in

ஒன் பை டூ (சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன்

ஒன் பை டூ (சிறுகதை)

“அனில் ரெடியா இரு, இன்னக்கி டின்னர் நமக்கு ஹோட்டல்ல தான்”

எட்டு வயது சிறுவன் அனிலின் அப்பா அன்பு, காலையில் சொல்லிச் சென்ற வார்த்தைகள், மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன

மாலையும் வந்தது.  திட்டமிட்டபடி நட்சத்திர ஹோட்டலுக்குள் அப்பாவுடன் நுழைந்தான் அனில் 

ஹோட்டல் நுழைவாயிலில், வண்ண வண்ண  செயற்கை நீர்ரூற்று, ஏராளமான கார்கள், சீருடையும் தொப்பியும் அணிந்த வாயில் காப்பாளர், பெரிய அலங்கார கண்ணாடி கதவுகள்

கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றால் பளீர் விளக்குகள், இன்னது என்று கூற முடியாத, சுவர் அளவிற்கு மிகப் பெரிய ஓவியம்

அனில் தன்னை மறந்து வாய் பிளந்து வியந்து கொண்டிருந்த அதே நேரத்தில், “வா அனில், உள்ள போலாம்” என கரம் பிடித்து அழைத்துச் சென்றார் அன்பு

அவர்கள் அடுத்து சென்ற அறை டைனிங் ஹால் என, பார்த்ததும் புரிந்து கொண்டான் அனில்

முப்பதுக்கும் மேற்பட்ட மேஜைகள். ஒன்றிரண்டைத் தவிர மற்றவைகளில் அநேகமாய் கூட்டம்

இத்தனை பேர் இருப்பதற்கு எந்த தடயமும் இல்லாமல் அந்த அறையில் அமைதி நிலவியது. எங்கிருந்தோ புல்லாங்குழல் இசை, குளிரூட்டி வீசும் காற்றில் கலந்து வந்தது

சில மேஜைகளை கடந்து, முன்பே பதிவு செய்திருந்த மேஜையில் அமர்ந்தார்கள்

அலைபேசி அழைக்க, அதில் தந்தை கவனம் செலுத்திய நேரம், அனிலின் கண்கள் பக்கத்து மேஜையில் நிலைகுத்தி நின்றது.

அது என்ன இளம் சிவப்பு நிறத்தில்? சூடாய், ஒரு கிண்ணத்தில்… மிகவும் ருசியாய் இருக்கும் என்று அதை சாப்பிடுபவர் முகத்தைக் பார்த்தே புரிந்து கொண்டான் அனில்

திடீரென அம்மாவின் வாசனை வீச, பக்கத்து டேபிளில் இருந்த கவனம் கலைந்தது.

அவன் எண்ணியபடி, பக்கத்தில் அவன் அம்மா வந்து நின்றாள்

 கொஞ்சம் கூடுதல் மேக்கப்பும், தூக்கலாய் பாய்ஸன் சென்ட்டுடனும் நின்றிருந்தாள் 

“சாரி… கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றபடி அமர்ந்தாள் அனிதா

அம்மாவைக் கண்டதும், அவளை நெருங்கி உட்கார்ந்துக் கொண்டான் அனில்.

“என்ன சாப்பிடற கண்ணா?” என அனிதா கேட்க, பக்கத்து டேபிளைக் காட்டியது பிள்ளை 

உடனே அன்பு ஹோட்டல் வெயிட்டரிடம், “அது டொமேடோ சூப் தானே, அதை ஒன் பை டூ குடுங்க. அனிதா நீ என்ன சாப்பிடற?” எனக் கேட்டு ஆர்டர் செய்தார்

வெயிட்டர் அந்தப் பக்கம் நகர்ந்ததும், “அப்பா ஒன் பை டூ னா என்னப்பா?” எனக் கேட்டான் அனில்

“உன்னால முழுசா சாப்பிட முடியாது கண்ணா, அதனால நானும் நீயும் பாதி பாதி ஷேர் பண்ணிக்கலாம். அது தான் ஒன் பை டூ” என்று விளக்கமளித்தார் அன்பு

சிறிது நேரத்தில் டேபிளுக்கு சூப் கிண்ணங்கள் வந்தன. டோமேடோ சூப்பையே பார்த்துக் கொண்டிருந்தான் அனில்

“என்ன கண்ணா சூடா இருக்கா? சாப்பிடலையா?” எனக் கேட்க

“அப்பா இந்த சூப்பும் நீங்களே சாப்பிடுங்க, எனக்கு வேணாம்” என்றான் அனில் 

“என்னாச்சு கண்ணா?” என அன்பு கேட்க

“ஒன் பை டூ, சூப் மட்டுமில்ல நானும் தான். வேணாம்பா, ரொம்ப கஷ்டமா இருக்கு ப்பா இந்த ஒன் பை டூ” என்றான் அனில் வருத்தமாய்

சூப் எடுத்து வந்த சர்வருக்கு புரியவில்லை என்றாலும், விவாகரத்தான தம்பதிகளான அனிலின் பெற்றோருக்கு அவன் சொல்வது நன்றாகவே புரிந்தது.

ஒருவரை ஒருவர் மௌனமாய் பார்த்துக் கொண்டனர்

அவர்கள் பார்வையில் ஒன்றல்ல இரண்டல்ல, ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது 

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. குழந்தையாக இருந்தாலும் ஒன் பை டூவிற்கான பொருளைப் புரிந்து கொண்டு பெற்றோருக்கும் புரிய வைத்த பிள்ளைக்கு வாழ்த்துகள். யதார்த்தம்.

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 16) -✍ விபா விஷா

வா வா என் தேவதையே🤱(அன்னையர் தின சிறப்புச் சிறுகதை) – ✍சஹானா கோவிந்த்