in ,

நிசப்தம் (சிறுகதை) – ✍ உமாதேவி வீராசாமி, மலேசியா

நிசப்தம்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 49)

“டேய் போண்டா, சீக்கிரம் கிளம்பி வாடா. இன்னைக்கு லம்பா ஒன்னு மாட்டிக்கிச்சி, ஸ்பெசல் எடிஷன்” கைபேசியில் சேகர் சொன்ன வார்த்தைகள் போண்டாவின் காதுகளில் அமிர்தமாய்க் பாய்ந்தன

கரும்பு தின்ன கைகூலி வேண்டுமா என்ன? தன் அறைக் கதவின் பின்னால் மாட்டியிருந்த கருப்பு டீ சர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். தலையைத் தன் கைகளால் லாவகமாகக் கோதி விட்டுக் கொண்டான்.

அறையை விட்டு வெளியேறும் முன், நிலைக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். நல்ல நிறம். குண்டு விழிகள். சிரித்தால் குழி விழும் கன்னங்கள். நேர்த்தியாய் அமைந்திருந்த பற்கள். தோள்பட்டை வரை வளர்ந்திருந்த முடி. ஆண்களுக்கே உரிய பரந்த மார்பு

“அழகுடா போண்டா” தன் வலது கை விரல்களைக் குவித்துத் தன் தாடையைத் தொட்டுக்  கொஞ்சலாய் ஆட்டி முத்தமிட்டுக் கொண்டான்.

பிறந்து முப்பது நாளில் தொட்டிலில் இட்டு உற்றார் உறவினர் கூடி வைத்த பெயர் புண்ணியமூர்த்தி. பத்து ஆண்டுகள் தவமாய்த் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை.

வீட்டிற்கு மூத்த பிள்ளையாய்ப் பிறப்பது எவ்வளவு பாக்கியம் என்பது போண்டாவைப் பார்த்தாலே தெரியும்.தலையில் வைத்துக் கொண்டாடினர் அவனைப் பெற்றவர்கள்.

செல்லத்திற்குச் சொல்லவே வேண்டாம். அவன் வார்த்தைக்கு மறுபேச்சு இல்லை அந்த வீட்டில். அவன் பிறந்து அடுத்த ஆண்டே அவன் தங்கை கயல்விழி பிறந்தாள். முயற்சி அப்பாவுடையது என்றாலும், யோகக்காரன் என வெற்றிகரமாய் முத்திரை பதித்தான் போண்டா

அதிகப்படியான அன்பினாலும் அக்கறையினாலும் ஊட்டி உட்டி வளர்க்கப்பட்டதன் பயனாய், ஐந்து வயதிலெல்லாம் உடுண்டு திரண்டு போனான். போண்டா மாதிரி இருக்கான்டா என பலரும் சொல்ல, அதுவே புண்ணியமூர்த்திக்குப் புனைப்பெயராய் அமைந்து போனது

வயது கூடக் கூட உடல் எடை அளவாய்க் குறைந்து, வசீகரம் பெருகி, அழகு மெருகேறி ஆண்களே பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு ஆணழகனாய் வலம் வந்தான் ‘போண்டா’ என்கிற புண்ணியமூர்த்தி

கயலும் அழகில் குறைந்து விடவில்லை. பெயருக்கேற்ப கயல் போன்ற விழிகள். கூர் மூக்கு, செவ்விதழ்கள். பச்சரிசிப் பற்கள். அடி உதட்டின் கீழே கருப்பு  மச்சம். அந்த மச்சம் அவளின் அழகைக் கூட்டிக் காட்டச் செய்த்து என்பதில் சந்தேகம் இல்லை.

இவர்களைப் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் அழகைக் கண்டு பெருமைப்படாத நாளில்லை.  உற்றார் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் அழகைப் பற்றி பேசும் போது, வெள்ளை உடையில் தேவதைகள் தங்களைச் சுற்றிப் பாட்டுப் பாடி ஆடுவதாய் உணர்ந்தார்கள்.

அந்தப் பெருமையும் மகிழ்ச்சியும் சில காலம் தான் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனது தான் பரிதாபம். குறிப்பாகப் புண்ணியமூர்த்தியின் வாழ்க்கை தடம் புரண்டு போகும் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஆறாம் ஆண்டு வரை அவன் வாழ்க்கை நேர்க்கோடாய்த் தான் போனது.அழகு பிள்ளை. அம்மா அப்பாவிற்கு அடங்கிய பிள்ளை. அன்பும் பண்பும் நிறைந்த பிள்ளை. அதட்டிப் பேசா அருமை பிள்ளை. ஊரும் உறவும் போற்றும் ஆண்பிள்ளை.

கல்வியில்  கொம்பன் என்று சொல்ல முடியாவிட்டாலும், முட்டாள் எனவும் ஒதுக்கி விடும் அளவிற்கு மோசமும் இல்லை. படிவம் ஒன்றில் அவனுக்கு ஏழரை தொடங்கியது. கூடாத சகவாசம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

கல்வி கசக்கத் தொடங்கியது. பள்ளிக்கு மட்டம் போட்டு ஊர் சுற்றித் திரிந்தவன், பின்னர் ஒவ்வொரு அரக்கனாய்த் தன்னுள் தஞ்சம் புகச் செய்தான். அரக்கர்களின் கூடாரமாய், அவலங்களின் இருப்பிடமாய் அவன் மனம் மாறத் தொடங்கியதைக் கண்டு, பெற்றெடுத்த உள்ளங்கள் பதறிப் போயின.

“டேய் போண்டா, ஏண்டா இப்படி எங்கள கஷ்டப்படுத்துற?”அம்மாவின் வருத்தம் அவனை ஒன்றும் செய்துவிடவில்லை.

“ம்மா, போண்டா போண்டானீங்க செம்ம கடுப்பாயிருவேன்” வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான்.

“சரி இனிமே அப்படி கூப்பிடல, மன்னிச்சிக்கோ. ஒழுங்கா படிடா, நல்லா படிச்சா வாழ்க்கையில நல்லா வரலாம் இல்லையா?” ஆதங்கம் அழுகையாய்  வெடித்தது.

“கேட்டுக் கேட்டுக் காதே வலிக்குது, முதல்ல இந்த மாதிரி அழுது சீன் போடறத நிப்பாட்டுங்க” அனல் பறக்கும் அவனது பெருமூச்சில் வெந்து போனது தாயின் உள்ளம். தன் அறையில் இருந்த தந்தை மௌன குருவானார். வாயைத் திறந்தால் அவமானம் நிச்சயம் என அவருக்கே தெரிந்தது.

ருபதை நெருங்கிய போது பெற்றோரின் கவலை வேறு விதமாய்த் திசை திரும்பியது.

“ஒரு வேலைக்குப் போயி சம்பாதிக்கிற வயசுடா. இன்னும் பொறுப்பில்லாம சுத்திகிட்டு இருக்கிற,” அடக்கப் பார்த்தும் வார்த்தை வெளியே வந்து கொட்டத் தொடங்கின. மகனை வெறித்துப் பார்த்தாள் தாய்.

“அப்ப என்ன தண்டச்சோறுன்னு சொல்லாம சொல்றீங்களா?” கோபத்தின் உச்சம் தாய்பிள்ளை பாசத்திற்கு வெகுவாய் வேட்டு வைத்தது. அன்றோடு நின்றது இருவருமிடையிலான பேச்சு வார்த்தை.

எதிர்பாரா விதமாய் ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலன் அவன் அப்பாவைக் அழைத்துக் கொள்ள, அவன் சுதந்திரச் சிட்டாய்ச் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தான். அவிழ்த்து விட்ட காளையாய் மேய்ப்பாரற்றுக் கிடந்தான்.

அவனைக்  ஆரத்தி காட்டி ஆறத்தழுவிக் கொண்டது  சேகரின் தலைமையிலான அறுந்தவால் கூட்டம். சேகரின் சிபாரிசில் கிடைத்த வேலையை ஒப்புக்கு செய்து வந்தான்.

சனி ஞாயிறுகளில் விடுமுறை. வீட்டில் சாப்பாடு. தனக்கும் தன்மானம் இருப்பதை நிரூபிக்கத் தவறவில்லை புண்ணியமூர்த்தி. மாதந்தோறும் சாப்பாட்டிற்கான பணத்தைத் தாயின் முகத்தில் விட்டெறிவான். அந்நேரம் ஆணவத்தின் உச்சியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்வான்.

மற்றபடி அவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் உறவென்று ஏதும் பெரிதாய் இல்லை.  ஒரே தங்கை கயல்விழியின் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை புண்ணியமூர்த்தி.

குடும்பம் தன்னை ஒதுக்குவதாய் நினைத்து தூரப் போனான். சேகர் மவனுக்குச் சகலமும் ஆனான். இதோ இன்று சேகரிடமிருந்து வந்த தூது போல் இதுவரை பல வந்திருக்கின்றன

மாவீரன் கணக்காய், காற்றாய்ப் பறக்கும் குதிரை மேல் ஏறி சவாரி செய்யும் பாணியில் தன் மோட்டாரை வேகமாய்ச் செலுத்தினான். 

சென்ற வாரம் கிடைத்த விருந்திலேயே திக்கு முக்காடிப் போனவன் இன்று அதையும் தாண்டிப் பெரிசாய் எதிர்பார்த்தான். ஒவ்வொரு முறையும் சேகரின் அழைப்பொலி இன்பத்தைத் தந்ததே தவிர, ஒருமுறை கூட ஏமாற்றம் தந்ததில்லை.

சென்ற வார வீடியோ,  குளியல் அறையில் கள்வனின் காமிரா ஒன்று தன்னைக் கண்காணிக்கிறது என்பதுகூட தெரியாமல் களைந்தவளை ரசித்தனர்

அதற்கு முந்தைய வாரம் கிடைத்தது அதை விட அற்புதம். கணவன் மனைவியின் அந்தரங்கத்தைக் கும்மிருட்டில் அணு அணுவாய் ரசித்தனர் 

வித விதமாய், ரகம் ரகமாய் எப்படியாவது வீடியோக்கள் கிடைத்து விடும் சேகருக்கு. தான் பெற்ற இன்பம் தன் நண்பனும் பெற வேண்டும் என எண்ணும் மகான் இந்தச் சேகர்

“டேய் போண்டா. நீ என் நண்பேன்டா. நான் இருக்குகிற வரைக்கும் உன்ன சந்தோசமா வச்சுக்குவேன்” என்றோ ஒரு நாள்  சேகர் சொன்னது கேட்டு, மெய் சிலிர்த்துப் போனான் புண்ணியமூர்த்தி.

“சேகரு, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எல்லாம் இருந்தும் நான் அனாதடா. நீ இல்லனா நான் என்ன ஆயிருப்பேன்னு தெரியலடா” பெருகி வந்த கண்ணீரைச், சட்டைக் காலரில் துடைத்துக் கொண்டான் புண்ணியமூர்த்தி.

எல்லாம் மின்னலாய் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. எது எப்படியோ இன்றைய விருந்திற்கு ஆளாய்ப் பறந்தது புண்ணியமூர்த்தியின் மனம். முகத்தில் சில்லென காற்று இதமாய் வருடிச் செல்ல மனத்தில் குதூகலம் கூடியதை அவன் உணரத் தவறவில்லை.

“போண்டா, வரப்பா நம்ம அயிட்டத்த எல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்திடு. இன்னைக்கு ஸ்பெசல் என்னன்னு நீ இங்க வந்ததும் சொல்றன்,” சேகரின் குரலில் தாண்டவமாடிய புத்துணர்ச்சியைப் புதுமையாய் உணர்ந்தான் புண்ணியமூர்த்தி.

இன்று அவனுக்குப் பெரிய விருந்து காத்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாய் நம்பினான். வரும் வழியில் கடை வரிசை முன் மோட்டாரை நிறுத்தினான். சீனனின் மதுக்கடை அவனை அன்பாய் அழைத்தது. வழக்கம் போல் சீனன் கடையில் நம்மவர் கூட்டம்.

சீனத் தவுக்கே பல்லிளித்து வரவேற்றான். விசுவாசமான வாடிக்கையாளருக்கு அந்தக் கடையில் சலுகைகள் உண்டு என்பதனைப் புண்ணியமூர்த்தி நன்றாய் அறிவான். ஓராண்டா ஈராண்டா. எத்தனை ஆண்டு நட்பு. கடையுள் நுழைந்தான் புண்ணியமூர்த்தி.

‘சிவாஸ் ரீகல்’ இரண்டை எடுத்துக் கொண்டான். மினரல் வாட்டர் பெரிய பாட்டில் ஒன்று. கடலை பேக்கட் கட்டாயம். வாங்கிய பொருளுக்குப் பணத்தைக் கட்டியவனுக்கு இலவசமாய் மற்றுமொரு கடலைப் பேக்கட் கிடைக்க ஏதோ சாதித்தவனாய் மோட்டாரை எடுத்தான்.

டுத்த பத்து நிமிடத்தில் அவர்களின் ரகசிய இடத்தை அடைந்தான். கட்டி முடிக்காத அந்தக் கடை வீடு, பல ஆண்டு காலமாய் அவர்களுக்கு அடைக்கலம் தந்து வருகிறது. மோட்டாரை மறைவாய் நிறுத்தினான். உள்ளே சென்றான்.

வண்ண வண்ண பலூன்கள் கொத்துக் கொத்தாய்க் கட்டப்பட்டிருந்தன. “என்றும் இல்லாத திருநாளாய் ஏன் இன்று இந்த அலங்காரம்? சேகர் எங்கே?”. மனத்தில் கேள்விகள் வரிசை கட்டி நின்றன.

“ஹப்பி பேர்த்டேய் ட்டூ யூ… ஹப்பி பேர்த்டேய் ட்டூ யூ… ஹப்பி பேர்த்டேய் ட்டூ மை டியர் போண்டா… ஹப்பி பேர்த்டேய் ட்டூ யூ” சேகரின் பிறந்தநாள் பாட்டு புண்ணியமூர்த்தியின் கண்களில் இரண்டாம் முறையாய்க் கண்ணீரை வரவழைத்தது.

சேகரைக் கட்டி அணைத்துக் கொண்டான். “தங்ஸ்டா,” ஒன்றை வார்த்தையில் அனைத்தையும் அடக்கினான்.

“போடா… தங்ஸ்சாம் தாங்ஸ்… உனக்குச் செய்யாம யாருக்குடா செய்யப் போறேன்?” செல்லமாய்க் கோபித்துக் கொண்டான் சேகர். சமாதானப்படுத்தினான் புண்ணியமூர்த்தி.

“இதெல்லாம் விட இன்னொன்னு உனக்குச் ஸ்பெசலாக் காத்திருக்குடா, கம் ஆன்” என உற்சாகமாய் அழைத்தான் சேகர்

இருட்டறை அவர்களை வழக்கம் போல் வரவேற்றது. வாங்கி வந்த அயிட்டங்களைச் சிமெண்டு தரை மேல் அடுக்கினான் புண்ணியமூர்த்தி

‘ஐ பேட்டை’ வெளியே எடுத்தான் சேகர். புண்ணியமூர்த்தியின் மனம் பரபரத்தது. நண்பனின் பிறந்தநாள் பரிசைக் காண ஆவல் பொங்கியது.

“போண்டா… இன்னைக்கு நான் சொன்ன மாதிரி ஸ்பெசல் வீடியோ இருக்கு. ஒன்னு இல்ல ரெண்டு வீடியோ பாக்குறோம். என்ஞோய் பண்றோம்,” வக்ர சிரிப்பு சேகரின் முகத்தில் பரவத் தொடங்கியது. புண்ணியமூர்த்தியின் கண்கள் விரியத் தொடங்கின.

“சும்மா பேசிகிட்டு இருக்காதடா. சீக்கரம் காட்டு,” ஆர்வம் அலைகடலெனத் திரளப் பேசினான் புண்ணியமூர்த்தி

முதல் வீடியோவில் நடுத்தர வயது மாதின் சல்லாபம். நல்ல குடும்பத்துப் பெண்ணாய்த் தெரியவில்லை. பிழைப்புக்காக உடலை விற்கும் ரகம் போல் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“என்னடா சேகர்… என்னமோ சொன்ன. சப்புன்னு போச்சி. இதுக்காடா இவ்வளவு அவசரமா வரச்சொன்ன” ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்தான் புண்ணியமூர்த்தி. சேகருக்கும் அதே ஏமாற்றம் இருந்ததால் அவனும் ஏதும் சொல்ல முடியாமல் மௌனித்துப் போனான்.

“நானும் இப்பத் தாண்டா பார்க்கிறன். ச்சே… ஏமாத்திட்டானுங்கடா,”  சுவரை ஓங்கிக் குத்தினான் சேகர்.

“சரி விடுடா. ரொம்ப பீலிங்கா இருக்கு. முதல்ல சரக்க அடிப்போம். அப்புறம் இன்னொன்ன பாக்கலாம்” விரக்தியின் எல்லையைத் தொட்டு  வந்தான் புண்ணியமூர்த்தி

இதுவரை கிடைத்த வீடியோக்கள் அவர்களை ஏமாற்றியது கிடையாது. ஒவ்வொன்றும் ஒரு வகை போதையை ஏற்றும். ஆனால், இன்று எல்லாம் தலைகீழாய்ப் போனது.

வீடியோ பார்க்கும் பழக்கம் இருவருக்கும் சமீபகாலமாய் ஒட்டிக் கொண்டது தான். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் சிபாரிசு செய்ய, சேகருக்குக் கஞ்சா கந்தனின் அறிமுகம் கிடைத்தது

ஊரைச் சுற்றுவதும் சரக்கை அடித்துப் போதை ஏற்றுவதுமாய் இருந்தவர்கள் பின்னர் கஞ்சா கந்தனின் மூலம் கிடைத்த வீடியோக்களுக்கு அடிமையாகத் தொடங்கினர்.

கஞ்சா கந்தன் இவர்களுக்குக் கடவுளாய்த் தோற்றமளிக்கத் தொடங்கினான். தான் பார்த்து ரசித்ததில் சிறந்ததைத் தெரிவு செய்து கொடுத்து ஒவ்வொரு வாரமும் திக்கு முக்காடச் செய்து விடுவான்.

சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிக்கிறார்களோ இல்லையோ, இந்த மயக்கத்தில் மூழ்கி முக்குளிக்கத் தொடங்கினர் இருவரும். ஆனால், இன்று போல் என்றும் அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. அதனாலேயே அதிகம் குடித்தனர். போதை தலைக்கேற உளறல்கள் அதிகமாயின.

“போண்டா, டேய் போண்டா….கவலப்படா…தடா. அடுத்த வீடியோ செம்மை….யா இருக்கும். என்ன நம்புடா”

“போடா…நல்…லா ஏமாத்திட்…டு,… பேசறா…ம் பாரு..”

“டேய்… இப்ப…டி பேசாதடா…தோ பாரு… இன்னொன்னு. செம்…மையா இருக்கும்,”

“பேச்..ச கொற…வீடியோ கா…ட்டு, வழ வழ கொழ கொழன்னு…டென்…ஷன் ஆவுது”

கைபேசியின் தட்டுத் தடுமாறி ‘தோர்ச்சை’ தட்டி வெளிச்சம் தேடினான் சேகர், அடுத்த விருந்தை படைக்கத் தயாரானான்.

‘ஐபேட்டின்’ வெளிச்சம் இருளைக் கொஞ்சம் கொஞ்சமாய் அகற்ற, சின்னஞ் சிறுசுகள். அரும்பு மீசை பையன். வயது இருபதைத் தாண்ட வாய்ப்பில்லை. ஒடிசலாய்ப் பெண். மஞ்சள் சுடிதாருக்குள் தன் அழகை மறைத்துக் கொண்டிருந்தாள். முகத்தைத் துப்பட்டாவால் மூடியிருந்தாள்.

விடலைப் பையன் முகம் வெளிறிக் கிடந்தது. காத்திருக்கப் பிடிக்கவில்லை புண்ணியமூர்திக்கு. பொறுமை இழந்தான்.

“சேகரு… கொஞ்..சம் வீடியோ…வை ‘போர்வர்ட்’ பண்ணுடா. ரொம்ப நேரம்லாம்  காத்திருக்க முடி…யாது. இன்னைக்…கு எதுவும் சரியா இல்ல” முணுமுணுக்கத் தொடங்கினான் புண்ணியமூர்த்தி.

“பொறுடா… ரெண்டும் புதுசு போல… மெது….வா… ஒவ்வொன்…னா.. பாக்கலாம்” சேகர் பெரும் இரசிகனாகக் காத்திருந்தான்.

அடுத்த நிமிடம் அவன் சொன்னது மெது மெதுவாய் நடக்கத் தொடங்கியது. சற்று முன் சுடிதாரில் இருந்தவள் மார்பளவில் துண்டைக் கட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பையனின் அருகில் நெருக்கமாய் அமர்ந்து கொண்டாள். குளியலறைக்குச் சென்று தன்னைத் தயார்ப்படுத்தி வந்திருக்கிறாள் என இருவருக்கும் புரிந்து போனது.

பையன் தோளில் அவள் சாய, அவள் முகத்தைத் தன் வலது கை விரலாள் தாங்கிப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி அவள் இதழில் அழுத்தி முத்தமிட்டான். புண்ணியமூர்த்திக்கு மண்டைக்குள் ஏதோ குடைந்தெடுத்தது. எங்கோ பார்த்த முகம், போதையில் மூளை மழுக்கியிருந்தது.

‘ஐபேட்டைக்’ வெடுக்கென கையில் எடுத்தான். வீடியோவை கொஞ்சம் போர்வெர்ட் செய்தான். முகம் தெளிவாய்த் தெரிந்தது. கீழுதட்டின் கீழ் அதே மச்சம், உடல் நடுங்கத் தொடங்கியது. போதைச் சட்டென இறங்கியது

உடலெல்லாம் கம்பளிப்பூச்சிகள் நெளிந்தன. ‘ஐபேட்டைத்’ தூர வீசினான். முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

நடப்பது என்னவென்று தெரியாமல் சுவரைப் பிடித்து மெதுவாய் எழுந்தான் சேகர். அடுத்த நொடி தடுமாறிக் கீழே விழுந்தான். அடுத்த முயற்சியில் வெற்றி பெற்றவன், புண்ணியமூர்த்தியை எட்டிப் பிடித்தான்

“டேய் போண்…டா… என்னடா பண்ற?” தோளைப் பிடித்துக் குலுக்கினான்.

“வேண்டாம்டா… பாக்க வேண்டாம். போயிடலாம் வா” சேகரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச் சென்றான் புண்ணியமூர்த்தி.

“ரெண்டும் புது…சா பிரஷ்…ஷா இருக்குங்கடா… மிஸ் பண்ணிடுவோம். ஐபேட்ட எடுடா… பாக்க…லாம்,” காமக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவனைத் தள்ளி விட்டான் புண்ணியமூர்த்தி

“டேய் போண்டா… இந்த மாதிரி ஃபிகரெல்லாம் நமக்குக் கெடைக்காதுடா. பாத்தாவது…” விடுவதாய் இல்லை சேகர்.

“ஃபிகருன்னு சொல்லாத சேகரு…” கத்தினான் புண்ணியமூர்த்தி.

“ஆமாம்…டா, ஃபிகர் இல்ல…. அயிட்டம். அயிட்டம்னு தான் சொல்லனும்,”

சொல்லி முடிப்பதற்குள் முகத்தில் விழுந்த பலத்த குத்தினால் தடுமாறிப் போனான் சேகர்.

“போண்டா… பைத்தியம்.. ஏன்டா என்ன குத்துன? இவளுங்க எல்லாம் நல்ல குடும்பதிலேந்து வந்திருக்க மாட்டாளுங்க.  இவளுங்கள பத்தி பேசனா உனக்கு ஏன்டா கோபம் வருது….”

ரத்தம் கொதித்தது புண்ணியமூர்த்திக்கு. தரையைத் துளாவினான். உடைந்த செங்கல் கையில் அகப்பட்டது. அடுத்த நொடி, சேகரின் அலறல் சத்தம் இரவின் நிசப்ததைக் கலைத்தது

வீடியோவில் பார்த்தது தன் வீட்டு பெண், அதுவும் தனக்கு பின் தன் தாய் வயிற்றில் உதித்தவள் என எப்படி சொல்வான் புண்ணியமூர்த்தி 

அடுத்த வீட்டு பெண்ணை ஆபாசமாய் பார்த்தவன், தன் வீட்டு பெண் என்றதும், கோபத்தில் உற்ற நண்பனை அடித்து சாய்த்து விட்டு, நிசப்தத்தில் ஆழ்ந்தான் அவன் 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மணி ஐயர் பிராம்ணாள் ஓட்டல் (சிறுகதை) – ✍ Dr. பாலசுப்ரமணியன், சென்னை

    மழைக்கால உணவுகள் By ராஜஸ்ரீ முரளி, சென்னை