in

நிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார்

நிலவில்லா வானம் (சிறுகதை)

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

நிலா – பனிரெண்டாவது வகுப்பு, முதல் குரூப்பில் படிக்கும் பெண்

சிவப்பான சருமம், சுருண்ட கேசம், சற்றே பூனைக் கண்கள், பூசினாற் போன்ற தேகம், செதுக்கிய நாசி. மொத்தத்தில்  பெயருக்கேற்ற அழகானப் பெண்

‘மிக அழகான’ என்பது இன்னும் பொருந்தும். டாக்டராவது நிலாவின் கனவு மற்றும் லட்சியம்

ஒரு நாள் கூட பள்ளிக்கு லீவ் போடாமல் போய் அதற்கான சான்றிதழும் பாராட்டும் பெறுவாள் 

 வழமை போல் நேரமே  பள்ளிக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்

“அம்மா லஞ்ச் பேக் ரெடியா?” என நிலா தன் அம்மாவிடம் கேட்க

“இருடி பேக் பண்ணிட்டேன். வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்துக்க” என்றாள் காயத்ரி, நிலாவின் அம்மா

மகள் தான் உலகம் என்றிருப்பவள். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ப்ரோக்ராமராக இருந்தவள், மகள் பிறந்ததும் வேலையை துறந்தாள்

ஒரே மகள் என்பதால், பெண்ணுக்கு அதிகம் செல்லம் குடுக்க கூடாதென கண்டிப்பாக இருப்பதாக நடிப்பவள்

“வேன் வரப் போகுது” என காயத்ரி துரிதப்படுத்த

“வந்தா நிப்பான் இரும்மா” என்றார் நிலாவின் அப்பா ரமேஷ்

ரமேஷ், பேங்க் மேனேஜர். ஆபீஸ் விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஆபிஸ் என்றிருப்பவன்

தினமும் பெண்ணிடம் சற்று நேரம் அரட்டை அடித்தால் தான் அவனுக்கு திருப்தி

“அவள கட்டிக் கொடுத்தப்புறம் என்ன செய்வீங்க” என கேலி செய்வாள் காயத்ரி

“வீட்டோட மாமனாரா நானும் போய்டுவேன்” என்பான் ரமேஷ்

திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து, ஏகப்பட்ட வேண்டுதலுக்குப் பின் பிறந்தவள் என்பதால், நிலாவுக்கு அதிக செல்லம்

லேட்டாக பிறந்தாலும் தேவதையை மகளாக பெற்றதாய்  பூரிப்பவன் ரமேஷ்

வாசலில் வேன் வந்து நின்று ஹாரன் அடிக்க, வேகமாக ஓடினாள் நிலா

அதே நேரம் படபடவென்ற சத்தத்துடன் வீதி அதிர கடந்து சென்றது ஒரு யமகா

“ஹாய் நிலா, என்னடி இருட்டா இருக்கே” என வேன் ஜன்னலில் இருந்து வரவேற்றாள் அவள் தோழி வர்ஷா

“எனக்கு ஏம்ப்பா நிலானு பேர் வச்சீங்க, என் பிரென்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்க” என்றாள் நிலா ஒருநாள் அவள் தந்தையிடம்

“உனக்கு ரோஜா அல்லது நிலானு பேர் செலக்ட் பண்ணிருந்தோம்.  நீ நிலா வெளிச்சமுள்ள அழகான இரவு நேரத்துல பொறந்தனால நிலானு வச்சோம்” என்றார் ரமேஷ் பெருமையுடன்

“அன்னைக்கு அமாவாசையா இருந்திருந்தா என்ன பண்ணயிருப்பீங்க?” என மகள் மடக்க

“தென்றல்னு வச்சிருப்போம்” என ரமேஷ் சிரித்துக் கொண்டே கூற

“போச்சுடா… அதுக்கு நிலாவே பரவாயில்ல” என சலித்துக் கொண்டாள் நிலா

தோழியின் கேலிக்கு பதிலாய், “சொல்லுடி பூஸ்ட்டு” என்றாள் நிலா. 

வர்ஷா சற்று குண்டாக இருப்பாள். இருவரும் இணைபிரியா  தோழிகள், ஐந்தாவதிலிருந்து ஒன்றாக  படிப்பவர்கள்

“மேத்ஸ் டெஸ்டுக்கு படிச்சிட்டியா?” என வர்ஷா கேட்க

“படிச்சிட்டேண்டி” என்றாள் நிலா

“நீட் கோச்சிங் போய்க்கிட்டு எப்புடிடீ டைம் கிடைக்குது உனக்கு?”

“என்ன பண்றது, இல்லன்னா மார்க் வாங்க முடியாதே”

“நீ டாக்டராகிட்டா எனக்கு ப்ரீயா வைத்தியம் பாப்ப தான”

“நீயும் ஆகிடு”

“வேண்டாம்ப்பா, இப்படி கஷ்டப்பட்டு டாக்டராகறதுக்கு பதிலா பேசாம நான் ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என சிரித்தாள் வர்ஷா 

தே நேரம் தெருவின் முனையிலிருந்த ‘பைக் உலகம்’ கடையில் பைக் சத்தம் கம்மியா இருக்குனு கவலை பட்டுக் கொண்டிருந்தான் ராகுல்

ராகுல் – பன்னிரெண்டாவது மாணவன். அப்பா அம்மா இருவரும் கிளாஸ் ஒன் ஆபிசர்ஸ். அளவில்லா சொத்து. அளவில்லா பாசம். பைக் ஓட்டுவது முதல் வேலை, படிப்பது கடைசி வேலை 

இரவில் ஓ.எம்ஆர் சாலையில் ரேஸில் கலந்துக் கொண்டு பேய்த்தனமாக ஓட்ட யமகா எம்.டி15,  பகலில் தெருவை அதிர வைத்து கொண்டு ஓட்ட யமகா பெய்சர்.

அடுத்து எந்த பைக் வாங்குவதென்பது மற்றொரு கவலை, இப்போது சைலென்சர் கவலை

“ஏன் சத்தம் கம்மியா இருக்கு” என ராகுல் கவலையுடன் கேட்க 

“இருங்க தம்பி. மப்ளர கொஞ்சம் ட்யூன் பண்றேன். அடுத்த வாரம் பெய்சருக்குனு தனி எக்ஸ்சாஸ்ட் பைப் வருது, அத போட்ருலாம்” என்றார் மெக்கானிக்   

“இதனால ஸ்பீட் ஒண்ணும் கொறையாதில்லை?” எனக் கேட்டான் ராகுல், அவன் கவலை அவனுக்கு 

“இல்ல கொறையாது” என உத்திரவாதம் தந்தார் மெக்கானிக் 

“சரி, எதுவும் பிரச்சனையிருந்தா சாயங்காலம் வர்றேன்” என வண்டியில் சீறிக் கிளம்பினான் ராகுல்

#ad

             

         

நிலாவும், வர்ஷாவும் வகுப்பில் நுழைந்து மூன்றாவது பெஞ்சில் அமர்ந்தனர்

“குளிப்பிச்சு குளிப்பிச்சு குஞ்சனை கண்டில்லானு சொன்னா மலையாளத்துல என்ன அர்த்தம் தெரியுமா” என வர்ஷா கேலி செய்ய 

“போடி எரும” என செல்லமாய் தோழியை திட்டினாள் நிலா 

“நீ நினைப்பது இல்லடி, குளிப்பாட்டி. குளிப்பாட்டி குழந்தையை காணோம்னு அர்த்தம் பக்கி” என இன்னும் அதிகமாக சிரித்தாள் வர்ஷா

பையாலஜி மேடம் வகுப்பில் நுழைந்ததும் லொக் லொக்கென்று இருமி விட்டு, “ஸ்டெர்ணம், கோஸ்டல் கார்டிலேஜ்” என மார்பு எலும்புகளை பற்றி பேசத் தொடங்க

“மாஸ்டர் ட்ரைலர் பார்த்தியா?” என்றாள் வர்ஷா மெல்லிய குரலில் 

“இல்லடி, எப்படி இருக்கு”

“மாஸ்… இந்த சரோஜா தேவி பாடத்த நடத்திட்டு போகட்டும், போன்ல காட்றேன்” என்ற வர்ஷா,  போன் ஒன்றை எப்போதும் ஒளித்து சைலன்ட் மோடில் வைத்திருப்பாள்

பைக்கை ஸ்கூலின் வெளியே பார்க் செய்து விட்டு, வாயிலிருந்த பானின் மிச்சத்தை துப்பிவிட்டு, சின்ன பேக்குடன் வகுப்புக்குள் நுழைந்தான் ராகுல்

“மறுபடியும் லேட்டா? போய் உட்கார்” என்றார் டீச்சர். உள்ளே சென்று  வினோத்தின்  அருகில் அமர்ந்தான் ராகுல்

“ஏண்டா லேட்டு?” என்ற நண்பனின் கேள்விக்கு 

“பைக்ல சத்தம் கம்மியா வருதுடா, அதான் மெக்கானிக்கிட்ட போயிருந்தேன்” என்றான் ராகுல் 

#ad

              

                  

ஞ்ச் பிரேக்கில் பயாலஜி ஆசிரியை அளித்த வீட்டுப்பாடத்தை  நிலா செய்து கொண்டிருக்க, அரட்டை அடித்து கொண்டிருந்தாள்  வர்ஷா

“எப்ப தாண்டி கேப் விடுவ? ஸ்கூலுக்கு கட் அடிக்கறது தான் பின்னாளில் ஞாபகம் இருக்கும், மார்க் இருக்காதுனு அப்துல் கலாமே சொல்லிருக்கார்” என வர்ஷா கேலி செய்ய 

“MBBS, MS, ரெண்டு டிப்ளமோ கோர்ஸ் எல்லாம் படிச்சு முடிச்சதும் ஜாலியா இருப்பேன்” என சிரித்தாள் நிலா 

“அதுக்குள்ள நீ பாட்டி ஆயிடுவ” என பல்லை கடித்தாள் வர்ஷா 

ள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற நிலா, சிற்றுண்டியை உண்ட கையோடு நீட் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறப்பு வகுப்புக்கு புறப்பட்டாள்

“பார்த்து போயிட்டு வாடி” என்றார் நிலாவின் அன்னை காயத்ரி

நீட் தேர்வுக்கு வகுப்புகள் நடத்தும் ‘ஆகாஷ் கோச்சிங் சென்டர்’ பக்கத்து தெருவில் இருக்க, வேகமாக நடக்கத் தொடங்கினாள் நிலா

ராகுல் மீண்டும் மெக்கானிக் ஷாப்பில் பேசிக் கொண்டிருந்தான்.

“பிக்கப் கம்மியா இருக்கு, யமஹா வண்டின்னா சீற வேண்டாமா? ஹெட்லைட் இன்னும் பிரைட்டா வேணும்” என்றான் புலம்பலாய்

“செனான் பல்ப் போட்டுடலாம் தம்பி, செம பிரைட்டா இருக்கும்” என்றார் மெக்கானிக் 

மணி எட்டை தாண்டியிருந்தது. வண்டிய முழுதும் சரி செய்ததும் பைக்கில் ஏறி அமர்ந்தான்  ராகுல்

இருட்டு முழுவதும் நிரம்பியிருக்க, ஒரு தெருவிளக்கு மெலிதாக இருட்டை விரட்ட போராடிக் கொண்டிருந்தது

பான்பாக்கெட்டை கிழித்து வாயினுள் கொட்ட, ஜிவ்வென்று ஏற, பைக்கை ஸ்டார்ட் செய்து படபடவென்ற சத்தத்துடன் சீறிக் பாய்ந்தான் ராகுல் 

அடுத்த பத்தாவது நொடி பைக் நூறைத் தொட, லாவகமாக உடலை வளைத்து திருப்பத்தில் திரும்பினான்

கோச்சிங் சென்டரை விட்டு வெளியே வந்து தோழிகளிடம் விடைபெற்று வேகமாக நடக்கத் தொடங்கினாள் நிலா 

மறுநாள் பள்ளியில் கணக்கு பரீட்சை இருந்தது. கோச்சிங் சென்டரில் நீட் பரீட்சைக்கான மாதிரி தேர்வு, வரும் ஞாயிறு அன்று இருப்பதாக அறிவித்திருந்தனர். இரண்டுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என எண்ணியபடியே ரோட்டின் குறுக்கே இருபுறமும் பார்த்துவிட்டு நடக்க தொடங்கிய போது தான், அந்த விபரீதம் நிகழ்ந்தது 

அசுர வேகத்துடன் ஒரு வண்டி இரண்டு ஹெட்லைட்டுகளுடன் அவளை நோக்கி வர, கண்கள் கூசி ஓடவா, நிற்கவா என பதைத்து அப்படியே நின்று விட்டாள் நிலா

வெகுவேகமாக திருப்பத்தில் திரும்பிய ராகுல், ரோட்டின் குறுக்கே அந்த பெண்ணை சற்றும் எதிர்பார்க்கவில்லை ராகுல் 

200 கிலோ எடையுள்ள அந்த பைக் 110 கிலோ மீட்டர் வேகத்தில் நிலாவின் நெஞ்சில் மோதியது. மோதிய வேகத்தில் நிலா தூக்கியெறியப்பட, வண்டியுடன் சாய்ந்து சறுக்கிக் கொண்டு சென்றான் ராகுல்

மோதிய வேகத்தில் நிலாவின் ஸ்டெர்ணம், கோஸ்டல் கார்டிலேஜ் என அனைத்து நெஞ்செலும்புகளும் நொறுங்கி இதயத்தின் பெரிகார்டியத்தை துளைத்துச்  சென்றது

கீழே விழுந்த நிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வலி, பயம் எதுவுமில்லாமல் ஒரு நிர்மலமான நிலை. எழ முயற்சி செய்தாள், முடியவில்லை

கையை சற்று உயர்த்த முடிந்தது. தன் அருகே வந்து குனிந்து பார்த்தவனின் நெற்றியில் ரத்தத்துடன் காயம் கண்டதும், “அடப்பாவமே” என நினைத்தாள் நிலா 

“உன் நெத்தியில் ரத்தம்” என சொல்ல முயற்சித்த நிலாவின் வாயிலிருந்து குருதி வழிந்தது

மெதுவாக நினைவுத் தப்ப தொடங்கிய தருணத்தில் அவள் மனதில் இறுதியாய் தோன்றியது, “மேத்ஸ் டெஸ்ட், நீட் மாடல் எக்ஸாம் வேற இருக்கே, எப்ப வீட்டுக்கு போய் எப்ப  படிக்கிறது” என்பது தான் 

பயந்த ராகுல் தன் தந்தைக்கு அழைக்க, “பயப்படாத, மொதல்ல பைக்க எடுத்துட்டு அங்கிருந்து கெளம்பி வா, அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார் பதட்டமாய் 

“எங்க நிலாவ இன்னும் காணோம்” என நிலாவின் தந்தை ரமேஷ் கவலைப்படத் தொடங்கினான்

தன் வானில் இனி நிலா என்றும் வரப்போவதில்லை என்பது அந்த தந்தைக்கு தெரிந்திருக்கவில்லை 

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

 1. கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்!

  தலைப்பு ப்ளஸ் பைக் பார்ட் வந்ததுமே முடிவு யூகிக்க முடிந்துவிட்டது அந்த பைக் தான் நிலாவை மங்கச் செய்யப்போகிறது என்று காலையில் தோழியின் வசனம் மங்கியிருக்க என்பது, பயாலஜி டீச்சர் பாடம் எடுத்தார் என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம் ஆனால் அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது அது எங்கேயோ லிங்க் ஆகப் போகிறது என்று யோசிக்க…அது விபத்தோடு !

  வாழ்த்துகள்!

  கீதா

 2. சோகமான முடிவு. ஏற்கெனவே இந்தக் கொரோனா பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கு. இப்போ இப்படி வேறேயா? (

 3. பொறுப்பில்லாத பையன் ஒரு நல்ல குழந்தையை காவு வாங்கிய விட்டு சுலபமாக தப்பிப்பதா? கதையிலாவது தண்டனை கிடைக்க வேண்டாமா?
  சரளமான நடைக்கு பாராட்டுகள்!

Dates Banana Smoothie & Ice Cream Milkshake Recipe Video – By Adhi Venkat

சிறுவன்  P.G. பிரணவ்  காவடி ஆட்டம் வீடியோ