in ,

அதையும் தாண்டி (சிறுகதை) – ✍ மாலா உத்தண்டராமன், கடலூர் மாவட்டம்

அதையும் தாண்டி (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 114)

லையில் ஷாம்பு நுரை வழிய வழிய ஒன்று, கையில் டூத்பிரஷோடு வாயில் பற்பசை சொட்டச் சொட்ட இன்னொன்று

வீட்டு வாசலில் தயாராயிருந்த கால் டாக்சியில் அகிலா பரபரப்பாக ஏற முற்படுவதைக் கண்ட அக்கம்பக்கத்து வீட்டினர், “இவங்களுக்கு வேற வேலையே கிடையாதா? படிச்சவங்க செய்ற காரியமா இது? இன்னிக்கு காலை நேரத்திலேயே ஆரம்பமா?” விமர்ரித்து விழித்தவாறு நின்றார்கள்.

அந்தக் குழந்தைகள் ஆறு வயது மகன் நான்கு வயது மகள், “அம்மா அம்மா” என்று ஓலமிட்டபடி அந்தப் பெண்ணிடம் ஓடின

“அதான் பல் துலக்காமல், குளிக்காமல் அப்படியே வந்துடுங்கனு சொல்லிட்டேனே. இன்னும் ஏன் கத்திட்டு சனியன்களா? சீக்கிரம் ஏறி உட்கார்ந்து தொலைங்க” நாக்கைத் துருத்தி சிடுசிடுத்தாள் அகிலா  

உயர்வு விலைப் புடவையில், கோபத்திலும் கலையாத அலங்காரத்தில், நிறைய நகைகள் (தாலிச்சரடே கால் கிலோ தேறும்) அணிந்த கோலத்தில் காணப்பட்டாள். எம்.ஏ. படித்தவள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் நடந்தது இது தான். வழக்கம் போல கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம்

“அகிலா… நேற்று இரவு அடித்த புயல் மழையால் ஊர்முழுதும் கரண்ட் கட். கண்ட்ரோல் ரூம் போய் செக் பண்ணி, ஃப்யூஸ் போட்டு ஆன் செய்யணும், நான் போயிட்டு உடனே வந்திடறேன்..” பரபரப்புடன் கிளம்பினான் மின் பொறியாளன் பிரசாத்

“நோ போக வேணாம், இன்னிக்கு சண்டே, உங்களுக்கு லீவு. நான் கோயில் ஷாப்பிங், சினிமான்னு புரொக்ராம் போட்டு நேத்திலேயிருந்து சொல்லிட்டிருக்கேன்” குறுக்கே நின்று அவனை தடுத்தாள்

“நேத்து ராத்திரியிலிருந்து நிறைய இடத்திலே பிராப்ளம், மற்ற உதவியாளர்கள் எல்லாருக்கும் மூலைக்கு மூலை செம வேலை. வேறு வழியில்லை, நானும் போயே தீரணும், சீக்கிரமாக திரும்பிடறேன்” அவசர நிலை குறித்து விளக்கம் சொல்லிப் பார்த்தான்

ஊஹூம். அவள் விடுவதாயில்லை. பிடிவாதம் பிடித்தாள். எரிச்சல் அடைந்து மொபைல் போனைத் தூக்கி வீசினாள். அது சுவரில் மோதி சுக்கு நூறானது.

டைனிங் டேபிளில் அவனுக்காக தாயாராக இருந்த இட்லித் தட்டைத் தள்ளி விட்டாள். சட்னியும், இட்லியும் திசைக் கொன்றாகச்   சிதறியது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தவிர்த்து விட்டு முன்னேறி, பீரோவிலிருந்து கத்தையாகப் எடுத்து எண்ணிக் கொண்டிருந்தவனின் கையிலிருந்த பணக்கட்டை பரக்கென்று உருவி, “மிஸ்டர் இஞ்சினியரே, அது என் பணம். நீங்க தொடாதீங்க”கட்டில் மேல் பறக்க விட்டாள்.

கோடீஸ்வரனின் பெண், அடிக்கடி தனது பணக்காரத்தனத்தைக் குத்திக் காட்டி ஏளனமாகத் திட்டுவாள். அவனும் படிப்புக்கேற்ற அரசாங்கப் பணியில் இணைந்து கணிசமாக மாதச் சம்பளம் வாங்குபவன் தான்

ஓரளவுக்கு வசதியுடன், அவளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவனது வருமானம் இருந்தாலும், அடிக்கடி மனைவி உதிர்க்கும் இந்த கிண்டல் வார்த்தை ஏளனப்பேச்சு ஈட்டி போல் பாய்ந்து, கணவனது நெஞ்சை  ரணமாக்கியது

விவாதத்தில் நேரம் விரயமாவதை விரும்பாமல் பலமுறை தனது இக்கட்டான நிலையை எடுத்துரைத்து மன்றாடினான். எந்த பலனுமில்லை, அவளை மீறிக் கொண்டு வெளியேற முற்பட்டான்.

அதன் பிறகும் கூட அவளது ஆத்திரம் தணியவில்லை.

“ஓ… அப்படியா? என் பேச்சை மீறிப் போறீங்களா? இனி சரிபட்டு வராது, நான் இப்பவே எங்கம்மா வீட்டுக்குப் போறேன்” சினம் கொப்பளிக்கக் கத்தினாள்.

“சொன்னா கேட்கமாட்டே, ஆ..ஊன்னா இந்த பல்லவியைப் பாட ஆரம்பிப்பே. வழக்கமாக இதே பிழைப்பு உனக்கு, அப்புறம் உன் விருப்பம்” மேற்கொண்டு பிரச்னையை வளர்க்க விரும்பாமல், ஒன்றும் இயலாத அப்பாவியாய் வாசலில் காத்து நின்ற அலுவலகக் காரில் ஏறி புறப்பட்டான் பிரசாந்த்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், குளிக்கும் முனைப்பில் கலகலப்பாக இருந்த பிள்ளைகளை தரதரவென்று இழுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள் அகிலா

சினம் தலைக்கேறி வெறிகொண்டவளாய், தனது மற்றொரு மொபைல் மூலம் கால்டாக்சியை அழைக்க, ஐந்து நிமிடத்தில் வாகனம் வந்து சேர்ந்தது.

எதிர்வீட்டு போலீஸ் குடும்பத்திலிருந்து, கடைசி வீட்டு டாக்டர் குடும்பத்தினர் வரை, எல்லாரும் இந்நிகழ்ச்சியை எட்டிப் பார்த்தனர்.

‘என்றைக்குத் தான் இதுக்கு முடிவு வருமோ’ என கேலியாக சிரித்தனர்.

எண்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பெற்றோர் ஊருக்கு ஒரு மணி நேரம் விரைந்து சென்று அவர்களை இறக்கி விட்டு அகன்றது கால் டாக்சி. 

ஊரில் சேமியா ஜவ்வரிசி தயாரிக்கும் பத்து தொழிற்சாலைகளின் அதிபரான அப்பா, “அந்த ஆளை அனுசரிச்சுப் போவணும்னு உனக்கு தலையெழுத்தா என்ன? திமிர் பிடிச்ச மனுஷன், என் அன்புமகளின் அருமை பெருமை பற்றி ஒண்ணுமே தெரியாத எஞ்சினியர் மாப்பிள்ளை”  இம்முறையும் அகிலாவுக்கு ஆதரவாகப் பேசினார்.

“வாடியம்மா என் ராசாத்தி. மாப்பிள்ளை இங்கே வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும், அது வரைக்கும் இங்கிருந்து போகாதே அகிலா” குரல் உயர்த்தி சபதம் போட்டாள் தாய். தங்களின் பேரக் குழந்தைகள்அரையாடையுடன் இருப்பதைப் பார்த்து நகைப்பு வந்தது.

பெண்ணை வரவேற்று, அடக்கலம் அளித்து, உசுப்பேற்றுவதே அந்த பெற்றோரின் வாடிக்கையாகி விட்டது.

அவர்கள் மட்டுமா..?

அகிலாவின் அடிக்கடி விஜயத்தால் அதிக குஷி குமாருக்கு. அகிலாவின் அக்கா கணவன். தொழிற்சாலை மேற்பார்வை பணிகளைக் கவனித்துக் கொண்டு பந்தாவாக உலா வருகிற உள்ளூர் மாப்பிள்ளை.

சகலையின் மீது கொஞ்சம் கொஞ்சமாக பகைமை கூடினால், சொத்து முழுதும் தன் வசம் வந்து விடும் என்று கணக்கு போடும் சுயநலக்காரன்

“பிரசாந்த்தை மதிக்காதே அகிலா… அகங்காரக்காரர். நான் என்ன அவர் மாதிரியா தினமும் உன் அக்காவை வம்புக்கு இழுக்கிறேன்” அகிலாவின் சகோதரிக்கு அருகில் நின்று கொண்டு தூபம் ஏற்றினான் குமார்.

ஏற்கனவே அந்த செல்வந்தர் மீது பொறாமையில் இருந்த உள்ளூர் உறவினர்களும், ‘இது தான் சரியான தருணம்’ என, ஆளாளுக்கு, “நம்ம கௌரவம் என்ன அந்தஸ்து என்ன, எந்த விஷயத் திலும் விட்டுக் கொடுக்காதே, ரோஷம் தளராதே, புகுந்த வீட்டு வாசலை மறுபடியும் மிதிக்காதே அகிலா” என ஆணவம் கலந்த வசனங்களை மாறி மாறி அள்ளித் தெளித்து, அவள் உள்ளத்தில் நஞ்சை ஏற்றினார்கள்

இரண்டும் கெட்டான் நிலையில் வெம்பித் தவித்துக் குழம்பினாள் அகிலா

மூன்று நாட்கள் தொடர்மழை காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது அகிலாவுக்கு தோதாய் அமைந்து விட்டது. அடுத்த நாள் வானம் வெளிறத் துவங்கியதும், அவளுக்கு முகம் வாடிப் போயிற்று

‘சிறப்பாகப் படித்துக் கொண்டிருக்கும் நல்ல பிள்ளைகளின் கல்வியை எதற்கு கெடுக்க வேண்டும். பாவம் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள்..?’

உள்ளம் துடித்தது. பெற்றோரிடம் விவரம் சொன்னாள்.  அடுத்த வினாடி தந்தையின்  இன்னோவா கார் வந்து நின்றது.

“பிள்ளகளின் படிப்புக்காக அந்த வீடு போகிறேன், அவ்வளுதான்” விடைபெற்றாள் அகிலா.

“உன் நிலைமை புரியுதும்மா, கலங்காதே. அந்த மனுஷரிடம் மட்டும் பேச்சு வார்த்தை வச்சிக்காதே” எச்சரிக்கை விடுத்து வழி அனுப்பி வைத்தார்கள் தாயும், தந்தையும்.

அகிலாவும், குழந்தைகளும் இல்லாததால் வீடே வெறிச்சோடி காணப்பட்டாலும், கடுமையான மழை சமயத்தில் மின் பராமரிப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அத்தனை மின் பழுதுகளையும் சரி பார்த்து முடித்ததால், மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றதில் பிரசாந்தின் மனசெல்லாம் திருப்தி சூழ்ந்தது.

மூன்று நாட்களில் முகத்தில் தாடி முளைத்து பரிதாபமாகத் தோற்றத்தில் காணப்பட்டான்.

மனைவி, மக்கள் வீடு திரும்பியதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாலும், அதனை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தான்.

‘இது இன்னும் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்குமோ, இருந்தாலும் அகிலா எந்த பிரச்னையை எழுப்பினாலும் பொறுத்துக்கணும். இனி மிகக் கவனத்துடன் பேசி பதமாக நடந்து கொள்ளணும்’ என்ற உறுதியை பயபக்தியோடு இதயத்தில் பதிவு செய்து கொண்டான்.

டைனிங் டேபிளில் இட்லி இருக்கும். அதை உண்ணுவதற்கு மட்டும் பிரசாந்த் வாயைத் திறப்பான். ஆறிப் போன மதிய உணவுக்காகவும், சுவையில்லாத இரவு உணவுக்காகவும், தண்ணீர் பருகுவதற்காகவும் மட்டும் வாய் திறக்க பயிற்சி எடுத்துக் கொண்டான்.

பலமுறை தகராறு செய்ய அகிலா முயற்சிக்கும் போதெல்லாம், அவள் கவனத்தை திசை திருப்பி சாதுரியமாக அவற்றை தவிர்த்து சமாளிப்பதற்குள், பிரசாந்திற்கு போதும் போதும் என்றாகி விட்டது.

இப்படியாக, ஒவ்வொரு நிமிடமும் யுகம் போல நகர்ந்து, ஒரு வாரம் கழிந்தது.

திங்கள்கிழமை ஏழரை ஒன்பது ராகுகாலம் சமயத்தில், அடுத்த பூகம்பம் தொடங்குமென்று பிரசாந்த் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

பிள்ளைகள் இரண்டையும் பள்ளி  வாகனத்தில் ஏற்றி வழி அனுப்பிவிட்டு வீட்டினுள் நுழைந்த அகிலா, புதுச்சண்டையைத் துவக்கினாள்.

“குழந்தைகள் ஸ்கூலுக்குப் போயாச்சு, அடுத்ததாக ஐயா நீங்க ஆபிசுக்குக் கிளம்பிடுவீங்க. நான் மட்டும் சாயங்காலம் வரைக்கும் தேமேன்னு அடைஞ்சு கிடக்கணுமா?”என்றாள்.

“டி.வி பாரு, பேப்பர் புரட்டு, அப்புறம் புத்தகம் படி, நேரம் ஓடிடும்” யோசனை வழங்கினான் பிரசாந்த்.

“டி.வி புக்ஸ் ரெண்டுமே எனக்கு பிடிக்காது, தூக்கமும் பகலில் வராது”

‘ஏதோ புதுவிதமா புதிர் போட்டு வம்புக்கு அஸ்திவாரம் போடறாளே.. சாதுரியமா எதிர்கொள்ளணும். புத்திசாலித்தனமாக எதையாவது சொல்லி சமாளிக்கணுமே, இல்லாட்டி கதை கந்தல் தான்’ அச்சத்துடன் முழித்தான்

“வ..ந்..து.. வ..ந்..து.. வீட்டுக்கு அருகிலே ஆதரவற்றோர் பள்ளி இருக்கு, அது உனக்கு தெரிஞ்சிருக்குமே. காலை பத்து மணிக்கு அங்கே போய் அந்த சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம் அகிலா. உனக்கும் நிம்மதி, அந்த பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியும் ஆறுதலும்  கிடைக்கும்”

தொடர்வதற்குள், “என்னது, அப்ப என்னை வேலைக்குப் போகச் சொல்றீங்களா? உங்க சம்பளம் பத்தலைன்னு என்னையும் சம்பாரிக்க வைக்க இந்த ஐடியாவா?”  வினோதமாக வினா எழுப்பி, அவனை முறத்தாள். 

“ஐயோ அகிலா, நான் அந்த எண்ணத்திலே சொல்லலை. நீயாக தப்பர்த்தம் பண்றே, பணம் காசு தேவைக்காக உன்னை அனுப்பலை. ஒரு மன ஆறுதலுக்கு, உள்ளார்ந்த திருப்திக்கு ஒரு வழி சொன்னேன்”  அவனுக்கு உதறல் எடுத்தது.

“நோ… முதல்ல போக வைப்பீங்க. அப்புறம் சம்பளம் கேட்க வைப்பீங்க, அப்பப்ப உங்க பேச்சை மாத்திப்பீங்க” கண்கள் சிவக்கக் கத்தினாள்.

“இல்லைம்மா, நான் நல்லது சொல்ல நினக்க, நீ வீண் கற்பனை செஞ்சு குழப்பறே” நெளிந்தான்

“பணம் சம்பாரிக்கிற எண்ணத்தோடு நீங்க சொல்லலைன்னா, வாங்க   தெய்வம் முன்னால் கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணுங்க” சாமி அறை நோக்கி அவனைக் கையைப் பிடித்து இழுத்தாள்.

பிரசாந்த்துக்கு பகீரென்றது. “என்னை நீ நம்பவில்லை, அதுக்காக சத்தியம் செய்யணுமா? ஓ தாராளமாக” சம்மதித்தான். உடலும், உள்ளமும் நடுங்கலாயிற்று.

அவள் அர்ச்சனைத் தட்டில் பெரிய சைஸ் கற்பூரத்தை வைத்து, தீக்குச்சி உரசி எரிய விட்டாள்

“கடவுளே இது சத்தியம்” தீ ஜூவாலையில் காணப்பட்ட கற்பூரம் மீது உள்ளங்கையை நீட்டி, வைத்து படாரென்று அவன் அடிக்க, அடித்த வேகத்தில் எரியும் கற்பூரத் துண்டொன்று எகிறி அகிலாவின் புடவையில் பட்டுவிட, பாலியெஸ்டர் புடவை ‘குபுகுபு’வென தீப்பற்றிக் கொண்டு விட்டது.

இத்தனை களேபரமும் சில விநாடிகளில் நிகழ்ந்தேறி விட்டது

“ஐயோ.. அய்யய்யோ..” கை காலை உதறியபடி அகிலா ஓலமிட, உடனடியாக பிரசாந்த் சமயலறைக்கு பாய்ந்தோடி, காலி சாக்கை எடுத்து வந்து அவள் மீது வேகத்துடன் உதறி போர்த்தி விட, கையருகே பரவ ஆரம்பித்த தீ அடங்கி முடங்கி அணைந்தது.

அலறல் சத்தம் கேட்டு வாசலில் தெருவே கூடி நின்றது.

உயிர் போய் விடுமோ எனும் அச்சத்தில் மயக்கம் போட்டு தரையில் சாய்ந்தாள் அகிலா

அந்த ஊரில் நடைபெற்ற நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு, சகலை குமார் தன் துணைவியோடு எதிர்பாராதவிதமாக திடீரென்று  அந்த நேரத்தில் அங்கே வந்து  சேர்ந்து இச்சம்பவத்தைப் பார்த்து விட, பிரசாந்தின் நிலைமை மிக மோசமாகி அழுகை முட்டியது.

“என்ன பிரசாந்த் இது, இப்படி கொடுமை செய்றீங்க. இது அநியாயம், தீ வச்சி கொளுத்தற அளவுக்கு அவங்க என்ன தப்பு செஞ்சாங்க” சாட்டையடி வார்த்தைகளால் திட்டினான்.

“நடந்தது என்னன்னு தெரியாமல்…” அவன் சொல்வதற்குள்-

“போதும் நிறுத்துங்க, செய்யறதையும் செஞ்சிட்டு அழுகை வேறயா? ரொம்பவும் நடிக்காதீங்க” அகிலாவின் சகோதரி ஏசினாள்.

‘நடந்த உண்மையை இப்போது பேசி பயனில்லை, ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணி அகிலாவுக்கு உடனே வைத்தியம் பார்க்கணும்’ மவுனமாக செயலில் இறங்கலானான் பிரசாந்த்.

“இந்த ஆளுக்கு தினமும் தகராறு பண்றதே வேலை, பெண்டாட்டியை அனுசரித்துப் போகத் தெரியலை. இவரை சும்மா விடக்கூடாது, நானே புகார் மனு எழுதி கொண்டாந்திருக்கேன், இதிலே ஒரு கையெழுத்துப் போடுங்க குமார் சார். மத்ததை நான் பார்த்துக்கிறேன்” தாளை நீட்டினார் எதிர் வீட்டு போலீஸ்காரர்.

“ஓக்கே…” சம்மதித்து கையொப்பமிட்டான் குமார்.

“இப்பெல்லாம் பிரைவேட் ஆஸ்பிடல்ல சேர்த்து அவசர சிகிச்சை செய்யலாம்னு அனுமதி உண்டு… சீக்கிரம் போங்க” கடைசி வீட்டு டாக்டர் அறிவுறுத்தினார்.

அங்கிருந்து கால் கிலோ மீட்டர் தூரத்திலிருந்த பிரபல மருத்துவ மனையில் அகிலாவை அட்மிட் செய்தார்கள்.

“நல்லவேளை உடனே நெருப்பை அணச்சிட்டதால கையில் சின்னதாக தீப்புண், 001% பர்ன்ஸ்தான். சிராய்ப்பு மாதிரி, பர்னால் தடவினால் போதும். ரெண்டு நாளில் காயம் ஆறிவிடும். மயக்கம் தெளிய ஊசி போட்டிருக்கேன், மதியமே டிஸ்சார்ஜ் ஆயிடலாம். பை த பை பிரதாப் சார், அகிலா கண் விழிக்கும் போது நீங்க அவங்க எதிர்ல நிக்காதீங்க

மறுபடியும் ஏதெனும் ரகளை உருவாகிடப் போவுது, என்னோடு வாங்க, என் ரூமில் உட்காருங்க, டோண்ட் வொரி ரிலாக்ஸ்” சிரித்தவாறு சொல்லி விட்டு அகன்றார் தலைமை மருத்துவர்

அமைதியாய் ஏற்றுக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான் பிரசாந்த். அரைமணி நேரத்தில் கண் விழித்தாள் அகிலா

“உங்க கணவன் மீது போலீஸ்ல புகார் கொடுத்தாச்சு. கொடுமைக்கார புருஷனுக்குத் தன்டணை கிடைக்கணும், பழி வாங்காமல் விடாதே. அவருக்கு நல்ல பாடம் புகட்டு, யார் பேச்சையும் கேட்டு நீ ஒரு போதும் பின் வாங்காதே, அப்பத் தான் மனுஷன் திருந்துவார்” குமாரில் தொடங்கி, பின் வீட்டுப் பெண்மணி வரை ஆளாளுக்கு உசுப்பேற்றினர்.

‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்பிரதா மாதிரி இப்படியும், அப்படியுமாக தலையசைத்தாள் அகிலா.

“அவங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை, கூட்டம் கூடி தொந்திரவு பண்ணாதீங்க” நர்ஸ் எச்சரிக்க, அத்தனை பேரும் வெளியே சென்றனர்.

அகிலா மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த சமயம், கதவின் திரைச்சீலையை விலக்கியபடி மெதுவாக அடியெடுத்து வைத்து உள்ளே வந்தாள் நாற்பது வயதுப்பெண்

“நீங்க யாரு?” அதிர்ந்து வினவினாள்அகிலா.

“அம்மா, என் பேரு மீனாட்சி. என் புருஷனை பக்கத்து படுக்கயில தான் சேர்த்திருக்கேன். அதிகமாக மதுபானம் குடிச்சதால, ஈரல் பழுதாயிடுச்சு, சீக்கிரம் குணமாகணும்னு இந்த ஆசுபத்திரிக்கு வந்திட்டேன்” மெலிதான குரலில் விவரித்தாள்.

“அப்படியா, செலவு ஜாஸ்தியாகுமே..?”

“வளையல், மூக்குத்தி, தாலிச்செயினை வித்து சமாளிக்கிறேன்”

 “குடிகாரர்னு சொன்னீங்க, அப்புறம் ஏன் இவ்வளவு தொகை செலவு செஞ்சி வைத்தியம் பார்க்கறீங்க”

“நிசந்தான், ஆரம்பத்திலே நல்லவரா இருந்தாரு. எங்களுக்குள்ளே சின்னச் சின்ன சண்டை வந்திரும், அதன் பிறகு குடிப்பழக்கம் தொத்திக்கிச்சு. அப்புறம், அவரு அந்தப் பழக்கத்தை நிறுத்தலை தான். ஆனால், நண்டும் சிண்டுமாக ரெண்டு பெண்பிள்ளை ஒரு பையன், இதுங்களுக்கு அவரு தானே தகப்பன். அதுகளை கரையேத்த அவரு உயிரோட இருக்கணும்.

மண்டையைப் போட்டா ஏழை விதவையா தவிச்சு, பாழாய் போன இந்த கலி உலகத்திலே தன்னந்தனியா நின்னு நான் என்ன பண்ண முடியும். இந்த மஞ்சக்கயிறு நிலைக்கணும்னு தான் நான் அவரைக் காப்பாத்த நினைக்கிறேன். சரியில்லாத புருஷன்னு நல்லா தெரியுது, அதையும் தாண்டி அந்த மனுஷன் உசுரு பிழைக்கணும்னு இப்படி அல்லாடறேன்.

அம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். என்ன நடந்ததுன்னு விச்சரிச்சுத் தெரிஞ்சிகிட்டேன். உங்க புருஷனப் பார்த்தா தங்கமானவராகத் தெரியுறார். படிச்சவரு, நல்ல வேலையில இருக்கிறார். மன உளச்சலால தப்பு தண்டா வழிக்குப் போயிட நாம காரணமாயிருந்திடக்கூடாது.

உங்க ரெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக. உங்க மாங்கல்ய பலத்துக்காக சண்டை சச்சரவை மறந்து விட்டுக் கொடுத்துடுங்க. நீங்க யார் சொல்லையும் காதில் வாங்காதீங்க. எதையாவது உளறிட்டு அவங்க பாட்டுக்குப் போயிடுவாங்க.

பணம், சொத்து எதுவுமே பலன் கொடுக்காதும்மா, நமக்கு நம்ம கணவன் தான் முக்கியம். அம்மா நீங்க கட்டுக்கழுத்தியா இருந்தாத் தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கெஞ்சிக் கேட்டுக்கறேன், உங்ககிட்ட இந்த வாக்குறுதியை வேண்டிக்கிறேன். யோசிச்சு முடிவெடுங்க, நான் வர்றேம்மா” கும்பிட்டு விடைபெற்றாள்.

அகிலாவின் எண்ணத்தில் இப்போது ஒரு மின்னல் கீறல் போட்டது, விழிகளில் நீர் பொங்கி வழிந்தது

மதியம் அகிலாவை டிஸ்சார்ஜ் செய்யும் நேரம், கட்டிலைச் சுற்றிலும் அகிலாவின் சகோதரி, சகோதரியின் கணவர் குமார் மற்றும் சிலர் குழுமி யிருந்தனர்.

மறுபடியும் அவள் மனதில் நஞ்சு புகுத்தும் கெட்ட எண்ணத்துடன், குசலம் விசாரிப்பது போல அனைவரும் பேச எத்தனிக்கையில், “மாமா நீங்க அப்பாவுக்கு போன் பண்ணி வரச் சொல்லிருந்தீங்க. ஆனா நீங்க வெளியே போன சமயத்தில் நர்ஸ் மொபைல் மூலமாக நான் பேசி வர வேணாம்னு திரும்பிப் போகச் சொல்லிட்டேன். இப்பவே போய் நீங்கள் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிடுங்க. என் கணவர் எங்கே? நான் அவரைப் பார்க்கணும், அவர்கிட்ட நான் மன்னிப்புக் கேட்கணும்” என அழுதாள் அகிலா

அனைவரும் திகைத்து விக்கித்து வியந்து தலைகுனிந்து வெளியேறினர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

  1. திருந்தினதுக்கு வாழ்த்துகள். இப்படிப் பல பெண்கள் தங்கள் மண வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கின்றனர்.

  2. அதையும் தாண்டி…சிறுகதையின் நாயகி அகிலா போன்று ஈகோ கொண்ட பெண்கள் நிறைய. காணப்படுகிறார்கள்.மகள்களுக்கு செல்லம் கொடுத்து வளர்க்கும் பெற்றோருக்கு இக்கதை நல்ல பாடம்.ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  3. அன்பின் வலிமை என்றேனும் ஒருநாள் எத்தகைய கீழ்மனம் கொண்டவரையும் வெல்லும் என்பதை கதாசிரியர் தனது எளிமையான நடையில் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்..

  4. அன்பின் வலிமை என்றேனும் ஒருநாள் எத்தகைய கீழ்மனம் கொண்டவரையும் வெல்லும் என்பதை மாலா உத்தண்டராமன் தனது எளிமையான நடையில் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்..

  5. மாலா உத்தண்டராமன் அவர்களின் அதையும் தாண்டி சிறுகதை இன்றைய சமூக வாழ்வியலை படம் பிடித்ததுபோலிருந்து. கணவன் மனைவி உறவுகளில் பிணக்கு இருக்கத்தான் செய்யும். மீனாட்சி போன்ற பெண்மணிகளினால்தான் நமது கலாச்சாரம் மீட்டுருவாக்கம் பெறுகிறது. ஈகோவை விட்டொழித்து வாழ்வின் சூட்சுமத்தை சட்டென்று புரிந்துகொண்ட அகிலா போற்றுதலுக்குரியவர். யதார்த்த படைப்பு, எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.

லெட்டர் (சிறுகதை) – ✍ அஸ்வின், கோயமுத்தூர்

விடியலைத் தேடி…(சிறுகதை) – ✍ தெட்சணாமூர்த்தி கரிதரன்(சம்பூர் சமரன்), இலங்கை