in , ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 14) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

கோபாலனின் புதுவாழ்க்கைக்கு முடிவுரை எழுத காலதேவனுக்கு இரண்டு ஆண்டுகளானது. புதுமணம்கொண்ட இளைஞர்கள் கூட இத்தனை மோகத்தில் திரிய மாட்டார்கள். விதவிதமான உடைகளை,நகைகளை வாங்கிப் போட்டு அழகு பார்த்தார். ஆனால் ஒன்றை இங்கு நாம் சொல்லியே ஆகவேண்டும்.

நல்ல ஒழுக்கத்தை இன்னொரு பெண்ணின் கணவனோடு தொடர்பு வைத்திருப்பவளிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏற்கெனவே பேசி வைத்தபடி சகாயமும் தோட்டக்காரனாக இருக்கிறேன் என்று வர நீலு சொன்னதால் வேலைக்கு வைத்துக்கொண்டார்

ஒருமுறை நீலு, “என்னங்க, எனக்குனு, எங்க ஊர்ல ஒரு வீடு வாங்க மாட்டீங்களா”

“வாங்கிடலாம்” என்றவர் அடுத்த ஆறே மாதத்தில் கோட்டயத்தில் கேரளத்துப் பாரம்பரிய வீட்டை வாங்கி அசத்தினார். அங்கே சென்று பத்துநாள் தங்கி விட்டும் வந்தார்கள். அதுமட்டுமா, அவளுக்கொரு வங்கிக் கணக்கைத் தொடங்கி   அதில் அவ்வப்போது  நிரப்பிக் கொண்டும் வந்தார்.

ஒருநாள் மதியமே அலுவலகத்திலிருந்து வந்த கோபாலன், “நீலு,இங்க வா,” என்று அருகிலிழுத்து அவள் கண்களைப் பொத்தி கையில் வங்கிக் கணக்குப் புத்தகத்தைத் தந்து, “இதைப் பாரு” என்றார்.

“என்னது?” என்று அதைத் திறந்து பார்த்தாள். அவள் கணக்கில் பத்துஇலட்சம் சேர்ந்திருந்தது, அதோடு ஒரு சிறிய வெள்ளைப் பெட்டியில் வைரத்தோடும்,ஜிமிக்கியும் இருந்தது.

சந்தோஷத்தில் அவரைக் கட்டிக்கொண்டாள் நீலு.எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தாளோ அவளுக்குப் பாஸ்போர்ட் வாங்கி வெனிஸ், நயாகரா, பாரீஸ், ஜப்பான்,சீனா என்று அழைத்துச் சென்றார். அவளை மகாராணிபோல் நடத்தினார்,தாங்கினார், பித்தாகிக் கிடந்தார்

அவரை அடிமை கொள்ளும் கலை அறிந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல் அறுபதை நெருங்கிக் கொண்டிருந்த கோபாலனுக்கு இது ஒரு நோயா, சாபமா என்று தெரியவில்லை. நம்பிக்கைத் துரோகத்தைப்போல் கொடிய பாவம் எதுவுமில்லை என்பது இரண்டே வருடத்தில் தெரிந்தது. டார்ஜிலிங் சுற்றுலா சென்றபோது மலைப்பாதையில் இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. அதில் அந்தப் பெண் இலேசான காயங்களுடன் தப்பித்தாள்.

மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த கோபாலனுக்கு இது மிகப்பெரிய இடியாக இருந்தது. முதலில் அங்கிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர் காவல் துறையில் உயர்பதவியில் இருந்ததனால் துறையின் தனிக்கவனிப்பு கிடைத்தது. டெல்லியில் இருந்த சிறந்த மருத்துவமனைக்கு இவர்கள் மாற்றப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. காரை ஓட்டிவந்த ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு  பள்ளத்தில் விழுந்திருந்தார். கையில் எலும்பு முறிவு,கோபாலனுக்கு  நல்லவேளை தலையில் அடிபடவில்லை, ஆனால் கால்களில் பலத்த அடி, அதிலும் வலது கால் எலும்புகள் நொறுங்கிப் போயிருந்தன.

மருத்துவமனையில் யாருக்குத் தகவல் சொல்வது என்று கேட்டனர், எந்த முகத்தோடு மனைவி,மக்களுக்கு இல்லை மைத்துனர்,தங்கைக்குச் சொல்வது அதனால் யாருக்கும் வேண்டாம் என்று சொல்லி விட்டு சகாயத்திற்கு மட்டும் சொல்லச் சொன்னார்.

மருத்துவர்கள் வலது முழங்காலை அகற்றியே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டனர். வேறு வழியின்றி உடன்பட்டார். வலது காலில் முழங்கால் வரையில் நீக்கி சிகிச்சை அளித்தனர். ஒருமாதம் கடந்தது, இப்போது தேறி விட்டார்.மருத்துவர் வந்து, ”கோபால் நீங்கள் பூரண குணம் அடைந்துவிட்டீர்கள்,இரண்டொரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகலாம்”

”மிக்க நன்றி சார்” என்றார்.

காலை இழந்த மனிதருக்கு செய்த பாவத்தின் சம்பளம் இது என்ற புத்தி வரவே இல்லை, மாறாக இதோடு உயிர் பிழைத்தது நீலுவோடு வாழ்வதற்கு கிடைத்த இறைவனின் கருணை என்று நினைத்துக் கொண்டார்.

சிறிய காயங்களுடன் மீண்ட நீலுவை அழைத்துச் செல்ல சகாயம்வந்திருந்தான். கோபாலனின் அறைக்குள் வந்த நீலு, “என்னங்க நான் போயிட்டு வரேன்,”

“என்ன நீலு, , எங்க போறே?”

“எந்தா சாரே, அவளொடெ புருஷன் உண்டு, “

”அவன் இல்லைன்னு சொன்னியே..”

“அது ஒரு பொய் சாரே,ஞான்தான் அவளொடெ புருஷன்.”

“நீ அண்ணன்தானேடா” நீலு என்ன இதெல்லாம்?”

“இவருதான் என்னோட புருஷன்,வருமானம் இல்லாததால உங்ககூட வந்தேன்.”

இதைக் கேட்ட எந்த மனிதனுக்கும் ஆத்திரம்தான் வரும், இந்த மோகத்தில் மூழ்கிய மனிதரோ, “சரி ஏதோ விடு,இவங்கிட்ட ஏதாவது பணத்தைக் கொடுத்து அனுப்பிடறேன்”

“டேய் சகாயம், உனக்கு அஞ்சு லட்சம் தரேன்,இவளை விட்டுட்டுப் போயிடு”

“அது முடியாது சாரே, இவ என்னோட வரணும்”

ஆக, சிறந்த பெண்களுக்காக மட்டும்தான் போட்டி போடுவார்கள் என்று நாம் நினைத்திருந்தால் அது சரியல்ல என்று நிரூபித்துக் கொண்டிருந்தார் கோபாலன்.

“டேய் நீ கொஞ்சம் வெளியில இரு, நீலுவோடப் பேசணும்.”

நீலு தலையசைக்க அவன் அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே வெளியேறினான்.

கோபாலன் நீலுவின் கரத்தைப் பற்றி அருகில் இழுத்து உட்காரவைத்தார். ”நல்ல வேளை, உனக்கு ஒண்ணும் ஆகலை,” என்று அவள் கையைத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டார்’

“என்னால இனிமேல் வேலைக்குப் போக முடியாது”

‘அதனால’

“இன்னும் ரெண்டு வருசந்தான் இருக்கு, நான், வி.ஆர்.எஸ், வாங்கிடறேன்.”

‘ம் ..சரி’

“கெடைக்கற பணத்துல யாருக்கும் எதுவும் தர வேண்டியதில்லை, ஒரு வீட்டை ஊட்டியில் வாங்கிட்டு மீதியை வங்கியில் போட்டு வைத்துக்கொள்ளலாம், இருக்கற வீட்டையும், மற்றதையும் மகனுக்கும்,மகளுக்கும் எழுதித் தந்துடறேன்.”

“நல்லாதான் கணக்குப் போடறே சாரே”

“எனக்கு எப்படியும் ஒரு இலட்சம் பென்ஷன் வரும். அது நமக்குப் போதும், நிம்மதியா இருக்கலாம், இன்னும் ரெண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. சரி இப்ப நான் என்ன சொல்றேன்னா. எனக்கு கால் போயிடுச்சேன்னு கவலைப் படாதே, ரெண்டு மாசத்துல ஜெய்ப்பூரிலிருந்து செயற்கைக் கால் வரவழைச்சுப் போட்டுக்கலாம்.”

“நான் சொல்றதக் கேளுங்க.”

“சொல்லு நீலு, காலமெல்லாம் நீ சொல்றதைதான் கேக்கப் போறேன்.”

“நீங்க போட்ட நகைங்க 20 பவுன் இருக்குது, எம் பேருல கோட்டயத்துல வாங்குன வீடு இருக்குது, எம் பேர்ல பேங்கில் நீங்க போட்டு வச்ச 10 இலட்சம் இருக்குது.”

“இருக்கட்டும் நீலு, இன்னும் நீ கேட்ட வைர நெக்லஸ், வைர வளையல் ஆறு, கடையில ஆர்டர் கொடுத்திருக்கு, வந்ததும் வாங்கிடலாம்”

“அதெல்லாம் வேணாங்க, எனக்கு இதுவே போதும்.”

“என்னம்மா சொல்றே?”

“கால் ஒடைஞ்ச உங்களுக்குப் பணிவிடை பண்ணிட்டு இருக்க முடியாது.”

“இதுக்கா பயப்படறே, உதவிக்கு ஆளை வச்சுக்கலாம்.”

சரக்கென்று எழுந்து கொண்டாள், “யோவ், உனக்கு சொல்றது புரியலையா, நொண்டியோடு வாழணுமா நானு. உன்னப் பாக்கவே புடிக்கலை, உம் பொண்டாட்டிக்கிட்டப் போ, பார்த்துக்குவா” என்று சொல்லிவிட்டு நடந்தாள் நீலு. பணிவும், கொஞ்சலும் கெஞ்சலுமாக மட்டுமே பார்த்தவளின் உண்மைமுகம் பார்த்து அதிர்ந்து போனார்.

“போடி, நீ நல்லாவே இருக்க மாட்டே” என்று கத்தினார். இயலாமை, ஏமாற்றம் மோகத்தைத் தெளியவைத்தது.சந்தனம் என சேற்றை வாரிப் பூசிக்கொண்டு திரிந்த தன்மீதே வெறுப்பு வந்தது.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 13) – மீனாட்சி சுந்தரமூர்த்தி