இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
சித்தார்த் தன் தங்கையைப் பார்க்க வந்தபோது ஒருமுறை கோபாலனிடம் அவனைப் பற்றிக் கேட்கிறான், தந்தையார் நாகையில் பழக்கடை வைத்திருப்பது பற்றியும் தனது இலட்சியம் பற்றியும் சொல்கிறான் கோபால்.
“கோபால் நீங்க நல்லா படிச்சு, அவங்களை பெருமைப்படுத்துங்க.”
ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டான் கோபாலன். அதே விடுதியில் தங்கிப் படித்து அடுத்த ஆறு மாதத்தில் ஐ.பி.எஸ் தேர்வையும் எழுதிவிட்டான். விடுதியைக்காலி செய்துவிட்டு, புறப்படும் முன் கோகிலாவைச் சந்திக்க வேண்டும் என்று சிவாவிடம் சொல்கிறான். மெரினா கடற்கரையில் எல்லோரும் சந்திக்க ஏற்பாடு செய்கிறான் சிவா.
விமலா, சாந்தி, சகுந்தலா சிவா எல்லோரும் இவர்கள் பேசட்டும் என்று தனியாக விட்டுச் செல்கின்றனர்.
. ‘என்ன கோபால், பரீட்சை நல்லா எழுதியிருக்கீங்க, அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க’
‘ கோகிலா உங்க அண்ணன் என்னைப்பற்றிச் சொல்லியிருப்பார்’
‘ ஆமாம் , சொன்னார்’
‘அதைபற்றி என்ன நினைக்கறே’
உங்கள் இலட்சியக்கனவு உயர்வானது
‘அப்புறம் என்னைப் பற்றி’
‘நீங்க நல்லவர், வல்லவர்.’
‘இந்த டயலாக் வேண்டாம் கோகி’
‘வேற என்ன சொல்லணும் கோபால்’
‘நானே சொல்றேன், உன்னை என் உயிரா நெனைக்கறேன் உன்னோடு என் மூச்சு இருக்கும் வரை இருக்க விரும்பறேன்’
திகைத்து நின்றவளிடம், “என்னைப் பிடிச்சிருக்கா? இத்தனை தைரியமாகப் பேசியவளால் பேச முடியவில்லை, என்ன சொல்வதெனத் தலை கவிழ்ந்தாள் நாணத்தில்.
“சொல்லு கோகி” என்றவனிடம் பேச முடியாமல் ஆமாம் என்று தலையசைத்து நாணத்தில் தலைகவிழ்ந்தாள். சந்தோஷத்தில் அவள் கரத்தைப் பற்றி தன் நெஞ்சில் வைத்துக் கொண்டான் கோபால்.
அதோடு தன் அன்புப் பரிசாக ஒரு அழகான கைக்கடிகாரத்தை அவள் கையில் கட்டிவிட்டான்.
‘ இது எதுக்கு?’
‘உனக்கு ரொம்ப உதவியா இருக்கும் என்னை நினைக்க.’
“எப்போ கெளம்பறீங்க?”
“நாளை காலையில் புறப்படுவேன், தேர்வு முடிவு வந்ததும் சொல்கிறேன், படிப்பில் கவனம் செலுத்து, “என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு, உங்க அண்ணனுக்கு அழைப்பு தருகிறேன்”
“ஓ வாழ்த்துகள், மாப்பிள்ளை என்ன செய்கிறார்?”
“என் சின்ன அத்தையின் மகனுக்குதான் தருகிறோம்,அவர் தபால்காரராக இருக்கிறார்.”
அதற்குள் திரும்பிவந்த நண்பர்கள் என்ன பேசிட்டீங்களா’ என்று கேலி செய்துகொண்டே வந்தனர். தோழியர் விடுதிக்குத் திரும்பினர்.
இரண்டு மாதங்களில் இறுதித் தேர்வு எழுதிவிட்டு கோகிலா ஊருக்குத் திரும்பிவிட்டாள். கோபாலனின் தங்கை அல்லி மூன்றரை ஆண்டுகள் செவிலியர் பயிற்சி முடித்து வேலைக்குக் காத்திருந்தாள், கலிவரதன் திருமண ஏற்பாடு செய்துவிட்டார்.
அல்லியின் திருமணத்திற்கு சித்தார்த்தன் வந்து கலந்துகொண்டார். கமலத்திடம் கோபாலன் கோகிலாவைப் பற்றியும் .அவளுடைய அண்ணன் சித்தார்த்தனை அழைப்பதையும் சொல்லியிருந்தான். .சித்தார்த்தன் பழகும் விதம், பண்பு பார்த்ததும் பிடித்துப் போனது கமலத்திற்கு. அல்லியின் திருமணத்தில் அத்தைகள் கோபாலனின் திருமணம் பற்றி கமலத்திடம் கேட்டனர்.கடைசி அத்தையின் மகள் பி.காம் முடித்திருந்தாள். ஆனால் சாதுரியமாக கமலம் அந்தப் பேச்சைத் தவிர்த்துவிட்டாள்.
அல்லி திருமணமாகி கணவர் இல்லம் செல்லவும், கோபாலனின் தேர்வு முடிவு வெளியாகவும் சரியாக இருந்தது. தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருந்தான். கலிவரதன் மகனை ஆரத்தழுவி மகிழ்ந்தார். கமலம் ஆனந்தக் கண்ணீர் மல்க மகனைக் கட்டிக்கொண்டாள். அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று அர்ச்சனை செய்தாள்.அது மட்டுமா, மகனுக்கு கண் பட்டுவிடப் போகிறது என்று திருஷ்டி கழித்தாள்.
கோபாலன் சித்தார்த்தனின் அலுவலகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான், ‘சொல்லுங்க கோபால்,நல்லா இருக்கீங்களா?
‘நல்லா இருக்கோம். இந்திய அரசுப்பணிக்கு எழுதிய தேர்வில் மூன்றாம் இடம் கிடைத்திருக்கிறது.’
‘ரொம்ப சந்தோஷம், ஊருக்கு வாங்க ”
‘இல்ல சித்தார்த். டிரெயினிங் இருக்கும் அதை முடிச்சிட்டு வரேன், கோகிலாவிடம் சொல்லுங்க’
கோபால் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டான். பெற்றோர் ஆசீர்வதிக்க இரண்டாவது முறையாக இரயில் பயணம்.
டில்லியில் நேர்காணலில் தேர்வாகி காவல்துறை உயர் பணிக்கானப் பயிற்சிக்காக ஐதராபாத் அனுப்பப்பட்டான். உதவித்தொகையும் இந்தப் பயிற்சிக் காலத்தில் தரப்பட்டது. இப்போது கோகிலா பி.எச்.டி சேர்ந்திருந்தாள், வாரம் ஒருமுறை விடுதித் தொலைபேசியில் பேசலானான் கோபால்.
“கோபால் கடினமான டிரெயினிங்னு கேள்விப்பட்டேன்”
“ஆமாம் கோகிலா, அதுதான் உடலை வலுவாக்கும். சவால்களைச் சமாளிக்க உதவும்”
“சரி நல்லா சாப்பிடுங்க,”
“சரி கவனமா படித்து நல்லபடியா ஆராய்ச்சியை முடி,அடுத்தவாரம் பேசுகிறேன்” என்று தொலைபேசியை வைத்தான்.
ஐதராபாதில் காவல்துறை மேலாண்மை சார்ந்த நேர்முகப் பயிற்சியிலும் அதிகாரிகளின் நற்சான்றிதழ் பெற்றான்.பயிற்சியை வெற்றிகரமாக முடித்து ஏ.டி.எஸ்.பி ஆக அஸ்ஸாம் மாநிலத்தின் ஓரிடத்தில் முதல் பணி ஏற்றார் கோபாலன். இதைக் கோகிலாவின் அண்ணன் சித்தார்த்திடம் அலைபேசியில் சொன்னார்,
“சித்தார்த் எனக்குப் போஸ்டிங் அஸ்ஸாம் மாநிலத்தில் கிடைச்சிருக்கு.”
“உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் கோபால்.”
“சித்தார்த் நான் ஊருக்கு வருவேன் உங்களைச் சந்திக்கிறேன்” என்று அலைபேசியை வைத்தார் கோபால். இனி நாம் இவரை இப்படியே அழைப்போம்.
பணிநியமன ஆணையைப் பெற்றுக்கொண்டு நாகை திரும்பினார் கோபாலன். தாயும் தந்தையும் போரானந்தத்தில் திளைத்தார்கள். அல்லியும், மாப்பிள்ளையும், இன்னும் அத்தைமார்களும் பெருமைப்பட்டார்கள். இப்போது கோபாலனுக்கு கோகிலாவைப் பார்த்து வெகுநாட்களாகி விட்டதே, பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது.சித்தார்த்திடம் பேசினார்,
“சித்தார்த் நான் கோகிலாவைப் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா?”
”தாராளமாக, வெள்ளிக்கிழமை மாலை அவளை இங்கே நெல்லைக்கு வரச் சொல்கிறேன்”
“நன்றி , நான் சனிக்கிழமை வருகிறேன்.”
இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன, ஆனால் அது ஒரு யுகமாகத் தோன்றியது அவருக்கு,
சனிக்கிழமை காலையிலேயே புறப்பட்டு ஒன்பது மணிக்கு வந்தவரைப் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றார் சித்தார்த். சித்தார்த்தின் மனைவி தங்கம் பெயருக்கேற்றபடித் தங்கமானவள், அன்பாக வரவேற்றாள். கோகிலாவிற்கு புதிதாக நாணம் வந்து குடிகொண்டது கோபாலனின் எதிரில் வரத் தயங்கினாள்.
இரண்டு வயது மகன் மாமா என்று அழைத்து கோபாலனோடு விளையாடினான். காலைச் சிற்றுண்டி கோகிலா பறிமாறினாள். கோபாலன் வானில் பறப்பதுபோல் மகிழ்ந்தார்.
“அக்கா இந்தாங்க இது உங்களுக்குப் பிடிச்சிருக்கா பாருங்க”
“தம்பி எனக்குப் பிடித்த பச்சை நிறச் சேலை அருமை.”
“சித்தார்த் உங்ளுக்கு இது”
“அடடே சட்டை, ரொம்ப நல்லாருக்கு”
“குட்டிப் பையனுக்கு இது”
“அம்மா போட்டுவிடு” என்றான் அவன்.
“கோகிலா உனக்கு இது, இதை கட்டிட்டு வா” என்று நீலவண்ணச் சேலையைத் தந்தார்.
சித்தார்த் தனது பைக்கைத் தந்து இருவரையும் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று வரச் சொன்னார். கோவிலில் கூட்டம் இல்லை,அம்மையையும்,அப்பனையும் வணங்கி விட்டு மண்டபத்தில் உட்கார்ந்தனர்.
“கோகிலா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”
“நானும்தான்”
கோகிலாவிற்குப் பேச்சே வரவில்லை. கோபாலன் அவளது படிப்பு பற்றிப் பேசி அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார் .
“நீலச்சேலையில் என் தேவதை அழகோ அழகு,” என்று கோவிலில் தந்த குங்குமத்தை நெற்றியில் இட்டார்.
“இன்னும் ஒரு வருடத்தில் வருகிறேன். அதற்குள் ஆய்வை முடிக்கப் பார்.”
“சரிங்க சார் உத்தரவு” என்று சிரித்தாள் கோகிலா.
ஒருமணி நேரமாகப் பேசியும் ஆவல் தீராமல் வீடு திரும்பினர். அன்று மாலை எல்லோரிடமும் பிரியாவிடை பெற்று நாகை திரும்பினார் கோபாலன்.
கலிவரதன் சொந்தபந்தங்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்தார். கோபாலன் இந்தமுறை தந்தை சொன்னபடி விமானத்தில் பயணிக்க உடன்பட்டு அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். அந்த நல்லநாளில் முதன்முதலாக கோபாலன் ஐ.பி.எஸ் அஸ்ஸாமில் ஏ.டி.எஸ்.பி ஆகப் பணி ஏற்க சென்னையிலிருந்து விமானம் ஏறினார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் இந்தப் பகுதியில் மக்கள் கள்வர்களாலும், சமூக விரோதிகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், அடிதடியும், வழிப்பறியும், பெண்களுக்கெதிரான தொல்லைகளும் அதிகமாக இருந்தது. இவர் பணியேற்றச் சில தினங்களிலேயே இதைப்பற்றித் தெரிந்துகொண்டார். அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார் மேலிடத்திலிருந்து அதற்கான அனுமதியைப் பெற்றார்.
விரும்பி இந்தப்பணியை ஏற்றுக்கொண்டவர், பல நேரங்களில் இவருக்கு அச்சுறுத்தல்கள் வந்தன. அதறகெல்லாம் இவர் பயப்படவில்லை, ஆறு மாதங்களில் நிலைமையில் மாற்றம் தெரிந்தது. தானே களத்தில் இறங்கி நேருக்குநேர நிற்கும் இவரின் அஞ்சாமை பேசுபொருளானது.அதனால் குற்றங்கள் குறைந்தன. ஒருவருடத்தில் அந்த இடத்தில் அமைதியும், நிம்மதியும் மீண்டது.
இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings