sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

தந்தையுமானவள் (சிறுகதை) – ✍ வைரமணி, திருச்சி

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 80) 

நாச்சம்மாவுக்கு நடுச்சாமமாகியும் தூக்கம் வரவில்லை. தூங்க முடியாத அளவிற்கு துக்கம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது. 

மூன்று குழந்தைகளுக்குத் தாயான நாச்சம்மாவுக்கு, அவளது கஷ்டங்களைச் சொல்லி அழ ஒரு தாய் மடி கிடைக்கவில்லை. இன்றோடு பத்து நாட்கள்  ஆகிவிட்டது. அவளுடைய கணவன் காளியப்பன் நாச்சம்மாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு சென்று. 

திருமணம் முடிஞ்சு பத்து வருசமாகப் போகிறது. இந்தப் பத்து வருஷமும் நாச்சம்மாள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. படாதபாடு பட்டு விட்டாள்

எந்த நேரமும் குடியைக் கட்டி அழுத காளியப்பன், தன்னுடைய குடும்பத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. தினமும் குடித்துவிட்டு வந்து நாச்சம்மாவை அடிப்பது திட்டுவது, ஏதாவது உப்புச்சப்பில்லாத விஷயத்தில் காரத்தை தடவி வீரத்தைக் காட்டுவது அவனுடைய வழக்கமாகிப் போனது. 

சண்டை போட்டு வீட்டை விட்டு வேகமாகச் செல்லும் காளியப்பன், சில நேரங்களில் உடனே வீட்டுக்கு வந்து விடுவான். அல்லது இரவு எப்படியானாலும் வந்து விடுவான். 

ஆனால் இந்த முறை காளியப்பன் நாச்சம்மாவிடம் சண்டையிட்டு அடித்து உதைத்து  வீட்டை விட்டு சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அவன் வரவில்லை. 

வீட்டை விட்டுப் போன தன் புருஷன் பத்து நாளாகியும் வீட்டுக்கு வராதது  நாச்சம்மாவுக்கு  என்னவோ போல் இருந்தது. புருஷனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும், அவளுக்கு ஏனோ தன் கணவனை இழக்க மனமில்லை

புருஷன் குடித்து விட்டு வந்து தன்னை எட்டி எட்டி உதைத்தாலும்,  அவன் கால் நகங்களை வெட்டி அழகு பார்த்தவள். தன் புருஷனை ஒரு போதும் மனதார வெறுத்ததில்லை

பிள்ளைகள் பிறந்ததும் திருந்தி விடுவார் என்று பொறுமையோடு இருந்தாள். மூன்று பிள்ளைகள் பிறந்த பிறகும் தன் கணவன் மாறாததால், நாச்சம்மாவுக்கு தன் புருஷன் திருந்துவார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட ஏற்படவில்லை. 

பத்து நாட்களுக்கு முன்பு, காளியப்பன் குடித்து விட்டு வந்து நாச்சம்மாவை அடித்து உதைத்துக் கொண்டிருந்த பொழுது, அவர்களுடைய ஐந்து வயது மகள் சாந்தி, “அம்மாவ உதைக்காதீங்க அப்பா… அம்மாவை உதைக்காதீங்க” என்று தன் அப்பாவின் காலைப் பிடித்துக் கெஞ்சினாள்

தன் மகள் என்றும் பாராமல் அந்தப் பிஞ்சைக் காலால் எட்டி உதைத்ததில் வாசலில் போய், “அய்யோ… அம்மா” என விழுந்ததை இப்ப நெனச்சாலும், நாச்சம்மாவுக்குக் கைகாலெல்லாம் உதறும் 

“பச்ச புள்ளன்னு கூட பாக்காம இப்படி உதைத்துத் தள்ளுறியே” என்று கதறி அழுது, வாசலில் போய் விழுந்த தன் மகளை வாரித் தூக்கி அணைத்துக் கொண்டாள்

இருந்த பூர்வீக சொத்துக்களை எல்லாம் வித்தாச்சு. லாரி வாங்கி ஓட்டுகிறேன் என்று அதுல பாதி சொத்தை வித்து அழித்தாகிவிட்டது. சொந்த வீட்டையும் வித்து குடிச்சாச்சு.  சொந்த வீட்டிலேயே வாடகைக்கு குடியிருக்கிற நிலைமை. 

எல்லாம் காளியப்பனோட அப்பா அவனுக்குக் கொடுத்த செல்லம். வீட்டுக்கு ஒரே வாரிசு என்று தன் பிள்ளையைச் சின்ன வயசிலிருந்தே கண்டிக்காமல் செல்லமாக வளர்த்து விட்டார். 

காளியப்பனும் தன் அப்பா பெயரில் இருந்த நிலங்களை ஒவ்வொன்றாக விற்றுக் குடித்து விட்டான். ஒத்தையாகப் பிறந்ததெல்லாம் சொத்தையாகத் தான் போகும்னு சொல்றது மாதிரி ஆகிவிட்டான்

நாச்சம்மா பெரிய சம்சாரி குடும்பத்துல பிறந்தவ. நான்கு அண்ணன்கள், ஒரு தம்பி, ஒரு அக்கா என நாச்சம்மாவோட சேர்த்து ஏழு பேர். நாச்சம்மா அந்த குடும்பத்தில் ஆறாவதாகப் பிறந்த பெண் குழந்தை. 

நாச்சம்மாவுக்குக் கல்யாணம் செய்யும் போது இருபத்தியோரு வயசு.

நாச்சம்மாவோட தகப்பனார், தான் பெற்ற அத்தனை பிள்ளைகளையும் நன்றாக வளர்த்து, ஒரு குறையும் இல்லாமல் வளர்த்து ஆளாக்கி, எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்து, தன் கடமையை முடிச்ச பின்னாடி, மனநிறைவோட ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, ஒருநாள் வீட்டை விட்டுப் போய் விட்டார்

காசிப் பக்கம் போனதாகக் கேள்வி. நாச்சம்மாவின் தகப்பனார் சன்னியாசம் போவதற்கு முன் தனது சொத்துக்கள் முழுவதையும் தன் பிள்ளைகள் அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டுத் தான் சென்றார்

நாச்சம்மாவிற்கு  சிந்தாமணிபுதூரில் உள்ள அவள் பிறந்து வளர்ந்த பூர்வீக வீடே பங்காகப் பிரிந்தது. நாச்சம்மாவின் பங்காகப் பிரிந்த பூர்வீக வீட்டில், நாச்சம்மாவின் மூத்த சகோதரர் குடியிருந்து கொண்டு மாதாமாதம்  வாடகையாக ஒரு தொகையைக் கொடுத்து கொண்டு வந்தார். 

அந்த வாடகையை வாங்கித் தான், நாச்சம்மா இப்பொழுது குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுத்து வந்தாள். 

பத்து நாட்களுக்கு முன், நாச்சம்மாவின் கணவன் காளியப்பன், “அந்த வீட்டையும் விற்றுக் கொடு” என்று கேட்டதால் தான் சண்டை வந்தது

நாச்சம்மா சாப்பாட்டிற்கே மிகவும் சிரம்பட்டு வந்தாள். கணவன் சுமக்க வேண்டிய குடும்பப் பாரத்தைச் சுமந்து கொண்டு, வயதான மாமனாரை தன் குழந்தைகளோடு குழந்தை போல் நினைத்து கவனித்துக் கொண்டு வந்தாள்

தன்னுடைய மூத்த மகனைத் தன் அண்ணன் வீட்டிலேயே விட்டு வளர்க்கும்படி செய்தாள் நாச்சம்மா. வறுமையில் இவனும் சேர்ந்து கஷ்டப்பட வேண்டாம். இந்த ஒரு 

பிள்ளையாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து தன் அண்ணன் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்தாள்

இரண்டாவது குழந்தை சாந்திக்கு இப்பொழுது வயது ஐந்து ஆகிறது. அதன்பிறகு மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு இன்னும் ஒரு வயசு கூட முடியவில்லை. இப்பொழுது தான் தவழ்ந்து கொண்டிருக்கிறது

சின்னப் பெண் வயிற்றில் இருக்கும் போதே, நாச்சம்மா வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டாள். பகலெல்லாம் பக்கத்துல உள்ள மில்லில் கடலை உடைக்கிற வேலை. 

இந்த வேலையை மிகவும் சிரமப்பட்டு வாங்கினாள். நாச்சம்மா கர்ப்பமாக இருந்ததால், அந்த முதலாளி அவளுக்கு வேலை இல்லை என்று சொல்லி விட்டார். கர்ப்பிணியைக் கஷ்டப்படுத்திப் பார்க்க அந்த மனுஷனுக்கு மனசு வரவில்லை. அதனால் வேலை கொடுக்க தயங்கினார். 

அதன் பிறகு மேஸ்திரியிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சி அந்த வேலையை வாங்கிப் பார்த்தாள். என்ன செய்வது? புருஷன், மாமனாருடன் சேர்ந்து ஐந்து பேரின் வயிற்றுப் பிழைப்பைப் பார்க்க வேண்டுமே.  

வேலையில் சேரும்போதே மேஸ்திரி ஒரு கண்டிசன் போட்டார். “இந்தா பாரும்மா, முதலாளிக்குத் தெரியாம உனக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறேன், பிள்ளைகளை வச்சிக்கிட்டு கஷ்ட்படுறியேன்னு.  முதலாளி மில்லுக்கு வர்றப்ப நீ போய் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கணும் சரியா”  

சரி என்று ஒத்துக்கொண்டு வேலையில் சேர்ந்த நாச்சம்மா, முதலாளி வரும்போதெல்லாம் பாத்ரூமில் சென்று ஒளிந்து கொள்வது அவளுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. 

வயிற்றில் பிள்ளையோடும் மனதில் கவலையோடும் நாச்சம்மா பாத்ரூமில் ஒளிந்து கொண்டு அன்றாடம் பட்ட துன்பங்கள் ஏராளம். உடம்பெல்லாம் வியர்க்க அதோடு கண்ணீரும் சேர்ந்து கொள்ள, நாச்சம்மாள் பாத்ரூமிலேயே கால்கடுக்க நின்று கொண்டிருப்பாள். சில சமயம் வாய்விட்டே அழுது விடுவாள்

குடலைப் புரட்டிக் கொண்டு வர, கட்டுப்படுத்த முடியாமல் குபீரென்று வாந்தி எடுப்பாள். 

மில்லில் கடலை உடைக்கும் மற்ற பெண்கள், நாச்சம்மாவின் நிலையைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பார்கள். முதலாளி போனபின் வேலாயி பாட்டிதான் முதலில் சென்று கதவைத் தட்டி நாச்சம்மாவை பாத்ரூமிலிருந்து கூட்டி வருவாள்.  

“ஐயோ அம்மணி என்ன பெத்த மகளே, இப்படி கிடந்து கஷ்டப்படுறியே அம்மணி. வயிற்றில் பிள்ளையோட பொண்டாட்டி கெடந்து கஷ்டப்படுறாளேன்னு உன் புருஷன் காளியப்பனுக்குப் புத்தி வரலையே” என்று வேதனையோடு அவளைக் கட்டி அணைத்து, தன் சேலைத் தலைப்பால் வியர்வையையும் கண்ணீரையும் துடைத்து விடுவாள்.  

கடின உழைப்போடு சேர்ந்த நீண்ட பகலாகவே இருக்கும். நாச்சம்மாவிற்குக் கடலை உடைத்த வேலையில் கிடைத்த கூலி பத்தாமல்  இரவு நேர வேலையாக மசாலா அரைக்கும் கம்பெனியில் மிளகாய்க் காம்பு கிள்ளும் வேலைக்கு வேலைக்குச் செல்வாள்

மிளகாய்க் காம்புகளைக் கிள்ளும்பொழுது நாச்சம்மாளுக்கு கை, கண்களோடு சேர்ந்து மனசும் திகுதிகுவென்று எரியும். கணவன் சுமக்க வேண்டிய குடும்பப் பாரத்தை அவள் ஒருத்தியே சுமந்தாள்.  

வயிற்றில் குழந்தையோடு வேலை செய்த நாச்சம்மாள், குழந்தை பெற்ற பிறகு சிறிது நாள் வீட்டில் இருந்துவிட்டு மறுபடியும் வேலைக்குச் சென்றாள். 

நாச்சம்மாள் வேலை செய்யும் இடம் வீட்டிற்கு அருகில் தான் இருந்தது. காலையில் சின்னப் பாப்பாவிற்குப் பால் கொடுத்து விட்டுச் சென்றால் பிறகு மதியம் சாப்பாட்டு வேளையில் வந்து பால் கொடுத்துவிட்டுப் போவாள். 

பாவம் குழந்தைக்கு நாச்சம்மாவால் சரிவர பால் கொடுக்க முடியவில்லை. நல்ல உணவு உண்டால்தானே. குழந்தை சின்னப் பாப்பாவும் சப்பி சப்பிப் பார்த்துவிட்டு, தன் வயிறு நிறையாததால் கதறி அழும். 

குழந்தை பால் பத்தாமல் அழுவதைப் பார்த்து அவளால் சகித்துக் கொள்ள முடியாது. அவளும் சேர்ந்து கண்கலங்குவாள்.  வறுமை தலைக்கு மேல் போய் விட்டது. 

வேலையும் சரிவர இல்லை. பால் கொடுக்கும் போதெல்லாம் அம்மாவும் தங்கையும் சேர்த்து அழுவதைப் பார்த்து சாந்திப் பொண்ணும் சேர்ந்து கண் கலங்குவாள். 

பகலில் அம்மா வேலைக்குச் சென்றபின் சின்னப் பாப்பாவைப் பார்த்துக் கொள்வது சாந்திப் பொண்ணுதான். 

தொட்டிலில் இருந்து குழந்தையைத் தூக்கக் கூடத் தெரியாத சாந்திப் பொண்ணு சின்னப்பாவை தொட்டிலில் ஆட்டும் பொழுது “ரே…ரே… ரெட்டட்டே…ரே…ரே… ரெட்டட்டே… அம்மா வர நேரமாகும் தூங்குப்பா…தூங்கு” ஒரு குழந்தை இன்னொரு 

குழந்தையைத்  தாலாட்டித் தூங்க வைப்பது கல் மனதையும் கரைய வைக்கும். 

என்ன செய்ய? கணவன் சரியில்லாத பொழுது அம்மா அப்பாவாகிறாள். அக்கா தங்கைக்குத் தாயாகிறாள். எத்தனை இரவுகள் அம்மா சாந்திப் பொண்ணின் தலையைத் தடவிக் கொடுத்து கண்ணீர் வடித்திருக்கிறாள். 

நாச்சம்மாளுக்குப் புருஷனுடைய தொந்தரவு ஒரு பக்கம் நீண்டு கொண்டே போனாலும் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களின் கேலிப் பேச்சுகளும் அவளை நிம்மதி இழக்கச் செய்தது. 

பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பார்வதியின் சாடைப் பேச்சுகள் நாச்சம்மாளுக்குச் சொல்ல முடியாத அளவிற்கு நெஞ்சை சல்லடையாக கிழித்தது. எப்போது பார்த்தாலும் நாச்சம்மாவின் புருஷனைப் பற்றி மற்றவர்களுடன் நாச்சம்மாவின் காதுபடவே பேசுவாள் 

“புருசனை நல்லபடியாகப் பார்த்து திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பொம்பளையா? என்ன குடும்பம் இது! எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு வந்து சண்டை. அக்கம் பக்கத்துல குடியிருக்க வேண்டாமா?” பார்வதியோட பேச்சு நாச்சம்மாவைக் குத்திக் கிழிக்கும். 

அதோடு நிற்காமல், நாச்சம்மாவின் வீட்டிற்கு வந்து அவளிடம் தன்னுடைய புருசனின் அருமை பெருமைகளையெல்லாம் பேசி வெறுப்பேற்றுவாள்  பார்வதி

“என் புருஷன் மாதிரி முடியுமா? ஊர் உலகத்துல ஏம் புருஷன் மாதிரி யார் இருக்கா? இந்த உலகத்துல என் வீட்டு ஆம்பள போல எவனும் கிடையாது” என்று எப்போது பார்த்தாலும் நாச்சம்மாவிடம் பார்வதி தன் புருஷன் அருமை பெருமை எல்லாம் சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பாள்.  

அவள் புருஷன் மூக்குச் சிந்தினாக் கூட பெருமையாகத் தான் இருக்கும். என் புருஷன் மாதிரி மூக்கு சிந்த முடியுமா என பீத்திக் கொள்ளட்டும். அதற்காக என் புருஷனை இவ்வளவு கேவலமாக பேச வேண்டுமா? என்று  வேதனைப்படுவாள் நாச்சம்மா 

பிறரது நியாயமான மகிழ்ச்சிகளையும், திருப்திகளையும் கூட சில அற்பக்குணம் உடைய மனிதர்களால் புரிந்து கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் முடியவே முடியாது. 

தான் மகிழ்வதை விட, பிறர் மகிழ்ச்சியை கொல்வது தான் ஒரு அற்பனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரும். அதே போன்று தான் இந்த பார்வதியும்,  நாச்சம்மாவிடம் தன் புருஷனைப் புகழ்ந்தும், அவள் புருஷனை இகழ்ந்தும் பேசிப் பேசி, விடாது துன்பம் கொடுத்துக் கொண்டே இருந்தாள்

நாச்சம்மாவின் நிம்மதியைக் கெடுப்பதில் பார்வதிக்கு அப்படி ஒரு சந்தோசம். இவ்வுலகத்தில் சிலர் விஷப்பாம்புகளாகவும், நட்டுவாக்காலிகளாகவும் இருந்து கொண்டு மனிதர்கள் என்கிற பெயரில் நடமாடுகின்றனர். 

நட்டுவாக்காலி வாயில் கவ்விக் கொண்டு கொடுக்கால் கொட்டும். இந்தப் பார்வதி போன்ற சில பெண்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் மற்றவர்களின் இதயத்தை  காயப்படுத்தும்.  

புருசன் போய் பத்து நாட்கள் ஆகிவிட்டது. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. கவலைகள் எல்லாம் ஒன்று சேர நாச்சம்மா மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள்

சொந்த பந்தங்களின் உதாசீனமும் நிராகரிப்பும் நாச்சம்மாவை நிறையவே கலங்கடித்து விட்டது. இரண்டு வேளை சாப்பாடாவது நிம்மதியாகச் சாப்பிடலாம் என்றால், அதற்கும் வேலை சரியாகக் கிடைக்கவில்லை

புருசனை மறந்து பிள்ளைகளைக் கவனிக்கலாம் என்றால் பணம்… பணம் தான் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்த உலகத்தில் பணம் பெரிதாக உள்ளது. அது இல்லாவிட்டால் எத்தனை பிரச்சனைகள். 

நேற்று காலை வேலைக்குப் போகும் முன் தன் மாமனார் அவளிடம் வந்து பேசிய வார்த்தைகள் மிகுந்த வேதனையைக் கொடுத்தது.  

“இனி உன் புருஷனை நம்பி பிரயோஜனம் இல்லை. புத்தியோடு உன் உழைப்பை நம்பி பிழைத்துக்கொள். எனக்கு நீ இனி சோறு பொங்கித் தர வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னால் முடிந்த அளவிற்கு உன் கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன். நான் இன்று முதல் வேலைக்குச் செல்கிறேன். 

உதவாக்கரைப் பிள்ளையைப் பெற்றதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் அல்லவா? என் உடம்பில் உயிர் இருக்கும் வரை உனக்கும் குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த அளவு உழைத்துத் தருகிறேன். 

அன்றாடம் ஒரு படி அரிசியாவது உனக்கு சம்பாதித்துத் தருகிறேன். என் மகனுக்காக உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். என்னை மன்னித்துவிடு அம்மணி” என்று சொல்லி அவளது மாமனார் அழுத பொழுது நாச்சம்மாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது

எண்பது வயதை கடந்த அந்த தள்ளாத வயது முதியவர் வேலைக்குப் போகிறேன் என்று சொல்வதைக் கேட்கும் பொழுது, நாச்சம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

நடக்கவே தடுமாறும் இவர் குடும்பத்திற்காக உழைக்கக் கிளம்புகிறேன் என்கிறாரே என்று வேதனைப்பட்டாள். கஷ்ட வாழ்க்கை நாச்சம்மாவை ஒரு வேட்டைநாய் போல் விடாமல் துரத்திக் கொண்டிருந்தது.  

கவலைகளையெல்லாம் இனி அனுபவிக்க வேண்டிய தேவையே இல்லாமல் போகட்டும் என நாச்சம்மா ஒரு முடிவு எடுத்தாள். 

எல்லாவற்றையும் நினைத்து நினைத்துக் குழம்பி போன நாச்சம்மாள் தன் சாவுதான் இதுக்கு ஒரு வழியைக் காட்டும். இதைத் தவிர வேறு வழி இல்லை. பிள்ளைகளை எப்படியும் அண்ணன் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாள். 

உலகத்திலேயே மிகச் சுலபமான காரியம் செத்துப் போவது தான். வாழ்வதற்குத் தான் சில நேரங்களில் மானம் மரியாதையெல்லாம் இழக்க வேண்டியுள்ளது. 

காசு சம்பாதிக்க வேண்டி வேலை செய்யும் இடத்தில் காதுவரை சிரிக்க வேண்டியுள்ளது. காரணமே இல்லாமல் வாழ்கிறவர்கள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளது போல் காரணத்தோடு சாகிறவர்களும் உள்ளனர். 

நாச்சம்மா தான் சாவதற்குச் சரியான காரணம் இருப்பதாக நினைத்தாள். இது தான் நல்ல முடிவு என்று முடிவுக்கு வந்தாள். 

சில நேரங்களில் சுழ்நிலைகள் எதிர்பாராத துன்பங்களைத் தரும் பொழுது எதிர்பாராத துணிவையும் மனிதர்களுக்குக் கொடுத்து விடுகின்றன. அதே போல் தான் நாச்சம்மாவிற்கும் கடந்த ஒரு வாரமாக அமைந்த இறுக்கமான மனநிலை அவளை இந்தத் தற்கொலை முடிவுக்குத் தள்ளியது.  

விடிந்ததும் பால்காரர் வந்ததும் பாலை வாங்கிக் காய்ச்சி நேற்று வாங்கி வந்த பூச்சி மருந்தைக் கலந்து குடித்து விட வேண்டும் என்று, தன் குழந்தைகளைக்கூட நினைக்காமல் தன் வாழ்க்கையை முடிக்க காத்துக் கொண்டிருந்தாள்

பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருந்தது. தனக்கு மட்டும் ஏன் வேதனைகள் மட்டுமே நிரம்பிய வாழ்க்கையாக அமைந்து விட்டது என்று விழிகளைத் திறக்க தோன்றாமல் அப்படியே திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்

இப்படியே இந்தப் பாழும் உயிர் போய்விட்டால் எவ்வளவு பெரிய அமைதியாக இருக்கும். உடம்புக்கும் உள்ளத்திற்கும் வாழ்க்கையில் கிடைக்காத நிம்மதியை சாவில் அடைந்து விடலாம் என்று நாச்சம்மா மனதில் நினைத்துக் கொண்டே, திண்ணையில் சாய்ந்து இருந்தாள்.  

நாச்சம்மாள் அடிக்கடி திண்ணையிலிருந்து எழுந்து வீட்டிற்குள் சென்று தன் இரண்டு மகள்களையும் பார்த்து தலையைத் தடவி முத்தமிட்டு வந்து மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள். அப்போது சாந்தி விழித்துக் கொண்டாள்

சாந்திக்கு அம்மாவின் அன்றைய நடவடிக்கை வித்தியாசமாக இருந்தது. எப்போதாவது முத்தம் தரும் அம்மா, இன்று ஏனோ திண்ணைக்கும் வீட்டுக்குமாக வந்து அடிக்கடி முத்தமிட்டுச் செல்கிறாளே என்று நினைத்து, பிறகு தூங்கிப் போனாள்.  

பொழுது விடிய ஆரம்பித்தது. பால்காரர் வரும் சத்தம் கேட்டு வீட்டிற்குள் சென்று பாத்திரம் எடுத்து வந்து பாலை வாங்கிக் கொண்டாள். 

பாலுக்கு உரிய காசைக் கொடுத்து விட்டுத் திரும்பும் பொழுது, “உனக்குப் பால் ஊற்றுவது தான் நாச்சம்மா அக்கா எனக்குச் சௌகரியமா இருக்கும். கூப்பிடு முன்னே வந்து வாங்கிக்குவ. மத்தவங்களெல்லாம் நான் கழுதையா கத்தினாலும் உடனே வரவே மாட்டாங்க” என்று சொன்னார்.  

அதைக் கேட்டு நாச்சம்மா ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, ‘நாளை முதல் நீ எத்தனை முறை கத்தினாலும் நான் வரப் போவதில்லை. இதுதான் நீ எனக்கு ஊற்றும் கடைசிப் பால்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, வீட்டிற்குள் சென்று பாலைக் காய்ச்சி கூடத்தில் வைத்து விட்டு, இரண்டு மகள்களையும் பார்த்துக் கண்ணீர் விட்டாள்

“என் செல்வங்களே என்னை மன்னித்து விடுங்கள். அம்மாவால் உங்களைக் கடைசி வரை காப்பாற்ற முடியவில்லை. ஊராரிடமும் சொந்தக்காரர்களிடமும் குடிகாரக் கணவனால் நான் பட்ட அவமானங்கள் போதும். நீங்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைக் காப்பாற்ற மாமா வருவார்” என்று கண்கள் கசிய இரண்டு குழந்தைகளையும் முத்தமிட்டு போர்த்தினாள்

பின் பாலை டம்ளரில் ஊற்றி, அதில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தையும் கலந்து ஆற்றினாள்.  

குடிப்பதற்காக வாயருகே கொண்டு சென்ற பொழுது “அம்மா” என்னும் குரல். நாச்சம்மா நிமிர்ந்து பார்க்கிறாள்.  

சாந்தி நின்று கொண்டிருக்கிறாள். “என்னம்மா நீ மட்டும் பாலைக் குடிக்கிற. எனக்கும் தங்கச்சிக்கும் இல்லையா? எனக்கு ரொம்ப பசிக்குது எனக்கும் குடும்மா” 

நாச்சம்மா பதறிப் போய், “அய்யோ மகளே. இது உனக்கு வேண்டாம், இதைக் குடித்துவிட்டு நான் சாமிகிட்ட போறேன். என்னால் இங்கு இருக்க முடியாது. தங்கச்சியும் நீயும் மாமா வீட்டிற்குச் சென்று விடுங்கள்.  மாமா வந்து உங்களைக் கூட்டிப்ப் போவார். மாமா உங்களை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்” என்று கூறி மகளை கண்ணீருடன் ஏறிட்டாள்

சாந்தி விறுவிறுவென்று அடுப்படிப் பக்கம் சென்று, அங்கு இருந்த சின்ன பாப்பா குடிக்கும் ரப்பர் பீடிங் பாட்டிலை எடுத்துக் கொண்டு தனக்கும் ஒரு தம்ளரை எடுத்துக் கொண்டு வந்து தன் அம்மாவிடம் வந்து நின்றாள். 

“அம்மா நீ மட்டும் ஏன் சாமிகிட்ட போற. நாங்களும் வருகிறோம். இந்தா பாப்பாக்கும் எனக்கும் கொஞ்சம் ஊற்று. நாங்களும் குடித்து விட்டு, உன் கூடவே சாமிக்கிட்ட வருகிறோம்” என்று  தம்ளரையும், பாப்பா  குடிக்கும் பாட்டிலையும் நீட்டினாள்

“ம்… எனக்கும் பாப்பாவுக்கும் ஊத்தும்மா. நாங்களும் ஓங்கூட வந்துடுறோம். அங்க போயிட்டா அப்பா என்னை உதைத்து தள்ள மாட்டார் தானே? உன்னையும் அடிக்க மாட்டார் தானே? எங்களுக்கும் குடும்மா குடிக்கிறோம்” என சாந்தி விடாது கேட்டுக் கொண்டிருந்தாள்.  

நாச்சம்மாவிற்கு மண்டையில் சுரீர் என்று ஒரு வலி

இன்னும் எத்தனையோ வருடங்கள் வாழ வேண்டிய இந்தப் பிஞ்சுகள் என்ன பாவம் செய்தன? என் சுயநலத்திற்காக, எனக்கு ஏற்பட்ட அவமரியாதைக்காக நான் ஏன் இந்த பிஞ்சுகளைத் தாயில்லாப் பிள்ளைகளாக்க வேண்டும்? 

ஐயோ நான் ஒரு மகாபாவி. இந்த இளம் மொட்டுகளைச் சருகுகளாக மாற்ற நினைத்தேனே என்று கதறிக் கொண்டு விஷம் கலந்த பால் இருந்த சொம்பைத் தூக்கி வாசலில் எறிந்து விட்டு, பொண்ணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினாள்.  

“என் அருமை மகளே,  என் கண்மணியே, இனி ஒருநாளும் நான் இந்த முடிவை எடுக்க மாட்டேன். இது சத்தியம். இயற்கையான மரணம் என்னை அழைக்கும் வரை நான் சாக மாட்டேன். நீ என் மகள் இல்லை, என் தாய், என் குலதெய்வம். 

சரியான நேரத்தில் எனக்கு அறிவைப் புகட்டியவள். மடத்தனமாக நான் எடுக்க இருந்த முடிவை மாற்றிய குல விளக்கு நீ.  பிள்ளைகளை மறந்து என் நிம்மதிக்காகப் பெரிய தவறு செய்ய இருந்தேன். உன்னால் நான் என்னை உணர்ந்தேன் மகளே. கோழையாகப் பெரிய பிழை செய்ய இருந்த என்னை உன்னுடைய இந்த செயல் மாற்றிவிட்டது. 

சின்னப் பாப்பாவின் பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து, எங்களுக்கும் அந்த விஷத்தை கொடு என்று நீ நீட்டும் பொழுதே நான் செத்து விட்டேன் கண்ணே. என் மனதில் தோன்றிய அழுக்கும், சுயநலமும் மண்ணோடு மண்ணாகிப் போனது. இனி நான் உங்களுக்காக வாழப் போகிறேன். உங்களை நன்றாக வாழ வைக்கப் போகிறேன்” 

நாச்சம்மாவிற்கு கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் கொட்டியது. மனதில் இருந்த அழுத்தமான கல் உணர்வுகள் அடித்துக் கொண்டு போகும் அளவிற்கு ஒரே அழுகை. 

சாந்திப் பொண்ணும் கூட சேர்ந்து கொண்டாள்.  அருகே தரையில் படுத்திருந்த சின்னப் பாப்பா தவழ்ந்து வந்து தன் அன்னையின் மடியில் உட்கார்ந்து கொண்டது. இரண்டு பிள்ளைகளையும் வாரி அணைத்துக் கொண்ட நாச்சம்மாள் தந்தையுமானவளாகத் தன்னை உணர்ந்தாள்.

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

5 thoughts on “தந்தையுமானவள் (சிறுகதை) – ✍ வைரமணி, திருச்சி
 1. அருமையான பதிவு
  மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
  நன்றி திரு வைரமணி அவர்களே

 2. தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை என்பது ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் தோன்றிய புதிய இலக்கிய வடிவம். புதினம் புளியமரம் என்றால் சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி.
  வ.வே‌.சு ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்” என்னும் கதைதான் தமிழில் வெளியான முதல் சிறுகதையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
  தமிழின் முதல் சிறுகதையைப் படைத்த இவரைத் தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என அழைக்கின்றனர்.

  இன்று ஏராளமான எழுத்தாளர்கள் சிறுகதைகளைப் படைத்து வருகின்றனர். இக்கட்டுரையானது பொ.வைரமணி என்பார் எழுதிய “தந்தையுமானவள்” என்னும் சிறுகதையின் திறனாய்வாக விளங்கும்.
  ‘தந்தையுமானவள்’ சிறுகதையின் ஆசிரியர் பொ.வைரமணி அவர்கள் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி 1971 இல் சிவகங்கை மாவட்டம் கோட்டை நெடுவயல் கிராமத்தில், பழ . பொன்னுசாமி, சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  இவரது படைப்புகள் ,
  • தொடர்பு எல்லைக்கு வெளியே என்ற கவிதைத் தொகுப்பு
  •குயிலக்கா என்ற சிறுகதைத் தொகுப்பு .
  இவரது படைப்புகள் ஏதேனும் ஒரு சமூக பிரச்சனையை அடிநாதமாகக் கொண்டே படைக்கப்படும் என்பார் வடுவூர்.சிவ முரளி.
  சஹானா மின்னிதழ் வெளியிட்ட இவரது சிறுகதை சிறுகதை “தந்தையுமானவள்”.

  *குடி குடியைக் கெடுக்கும்* என்பதே இக்கதையின் உட்பொருளாக விளங்குகிறது.
  நம் அன்றாட வாழ்க்கையில் குடிப்பழக்கத்தால் அழிந்த பல குடும்பங்களையும் , அழியும் குடும்பங்களையும் காண்கிறோம். ஓர் குடும்பத் தலைவனின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட அலட்சியப் போக்கு அக்குடும்பத்தின் வறுமைக்குக் காரணமாக அமைகிறது. குடும்பப் பாரத்தைத் தாங்க கர்ப்பிணி பெண்ணான நாச்சம்மா பட்ட வேதனை இன்றைய பல பெண்களின் நிலையைக் காட்டுவதாக இருக்கிறது. அக்குடிப்பழக்கத்தால் குடும்பத்தின் இன்பம் மட்டுமன்றி குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
  இத்தகைய நிலையை
  ஒரு பெண்ணானவள் எவ்வாறு மனவுறுதியுடன் கடந்து வர வேண்டும் என்பதை நாச்சம்மாவின் கதாபாத்திரத்தின் வாயிலாக ஆசிரியர் உணர்த்த முயன்றுள்ளார்.

  சிறுகதையின் தொடக்கம் விறுவிறுப்பாக ஆவலைத் தூண்டுவதாக அமைந்தால்தான் வாசகர்கள் சலிப்படையாமல் கதையின் உள் பயணிப்பர்.
  பொதுவாகக் கதைப்பொருளுக்கும் கதைக் கருவிற்கும் ஏற்ற கதைத்தொடக்கம் அமையும் போது சிறுகதைகள் சிறக்கின்றன.
  அந்த வகையில் வைரமணி அவர்களின் “தந்தையுமானவள்” என்ற சிறுகதை முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே தொடங்குகிறது.
  “நாச்சம்மாவுக்கு நடுச்சாமமாகியும் தூக்கம் வரவில்லை. தூங்க முடியாத அளவிற்குத் துக்கம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது” என்று தொடக்கமே நாச்சம்மா யார், அவரின் துன்பநிலைக்குக் காரணம் என்ன என்று ஆவலைத் தூண்டும் வண்ணம் கதை நகர்ந்து செல்லும் பாங்கு அருமை.

  கதை நடுப்பகுதியில் இருந்து பின்நோக்கிச் சென்று நாச்சம்மாவின் துயரத்திற்கான காரணத்தைக் கூறுகிறது. கதை அப்படியாக வளர்ந்து நாச்சம்மா தற்கொலை முடிவு எடுக்கும் நிலையில் உச்சநிலை அடைந்து, சிறு குழந்தையின் மழலைச் சொற்களால் மனம் மாறித் தன் எண்ணத்தைக் கைவிடுவதாக முடிவு பெறுகிறது.

  கதாசிரியரே கதையைக் கூறுவதாக இச்சிறுகதை அமைந்துள்ளது.

  கதைக்குப் பெயரிடுதல் மிக முக்கியமான உத்தி . சில கதைகளின் பொருளை அவற்றின் தலைப்பின் மூலம் கண்டுகொள்ள இயலும். அதற்கேற்ப நாச்சம்மா தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதித் தாயாக மட்டும் இல்லாமல் தந்தையுமானவளாக வாழத் துணிவதைதீ
  “தந்தையுமானவள்” என்ற தலைப்பில் இருந்தே வெளிப்படையாக உணரலாம்.

  இக்கதையில் இடம்பெறும் சாந்தி பொண்ணு, சின்ன பாப்பாவின் நிலையிலுள்ள குழந்தைகளின் நடைமுறை வாழ்க்கைச் சிக்கலைச் சிந்திக்க வைப்பதாக இக்கதை முடிவடைகிறது.
  இக்கதை குடிப்பழக்கத்தின் தீமையை நெஞ்சில் பதியும்படி எடுத்துரைப்பதோடு, தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதையும் எடுத்துக்காட்டுவதாகச் சிறப்புடன் விளங்குகிறது.

 3. மிக்க நன்றி
  என்னுடைய தந்தையுமானவள் சிறுகதையைப் படித்து அதை திறனாய்வு செய்து மிக அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!