in , ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 10) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

அந்த ஆண்டு அயராது படித்து தனது ஆய்வைச் சமர்ப்பித்தாள் கோகிலா.அவளது.பி.எச்.டி நிறைவுற்றது. ஊருக்குத் திரும்பினாள்.

கோபாலனும் விடுமுறையில் வந்து நின்றார், சித்தார்த்தனின் முயற்சியால் இராமசாமியும், சொர்ணமும் இந்தக் காதல் திருமணத்திற்கு உடன்பட்டனர். கோபாலனுக்கு இந்தச் சிரமம் ஏற்படவில்லை, கலிவரதன் மகனின் விருப்பத்திற்கு எப்போதும் தடை சொல்லமாட்டார், ஏனென்றால் பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறோம் என்பதை அறிவார்,அவனது செயல்பாடுகள் நல்லதாகவே இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கைக் கொண்டவர் அவர்.

கமலத்திற்கு ஏற்கெனவே மகனின் விருப்பம் தெரியும்.அதனால் இருவரும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர். அன்று கோகிலாவின் இல்லத்தில், இவர்களை வரவேற்று உபசரிப்பு முடிந்தபின்னர் பெரியவர்கள் கூடத்தில் சூழ்ந்து அமர்ந்திருந்தனர்

“இந்த மாதிரி விருப்பக் கல்யாணம் எங்களுக்குப் பழக்கம் இல்லை,இருந்தாலும்….”

“இராமசாமி பழக்கம் தேவை இல்லை, நல்லதான்னு மட்டும் பாருங்க,நாகையில் பழக்கடை கலிவரதன் னு கேட்டுப் பாருங்க சொல்வாங்க.”

“அப்பா, எனக்கு எல்லாம் தெரியும்பா, இதவிட நல்ல குடும்பம் பாக்க முடியாது”

சித்தார்த்தன் சொன்னால் சரியாக இருக்கும் என்று தந்தை இராமசாமிக்குத் தெரியும், கோபாலனை அங்கே அனைவருக்கும் பிடித்துப்போனது. கமலமும், சொர்ணமும் பலநாள் பழகியது போல் நேசமானார்கள்.

“சரிங்க, என்ன எதிர்பார்க்கறீங்க?”

“நீங்க எங்க மருமகளை சந்தோஷமா அனுப்பிவெச்சா போதும், நகையெல்லாம் நாங்க போட்டுக்குவோம்.,சரிதானே கமலம்?”

“ஆமாங்க”

அப்புறம் என்ன? நல்லதொரு நாளில் இருவருக்கும் ஊரும்,உறவும்,நட்பும் வாழ்த்த விமரிசையாய் திருமணம் முடிந்தது.

ஒரு வாரத்தில் சென்னையிலிருந்து அஸ்ஸாம் புறப்பட்டார்கள்.

இரண்டு வருட வாழ்க்கை அளவிலா மகிழ்வைத் தந்தது. கோபாலனுக்கு ஐதராபாதிற்கு மாற்றல் வந்தது, அதே நேரத்தில் கோகிலாவிற்கு விரிவுரையாளர் பணிநியமன ஆணையும் வந்தது. கோகிலாவைக் கல்லூரியில் சேர்த்ததை நாம் ஏற்கெனவே பார்த்தோம். கமலம் கணவரை நாகையில் விட்டுவிட்டு மருமகளோடு இருந்தாள். கொஞ்சநாள் போனதும் இராமசாமி, “சொர்ணம், அவங்க பாவம் அவரை விட்டுட்டு நம்ம மகளோட போய் இருக்காங்க”

“ஆமாங்க, நானே சொல்லணும்னு இருந்தேன், இங்க வயலை பார்த்துக்க ஏற்பாடு பண்ணுங்க, நாம ரெண்டு மாசம் போயிருப்போம்”

இப்படிப் பாசப்பிணைப்பில் இரண்டு வீட்டினரும் வேலையைப் பகிர்ந்து கொண்டனர். நல்லவேளையாக இதே ஊருக்கு மாற்றல் கேட்டு வாங்கினார் கோபாலன், அன்றில்கள் இணைந்தன. கமலமும், சொர்ணமும் ஊரில் இருந்தார்கள். கோபாலனுக்கு அரசு வீடு தந்திருந்தது. கோபாலன் நினைப்பதை சொல்லாமலே நிறைவேற்றுவாள் கோகிலா,அவள் நினைப்பதை அவர் செய்து முடிப்பார். இருவரின் மனமும் ஒரே அலைவரிசையில் இருந்தது. இந்த சமயத்தில்தான் அன்னம்மாவும் வந்து சேர்ந்தாள்.

அடுத்த வருடம் குமரன் வந்து பிறந்தான்.நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன, அவனைப் பள்ளியில் சேர்த்தபோது கயல் வந்து பிறந்தாள். இனிய இல்லறத்தின் பயன் குழந்தைகள்தானே.

இதற்கிடையில் ஒரு இடத்தை வாங்கினார் கோபாலன். அப்போது கலிவரதனும், கமலமும் இவர்களோடு வந்து தங்கினார்கள்.வீட்டை அருகிருந்து பார்த்துப்பார்த்துக் கட்டினார் கலிவரதன். கமலமும், கோகிலாவும் தேர்ந்தெடுத்துச் சொல்ல அந்த மரக்கன்றுகளை பார்த்து வாங்கிவரச் சொல்லி தன் கையால் நட்டார். வசந்தமாளிகையின் செங்கல் ஒவ்வொன்றிலும் கலிவரதனின் மூச்சுக்காற்று கலந்துதான் இருக்கும்.

குழந்தைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர். தாய் தந்தையரின் அறிவும், குணமும் இவர்களிடம் ஒருங்கே அமைந்திருந்தன. கோபாலன் வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்துப் பெருமைப்பட்டார்கள், வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார்கள்.

விடுமுறை தினங்களில் மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரியும் அல்லியின் மகனும், மகளும், சித்தார்த்தனின் ஒரே மகனும் இங்கே வந்து விடுவார்கள். வீடு கலகலப்பாக இருக்கும். கோவில்,கடற்கரை, பொருட்காட்சி, திரையரங்கம் என்று கோகிலா அழைத்துச் செல்வாள், ஓய்வு கிடைக்கும்போது கோபாலனும் அழைத்துச் செல்வார். இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள.

அதனால் பத்திரமாகச் சென்று வரச் சொல்லி திருநாவுடன் அனுப்புகிறார் கோபாலன். பேரப்பிள்ளைகளே வளர்ந்து கல்லூரியில் படிக்கிறார்கள், இனியும் பழக்கடையில் பாடுபடுவது தேவைதானா என்று கேட்டார் கோபாலன்.

ஆனால் கலிவரதனுக்கு அதை விட மனமில்லை. அல்லியின் கணவரை வேலை நேரம் போக பழக்கடையில் வியாபாரத்திற்குப் பழக்கப்படுத்துகிறார். நாளடைவில் அதிகமாக கடையைப் பார்த்துக் கொள்வது அல்லியின் கணவர்தான். கலிவரதனுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. வீட்டிலிருந்தபடியே விவசாயிகளிடம் பழங்களை வாங்கவும், தள்ளுவண்டி, மற்ற சிறிய கடைகளுக்குத் தருவதற்கும் தொலைபேசியில் பேசி உதவுகிறார்.

குமரன் மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேறுகிறான். மருத்துவமோ, பொறியியலோ படிக்கவில்லை, தந்தையைப்போல் வேதியியல் எடுத்து பி.எச்.டி முடித்து இளம் விஞ்ஞானியாக நார்வேயில் பணியேற்கிறான். கயலும் மருத்துவத்துறை வேண்டாமென்று பொறியியலில் கணினித் துறையை எடுத்துக்கொண்டாள். \

அவள் படிப்பு முடிந்ததும் கோபாலன், “கோகிலா கயலுக்கு வரன் பார்க்கத் தொடங்கலாம்”

“அல்லி மகனைப் பார்க்கலாமா?”

“சொந்தத்தில் மணம்புரிய வேண்டாம் என்கிறதே மருத்துவ உலகம்”

“பார்ப்போம்.அவ என்ன நெனைக்கறாளோ?”

ஆனால் நிலைமை வேறாக இருந்தது. சித்தார்த்தனின் மகன் கணேசனும், கயலும் ஒருவரை ஒருவர் உயிராக நேசித்தார்கள். கணேசன் கனடாவில் தன் அத்தையைப்போல் இயற்பியலில் உயர்படிப்பில் தேறி கனடாவில் கல்லூரி ஒன்றில் விரிவரையாளராகச் சேர்ந்திருந்தான்.

‘என்னங்க அண்ணாவும்,அண்ணியும் நாளைக்கு வராங்க’

‘அப்படியா, என்ன விஷயம்?’

‘நாளைக்கு லீவு போட்டிருக்கேன்,நீங்களும் வீட்ல இருங்க’

‘சரி, உத்தரவு மகராணி’

அவர்கள் வந்தது கயலை, கணேசனுக்கு மணம்பேசத் தான்.

கயலுக்கும், கணேசனுக்கும் இராமசாமி,சொர்ணம்,கலிவரதன், கமலம் ஆசீர்வாதங்களோடு நெல்லையில் விமரிசையாகத் திருமணம் நடந்து முடிந்தது. அவளும் கணவனோடு கனடா சென்றாள். கணினித் துறையில் பணிபுரிகிறாள். ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டாள். கலிவரதனுக்கும், கமலத்திற்கும் இப்போது குறையெதுவும் இல்லை, வயோதிகம் மட்டும் கூடிவருகிறது

“கோபால் நானும் அம்மாவும் இனி ஊர்ல இருக்கலாம்னு நென்க்கறோம்.”

“எதுக்குங்க மாமா? “

“ஏதோ கடைசி காலத்துல அந்தவீட்ல இருக்க ஆசைப்படறேன் மா,”

“நீங்க நூறு வயசு நல்லா இருப்பீங்க மாமா”

“அப்பா உங்க விருப்பம். சமையலுக்கும் ஆள் போட்டுடறேன்” என்று அவர்களை அங்கு அனுப்பி வைத்தார்.

ஆண்டுகள் ஓடுகின்றன, கலிவரதன் ஒருநாள் இரவு படுத்தவர் தூக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவரது இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு இனி தனியாக விடமாட்டேன் என்று கமலத்தை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

கணவர் போனபின் அதிகநாள் இல்லை அவள், கணவரின் நினைவில் மனம் தளர்ந்து போவாள் அப்போதெல்லாம் அருகிருந்து தேற்றி தாயைப்போல் பொறுமையாக கவனித்துக் கொண்டாள் கோகிலம். ஒருநாள் திடீரென மாரடைப்பில் எண்பத்தைந்தாவது வயதில் காலமானாள்.

பருவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன .யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இப்போது கோகிலாவும்,கோபாலனும் மட்டும் இங்கு இருக்கிறார்கள். கோபாலன் ஓய்விற்கு ஐந்து ஆண்டுகள் இருந்தது

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 9) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 12) – மீனாட்சி சுந்தரமூர்த்தி