sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

ரீபூட் (சிறுகதை) -✍ ரா.பிருந்தா, Canada

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 81) 

ரு முன் மாலைப் பொழுதில் அந்த பிரபல மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீட்டிங் ரூமில் நொடிக்கு நொடி கனம் கூடிக் கொண்டிருந்தது. அது ஒன்றும் புதிது இல்லை தான். அதுவும் வீஜே என்று அழைக்கப்படும் விஜய் ராகவன் இருக்கும் மீட்டிங்குகளில் எல்லோரும் சீட்டின் முனையில் தான் அமர்ந்திருப்பார்கள்.

வீஜே… அந்த மென்பொருள் நிறுவனத்தில் முக்கியமான அக்கவுண்ட்டை நிர்வகிக்கும் சீனியர் வைஸ் பிரெஸிடெண்ட், மிகவும் கண்டிப்பானவர். எப்படி எல்லோரையும் அலர்ட்டாகவும், கவனத்தை குவிக்கவும் வைக்க ஒரு சிலரால் முடிகிறது என்று ஆச்சரியப்பட வைப்பவர்களுள் இவரும் ஒருவர்.

வெறும் அதிகாரத்தை மட்டுமே வைத்து இதைச் செய்து விட முடியாது என்பது அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும். இதற்காகவே பிரத்யேகமாக தன்னை தயாரித்துக் கொள்வார்கள் போல.

அவர் இருக்கும் எந்த கூட்டத்திற்கும் யாரும் சரியாக தயாரிக்காமல் செல்வதில்லை என்ற போதும், எப்போதும் தயாரிப்பு போதவில்லை என்ற திசையில் தான் போய் முடியும். அவர் சொல்வது சரி தான் என்று நிராயுதபாணியைப் போல சரணடைந்து விடுவார்கள் அநேகமாக எல்லோருமே.

அன்றும் அப்படித் தான், அந்த அக்கவுண்ட்டின் நட்சத்திர கிளையண்ட்டின் ப்ராஜக்ட் ஒன்று கைவிட்டு போனதைப் பற்றிய அறிக்கையை குறித்து விவாதிக்கவே அந்தக் கூட்டம். அந்த ப்ராஜக்ட்டிற்கு வேலை செய்த குழுவிடமிருந்து அதைத் தோற்றதிற்கான காரணத்தை ஆராய்ந்து சொல்ல வேண்டிய பொறுப்பு மற்ற ஒரு டெலிவெரி டைரக்டரிடமும், பிராசஸ் மற்றும் தரத்திற்கான கட்டமைப்பை சரி பார்க்கும் குழுவைச் சார்ந்த சிலரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை குறித்த விவாதம், சம்பந்தப்பட்ட டைரக்டர் மற்றும் அந்த அக்கவுண்டின் மற்ற டைரக்டர்களுடன் வீஜே முன்னிலையில் நடந்து கொண்டிருந்தது. அறிக்கை குறித்த கையேட்டின் முதல் இரு பக்கங்கள் முடிவதற்கு முன்னரே, வீஜேயின் அதிருப்தி அவர் முகத்தில் தெளிவாகத் தெரிந்து விட்டது.

அந்த ப்ராஜக்ட் கைவிட்டுப் போனதினால், நடைமுறைகளில் கொண்டு வரப் போகும் மாற்றங்கள் கடுமையானதாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பே, எல்லோருக்கும் ஒருவித இறுக்கத்தை கொடுத்திருந்தது.

போறாத காலமாக, அந்த அறிக்கையே திருப்தியாக இல்லாத காரணத்தால், அதை தயாரித்தவர்களும் அதற்கு தேவையான தகவல்களை அளித்த சம்பந்தப்பட்ட டைரக்டரும் உட்சபட்ச பதட்டத்தில் இருந்தனர்.

வார்த்தையிலோ, முகத்திலோ, குரலிலோ கடுமையைக் காட்டாமல், எல்லோரையும் சீட்டின் நுனியில் உறைய வைத்திருந்தார் வீஜே.

இரண்டு பக்க அறிக்கையை விளக்கி முடிக்கு முன்னரே, அதற்கு மேல் தொடர்வதால் எல்லோரின் நேரம் மட்டுமே வீணாகும் என்று தான் கருதுவதாக உயரதிகாரி கூறுவது எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தும் என்பது அனுபவித்தவர்களுக்கு புரியும்.

அந்த நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கலைக்க, குழுவிவாதம் நடத்தி அறிக்கையை திருத்தலாம் என்ற யோசனையை முன் வைத்த சம்யுக்தா என்ற ஸேமியின் (Samy) பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியது.

அவர் சமீப காலத்தில் டைரக்டர் பதவி உயர்வு பெற்றவர், வீஜேயின் கூட்டங்களில் அதிகம் இன்னும் வாங்கிக் கட்டிக் கொள்ளப் பழகாதவர்.

“எப்போது முடியும்?” என்ற ஒற்றைக் கேள்வி, வீஜேயிடமிருந்து ஸேமியிடம் திரும்பியதில், பல அர்த்தங்கள் பொதிந்திருந்தது அங்குள்ள அனைவருக்கும் விதிவிலக்கில்லாமல் புரிந்தது.

தான் நேரத்தை அதற்கு மேல் வீணடிக்க விரும்பவில்லை என்பதும், கூட்டத்திற்கு முன்னரே முடிக்க வேண்டியதை முடிக்காமல் விட்ட துரதிஷ்டத்தை பேசுவதில் பயனில்லை என்பதும், தானாக முன் வந்து யோசனை சொல்பவர் பொறுப்பேற்றுக் கொள்வதாகும் என்பதும் அதில் அடங்கும்.

மூளை சம்பந்தப்பட்ட இத்தகைய வேலைகளை செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும் என்று கணிப்பதே பெரும்பாலும் கஷ்டம்.

அதிலும் தனக்கு அந்த விஷயத்தைப் பற்றி எவ்வளவு தெரியும், தெரியாது என்பதே தெரியாத ஒன்றை முடிக்க தேவையான காலத்தை கணித்து சில நொடிகளில் வீஜேயிடம் சொல்வது மஹா மஹா கஷ்டம் என்று எல்லோருக்கும் தெரிந்த போதிலும், பெரிய ஆளாக வேண்டி தானே உயரதிகாரி முன் பேசும் தைரியம் உள்ள அதிலும் பெண் நன்றாக அனுபவிக்க வேண்டிய கஷ்டம் தான் என்ற அல்ப சந்தோஷம் ஒருபுறமும், முடிவில் மாட்டப் போவது சம்பந்தப்பட்ட அனைவரும் என்ற பதட்டம் மறுபுறமும் உணர்ந்தனர் பலர்.

இன்னும் ஒரு நாளில் திருத்திய அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என்று கருவதாக ஸேமி கூறிய அடுத்த நொடியில், மீண்டும் மறுநாள் அதே நேரம் மீட்டிங் வைக்க சொல்லி விட்டார்.

சட்டென்று, “நாளை மறுநாள்” என்று மறுத்தவுடன்

“அது இரண்டு நாள்” என்று ஸேமியை கடிந்தபடியே முதல் குற்றவாளியான சம்பந்தப்பட்ட டைரக்டரின் பக்கம் திரும்பி ஒப்புதல் கேட்கும் தோரணையில் புருவத்தை உயர்த்த,

அவரும் வேறு வழியில்லை என்று தெரிந்து, “சரி” என்றார்.

இந்த மாதிரி சிறிய விஷயங்களை கையாளும் விதம் தான், எல்லோரையும் விரட்டி வேலை வாங்கும் யுக்தி போலும்.

ஒரு நாள் தேவை என்றால் மறுநாள் முழுவதும் என்றும் எடுத்துக் கொள்ளலாம், அந்த நொடியில் இருந்து 24 மணி நேரம் என்றும் பொருள் கொள்ளலாம். மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டியிருப்பது பற்றிய அக்கறை தனக்கு இல்லை என்பது அதன் பொருள்.

இந்த மாதிரி நேரங்களில் இரவு உறக்கத்தை தொலைப்பது அங்குள்ளவர்களுக்கு மிக சாதாரணமாக நடப்பது. அதற்குத் தானே இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது அதன் உள்ளர்த்தம்.

அவர் வெளியே நகர்ந்த பின் தான் எல்லோரும் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

“யார் முகத்தில் விழித்தோமோ” என்று ஒருவர் சொல்ல

“வீஜே பெட்ரூமில் நரியை கட்டி வைத்திருப்பார் போல, எல்லா நாளுமே அவருக்கு தான் சாதகமாக இருக்கிறது” என்று ஸேமி சொன்னதும், எல்லோரும் சிரித்து விட்டார்கள்

இப்படி இறுக்கமான சூழலை இலகுவாக்குவது ஸேமிக்கு இயல்பாக வாய்க்கப் பெற்றிருந்தது. அதற்காக இரவு பகல் வேலை செய்து அடுத்த மீட்டிங்கில் நல்ல ஆய்வறிக்கையை கொடுத்து நல்ல பேரை பெற்று விடுவார்கள் என்று மட்டும் யாரும் தப்புக்கணக்கு போட வேண்டாம்.

இதெல்லாம் ஒரு தொடர் கதை, ஒவ்வொரு கூட்டத்திலும் யாராவது வாங்கிக் கட்டிக் கொள்வதும், சமாளிப்பதும், டென்ஷனில் வேலை செய்வதும் வாடிக்கையான விஷயம் தான்.

ஆனால் இதற்கு பின்னால் நடந்த அந்த ஆய்வறிக்கை சம்பந்தமான நிகழ்வுகளின் பின்னணியில், தன் அலுவலக பயணத்தில் ஒரு திருப்பம் வரும் காலத்தில் காத்திருப்பதை ஸேமி உணரவில்லை.

ஸேமி நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சராசரி பள்ளி மற்றும் கல்லூரி ஆன போதிலும், நன்கு படித்து சுய முயற்சியாலும் திறமையாலும் வேலை தேடி, மென்பொருள் தயாரிக்கும் பல துறைகளில் வேலை செய்து, படிப்படியாக உயர்ந்த காரணத்தினால், அவருடைய கண்ணோட்டம் எப்போதுமே ப்ராஜக்ட்டை செய்து முடிக்கும் டீமை உள்ளடக்கியதாக இருக்கும்.

இது எந்த ஒரு சிக்கலையும் அதன் அடிப்படையை ஆராய நன்கு உதவிய போதிலும், பெயர் பெற்ற கல்வி நிறுவனங்களில் வணிக நிர்வாகம் படித்து விட்டு எடுத்தவுடனே, உயர் பதவிக்கு வருபவர்களின் கண்ணோட்டத்தில் வேறுபட்டிருக்கும். அது மேல் மட்டத்திற்கு உகந்ததாக இருப்பதில்லை

இப்பொழுதும், அந்த மாதிரி அடிப்படை விஷயமான ப்ராஜக்ட் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரிப்பதிலும், ஆராய்வதிலும் உள்ள கட்டமைப்பில் மாறுதல் தேவை என்பதை பற்றி பேசப் போக, அது பின்னாளில் வீஜேயின் நேரடி மேற்பார்வையில் வேலை செய்ய வேண்டிய இக்கட்டான பொறுப்பில் கொண்டு போய் விட்டது.

பொதுவாக இந்த மாதிரி நிறுவங்களில் இரண்டு விதமான பொறுப்புக்கள் உண்டு, ஒன்று டெலிவெரி என்று சொல்லப்படும் நேரடியாக வருவாய் ஈட்டும் ப்ராஜக்ட் சம்பந்தபட்டது. இன்னொன்று உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்டது.

பெரும்பாலும், டெலிவெரி துறையில் இருப்பதில் முக்கியத்துவமும், அனுகூலமும் உண்டு. எந்த துறையானாலும், மேலதிகாரி அமைவது இறைவன் கொடுத்த வரம் தான்.

இல்லையா பின்ன, ஒரு நாளின் சரிபாதி அல்லது அதற்கும் அதிகமான நேரத்தை செலவிடும் அலுவலகத்தில் மனைவியின் ஸ்தானத்தை பிடிப்பவர் மேலதிகாரியாகத் தான் இருக்க முடியும்.

எல்லா விதத்திலும், ஸேமிக்கு இது போறாத காலம் என்று தான் அனைவருக்கும் தோன்றியது.

பாசிட்டிவான எண்ணம், வேலை நேரத்தை உயிர்ப்புள்ளதாக வைத்திருக்கும் பாங்கு, கடினமான உழைப்பு போன்ற குணங்களை கொண்டிருந்தும் ஸேமிக்கு நாட்கள் கடினமாகப் போவதாகப்பட்டது.

புகாரில் சிக்கித் தவிக்கும் ப்ராஜக்ட்களை மீட்டெடுப்பது இந்த புதிய டீமின் வேலை. பேரிடர் மீட்புப் படை போல. அதிலும் கிளையண்ட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பின், அதன் பாதிப்பு கம்பெனிக்கும் பல விதத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், உயிரைக் கொடுத்தாவது ப்ராஜக்ட்டை மீட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, புகாரில் பாதிக்கப்பட்ட டீமை, அவர்களின் ஈகோவை, நடமுறை சிக்கல்களை என்று எல்லாவற்றையும் சமாளித்து சாதிக்க வேண்டும்.

இதிலிருந்து கெட்ட பெயர் வாங்காமல் வெளியே வருவதே பெரிய விஷயம். ஓராண்டு காலம் இந்த பொறுப்பிலிருந்ததே ஆச்சரியமான விஷயம். கணிசமான அளவு பிரச்சனைக்குரிய ப்ராஜக்ட்டுகள் எண்ணிக்கை குறைந்த போது, இந்த டீமை உருவாக்கி, அதன் மூலம் உள்கட்டமைப்புகளிலும் மாற்றத்தை கொண்டு வந்த வீஜேக்கு மிகவும் நல்ல பெயரும், புகழும் கிடைத்தது.

அதன் விளைவாக, இந்த டீம் தற்காலிக ஏற்பாடாக இல்லாமல், நிரந்தரமான ஒரு துறையாக மாற்றப்பட வேண்டி, எல்லா அக்கவுண்ட்களுக்கும் பொதுவாக, நிர்வாக நடைமுறைகளை வகுக்கும் துறைக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டது.

“அப்பாடா” என்று அந்த குழுவே பெருமூச்சு விட்டது, இனி வீஜேயின் நேரடி பார்வையில் வேலை செய்ய வேண்டியதில்லை. வேறு யாராகிலும் அத்தனை சிரமமாக இருக்காது என்பது அவர்கள் நம்பிக்கை.

அந்த டீம் தற்போது இன்னும் பெரிதாக்கப்பட்டு ஒவ்வொரு அக்கவுண்ட்டிலும் உள்ள பிரச்சனையான ப்ராஜக்ட்டுகளுக்கு சப்போர்ட் செய்வதற்காக மாற்றப்பட்டது. ஸேமிக்கு உடனடியாக ஆசிய அக்கவுண்ட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த ப்ராஜக்ட்டைப் பார்க்க வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.

வேலையில் மாற்றம் இல்லாத போதும், டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது குறித்து எல்லோருமே மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த மகிழ்ச்சியில் வெள்ளிக்கிழமை மாலை அந்த குழுவை சேர்ந்தவர்களின் பிறந்த நாள் கொண்டாட, கேக் வெட்ட புல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் எல்லோரும் ஒன்று சேர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.

கழுகுக்கு மூக்கு வேர்த்தது போல, அன்று சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பிய வீஜேயின் கண்களில் பார்க்கிங்கிற்கு செல்லும் வழியில் இந்தக் காட்சி தென்பட்டது. சிறிதளவும் சலனமே இல்லாத ஒரு பார்வையை வீசி சென்று விட்டார் அவர்.

“என்ன ஒரு மனுஷன், ஒரு வருஷம் அவர்கிட்ட வேலை செய்திருக்கிறோம், ஒரு மரியாதைக்கு கூட சிரிக்கவோ, பேசவோ மாட்டேனென்கிறார். பெர்சனல் லைப்ல ஏதாவது பிரச்சனையா இருக்குமோ” என்று பேசிக் கொண்டனர் மற்றவர்கள்.

“அவருக்கு நாமெல்லாம் பத்தோடு பதினொன்று. நீங்கள் என்ன தான் சொன்னாலும், என் அனுபவத்தில் இந்த மாதிரி டஃப் பாஸ்கிட்ட தான் நான் நிறய கத்துக்கிட்டேன்” என்றார் ஸேமி.

“உங்களுக்கு எதயும் தாங்கும் இதயம் போல, அவர் அக்கவுண்ட்டில் ப்ராஜக்ட் வந்தா நீங்களே பாருங்க அப்போ” என்று மற்றவர்கள் சீண்டவே

“கொஞ்சம் தெளியட்டும் பார்க்கலாம்” என்று ஸ்போர்டிவா சொல்லிவிட்டு சிரித்தார் ஸேமி.

நீண்ட நாளைக்குப் பிறகு, அமைதியாக அண்ணாந்து வானத்தை பார்த்தபடி அந்த மாலைப் பொழுதை சிறிது நேரம் அனுபவித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார் ஸேமி.

பெர்சனல் லைப் பற்றிய கொஞ்ச நேரத்திற்கு முந்தய மற்றவரின் பேச்சு ஸேமிக்கு மனதில் ஏதோ ஒரு சங்கடத்தைக் கொடுத்தது.

‘என்னைப் பற்றி இவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள்’ ஸேமி யாரிடமும் குடும்ப விஷயம் பற்றி பேசுவது இல்லை.

‘ஹூம், யார் என்ன நினைத்தாலோ, பேசினாலோ அது தன்னை எந்த விதத்திலும் பாதிக்காத போது, அதைப் பற்றி தான் ஏன் சிந்திக்க வேண்டும்? இப்போது தான், ஒரு தெளிவோடு தனக்கு பிடித்ததை செய்ய முடிந்திருக்கிறது. யாருடைய கட்டாயத்திற்கும் உள்ளாக வேண்டிய தேவையே இல்லாத போதும், எது நம்மை கட்டிப் போடுகிறது?

தன்னை நினைத்து பெற்றவர்கள் கவலைப்படுவார்களோ, உற்றார் என்ன சொல்வார்களோ அல்லது தான் நினைப்பது, எடுக்கும் முடிவு சரி தானா என்ற நம்பிக்கையின்மையா?’ என்றெல்லாம் ஸேமியின் எண்ண ஓட்டம் அவர் வாழ்க்கையின் பின்னோக்கிச் சென்றது.

ஸேமி, படித்த பண்பான பெற்றோருக்கு ஒரே பெண். நல்ல புத்திக்கூர்மை உள்ள தன் பெண்ணை அவர்கள் அவள் இஷ்டப்படி எதையும் செய்யும் சுதந்திரத்துடன் வளர்த்தார்கள். இதைப் படிக்க வேண்டும், அதை செய்யக் கூடாது என்றெல்லாம் எந்த கட்டுப்பாடுகளும் விதித்ததில்லை.

ஸேமியும் தன் பெற்றோரின் இயலாமைக்கு மீறிய எந்த விஷயத்தையும் ஆசைப்பட்டதில்லை. இயல்பிலேயே நல்ல நட்புடன் பழகும் அவருக்கு, பள்ளி கல்லூரியில் நல்ல நண்பர்கள் அமைந்தார்கள்.

தனக்கு விருப்பமான கணினித் துறையை தேர்ந்தெடுத்து படித்து, அதே துறையில் வேலைக்கு சேர்ந்த பின், அவருக்கு தன் வேலையில் முழு ஈடுபாடும், அதில் முன்னேற்றம் பற்றிய சிந்தனையை தவிர வேறேதும் இருக்கவில்லை.

தன் திருமணத்தை பற்றிய பெரிய கனவுகள் ஏதும் இல்லாததால், பெற்றோர் பார்த்து வைத்த ஒருவரையே திருமணம் செய்து கொள்ள எந்த தடையும் இருக்கவில்லை.

அதிலும், சொந்தமாக பிசினஸ் செய்த போதிலும், ஸேமிக்கு தன் வேலையின் மீது உள்ள அக்கறையை மதித்து நடக்ககூடிய ஒருவர் கிடைக்கும் போது, வேறெதுவும் முக்கியமாகப் படவில்லை.

திருமணத்திற்கு பின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. நல்ல புரிதலுடன், மரியாதையும் மணவாழ்க்கையில் கிடைத்துவிட்ட பிறகு வேறென்ன வேண்டும்.

ஸேமி ப்ராஜக்ட் நிமித்தமாக வெளிநாடு செல்ல நேர்ந்த போது, தன் பிசினஸைக் கூட விடுத்து அவருடன் இணைந்து கொள்ளும் அளவிற்கு அன்யோன்யமான அந்த பந்தத்தில் ஒரு சிறிய சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை.

அலுவலகத்திலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி, ஸேமிக்கு அது ஒரு தேன்நிலவுக் காலமாக இருந்தது. 6 மாதத்தில் முடிய வேண்டிய ப்ராஜக்ட் கிட்டத்தட்ட ஒரு வருடம் இழுத்து விட்டது.

ஒருவழியாக ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடித்து தாய்நாடு திரும்பும் சமயம், தன் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்யாயத்தின் முடிவுரை எழுதப்பட்டதை இப்போது நினைத்தாலும் நம்ப முடியவில்லை.

அழகான ஒரு கனவு முடிந்து முழிப்பு வரும் போது இவ்வளவு நேரமும் கண்டது வெறும் கனவு தானா என்ற ஏமாற்றமும், அதற்கு நேர்மாறான உண்மை நிலையும் ஒரே நேரத்தில் புத்திக்கு உரைக்கும் போது ஏற்படும் கலக்கமும், அந்தக் கனவு முடியாமலே இருந்திருக்கலாமே முழிப்பு வாராமலேயே இருந்திருக்கலாமே என்ற எண்ணத்தினால் தோன்றும் இயலாமையும், எவ்வளவு தெளிவான தன்னம்பிக்கையான மனிதரையும் புரட்டிப் போட்டு விடத்தான் செய்கிறது.

‘அந்தக் கடினமான காலத்தை எப்படிக் கடந்தோம் அல்லது ஏன் அவ்வளவு நாள் அதிலேயே தான் ஏன் உழன்றோம்’ என்ற கேள்வி தோன்றும் போதெல்லாம், எமோஷனல் மாய வலையில் இருந்து விடுபட கற்று கொள்ள எவ்வளவு பெரிய பரீட்சையும் அதற்கு பிறகு பயிற்சியும் தேவைப்படுகிறது என்று புரிந்தது.

தன் வாழ்க்கையில் அவ்வளவு நாள் இருந்த எல்லாமே பெற்றோர், உற்றார், நண்பர்கள், பிடித்த வேலை என்ற எல்லாமே இருந்த போதும், மணவாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் முறிவும், ஏமாற்றமும் தன்னை எப்படியெல்லாம் மாற்றி விட்டது.

நண்பர்களிடமிருந்து தொடர்பை துண்டித்துக் கொள்ளவும், புதிதாகப் பார்க்கும் எவரிடத்தும் தன் சொந்த வாழ்க்கை குறித்த எந்த ஒரு சாதாரண விசாரிப்புக்கும் அஞ்சி தன்னம்பிக்கை முழுவதும் இழந்து தவித்தது ஏன்.

ஹூம்! தன்னையும் அறியாமல் பழய நினைவுகளால் பெருமூச்சு வந்த போது, தலையை உதறி சுயநினைவுக்கு வந்தார் ஸேமி.

இதற்காகவே வலுக்கட்டாயமாக வேறு வேலைகளில், நினைவுகளில் தன்னை எப்போதும் ஆக்ரமித்து வைத்துக் கொள்வதற்காக, வார விடுமுறை நாட்களிலும் கூட, சமூக விஷயங்களில் ஈடுபடும் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டாலும், எந்த ஒரு விஷயத்திற்கும் அடிமையாக கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.

இப்போது வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைத்தது போல, மனதிற்கு மிகவும் திருப்தியாக இருந்தது.

அலுவலகத்திலும் வழக்கம் போல மிகவும் பிஸியாக போய்க் கொண்டிருந்தது. ஆசியாவைச் சேர்ந்த ப்ராஜக்ட்களில் வேலை செய்யும் போதும் அதிக கவனமும், உழைப்பும் தேவை.

மேற்கத்திய அலுவலக கலாச்சாரத்திற்கும், ஆசிய கலாச்சாரத்திற்கும் அநேக வித்யாசம் உண்டு. ஆசியாவைச் சேர்ந்த கிளையண்ட் விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், மேலோட்டமாக எதையும் சொல்லி அவர்களை திருப்தி படுத்திவிட முடியாது.

கண்ணில் விளக்கெண்ணை விட்டு எல்லாவற்றையும் பார்ப்பதுடன், உடனுக்குடன் அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். அதிக எதிர்பார்ப்புகள் வைத்திருப்பார்கள், மேலும் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் வேலை வாங்கி விடும் சாமர்த்தியக்காரர்கள்.

வேலை நேரம், உணவு இடைவேளை என்ற நாகரீகம் கூட பார்க்காமல் கான்பரன்ஸ் கால் வைக்க சொல்லும் கிளையண்ட்களும் உண்டு. இதற்கெல்லாம் சுயமரியாதை இழந்து விட்டதாக கருதாமல், அவர்களை புரஃபஷனலாக டீல் பண்ணுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவர்களிடமும் நல்ல பெயர் வாங்க கற்றவர்கள் தான் இந்த வேலைகளில் நிலைக்க முடியும்.

அப்படி ஒரு சிக்கலான ப்ராஜக்ட்டில் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க, ஸேமி ஒரு ஆசிய நாட்டிற்கு செல்ல நேரிட்டது.

காண்ட்ராக்ட் படி கிளையண்ட் ஆபீஸில் சென்று வேலை செய்பவர்களுக்கான தங்கும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டிய கிளையண்ட், ப்ராஜக்ட்டில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி, கடைசி நேரத்தில் மறுத்து விட்டார்கள்.

இதெல்லாம் என்ன பிரமாதம், ப்ராஜக்ட் தோல்விக்காக காண்ட்ராக்ட் படி சட்ட நடவடிக்கை எடுப்பதாக சொல்லி, நம் நாட்டு கணினி நிறுவனத்தின் நிறுவனரையே ஜெயிலில் போட்ட ஆசிய கிளையண்ட்களும் வரலாற்றில் உண்டு.

ஆபீஸிற்கு சொந்தமான தங்கும் விடுதி இல்லாத அந்த ஊரில், குறித்த நேரத்தில் ஆபீஸிலிருந்து பணத்தை அனுப்புவதற்கு பதிலாக அந்த அனுமதி வேண்டும், இந்த அனுமதி வேண்டும், அனுமதி கொடுக்க வேண்டிய சீனியர் விடுமுறை பயணத்தில் இருப்பதாக சொல்லி கடைசிவரை அனுப்பாமல் போக, அந்த பெரிய தொகையை வேறு வழியின்றி தன் கிரெடிட் கார்டில் கட்டிவிட்டு, ப்ராஜக்ட்டை முடித்தும் வெளிநாட்டில் இந்த மாதிரி இக்கட்டான நிலையை ஏற்படுத்திய ஃபைனான்ஸ் டிபார்ட்மெண்ட்டை விட்டேனா பார் என்று ஊர் வந்து சேர்ந்த ஸேமிக்கு எதிர்பாரா அதிர்ச்சி காத்திருந்தது.

எந்த ஒரு ப்ராஜக்ட்டும் முடித்தபின் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எந்த ஒரு தவறு நேர்ந்தாலும், அந்த ப்ராஜக்ட் செய்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்

அந்த தவறினால் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால், அந்த ப்ராஜக்ட்டுக்கான வருவாய் இழப்பு மட்டுமில்லாமல் நஷ்ட ஈடும் கொடுக்க நேரிடும். இந்த மாதிரி சூழ்நிலையில் அந்த ப்ராஜக்ட்டில் வேலை செய்தவர்கள் மீது பெரும்பாலும் பழி விழும், வேலை இழக்கவும் நேரிடலாம்.

அதே நிலை துரதிஷ்டவசமாக அப்போது ஏற்பட, தான் அந்த தவறுக்கு நேரடியாக காரணமாக இல்லாத போதும், அதை நேராமல் தடுக்காத குற்றத்திற்காக பழி வாங்கப்பட்டார்.

அவருக்கு வெளிநாட்டில் தங்குவதற்கு ஏற்பட்ட செலவுக்கான தொகைக்கும் அனுமதி வழங்காமல், வேறு எந்த ப்ராஜக்ட்டும் கொடுக்காமல், சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

பெரும்பாலும், வேலையை தானே விட்டு செல்ல வைப்பதற்காகவே இந்த மாதிரி செய்வார்கள் என்பதால், இவ்வளவு நாட்கள் தான் நன்றாக வேலை செய்ததற்கு எந்த மரியாதையும் கிடைக்காத அவமானத்தில், வேலையை ராஜினாமா செய்து தன் அதிருப்தியை காட்ட நினைக்க, அது பெரும்பிழை என்பதைப் போல, இதைத் தான் நாங்க எதிர்பார்த்தோம் என்பது போல நடந்து கொண்டார்கள்.

கோவமும், அவமானமும், பொருளாதார நஷ்டமும், அடுத்த வேலை தேடு முன்னர் பார்த்த வேலையில் இருந்து வெளிவருவதால் ஏற்படப் போகும் விளைவுகளும், தன் வாழ்க்கையின் ஒரே பிடிப்பு தகர்ந்து போகும் என்று கனவிலும் நினைக்காத ஒன்று நேர்ந்த போது, ஸேமி முன் எப்போதும் விட நிலைகுலைந்து போனார்.

மனநிலை குழம்பி, அடுத்து என்ன செய்வது என்று அறியாமல், யோசிக்கும் திறனை கூட இழந்துவிட்ட நிலையில், தனக்கு நல்லது நினைப்பவர் யாரும் இருக்கிறார்களா என்று கூட தெரிந்து கொள்ளுமுன் எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிந்து விட்டது

“இன்று இந்த நிறுவனத்தில் உங்களுக்கு கடைசி நாள்” என்று சொல்லி விட்டார்கள்.

பித்து பிடித்தவர் போல, யாரையும் பார்க்கக் கூட திராணி இல்லாமல், தனியாக ஃபுட் கோர்ட்டில் சென்று மணிக்கணக்கில் சாப்பிடாமல் கூட உட்கார்ந்து இருந்தவரை கவனிக்கும் அளவு வேலை குறைவானவர் கூட அந்த நிறுவனத்தில் இல்லையா என்ன.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பினால் யாரிடமும் அதிகம் நெருங்கி பழகாமல் இருந்த தான் தான் அதற்கு காரணம் என்பது அவர் புத்திக்கு உறைக்கும் நிலையில் அவரில்லை, உறைத்தாலும் இப்போது அதனால் எந்த பலனும் இல்லை.

மலை போல வந்த துயரம் பனி போல விலகும் என்றெல்லாம் சொல்வார்களே அந்த மாதிரி அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையற்றவராதலால், அழுகின்ற நிலையைத் தாண்டிய துக்கத்தில் சிலையாக இருந்தவரின் பார்வையில் வீஜே தென்பட்டார்.

இன்னொரு டேபிளில் டீ குடித்தபடி தன் நெருங்கிய அலுவலக நண்பருடன் மும்முரமாக ஏதோ ஒரு உரையாடலில் இருந்தார்.

ஒரு கணம், ‘அவரிடம் சென்று சொன்னால் என்ன? ஒரு வருடம் அவரிடம் வேலை செய்திருக்கிறோமே’ என்று தோன்றியது.

ஆனால், நடந்ததை சொல்ல தன் சுயமரியாதை ஒரு பக்கம் தடுத்தது, இன்னொரு பக்கம் சொன்னாலும் அவரும் கூட அந்த மாதிரி முடிவெடுக்க கூடியவராக இருந்து விட்டால், அல்லது தான் ஏன் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய அவமானம்.

வெளியே பார்க்கும் பொது ஒரு ஃபார்மாலிட்டிகக்கு கூட புன்னகை செய்யாத அவர் முகம் நினைவுக்கு வந்ததால், இருந்த இடத்தை விட்டு அசையக்கூட எந்த முயற்சியும் செய்யவில்லை.

வீஜே அதற்குள் கிளம்பி விட்டார், இரவு நேர ரயில் பயணத்தில் வெளியே தெரியும் சில நொடி வெளிச்சத்தை விரைந்து கவ்வும் இருட்டு போல மீண்டும் சோர்ந்தது மனது. அதற்கு மேலும் எவ்வளவு நேரம் அங்கே இருந்தார் என்ற சுயநினைவே இல்லை.

வீட்டிற்கு கிளம்பிச் செல்லும் வழியில் எதேச்சையாக கண்ணாடி வழியாக ஸேமியின் மீது பார்வை விழுந்த போது, வீஜே திடுக்கிட்டார்

தான் டீ குடிக்க சென்ற போது இருந்த அதே இடத்தில் அதே போல ஸேமி தனியே உட்காரந்திருப்பது அவர் புத்திக்கு புலப்பட்டது அதிசயம் தான். ஸேமியின் முகத்தில் என்ன உணர்ச்சி இருக்கிறது என்று புரியாத போதும், ஏதோ ஒன்று சரியில்லை என்று உள் மனத்திற்கு தோன்றியது.

குழப்பமாக, சில அடி நடந்தபின், ஏதோ ஒரு உணர்வு தன்னை உந்தித் தள்ள, முன்புற வாயில் வழியாக மீண்டும் ஃபுட் கோர்ட்டிற்கு உள்ளே வந்து, நேரே ஸேமிக்கு முன்னே போய் நின்று “ஹாய்” என்றார்.

நடப்பது கனவா நனவா என்று உணராத நிலையில், சிறிதாக புன்னகைப்பதாக நினைத்து உணர்ச்சியே இல்லாமல் வீஜேயை பார்த்த போது, தன் உள்ளுணர்வு சரி தான் என்று புரிந்த காரணத்தினால், எதிரில் அமர்ந்து “என்ன ஆச்சு?” என்று ஒரு மெல்லிய ஆறுதலான குரலில் முதன் முறையாக தமிழில் பேசிய போது

“அடடா இது கனவு தான் போல” என்று ஸேமி முடிவு கட்டியதில், எந்த ஆச்சரியமும் இல்லை தானே.

“ஹலோ” என்று மீண்டும் கையை ஸேமி முன் ஆட்டி “என்ன நடந்தது?” என்று விசாரிக்க

“அன்று தனக்கு அங்கு கடைசி வேலை நாள்” என்று கடைசியிலிருந்து ஆரம்பித்து நிறுத்தி விட

“ஓ வாழ்த்துக்கள்… வேறு எங்கு வேலைக்கு சேரப் போகிறீர்கள்?” என்று கேட்டார்

சொல்வதா வேண்டாமா என்று தயங்கி, இன்னும் வேறு வேலை பார்க்கவில்லை என்று சொல்லி மீண்டும் நிறுத்தினார்.

புருவத்தை உயர்த்தி, பின் ஏன் அவசரமாக வேலையை விட வேண்டும் என்று மீண்டும் கேட்ட பின்னரே, ஒரு முடிவுக்கு வந்து கடைசி முயற்சியாக, நடந்த எல்லாவற்றையும் எமோஷனை வெட்டி விட்டு, செய்தி போல சொல்லி முடித்து, முதல் முறை பப்ளிக் எக்ஸாம் எழுதி விட்டு முடிவை பார்க்கும் மனநிலையில், தன்னையும் அறியாமல் படக் படக்கென்று அடித்த இதயத்துடன் தயங்கியபடி வீஜே முகத்தைப் நேரிட்டார் ஸேமி.

என்ன ஒரு அநியாயம், “ஏன் தன்னிடம் இந்த விஷயத்தை கொண்டு வரவில்லை?” என்று கேட்டுவிட்டு, உடனே தன் ஃபோனை எடுத்து ஹெச்.ஆர் ஹெட்டை அழைத்து சில பல உத்தரவுகளை பிறப்பிக்க

ஸேமிக்கு அப்போது தான் தன்னை விட்டு போய்க் கொண்டிருந்த உயிர் மீண்டும் தன் உடலுக்குள் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அதற்கு மேல் அங்கே நடந்தது எல்லாம் அதிசயம் என்ற வார்த்தைக்குள் அடங்காது போலத் தான் தோன்றியது.

அடுத்தடுத்து அமர்ந்த இடத்திலிருந்தபடியே கான்பரன்ஸ் காலில் கடுமையாக சிலரை எச்சரித்து, தன் கைபேசியிலிருந்தே ஈமெயில் சிலவற்றை அனுப்பினார். நடுவில் காத்திருக்கும் நேரத்தில், ஜூஸ் கடையில் இருக்கும் பையனை அழைத்து சாப்பிட ஆர்டர் செய்ய வைத்தார்.

அதற்கு மேலும், ரொம்ப சகஜமாக ரொம்ப நாள் பழகிய நண்பரிடம் பேசுவதைப் போல, ஜூஸ் குடித்தபடி தமிழில் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக நடந்த தவறை சரி செய்து, ஸேமி தொடர்ந்து அங்கு வேலை செய்ய வேண்டிய அனைத்து உத்திரவாதமும் உறுதி செய்த பிறகு, “கிளம்பலாமா?” என்று தன் காரிலேயே வீட்டில் விடுவதாக சொல்லி அழைத்தார்.

எப்படி நன்றி சொல்வது என்று வார்த்தை வராமல் அமர்ந்திருந்த ஸேமி, உணர்ச்சிப் பெருக்கில் தன் காரை மறந்து அவருடன் புறப்பட்டார்.

கார் கதவை திறந்து விட்டு, ஸேமி அமர்ந்த பின் முன்புறமாக சென்று காரில் அவர் ஏறுமுன், தன்னையும் அறியாமல் சத்தமே வராமல் அடக்க முடியாமல் அழுதுக் கொண்டிருந்த ஸேமி, அழுது முடிக்கும் வரை வெளியே காத்திருந்து பிறகு காரில் ஏறிய வீஜேயை நம்ப முடியாமல் பார்த்தார் ஸேமி.

அப்போது தன்னைப் பார்த்து புன்னைகைத்த வீஜேயின் பார்வையில், நட்பு இருந்தது.

ஸேமியை சரியான மனநிலைக்கு கொண்டு வர எண்ணி தொடர்ந்து பேசியபடியே சென்று வீட்டில் இறக்கி விட்ட பின்னரும் திருப்தி அடையாமல், போய் தான் கால் செய்வதாக சொன்ன போது

சமநிலைக்கு வந்திருந்த ஸேமி நன்றி சொல்லித் தானும் புன்னகைத்து நட்பை ஏற்றுக் கொண்ட பாவனையில், கவலைப் படவேண்டாம், தான் ஸ்டடியாக இருப்பதாக சொன்ன போது, “அப்பாடா” என்று சொல்லி சிரித்தார் வீஜே

முதல் முறையாக அந்த சிரிப்பில், நட்பையும் மீறிய ஏதோ ஒரு உணர்வு ஸேமிக்கு ஏற்பட்டது. நன்றி உணர்ச்சியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டார்.

ஸேமியின் வாழ்க்கையில் அப்போது ஆரம்பித்திருந்த அடுத்த அத்யாயம் நன்றாக அமையப் போகிறது என்பதிலும், எப்படி இருந்தாலும் அதை சரி செய்ய தேவையான பக்குவமும், பக்க துணையாக நட்பும் இருக்கும் என்பதிலும் சந்தேகமே இல்லை!

அனுபவித்தே தான் அறிவது வாழ்க்கையெனில், ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்

ஆண்டவன் சற்றே நெருங்கி, “அனுபவம் என்பதே நான் தான்” என்றான்

Similar Posts

2 thoughts on “ரீபூட் (சிறுகதை) -✍ ரா.பிருந்தா, Canada
  1. Reboot story can’t be understood by all . Writer should have written with little bit explanation . Poet kannadasan’ s poetry , ” what is life ” might have mentioned in full ” to enable others to understand .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!