in

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 11) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

இராமசாமிக்கும் சொர்ணத்திற்கும் கிராமத்தை விட்டு வர மனமில்லை. நகரத்தில் வீட்டுக்குள்ளேயே வளைய வருவது அலுத்துப்போகிறது. அதனால் அவ்வப்போது வந்து சித்தார்த்தனின் வீட்டில் தங்கி கோயில், திருவிழா காண்பார்கள். அவர்களையும் மனைவியையும் காசி,ஹரித்துவார், ரிஷிகேஷ் அழைத்துச் சென்றார் சித்தார்த்.

அல்லியின் மகளை மணந்துகொள்ள விரும்பினான் கோகிலாவின் மகன் குமரன். அவளுக்கும் விருப்பம். அல்லியின் மகன் கோகிலாவின் தோழி சகுந்தலாவின் மகளை விரும்பினான்,அவளும் விரும்பியதால் இரண்டு திருமணங்களையும் நாகையில் ஒரே நாளில் ஒரே மேடையில் நடத்த முடிவு செய்தார்கள்.

அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இந்த சமயத்தில் நிறைவாக வாழ்ந்து ஒரே நாள் காய்ச்சலில் படுத்த இராமசாமியைக் காலன் அழைத்துக் கொண்டான். அவரது இறுதிச் சடங்குகள் முடிந்ததும் உறவுகள் அவரவர் ஊர் திரும்பினார்கள்.

அண்ணனும், அண்ணியும் அம்மாவோடு இருந்தாலும், தானும் அங்கு சிலநாட்கள் இருக்க விரும்பினாள் கோகிலா. அதனால் விடுமுறையை நீட்டித்தாள். கோபாலன் தனக்கு முக்கியமான அலுவல் இருக்கிறது என்று ஊருக்குப் புறப்பட்டார்.

ஒருவாரம் கடந்தது

“அண்ணா நான் ஊருக்குப் போகிறேன்”

“என்னம்மா திடீர்னு ஊருக்குக் கெளம்பறேங்கறே”

“ஏதோ ஒரு மாதிரி மனசு சரியா இல்லை”

“தங்கம் கோகிக்கு ஒடம்பு சரியில்ல போல, கவனிச்சியா?”

“அண்ணா அதில்லே, ரெண்டு நாளா இவரு பேசல”

“அதனாலென்னமா, வேலை நெருக்கடியா இருக்கும்”

“என்னவா இருந்தாலும் ஒரு நிமிடமாவது பேசுவாரு”

“சரிம்மா, நாளை விடிகாலையில நாம ரெண்டு பேரும் கெளம்பலாம்”

“அண்ணா நான் மட்டும் போறேன், போயிட்டுப் பேசறேன், இங்கே உங்களுக்கு வேலை இருக்கு”

“சரிம்மா, நம்ம வாசுவை ( ஓட்டுநர்)வரச் சொல்றேன்.”

மறுநாள் காலையில் அம்மாவிடம் தைரியமாய் இருக்கச் சொல்லிவிட்டு, அண்ணன், அண்ணியிடம் விடைபெற்றாள். வயல்வெளிகளை, சிறிய கடை வீதிகளை, தோப்பு, துரவுகளைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தது வண்டி. பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு விட்டாள். கேட்டைத் திறக்க வந்த வாட்ச்மேன், தயங்கியபடி வணக்கம் வைத்தார். அன்னம்மா வீட்டில்தான் இருப்பாள். இவர்கள் எங்காவது சென்றால் அவள் இங்கேயே தங்கிவிடுவது வழக்கம்.

போர்டிகோவில் நின்றது வண்டி, அன்னம்மா கதவைத் திறந்து நின்றிருந்தாள். இவள் கைப்பையுடன் இறங்கியதும் டிக்கியைத் திறந்து இவளது பெட்டியை எடுத்து வாசு உள்ளே கொண்டு வந்து வைத்தார் ,

“என்ன பாப்பா’ எல்லாம் முடிஞ்சுதா, சொல்லவே இல்லையே?”

“ஆமாம், அன்னம்மா ‘வாசுவிற்கும் சாப்பாடு ரெடி பண்ணுங்க .“

“வேண்டாம்மா, நான் உடனே கெள்மபறேன்,ஒரு வேலை இருக்கு”

“சரி, ரொம்ப நன்றி,பத்திரமா போங்க” என்று அவரை அனுப்பினாள்.

“அம்மா எனக்கு ஒரு காபி வேணும்,” என்று தங்கள் அறைக்குச் செல்ல முற்பட்டவளை,

“இந்தா இப்ப கொண்டுவரேன், சோபாவுல உக்காரு பாப்பா”

“இல்ல நான் போய் சேலைய மாத்தணும்,” என்று நடந்தாள்.

அறைக்கதவு சாத்தியிருந்தது, உள்ளே கலகலவென்ற சிரிப்பு, சிணுங்கல், ஒன்றும் புரியாமல்,’ டி.வியை நிறுத்தாமலே கிளம்பிவிட்டாரோ கணவர் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள். தாழிடப்படாத கதவு மட்டுமா, மறைந்திருந்த இரகசியமும் திறந்து கொண்டது. கோகிலத்தைவிட இரண்டு அல்லது மூன்று வயது குறைவாக இருக்கும் பெண்ணொருத்தியின் மடியில் படுத்திருந்தார் கோபாலன், அவரது தலையைக் கோதி விட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.

நல்லவன் எப்போதுமே அப்படியே இருப்பான் என்று உறுதியாகச் சொல்லிவிட முடிவதில்லை. அதற்கு காரணங்கள் ஆயிரம் உண்டு என்றாலும் அதையும் கடந்து வாழ்பவரே வாழ்வில் வெற்றி பெற்ற மனிதராக முடியும். கட்டுப்பாடு கடந்து சூழலின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்வது இயலாமையை இன்னும் சொல்லப்போனால் கயமையை மட்டுமே காட்டும். எத்தனை மிருகமாக நடந்து கொண்டோம் என்று கண் கெட்டபின் நினைத்து ஆவது ஏதுமில்லை.

மனைவியின் திடீர் வரவால் அதிர்ந்த கோபாலன் அவசரமாக எழுந்து லுங்கியைச் சரியாக கட்டிக் கொண்டார். நைட்டியிலிருந்த அந்தப்பெண் அப்படியே எழுந்து நின்றாள்.

வானம் இடிந்து தலையில் விழுந்ததா?, பூமி சுழல்கிறதா, மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்து கொண்டிருக்கிறாளா? கடலின் இராட்சத அலைகள் அவளை இழுத்துக்கொண்டு போகிறதா? நிலை கொள்ளாமல் சாய்ந்தவளை அன்னம்மா தாங்கிக் கொண்டாள்,

‘வா பாப்பா’ என்று அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தாள்.

கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் கோபாலன் அந்தப் பெண்ணோடு வந்து எதிரிலிருந்த சோபாவில் உட்கார்ந்தார்.

“அன்னம்மா மூணு பேருக்கும் காபி போட்டுட்டு வாங்க”

“இல்ல தம்பி, என்னால போட முடியாது, இந்த நாலு நாளும் பாப்பாவுக்காகதான் காத்துட்டு இருந்தேன்”

“அப்போ உடனே வெளிய போங்க”

“போவத்தான் போறேன், ஆனா அதுக்கு முன்னாடி பாப்பாவுக்கு ஞாயம் கேட்டுட்டுப் போறேன்”

“என்ன பெரிய ஞாயம், அத கேக்க நீ யாரு?”

“தம்பி நீஙக பெரிய அதிகாரி, தப்பை யாரு வேணாலும் கேக்கலாம்னு தெரியாதா?

“பாப்பா என் மக மாதிரி, இந்த பொம்பளை சகவாசத்தை விட்டுடுங்க,”

“மொதல்ல நீயா வெளிய போறியா, இல்ல கழுத்தைப் புடிச்சித் தள்ளிடுவேன்”

“தம்பி பொல்லாத மோகம் உன் கண்ணை மறைக்குது, திருந்தலேன்னா நல்லாவே இருக்க மாட்டே”

“பாப்பா இப்ப போறேன், தைரியமா இரு, சாவற வரைக்கும் நானு உனக்குத் துணையா இருப்பேன்”

“ஒருவாறு சமாளித்துக்கொண்ட கோகிலம், ‘அன்னம்மா நீங்க இருங்க.” என்று சொல்லி விட்டு தன் கணவனோடு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தவளை, “ஏய் யார் நீ,இங்கே உனக்கு என்னவேலை? வெளிய போ”

“நானு யாருன்னு இந்த மன்மதனைக் கேளுக்கா”

“என்ன மோசமா பேசற…மரியாதையா வெளிய போயிடு”

“ஏங்கா கோவப்படறீங்க, நீங்க வீட்டப் பார்த்துக்கங்க, நானு இவரைக் கவனிச்சுக்கறேன்.”

“ஆமாம் கோகிலா இவ சரியாதான் சொல்றா..” என்ற கோபாலனைப் பார்த்து,

“மலைபோல நம்பியிருந்தேன், துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது?” என்று கண்ணீரும், சினமுமாய்த் திகைத்து தலையில் படார்படாரென அடித்துக் கொண்டாள்.

ஆத்திரமும் ,அழுகையுமாய் வெளியில் நின்றிருந்தாள் அன்னம்மா.

“நீ வா நீலு, நாம வெளில போய் சாப்பிட்டு வரலாம்” என்று நகர்ந்தவரின், சட்டையைப் பற்றி இழுத்து ,

“நான் என்ன குறை வச்சேன், இது ஞாயமா?”

“கோகிலா புரிஞ்சுக்கோ, இவளுக்கு யாரும் இல்ல, அதனால விட முடியாது”

“அப்போ சரி , இந்த வீடு , உங்க அம்மா பார்த்துக் கட்டுன கோயில், இங்கே திருந்தி வந்தா வாங்க, இல்ல வராதீங்க”

“அட போடி, எல்லாம் எனக்குத் தெரியும்” என்று கோகிலாவின் கையைத் தள்ளினார் கோபாலன்.

ஆத்திரமும் அழுகையுமாய் அவருடைய சட்டையைப் பற்றிக் கிழித்து கோபாலனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் கோகிலா.

அவ்வளவுதான், ” என்ன திமிருடி, என்று அவளைப் பிடித்துத் தள்ளி மிதித்து, “இங்கேயே உன்ன கொன்னு புதைச்சிடுவேன், ஒழுங்கா இரு” என்று கத்திவிட்டு வெளியேறினார். தலை மேஜையில் மோதியதில் நெற்றியில் அடிபட்டுமயங்கிச் சாய்ந்தாள்..

என்னசெய்வதென்று அறியாமல் தவித்துக் கொண்டு வெளியில் நின்றிருந்த அன்னம்மா, திருநாவை அழைத்துவரலாம் என்று ஓடினாள். அன்றுதான் ஓட்டுநர் திருநாவை மாமல்லபுரம் செல்வதற்காக இரண்டு மணிக்குப் புறப்படலாம் என்று வரச் சொல்லியிருந்தார் கோபாலன்.

திருநாவுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது, மகனுக்குத் திருமணம் வைத்திருப்பதால் அழைப்பிதழ் தருவதற்காக இருவரும் புறப்படுவதாக எண்ணிக்கொண்டு வந்தவர் கோகிலா வருவதற்கு முன் அன்னம்மாவிடம் கார் சாவியை வாங்கிக் கொண்டு காரைத் துடைத்துவிட்டு காத்திருந்தார். அப்போது அவருடைய மனைவியின் அழைப்பு, ”என்னங்க, உங்க டூவிலர்ல என்னோட செல்போன் இருக்குது,”

”காலையில கோயிலுக்குப் போறப்போ வெச்சதா?”

”ஆமாங்க, கொஞ்சம் தந்துட்டுப் போங்களேன்’ என்றாள்.

வீட்டிற்குச் சென்று இரண்டு மணிக்குள் வந்து விடலாம் என்று சென்றிருந்தார்.

இவர் காரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு ஓடிவந்தாள் அன்னம்மா. அங்கு அவரைத் தேடியபின் ஒருவேளை வாட்ச்மேனிடம் பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று வாயிலுக்கு வந்தாள். அங்கு வாட்ச்மேனிடம் கேட்டபோது இப்போதுதான் வெளியில் சென்றார் திருநாவு என்றார். இந்த சமயத்தில் காரின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது, இவள் மாமரத்தின் பின்னால் மறைந்தாள்.

காரை கேரேஜிலிருந்து எடுத்து கோபாலன் ஓட்டிக்கொண்டுவர பக்கத்தில் முன்னிருக்கையில் நீலு ஒய்யாரமாய்ச் சாய்ந்திருந்தாள். சாலையில் திரும்பி வேகமெடுத்தது வண்டி. இதே நேரத்தில் வீட்டிலிருந்து திரும்பி வந்தார் திருநாவு. அன்னம்மா வீட்டிற்கு ஓடினாள், தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தோட மயங்கிச் சாய்ந்திருந்த கோகிலாவைக் கண்டு ‘ஐயோ’ என்று அலறினாள். இதைக் கேட்டு ஓடிவந்தனர் வாட்ச்மேனும், திருநாவும்.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 12) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 13) – மீனாட்சி சுந்தரமூர்த்தி