in , ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 7) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இராமசாமி,சொர்ணத்தின் மகன் சித்தார்த்தனும், மகள் கோகிலாவும் ஐந்தாம் வகுப்பு வரையில் சோலைப்பட்டி கிராமத்துப் பள்ளியில் படித்தனர், அடுத்து ஆறு ஏழு எட்டு வரைப் படிக்க முத்துப்பட்டியில் பள்ளி இருந்தது. ஒன்பதுமுதல் பன்னிரண்டு வரை படிக்கச் சேவல்பட்டிதான் போகவேண்டும் சித்தார்த்தன் சைக்கிள் ஓட்டப் பழகியிருந்தான் அதனால் சைக்கிள் வாங்கித் தந்துவிட்டார், இராமசாமி. அவனும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நெல்லையில் பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்துவிட்டான். 

இப்போது கோகிலா கிராமத்துப் பள்ளிகளில் எட்டாவது வரை முடித்து விட்டாள் சேவல்பட்டியில் ஒன்பதாவது சேர்த்திருந்தார் இராமசாமி. காலையில் அவளைப் பள்ளியில் விட்டுவிட்டு மாலையில் சென்று அழைத்து வருவார்.கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சித்தார்த்தன் விடுமுறையில் வந்திருந்தான்.

‘தம்பி இன்னக்கி நாத்து நடவு இருக்கு, நான் வயல்ல இருக்கணும், நீ பாப்பாவைப் பள்ளிக்கோடத்துல விடணும்’

‘சரிப்பா’

‘அது மட்டுமில்ல, சாயந்திரம் போய் கூட்டிட்டும் வரணும்’

தங்கையை அழைத்துக்கொண்டு போகும்போது, ‘கோகி, நீ சைக்கிள் ஓட்டறியா, கத்துக் கொடுக்கறேன்’

‘ஆமாண்ணா, நானே கேக்கணும்னு நெனைச்சிட்டிருந்தேன்’

அடுத்த ஒரு வாரம் முழுதும் மாலையில் சைக்கிள் ஓட்டப் பழக்கினான் தங்கைக்கு. இப்போது நன்றாக ஓட்டப் பழகிவிட்டாள், சித்தார்த் அப்பாவிடம் சொல்ல அவருக்கு பெரும் சந்தோஷம்.

அம்மா`மட்டும் பத்திரம், கைய, கால ஒடச்சிக்காதே, கல்யாணம் ஆகணும் என்றாள்.

அந்த வருடம் சம்பா நெல் அறுவடை முடிந்து அதை விற்றதில் நல்ல லாபம் கிடைத்திருந்தது.

இப்போது நெல்லை நகரக் கல்லூரி ஒன்றில் இயற்பியல் இளங்கலை வகுப்பில் சேர்ந்திருந்தாள் கோகிலா. கல்லூரி விடுதியில் தங்கி படித்தாள். அடுத்த நான்கு மாதத்தில் அண்ணன் சித்தார்த்துக்கு நெல்லையில் மின்சாரத் துறையில் பொறியாளராக வேலை கிடைத்தது.. அதனால் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த தங்கையை அவ்வப்போது பார்த்துக் கொள்ள முடிந்தது.

பொறுமை, அறிவுக் கூர்மை, எல்லோரிடமும் கண்ணியமாகப் பழகுவது, நாகரீகமான பேச்சு, உதவும் குணம் கொண்ட கோகிலாவிற்கு நிறையத் தோழியர் இருந்தனர். இளங்கலை இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய நெருங்கிய தோழி விமலா ஒரு நாள், ‘கோகிலா உனக்கு விஷயம் தெரியுமா, நம்ம சகுந்தலா நேத்து மொட்டை மாடியிலிருந்து குதிக்கப் பார்த்தா’

‘அச்சச்சோ, ‘

‘ஆனா சாந்தி தடுத்துக் கூட்டிட்டு வந்துட்டா’

‘சரிடி வா, போய் பார்க்கலாம்’ சகுந்தலாவின் அறைக்குச் சென்றனர்.

அழுது முகமெல்லாம் வீங்கியிருந்தது. ஏழைக் குடும்பத்துப்பெண். அப்பா இல்லை,அம்மா வீட்டு வேலை செய்து படிக்க வைக்கிறாள்.

‘என்னாச்சு சொல்லுடி,சக்கு’

தயங்கித் தயங்கி, ‘நான் ஏமாந்துட்டேன், அம்மாவோட மானம் மரியாதை எல்லாம் என்னால பாழாப்போச்சி’

‘இதோ பாருடி, உன்னோட நெருங்கின தோழிங்க நாங்க’

‘உங்களையெல்லாம் பாக்கவே அவமானமா இருக்குடி’ என்று சொல்ல ஆரம்பித்தாள்.

இவளுடைய கிராமத்தின் மணியக்காரர் மகன் பத்தாவது கூடத் தேறாதவன் இவளைச் சுற்றி, சுற்றி வந்து ஆசை வார்த்தைகள் பேசிப் பழகியிருக்கிறான், வார இறுதி நாட்களில் அவன் மோட்டார் பைக்கில் காத்திருப்பான், சகுந்தலா ஊருக்குப் போவதாகத் தோழியரிடம் சொல்லிவிட்டு மூணாறு, ஊட்டி, கொடைக்கானல் என்று இவனோடு சுற்றியிருக்கிறாள். எல்லை மீறிப் பழகியதில் இப்போது மூன்று மாதம் இவளுக்கு. இதைத் தெரிந்து கொண்டு கலைக்கச் சொல்கிறான்.

பணம் தருகிறேன் இதோடு நாம பழகறதை நிறுத்திக்கலாம் என்று சொல்கிறான். திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னாயே என்று கேட்டதற்கு இப்படி ஒழுக்கமில்லாத பெண்ணை தன் வீட்டில் மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறான்.இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் இந்தப் பெண்.

‘சக்கு இந்த விஷயம் பிரின்ஸிக்குத் தெரியும் முன்னர் ஏதாவது செய்வோம்,தைரியமா இரு’ என்று சொல்லிவிட்டு வந்து யோசித்தனர் தோழியர்.

பின்னர் அநியாயம் செய்வதை விடக்கூடாது என்று கோகிலா முடிவு செய்கிறாள். அந்தவார விடுமுறையில் சகுந்தலாவை அழைத்துக்கொண்டு அவள் ஊருக்குப் போகிறார்கள் தோழியர்.

விடியலில் புறப்பட்டப் பேருந்து காலை எட்டுமணிக்கு சகுந்தலாவின் ஊரில் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளுக்கு இடையில் பயணித்த செம்மண் சாலையில் இவர்களை இறக்கி விட்டது, வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் தண்ணீர் சேந்திக் கொண்டிருந்த ,சகுந்தலாவின் அம்மா திகைத்து, ‘என்னடி சக்கு, கடுதாசி கூடப் போடலியே, வரேன்னு’

‘திடீர்னு லீவு விட்டாங்க மா, இவக என்னோட சினேகிதிங்க’

‘வாங்கம்மா, பெரிய எடத்துப் பொண்ணுங்களா தெரியுது, இந்த கூரை வூட்டுல …’

‘அம்மா இதெல்லாம் சொல்லாதீங்க, உங்க அன்பே பெரிசு’ என்றாள் கோகிலா.

கோரைப்பாயை விரித்துக் ‘கண்ணுங்களா ,குந்துங்க, தோ வாரேன்’

‘சக்கு தண்ணி மொண்டு குடு’ என்று சொல்லிவிட்டுத் தூக்குச் சட்டியையும் ,சில்வர் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு இட்டிலி ,இடியாப்பம் விற்கும் ராமாயி வீட்டிற்கு விரைந்தாள்.

அவள் அகன்றதும் விமலா, ‘கோகிலா நாம இப்ப என்னடி செய்யப பொறோம்’

‘நாம ஊரைச் சுத்திப் பாக்கறோம்னு அம்மாகிட்டச் சொல்லிட்டு மணியக்காரரைப் பாக்கப்போறோம்.’

‘எனக்குப் பயமா இருக்குடி’

‘சகுந்தலா பயப்படாதே, ஆண்டவன் துணையிருப்பான்’ என்றாள்.

சகுந்தலாவின் அம்மா வாங்கி வந்த இட்டிலி,இடியாப்பத்தை வாழை இலையில் பறிமாறினாள். அவள் மனதைப்போலவே சுவையாக இருந்தது கோகிலாவிற்கும், விமலாவிற்கும்.

உண்டு முடித்து பேசியபடி தோழியருக்கு ஊரைச் சுற்றிக் காட்டுவதாகச் அம்மாவிடம் சொன்னாள். ‘பத்திரம் கண்ணு, பார்த்துப் போயிட்டு வாங்க’ என்று அனுப்பினாள் அவள்.

திடீரென்று அவர் வீட்டிற்கு எப்படிச் செலவது, அவர் வீட்டில் இருப்பாரா? இல்லையென்றால் என்ன செய்வது? என்ற பலவாறாக இவர்கள் யோசித்துக்கொண்டு வயல் வரப்பில் நடந்துகொண்டிருந்தனர்.

‘கோகிலா அதோ தெரியற எல்லா வயலும் மணியக்காரரோடது’

‘சகுந்தலா அந்தவரப்புல போலாமே’

‘சரிடி’ என்று நடந்தனர்.

அங்கு நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. எதிரில் மாந்தோப்பும் இருந்தது. அங்கு பம்புசெட்டிலிருந்து தண்ணீர் பெரிய தொட்டியில் தபதபவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. அதிலிருந்து சிறிய வாய்க்கால் வழியாக ஏற்கெனவே நட்டு முழங்கை அளவு வளர்ந்திருந்த நெல் வயல்களுக்குப் பாயந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் நாம் செய்ய நினைக்கும் வேலைகள் எளிதாகிவிடும்.அதுபோல அங்கு கயிற்றுக் கட்டிலில் மணியக்காரரும்,அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தனர்.

பயந்து நடுங்ஙிக் கொண்டிருந்த சகுந்தலாவை அழைத்துகொண்டு அங்கு சென்றாள் ,

‘ஐயா வணக்கம்’

‘வணக்கம்மா’ என்றவர் சகுந்தலாவைப் பார்த்ததும் ‘அட நம்ம வேலம்மா பொண்ணு, பட்டணத்துல படிக்கறதா சொன்னாங்க, நல்லா இருக்கியாம்மா?’ அதற்குள் கண்கள் கலங்கி பதில் வராமல் தலையாட்டினாள் சகுந்தலா.

‘எதுக்குமா அழுவுறே, காலமெல்லாம் கஷ்டப்பட்ட உங்கம்மா சந்தோஸப்படுவா, நல்லா படி கண்ணு’

‘பணம் எதுவும் தேவைன்னா சொல்லு’

மணியக்காரரின் மனைவிக்கு அரசல் புரசலாகப் பையன் இவள் பின்னால் சுற்றுவது தெரியும். அதனால், ‘சகுந்தலா எதுவானாலும் சொல்லு’ என்றாள்.

இது போதாதா’

கோகிலா எல்லா விஷயத்தையும் சொல்லி இவள் சாக முயன்றதையும் சொல்லிவிட்டு, ஐயா உங்களோட நல்ல மனசுக்கு இது பெரிய வேதனைன்னு தெரியும், ‘நீங்க என்ன முடிவு சொன்னாலும் நாங்க ஏத்துக்கறோம்’ பெரியவங்க உங்க ஆசீர்வாதம் எங்களுக்குப் பெருசு’ என்று அவர் காலையும்,அவர் மனைவி காலையும் தொட்டு வணங்கிய கோகிலா, ‘கும்பிடுங்கடி’ என்றாள்.சகுந்தலாவும் ,விமலாவும் வணங்கினர்,

‘வரோங்க ஐயா’ என்று சொல்லிவிட்டுத் தோழியரோடு திரும்பினாள் கோகிலா.

கொஞ்ச நேரம் ஆழமான யோசனையிலிருந்தார், எழுந்து அங்குமிங்கும் நடந்தார், கோபம், அவமானம்  எல்லாம் அலைமோதியது

எப்போதும் பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரப்படுவார்கள், கோபம் முகத்தில் தெரியும், பேச்சில் நியாயத்தின் வேகம் தெரியும், புயலாக வரவேண்டிய இந்தப் பெண்கள் குளிர் காற்றாக வந்து நீதி கேட்பது வித்தியாசமாக இருந்தது மணியக்காரருக்கு.

”அமிர்தம் சனிக்கிழமைனு பார்க்காதே, சாயந்திரம் வெத்தலை பாக்கு தட்டோடப் போயி பேசிடுவோம்’

சரீங்க’

‘அதோட வந்து பேசின பொண்ணைப் பார்த்தியா, எவ்ளோ பெரிய விஷயத்தை அழகாப் பேசி முடிச்சிட்டா’

நமக்குப் பொண்ணு இருந்தா சீர் தருவோமே அப்படி, அந்தரெண்டு பொண்ணுங்களுக்கும், புடவை, ஜாக்கெட் துணி, பழம் வெச்சி எடுத்துக்கோ’

அடுத்த மாதம் நல்லதொரு நாளில் ஊரும்,உறவும் வாழ்த்த சகுந்தலா மணியக்காரர் வீட்டு மருமகள் ஆனாள்.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 6) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியில் உறங்கும் கனவு (அத்தியாயம் 8) – மீனாட்சி சுந்தரமூர்த்தி