in ,

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்❤ (சிறுகதை) -✍ கீதாராணி பிரகாஷ், திருப்பூர் 

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்❤

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 82) 

கெட்டி மேளம் கெட்டி மேளம்… மழையாக அட்சதைகள் விழுக, தமயந்தியின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் இட்டான் ஆதவன்

இரண்டாவது முறையாக தன் கழுத்தில் ஏறிய மாங்கல்யத்தை மலைப்பாக பார்த்தாள் தமயந்தி. வேண்டா வெறுப்பாக நடந்த திருமணமும், வேண்டி நடந்த திருமணமும் ஒரே மாதிரியாக தோன்றியது அவளுக்கு

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த திருமணம் நினைவுக்கு வர நெஞ்சம் கசந்து போனது, நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது

கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தமயந்திக்கு, அவள் தந்தையின் நண்பரின் மகனாக அறிமுகம் ஆனான் சுந்தரபாண்டியன்

முதுகலை முடித்து தன் தந்தையின் தொழிலை எடுத்து நடத்தத் தொடங்கி இருந்தவனுக்கு, நகராட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த தமயந்தியின் தந்தை சிவப்பிரகாசத்தை பார்க்க வேண்டிய சூழலில், வீடு வரை வந்தவன் கண்களுக்கு தமயந்தி விருந்து போல் கிடைத்தாள்

அடிக்கடி வீடுவரை வந்து சந்தேகம் என்ற பெயரில் அமர்ந்திருந்து ஓரக் கண்ணால் தமயந்தியை நோட்டம் விட்டதை தமயந்தியின் தாய் பச்சைநாயகி பார்த்து கணவனிடம் கூற, சிவப்பிரகாசம் உஷாராகி இனி எதுவாயினும் அலுவலகத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கராறாகக் கூறி விட, அன்று சென்றவன் ஒரு வாரத்தில் தாய் தந்தையுடன் பூ பழம் சகிதமாய் வந்து நின்றான்

என்ன என்று அவர் கேட்கும் முன்னர், தொழில் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருந்த பூபதி பாண்டியன், தன் ஒரே மகன் சுந்தர பாண்டியனுக்காக பெண் கேட்க வந்தைக் கூறி முடிவு செய்யுமாறு சிவப்பிரகாசத்தின் கையில் தட்டைத் திணித்து விட்டு சென்றனர்

அதிர்ச்சி ஒரு புறமும், ஆச்சரியம் ஒரு புறமுமாக நின்றவரை மனைவி பச்சைநாயகி தான் நினைவுக்குக் கொண்டு வந்தார். கல்லூரியில் இருந்து வந்த மகள் தமயந்திக்கு விஷயத்தைக் கூற, அவளுக்குமே மலைப்பாகத் தான் இருந்தது

பெரும் பணக்காரக் குடும்பம் தன்னைப் பெண் கேட்டு வந்தது பற்றியப் பெருமையோடு நின்றாள். பச்சைநாயகிக்கு மட்டுமே மனதில் பயம் இருந்தது.

சிவப்பிரகாசம் தன் நண்பர்களிடம் கூற அனைவருமே பணத்தை மட்டுமே கருத்தில் கொண்டு , “ஆஹா… ஓஹோ…” என்று கருத்துக் கூற, சிவப்பிரகாசம் முதன் முறையாக தான் கணிப்பதை விடுத்து, நண்பர்களின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு மகளின் வாழ்க்கையை முடிவு செய்தார்

தமயந்திக்கும் பெரு மகிழ்ச்சியே. தோழிகளின் பொறாமை பார்வை, ஆச்சர்யப் பார்வைக்கு இடையில் பெருமையாக உணர்ந்தாள்

தாம்பூலம் மாற்றவே ஊரிலேயே பிரமாண்டமான திருமண மண்டபம் ஏற்பாடு செய்திருந்தார் பூபதி பாண்டியன். ஆடம்பரமாக நடந்த அந்த விழாவில், வரப் போகும் மருமகளான தமயந்திக்கு ஐம்பது பவுன் நகையை வழங்கி சிவப்பிரகாசம் குடும்பத்தையே ஆச்சர்யப் பெருங்கடலில் மூழ்கடித்தார், வருங்கால மாமியாராகிய வைஜெயந்தி. 

சிவப்பிரகாசம் தமக்கையான பெருந்தேவிக்கு சற்று மனத்தாங்கல்.  மகன் ஆதவனுக்கு தமயந்தியை பெண் கேட்க நினைத்திருந்தார். படிப்பு முடிந்தவுடன் பெண் கேட்டுக் கொள்ளலாம் என்று ஆதவன் கூறியதால் பெண் கேட்கும் படலத்தை சற்று தள்ளிப் போட்டிருந்தனர்.  

ஆனால், அவர்களுக்கு முன் பூபதி பாண்டியன் குடும்பம் முந்திக் கொண்டது. நிச்சயத்திற்கு முன் பெருந்தேவி தன் தம்பியிடம் தமயந்தியை பெண் கேட்க முயல, ஆதவன் அதைத் தடுத்து விட்டான் ‌. 

தந்தை இல்லாத தனக்கு, எல்லாமாக இருந்த மாமனின் மகள், எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒதுங்கிக் கொண்டான்

இதோ, கல்யாண வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு முன்னால் நின்று நடத்துபவனும் அவனே தான் 

இருமுறை சுந்தர பாண்டியன் கேலி எனும் போர்வையில், ஆதவனை அவமானப்படுத்திய போதும், அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்

தமயந்தி தான் அவனைத் தனியாக அழைத்து “மாமா… எனக்காக அவரை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்ற போது

“உனக்காக தான் எல்லாமே” என்றவனின் சொற்கள் புரியாமல் பார்த்தவளை 

“விடும்மா… நம்ம வீட்டுக்கு வரப் போறவர் தானே” என்று தோளைக் குலுக்கி 

விட்டு சென்றவனை, வியப்புடன் பார்த்தாள் தமயந்தி.

அருகே நின்ற தோழி தேன்மொழி, “என்னடி சுந்தர பாண்டியனை விட உன் மாமா ஆதவன் சுந்தரமா இருக்காரு” என கேலி செய்ய, புன்சிரிப்புடன் திரும்பி ஆதவனைப் பார்த்தாள் தமயந்தி. 

ஆம்… சுந்தரை விட இரண்டடி உயரம் அதிகம் தான் ஆதவன். சுந்தர் சிவந்த நிறம் என்றால், ஆதவன் நல்ல எலுமிச்சை நிறம்.

விவசாயி, படிப்பில் நாட்டம் இல்லாதவன் தான், ஆனால் நிலத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவன். அவன் தொட்டது எல்லாம் “பொன்னாக”, நந்தாபுரத்தில் பெரிய ஆளாக சிறுவயதிலேயே வலம் வந்து கொண்டிருக்கிறான்

சிறுவயதிலேயே தந்தைய இழந்த காரணத்தால், பொறுப்பை சுமந்து கடின உழைப்பால் முன்னேற்றம் கண்டவன். தாய் மாமனை வழிகாட்டியாகக் கொண்டு வந்தவன்.  

மாமன் மேல் அதீத பாசம் உள்ளவன்..! குடியால் கெட்ட தந்தையைப் போல் இல்லாமல், இருநூறு குடும்பங்களில் விளக்கேற்றியவன். 

 அரிசி ஆலை, ஆயில் மில், நிலபுலன்கள் என்று தன் சொந்த முயற்சியால் முன்னேறியவன். நகரத்தில் பூபதி பாண்டியன் என்றால், கிராமத்தில் ஆதவன் பெரிய ஆளாக இருந்தான் என்றே சொல்லலாம். 

“போதும் டி உன் மாமனைப் பார்த்தது” என்று கிண்டல் செய்த தோழியிடம் 

சிரிப்புடன், “மாமா ரொம்ப நல்லவர் டி… அதான் பார்த்தேன்” என்று முடித்துக் கொண்டாள் தமயந்தி

ஓடியாடி கல்யாண வேலைகள் செய்யும் மகனைப் பார்த்த பெரும்தேவிக்கு, வயிற்றெரிச்சலாகத் தான் இருந்தது. ஆயினும், கணவனை இழந்த சமயம் தம்பி சிவப்பிரகாசம் மட்டும் நின்று உதவவில்லை எனில், கணவனுக்கு கடன் கொடுத்தவர்கள் அவளையும் மகன் ஆதவனையும் ஒரு வழி செய்திருப்பார்கள்

அந்த நன்றிக் கடன் தான் தன்னையும், தன் மகனையும் கட்டிப் போட்டு இருக்கிறது என்று நினைத்து, பெருமூச்சுடன் வேலையை கவனிக்கச் சென்றாள்.  

சிவப்பிரகாசத்திற்குமே ஏனோ அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றியது. மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்டிருக்கலாம் என்ற நினைப்பு அவ்வப்போது எட்டிப் பார்த்தது. 

ஆளுக்கொரு நினைப்போடு நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.  

திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற, அவ்வப்போது வரும் மாப்பிள்ளை சுந்தர பாண்டியனிடம் ஒட்ட முடியாது பச்சைநாயகி மட்டுமே தவித்தார்

சிவப்பிரகாசம் “மாப்பிள்ளை, மாப்பிள்ளை” என்று குழைந்து குழைந்து பேச, மகளோ வெட்கத்துடன் பேச, ஏனோ தாய்க்கு எரிச்சலாக இருந்தது. 

தனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது என்று ஒவ்வொரு சமயம் பச்சைநாயகிக்கு ஆச்சரியமாகக் கூடத் தோன்றும். ஆனால், சுந்தரை மாப்பிள்ளையாக நினைக்க முடியாமல் அவர் வெகுவாக தவித்துத் தான் போனார். 

சுந்தர் தமயந்திக்கு புதிய அலைபேசியைப் பரிசளித்திருந்தான். அதில் எந்த நேரமும் அவள் என்ன செய்கிறாள் என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். தன்னைப் பற்றிய  அக்கறை அவனுக்கு என்று நினைத்தாள் தமயந்தி

ஒரு முறை தோழிகளுக்கு அழைப்பிதழ் வைக்க தந்தையுடன் சென்றவள் சுந்தருக்கு செய்தி அனுப்பவில்லை. ஆனால், அதை பெரிய அவமானமாக நினைத்து, பயங்கரமான வார்த்தைகளை பிரயோகித்து விட்டான்.  

“தோழியைப் பார்க்கப் போனதால் மறந்து போனாயா ? இல்லை… தோழனைப் பார்க்கப் போனதால் மறதியா?” என தீயாய் கேள்வி வர, நெக்குறுகிப் போனாள் தமயந்தி

இதுவரை தன்னை யாரும் இப்படி பேசியதில்லை என்று கூறி, அலைப்பேசியின் இணைப்பைத் துண்டித்து விட்டாள். 

முதன் முறையாக தவறு செய்து விட்டோமோ? என்ற பயம் நெஞ்சின் ஓரத்தில் எழ , தாய், தந்தையிடமும் கூறாமல் இருந்ததால் சோர்ந்து போய் படுத்து விட்டாள். 

தமயந்திக்கு உடம்புக்கு எதோ என்று கணவனும் மனைவியும் பயந்து போய் மாற்றி மாற்றி கவனிக்க, சங்கடமாக உணர்ந்தாள் மகள்.  பெற்றவர்களிடம் மறைத்து விட்டோமோ என்று குற்ற உணர்ச்சி மிகுந்திருந்தாள். 

இரண்டு நாட்கள் இவள் அலைபேசியில் தொடர்பு கொள்ளாதது, வீட்டில் இருக்கும் அலைபேசிக்கு தொடர்பு கொண்டாலும் சரிவர யாரும் பதிலளிக்காத காரணத்தால், நேராக வீட்டிற்கு வந்தே விட்டான் சுந்தர் 

கடுத்த முகத்துடன் வந்தவன், “தமயந்திக்கு உடல் நிலை சரியில்லை” என்று பச்சைநாயகி கூறியும் 

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், “ஏன் எனக்கு செய்தி அளிக்கவில்லை?” என்றேத் திரும்பத் திரும்ப கேட்க, இம்முறை சிவப்பிரகாசத்திற்கு சற்று எரிச்சல் வந்தது. 

“அது தான் உடல் நிலை சரியில்லை என்று சொல்கிறோம் அல்லவா?” என்றார் 

குரல் லேசாக கடுத்திருந்ததை உணர்ந்தானோ என்னவோ, அதற்குப் பின் வேறு  எதுவும் கூறாமல் இருந்து விட்டான். 

இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்பதால், எல்லோருக்குமே சற்று கலக்கத்துடன் ஒரு படபடப்பும் தொற்றிக் கொள்ள, வீட்டில் பேச்சுகள் குறைந்தது போயின.  

மனக்கவலைகளுடனே இரண்டு நாட்கள் கடந்த பின், ஊரில் இருந்து ஆதவனும், அவன் தாயும் வர, வீடு மீண்டும் களைகட்டியது

பந்தலிட, வாழைமரங்கள் தோரணங்கள் கட்ட என்று சப்தமிட்டபடி நடந்தவனைப் பார்க்க, பச்சைநாயகிக்கு ‘ஏமாந்து விட்டோமோ? கையில் இருந்த பொக்கிஷம் கைநழுவிப் போயிற்றோ?’ என்று வேதனையான உறுத்தல் வந்து வந்து போயிற்று. 

தமயந்திக்கு தேவையான அனைத்தும், அத்தை பெரும்தேவியும், அத்தை மகனான ஆதவனும் அழகாக செய்து கொடுத்திருந்தனர்.  

சீர் வரிசை அவர்கள் வீட்டில் செய்ததை விட அத்தை வீட்டுச் சீரை வைக்க வீட்டில் இல்லாது போயிற்று. இருபத்தைந்து பவுனில் சுந்தருக்கு மட்டுமே நகைகள் வாங்கி வந்திருந்தான் ஆதவன்

அதைத் தவிர அவளுக்கு சீர் வரிசைகள் எல்லாம் வரிசை கட்டி நிற்க, அசந்தே போனார் சிவப்பிரகாசம்

ஒரு வழியாக திருமண நாளுக்கு முந்தைய இரவு அலங்காரமும், ஆடம்பரமும் நிறைந்த திருமண மண்டபத்தை வந்தடைந்தனர் தமயந்தி குடும்பத்தினர்.   

மண்டபம் வந்து சேர்ந்த உடனேயே நண்பரும் வருங்கால சம்மந்தியுமான பூபதி பாண்டியன் தனியாகப் பேச வேண்டும் என்று அழைக்க, ஒரு படபடப்புடன் தான் சென்றார்

மாப்பிள்ளை சுந்தர் என்ற சுந்தர பாண்டியனும் அவன் தாயும் அமர்ந்திருக்க, நடுநாயகமாக பூபதி பாண்டியன் அமர்ந்திருந்தார். 

“வாங்க சிவப்பிரகாசம்” என்றார் பூபதி பாண்டியன்

இத்தனை நாள் அலைப்பேசி வாயிலாக “சம்மந்தி” என்றழைக்கப்பட்டது காணாமல் போயிருந்தது

“ஒரு சின்ன பிஸினஸ் அதான்” என்றவரை இடைமறித்த சிவப்பிரகாசம்

“கல்யாணம் முடிஞ்சு பிஸினஸை பார்க்கலாமே?” வினாவுடன் பதில் கூறியவரை

“இப்போதே பேசிக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா?” என்று அதே கேள்வியோடு பதில் கூறி கிண்டல் சிரிப்பொன்றையும் உதிர்த்தான் சுந்தர பாண்டியன். 

சற்றே ஆடிப் போன சிவப்பிரகாசம், “சரி சொல்லுங்கள் பூபதி” என்று தோரணையுடன் கேட்க, பூபதி பாண்டியன் முகம் மாறியதை சிவப்பிரகாசம் கவனிக்க தவறவில்லை.  

இப்போது சுந்தர் தான் ஆரம்பித்தான். “செட்டிபாளையம் அருகில் உள்ள காமராஜர் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பது தொடர்பான கோப்புகளை ஏன் நிராகரித்தீர்கள்?” என்று நேரடியாக அவன் விஷயத்திற்கு வர,இதை எதிர்பார்க்காத சிவப்பிரகாசம் சற்று நேரம் திகைத்து தான் போனார்

ஆனால், தன்  வேலை சம்மந்தப்பட்ட கேள்வி என்பதால், ஒரு நகராட்சி அதிகாரியாக மிடுக்குடன், ”அது அரசு சம்மந்தப்பட்ட விஷயம். அந்த இடங்களில் குளம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன, ஆதலால் அந்த கோப்புகள் நிராகரிப்பட்டன” என்று அதிகாரியின் தோரணையோடே பதில் அளித்தவரை, அதிர்ந்து போய் பார்த்தனர் பூபதி பாண்டியன் குடும்பத்தினர். 

“உங்கள் மகளை எங்கள் குடும்பத்தில் மருமகளாக்க இருக்கும் இந்த சமயத்திலும் கடமை உணர்ச்சியோடு இருப்பது பெரிய ஆச்சரியம் தான்” என்று இப்போது நையாண்டி குரலில் பேசியது வைஜெயந்தி தான்

சற்றும் அதிராத சிவப்பிரகாசம், “குடும்பத்தையும், வேலைகளையும் நான் ஒன்‌றாக நினைப்பதில்லை. உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளதா? இல்லை இதற்காக திருமண விஷயத்தில் இடைஞ்சல் வரும் எனில் இத்துடன் நமது உறவை முடித்துக் கொள்ளலாம்” என்று கறார் தொனியில் கூறி விட்டார். 

பூபதி பாண்டியன் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்து வந்து, “ஐயோ… அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனது வியாபாரத் தொடர்பு நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டதை உங்களிடம் கேட்டேன் சம்மந்தி” என்று கூறிய போது, பூபதி பாண்டியன் குரல் குலைந்து போய் இருந்தது.  

அவர்களோடு உரையாடி விட்டு வந்த சிவப்பிரகாசம், யோசனையுடன் தமக்கை மகன் ஆதவனை அழைத்து நடந்ததை விவரிக்க

அப்போதே ஆதவனுக்குப் புரிந்தது, ‘தமயந்தியை விரும்பி மணக்கவில்லை, வியாபார நோக்கில் மணக்க முற்படுகின்றனர்’ என்று

இருந்தாலும் திருமணம் நடக்க இருக்கும் அதைக் கூறி மாமனை கலகமடைய செய்ய மனமின்றி, ”சரி விடுங்கள் மாமா, பார்த்துக் கொள்ளலாம்” என்று அவருக்கு தைரியம் கொடுத்தான்

பின், எதற்கும் இருக்கட்டும் என்று ஊருக்கு தகவல் அனுப்பி பத்து இருபது ஆட்களை விடிவதற்குள் வரச் செய்து விட்டான். 

 சிவப்பிரகாசமும், ஆதவனும் எதிர்பார்த்த அளவுக்கு பிரச்சினைகள் ஒன்று ஏற்படவில்லை. 

ஆதவனிடம், “நான் பயந்தது போல் இல்லை, நல்லவர்கள் தான், நண்பர்களாலே நேற்று இரவு அவ்வாறு நடந்து கொண்டார்” என்று அவனை சமாதானம் செய்வதாக நினைத்து, தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டார். 

ஆதவன் அவருக்கு சிரிப்பு ஒன்றை மட்டும் பதிலாக தந்து விட்டு வேலைகளை கவனிக்க, குறித்த முகூர்த்தத்தில் சுந்தர பாண்டியன், தமயந்தியின் சங்கு கழுத்தில் மங்கல நாண் பூட்டினான்.  

வேண்டா வெறுப்பாக நின்றிருந்த சுந்தரை, ஆசையோடு பார்த்தாள் தமயந்தி

சுந்தர் தமயந்தி பக்கம் திரும்பவேயில்லை. திருமணத்திற்கு சிவப்பிரகாசம் அழைப்புக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல பெரிய மனிதர்கள் வந்திருக்க, எதையும் காட்டிக் கொள்ள முடியாமல் புழுங்கிக் கொண்டு நின்றிருந்தது சுந்தர் குடும்பம்

வந்திருந்த பெரிய மனிதர்கள் எல்லாம் கிளம்பிய பிறகு, பால் பழம் சாப்பிட என்று சுந்தர் அறைக்கு அழைத்து வரப்பட்ட தமயந்தியிடம், தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினான் சுந்தர். 

பாலை முதலில் தமயந்திக்கு கொடுத்து விட்டு சுந்தருக்கு கொடுத்தவுடன், “எச்சில் பட்ட பாலை அருந்த முடியாது” என்று தூக்கி எறிந்தவன் 

நேராக தமயந்தியிடம் திரும்பி, “நேற்று இரவு உன் தகப்பன் வீரவசனம் பேசினானே, இன்று அவனைப் பேசச் சொல்” என்று கத்தியவனைப் புரியாமல் மிரட்சியுடன் பார்த்தாள் தமயந்தி

தமயந்தியுடன் வந்திருந்த தோழிகள் ஓடிச்சென்று சிவப்பிரகாசத்திடம் கூற, அவர் ஆதவனை அழைத்துக் கொண்டு சுந்தரின் அறைக்கு வந்தார். உடன் கிராமத்தில் இருந்து வந்தவர்களும் சேர்ந்து கொண்டனர்

இவர்கள் அனைவரும் சுந்தரின் அறைக்கு செல்ல முயல, அங்கு தடிதடியாக வேலையாட்கள் என்ற பெயரில் நின்றிருந்தவர்கள் தடுத்தனர்

லேசான தள்ளு முள்ளும் கைகலப்புமாக சத்தம் கேட்டு வந்த பூபதி பாண்டியன், “சிவப்பிரகாசம் மட்டும் உள்ளே வரட்டும்” என்று கூற

“அது முடியாது தானும் உடன் வருவேன்” என்று ஆதவன் சத்தமிட, சம்மதித்த பூபதி பாண்டியன் அவர்கள் இருவரையும் அறைக்குள் அனுமதித்தார்

அறையில் மிரண்டு போய் அமர்ந்திருந்த தமயந்திக்கு ஆதவனும், தந்தையும் வருவது கண்டு, ஓடிவந்து குழந்தையைப் போல அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டாள்.  

அதைக் கண்டே துடித்துப் போன சிவப்பிரகாசம், “எதற்காக நண்பன் என்ற பெயரில் என் மகளின் வாழ்க்கையை சீரழித்தாய்?” என்று குரல் கம்மக் கேட்டவரிடம்

“இங்கே பார் சிவப்பிரகாசம், உன் மகளுக்காக சீர் செய்ய நினைத்தால் செட்டிபாளையம் கோப்பில் கையெழுத்து இடு. இல்லை என்றால் இதோ உன் மகள் அழைதுதுச் சென்று விடு” என்று கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டும் மூன்றாம் தர வில்லனைப் போல் பேசிய பூபதி பாண்டியனின் மீது கோபத்துடன் பாய்ந்தார் சிவப்பிரகாசம். 

“கொல்லாமல் விடமாட்டேன்” என்று பூபதி பாண்டியனின் சட்டையைக் சிவப்பிரகாசம் கொத்தாகப் பற்ற, இடையில் புகுந்த சுந்தர் சிவப்பிரகாசத்தின் சட்டையைப் பற்றினான்

அதுவரை தள்ளி நின்ற ஆதவன், சுந்தரை இறுகப் பற்றி குழந்தையை தூங்குவது போல தூக்கி சற்று தள்ளி நிறுத்தினான்.  

கோபத்தில் சுந்தர் ஆதவனை அறைய, பொறுமையாக அதை வாங்கிக் கொண்டான். 

“தயவு செய்து திருமணத்தை வியாபாரம் ஆக்க வேண்டாம்” என்று சுந்தரிடம் இறைஞ்சும் குரலில் கெஞ்சிய ஆதவனை கேலியாகப் பார்த்த சுந்தர்

“ஏன்? நான் வேண்டாம் என்றால் நீ இருக்கிறாய் அல்லவா?” என்று இரட்டை அர்த்தத்தில் பேசினான்

அதைக் கேட்டதும், “எனக்கு நீ வேண்டாம்” என சற்று முன் தாலி கட்டியவனின் முகத்திற்கு நேராய் கூறினாள் தமயந்தி 

அதற்கு பின் சிவப்பிரகாசம் கெஞ்சிப் பார்த்து, ஆதவன் பேசிப் பார்த்து எதுவும் பலனளிக்கவில்லை.  

வியாபார நோக்கில் செய்த திருமணம் சில மணி நேரங்களில் முடிந்தது. எந்த நண்பர்களின் பேச்சைக் கேட்டு மகளுக்கு மணமுடித்தாரோ, அவர்களே இவருக்கு பின்னால் தவறாக பேசினர்.  

பணத்திற்கு ஆசைப்பட்டு போய் அசிங்கப்பட்டதாகக் கூறி சிரித்தனர். மனம் நொந்து போனார். 

சில நாட்கள் விடுப்பில் இருந்தவர், தன் அக்கா பெருந்தேவிமின் வீட்டில் ஓய்வாக இருக்கும் பொழுது தான், தான் அவசரப்படாமல் இருந்திருந்தால் ஆதவனையே மாப்பிள்ளையாக அமைத்திருக்கலாம் என்று உணர்ந்தார்

ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருமகனைப் பார்த்து பெருமை கொண்டார். இனி இதைப் பற்றி பேச முடியாது என்று மனதிற்கு தாழிட்டார்

தகப்பனையும், மகளையும் பார்த்துப் பார்த்து தமயந்தியின் அன்னை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக, மனைவி மகளை அக்காள் வீட்டிலேயே விட்டு விட்டு பணிக்கு புறப்பட்டார் சிவப்பிரகாசம்.  

அவர் வீடு வந்து சேர்ந்ததுமே அவருக்காக காத்திருந்தார் போல் தபால் வர, கையெழுத்து இட்டுப் பிரித்தவர், அதிர்ந்து போய் அமர்ந்து விட்டார்

தமயந்தியிடம் மணமுறிவு கேட்டு சுந்தர் அனுப்பி இருந்த பத்திரத்தை பார்த்து விட்டு, ஆதவனை அழைத்து விஷயத்தைக் கூற, அவன் பக்குவமாக தமயந்திக்கும், பச்சைநாயகிக்கும் விஷயத்தைக் கூறி அழைத்து வந்தான்.  

விளையாட்டுப் பிள்ளைகளின் திருமணம் போல ஆரம்பித்த உடனேயே முடிந்து விட்ட பெண்ணின் வாழ்க்கையை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார் பச்சைநாயகி

ஒரு வருட காலத்தில் மணமுறிவு பெற்று மீண்டும் கல்லூரி செல்லத் தொடங்கினாள் தமயந்தி

இரண்டு மாதங்கள் சென்ற நிலையில் அன்று கல்லூரி முடித்து வெளியே வந்தவளை ஒரு கார் வழிமறித்து நிறுத்தியது

ஆம்..அது சுந்தர் தான். வழியிலேயே தகராறு செய்ய, உடன் வந்த தோழிகள் உதவியுடன் வீட்டிற்கு வந்தவள், மீண்டும் கல்லூரி செல்ல மறுத்து விட்டாள். 

ஏற்கனவே மனமும் உடலும் பாதித்திருந்த பச்சைநாயகிக்கு இது மேலும் நோயைத் தர, மீண்டும் தனது அக்காள் வீட்டிற்கே மனைவி மகளை அனுப்பி வைத்தார் சிவப்பிரகாசம். 

அவர் மட்டும் தனியாக இருந்து கொண்டு பணிக்கு செல்ல, பணிபுரியும் இடத்தில் பூபதி பாண்டியன் தன் ஆட்களைக் கொண்டு தொல்லை தர, மகளை நினைத்து மனவருத்தில் இருந்த அவரால் போராட முடியவில்லை. முடிவு, மாரடைப்பு கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கண் விழித்த உடனே மகளையும், மனைவியும் தேடியவருக்கு, தமக்கை மகன் ஆதவன் மட்டுமே தெரிந்தான்

“மாமா” என்றவனை அருகில் அழைத்து, கைகளைப் பிடித்து கொண்டார்

“அத்தைக்கும், தமயந்திக்கும் செய்தி அளிக்கவில்லை, உங்களுக்கு சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் செய்தி கேள்விப்பட்டதும் வந்து விட்டேன்” என்றவன் கூற,

இனியும் தாமதிக்காமல் மனதில் இருக்கும் ஆசையைக் கேட்டு விட வேண்டும் என்று ஆதவனிடம் கேட்டு விட்டார். 

“ஆதவா, என் மகள் தமயந்திக்கு எனக்கு பின்னால் யாரும் இல்லை. என் மகளுக்கு ஒரு வாழ்வு தர முடியுமா?”

யாசிக்கும் குரலில் கேட்டத் தன் மாமன் வாயைப் பொத்தி, “என் மகளை மணந்து கொள் என்று கட்டளையிடுங்கள் மாமா” என்றான் ஆதவன்.  

ஆதவன் கூறியது கேட்டு, உடலில் புத்துயிர் பெற்றது போல் உணர்ந்தார் சிவப்பிரகாசம். ஒரு வார காலத்திற்கு வெளியூர் போவதாக கூறி வந்த ஆதவன், மாமனை தேற்றி விட்டான் என்றே சொல்லலாம்

 மன மகழ்ச்சியாலோ என்னவோ, சீக்கிரமே உடல் தேறினார் சிவப்பிரகாசம். 

உடல்நிலையை காரணம் காட்டி பணிக்கு  ஆறு மாத காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு, அக்காள் வீட்டிற்கு வந்தவுடன் தமயந்தியை அழைத்து தனியாகப் பேசினார்.  

தனக்கு ஏற்பட்ட மாரடைப்பு பற்றி கூறியதுமே பதறிய மகளைத் தேற்றி, ஆதவனைப் பற்றிய தனது முடிவைக் கூற முதலில் மறுத்தவள், ‘தாயின் நோயும் தந்தையின் நோவும் தானே’ என்பதை அறிந்து வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டாள்

இதைப் பற்றி கூறியதுமே படுத்த படுக்கையாக இருந்த பச்சைநாயகி படக்கென எழுந்து விட்டாள். திருமண வேலைகள் மளமளவென நடக்க 

இதோ… இப்போது மங்கல நாண் பூட்டி ஆதவன் மனைவியாக அவனருகே வேண்டா வெறுப்பாக நின்று கொண்டிருந்தாள் தமயந்தி

ஆதவன் அன்று ஆதவனைப் போலவே ஜொலித்தான். தனக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும், சிறுவயது முதலே ஆதவனை தமயந்திக்கு மிகவும் பிடிக்கும்

தன்னை விட மூத்தவன் என்பதாலும், தந்தை இழந்த பின்னும் நம்பிக்கை தளராமல் தன் நிலையை உயர்த்திக் கொண்ட அவன் பால், நிச்சயமாக ஒரு பெரிய மரியாதை இருந்தது அவளுக்கு.  

சுந்தருடனான திருமணம் நிச்சயம் ஆன சமயம் மட்டும், ஒரு முறை இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் தமயந்தி. ஆனால், அது அவன் மீதுள்ள விருப்பமா என்று, அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை

திருமணம் நல்லபடியாக முடிந்தது. அன்று இரவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க, தமயந்திக்கு பெரும் கலக்கமாக இருந்தது.  

இரவு பால் சொம்புடன் பள்ளியறை அழைத்து வந்து விட்டுச் சென்ற கிராமத்து சொந்த பந்தங்கள் சென்று விட, உள்ளே நுழைந்தவளுக்கு கைகால்கள் உதற ஆரம்பித்தது

அறையில் ஆதவன் இல்லை. உள்ளேயே இருந்த குளியலறையில் விளக்கு எரிவதைப் பார்த்து விட்டு, அந்த பெரிய அறையில் ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் பயத்துடன்.

குளியலறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவளை, புன்முறுவலுடன் எதிர் கொண்டான் ஆதவன்

“ஏன் தமயந்தி, இந்த பட்டு சேலை எல்லாம் பொம்பளைங்க எப்படி கட்டிட்டே இருக்கீங்க, முடியலைடா சாமி. கொஞ்சம் நேரம் பட்டு வேஷ்டி சட்டை போட்டதுக்கே நமக்கு உடம்பு எரியற மாதிரி இருக்கு” என்று இலகுவாக பேசியவனிடம், புன்னகையுடன் தமயந்தியால் பேச முடிந்தது

“ஆமாம் மாமா, எனக்குமே பட்டு சேலை ரொம்ப நேரம் கட்டப் பிடிக்காது” என்றவளிடம்

“அப்ப துணிய மாத்திக்க” என்றதும் அதிர்ந்து போனாள்.  

“எதுக்கு இந்த அதிர்ச்சி? உனக்கு பின்னாடி ஒரு ரூம் இருக்கு பாரு, அங்க போய் மாத்திக்க” என்றதும், சற்று நிம்மதி அடைந்து தன் துணிமணிகள் எல்லாம் வெளியே இருக்கிறதே என்ற யோசனையுடன் நின்றவளை, அறையினுள் போய் பார்க்குமாறு கூறினான்

உள்ளே சென்றவளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கிராமத்தில் நகரத்து வசதிகளோடு கட்டியிருந்த அந்த வீட்டில், அந்த சின்ன அறையில் அவளுக்குத் தேவையான அனைத்து துணிகளும் வரிசையாக சுவற்றில் பதித்திருந்த பீரோவினுள் அழகாக தொங்க விடப்பட்டிருந்தது

காலில்  அணியும் செருப்பில் இருந்து, காதில் அணியும் தொங்கட்டான் வரை அங்கிருந்ததைப் பார்த்து, பிரமித்துப் போனாள் தமயந்தி

அந்த உள் அறையோடே ஒரு குளியலறையும், கழிப்பறையும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவளுக்கு தேவையான சோப்பில் இருந்து, இரவு அணியும் உடையும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு ஆச்சரியம் விலகாமலேயே உடையை மாற்றிக் கொண்டு வந்தவளை, பேசவிடாமல் ஒரு கவரை எடுத்து அவளிடம் நீட்டினான் ஆதவன்.  

“படிப்பு முக்கியம், அதனாலே மறுபடியும் நீ படி,  நம்ம ஊருக்கு பக்கத்திலேயே ஒரு காலேஜ் இருக்கு, ஒரு வாரம் கழிச்சு போய் அட்மிஷன் போட்டுக்கலாம்”என்றவனை பார்த்துக் கொண்டே நின்றவளிடம் 

“என்ன” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி பார்த்தவனிடம்

“எப்படி மாமா எனக்குத் தேவையான எல்லாத்தையுமே வாங்கி வெச்சிருக்கீங்க?” என்றவளிடம்

புன்சிரிப்புடன், “நமக்கு பிடிச்சவங்களுக்குத் எது தேவையோ, அதை ஏற்பாடு பண்ணறதே ஒரு சந்தோஷம் தானே” என்று தோளைக் குலுக்கியபடியே அவன் கூற, முதல் முறையாக தனக்குள்ளே ஒரு சிலிர்ப்பு உருவாவதை உணர்ந்தாள் தமயந்தி 

தனக்கு சுந்தரிடம் அந்த பிடித்தம் உண்டாகவில்லை, உறவினன் என்ற அன்பு மட்டுமே என்பதை அவள் மனம் எடுத்துரைக்க, தலையை சிலுப்பிக் கொண்டு நிகழ்வுக்கு வந்தாள்

அதற்குள் அருகே இருந்த பெரிய சோஃபாவில் படுத்திருந்தான் ஆதவன். 

“நாளைக்கு பொறுமையா யோசி, இப்ப படு. ரெஸ்ட் வேணும் இல்ல? காலைல நேரமே எந்திரிச்சது, படு தமயந்தி” என்று கூறி விட்டு, அவள் பதிலுக்கு காத்திராமல் கண்களை மூடிக் கொண்டான்

எதுவும் பேச முடியாமல் போனாலும், மனதில் பயத்திற்கு பதில் ஒருவிதமான பாதுகாப்பு உணர்வு வருவதை அவளால் உணர முடிந்தது.  

மறுநாள் காலை அவள் ஏழு மணிக்கு எழுந்திரிக்க, ஆதவன் படுக்கையில் இல்லை. அவன் தலையணை மற்றும் பெட்ஷீட் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.  

அத்தை வீட்டில் சுதந்திரமாக இருந்தவள் தான், ஆனால் இப்போது இந்த வீட்டின் மருமகளாக இருப்பதால் என்ன சொல்வார்களோ என்று, கொஞ்சம் சங்கடமாகவும் பயவுணர்வுடனும் வேகமாக குளித்து முடித்து வெளியே வந்தாள்

பச்சைநாயகி மட்டுமே, “ஏன் இவ்வளவு நேரம்?” என்று கோபித்துக் கொண்டார். 

அத்தை பெரும்தேவியும், தந்தை சிவப்பிரகாசமும் சிரித்தபடியே வரவேற்றனர்.  

“விடு நாயகி, சின்ன புள்ளையப் போயி மிரட்டிகிட்டு” என்று அவர் உதவிக்கு வர 

முன்பு போல அத்தையின் முதுகுக்கு பின்னால் நின்று, “அப்படி சொல்லுங்க அத்தை” என்ற மகளை, ஆனந்தக் கண்ணீரோடு பார்த்தனர்  பெற்றவர்கள்

ஆதவனும் வந்து விட, லேசான கலகலப்புடனே உணவருந்தும் போதே, “எனக்கு உங்களிடமும், மாமாவிடம் ஒரு கேள்வி” என்றவளை இடைமறித்த பெரும்தேவி

“உங்க அப்பாவுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிட்டோமான்னு தானே?” என்ற என்ற அத்தையை

ஆச்சரியத்துடன் பார்த்து, “ஆம்” என்றாள் தமயந்தி

“அது தான் இல்லை, என் மகனுக்கு சின்ன வயசுல இருந்தே உன் மேல பிரியம். ஆனா உனக்கு திடீர்னு கல்யாண ஏற்பாடு நடந்ததால பேசாம விட்டுட்டோம். உங்கள் அறையில உனக்கு என்ன என்ன பிடிக்கும்னு வாங்கி வெச்சிருக்கானே, நீ படிச்ச புள்ளை தான, பிடிக்கலைன்னா இதெல்லாம் எப்படி செய்வானு யோசிக்கணும் இல்ல” என்று அத்தைக் கூறியதை 

அதற்கு மேலும் கவனியாமல், காதலுடன் ஆதவனைப் பார்த்தவள் மனதில், ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ என்ற பாடல் வரிகளே ஓடியது.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. மிகவும் அருமை வாழ்கையில் அருகில் இருக்கும் பொருளின் மதிப்பு முதலில் யாருக்கும் தெரிவதில்லை

ரீபூட் (சிறுகதை) -✍ ரா.பிருந்தா, Canada

பொம்மி (சிறுகதை) -✍ பத்மாவதி மாணிக்கம், கோவை