in , ,

விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 15) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

நீலுவும், சகாயமும் விட்டுச் சென்றபின் தான் வாழும் வாழ்கைக்கு அர்த்தம் ஏதும் இல்லாமல் போனதை உணர்ந்தார். இனி என்ன செய்வது என்று யோசித்தவர், தன் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பது என்று முடிவு செய்து ஒரு வாரத்திற்கு மருத்துவ மனையிலிருக்க அனுமதி கேட்டுக்கொண்டார். மகனிடம் பேச அலைபேசியில் அழைத்தார்.

“அப்பா சொல்லுங்க”

“குமரா என்னை மன்னிச்சிடு”

“சொல்லுங்க” என்றதும் விபத்து பற்றிச் சொன்னார்.

தான் ஆடா விட்டாலும் தன். சதை ஆடும் என்பது உண்மைதானோ? குமரன் எல்லோருக்கும் சொன்னான்.

இந்த முறை மகனும்,மகளும் மட்டும் டெல்லி மருத்துவமனையிலிருந்த கோபாலனை வந்து பார்த்தனர். பரிதாபமாக இருந்தது. மருத்துவமனைச் செலவைக் கட்டி்விட்டு, “அப்பா நாங்க கெளம்பறோம், உடம்பப் பார்த்துக்கோங்க” என்ற கயலிடம் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“பொறுப்பில்லாம உங்களைத் திமிரா பேசினதுக்கு தண்டனை கெடைச்சிடுச்சி மா.”

“சரிப்பா, பழசெல்லாம் விடுங்க நிம்மதியா இருங்க, ஏதாவது தேவைன்னா போன் பண்ணுங்க”

“வா கயல்..”  என்ற குமரனின் கையைப் பிடித்துக் கொண்டு,  “என்னையும் கூட்டிட்டுப் போங்க பா”

“எங்கே ப்பா?”

“நம்ம வீட்டுக்கு.”

“உங்க துணைவியாரை விட்டுட்டு எப்படி ப்பா வருவீங்க?”

“நொந்து போயிருக்கற அப்பாகிட்ட இப்படியா பேசுவே கயல்..” என்று தலையில் படார் படாரென அடித்துக் கொண்டு அழுதார்.

அவரை இந்த நிலையில் பார்த்தும் இருவருக்கும் பாசம்,இரக்கம் வரவில்லை, வெறுப்பு தான் வந்தது. குமரன் அம்மாவிடம் பேசிவிட்டு வருவதாகச் சொல்லி தங்கையை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

சித்தார்த்தனும் தங்கமும் மருத்துவமனையில் கோபாலனை வந்து பார்த்தார்கள். அதே போல் அல்லியும் கணவரோடு வந்தாள். இவரால் யாரிடமும் முன்பு போல் சகஜமாகப் பேச முடியவில்லை. குற்றவுணர்வு மேலெழுந்து நின்றது. சிவாவும் விமலாவும் கூட வந்து பார்த்துச் சென்றார்கள். கோகிலா வரவே இல்லை.

கயலும் குமரனும் அம்மாவின் மனம் என்னவென்று தெரிந்துகொள்ள நினைத்தார்கள். மருத்துவமனையில் யாரும் இல்லாமல் இருக்கும் அப்பாவைப் பற்றியும் ஒரு காலை இழந்த அவருடைய நிலை பரிதாபமானது என்றும் மன்னித்து தன்னை ஏற்றுக் கொள்ள கெஞ்சுகிறார் என்றும் பிள்ளைகள் சொன்னதைக் கேட்ட கோகிலா, “இப்பவும் உங்க அப்பா சுயநலக்காரர்தான்.”

“எப்படி மா சொல்றே?”

“அவ விட்டுட்டுப் போனதனால இங்கே வரேன்றார்.”

சித்தார்த்தன், “இருக்கட்டும் மா, நீ மன்னிச்சுடு பெரிய மனசு வை.”

“நான் அவரைப் பார்க்கவே விரும்பலே..”

“அந்த மனிதரின் மனசாட்சியே அவரைக் குத்திக் கிழிக்கும் கோகிலா.”

“அம்மா எனக்கும் வெறுப்பு இருக்குது, ஆனா அநாதையா விடத் தோணலை.”  என்றான் குமரன். 

யாரும் எதுவும் பேசவில்லை,சிறிது நேரம் மௌனம் நிலவியது. கோகிலா நினைத்தாள். தங்கள் வாழ்வில் ஏறக்குறைய இரண்டு வருடங்களை மறந்து விட்டால் நிறைவே இருந்தது. இறுதியாக ஒன்றைச் சொன்னாள்.

“சரிங்கண்ணா,அவர் இங்கே கீழ்தளத்தில் இருக்கட்டும் ,நாம மாடிக்குப் போயிடலாம்.”

“கோகிலா எங்களைப் பார்க்க அவருக்குச் சங்கடமாய் இருக்கும். நானும் ,அண்ணியும் ஊருக்குப் பொறோம். அப்பப்போ வந்து பார்க்கிறோம்”

சொர்ணம் மகளின் வாழ்வு இப்படியானதே என்ற கவலையிலேயே ஒரே வருடத்தில் போய்ச் சேர்ந்து விட்டிருந்தாள்.

“தனியா விடறீங்களாண்ணா?”

“தைரியமா இரும்மா.”

இரண்டு நாள் சென்றபின் கயலும்,குமரனும் தந்தையை மருத்துவமனையிலிருந்து அழைத்துக்கொண்டு வரச் சென்றனர். அன்றொருநாள் கோபாலன் களங்கப்படுத்திய அந்தப் படுக்கை அறையை எப்போதாவது மஞ்சம்மா பெருக்கித் துடைப்பாள் மீண்டும் பூட்டப்படும். அதை இப்போது திறந்து வைக்கச் சொன்னாள் கோகிலா.

பிள்ளைகள் அவரை அழைத்துக் கொண்டு வந்தனர்,  விமான நிலையத்திற்கு அழைத்துவரச் சென்றிருந்த திருநாவு, ‘வணக்கம் சார்.’ என்றதும் சங்கடப்பட்டார்.

இன்றுதான் அவரை எதிர்கொள்கிறார். யாரிடமும் முகம் பார்த்துப் பேசும் திறன் இல்லை. காரில் வரும்போது கண்களை மூடி யோசித்துக்கொண்டே வந்தார்.

பரவாயில்லை, கோகிலா தன்னை ஏற்றுக் கொண்டாள் என்று  சந்தோஷப்பட்டார். வீட்டிற்குச் சென்றதும் அவளிடம் எப்படி என்ன சொல்லி மன்னிப்பு கேட்கலாம் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டே வந்தார்.

வீட்டிற்கு வந்துவிட்டது வண்டி, அந்தப் பெரிய வாயிலில் வாட்ச்மேன் இல்லை. நிறுத்தி விட்டிருந்தார்கள். போர்டிகோவில் வண்டி நின்றதும் மகனும் மகளும் இருபுறமும் தோள்கொடுக்க  இறங்கியவரை,

“தம்பி நில்லுங்க” என்று கற்பூரம் ஏற்றி ஆலம் சுற்றி “உள்ளே  வாங்க” என்று சொன்ன அன்னம்மாவிடம், “என்ன மன்னிச்சுடுங்க ம்மா” என்று கையெடுத்துக் கும்பிட்டார்.

“மன்னிப்பெல்லாம் கேக்க வேணாம் விடுங்க தம்பி”  என்றாள் கண்கள் கலங்கி.

தங்கமும் சித்தார்த்தனும் வந்து அழைத்துச் சென்றனர். எல்லோருக்கும் காபி போட்டாள் அன்னம்மா. எடுத்து வந்து தந்தாள் கயல்.

கோபாலனின் விழிகள் கோகிலாவைத் தேடியதை எல்லோரும் அறிவர். “பாப்பா காலேஜுக்குப் போயிருக்குது.” என்றாள் அன்னம்மா.

ஏதோ புரிந்தது மதிய உணவிற்குப் பிறகு அவருக்கு வேண்டியதைச் செய்து தந்து விட்டு எல்லோரும் மாடிக்குச் சென்றனர்.

மாலையில் ஆட்டோவில் வந்து இறங்கிய கோகிலா பின்புறப் படிக்கட்டின் வழியாக மேலே சென்றாள். அவரைப் பார்க்கவும் இல்லை,பேசவும் இல்லை…மறுநாள் கயலையும் குமரனையும் அனுப்பிவிட்டுச் சித்தார்த்தனும், தங்கமும், “எதுன்னாலும் சொல்லுங்க கோபால், உடனே வருவோம்” என்று சொல்லித் தங்கள் ஊருக்குச் சென்றனர்.

மன்னிக்கவில்லை,பரிதாபப்பட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர் என்பது புரிந்தது. அதே சமயத்தில் மன்னிக்கக்கூடிய குற்றமா நாம் செய்திருக்கிறோம்? தான் அங்கே வந்ததால் அவளுக்கிருந்த அண்ணன் அண்ணியின் துணையும் இல்லாமல் போனது. என்று நினைத்தார்.

வீட்டிற்கு காவல் தேவை என்பதால் என்று எண்ணியவர், திருநாவிடம் சொல்லிப் பழைய வாட்ச்மேனைக் காவலுக்கு வரவழைத்தார்.

ஏழு ஆண்டுகள். நிதானமாக  ஓடிவிட்டன. மகனும், மகளும் குடும்பத்தோடு  மூன்று முறை வந்திருக்கிறார்கள், சில நாட்களே இங்கு கோகிலாவோடு தங்கினார்கள், பேருக்கு இவரிடம் நலம் விசாரித்துச் சென்றனர், அதன்பின் மகள் சித்தார்த்தன் வீட்டிலும், மகன் அல்லியின் வீட்டிலும் இருந்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

மதிகெட்டு மானம் இழந்து வாழ்ந்தது படிப்படியாகச் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயரைக் கெடுத்ததற்கும் கவலைப்படாமல் இருந்தது இப்போது அவமானமாக இருந்தது.

ஒரு முறை முக்கியமான வேலைக்காக இவரை அழைத்துப் பேசிய உள்துறை அமைச்சர், “சின்ன வீடு நல்லா கவனிச்சுக்குதா?” என்று கேட்டு இலேசாகச் சிரித்தது இப்போது நினைவுக்கு வந்தது.

அன்று ஒருநாள் அலுவலகத்தில் ஒரு கட்சி ஊர்வலத்துக்குப் போக வேண்டிய காவல்காரர் அவசரமாக இவரிடம் வந்து சல்யூட் அடித்துவிட்டு நின்றார்,

“சார் என்னோட மனைவிக்கு இது முதல் பிரசவம், நான் கூட இருக்கணும்.”

“நீ என்ன பண்ணப் போற? போய் மொதல்ல வேலையப் பாரு.” என்று விரட்டினார். இவரிடம் கேட்டால் அனுமதி கொடுப்பார் என்று நம்பிவந்தவர் வெறுத்தே போனார். வெளியேறியவரை அங்கிருந்த எழுத்தர் “இன்னாபா, லீவு கெடைச்சுதா?”

“இல்ல சார்..” என்று கண்கலங்க,

“உன் பெண்டாட்டிக்கு தெய்வம் துணையிருக்கும், தைரியமா இரு.”

“கண்டவளோட கூத்தடிக்கறவனுக்கு கட்டினவ மதிப்பு தெரியவா போகுது.” என்று சொல்லி அனுப்பியது இவர் காதில் நன்றாகவே விழுந்தது. அப்போது இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவே இல்லை, இப்போது நினைத்துப் பார்த்தால் மனம் கூசியது.

இந்த ஏழு ஆண்டுகளில் கோகிலா எங்கும் சென்றவள் இல்லை, தானும் எங்கும் சென்றது இல்லை. தானிழைத்த குற்றத்திற்கு அவளும் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.ஒரே வீட்டில் இருதுருவங்களாக இருக்கிறோம்.

இறப்பதற்குள் எப்படியாவது அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடவேண்டும், ஒரு நாள் அவள் மனம் கனியும் என்று காத்திருக்கிறார் கோபாலன்.

இந்தத் தொடரின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 14) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    விழியோரம் உறங்கும் கனவு (அத்தியாயம் 16) – மீனாட்சி சுந்தரமூர்த்தி