sahanamag.com
தொடர்கதைகள்

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 16) -✍ விபா விஷா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

தித்யனின் வரலாற்றுக் குறிப்பில் அருஞ்சுனையனுக்கு எதிராக இருப்பவனாக சித்தரிக்கப்பட்டிருந்தான் அநங்கன். அதாவது இன்றைய ஆனந்தன்

“ஆனால் அருஞ்சுனையனின் தோல்விக்கு அநங்கன் காரணமல்ல” என்று யாதவ் கூறவும், அனைவரும் குழப்பமாய் அவனை பார்த்தனர் 

“அண்ணா… நீ என்ன தான் சொல்லற? தயவு செஞ்சு கொஞ்சம் சொல்றத புரியற மாதிரி விளக்கமா சொல்லு?” என்று சார்விக் கேட்க 

இந்தப் பிரச்சனை, சொல்லாமல் தீராது என்பதை உணர்ந்த யாதவ், ஜானவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, சரித்திரத்தின் எஞ்சியிருந்த பக்கங்களை விவரிக்கலானான்.

“இதுவரைக்கும் மாதுரி சொன்னது உண்மை தான், ஆனா இதுக்கு இடையில நடந்த சில விஷயங்கள் அப்பவே யாருக்கும் தெரியாததால அது இந்தக் குறிப்புல இருக்காது. அதையும் நான் முழுசா சொன்னா தான் உங்களுக்கும் இந்தப் பிரச்னையை சரியா விளங்கிக்க முடியும்.

அது என்னன்னா… அருஞ்சுனையன் பல போர்கள்ல வெற்றி பெற்றதுக்கு முக்கியக் காரணம், அவனோட போர் தந்திரம். அதோட, அவன் முதன்மந்திரியோட புத்திசாலித்தனமான ஆலோசனைகள், அவன் படைத்தளபதியுடைய பலமான போர் பயிற்சி, அவன் தம்பி உதயசேனன் அவனுக்கு இன்னொரு கையா உதவி புரிஞ்சதுனு பல காரணங்கள் சொல்லலாம்.

ஆனா, அதுல யாருக்கும் தெரியாம அதிமுக்கிய பங்கு வகிச்சது அவனுடைய மனமாக, மூளையாகச் செயல்பட்ட தமிழினி” என்றவன், இந்தப் பிரச்சனைக்குள் தமிழினியான ஜானவி எப்படி வந்தாள் என்பதைக் கூற ஆரம்பித்தான் யாதவ்.

அருஞ்சுனையனுக்கு மாறுவேடம் புனைந்து நகர்வலம் செல்வதில் எப்பொழுதும் அதிக விருப்பம் இருந்தது. ஏனென்றால் அப்பொழுது தான் அவன் அரசனென்ற பகட்டைத் துறந்து, சிறையிலிருந்து விடுபட்ட பறவை சிறகு விரித்துப் பறப்பது போல, நிம்மதியாக உணர்வான்.

அப்படி நகர்வலம் சென்று சாதாரண மனிதர்களுடன் உரையாடும் பொழுது தான் அவனுக்கு நன்றாக மூச்சு விட முடிவதை போலிருக்கும். அது மட்டுமின்றித் தனது ஆட்சியின் நிறை குறைகளைத் தனது குடிகளின் வாய்மொழியாக அறிந்து, அதற்குத் தகுந்தவாறு நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நகர்வலம் முதன்மையாக உதவியது 

அன்றும் அது போலவே அருஞ்சுனையனும், உதயசேனனும் மாடு மேய்ப்பவர்களாக வேடமிட்டு தலைநகரை சுற்றி வந்து கொண்டிருக்க, ஓரிடத்தில் ஒரு பெரும் கூட்டமொன்று கூடியிருப்பதைக் கண்டார்கள்.

உடனே இருவரும் அந்தக் கூட்டத்தினை விலக்கி சென்று பார்க்க, ஒரு இளவயது பெண், நெடிந்துயர்ந்த மாமிச மலையைப் போலிருந்த ஒருவனை ,”நீயெல்லாம் மனிதப் பிறவியா? உனக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? இந்தச் சின்னஞ்சிறு சிசுவை இப்படி ரத்தம் சிந்துமளவுக்கு அடித்திருக்கிறாயே ? அவன் உன் மகன் தானே? உனக்கெல்லாம் எதற்குக் குழந்தை குட்டி?” என்று கேட்டாள்.

அதற்கு அவன், மிகுந்த குடிபோதையில் இருந்தவனைப் போலத் தள்ளாட்டத்துடனும், குழறிய குரலுடனும், “நீ யாரு என்னைக் கேள்வி கேட்க? உன்னையா நான் அடித்து வேலை வாங்குகிறேன்? என்னைத் தானே நான் அடித்து வேலை வாங்குகிறேன். என்ன புரியவில்லையா? என் உதிரத்தில் விளைந்த அவனை என் மகனென்று கூறினால் என்ன? அல்லது அது நானே என்று உறுதிப்படுத்தினால் தான் என்ன? அதில் உனக்கென்ன பிரச்சனை?” என மறுகேள்வி எழுப்பினான் 

அவனது பேச்சில் இருந்த திமிரால், அகங்காரத்தால் உக்கிரமடைந்த அந்தப் பெண் அவளருகில் நின்றிருந்த அருஞ்சுனையனின் கையிலிருந்த மாட்டினை அடிக்கும் சவுக்கினை பிடுங்கி, அந்த மாமிச மலையை துவைத்து எடுத்தாள் 

“உன் மகனை நீ அடித்தால் எனக்கென்ன பிரச்சனை என்றா கேட்கிறாய்? அவ்வளவு ஆணவமா உனக்கு? நீ சந்தோசமாகச் சோமபானத்துடன் குடும்பம் நடத்துவதற்கு, ஆறு வயதே நிரம்பிய சிறு குழந்தையை, பெற்ற மகனென்றும் பாராமல் , வேலைக்குப் போகச் சொல்லி இப்படி அடித்துக் கொடுமைபடுத்தியிருக்கிறாயே. எல்லாம் இந்தச் சோமபானத்தினால் வந்த போதையினால் அல்லவா?

அந்தப் போதை தலையை விட்டு கீழே இறங்கினால் புத்தி தெளிவும் வந்துவிடும், கடவுளும் குழந்தையும் ஒன்றென்பதும் புரிந்துவிடும்” என்று கூறிக் கொண்டே, ஒவ்வொரு வார்த்தைக்கும் சவுக்கினால் அவனை அடி விளாசினாள் அந்தத் தெய்வப்பெண்.

அவளது வீரத்தையும், அநியாயத்திற்கெதிரான கோபத்தையும் கண்டு ரசித்தபடி அவளைப் பின் தொடர்ந்து சென்றான் அருஞ்சுனையன். அதனால் வேறு வழியின்றி உதயசேனனும் தொடர்ந்தான்.

ஆனால் அவள் முதன்மைஅமைச்சர் பரமனின் வீட்டுக்குள் நுழையவும், இருவரும் சற்றுத் திகைத்தாலும், தைரியமாக மாறுவேஷத்தைக் கலைக்காமலேயே அந்த வீட்டினுள் நுழைந்தனர்.

இவ்வாறு இருவர் தன்னைப் பின் தொடர்வதை ஞமலி ஏற்கனவே அறிந்திருந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் வீட்டிற்கு உள்ளேயும் அவர்கள்  வர, அதிர்ந்து போய்த் தனது குறுவாள் எடுத்து சுழற்றியபடி, “நீங்கள் யார்? எதற்காக இங்கே என்னைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறீர்கள்?” என்றவள் கேட்கவும் ,முதன்மைஅமைச்சர் பரமன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

அங்கு அவருக்குக் கத்தியுடன் நின்றிருந்த தமிழினி மட்டுமே தெரிந்தாள். ஏனென்றால் மற்ற இருவரும் கதவுக்கு முதுகு காட்டி நின்றிருந்தனர்.

தன் மகள் யாரோ இரண்டு பேருடன் வம்பிழுத்து வீட்டிலேயே வாள்சண்டை போட தயாராகி விட்டாள் என்று நினைத்த பரமன், “தமிழினி.. நிறுத்தம்மா.. யார் இவர்கள்? யாரைத் தேடி நம் அகத்துள் நுழைந்தார்கள்? எதற்காக இவர்களுடன் போர் புரிய எத்தனித்திருக்கிறாய்?” என்று கேள்வி மேல் கேள்வியாய் கேட்க, மெல்ல சிரித்துக் கொண்டே திரும்பினான் அருஞ்சுனையன்

அவனைக் கண்டு அதிர்ந்த பராமன், “அரசே… நீங்களா? என்ன விளையாட்டு இது? இங்கு என் இல்லத்திற்கு வருவதற்கு மாறுவேடம் பூண்டது ஏன்?” என்றார் புரியாமல் 

அவர் அரசே என்றதும் தான் தமிழினிக்கு அது அருஞ்சுனையன் என்பது புரிந்தது. உடனே பெண்மையின் நாணம் வந்து ஒட்டிக் கொள்ள, யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியின்றி சட்டெனத் அறைக்குள் சென்று பதுங்கினாள்

அதைக் கண்ட அருஞ்சுனையன், “என்ன அமைச்சரே… இது தான் உங்கள் மகள் தமிழினியா? போர் கலைகள் எல்லாம் கற்றிருப்பாள் போலிருக்கிறது. அநியாயத்தைக் கண்டு பல பேர் தனக்கென்ன வந்தது என அலட்சியமாய் கடந்து செல்கையில், உங்கள் மகள் மட்டும் பெண் சிங்கமெனக் கர்ஜித்து விட்டாள்” என்று கூறினான்.

அதைக் கேட்டு தலையும் புரியாமல், வாலும் புரியாமல் திருதிருவென விழித்த அமைச்சரைப் பார்த்துச் சிரிப்பு வந்துவிட்டது அருஞ்சுனையனுக்கு.

சிரித்துக் கொண்டே வரும் வழியில் தமிழினியை கண்டதை கூறியவன், “இவ்வளவு தைரியமான பெண்ணைப் பார்த்து பாராட்டி விட்டுச் செல்லலாம் என்றெண்ணி வீட்டிற்கு வந்தால், உங்கள் மகள் அவளது குறுவாளால் எங்களை வரவேற்கிறாள்” என்று குறை கூறுவதைப் போல, அவளது பெருமையை அவளது தந்தையிடமே உரைத்தான் அவன்

அதைக் கேட்டு சிரித்த அவர், “ஆம் அரசே, இந்த அகிலத்தின் அதி சிறந்த கத்திச் சண்டை வீரனுக்கு உகந்த வரவேற்பைத் தான் என் மகள் வழங்கி இருக்கிறாள்” என்று அவர் கூறவும், மற்ற இருவரும் அதைக் கேட்டு சிரித்தனர்.

அதன் பிறகு அருஞ்சுனையனின் மாறுவேடம், நகர்வலத்திற்காக அல்லாது தமிழினியுடனான காதல் வளத்திற்குத் தான் பெரிதும் பயன்பட்டது. ஆம்.. அன்புடை நெஞ்சம் இரண்டும் செம்புலம் கலந்த புனலாய் ஆகின

தமிழினி புத்திசாலித்தனத்தை அவள் தந்தையிடமிருந்தும், போர்க்கலையை அவள் மாமனிடமிருந்தும் கற்றதால், என்றுமே தன் தேசத்தை நேசிக்கும் பெண்ணாகவே இருந்தாள்.

அவளது பேச்செல்லாம், மக்களின் வாழ்க்கை மேம்பாடும், நாட்டின் சீர்திருத்தமும், போர் படையின் பயிற்சியைப் பற்றியுமே இருக்கும்.

தனது நாட்டை உயிரென நேசிக்கும் ஒருவனுக்கு, தனது மனைவியும் தன்னைப் போலவே ஒத்த கருத்துடையவளாக இருப்பதை விடவும், ஆனந்தத்தைத் தர வேறெதுவும் வேண்டுமோ?

அதனாலேயே ஆவலுடன்.. அவளுடன் நேரம் செலவழிக்கப் பெரிதும் விழைந்தான் அருஞ்சுனையன் 

இருவரும் சந்தித்த ஓர் நாளில், “நான் எந்தையிடம் நம் காதல் விவகாரத்தைப் பற்றிக் கூறி விடலாமென இருக்கிறேன்” என தமிழினி கூறவும்

“ஏன்? என் காதலிக்கு, விரைவில் என் மனைவியாக வேண்டுமென விருப்பமா?” என கொஞ்சலுடன் கேட்டான் அவன்

“காதலி, மனைவி.. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை” என மிகச் சாதாரணமாய் உரைத்த தமிழினி 

“அதனால் நான் எந்தையிடம் நம் காதலைப் பற்றிக் கூறிவிடுகிறேன் என்பது, நாம் இருவரும் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்காய் அல்ல” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கையில் 

இடைபுகுந்த அருஞ்சுனையன், “அப்படியானால், என்னை விரைவாக மணமுடிக்க வேண்டுமென்ற விருப்பம் உனக்கு இல்லையா தமிழினி?” என்று கேட்டான்

அவனைக் காதலுடன் பார்த்தவள், “அதெப்படி இல்லாமற் போகும், ஆனால் என் தலைவன் என்ன சாதாரண ஆளா? அவர் இந்த மனிதக் குலத்தின் மிகப் பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அந்தச் சிந்தையைக் கலைத்து, திருமணத்தை நடத்த எனக்குக் கிஞ்சித்தும் விருப்பமில்லை. அதனால், நீங்கள் உங்களது முழுமனதுடன் உங்களது ஆராய்ச்சியைத் தொடருங்கள்.. அதன் பிறகு…” என்று தமிழினி இழுக்கவும்

கிசுகிசுப்பான குரலுடன், “அதன் பிறகு..” என்று அருஞ்சுனையன் அவளுக்கு மிக அருகே நெருங்கி வந்து கேட்க

அவனைத் தள்ளி விட்டவள், “ம்ம்ம்.. அதன் பிறகு, நாம் இருவரும் சேர்ந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்வோம் என்றேன்” என்றாள்.

“ஓ… அவ்வளவு தானா?” என்று ஏமாற்றமடைந்த குரலில் அருஞ்சுனையன் கேட்க

“அவ்வளவு தான். அதை விடுங்கள் இப்பொழுது நான் சொன்ன விசயத்திற்குப் போவோம். உங்கள் முதன் மந்திரி, உங்களது படைத் தளபதிக்கு என்னை மணமுடிக்கப் போகும் உத்தேசத்தில் இருக்கிறார். அதன் பொருட்டே யான் நமது விடயத்தை அவரிடம் பகன்று விடுகிறேன் என்றது” எனவும், சிந்தை வயப்பட்டான் அருஞ்சுனையன்,

“ஹ்ம்ம்.. என்னையும் நம் அரசவையில் அனைவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த்துகிறார்கள், அதனால்.. உந்தை உன்னிடம் திருமணத்தைப் பற்றிக் கேட்டால், முதலில் அரசரிடம் கூறி ஆசி பெற வேண்டும் என்று அவரை அழைத்துக் கொண்டு அரசவைக்கு வந்துவிடு, அதன் பிறகு யான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான் 

அதன்படியே தமிழினி தன் தந்தையை அழைத்துக் கொண்டு அரசரிடம் ஆசி பெற அரசவைக்கு வர, அப்பொழுது அவளது மாமன் அநங்கனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

தன் மகளுக்கும் அநங்கனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக அரசவையில் பரமன் உரைக்க, அவளுக்கு நான் வேறு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் என்று கூறி திருமணத்தை நிறுத்தினான் அருஞ்சுனையன் 

இதில் அநங்கனை விடப் பரமனுக்கே அதிர்ச்சி அதிகம். ஆனாலும் அரசர் கூறிய பிறகு அதை மீற அவருக்குத் தைரியம் இருக்கவில்லை.

ஆனால் அநங்கன் அதை அப்படியே விட்டுவிடவில்லை. ஒருநாள் ஞமலி தனிமையில் இருக்கும் சமயம் வந்து, “தமிழினி.. நீயும் அரசரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

அவன் இவ்வாறு கேட்கவும் தமிழினிக்குத் தூக்கிவாரிப் போட்டது 

“அது.. அது வந்து மாமா…” என்று தடுமாற

“வேண்டாம் தமிழினி… இவ்வளவு நாட்கள் கம்பீரத்துடன் என்னுடன் பழகிய பெண் இன்று தடுமாற வேண்டாம். நீ கூறிய இவ்விடயத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே” என அநங்கன் உரைக்க, சந்தோசத்திலும் அநங்கன் தன்னலமின்றி அவள் மேல் வைத்திருக்கும் பாசத்திலும் கண்கள் கரித்து விட்டது அவளுக்கு

அதைக் கண்ட அநங்கன், மெல்ல அவள் தலையை வருடிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் அங்கிருந்து சென்ற பின், அருஞ்சுனையனிடம் இவ்விடயத்தை உரைத்துவிடலாம் என்றெண்ணிய தமிழினி, அவனை உடனே சந்திக்கும்படி ஓலை அனுப்பினாள் 

அது சமயம் சிம்ம நாட்டு அரசன் மழவர் நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வர, ஞமலியின் (தமிழினி) ஓலையை புறக்கணித்து அந்த ஏற்பாடுகளில் மூழ்கினான் அருஞ்சுனையன் 

சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்த பொழுதில் தனது ஓலைக்கு அருஞ்சுனையன் மறுமொழி எழுதாதற்குச் சண்டை யிட்ட தமிழினி, அநங்கனின் பெருந்தன்மையான குணத்தைப் புகழ்ந்து கூறினாள் 

இனி போர் நெருங்குவதால், இன்னும் பல நாட்களுக்கு இருவரும் சந்தித்துக் கொள்ள இயலாது என்ற நிலையில், இருவரும் சிறிது வருத்தத்துடன் பிரிந்தனர்

“அன்று தான் அருஞ்சுனையன், தமிழினியையும், அநங்கனையும் இறுதியாகச் சந்தித்த நாள்” என்று முன் பிறவிக் கதையை கூறி முடித்தான் யாதவ்

அனைவருக்கும் இப்பொழுதும் கூட அநங்கனின் மீது தான் சந்தேகம் இருந்தது. எனவே யாதவிடம் அதைப் பற்றி மேலும் விவரம் கேட்டனர்.

“இப்போ நீ… அதாவது அருஞ்சுனையன் அந்த வேதி திரவத்தைக் கண்டுபிடிச்சயே அது எங்க பாதுகாக்கப்பட்டு இருக்குனு ஒரு நாட்டின் படைத்த தளபதியா அநங்கனுக்குத் தெரியும் இல்ல. அப்போ தமிழினிய அடைய முடியாத ஆத்திரத்துல அவன் தான அந்தத் திரவத்தைத் திருடி எதிரி மன்னனுக்குக் கொடுத்தது துரோகம் பண்ணியிருக்கணும் இல்லையா?” என விபின் கேட்க 

“அது அவன் இல்ல” என மறுப்பாய் தலையசைத்தான் யாதவ்

“அது அநங்கன் இல்லன்னா… வேற யார் அந்தத் துரோகி?” என்று மற்ற அனைவரும் கேட்க

“அந்த கொடுமையை செஞ்ச துரோகி உதயசேனன்” என கோபத்தில் ரத்தம் கொதித்து விழிநீரெல்லாம் அமிலமாய் கன்னத்தில் வழிந்தோட உரைத்தாள் ஜானவி

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

 “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!