சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 48)
“கொள்ளி போட மகன் வந்தாச்சா?” கூட்டத்தில் ஒருவர் வினவினார்
“இதோ என் மகன் முனியன் தான் கொள்ளி போடுவான்” என மணி ஐயர் கூற, உறவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது
“உன் மூத்த பிள்ளயாண்டான் எங்க இருக்கான்?. அவனை கூப்பிடு” என்றார் ஐயரின் மூத்த சகோதரன்
மஞ்சள் அப்பி, பெரிய குங்கும பொட்டுடன், சர்வமும் அடங்கி, சவமாய், கிடத்தபட்ட தன் அன்பு மனைவியின் முகம் பார்த்து, சிறு பிள்ளை போல் குலுங்கி குலுங்கி அழுதார் மணி ஐயர்
சிறிய சகோதரன் மெள்ள அவரை நெருங்கி, “அண்ணா, உங்களுக்குள் ஆயிரம் சண்டை மனஸ்தாபம் இருந்தாலும், அவன் மூத்த பிள்ளையோன்னோ. தாய்க்கு தல பிள்ளை தான கொள்ளி போடணும், அது தானே சாஸ்திர சம்ப்ரதாயம்” என்று சமாதானமாய் கூற, ஐயரின் விசும்பல் அதிகரித்து
“உங்க எல்லோரையும் சாஷ்டாங்கமா நமஸ்காரம் பணறேன். நல்லதனமா என் ஆத்துக்காரியை, அந்த வைகுண்ட பெருமாள்கிட்ட கொண்டு சேத்துடுங்கோ, வேரொண்ணும் என்கிட்ட பேசாதிங்கோ” என அழுவதை பார்த்து அனைவரும் அதோடு மெளனமாகி நின்றனர்.
சீதா பாட்டிக்கு மகனாய் இருந்து செய்ய வேண்டிய, அனைத்து ஐயமார் சடங்குகளையும் செய்து, தகன கிரியை முடித்து ஐயருடன் அழுதபடி வீடு வந்தான் முனியன்
சுற்றங்கள் அனைத்தும் போய் விட, ஐயரும் முனியனும், சீதா பாட்டி இல்லாமல் வெறிச்சோடிய, பாட்டிக்கு சீதனமாய் வந்த அந்த சிதிலமடைந்த ஒட்டு வீட்டில் தனித்து விடப்பட்டனர்.
இருவரும் காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. பானை தண்ணீர் குடித்து, திண்ணையில் சுருண்டான் முனியன். ஐயரும் விட்டத்தை பார்த்தபடி தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கினார்
“மணி ஐயர் பிராம்ணாள் ஓட்டல்” என்றால், அந்த மயிலாப்பூர் ஏரியாவிலே, கனப்ரஸித்தம்.
காலையில் இட்லி வடை போன்ற அனைத்து டிபன் வகைகளும் உண்டு.. சாப்பாடு கிடையாது..
அத்தோடு மாலையில், பஜ்ஜி போண்டா என்று ஆரம்பித்து இரவு 9மணி வரை டிபன் வகைகள் கிடைக்கும். சுவையான தரமான உணவு நியாயமான விலை.. இவையே ஐயரின் தாரக மந்திரம்.
காலையில் ஸ்பெஷல் வடை வகைகளும் , மாலையில் கேசரி போன்ற இனிப்பு வகைகளும் சுவையுடன் இருந்ததால், ஒரு உணவு ரசிப்போர் (ருசிப்போர்) பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார் மணி ஐயர்
ஐயருக்கு ஒரு பெண், ஒரு பையன். தன் அன்பு மொத்ததையும் அவர்கள் மேல் கொட்டி வளர்த்தார். சீதா பாட்டி அவருக்கு உறுதுணையாக ஓட்டல் நிர்வாகத்தில் உதவினார்.
மிகவும் மனம் ஒத்த, அந்யோன்யமான தம்பதியினர். ஓட்டலுக்கு வருவோரிடம், ஐயரின் அன்பான பேச்சும், சீதா பாட்டியின் கைப்பக்குவமும், அவர் தொழிலின் வெற்றிக்கு காரணமாயிற்று. பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தார். அவர்கள் செல்வ செழிப்பில் வளர்ந்தனர்
தனக்கு என்று எதையும் சேர்க்காமல், பிள்ளைகளின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு, பணத்தை வாரி இறைத்தார். அவர்கள் கேட்டது அனைத்தும் வாங்கி கொடுத்தார்.
மூத்த மகள் ராதாவை , கல்லூரி பேராசிரியையாக்கி, அமெரிக்கா மாப்ளயை தேடி கண்டுபிடித்து, தன் சக்திக்கும் மீறி, கடன் உடன் வாங்கி, நிறையவே வரதட்சணை கொடுத்து, தன் சொந்த செலவில் ஆடம்பரமாய், ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து கொடுத்தார்.
என்ன புண்ணியம், அவள் இரண்டு குழந்தைகள் பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகி அப்பன் ஆத்தாளை மறந்து போனது தான் மிச்சம்.
“அப்பா செல்லம்” என்ற போர்வையில் , ஐயரிடம் இருந்து எவ்வளவு கறக்க முடியுமோ, அத்தனையும் கறந்து கொண்டு பறந்து போய் விட்டாள் .
இன்றும், இது வேண்டும் அது வேண்டும் என்று ராதா அவள் அப்பாவிடம் கேட்பதை பார்த்து, சீதா பாட்டி “ஏன்னா, கொடுப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமோ? நமக்குன்னு கொஞ்சம் காசு சேர்த்து வைங்கன்னா, இல்லன்னா, கடைசி காலத்தல பிச்சை கேட்க வேண்டி வரும்” என்று கோபிக்க..
இவரோ “பெண் பிள்ளை சந்தோசமா வாழனண்டி. நமக்கென்ன தேவயிருக்கோ, அத பகவான் பாத்துக்குவான். நான் என்ன பண்றது, அப்படி பாசமா அவள வளர்த்துட்டேனே?” என்று மனைவியை சமாதானப்படுத்துவார்.
இப்பப்போ, அவளும் சரியா பேசறதில்ல, “என்ன வேலையோ, என்ன கஷ்டமோ, அவளுக்கு” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொள்வார்
சீதா பாட்டி, “என்ன உங்க சீமந்த புத்ரி உங்கள கண்டுக்கறதே இல்ல. டாட்டா காட்டிட்டாளா?” என்று கிண்டலடிக்கும் போது, விரக்தியில் விழி முட்டும் நீரை, மறைக்க பிரம்மபிரயத்தனம் செய்வார்.
இளையவன் ரங்கு, நல்ல புத்திசாலி, படிப்பாளி, இன்ஜினீரிங், எம்.பி.ஏ என்று அடுக்கடுக்காய், ஐயர் உழைப்பில் பட்டங்களை வாங்கி குவித்து, பன்னாட்டு கம்பெனியில், லட்சங்கள் சம்பளம் வாங்கும் பெரிய பதவியில் அமர்ந்ததும், சீதா பாட்டிக்கு பேரானந்தம்
“ஏன்னா, இனிமே நம்ம கஷ்டம் எல்லாம் போய்டும். ஓட்டல மொதல்ல இழுத்து மூடுங்கோ. எவ்ளோ நாள் தான் கஷ்ட படுவீர். பகவான் கண்ண தொரந்தூட்டான். அதல பாருங்க, என் மகன் எனக்கு, வைரத்தோடு வாங்கி தரேன்னு சொல்லி இருக்கானாக்கும்” என்று ஐயரிடம், மகன் பத்தி பெருமை பீத்திக் கொண்டாள்.
ஐயருக்கும், உள்ளுக்குள் சந்தோஷம் தான். ஆனால் பெருமாள் கண்விழிக்க மறுத்தது, பிறகு தான் இவர்களுக்கு தெரிந்தது.
ஆம்!…. ரங்கு, முழுசா முதல் மாத சம்பளம் வாங்குவதற்குள், தன்னுடன் பணிபுரியும் அழகான பணக்கார, தொழிலதிபரின் ஒரே மகளை, காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டு, மாமனார் வீட்டோடு மாப்பிள்ளையானான்
தாய் மனம் துடித்தது துவண்டது. அன்று போனவன் தான், துஷ்யந்தன் போல் அனைத்தும் மறந்து, மனைவியிடம் ஐக்கியமாகி போனான்.
மருமகளோ, இவர்களை கொடும் பகையாளி போல் பாவித்தாள். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்ததை கேள்விபட்டு, அழையா வீட்டுக்கு நுழையா சம்பந்தியாய், கடன் உடன் வாங்கி, பேரனுக்கு தங்க சங்கிலி, மோதிரம், ட்ரெஸ் போன்ற பரிசு பொருட்களுடன், நாமகரண விழாவுக்கு, ஆசை ஆசையாய் செல்ல, அவர்களை, யாரும் (பெற்ற மகன் உட்பட ) ‘வாங்க’ என்று கூட அழைக்கவில்லை. அவர்கள் மனம் துவண்டு துன்பித்து நின்றனர்
சீதா பாட்டி ஆர்வ கோளாறினால், யாரும் பார்க்காத சமயத்தில், தொட்டிலில் இருக்கும் பேரக்குழந்தையை ஆசையாய் தூக்கப் போய்… பதட்டத்தில் கை நழுவ, குழந்தை தொட்டிலில் விழுந்து, வீல் என்று அழுதது.
சீதா பாட்டியோ அச்சத்தில் வெலவெலத்து நிற்க, ஓடி வந்த மருமகள் கோபத்தின் உச்சத்தில் கண்டபடி தமிழிலும் ஆங்கிலத்திலும், கெட்ட வார்த்தைகளில் ஏசி, உறவினர் கூட்டத்தில், அவர்களை அவமானப்படுத்தினாள்
அருகிலிருந்த மகனோ அவள் செயலை ஆமோதிக்கும் விதத்தில் “இதனால் தான் உங்கள நான் எதுக்கும் கூப்பிடுவதே இல்ல, ஏன் இப்படி வந்து என் பிராணனை வாங்கரேள்” என்று முகத்தில் அமிலம் போன்ற வார்த்தைகள் வீசினான்
அழுது கொண்டே அந்த வயோதிக தம்பதிகள் அவமானத்தால் குன்றிப்போய், நடை பிணங்களாய் வீடு வந்து சேர்ந்தனர்.
#ads – Best Deals in Amazon 👇
முன்னை போல சக்தி இல்லாததால், ஐயரால் ஓட்டலை நிர்வகிக்க முடியாமல், தனக்கு சோறு போட்ட அந்த ஓட்டலை, மூடமனமின்றி இயலாமையால் மூடி விட்டார்.. பிள்ளைகளுக்காக வாங்கிய கடன் வேறு அவரை வாட்டியது
மனைவியின் உபதேசங்களின் அர்த்தம் இப்போது அவருக்கு ஸ்பஷ்டமாய் புரிந்தது
சீதா பாட்டி “ஏன் இப்பிடி இடிந்து உக்காந்துட்டேள்! பிள்ளைகள் போனா போறாள். அவா அவாளுக்கு.. அவா அவா வேலை.. இந்தாங்கோ கல்யாணத்துக்கு நீங்க போட்ட நெளிமோதிரம். அடகு வச்சி, நம்ம திண்ணையிலே ஒரு பட்சண கடை போடலாம் “என்று தேற்றி, மாலையில் பஜ்ஜி போண்டா போன்ற பலகார கடை போட்டு வயிற்றை கழுவினர்.
ஒருநாள் இரவு 9 மணி வாக்கில், கடை கட்டும் நேரம் ஒரு ஒல்லியான இளைஞ்சன் அவர்களிடம் வந்து “சாமி, நான் செய்யூரை சேர்ந்தவன். வசதியான குடும்பம்.. பணத்திமிரால் நான் சரியா படிக்கல. பங்காளிங்க, என் குடிகார அப்பனை ஏமாத்தி, சொத்தை எல்லாம் அநியாயமா அபகரிச்சுட்டாங்க. அந்த கவலையோட, என் கவலையும் சேர்ந்து தாங்க முடியாம எங்கப்பா, எங்கம்மா ரெண்டு பேரும், விஷம் குடிச்சி போய்ட்டாங்க. என்னையும் பங்காளிங்க ஊரை விட்டு தொரத்திட்டாங்க. ரொம்ப பசிக்குதுங்க சாமி.. எதாவது சாப்ட கொடுங்கய்யா” என்று கேட்க
பரிதாப்பட்ட அவர்கள், அவனுக்கு சுடுசோறும் வத்தகுழம்பும் செய்து, அன்போடு உணவு படைத்தனர். அவனும் வயிறார சாப்பிட்டு கிளம்பினான்
“யார் பெத்த புள்ளையோ..நல்லா இருக்கட்டும்” என்று சீதா பாட்டி வாழ்த்த, அலுமினிய கல்லா பேட்டி களவு போனது கண்டு ஐயர் ஆடிப் போனார்
களவாடி சென்ற அவனை திட்டக்கூட அவர் மனம் மறுத்தது. ஆனாலும் நாளை கடை போட, முதலுக்கு எங்கு அலைவது என அதே நெஞ்சம் சஞ்சலபட்டது.. பாட்டிக்கு சொல்லி அவளை துயரப்படுத்த விரும்பாத ஐயர், சாப்பிடாமலேயே படுத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் இரண்டு போலீசார் ஐயரை கூப்பிட்டு, “இன்னா ஐயரே எப்பிடி இருக்கீங்க? இவன், உங்களுக்கு தெரியுமா, சந்தேக கேஸ்ல புடிச்சோம் ஐயரே.. உங்க பணப் பெட்டியா இது?” என வினவ
ஐயர் முனியன் முகம் பார்த்து, என்ன நினைத்தாரோ “இவன் திருடலிங்க ஐயா, என்கிட்டே வேல செய்ற பையன். நான்தான் பணப் பெட்டியை கொடுத்து, நாளைக்கு வேண்டிய சாமான்கள் வாங்கி வர அனுப்பிச்சேன் ” என்றார்.
காவலரோ “இவனை காப்பாத்தறதுக்கு ஏதோ பொய் சொல்றீங்க. டேய் பார்டா அவுர் நல்ல மனச” என்று கூறி அவனை விட்டு சென்றனர்
ஐயர் “ஏதோ அவசர பணத்தேவைக்கு எடுத்தூண்டுட்ட, போட்டம் போ. இத வச்சி ஏதோ வியாபாரம் பண்ணி பொழச்சிக்கோ” என்று ஆதங்கத்துடன் கூறி உள்ளே சென்று கதவை பூட்டிக் கொள்ள, பாட்டியோ பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள்.
மறுநாள் காலை, ஐயர் அவன், பெட்டியுடன் திண்ணையில் தூங்காது அழுது கொண்டு இருப்பதை பார்த்து, “என்னடாப்பா, நீ இன்னும் போகலியா?” எனக் கேட்டார்
அவனோ ஐயர் காலில் விழுந்து, எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருந்தான். ஐயர் கண்ணும் கலங்கியது
பாட்டியோ, “அவன உள்ள அழைச்சிண்டு வாங்கோ” என்றாள்
அன்றிலிருந்து, முனியன் அவர்களுக்காக மாடாய் உழைத்தான். ஐயர் காலால் இட்ட வேலையை தலையால் செய்தான். பாட்டிக்கு தெரியாமல் ஐயருக்கு பில்டர் வில்ஸ் வாங்கித் தருவதிலிருந்து, சீதா பாட்டிக்கு, காலமுக்கி, விக்ஸ் தைலம் தேய்ப்பது வரை அனைத்து சிஸ்ருஷைகளும் அன்போடு செய்தான்
அவனை பாட்டி தன் சொந்த பிள்ளை போலவும், ஐயர் உற்ற நண்பனை போலவும் பாவிக்க தொடங்கினர்..
பாட்டி “உனக்கு சீக்கிரம் ஒரு கால்கட்டு போடணும்.. நீ எனக்கு பேரன் பேத்தி பெத்து தரணும், அதுகளோட நான் கொஞ்சணும்” என்று ஆதங்கத்துடன் கூறுவாள், .
அவனோ “போங்க ஆத்தா.. உங்களுக்கு வேற வேல இல்ல” என்று சிரித்தபடி நகர்வான்
ஐயரும் அவனுக்கு வரன் பாக்க தொடங்கினார்… கடை வியாபாரம் பெருகியது. அவர்கள் பசியாற உண்டு உடுத்தி மகிழ்ந்தனர்
இவ்வாறு சில பல மாதங்கள், மகிழ்வுடன் நகர.. திடீரென்று ஒருநாள் பாட்டிக்கு காய்ச்சல் கண்டு படுத்து விட்டாள்.. ஏதேதோ வைத்தியம் பார்த்தும், காய்ச்சல் குறைய வில்லை..
பாட்டி படுத்த படுக்கையாக, ஐயர் இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.. பட்சண கடை போடுவது நின்றுபோக, மீண்டும் வறுமை சூழ.. முனியன் கூலி வேலைக்கு சென்று, அந்த முதியோர்களை கண் போல் வைத்து காத்தான்
ஒருநாள் பாட்டி மூச்சிரைக்க அவனிடம், “கண்ணா ,நீ நல்லா இருப்படா ! நான் செத்துட்டேன்னா, நீதாண்டா எனக்கு கொள்ளி போட்டு இறுதி கிரியை செய்யணும்.. செய்வியாடா கண்ணா?” என்று கெஞ்சும் குரலில் மன்றாட..
முனியன் பொய்க் கோபத்துடன், அவள் வாயை பொத்தி அழுகையுடன் “அப்டிலாம் பேசாதீங்க ஆத்தா, நீங்க நல்லா ஆயுடுவிங்க ஆத்தா. நீங்க நல்லாயிட்டா, கத்தி மேல நடந்து நெருப்பு மிதிக்கறதா, எங்க ஊரு கோட்ட முனீஸ்வரனுக்கு பிரார்த்தனை பண்ணி இருக்ககேன் ஆத்தா. அவர் நம்பள கைவுட மாட்டார் ஆத்தா” என்று ஆறுதல் கூற, ஐயர் பித்து பிடித்தவர் போல் அழுது கொண்டிருந்தார்
ரங்குவை அவன் வீட்டுக்கு சென்று பலமுறை முனியன் பார்க்க முயன்றும், அவன் மனைவி அனுமதிக்கவே இல்லை. மனைவி இனி பிழைக்க மாட்டாள் என தெரிந்து, ஐயரும் மகன் வீட்டுக்கு, அவனை அழைக்க சென்றார். அவரையும் மருமகள் திட்டி அனுப்பி விட்டாள்
செல்ல மகளோ, “இப்போ அவருக்கு ஆடிட் பீரியட், இப்போல்லாம், அமெரிக்கால முன்ன மாறி இல்லப்பா, ஈஸியா விசா கொடுக்க மாட்டேங்கிறாள். இரண்டு குழந்தைகளுக்கும் பரீட்சை வேற நடந்துண்டுருக்கு. எனக்கும் பீரியட்ஸ் ப்ராப்ளம். அப்பா, நான் வந்து அம்மாவ எழுப்பி ஒக்கார வைக்க போறானோ..? இல்லீயேப்பா.
அந்த கடன்காரன் ரங்கு நன்னாவே இருக்க மாட்டான். என் நாத்தி, நாசமாப் போக. கிட்ட இருந்துண்டே, இப்படி அநியாயம் பண்றாளே. அவளுக்கு பெருமாள் தான் கூலி கொடுக்கணும்.. நீங்க உங்க உடம்ப நன்னா பாத்துக்கோங்கப்பா” என்று தம்பியை வசைபாடி, தான் தப்பித்து ஏமாளி அப்பாவிடம் நல்ல பேர் எடுக்க முயன்றாள்
ஐயரோ.. ‘அனைத்தும் கிரிஷ்னார்ப்ணம்’ என்று கண்ணனிடம் கண்ணீர் விட்டார்
ஓரிரு நாட்களில் கோட்டை முனீஸ்வரர் கைவிட்டு விட, பாட்டி பரமபதம் அடைந்தாள்.. முனியனோ, கோட்டை முனீஸ்வரரை திட்டி தீர்த்து அழுது புரண்டான்
இந்த அனைத்து நினைவுகளும் நெஞ்சத்தில் நிழலாட தூக்கமின்றி புரண்டார் ஐயர்
என்ன நினைத்தாரோ, திடீரென்று எழுந்து, திண்ணையில் கேவி கேவி அழுது கொண்டிருந்த முனியனிடம் சென்று, அவனை ஆரத்தழுவிக் கொண்டு, “இந்த நண்பனின் உயிருள்ள வரை, எனை பிரியாமல் இருப்பாயா கண்ணா? எனக்கும் கொள்ளி போட்டு ஈமக்கிரியை செய்வாயா கண்ணா?” என்று ஐயர் கெஞ்ச, அவர் கண்களுக்கு முனியன் கண்ணனாகி காட்சி தந்தான்
அவர் கைகளை இறுக பற்றினான் முனியன். அதில் ஆயிரம் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் பொதிந்திருந்தன
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads – Best Deals in Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்