இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
கோபாலன் தனக்காகத் திறந்திருந்த படுக்கையறையைப் பூட்டி வைத்து விட்டார், வேறொரு அறையில் உள்ள ஒற்றைக் கட்டிலில் படுக்கிறார். இன்று உறக்கம் வரவில்லை, எப்படி வரும்? நினைவுகள் பலமுனைத் தாக்குதல் நடத்தும்போது?
மனம் ஒரு நீதிமன்றம், இது வழங்கும் தீர்ப்புக்கு மேல்முறையீடு கிடையாது. எத்தனை கேவலமான உறவை சமூகம் தூற்றிய போதும், காதலித்துக் கைபிடித்த மனைவி மனம் உடைந்து போனாலும், பிள்ளைகள் அவமானப்பட்டு தலைகவிழ்ந்தாலும் மூர்க்கனாக மேற்கொண்டோம் என்று நினைத்தபோது, அப்படியே உடல் தீப்பற்றி எரிவது போல் இருந்தது.
ஒருமுறை வழுக்கினாலும் புனிதனாவதற்கு வழியே கிடையாது , மனசாட்சி சாட்டையை எடுத்துச் சுழற்றிக் கொண்டே இருக்கும். என்பது புரிந்தது, , அவளை எட்டி உதைத்து மிதித்த காலை இறைவன் துண்டித்துவிட்டான். காலம் எதையும் விட்டுவிடாது பதிவு செய்து கொண்டே இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் தரவேண்டிய நன்மையை அல்லது துன்பத்தைக் குறைக்காமல் தரும். என்று தத்துவங்களை வேறு சொல்லிக் கொண்டிருக்கிறது இந்த மனம்.
இன்று காலை கோவிலுக்குப் புறப்படும்போதே ஒன்றை முடிவு செய்து வைத்திருந்தார்., மாலையில் பணிநிறைவு பெற்று வரும் மனைவியைத் தானே மாடிக்குச் சென்று ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும். எப்படியாவது அவள் காலில் விழுந்து மன்றாட வேண்டும்.
‘ஒரே ஒருமுறை பேசு கண்ணே.உன் குரல் இந்தப் பாவிக்கு பாவமன்னிப்பு தரட்டும். அடித்தாலும்,உதைத்தாலும் நான் உன் நிழலை விட்டுப் போக மாட்டேன். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு,’ என்றெல்லாம் கேட்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் சகுந்தலாவும், கிருஷ்ணனும், விமலாவும்,சிவாவும் வந்ததால் அது முடியவில்லை. இன்னும் அதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டுமோ?. இது விழியோரம் உறங்கும் கனவாக ஆகிவிடுமோ’ என்று எண்ணிக்கொண்டே உறங்கிப் போனார்.
இவர்களின் மனப்போராட்டம் எதையும் அறியாமல் விடியல் வந்தது. கோபாலனால் எழ இயலவில்லை. நெஞ்சில் சம்மட்டியால் அடித்தது போல்வலி. சமாளித்துக் கொண்டு எழுந்து கண்ணாடியைப் போட்டுக் கொண்டார். காலை எடுத்துப் பொருத்திக் கொண்டு கழிவறை சென்று வந்தார். ஹாலில் சோபாவில் உட்கார்ந்து விட்டார்.
இரவு சரியாகத் தூங்காத கோகிலா எழுந்த போதே கீழே விளக்கு எரிந்ததைப் பார்த்து கோபாலன் எழுந்து விட்டதை அறிந்தாள், தலை வலித்தது. காபி போட்டுக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தவள் மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டு காபியைக் குடித்து சற்று கண்களை மூடினாள். பதினைந்து நிமிடங்களுக்குப் பின் தலைவலி குறைந்திருந்தது.
அலைபேசியை எடுத்து ஓட்டுனரை அழைத்தாள், “மேடம் வணக்கம் சொல்லுங்க”
“வணக்கம் திருநாவு, பஞ்சவடி போகலாம்னு நெனைச்சேன்”
“நல்லது, சொல்லுங்க, எத்தன மணிக்கு வரணும்?’
“ஏழுமணிக்கு?”
“வந்திடறேன் மேடம்.”
அலைபேசியை வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்து மெல்லிய கரையிட்ட பச்சைநிறப் பட்டுச் சேலையைக் கட்டிக்கொண்டாள். கீழே சென்று நந்தியாவட்டைப் பூக்களையும், செவ்வரளிப் பூக்களையும் பறித்துக்கொண்டு வந்துத் தொடுத்து படங்களுக்குப் போட்டு விளக்கேற்றினாள். ஊதுபத்தி மணம் காற்றில் கலந்து சென்று கோபாலனைத் தேடியது.
அதே நேரத்தில் கீழே அன்னம்மா வந்து அழைப்பு மணி யை அழுத்தினாள், வெகு நேரம் கழித்து கோபாலன் தட்டுத் தடுமாறி வந்து கதவைத் திறந்து விட்டு சோபாவில் அமரப் போனார்.
“தம்பி காபி குடிச்சீங்களா, காபி போட்டுத் தரவா தம்பி.” என்று சமையறையிலிருந்து கேட்கிறாள். பதில் வராததால் ஹாலுக்கு வருகிறாள். அங்கு சரிந்திருந்தவரைக் கண்டு பதறி அருகில் சென்றாள்.
அவருக்கு நெஞ்சில் விண்ணென்று மின்னல் வெட்டியது, முகமெல்லாம் வேர்த்திருந்தது, கைகள் துவண்டிருந்தன.
”பாப்பா இங்க வா, தம்பிய பாரு..” என்று கத்தியவளை
“வேணாம்,” தீனமாகக் குரல் கொடுத்தார் கோபாலன். அதே நேரத்தில் கோகிலாவை கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காகத் திருநாவு வந்துவிட்டார்.
“சார் என்ன ஆச்சு, வாங்க ஹாஸ்பிடல் போவோம்” என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு, “மேடம் இங்க வாங்க சாரைப் பாருங்க’ என்று குரல்தந்து பரபரத்தார்.
“திருநாவு என்ன மேல கூட்டிட்டுப் போ” என்று கைகாட்டினார்.
“மேடம் வந்துடுவாங்க, நான் வண்டிய எடுத்துட்டு வரேன்” என்றவரைத் தடுத்து,
“வேணாம், மொதல்ல மேல,மேல..” பேச முடியவில்லை. வேறு வழியில்லாமல் திருநாவும்,அன்னம்மாவும் படிகளில் அவரை ஏற்றிக் கொண்டிருக்க, சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தாள் கோகிலா. இவரை அவர்கள் அழைத்து ஏறும் நிலையிலேயே ஏதோ புரிந்து போனது.
“திருநாவு அவரை கஷ்டப்படுத்தாதீங்க, அங்கேயே உக்கார வையுங்க.”
‘ஏம்மா, இப்பவும் மன்னிக்க மாட்டாயா?’ என்பதுபோல் நிமிர்ந்து பார்த்த தலை கவிழ்ந்தது.
பொங்கும் உணர்வுகளைச் சமாளித்து அவசரமாகப் படியிறங்கியவள் அருகில் வரும் வேளை “கைகளை மேலே தூக்கிக் கும்பிட்டு என்ன மன்னிச்சிடு மா.” என்று தடாலென அவள் காலில் விழுந்தார் கோபாலன்.
விழிகளில் நீர் கரைபுரண்டு ஓட பேச்சே வராமல் கோகிலா, அவரைத் திருநாவின் உதவியோடு தூக்கிய நேரத்தில் வாட்ச்மேன் கதவைத்திறந்து விட உள்ளே வந்து இறங்கிய தங்கமும் சித்தார்த்தனும் இதைக் கண்டனர்.
அவர்களின் மனம் குளிர்ந்து விழிவழி இறங்கியது. திருநாவு வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினார். சித்தார்த்தனும் கோகிலாவும் இருபுறம் தோளில் தாங்கி கோபாலனைக் காரின் பின் இருக்கையில் அமரவைத்தனர்.
கோகிலா அருகில் அமர்ந்து அவரைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு முகத்தைத் துடைத்து விட்டாள். சித்தார்த்தன் முன்னிருக்கையில் உட்கார வண்டி வளைந்து வாயிலைத் தாண்டியது, அன்னம்மாவையும்,தங்கத்தையும் ஏற்றிக்கொண்டு பின் தொடர்ந்தது இன்னொரு வண்டி. கோபாலன் பிழைத்துக்கொள்வார், இனி அந்த மாளிகையில் வசந்தம் எப்போதும் நிறைந்திருக்கும் என்று அறிந்திருந்த காலம் சிரித்தது.
(நிறைவுற்றது)
இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings