in , ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 12) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

‘மேடம் என்னாச்சு’ என்று அன்னம்மா தன் சேலையைக் கிழித்துத் தந்த துணியால் இரத்தம் பெருகாமல் கட்டுப்போட்டார் திருநாவு, அதற்குள் வாட்ச்மேன் ஓடி ஆட்டோ ஒன்றை அழைத்து வந்துவிட்டார்.

இருவருமாக அவளை ஆட்டோவில் அமர வைக்க அருகில் அமர்ந்து தாங்கிக் கொண்டாள் அன்னம்மா. திருநாவு முன்னால் அமர மருத்துவமனைக்கு விரைந்தது வண்டி. வாட்ச்மேன் வெறுப்பும். கவலையும் கலந்த முகத்தோடு வீட்டைப் பார்த்துக் கொண்டார்.

அன்னம்மாள் அன்று இரவு ஏழு மணிக்கெல்லாம் அவளை வற்புறுத்தி ஒரு டம்ப்ளர் பாலை அருந்த வைத்து வலி தெரியாமல் உறங்க மருத்துவர் தந்திருந்த மாத்திரையைத் தந்து விட்டாள். காலை ஏழு மணிக்கு கோகிலா கண்விழித்தாள். முதல்நாள் அலங்கோலங்கள் நினைவில் எழுந்தது. அன்னம்மாவின் பேச்சுக்குரலும் கேட்டது,

“வாங்க தம்பி, சொர்ணாக்கா வாங்க,”

“கோகிலா என் செல்வமே” என்று அறைக்கு வந்தாள் அம்மா. பின்னாலேயே அண்ணியும் அண்ணனும். எப்படி வந்தார்கள் இவர்கள் என்று திகைத்தபோது அன்னம்மா,

“பாப்பா நாந்தான் உன்னை கேக்காம சொல்லிட்டேன்,தாயி,”

அண்ணனுக்கு ஆச்சர்யம் ஒரு பக்கம், ஆத்திரம் ஒருபக்கம், கோபாலனா இப்படி நடந்து கொள்வார் வைரமாச்சே அவர் குணம்’ என்றெல்லாம் யோசித்தார்,

“ எல்லாம் சரியாகிடும், “என்று தேற்றினாள் தங்கம்.

அண்ணன், “பாப்பா நீ ஒண்ணும் கண்டபடி நெனைக்காதே, அவரு அப்படிப்பட்டவரில்லை” என்று தங்கையின் தலையைக் கோதி விட்டார்.

“அண்ணா இதையெல்லாம் பசங்களுக்குச் சொல்ல வேணாம்.”

“ கண்டிப்பா தெரியவேணாம், சரியாகிடும்.”என்றார்.

இப்படித்தான் வாழவேண்டும் என்று திட்டமிட்டுக் கடமை,கண்ணியம் தவறாமல் வாழக்கையை நடத்திய கோபாலன் மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்தது எப்படி என்று எல்லோரும் குழம்பினார்கள்,அவர்கள் மட்டுமா ? நாமும்தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் மகளின் திருமணத்திற்கு சென்றிருந்தார் கோபாலன். கோட்டயம் சென்றிருந்தார், அன்று திருநாவுக்கு உடல்நலமில்லாததால் வேறு ஒரு ஓட்டுநர் வண்டியை ஓட்டினார். நண்பர் இவரைப் போலவே காவல்துறை உயர்அதிகாரி. காதல் திருமணம்தான் அது.

முதல்நாள் சென்று தங்கி மறுநாள் காலையில் திருமணம் முடிந்து மற்ற நிகழ்ச்சிக்ளுக்கும் இருக்கச் சொல்லி வற்புறுத்தியதால் தங்கினார். மதிய உணவு முடிந்து மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பைத் தந்துவிட்டுப் புறப்படும்போது மாலை ஐந்துக்கு மேல் ஆகிவிட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வண்டி பயணித்துக் கொண்டிருந்தது திடீரென எதிரில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இவருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த காரின் மீது மோதியது. ஓட்டுநர் உடனடியாக பிரேக்கைப் போட்டதில் இலேசாக இடித்துகொண்டார் கோபாலன்.

மோதிய வண்டியில் ஓட்டி வந்தவரைத் தவிர யாருமில்லை, அவர் பலமான அடியில் மயங்கிக் கிடந்தார். காதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. முன்னால் சென்ற காரை ஓட்டிவந்த கணவனும், அருகில் அமர்ந்திருந்த மனைவியும் கீழே வீசப்பட்டு மயங்கியிருந்தனர். அநேகமாக உயிருக்கு ஆபத்திருக்காது.

கோபாலன் உடனடியாக அவசர எண்ணைத் தொடர்பு கொண்டார், அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு விபத்து நடநத இடம் சோல்லி வரவழைத்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு அரைமணி நேரமானது, அது இரவு நேரம் என்பதாலும், குடியிருப்பு மற்றும் கடை, உணவகம் என்று எதுவும் அருகில் இல்லாததாலும் கூட்டம் சேரவில்லை.சற்று தூரத்தில் இருந்த ஒரு குடிசையிலிருந்து நடுத்தர வயதினரான ஒரு ஆணும்,பெண்ணும் ஓடி வந்தனர். வண்டிகள் ஓரம் கட்டப்பட்டன. அந்த இடத்தைச் சுற்றி தடுப்பு வைக்கப்பட்டு வண்டிகள் வளைந்து செல்ல ஏற்பாடுகள் செய்துவிட்டு காவல்துறையும் சென்றுவிட்டது.

வண்டியில் ஏறி புறப்பட வண்டியை எடுத்தபோதுதான் தெரிந்தது அவசரமாக பிரேக் போட்டதில் வண்டி தடுமாறி நின்றதல்லவா, அதனால் ஏதோ கோளாறு. வண்டி புறப்படவில்லை. என்ன செய்வது என்று யோசித்த வேளையில் ,கோபாலனுக்குத் தாகம் வேறு எடுத்தது, வண்டியில் தண்ணீர் இல்லை, அதுவரையில் அகலாமல் அங்கேயே நின்றிருந்த அந்த ஆள் , “எந்தா சாரே, தண்ணி வேணுமா”

ஆமாம் என்று தலையசைத்தார் கோபாலன். உடனே ஓடிச் சென்று எவர்சில்வர் செம்பில் சில்லென்ற பானைத் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்து தந்தாள் அந்தப் பெண்.

இவர் ஆவலாக குடிப்பதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“எந்தா சாரே சாயா குடிக்குமோ’ என்றவன் பின்னர் ‘நிங்ஙளு தமிழ்நாடோ, எனிக்கி தமிழ் அறியும்”

அவள், “சார் இங்க பக்கத்துலதான் எங்க குடிசை, வாங்க சாயா போட்டுத்தரேன்.” என்றாள். சரி என்று  தலையாட்டினார் கோபாலன் அவர்கள் நகர்ந்தார்கள்.

ஓட்டுநர் “சார் தப்பா நெனைக்காதீங்க, கால் டாக்சி வரவழைச்சி நாம ஊருக்குப் போகலாம்”

“அப்போ நம்ம வண்டி?”

உங்க ஆளுங்ககிட்டச் சொன்னா மெக்கானிக் வரவழைச்சு வண்டிய நம்ம வீட்டுக்கே எடுத்துட்டு வந்துடுவாங்க’

“சரி அதுவரைக்கும் அங்க போய் டீ .குடிக்கலாம் பா.”

“வேணாம் சார், உங்களுக்குத் தெரியாததில்லை, எனக்குச் சரியா படலை.”என்றார்.

திருநாவின் நண்பர்தான் அவர், அதனால் கோபாலனைத் தனியே அனுப்ப மனமின்றி உடன் சென்றார்,

சாலையோரம் சற்று உள்ளடங்கி இருந்த அந்தக் குடிசையின் முன்புறம் விசாலமான இடம் இருந்தது, அதன் இருபுறமும் வேலி இருந்தது. ஒரு பக்கத்தில் ஆள் உயரத்திற்கு பெரிய இலைகளோடு சென்ட்டு மல்லிச் செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றில் செண்டாக வெள்ளைப்பூக்கள், அதன் வாசம் எங்கும் நிறைந்து மனதை மயக்கிக் கொண்டிருந்தது.

இரண்டு அழுக்கடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துவந்து போட்டான் உட்கார்ந்த கோபாலன் தனக்கே உரிய தோரணையில், “உன் பேரு என்ன?”

“சகாயம், இது என்னோட தங்கச்சி நீலு.”

“நீங்க மட்டுந்தான் இங்க இருக்கீங்களா?”

“ஆமாம் இவளுக்குப் புருஷன் இல்லை, ஞான் கல்யாணம் கழிக்கல”

“என்ன வேலை பாக்கறே நீ?”

“ஓட்டல்ல சப்ளையரா இருக்கேன்”

பேசிக் கொண்டிருந்தபோது, சரியாக இருந்த சேலையைச் சரி செய்து கொண்டே இரண்டு பீங்கான் கோப்பைகளில் தேனீரை எடுத்துவந்தாள் அந்தப் பெண். கோபாலனிடம் கோப்பையைக் கொடுக்கும்போது தானே தவறியதா, வேண்டுமென்றே தட்டியதா தெரியாது கோபாலன் மீது தேனீர் கொட்டிவிட்டது.

“அடடா, சட்டையெல்லாம் கறையாகிடும் நீலு அழைச்சிட்டுப்போ , தண்ணி எடுத்துக் குடு.”

கடுப்பான டிரைவர் ‘ சார் நான் வண்டிக்குப் போறேன்’ என்று நடந்தார்.

குடிசையின் உள்ளே அழைத்துச் சென்றாள், பின்புறம் இருந்த தொட்டியிலிருந்து அலுமினியக் குவளையில் தண்ணீரை மொண்டு கையில் அள்ளி தேனீர் பட்ட இடங்களில் தானே துடைத்தாள். அவள் முடிந்திருந்த கொண்டையில் செருகியிருந்த செண்டுமல்லி இவர் நாசியைத் தொட்டது.

இந்த நேரத்தில் சகாயம், “நீலு, நான் போய் டிபன் வாங்கி வரேன், சாருக்கு வேற சாயா போட்டுக் கொடு” என்று குரல்தந்து நகர்ந்தான்.

“சார் சட்டை முழுசா நனைஞ்சிடுச்சே” என்று தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள்.

“பரவாயில்ல, வேற சட்டை மாத்திக்கறேன்”

“அப்போ சரி” என்று அவர்மீது சாய்ந்தாள் நீலு.

கோகிலாவின் இடத்தில் வேறு எந்தப் பெண்ணையும் நினைத்தும் பார்க்காத கோபாலன் சறுக்கிய நேரம் அது. அரைமணி நேரத்தில் புதிய சொர்கத்தைக் காட்டிவிட்டாள் அவள்.

வண்டிக்கு வந்த ஓட்டுநர் தானே போன் செய்து டாக்சியை வரவழைத்துவிட்டார். இவரை அலைபேசியில் அழைத்து “வண்டி வந்திடுச்சு சார் வாங்க”என்றார்.

தனது விசிட்டிங் கார்டை அவளிடம் தந்துவிட்டு, “வண்டி செலவுக்கு வெச்சுக்கோ” என்று இரண்டாயிரம் ரூபாயைத் தந்துவிட்டு மனைவியிடம் விடைபெறுவது போல் விடைபெற்றார்.

அதோடு தொலைந்திருந்தால் பரவாயில்லை, “நீலு இந்த ஆளு பெரிய வேலையில இருக்கான்,”

“ஆமா வளைச்சிப் போட்டா நாம இந்த குடிசையில் இருக்க வேணாம், அது உன்னோட சாமர்த்தியம்.”

“நானு அவனோடப் போனா நீ இன்னா பண்ணுவே,?”

“உன்னைப் பாக்காம இருக்க முடியாது”

“அப்போ எப்பிடி?”

“கொஞ்ச நாளு போனதும் தோட்டக்காரனா வந்துடுவேன்.” என்று சொல்லிச் சிரித்தான். நிஜத்தில் அவர்கள் அண்ணன் தங்கை உறவு இல்லை..

இரண்டு மூன்று முறை அவளை வரவழைத்து ஹோட்டலில் தங்கினார். நீலுவின் சகவாசத்திற்கு வேறு இடத்தில் இருந்தால் வசதி என்று மாறுதல் கேட்டு முயன்று கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்ற தகவல் வந்துள்ளது.

இப்போது கோகிலா பத்து நாட்கள் வரமாட்டாள் அதோடு அன்னம்மாவும் பணத்தை வீசினால் வாய்மூடி இருப்பாள் என்று தப்புக் கணக்குப் போட்டு அவளை வரவழைத்து விட்டார்.நான்கு நாட்களாக அன்னம்மா சமையல் செய்து தர ஆனந்தம் தொடர்ந்தது. இவளைக் கண்டு அதிர்ந்த அன்னம்மா வெறுப்பும் ஆத்திரமும் மண்டி என்ன செய்வது , எப்படியாவது பக்குவமாகச் சொல்லி கோகிலாவை இந்த மனிதனைத் திருத்த வேண்டும் அது தன் கடமை என்று தவித்துக் கொண்டிருந்தாள்,  இந்த சமயத்தில்தான் கோகிலா வந்தாள்.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 10) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 11) – மீனாட்சி சுந்தரமூர்த்தி