக்கு அக்கா சொன்னாங்க. உண்மை தானா?” என்று கேட்டு மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்.

“நான் சொன்னேனா?” என்று ருக்குமணியை ஏறிட்டு பார்த்தான்.

ஏதோ, பெரிய ராக்கெட்டை விண்ணில் ஏவி ஜெயித்த அமர்ந்திருந்த பெருமிதம் போல, வெற்றியை பார்த்து சிரித்தாள் ருக்குமணி

“ஓ… இதெல்லாம் உங்க வேல தானா” என்று நினைத்து சிரித்து கொண்டே போனில் தொடர்ந்து பேசினான் வெற்றி

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

One thought on “வரன் (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!