in ,

வாசல் வழி வந்தது (சிறுகதை) – தி.வள்ளி, திருநெல்வேலி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

(இக்கதை கற்பனையல்ல, உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டது) 

“ஏங்க! ஏசி சரியாகவே கூல் ஆக மாட்டேங்குது. கழுத்தெல்லாம் வேர்க்குது. நாளைக்காவது சரி பண்ண ஏற்பாடு பண்ணுங்க. பத்து நாளா சொல்லிக்கிட்டிருக்கேன்”. தூக்கக் கலக்கத்தில் அம்பிகா அர்ச்சனையை ஆரம்பித்தாள்.

நான் டக்கென எழுந்து பேனை கூட்டி வைக்க… நல்லவேளையாக என் தர்மபத்தினியை நித்திராதேவி அள்ளிக்கொண்டு போனாள். காலை முதல் வேலையாக ராஜனுக்கு ஃபோன் பண்ண வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டு தூங்கினேன்.

காலை எழுந்ததும் எங்கள் ஆஸ்தான எலக்ட்ரிஷன் ராஜனுக்கு போன் பண்ண…. நாட் ரீச்சபிள் என்ற பதிலே வந்தது. அப்புறம்தான் அவன் சபரிமலைக்கு போவதாக சொன்னது நினைவுக்கு வந்தது.

அதற்குள் காபியுடன் வந்த அம்பிகா, “போன் பண்ணிட்டீங்களா?” என்றாள்.

“அவன் சபரிமலைக்கு போயிட்டான் போல… இவன் பக்தி எல்லாம் தெரியாதா? இந்த கார்த்திகை மாசம் சபரிமலைக்கு போயிட்டு வந்தா, இனி அடுத்த கார்த்திகைதான் ஐயப்பனை நினைப்பான்” என்றேன் எரிச்சலோடு.

“அப்படி எல்லாம் பேசாதீங்க! நாம கோயிலுக்கு போகலைனாலும் போறவங்களை பழிக்கக் கூடாது” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள் என் சகதர்மினி.

அப்பாடா அவளே சமாதானமாகிட்டா இனி ஒரு வாரம் நிம்மதியா இருக்கலாம் என்று நினைப்பதற்குள்ள, “ஏங்க அவன் அப்பா நம்பர் தான் இருக்கே.. அவரைக் கேளுங்க” என்று அடுத்த மிசைல்லை எறிந்துவிட்டுப் போனாள். அவரும் மதுரையில் இருப்பதாக கூறி விட…. என் தர்மபத்தினி ருத்ர தேவதை ஆகி விட்டாள்.

“இவங்க இல்லைன்னா ஊர்ல வேற ஆளே இல்லையா? முயற்சி வேணும்… உட்கார்ந்த இடத்திலேயே காரியத்தை சாதிக்கணும்னு நெனச்சா என்ன காரியம் நடக்கும்…” என்று குதித்தாள்.

“கம்பெனிக்கு போன் பண்ணி சர்வீஸ் ஆளையே வரச் சொல்லுவோமா?” என்றேன் மெல்ல தயங்கி தயங்கி.

“அதெல்லாம் வேணாம். அவங்க வீட்டுக்கு வந்தாலே குறைந்தது 500 ரூபா. ஏசியை பிறகு பார்த்துக்கலாம் பக்கத்துல அப்பார்ட்மெண்ட் வேலை நடக்குது. அங்க விசாரிச்சா எதாவது எலக்ட்ரிஷன் இருப்பாங்க” என்றாள் தீர்மானமாக.

அதற்குமேல் தப்பிக்க முடியாமல், சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன்.

‘சிலநேரம் மனைவிமார்கள் நம்மைவிடப் புத்திசாலியாக இருக்கிறார்கள்’ என்று சபித்தபடி பாதி கட்டிக் கொண்டிருந்த அந்த அப்பார்ட்மெண்டை நோக்கி நடந்தேன்.

வேலையை மும்மரமாக நடந்து கொண்டிருக்க…. யாரை அணுகலாம் என யோசித்தபடி நான் நின்றிருக்க.. என்னை பார்த்து ஒல்லியாக இருந்த ஒரு பையன் அருகில் வந்தான்.

“சார்! என்ன வேணும்” என்றான்.

நான் என் பிரச்சனையை கூற ஆரம்பித்தேன். கரண்ட் சப்ளை ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்று கூற, “சார்! நீங்க கவலைப்பட வேண்டாம். நான் இங்க வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வருகிறேன்,” என்றான். அப்படித்தான் சாரதி எனக்கு அறிமுகமானான்.

சொன்னது போலவே டாண்ணு 6 மணிக்கு சாரதி வந்து விட்டான். எல்லா விளக்குகளையும், மின்விசிறிகளையும் போட்டு பார்த்துவிட்டு, “சார்! உங்க லைன்ல ஏதோ பிராப்ளம் இருக்கு. நாளைக்கு வந்து சரி பண்ணி கொடுத்திடறேன்.”

“நீ கரண்ட்டை சரி பண்ணினால் தான் நாங்க ஏசி மெக்கானிக்கை கூப்பிட்டு வேலையை பார்க்க முடியும் நாளைக்கு கண்டிப்பா வந்திடு” என்றாள் அம்பிகா.

“ஏம்மா… ஏசி ப்ராப்ளமா? எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் அருமையா சர்வீஸ் பண்ணுவான். அவனையும் கூட்டிட்டு வந்திடுகிறேன்” என்றான்.

“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையே வரமுடியுமா?” என்று அம்பிகா இழுக்க….

“அதெல்லாம் பார்க்க முடியாது மா! எனக்கு திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரைக்கும் அப்பார்ட்மெண்ட் வேலை இருக்கு. ஞாயிற்றுக்கிழமைன்னா உங்களுக்கு நிதானமா பாத்துக் கொடுக்க முடியும்” என்றான்.

இனிக்க இனிக்க அவன் பேசியதில் அம்பிகாவே அசந்து போனாள். அவன் போனதும் ஞாபகம் வர, “அம்பிகா! நாளைக்கு உன் தங்கை கமலி வீட்டுல வர்றோம்ன்னு சொல்லி இருக்கோமே…”

“ஆமா! ஆனா அதைவிட இதுதான் முக்கியம் கரண்டையும் ஏசியையும்.. சரி பண்ணறது. ஆள் கிடைக்கும்போது விட்டுவிடக்கூடாது ..கமலி வீட்டுக்கு நான் போயிட்டு வர்றேன். நீங்க இங்கே உள்ள வேலையை பாருங்க” என்றாள். தீர்மானமாக.

மறுநாள் காலை அம்பிகா கிளம்பி கமலி வீட்டுக்குப் போய்விட… நான் சாரதிக்காக காத்திருந்தேன். சொன்னபடி சரியாக 9 மணிக்கு, ஏசி மெக்கானிக்கையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டான். சாரதியை பார்த்ததும் தான் மனம் நிம்மதியானது. இருவரும் வேலையை ஆரம்பித்தனர்.

“சார் ! எர்த் சரியில்லை… எர்த் அடிக்கனும்… காப்பர் கம்பி வாங்கனும் ஒயர் வாங்கனும்” என்றான். எனக்கும் கடைக்கு அலைய அலுப்பாக இருந்தது.

அதற்குள் அவனே, “சார்! நீங்க பணம் கொடுங்க. நான் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றான். அவன் ஆயிரம் ரூபாய் கேட்க நானும் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு நிம்மதியாக இருந்தேன்.

ஏசி மெக்கானிக் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தான். முடிவில் ஏதோ ஒரு பெரிய பெயர் சொல்லி “முக்கியமான யூனிட் போயிடுச்சு, அத மாத்திட்டா பிரச்சனை சரியாகிவிடும்” என்றான்.

“மாற்ற எவ்வளவு ஆகும்?” என்றேன்.

“விலை 6,000 ரூபாய் சார்! போய் கம்பெனியில தான் வாங்கிட்டு வரணும். நீங்க சரின்னு சொன்னா வாங்கிட்டு வந்து மாத்தறேன். இல்லைன்னா நீங்களே கம்பெனிக்கு கம்ப்ளைன்ட் கொடுத்து பாத்துக்கோங்க! அவங்க வந்தா எப்படியும் கூட ரெண்டாயிரம் சேர்த்து தான் பில் போடுவாங்க.”

நான் யோசிச்சேன்.. இன்னும் கம்பெனியில சொல்லி… அவங்க வந்து… அதுவரை அம்பிகாவை சமாளிக்கனும்.

“சரிப்பா! நீயே வாங்கிட்டு வந்துடு! ஆனா எனக்கு பில் வேணும்” என்றேன்.

அதற்குள் சாரதி சாமான்களுடன் வந்துவிட… வேலையை ஆரம்பித்தான். தொட்டு தொட்டு அது சரியில்லை… இது சரியில்லை.. அதை மாத்தனும், இத மாத்தனும் என்று திரும்பத் திரும்ப கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வந்தான்.

“சார்! பணம் வேலையை முடிச்சுட்டு மொத்தமா வாங்கிக்கிறேன்” என்றான் .”சரி” என்பது மட்டுமே எனக்கு தேர்வாக இருந்தது.

ஏசி மெக்கானிக் மதியம் ஒரு மணி வாக்கில் வந்தான். கையில் புதியதாக இருந்த அட்டைப்பெட்டியை காண்பித்தான்.

“சார்! இதோ பாருங்க.. வாங்கிட்டேன்” என்றான்.

“சரிப்பா மாட்டிடு” என்றவன் நினைவாக, “பில் எங்கே?” என்று கேட்டேன் .

“சார்! பில் போட்ட ஜிஎஸ்டி வரும். அதனால பில் போடாமல் வாங்கிட்டு வந்துட்டேன்” என்றான்.

எனக்கு அது தப்பாக பட, “அரசாங்கத்தை ஏமாற்றலாமா? என்றேன்.

“சார்! அரசாங்கம் நம்ம பணத்தை எப்படி விரயம் பண்றாங்க… அதுக்கு இது சரியா போச்சு!” என்று சொல்லி சிரித்தான். நொந்து போனேன்.

வேலை முடிந்தால் போதும் என்று அம்பிகா செய்து வைத்துவிட்டுப் போன புளியோதரையை சாப்பிட ஆரம்பித்தேன். நான் சாப்பிட்டுவிட்டு போனபோது ஏசி மெக்கானிக் எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டிருந்தான்.

“சார்! இப்ப கூலிங் நல்லா இருக்கும், செக் பண்ணுங்க…” என்றான்.

“அது சரிப்பா! பழைய பார்ட் எங்கே?” என்று ஞாபகமாக கேட்க

“அத நான் தூக்கி போட்டுட்டேன்” என்றான் கூலாக… ஏசி கூலாக எனக்கு வியர்த்தது.

அதற்குள் சாரதியின் தன் பங்குக்கு வேலையை முடித்துவிட்டு, எல்லா லைட், ஃபேன், ஏசி, மின்சாதனங்கள் எல்லாவற்றையும் போட்டுக் காட்டிவிட்டு, “சார்! இனி பிரச்சனை வராது!” என்றான்.

“உனக்கு எவ்வளவு பா கொடுக்கனும்?” என்றதும்.

“8000 ரூபாய் சார்” என்றதும் எனக்கு தலைசுற்றியது.

“என்னப்பா இவ்வளவு சொல்ற?” என்று கேட்டபோது.

“சார்! இந்த பாருங்க இத மாத்தி இருக்கேன்… அதை மாத்தியிருக்கேன் என்று ஐந்து நிமிடம் விளக்கம் கொடுத்தான். பக்காவா பண்ணலேன்னா உங்க எலக்ட்ரிக் சாமான்கள் எல்லாம் அடிபட்டுடும்” என்றான்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, “சார்! ஞாயிற்றுக்கிழமை வேலை பார்த்திருக்கிறேன் ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொடுங்க” என்றான். இடிந்து போனேன்.

உண்மையிலேயே பிரச்சனை இருந்ததா அல்லது இவன் சுற்றி விட்டானா என்று யோசனை ஓடியது.. அன்றைய செலவு 15 ஆயிரம் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.

வேறு வழியில்லாமல் பணத்தை கொடுத்துவிட்டு, அம்பிகாவிடம் பொய் சொல்ல தயாரானேன். அம்பிகா சொல்வது சரிதான், சாரதியை விசாரிக்காமல் வேலைக்கு விட்டது தப்பு. நமக்கு சாமத்தியம் போதவில்லை. என்று நொந்து கொண்டேன்.

மாலை ஐந்து மணி காலிங்பெல் அடிக்க, அம்பிகா தான் வந்து விட்டாள் என்று நினைத்து கதவை திறக்க, என் நண்பன் கபிலன் நின்று கொண்டிருந்தான்.

“என்ன கண்ணா! வீடு அதகளமாயிருக்கு வேலை நடந்ததா?” என்று கேட்க… என் மொத்த மனபாரத்தையும் அவனிடம் கொட்டி தீர்த்தேன்.

“மத்தியானம் சாரதி போறத பார்த்தேன். உங்க வீட்லயிருந்து தான் போறானா? அவன் பெரிய கொள்ளைக்காரன்ப்பா. எங்க வீட்டிலேயும் ஒரு மாசத்துக்கு முன்னாடி வேலைக்கு வந்தான். பிளம்பிங் வேலை இருந்ததால், அதற்கும் சேர்த்து பார்க்க ஆள் கூட்டிட்டு வந்தான். நல்ல இனிக்க இனிக்க பேசுவான். வாய் முழுக்க பொய்.நானும் உன்ன மாதிரி அவன்கிட்ட ஏமாந்துட்டேன். கடைசியில 9 ஆயிரம் ரூபாய் பில் போட்டான் இவன், இவன் கூட வர்றவன்.. எல்லாமே பிராடுகள்தான். வேலையில கெட்டிக்காரர்கள். அதில் சந்தேகமில்லை .ஆனால் சாமான் வாங்குறதில ஏமாத்திடுவாங்க”

“கபிலா ஏசி மெக்கானிக் கைல புது ஸ்பேர் பார்ட் டப்பா வைச்சிருந்தான்” என்றேன்.

“டப்பா வைச்சிருந்தான்…. அதை திறந்து காண்பித்தானா? திறந்து பார்த்தாலும்.. கழட்டிட்டு போன பாகத்தை ரிப்பேர் பண்ணி புதுசு மாதிரி வச்சுப்பான்.. பில் கொடுத்திருக்க மாட்டானே!”

ஆமோதித்தேன் மனம் கசக்க.

“எப்படி ஏமாத்துறாங்க இந்த பசங்க.. ஆனா ஒண்ணு கண்ணா… நாம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எவ்வளவு ஈசியா ஏமாத்துறாங்க… பலபேர் சாபம் இவனை சும்மா விடாது. வாசல் வழியாக வந்த பணம் கொல்லை வழியா போயிடும்” என்றான் வயிற்றேரிச்சலோடு.

எது எப்படியானாலும் பணம் போனது போனதுதானே… அம்பிகாவிடம் முழு விபரத்தையும் சொல்லாமல் மறைத்து விட்டேன். பேசாமல் கம்பெனி சர்வீஸ் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது என்பது லேட்டாக புத்தியில் உறைத்தது. ஆனால் பணத்தை கொள்ளை அடித்தாலும், வேலை ஒழுங்காக பார்த்ததால் அதற்கு பிறகு பிரச்சனை இல்லை .

6 மாதங்கள் கழிந்த நிலையில், ஒருநாள் நியூஸ் பேப்பருடன் பரபரப்பாக வந்தாள் அம்பிகா.

“ஏங்க பாத்தீங்களா! நமக்கு வேலை பார்த்த சாரதியில்ல… அவன் வீட்டில திருட்டு போயிடுச்சாம். 10 பவுன் நகையும் 50 ஆயிரம் ரொக்கப் பணமும் திருட்டு போயிடுச்சாம்.. ஐயோ பாவம்! அவன்கிட்ட எவனோ திருடி இருக்கான் பாருங்க!” என்றாள் இரக்கத்தோடு.

“அட! திருடன்கிட்ட எவனோ திருடிட்டான்” என்றேன்.

“என்ன உளறீங்க?” என்று சிடுசிடுத்தாள்.

“வாசல் வழி வந்தது… கொல்லை வழி போயிடும்” என்று கபிலன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. கொல்லை வழி போய் விட்டது என்ற நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

மத்யமாவதி (பகுதி 1-ஹம்ஸத்வனி) – சாய்ரேணு சங்கர் 

காதலாகி (சிறுகதை) – ராஜேஸ்வரி