ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
அந்தி சாயும் நேரம்… நாள் முழுதும் அலைந்து திரிந்து களைத்துப் போயிருந்த சூரியன், தன் பொன் மஞ்சள் கதிர்களை முழுமையாகத் தன்னுள்ளிழுத்து மேற்கில் மறைந்து கொண்டிருந்தான்.
முன்னிரவின் முகமன் கூறி பௌர்ணமி நிலவு தன் முகமதியை மெல்ல மெல்லக் காட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. பளபளத்துக் கொண்டிருக்கும் கொள்ளிடம் மற்றும் காவிரியாற்றின் தெளிந்த கண்ணாடி நீரோட்டத்தில், வெண்ணிலா தன் முக அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.
காவிரியும் கொள்ளிடமும் அமைத்துக் கொடுத்த அரங்கில், அரங்கன் பள்ளி கொண்ட பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் வெள்ளி நிலவொளியில் மின்னிக் கொண்டிருந்தது.
தண்ணிலவின் மின்னொளியில் வெள்ளி நிலவொளியில் தகதகத்துக் கொண்டிருந்த அரங்கன் ஆலயத்தின் நந்தவனத்தில் தழுவிய அமைதியான சூழ்நிலையைக் கிழித்துக் கொண்டு, சற்று பதட்டமான குரலில் வீரமாறனிடம் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார் வீர வைஷ்ணவ நாராயண பட்டர்.
“அடேய் வீரமாறா… ஆலயத்தின் பிரதான வாயிலருகின் மண்டபத்தில் கூடாரம் அமைத்துத் தங்கி, அரங்கன் திருக்கோயில் பொக்கிஷங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகும் எண்ணத்தில் டெல்லி சுல்தானின் மொகலாயப் படைத்தளபதி ஷேக் முகமது தனது படைகளுடன் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி அறிந்தேன். நாம் சற்றே உஷாராக அவனது நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வர வேண்டும்.
மாறுவேடத்தில் நகரக் காவல் தலைமை பொறுப்பிலிருக்கும் நம் படைத்தளபதி காவிரி நாடன் அவர்களுக்கு அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளைத் தெரிவிக்க வேண்டும். அந்தப் பொறுப்பை நீ தான் சரியாகச் செய்ய வேண்டும். இரவு ரோந்துப் படைகளின் நடமாட்டம் வரத் துவங்கி விட்டது. சரி நீ புறப்படு, நாம் மீண்டும் நாளை சந்தித்து நிகழும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கலாம்” என்றார்
சம்பாஷணைகளை முடித்துக் கொண்டு நாராயண பட்டரும் வீரமாறனும் தனித்தனியே பிரிந்து சென்றனர்.
நாராயண பட்டர் அரங்கநாதரின் மீது அளவற்ற பக்தி கொண்டு ஆலய சேவை செய்து வருபவர். ரங்கநாத ஸ்வாமிக்கு திருமஞ்சனம் முதலான நித்ய கைங்கர்யங்கள் செய்து வருபவர். ஆலயத்தின் பொக்கிஷப் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பவர்.
வீரமாறன் ஒற்று வேலையில் மிகவும் சாமர்த்தியசாலி. நாராயண பட்டருக்கு அவன் ஊன்றுகோல் போன்றவன்.
13ஆம் நூற்றாண்டின் காலம்… அலாவுதீன் கில்ஜி மொகலாயப் பேரரசு காலத்தில், பாரதத்தின் தென்னாட்டுக் கோயில்களை சூறையாடி, பொன், பொருள், பொக்கிஷங்களால் தன் கஜானாவை நிரப்ப பிரதானத் தளபதி மாலிக்காபூர் தலைமையில் ஆசம் கான், ஆதில் ஷா போன்ற சுல்தான்களை பெரும் மொகலாயப் படைகளுடன் தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைத்தான்.
மாலிக்காபூரால் அனுப்பி வைக்கப்பட்ட சுல்தான்கள் தம் படைபலத்தால் தென்னிந்திய மன்னர்களை வென்று, கோயில்களை சூறையாடி ஏராளமாக பெரும் தனப் பொக்கிஷங்களை டெல்லிக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தென்னிந்திய மன்னர்களின் ஒற்றுமையும் பலமும் குறைந்ததால், அவர்களை வென்று ஆட்சியைப் பிடிப்பதில் மொகலாய சுல்தான்களுக்கு அதிக சிரமம் ஏதும் இருக்கவில்லை.
சுல்தான்கள் மதுரையை மையமாகக் கொண்டு தங்களது வேட்டையை துவங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மதுரை சுல்தான்கள் என்று அறியப்பட்டனர்.
ஸ்ரீரங்கநாதர் தங்க விக்கிரகம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் தங்க, வைர, வைடூரிய, நவரத்ன ஆபரணங்கள், கிரீடங்களின் அழகு மற்றும் ஏராளமான பொக்கிஷங்கள் பற்றிக் கேள்விப்பட்டு, ஸ்ரீரங்கம் கோவிலைச் சூறையாடி அங்குள்ள பொக்கிஷங்களைக் கைப்பற்றிக் கொண்டு வரும்படி மதுரை சுல்தானகதாதிற்கு நேரடி உத்தரவு பிறப்பித்தான் அலாவுதீன் கில்ஜி.
டெல்லி முகலாயப் பேரரசின் உத்தரவுக்குக் கீழ்படிந்து, மதுரை சுல்தான் தங்கள் படைத்தளபதி ஷேக் முகமது தலைமையில் ஒரு சக்திவாய்ந்த படையை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தான்.
ஷேக் முகமது தலைமையில் முகலாயப் படை திருவரங்கம் நகரை முற்றுகையிடப் போவதை ஒற்றர்கள் தலைவன் வீரகேசரி மூலம் அறிந்த நாராயண பட்டர், ஆசாரசீலரும் பெரும் விஷ்ணு பக்தரான வைஷ்ணவ ஆச்சாரியர் “பிள்ளை லோகாச்சாரியரை” உடன் அழைத்துவரும்படி வீரமாறனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
திட்டமிட்டபடி, வீரமாறன் வைஷ்ணவ ஆச்சார்யருடன் நந்தவனம் வந்து சேர, நாராயண பட்டரும் ஒரே நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.
வைஷ்ணவ ஆச்சார்யர் ‘பிள்ளைலோகாச்சாரியர்’ அவர்களுக்குத் தலைவணங்கி நமஸ்கரித்துப், பின் மெதுவான குரலில் பேச ஆரம்பித்தார் நாராயண பட்டர்.
“ஆச்சார்யா அவர்களே! இரண்டொரு நாட்களில் நம் திருவரங்கம் முகலாயப் படைகளால் முற்றுகையிடப்பட உள்ளதாக ஒற்றர்கள் மூலம் செய்தியறிந்தேன். நாளை நிலவு புறப்பட்ட பின், முன்னிரவில் அரங்கனின் சந்நிதானம் வந்து நம் ஸ்வர்ண அரங்கன் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு, மதுரைக்கருகில் தங்கள் பூர்வீக கிராமத்திற்குச் சென்று, யார் கண்ணிலும் படாமல் அரங்கனை பாதுகாப்பாக வைத்து, குறைவுபடாத அளவில் நித்ய கைங்கர்யங்கள் செய்து வரும்படி தங்கள் தாள் பணிந்து வேண்டுகிறேன். தேவரீர்… தொடர்ந்து நான் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து எனக்கு ஆலோசனைகள் வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் விண்ணப்பம் செய்து கொள்கிறேன்”
அதுவரை மௌனமாகக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வைஷ்ணவ ஆச்சார்யா “பிள்ளைலோகாச்சாரியர்”, சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டவராக தம் திருவாய் மலர்ந்து பேசினார்.
“அரங்கன் என்னை ஆட்கொள்ளட்டும். அவன் ஆக்ஞ்யை அதுவானால், இந்தப் புண்ணிய நற்காரியத்தில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயம் வேறு எவருக்கும் தெரிய வேண்டாம். அரங்கன் என்னை அழைத்துச் செல்வான். ஆலய பொக்கிஷங்களை நீங்கள் தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டு விட்டு மீண்டும் நாளை முன்னிரவில் சந்திப்பதாகக் கூறிவிட்டு புறப்பட்டார்.
மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் நந்தவனம் வந்தடைந்த “பிள்ளைலோகாச்சாரியர்’ அவர்களை வரவேற்று நமஸ்கரித்து, அவரை அரங்கன் சந்நிதானம் அழைத்து சென்று, தங்க விக்ரஹ அரங்கனை ஆச்சார்யர் கைகளில் சமர்ப்பணம் செய்தார் நாராயண பட்டர்.
இருவர் கண்களிலும் ஆனந்த பாஷ்பம் பொங்க, மௌனமாகத் தத்தம் வழியே பிரிந்தனர்.
தங்க விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டு, அரங்கன் சந்நிதானத்தில் இருந்த சுரங்கவழிப் பாதையில் பயணித்து நதிக்கரை சேர்ந்தார், பிள்ளைலோகநாதாச்சாரியர்.
நாராயண பட்டரின் முன்னேற்பாட்டின்படி, வீரமாறன் முன்னே வழிகாட்ட, ஒருவர் கண்ணிலும் படாமல் நதிக்கரையில் இருந்த படகில், ‘அபரஞ்சி’ தங்கத்தாலான அரங்கன் விக்ரஹத்தை மார்புடன் அணைத்துக் கொண்டு ஏறினார் ஆச்சார்யர்.
பால்வெண்ணிலவொளியில் உருகியோடும் வெள்ளி போல் தகதகத்துக் கொண்டிருக்கும் காவிரி நதியின் பளபளக்கும் தண்ணீரில் அமைதியாக வீரமாறன் படகைச் செலுத்தி ஆச்சாரியரை அரங்கன் விக்ரஹத்துடன் அக்கறையில் அக்கறையுடன் கொண்டு சேர்த்தான்.
அங்கே ஒரு நம்பிக்கையான ஒற்றனுடன் தயாராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குதிரை வண்டியில் ஏற்றி, அவருக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்திவிட்டு, அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தான் வீரமாறன்.
வைஷ்ணவ ஆச்சார்யா பிள்ளைலோகநாதாச்சாரியா, திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்த கதை போல, வைகறைப் பொழுது புலருமுன்னே, சுல்தான்கள் ஆட்சி செய்யும் மதுரைக்கு அருகிலுள்ள தமது பூர்வீக குக்கிராமத்தில் எவர் பார்வையிலும் பட்டு விடாமல், அரங்கன் விக்ரஹத்துடன் பதுங்கிக் கொண்டார்.
திருவரங்கம் அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்தது. படைத்தளபதி ஷேக் முகமது தனது படைகளுடன் திருவரங்கத்திற்கு வந்து கொண்டிருந்தான்.
தம்மை எதிர்த்து வரும் ஸ்ரீரங்கத்துப் படை வீரர்களை துவம்சம் செய்து, முன்னேறி ஸ்ரீரங்கம் கோவில் அருகில் வந்து சேர்ந்தன முகலாயப் படைகள்.
ஸ்ரீரங்கம் கோவில் உட்பட நகர் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான் படைத்தளபதி ஷேக் முகமது. தங்களை எதிர்த்து நின்ற ஊர்மக்கள் மற்றும் வீரர்களைக் கொன்று குவித்தது முகலாயப் படை.
சுல்தான் படைகளை எதிர்க்கத் துணிவின்றி நகர மக்கள் அடங்கி விட்டனர். இந்நிலையில் படைத்தளபதி ஷேக் முகமது, நகரைச் சுற்றியுள்ள கோவில்கள் அனைத்தையும் சூறையாடி பொன், பொருட்களை கொண்டு வரும்படி தன் படைகளுக்கு ஆணையிட்டான். படைகளின் அட்டகாசம் தலை விரித்து ஆடியது.
படைத்தளபதி ஷேக் முகமது திருவரங்கம் கோவிலுக்குள் புகுந்து பெருமளவில் ஆபரணங்கள், பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்து டெல்லி சுல்தானகத்திற்கு அனுப்பி வைத்தான்.
மேலும் ஏராளமான விலை மதிப்பற்ற தங்க வைர வைடூரிய நவரத்ன ஆபரணங்கள், அழகான விக்ரஹங்கள் மற்றும் பொக்கிஷங்கள் எவரும் அறியாமல் கோவிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என்று கேள்விப்பட்டு, அவற்றையும் கொள்ளை அடித்துச் செல்லத் தருணம் பார்த்து, அரங்கன் கோயில் மண்டபத்திலேயே கூடாரம் அமைத்து தங்கி இருந்தான்.
தமது படைகளை கோயிலுக்கு வெளியில் நகருக்குள்ளேயே தங்கியிருக்கும்படி ஆணையிட்டான். முகலாயப் படைகள் நகரில் பல இடங்களிலும் தங்கி, மதுபான போதையில் திரிந்து மக்களுக்குப் பலவிதமாகத் துன்பம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.
கோயிலுக்குள் மக்கள் எவரும் நுழையவோ அர்ச்சனை ஆராதனைகள் செய்யவோ கூடாதென்று உத்தரவு பிறப்பித்தான் படைத்தளபதி. ஸ்ரீரங்கம் மக்கள் தம் மனங்களுக்குள்ளேயே புழுங்கி எதுவும் செய்வதறியாது வருந்தினர்.
வெள்ளையம்மாள்… இறைவன் இவளைக் கொள்ளை அழகுடன் உருவாக்கி கணிகையர் குலத்தில் படைத்து விட்டான். தேவதாசி குலத்தில் பிறந்து விட்டாலும், ஸ்ரீரங்கம் அழகு ரங்கனிடம் அளவு கடந்த நேசமும் பக்தியும் கொண்டிருந்தாள் வெள்ளையம்மாள்.
திருவரங்கம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், தமது அழகான பக்தி ரசமான நாட்டியாஞ்சலி செய்து அரங்கனையும் திருவரங்க மக்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தாள்.
வெள்ளையம்மாள் ஒரு தேவதாசியாக இருந்த போதிலும் ஸ்ரீரங்கம் மக்களின் அபிமானத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தாள். ஸ்ரீரங்கத்தைச் சுற்றி இருக்கும் கிராமங்கள் பட்டிதொட்டிகளிலும்கூட அவளை அறிந்திராதவர் எவருமில்லை என்ற அளவில் புகழ் பெற்றிருந்தாள்.
மொகலாயப் படைத்தளபதி ஷேக் முகமது படைகளுடன் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டுள்ளதையும் நகர மக்கள் படும் வேதனைகளையும் கண்டு மனம் வெதும்பினாள். அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டாள்.
படைத்தளபதி ஷேக் முகமது, மாலை வேளையில் நகர்வலம் வருவதை வழக்கமாக்கிக் கொண்டான். அப்படி ஓர் நாள் நகர்வலம் வருகையில், வெள்ளையம்மாளைக் கண்டு அவள் அழகில் மயங்கினான்.
“ஏ அழகிய பெண்ணே! உன் பெயர்?” என ஷேக் முகமது கேட்க
“சலாம் ஹூசூர்! என் பெயர் வெள்ளையம்மாள், உள்ளே வாருங்கள். எனது இல்லத்துக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்” என்று கூறி அவள் வீட்டிற்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவனுக்குப் பலவாறாக உபசரணைகள் செய்து அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தாள். அவள் தேவதாசி என்பதால் அவளை நாட்டியமாடச் சொல்லி ரசித்தான் ஷேக் முகமது.
வெள்ளையம்மாளும் மறுப்பேதும் தெரிவிக்காமல், தன் முகத்தின் புன்முறுவல் மாறாமல் சிருங்கார நாட்டியமாடி அவனை மகிழ்வித்தாள். படைத்தளபதியோ அவளை ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான்.
இதழோரத்தில் ஒரு புன்னகையைத் தவழவிட்டு மௌனம் சாதித்தாள் வெள்ளையம்மாள். பின்னர் ஷேக் முகமது தனது கூடாரம் நோக்கி சென்று விட்டான்.
மறுநாள் அந்தி மயங்கிய வேளையில், வெள்ளையம்மாள் வழக்கத்திற்கு அதிகமான வகையில், அநேக ஆபரணங்களாலும் புஷ்பங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். வாசனாதி திரவியங்களையெல்லாம் மேனி முழுவதும் பூசிக் கொண்டாள்.
தன் காற்சதசங்கையொலி கேட்டு படைவீரர்கள் எவரும் உஷாராகி விடக் கூடாது என்ற எண்ணத்தில், மிகவும் எச்சரிக்கையுடன் தன் காலிலுள்ள, சலங்கைகொலுசு தண்டைகளைக் கழற்றி தன் ஆபரணப் பெட்டிக்குள் வைத்து விட்டாள்.
படைத்தளபதி தங்கியிருந்த கூடாரம் நோக்கிப் புறப்படும் முன், தன் பணிப்பெண்ணிடம், “வீதிகளில் படைவீரர்களின் நடமாட்டம் எப்படி உள்ளது என்று பார்த்து வா” என பணித்தாள்
பணிப்பெண் வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “அம்மா… படைவீரர்கள் அனைவரும் மது அருந்தி விட்டு, மதுபோதையில் தன்னிலை மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள் அம்மா” என்று கூற
வெள்ளையம்மாள் காலணி ஏதும் அணியாமல், தகதகக்கும் வெண்பட்டுப் புடவை அணிந்து, வானத்து தேவதையொன்று மண்ணில் இறங்கி வந்தது போல் சர்வ அலங்காரத்துடன், படைத்தளபதியைச் சந்திக்க, அரங்கன் கோயில் கோபுரவாசல் நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள், அவள் மொகலாய படைத்தளபதியுடன் நெருக்கமாகப் பழகுவதை பலவாறாகத் தூற்றி, அருவருப்புடன் பார்த்து வெறுத்து ஒதுங்கினர்.
கோபுரவாசலை நெருங்கிய வெள்ளையம்மாள், மரத்தின் அடியில் இரு உருவங்கள் பேசிக் கொண்டு இருப்பதை உணர்ந்து, ஓரத்தில் மறைந்து நின்றாள்.
பௌர்ணமியைத் தொடர்ந்த நான்காம் நாள் முன்னிரவு என்பதால், நிலவொளியில் அந்த இரு உருவங்களும் நாராயண பட்டரும் வீரமாறனும் என்பதைப் புரிந்து கொண்டாள்.
“வீரமாறா… அரங்கன் பக்தை போல் நடித்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் வெள்ளையம்மாளின் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறது பார்த்தாயா? மொகலாயப் படைத்தளபதியை வீட்டுக்கு அழைத்து உறவாடிக் கொண்டிருந்த அவள், இன்றுஅவன் கூடாரத்திற்கே உறவாட வந்துவிட்டாள் பார்” என்று கூறி அவளை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தார் நாராயண பட்டர்
அவர்கள் அருகே நெருங்கி வந்த வெள்ளையம்மாள், “ஏதேது… அரங்கன் மந்திரங்கள் உச்சரிக்கும் பட்டர்பிரான் வாய் கூட மற்றவரை ஏசுவதில் சளைக்கவில்லையே? தர்ம நியாயங்கள் அறிந்த நாராயண பட்டருக்குத் தொழில் தர்மம் பற்றித் தெரியவில்லை போலும்?” என்று எகத்தாளமாகக் கூறி விட்டு, அவர்களைக் கடந்து படைத்தளபதியின் கூடாரம் நோக்கிச் சென்றாள்.
தளபதி தனித்திருந்து மதுவில் ஊறி, மயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், திரைச்சீலையின் மறுபுறத்தில், மேலும் போதை ஏற்றும் வகையில் வானத்து தேவதையொன்று நடமாடக் கண்டான்.
“வெண்பட்டுடுத்தி… அந்த வானத்து வெண்ணிலா மண்ணிலே வந்ததோ?”
மதுபோதையும் மாது போதையும் ஒருங்கே தலைக்கேற கவிதை படித்த தளபதி, “யாரது? வெள்ளையம்மாளா? ஏன் இங்கு வந்தாய்? சொல்லியனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் தேடி வந்திருப்பேனே… கண்ணே! அப்படி என்ன அவசரம்…? இந்த இரவு வேளையில்…” என்று வார்த்தைகளை முடிக்காமலேயே அவள் கையைப் பிடித்து அருகே இழுக்க முயன்றான்.
“அரங்கன் ஆலயத்தில் இது போல் நடந்து கொள்வது மிகவும் தவறு. நான் வந்ததோ ஒரு முக்கியமான விஷயமாக…” என்று கூறி முடிக்கும் முன்
கூடார வாயிலில் நாராயண பட்டரையும் வீரமாறனையும் மொகலாய இரவு ரோந்துப் படைகள் சுற்றி வளைத்து கைது செய்து இழுத்து வந்தனர்.
படைத்தளபதி ஷேக் முகமது சிம்ம கர்ஜனையுடன் படைகளை ஏறிட்டுப் பார்த்து, “யார் இவர்கள்…? என்ன தவறு செய்தனர் இந்த மிலேச்சர்கள்…?” என வினவினான்.
இரவு ரோந்துப் படைத்தலைவன், “இவர்கள் இருவரும் இந்த இரவு வேளையில் கோவில் நந்தவனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஏதோ திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களைக் கைது செய்து தங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம்” என்று கூறி முடித்தான்.
“இந்த நாய்களைக் கட்டிப்போட்டு சித்ரவதை செய்து, இவர்களிடமிருந்து உண்மையை வரவழையுங்கள்” என்று உறுமினான் படைத்தளபதி.
“சற்று பொறுங்கள்… தளபதியாரே! இவர்கள் யார்…? இவர்களது நோக்கம் என்ன… என்பதைத் தெளிவாகச் சொல்கிறேன்” என்றாள் வெள்ளையம்மாள்.
நாராயண பட்டரும் வீரமாறனும் வெள்ளையம்மாளின் துரோகச் செயலை எண்ணி அவள் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.
“இதோ திருமண் அணிந்து திருதிருவென முழிக்கிறாரே… இவர்தான் கோயில் அர்ச்சகர், அருகில் நிற்பவன் அவருக்கு எடுபுடி. இந்த ரெண்டும் சேர்ந்து என்ன திட்டம் தீட்டி விட முடியும்? அவர்களுக்கு கோயில் பொக்கிஷங்கள் எங்கே இருக்கிறது என்றா தெரியும்? அவர்களை சித்ரவதை செய்வதால் நமக்கு என்ன லாபம்? அவர்களை எச்சரித்து விடுதலை செய்து விடுங்கள். நமக்கு முக்கியமான வேலை ஒன்று காத்துக் கிடக்கின்றது” என்று கிளி கொஞ்சும் குரலில் குழைவாகப் பேசினாள்.
நாராயண பட்டரையும் வீரமாறனையும் விடுவிக்கச் சொல்லி இரவு ரோந்துப் படைத்தலைவனுக்கு உத்தரவிட்டு விட்டு, வெள்ளையம்மாளுடன் கூடாரத்தினுள் சென்றான் படைத்தளபதி.
“நீங்கள் எதற்காக ஸ்ரீரங்கத்தின்மீது படையெடுத்து வந்தீர்கள்…?” என வினவினாள் வெள்ளையம்மாள்.
கடகடவென இடிச்சிரிப்பு சிரித்த தளபதி, “இதென்ன கேள்வி…? ஸ்ரீரங்கம் கோவிலில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கிடைத்தற்கரிய பொன் மணி வைர வைடூரிய நவரத்ன ஆபரணங்கள், அழகான தங்க விக்ரகங்கள் அடங்கிய மாபெரும் பொக்கிஷங்களைக் கொள்ளையடித்து அவற்றை டெல்லி சுல்தானகத்திற்கு விரைவில் கொண்டு செல்வதற்காகவே படைகளுடன் இங்கு முற்றுகையிட்டிருக்கிறேன். சரி… நேரடியாக விஷயத்துக்கு வா… ஏதோ அவசரச் செய்தி என்று சொன்னாய்? என்ன விஷயம் சொல்”
“அது… அது… வந்து… அது ஓர் ரகசிய செய்தி…” என்று கூறி சற்று தாமதித்தாள் வெள்ளையம்மாள்.
மது மயக்கத்தில் போதையில் இருந்த போதிலும் சட்டென்று விஷயத்துக்கு வந்த தளபதி, “பொக்கிஷங்கள் இருக்குமிடம் பற்றிய ரகசியங்களை நீ அறிவாயா என் கண்ணே…? உனக்கு என்ன வேண்டும் சொல்… உனக்கு வேண்டுமளவிற்கு வைர வைடூர்ய தங்க ஆபரண அணிகலன்கள் அனைத்தையும் நீ எடுத்துக் கொள், மீதியுள்ள பொக்கிஷங்களை நான் டெல்லிக்கு எடுத்துச் செல்கிறேன். என்னுடன் நீ டெல்லி வந்துவிடு, உன்னை என் மாளிகையில் மகாராணி போல் வைத்துக் கொள்கிறேன். வேறென்ன வேண்டும்… சொல்… அத்தனையும் தருகிறேன். தாமதப்படுத்தாமல் சொல்… அந்தப் பொக்கிஷங்கள் இருக்கும் ரகசிய இடத்தை…” என்று மூச்சுவிடாது பேசினான் தளபதி.
“சரி… விஷயத்துக்கு வருகிறேன். வேறெவரும் சற்றும் அறிந்திராத பொக்கிஷங்கள் இருக்கும் ரகசிய இடத்தை நானறிவேன். ஆனால் ஓர் நிபந்தனை… அந்த இடத்தை முதன்முதலில் நீங்களும் நானும் மட்டுமே பார்க்க வேண்டும். வேறெவரும் அறியக் கூடாது. எனவே நீங்களும் நானும் தனித்தே செல்ல வேண்டும். படைவீரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பி விடுங்கள். நாம் இருவரும் இந்த இரவின் மூன்றாம் சாமத்தில் ஏகாந்தமாகப் புறப்படலாம்” என்று கூறி தன் மயக்கும் விழிகளால் ஒரு காதல் பார்வையுடன் கட்டிப் போட்டாள்.
படைத்தளபதியும் மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல் தலையை ஆட்டி, தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டு, படை வீரர்கள் அனைவரையும் அரங்கன் கோவிலை விட்டு வெளியே செல்லும்படி உத்தரவிட்டான்.
வெகு சுலபமாக பொக்கிஷங்களைக் கைப்பற்றப் போகிறோம் என்ற பேரவாவில் மீண்டும் சற்று கூடுதலாகவே மதுரசம் அருந்தினான்.
நள்ளிரவு… மூன்றாம் சாமம்… சற்றே மயக்கும் பால் போன்ற நிலவொளியில், வெள்ளையம்மாளின் தோள் மீது கை போட்டுக் கொண்டு, கூடாரத்தின் வாயிலைக் கடந்து, வெள்ளையம்மாள் காட்டும் பாதையில் மகிழ்ச்சியாக நடந்து வந்தான்.
வெள்ளையம்மாள் மறுப்பேதும் கூறாமல் புன்னகைமாறா முகத்துடன் சிணுங்கியும் சிரித்தும் பேசியபடி அவனுடன் நடந்து வந்தாள்.
வெள்ளையம்மாள் மெதுவாகப் படைத்தளபதியை கிழக்கு கோபுரத்தின் மேலே உச்சிக்கு அழைத்துச் சென்றாள். கோபுரத்தின் உச்சியிலிருந்த இருவரும் இயற்கையின் எழிலை ஏகாந்தமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.
வெண்ணிலவொளியில் உருகியோடும் வெள்ளிநீர் போல, காவிரி ஆற்றின் குளிர்ந்த நீரோட்டத்தில் மெல்லிய அலைகளினூடே பிரதிபலித்துக் கொண்டிருந்தது வெண்ணிலவு. குளிர் வெண்ணிலவு குதூகலிக்கும் தென்றலுடன் இணைந்து ஒரு ரம்யமான சூழலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
மது போதையுடன் அருகிருக்கும் மாது மயக்கமும் இயற்கை அழகும் சேர, சொர்க்கத்தின் இன்பவாயிலில் மனதைப் பறிகொடுத்துக் கொண்டிருந்தான், படைத்தளபதி.
“என் அன்பிற்கினிய வெள்ளையம்மா! மேலும் காலங்கடத்தாமல், இந்த சொர்க்கபுரியுடன் எனக்கு அந்த பொக்கிஷங்கள் இருக்கும் இடத்தை உடனே காட்டிவிடு…” என்று கேட்டு, மது மயக்கத்திலும் தனது இலக்கை அடைய நினைத்தான்.
அரங்கன் கோபுர விமான கருவறையை பக்தியுடன் நோக்கிக் கும்பிட்டவாறே சற்றும் எதிர்பாராதவகையில் கண்மூடித்திறக்கும் நொடிப்பொழுதில் சரேலென்று அந்தக் கொடிய மொகலாய தளபதியை கோபுரத்தின் உச்சியிலிருந்து வெளிப்புறம் நோக்கிக் கீழே தள்ளி விட்டாள் வெள்ளையம்மாள்.
“ஹோ…” வென்ற பேரிரைச்சலுடன் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்த மொகலாயப் படைத்தளபதி ஷேக் முகமது என்ற அந்தக் கயவன், ரத்த வெள்ளத்தில் தலை சிதறி மாண்டான்.
தங்களது தளபதியின் மரண அலறல் சத்தம் கேட்டு மொகலாயப் படைகள், வெள்ளையம்மாளைப் பிடிக்கும் எண்ணத்தில் கோபுரத்தில் ஏறினர்.
சரியான வழிகாட்டுதலின்றி, தலைவன் இல்லாமல் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த மொகலாயப் படைகளைத் தக்க சமயத்தில் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த, திருவரங்க நகரக் காவல் பொறுப்பேற்று ரகசியமாகப் படைகளை நடத்தி வந்த சோழர் படைத்தளபதி காவிரிநாடன், தமது படைகளுடனும் ஊர்மக்களுடனும் கூடி மொகலாயப் படைவீரர்களைக் கடுமையாகத் தாக்கி, சின்னாபின்னமாக்கிக் கொன்று பழி தீர்த்துக் கொண்டனர்.
மொகலாயப் படைவீரர்களிடம் சிக்காமல், தனது சிரம் மேல் கரம் குவித்து ‘தியாகமுத்திரை’யை காட்டியபடியே, அரங்கனை பக்தியுடன் துதித்து, ‘ரங்கா ரங்கா’ என்று முழக்கமிட்டபடியே, அரங்கன் கோபுர உச்சியிலிருந்து கீழே குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள் வெள்ளையம்மாள்.
அலறல் சப்தம் கேட்டு ஊர்மக்கள் பலருடன் அங்கு வந்த நாராயண பட்டர் மற்றும் வீரமாறன் இருவரும், தங்கள் உயிரை மொகலாயத் தளபதியிடமிருந்து காப்பாற்றியும் அரங்கன் பொக்கிஷங்களைக் காப்பாற்றியும் உயிர்த் தியாகம் செய்த வெள்ளையம்மாளைத் தவறாக நினைத்ததை எண்ணி மிகவும் வருந்திக் கண்ணீர் விட்டனர்.
தன் மரணத் தருவாயில் வெள்ளையம்மாள், நாராயண பட்டர் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தன் இறுதி வாக்குமூலத்தை ஈனஸ்வரத்தில் ஒரு கவிதையாக பதிவு செய்தாள்.
"அரங்கன் மேனிதவழ் மேலங்கி அணங்கின்மேல் போர்த்த… அரங்கன் அணிசேர் திருமஞ்சன மஞ்சளுடன்… அரங்கன் அணிமார்பலங்கரித்த நறுமாலையொன்று சாத்தி.. அரங்கன் ஆசியுடன் நல்லரிசி வாய்க்கரிசியாய் வாய்க்க.... அரங்கன் அடுமனை அழற் தீ ஆரணங்கு ஆட்கொள்ள… எம் குலப் பெண்டிர் இறுதி இனி உறுதி செய்ய வேண்டும்… என்பதே எம் இறுதி வாய்மொழி"
எனப் புகன்று தன் இன்னுயிர் துறந்தாள் வெள்ளையம்மாள்!
வெள்ளையம்மாளின் வேண்டுதலின்படி, அவளது உடல் காவிரி நன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, அரங்கன் திருமஞ்சன மஞ்சள் கொண்டு பூசப்பட்டு, அரங்கநாதர் மேல் சார்த்தப்பட்ட மேலங்கியால் போர்த்தப்பட்டு, அரங்கன் அணிமார்பலங்கரித்த நறுமண மாலை சார்த்தப்பட்டு, அரங்கன் திருக்கோயிலிலிருந்து படி அரிசி வாய்க்கரிசியிடப்பட்டு, அரங்கன் ஆலயத்தின் மடப்பள்ளி கழல் நெருப்பு கொண்டு வரப்பட்டு, ஊர்மக்கள் புடைசூழ அவளது இறுதிச் சடங்கு நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கதை வரலாற்று நிகழ்வுகளுடன் கற்பனையும் கலந்து வடிவமைக்கப்பட்டது
இணைப்பு – வரலாற்றுக் குறிப்புகள்:-
வெள்ளையம்மாள் வேண்டுகோளுக்கு இணங்க, அவளது இறுதி ஆசைப்படி வெகுகாலம் திருவரங்கம் வாழ் கணிகையர் குலத்தில் இறக்கும் பெண்களுக்கு, திருவரங்கம் ஆலயத்திலிருந்து, அரங்கன் மேல் போர்த்தப்பட்ட வஸ்த்திரம், திருமஞ்சன மஞ்சள், அரங்கனுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, படியரிசி மற்றும் அரங்கன் திருமடப்பள்ளியிலிருந்து எடுக்கப்படும் நெருப்பு ஆகியவை கொடுக்கப்பட்டு அந்தக் கணிகையர் குலப் பெண்டிருக்கு இறுதிச் சடங்கு மரியாதை செலுத்தும் வழக்கம் இருந்தது.
தற்போது கால மாற்றத்தில் இவ்வழக்கம் வழக்கொழிந்து போய் விட்டது.
திருவரங்கத்துக் கிழக்கு கோபுரம் வெண்மை நிறத்தில் இருப்பதன் பின்னே ஒரு வரலாற்று நிகழ்வு உண்டு. திருவரங்கத்துப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்த தேவதாசி வெள்ளையம்மாளின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் 1987க்கு முன்பு வரை, வெள்ளை வர்ணம் பூசப்பட்ட அந்த கிழக்கு கோபுர வாசலே திருக்கோயிலின் பிரதான வாயிலாக இருந்து வந்ததுடன், இன்றும் ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்திற்கு வேறெந்த வர்ணமும் பூசப்படாமல், “வெள்ளை வர்ணம்” மட்டுமே பூசப்பட்டு வருகின்றது.
1987க்கு பின், ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரம் நீக்கப்பட்டு, வைஷ்ணவப் பெரியோர்களின் விடாத பெருமுயற்சிகளால் விண்ணை முட்டும் அளவில் அழகான, பல வண்ண சுதைச் சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்டு, புதிய பிரதான பெரிய கோபுரம் அமைக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து வருகின்றது.
தென்னிந்தியாவில் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் வலிமையான ஆட்சி ஏற்பட்ட பின், இந்தியாவில் மொகலாயர்களின் கொடுங்கோலாட்சி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்தக் காலகட்டத்தில், ‘அபரஞ்சிப் பொன்னாலான அரங்கன் விக்ரஹம்’ ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு, மீண்டும் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ரங்கா… ரங்கா… ரங்கா… ரங்கா! சுபம்!
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20 சிறுகதைகள், நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது.
இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
வெள்ளையம்மாள் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது. செய்யும் தொழில் ஏதுவாக இருப்பினும், அந்த அரங்கன் மேல் உள்ள பக்தி காரணமாக, எதிரியை வதம் செய்து விட்டு தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டது, என கதை மிக சுவாரசியமாக எடுத்து சென்றுள்ளார் கதையின் ஆசிரியர் கவி தா பாரதி. மேலும் பல கதைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். —- ஜோதிடர் ரவீந்திர ராவ்
தங்கள் அன்பான விமர்சனங்கள் உற்சாகம் அளிப்பதாக இருக்கின்றது.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் அன்பு கலந்த நன்றி! 🙏
Miga arumai. Kathi kan முன்னே nigazvathu போல் ullathu.
தங்கள் அன்பான விமர்சனங்களுக்கு நன்றி!🙏
“தியாக முத்திரை” என்ற கவிதா பாரதி அவர்களின் வரலாற்று புதினத்தை படித்தேன்.
சரித்திர நிகழ்வுகளை அருமையான அழகான மாலையாக தொகுத்து வழங்கியுளீர்கள். அந்த நிகழ்வின் முக்கியத்துவம் சிறிதும் குறையாமல் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் விதம் படிக்கும்போது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்று இருக்கிறது. சம எந்த ஒரு உண்மையையும் மக்களிடம் போய் சேர்ந்தால் தான் அது சரித்திரமாக மாறும். அதை அழகாக செய்திருக்கிறார் “கவிதா பாரதி”. ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் அனுபவம் அவரது எழுத்துக்களில் தெரிகிறது.
தங்களது ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் உற்சாகம் தருகின்றது.
ஒரு கலைஞனுக்கு, எழுத்தாளனுக்கு மன மகிழ்ச்சி தருவது தங்களைப் போன்ற வாசகர்களின் பாராட்டுக்களும் ஆதரவும்தான் ஊக்கமளிக்கின்ற டானிக்!…
தங்களது அன்பான விமர்சனங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்! 🙏