“ ஏமாறச் சொன்னதும் நானோ…???!” ( புதிய நகைச்சுவைக் கதைப்பாடல்)
(சிறுவர்கட்கானது)
தொப்பி விற்கும் ஒருவராம்,
தொலைவிலுள்ள ஊருக்குத்
தொப்பி விற்கச் செள்கையில்
தூக்கம் களைப்பு வந்ததாம்!.
களைப்பு நீங்கித் தூங்கிட,
காரிருள் போல நிழல்தரும்
உயர்ந்த மாமரக்கீழவர்
உறங்கப் படுத்துக் கொண்டாராம்.
காற்று மெல்ல வீசிட,
கண்ணில் தூக்கம் வந்தது!
விற்கும் தொப்பிப் பையினை
வைத்து விட்டார் அருகிலே..!
தூங்கும் முன்பு தலைக்கொரு
தலையணையாய்த் தொப்பியை
தலையில் மாட்டித் தூங்கினார்…..
தடைக ளின்றி அவருமே!
மரத்தின் மீது மந்திகள்
மண்டியிருந்த தன்மையை
அறியவில்லை அவருமே
அசதி செய்த கொடுமையால்!
குந்தி யிருந்த மந்திகள்
கூடித் திட்டம் போட்டன
இருக்கும் தொப்பி யாவையும்
எடுத்துச் செல்ல நினைத்தன!
அவற்றில் கிழட்டு மந்தியாம்
அந்த மரத்துப் பழங்களில்
அதிக சுவையாய் உள்ளதை
அவர்க்குக் கொடுக்கச் சொன்னதாம்!
மந்தி யாவும் பழங்களை
பறித்துக் கொண்டு இறங்கின!
ஈடு வைத்துத் தொப்பிகள்!
எடுத்து ஏறிச் சென்றன!
தொப்பிக்காரர் விழித்ததும்
தொப்பிப் பையைத் தேடினார்!
தொப்பி களவு போனதால்
துடித்து மிகவும் வாடினார்!
மரத்து மந்திகள் சிரித்தன
தொப்பிகள் தரவே மறுத்தன
வருத்தம் நீங்க அவைதந்த
பழங்கள் எடுத்துத் திரும்பினார்!
தொலைந்து போன ஒன்றுக்காக
துன்பப் பட்டு உழல்வது
அழகு அல்ல என்றவர்
அறிவில் கொண்டார் மாற்றமே!
பழங்கள் விற்று பணத்தினை
பெருக்க எண்ணம் கொண்டவர்
நிலத்திலிருந்த பழங்களை
நிரைத்துக் கொண்டார் பையிலே!
போகும் முன்பு தலையிலே
இருந்த தொப்பி தன்னையே
கழற்றிக் கீழே வீசிட
கண்ட மந்திகள் வீசின!
துயரம் தன்னில் துணிவினை
தொடர்ந்து நெஞ்சில் ஏந்துவோர்
நலிவ தில்லை உலகிலே
நன்மை சேரக் காணுவார்!
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings