in , ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 6) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்              

இங்கே கோவிலில் எள் போட இடமில்லை, அத்தனை கூட்டம், இராமசாமி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நான்கு மணிக்கே வந்துவிட்டார், அங்கே பெரிய திடலில் குடைராட்டினத்தில் ஏறிச் சுற்றினர்.கரும்புச் சாறு குடித்தனர்,

அந்தச்சாலை முழுவதுமே களை கட்டியிருந்தது. அரிவாள்மணை, ஜல்லிக்கரண்டி,, சிறிய, பெரிய வாணலிகள், இரும்பு அடுப்புகள் என்று இரும்புச் சாமான் கடைகள், விளையாட்டுச் சாமான்கள் கடை, சுவாமி படங்கள் கடை,அலுமினியப் பாத்திரக்கடை, மண், மற்றம், பீங்கானாலான விதவித பொம்மைகள் கடை, பிளாஸ்டிக் பொருட்கள் கடை, மண்சட்டிகள், பானைகள், அகல் விளக்குகள் கடை, துணிக்கடைகள் இருந்தன, பஞ்சு மிட்டாய், சிறிதும் பெரிதுமான பலூன் விற்போரும் இருந்தனர்.இவை தவிர மிளாகய் வாழைக்காய் பஜ்ஜி ,பகோடா கடைகள், அதிரசம்,முறுக்கு போளி கடைகள், கலர்,சோடா கடைகளும்,இட்டிலி, தோசை,பூரி, பரோட்டா கடைகளும் இருந்தன.

குழந்தைகள் கரும்புச்சாறு குடித்துவிட்டு, மிளகாய் பஜ்ஜி, பகோடா வாங்கித் தின்று கொண்டே கையில் பஞ்சு மிட்டாய் கடிகாரம் கட்டிக்கொண்டு குதூகலித்தார்கள்.

‘டேய் தம்பி என் கைய கெட்டியாப் புடிச்சுக்கோ’

‘சரீப்பா’

‘விட்டுடாதே, நானு பாப்பாவைத் தோள்ல தூக்கிக்கறேன்’ என்று தீமிதி பார்க்கும் கூட்டத்தில் நுழைந்தார். கூட்டம் சொல்லி முடியாது, மாரியம்மன் கோவில் எதிரில் பெரிய நெருப்புக் கட்டைகளை எரித்து உண்டாக்கிய நெருப்பு குண்டம் தககவெனத் தகித்துக் கொண்டிருந்தது. சரியாக ஆறு மணிக்கு விரதமிருந்து மஞ்சள் வேட்டி கட்டிய ஆண்களும், மஞ்சள் சேலை கட்டியப் பெண்களும் மகமாயி மகமாயி என்று சொல்லிக்கொண்டு தபதபவென பூக்குழியில் இறங்கிக் கடந்தனர்.

கோவிலின் வெளியில் ஒருபுறத்தில் அம்மன் பச்சை வண்ணச்சேலையில், மணிமுடி தரித்து மகாராணி அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவள் வீதி ஊர்வலம் வருவதற்கான சப்பரத்தை ஜோடித்துக் கொண்டிருந்தனர். தீமிதி பார்த்துவிட்டு அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்தார் இராமசாமி.

‘வீட்ல போய் சாப்பிட்டுக்கலாமா?’

‘ அப்பா இங்கயே பரோட்டா வாங்கிக் குடு.’

‘ அப்பா எனுக்கு முட்டை தோசை’

சரி என்று ஒரு கடையில் பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்துவிட்டு தானும் சாப்பிட்டார். பின்னர் மனைவிக்குப் பிடித்த மசால் தோசை மந்தார இலையில் கட்டிக்கொடுத்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டு கொஞ்ச தூரத்தில் ஒரு வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுக்க வந்தார்.

பிள்ளைகள் இருவரும் உடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். சைக்கிளின் பூட்டைத் திறந்து அங்குத் திண்ணையில் உட்கார்ந்திருந்த முதியவளிடம் ,’வரேன் தாயி’ என்று சொல்லி அவளுக்காக வாங்கி வந்திருந்த கீரை கடையும் கல்சட்டியைக் கொடுத்தார்,

‘இது எதுக்குப்பா?’

‘நான் சாயிங்காலம் சைக்கிளை வுடறப்போ நீங்க பக்கத்து வீட்டு அம்மாகிட்டச் சொல்லிட்டிருந்தது கேட்டேன்’

‘சரி தம்பி ,நல்லா இரு, எங்க உம் பொஞ்சாதி?’

‘அவ வரலை,நானும் புள்ளைங்களும்தான் வந்தோம்’ என்று விடைபெற்றார்.

இரவு மணி ஒன்பது ஆகி விட்டிருந்தது. முன்பக்கம் சிறிதாக ஒரு சீட் இருந்தது அதில் மகளை உட்கார வைத்தார், பின்னால் கேரியரில் மகனை ஏற்றிக்கொண்டு  “டேய் தம்பி தூங்கிடாதே, கெட்டியா அப்பாவை புடிச்சுக்கோ”

‘சரீப்பா’,

‘பாப்பா தூங்கமாட்டியே?’

‘இல்லப்பா’ என்று சொல்லிவிட்டு சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்தார். எட்டு மைல் தூரம் இருந்தது.

 

கடைத்தெரு வந்து பெருமாள் கோவில் தெருவில் திரும்பி ஊர் கோடியிலிருந்த மாந்தோப்பின் நடுவிலிருந்த ஐயனார் கோவிலருகில் வந்து விட்டார். அங்கே வீடுகள் எதுவுமில்லை, இதிலிருந்து பிரியும் மண்சாலைதான் சோலைப்பட்டிக்குப் போகும் ஒரே வழி. பொதுவாக இதுதான் சுற்றிலும் உள்ள பதினாறு கிராமத்தாரும் சேர்ந்து கொண்டாடும் பெரிய திருவிழா, அதேபோல் அந்தந்த ஊரில் ஊர்ப் பஞ்சாயத்து இருக்கும்.ஆனால் எல்லோருக்குமானப் பெரிய பஞ்சாயத்து இந்த ஊரில் மாரியம்மன் கோவில் ஆலமரத்து மேடையில் நடப்பதுதான்.

மகமாயி வந்து தீர்ப்பு சொல்வதாக நம்பிக்கை, அதற்குமேல் எதுவும் இல்லை. தீராத வழக்கெல்லாம் இங்கு வந்துதான் தீரும். திருவிழாவுக்கு வந்து போகிறவர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.நடந்து போகிறவர்கள், சிறிய மாட்டுவண்டிகள், பாரம் ஏற்றுகின்ற பெரிய மாட்டு வண்டிகள் அரிதாக குதிரை வண்டிகளில் பிள்ளைகளும், பெண்களும், பெரியவர்களுமாக வருவார்கள்.

ஆனால் இன்று ஒரு நடமாட்டமும் இல்லை. ஒரு சத்தமும் இல்லை, கோவிலில் போடும் வேட்டு சத்தம் மட்டுமே கேட்டது, கும்மிருட்டு வேறு. ஐயனாரை மனதில் கும்பிட்டுவிட்டு வேகமாக சைக்கிளை மிதித்து தோப்பைத் தாண்டிவிட நினைத்தார். என்றுமில்லாமல் இன்று சற்று பயம் வந்திருந்தது.வாத்தியார் பாட்டெடுத்தால் தைரியம் தானே வராதோ!

‘நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா, அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா – இனி ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா’ என்று தன் கட்டைக் குரலில் பாடினார். அவ்வளவுதான்,’ 

டேய் யார்டா அது நில்லு’ என்று கரிய,பெரிய உருவம் ஒன்று எதிரில் வந்தது. கையில் வைத்திருந்த லாந்தர் விளக்கைத் தூக்கிப் பிடித்தான்’அப்பா பூதம், பூதம்’ என்று குழந்தை நடுங்கினாள்.சிறுவன் பயமிருந்தும் வெளியில் காட்டவில்லை, வந்தவன் குடித்திருந்த நெடி குப்பென்று வீசியது.

‘இன்னா எவ்ளோ பணம் வெச்சிருக்கே எடு’

‘எங்கிட்ட ஏதுய்யா பணம்,ஒழைச்சவன் கணக்குப் பாத்தா ஒழக்குக் கூட மிஞ்சாதுனு தெரியாதா’

‘டேய் இந்தக் கதையெல்லாம் உடாதே, பணத்தைக் குடு’

‘அதான் இல்லேனு சொல்றேனே’

‘டேய் வெளையாட்றியா, கொயந்த கழுத்துல சொருகிடுவேன்’ என்று சொல்லி கத்தியை எடுத்து நீட்டினான்.

‘வேணாய்யா பாப்பாவை ஒண்ணும் பண்ணிடாதே’ என்று தன்னிடமிருந்த நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்,

‘இதானா வெச்சிருக்கே’ என்று சைக்கிளைப் பார்த்தான் .

‘வண்டி புதுசா கீதே, அப்ப இத குடுத்துடு, டேய் எறங்குடா’ என்று சிறுவனை இழுத்த வேகத்தில் தடுமாறி விழுந்து அலறினான்.

இந்த நேரத்தில் ஜல்ஜல் என்று பெரிய மாட்டு வண்டி வந்து நின்றது, அதிலிருந்து ஏழெட்டு பேர் இறங்கி அந்தத் திருடனின் கத்தியைப் பிடுங்கி எறிந்து பளார் பளார் என்று விட்ட இரண்டு அறையில் அவனுக்குப் போதை இறங்கியது.

“டேய் எந்தூருடா நீ,இந்த பதினாறு ஊருக்காரன் எவனும் திருடமாட்டான்”

“நானு டவுன்ல இருந்து வரேன், சின்னதா பிக்பாக்கெட் அடிப்பேன், ஜெயில்ல புடிச்சு வச்சி ஆறுமாசம் இருந்தேன், ஒருவாட்டி மாட்டுனா தொழில் பண்ண முடியாது, போலீசுகாரங்க வுடமாட்டாங்க அதுனால இந்தப் பக்கம் வந்தேன்”

“டேய் நல்லாயிருக்கற ஊருங்களைக் கெடுக்கவா வந்தே, ஓடிப்போயிடு” என்று அடித்த அடியில் சட்டை கிழிந்தது.

“வுட்டுடுங்க, உங்க ஊரே வேணாம் , டவுனே மேல்” என்று ஓடினான். சைக்கிளையும் வண்டியில் ஏற்றி குழந்தைகளோடு இராமசாமியை ஊரில் இறக்கி விட்டுப்போனார்கள் அவர்கள்.

கீழே விழுந்ததில் முட்டியிலும், முழங்கையிலும் சிராய்ப்புகள் எரிந்தது சிறுவனுக்கு. வீட்டிற்குள் வந்ததுமே வாசல் திண்ணையில் இவர்களுக்காகக் காத்திருந்த பாட்டியிடம் சித்தார்த்தன் திருடனைப் பற்றி சொன்னான். கைகால் கழுவ வைத்து பேரனின் கையில் தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டுக் கூடத்தில் பாய் போட்டுப் படுக்க வைத்தாள்.

ஏற்கெனவே பயந்திருந்த மகள் மாட்டு வண்டியில் வரும்போதே உறங்கி வட்டிருந்தாள், அவளைத் தூக்கிக்கொண்டு வந்து பாயில் படுக்க வைத்துவிட்டார் இராமசாமி.

“அம்மா சொர்ணம் எங்கே? தூங்கிட்டாளா?”

“தொம்பையில நெல்லை எடுக்கப் போனவளை விரியன் தீண்டிடுச்சி”

‘அடக்கடவுளே, எங்கேமா அவ?’

“டேய் பயப்படாத. மகமாயி காப்பாத்திட்டா, தூங்க வச்சிட்டு வந்து ஒக்காந்துருக்கேன்” உள் அறைக்கு ஓடினார்கள் தந்தையும், மகனும், இவர்கள் வந்த சத்தம் கேட்டு எழுந்தாள் சொர்ணம்.

“படு மா, நல்லவேளை மகமாயி ஏமாத்தலை” என்று அவள் தலையைக்கோதி விட்டுக் கலங்கினார் இராமசாமி. சிறுவன் தாயிடம் திருடனைப்பற்றிச் சொன்னான்

“ஏன் மாமா? இப்படி ஆச்சு , நல்லவேளை முத்துப்பட்டிக்காரங்க வந்தாங்க”

“சொர்ணம் ஒண்ணும் ஆகாது, மகமாயி வுட்டுட மாட்டா, உனக்கு மசால்தோசை வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு” என்று, அடுக்களை சென்று பித்தளைக் குடத்திலிருந்து குடிக்க குவளையில் நீரை எடுத்து வந்து மனைவியின் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடவைத்தார். 

‘புள்ளைங்களை நல்லா வளர்த்துப் படிக்கவைக்கணும், பொண்ணையும் ஒரு நல்லவனுக்குக் கட்டிக்கொடுக்கணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவளிடம், 

“நிம்மதியாப் படுத்துத் தூங்கு” என்று படுக்க வைத்தார். பின் கலங்கியிருந்த விழிநீரைத் துடைத்துக் கொண்டிரு்த தாயிடம் வந்து, “அம்மா உன்னோட நல்லமனசுக்கு நமக்கு ஒரு கஷ்டமும் வராது வா” என்று சொல்லி கையைப் பிடித்து  அழைத்து வந்து கூடத்தில் பாயை விரித்துப் படுக்க வைத்தார்.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கனவின்றி காலம் போகுமா? (கவிதை) – இரஜகை நிலவன்

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 7) – மீனாட்சி சுந்தரமூர்த்தி