in ,

மாடசாமி காலிங்க் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இரவு மணி பத்து. நண்பர்களுடன் இரவு உணவை முடித்துவிட்டு அரட்டையை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் மதன்.

வீடு இருக்கும் தெருவுக்குள் இருசக்கர வாகனத்தைத் திருப்பியவனின் கண்களில் எதேச்சையாக அது பட்டது. பைக்கை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தான். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. அனைவரும் அவரவர் வீடுகளுக்குள் சுருண்டிருந்தார்கள்.

பைக்கின் ஹெட்லைட் வெளிச்சத்தில் கீழே கிடந்த அந்த மொபைல் மதனின் கண்ணைப் பறித்தது. சட்டென்று குனிந்து கையில் எடுத்துப் பார்த்தான்.

“அட புது மொபைல். எந்த மடையன் இப்படித் தவறவிட்டுட்டுப் போனான்னு தெரியலையே.”

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டு மொபைலில் இருந்த தூசியைத் தட்டிவிட்டு மொபைலோடு பைக்கைக் கிளப்பி வீடு வந்து சேர்ந்தான். மனதுக்குள் ஒரு பரபரப்பு பரவசம் மொபைலை நோண்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லாம் சேர்ந்திருந்தது.

கல்லூரி படிக்கும் இருபது வயது இளைஞனுக்கு செலவில்லாமல் புத்தம்புது கைபேசி கையில் கிடைத்தால் ஆவல் இருக்காதா என்ன?

வீட்டிற்குள் நுழைந்து நேராகத் தன் அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டான். வசதியான வீட்டுப் பையனான மதனுக்கு அவனைக் கேள்வி கேட்க அவன் பெற்றோர்கள் அவனுடன் இல்லை.

கல்லூரி படிக்கும் மகனுக்காகத் தனியாக வீடு எடுத்துக் கொடுத்து, வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்து வைத்திருந்தார் மதனின் தந்தை.

அறைக்குள் நுழைந்தவன் முதல் வேலையாக வழியில் கண்டெடுத்த மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.

‘சூப்பர் மொபைல், சார்ஜ் எல்லாம் கூட இருக்கு. யார் தவறவிட்டான்னு தெரியல. எப்படியோ நமக்கு ஒரு மொபைல் ஃப்ரீயா கிடைச்சுது. இப்போ நான் வச்சிருக்கற மொபைல்ல ரெண்டு சிம் போட்டு வச்சிருக்கேன். அதுல இருக்கற ஒரு சிம்கார்டைத் தூக்கி இதுல போட்டுட்டா காலேஜ்க்கு ஒரு மொபைல், வீட்டுக்கு ஒரு மொபைல் ஆச்சு.’ மனத்துக்குள் நினைத்தபடியே வேகவேகமாக தான் உபயோகிக்கும் மொபைலில் இருந்த இரண்டாவது சிம்கார்டைப் புதிதாகக் கிடைத்த மொபைலுக்குப் போட்டு, அது வேலை செய்கிறதா எனப் பார்த்துக் கொண்டான்.

தன் நெருங்கிய நண்பர்களான தினேஷ், சல்மான், சந்தோஷ் மூவருக்கும் புது மொபைலிலிருந்து தகவல் அனுப்பினான்.

“டேய் மச்சான் என்னோட இன்னொரு சிம்கார்டைப் போடறதுக்கு எனக்கு ஒரு புது மொபைல் கிடைச்சிருக்கு. எப்படின்னு இப்போ சொல்ல மாட்டேன். நாளைக்கு காலேஜ்ல காட்டறேன்,” என்று மெசேஜைத் தட்டிவிட்டு, இரண்டு மொபைலையும் தலையணைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

மதன் அனுப்பிய மெசேஜ் அவனது நண்பர்கள் மூவருக்கும் போனது. ஆனால் மெசேஜைப் பார்த்த மூவரும் அரண்டு போனார்கள். பதறிப்போய் மதனுக்கு ஃபோன் செய்தார்கள். ஆனால் அவர்கள் மூவருக்கும் மதனின் இரண்டு எண்களுமே எங்கேஜ்ட் என்றே வந்தது.

மூவரும் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் மதனுக்கு அழைப்பே வரவில்லை. மொபைல் கிடைத்த குதூகலத்தில் கனவில் மிதந்தபடியே தூங்க ஆரம்பித்திருந்தான் மதன்.

ஆனால் மதனின் நண்பர்கள் மூவருக்கும் தூக்கம் தொலைந்திருந்தது. அவர்கள் மூவரும் தங்களுக்குள் குரூப் கால்போட்டு பேச ஆரம்பித்திருந்தார்கள்.

“தினேஷ், மதனோட இன்னொரு நம்பர்ல இருந்து மெசேஜ் வந்திருக்கு. ஆனா பேரு மாடசாமின்னு வந்துருக்கு டா.”

“ஆமா சந்தோஷ், எனக்கும் அப்படித்தாண்டா வந்திருக்கு. அவனோட நம்பர்ல இருந்து வந்த மெசேஜ் எப்படிடா மாடசாமின்னு பேரோட வரும்? அனுப்பினது மதன்தான் அனுப்பியிருக்கான்னு நினைக்கறேன். ஏதோ இன்னொரு நம்பருக்கு புது மொபைல் கிடைச்சிருக்குனு போட்டிருக்கான். அந்த மொபைல் எப்படிக் கிடைச்சுது? நம்மகிட்ட சொல்லாம எப்படி வாங்கியிருப்பான்? இவ்வளவு நேரம் நம்மகூடத்தானே இருந்தான்?”

“அப்படியே மதன் மெசேஜ் போட்டாலும் நமக்கு மதன் அப்படின்னு தானேடா வரணும். அவனோட ரெண்டு நம்பரும் சேவ் பண்ணித்தான் வச்சிருக்கோம். ஆனா ஏன் மாடசாமின்னு வருது?”

“டேய் சல்மான், எனக்கு என்னவோ பயமா இருக்கு. தேவையில்லாம நாம நாலு பேரும் அந்த மாடசாமி விஷயத்துல கொஞ்சம் ஓவராப் போயிட்டோமோ?”

“அதெல்லாம் காலேஜ்ல விளையாட்டா பண்ணறது தானேடா. அதுக்காக அவனோட பெயர்ல எப்படி நமக்கு மெசேஜ் வரும்? மெசேஜ் அனுப்பினதுமே மதனுக்கு எவ்வளவு தடவை மூணு பேரும் ஃபோன் பண்ணிப் பார்த்துட்டோம். அவன் யார்கூட பேசிட்டிருக்கான்? கால் எங்கேஜட்னு வருது. அந்த மாடசாமிகிட்ட பேசிட்டிருக்கானோ?”

“சந்தோஷ், ஒரு அஞ்சு நிமிஷம் நீயும் சல்மானும் பேசிட்டிருங்க. நான் அந்த மாடசாமி எங்கே இருக்கான், என்ன ஆச்சுன்னு விசாரிச்சுட்டு மறுபடி உங்ககூட ஜாயின் பண்ணிக்கறேன்.”

சொல்லிவிட்டு, தினேஷ் மாடசாமியைப் பற்றி விசாரிக்க, தன்னுடன் படிக்கும் மற்ற நண்பர்களுக்கு ஃபோனில் தொடர்பு கொண்டான்.

மாடசாமி முதல் வருடம் படிக்கும் மாணவன். நகரத்திற்குப் புதிது. அவன் வீட்டில் மிகவும் கெடுபிடி போல. நிறைய விதிமுறைகள், கட்டுப்பாடுகளோடு ஒரு மொபைலை அவனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த கைபேசியில் அவன் அப்பாவிடம் பயந்து பயந்து பேசியதை கேன்டீனில் உட்கார்ந்திருந்த இவர்கள் நான்கு பேரும் கேட்டுவிட்டார்கள். யாரையாவது வம்பிழுக்கவே காத்துக்கிடக்கும் இவர்களிடம் மாடசாமி மாட்டிக்கொண்டான்.

அவன் தன் அப்பாவிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்தபிறகு, நாலு பேரும் மாடசாமியைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“இதப் பாருடா, காலேஜ் வந்தாச்சு. இன்னமும் அப்பாகிட்ட பயந்து பயந்து மொபைல் பத்திரமாத்தான் இருக்கு, தொலையாம பாத்துக்கறேன், கீழே போடாம பாத்துக்கறேன் அப்படின்னு இன்னும் குழந்தை மாதிரி பேசிட்டிருக்கான்.மொபைலைக் கீழே போட்டா உங்க அப்பா உன்னை என்னடா பண்ணுவாரு? சரி தொலைஞ்சு போச்சு, என்ன பண்ணுவாரு? கட்டிவச்சு அடிப்பாரா? பார்த்துடலாமா?”

மாடசாமியைச் சுற்றி நின்றுகொண்டு ஆளுக்கு ஒரு கேள்வியைக் கேட்க, மலங்க மலங்க விழித்தபடி, மாடசாமி பதில் சொல்லத் தெரியாமல் திணறினான். பயத்துடன் தன் இரு கைகளாலும் மொபைலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

“எங்கப்பா ரொம்ப கண்டிப்பானவர். நான் ரொம்ப அடம்பிடிச்சு கேட்டதால மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கார். தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க.”

சொல்லிவிட்டு நழுவப் பார்த்தான். நான்கு பேரும் விடுவதாக இல்லை. அவனைக் கேலி செய்து, இரண்டு பேர் அவனை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, மற்ற இரண்டு பேரும் மாடசாமியின் கைகளில் இருந்த மொபைலைப் பிடுங்கினார்கள்.

அழுது கெஞ்சினான் மாடசாமி. மதன் மொபைலை வேண்டுமென்றே கீழே போட்டான். சல்மான் அதன் மேல் தண்ணீரை ஊற்றினான். மாடசாமி எவ்வளவு கெஞ்சியும் மொபைலை அவனிடம் கொடுக்கவே இல்லை.

கல்லூரி வளாகத்தில் இருந்த பழைய கிணற்றுக்குள் மொபைலைப் போட்டுவிட்டு கை கொட்டிச் சிரித்தார்கள். அழுதபடியே அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் மாடசாமி.

இதுதான் இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்தது. அதன்பின் நால்வரும் இந்த விஷயத்தை அவர்கள் வழக்கமாகச் செய்யும் ஒரு விளையாட்டு போலவே நினைத்து மறந்து விட்டார்கள்.

இப்போது மாடசாமி என்ற பெயரைப் பார்த்ததும் மூவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.

தினேஷ் அங்கே இங்கே விசாரித்ததில், மாடசாமி நேற்று கல்லூரி வளாகத்தில் இருந்த பழைய கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், எதேச்சையாக அவனைப் பார்த்த மாணவர்கள் கல்லூரியில் சொல்லி அவனைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சொன்னார்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது என்றார்கள்.

இதுதான் தினேஷுக்குக் கிடைத்த தகவல்கள். இதைக் கேட்டதுமே தினேஷின் பயம் அதிகரித்தது. மீண்டும் தன் நண்பர்களுடன் ஃபோனில் தொடர்பு கொண்டு, தான் கேள்விப்பட்ட விஷயத்தைச் சொன்னான்.

“டேய் மச்சான், எந்த ஆஸ்பத்திரிலடா சேர்த்திருக்காங்க? இப்போ எப்படி இருக்கானாம்?முதல்ல அதைக் கேளுடா. ஆஸ்பத்திரில இருந்து குணமாகி வந்து, மதனோட நம்பர்ல இருந்து நமக்கு மெசேஜ் போடறானா?”

“டேய், கண்டதையும் யோசிக்காதே. ஆஸ்பத்திரி டீடெய்ல்ஸ் கேட்டிருக்கேன். வந்ததும் விசாரிக்கறேன்.”

சற்று நேரத்தில் தினேஷுக்கு மாடசாமி இருக்கும் மருத்துவமனையின் ஃபோன் நம்பர் கிடைத்தது. அந்த நம்பருக்கு அழைத்து விசாரித்துப் பார்த்தான் தினேஷ்.

பேசி முடித்த போது தினேஷின் வயிற்றில் அமிலம் சுரந்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு பிரமை பிடித்தது போல் இருந்தான். எதிர்முனையில் இருந்து இரு நண்பர்களும் அலறினார்கள்.

“என்னாச்சு? என்னடா சொன்னாங்க?”

“மாடசாமி நைட் 8 மணிக்கு செத்துப் போயிட்டானாம்.”

“என்னடா சொல்றே? அப்போ எப்படிடா மாடசாமின்னு மெசேஜ் வரும்? முதல்ல மதனுக்கு ஃபோன் பண்ணுடா.”

தினேஷ் மதனின் நம்பருக்கு ஃபோன் முயற்சி செய்தான். ஆனால் அழைப்பே போகவில்லை. மாறிமாறி அவர்கள் முயற்சி செய்து பார்த்தும் இதே நிலைதான். செய்வதறியாது அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த போது மணி இரவு ஒன்று.

மதனின் பழைய மொபைலுக்கு இப்போது ஃபோன் வந்தது. தூக்கக் கலக்கத்தில் ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. ஃபோனை கட் செய்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடிக் கொண்டான். ஆனால் விடாமல் ஃபோன் அடிக்கவே, லைட்டைப் போட்டு மணியைப் பார்த்தான்.

மணி இரவு ஒன்று. அவனது பழைய மொபைலுக்கு புது மொபைலில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. பழைய மொபைலின் திரையில் அவனுடைய புது மொபைலில் போட்ட நம்பரும், மாடசாமி என்ற பெயரும் வந்ததைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. இப்போது தூக்கம் தொலைந்து போனது மதனுக்கு.

‘என்னோட நம்பர்தானே இது. அந்த மொபைல்ல இருந்து இந்த மொபைலுக்கு தானா எப்படி கால் வரும்? அதுவும் மாடசாமின்னு பெயர் வருது?’

பயத்தில் வியர்த்துக் கொட்டியது மதனுக்கு. ஃபோனை கட் செய்த அவன், இதற்கு முன் எவ்வளவு அழைப்புகள் வந்திருக்கிறது என்று பார்த்தான். தன் நண்பர்களிடமிருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நிறைய அழைப்புகள் வந்திருப்பதைப் பார்த்தான்.

‘இவ்வளவு கால் பண்ணியிருக்காங்க, எனக்கு ரிங்கே வரலையே? மூணு பேரையும் கான்ஃபிரன்ஸ் காலில் கூப்பிட்டான். லைனில் மூன்று பேரும் இணைந்தார்கள்.

“மதன், எவ்வளவு நேரமா உனக்குக் கூப்பிடறது? யார்கிட்ட பேசிட்டு இருந்தே, எங்கேஜ்ட்னு வந்தது. ஏதோ புது மொபைல் கிடைச்சுதுன்னு அதுல இருந்து மெசேஜ் போட்டே. ஆனா எங்களுக்கு மாடசாமின்னு மெசேஜ் வருதுடா. அதைப் பார்த்ததிலிருந்து உனக்குக் கூப்பிட்டுட்டே இருக்கோம். என்னடா பண்ணிட்டிருக்க நீ?”

“டேய் மச்சான், உங்களுக்கு மெசேஜ் போட்டுட்டு நான் தூங்கிட்டேன் டா. இப்போ அந்த புது மொபைலில் இருந்து என்னோட பழைய மொபைலுக்கு தானாகவே கால் வந்தது. என்னோட நம்பர், ஆனா பெயர் மட்டும் மாடசாமின்னு வருதுடா. பயத்தில் வெலவெலத்துப் போய்தான் அந்த ஃபோனைக் கட் பண்ணிட்டு, செக் பண்ணா நீங்க எல்லாரும் இவ்ளோ நேரமா கால் பங்ணியிருக்கீங்க. எனக்கு ரிங்கே வரல. நான் நல்ல தூக்கத்துல இருந்தேன். என்னடா இது, என்ன நடக்குது?”

“டேய் மதன், அந்த மாடசாமி நாம அவன் ஃபோனைத் தூக்கிப் போட்ட அதே கிணத்துக்குள்ளே குதிச்சுட்டான். காலேஜூல பார்த்து காப்பாத்தி ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. நைட் 8 மணிக்கு அவன் செத்துப் போயிட்டானாம் டா. எங்கே இருந்து இந்த மொபைலை எடுத்தே நீ?”

“எங்க வீட்டுக்குப் போற தெரு முக்குல இருந்ததுடா.”

“அது மாடசாமி வச்சிருந்த அதே ஃபோனா பாரு.”

இப்போதுதான் மதனுக்கு அது உறைத்தது. சட்டென்று எடுத்து ஃபோன் எந்த பிராண்ட் என்று பார்த்தான். அதிர்ந்து போய் தூக்கிப் போட்டான்.

“டேய், ஆமாண்டா. அதேதான். அதான் கிணத்துக்குள்ள போட்டுட்டோமே, அதனால இந்த ஃபோன் கிடைச்சப்போ அதைப்பத்தி யோசிக்கவே இல்லடா. புது ஃபோன் நல்லா இருக்குனு தூக்கிட்டு வந்துட்டேன்.”

“முதல் வேலையா அந்த ஃபோனை எங்கே எடுத்தியோ அதே இடத்துல கொண்டு போட்டுட்டு வாடா. உனக்கு இருக்கற வசதிக்கு இது மாதிரி பத்து ஃபோன் வாங்கலாம். எதுக்குக் கண்டதையும் தூக்கிட்டு வந்து எங்க தூக்கத்தைக் கெடுக்கறே?”

“என்னடா, நாலு பேரும் சேர்ந்து தானே எல்லாம் பண்ணினோம். இப்ப ஏதோ நான் மட்டும் தப்பு பண்ண மாதிரி பேசறீங்க?”

“நீ ஃபோன் எடுத்துட்டு வந்ததாலத்தானே இப்ப அந்த மாடசாமி நம்பர்ல இருந்து மெசேஜ் வருது. முதல்ல அதுல இருந்து உன்னோட சிம்மை எடுத்துட்டு மொபைலைத் தூக்கி வீசுடா மதன்.”

நடுங்கும் கைகளுடன் தான் கண்டெடுத்த மொபைலில் இருந்து சிம் கார்டை எடுத்து பழைய மொபைலில் போட்டுவிட்டு, புது மொபைலை ஒரு பையில் போட்டு நன்றாக முடிச்சு போட்டான்.

“டேய் சிம் கார்டை எடுத்துட்டேன். அந்த மொபைலை அப்படியே பெரிய கல்லைப் போட்டு உடைச்சுரட்டுமா?”

“முதல்ல வீட்டுக்குள்ள அந்த ஃபோனை வெச்சுகாதே. எடுத்த இடத்துல கொண்டு போய் போட்டுட்டு வா.”

“டேய் மச்சான், ரொம்ப பயமா இருக்குடா. நான் மட்டும் தனியா இருக்கேன். நீங்க யாராவது கிளம்பி வரீங்களா?”

“விளையாடறியா? நைட் ஒண்ணரை மணிக்குக் கிளம்பி வரச் சொல்றே? எங்க வீட்டுல திட்டுவாங்க.”

“விளையாட்டா அந்த மாடசாமியை வம்பு பண்ணோம். அவன் இப்படி உயிரை விடுவான்னு எதிர்பாக்கலடா. அவன் மொபைலை வாங்கிக் கிணத்துல போட்டிருக்கக் கூடாது. அவங்க வீட்ல அவங்கப்பா திட்டுவாங்கன்னு பயந்து தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு அவன் போவான்னு யோசிக்கவே இல்ல டா.”

“சரி மதன், நாங்க லைன்லயே இருக்கோம். நீ முதல்ல ஃபோனை எடுத்துட்டு வீட்டை விட்டு வெளில போ.”

“டேய் மச்சான், நட்ட நடு ராத்திரியில் இந்த ஃபோனோட வெளில போகச் சொல்றியா டா?”

“அப்போ வீட்டுக்குள்ளேயே வச்சுட்டு கட்டிப்புடிச்சு தூங்கு. நாங்க ஃபோனைக் கட் பண்றோம்.”

“டேய் இருங்கடா, பக்கத்துல குப்பைத்தொட்டி இருக்கு, அதுக்குள்ள போடட்டுமா?”

“ஏதோ ஒண்ணு பண்ணுடா.”

மதன் பையோடு அந்த ஃபோனை எடுத்துப் போய் குப்பைத் தொட்டியில் போட்டு, மேலே குப்பைகளால் மறைத்துவிட்டு, வீட்டிற்குள் வந்து கதவை சாத்திக் கொண்டான்.

“மொபைலைக் குப்பைத் தொட்டில போட்டுட்டேன்டா. இனிமேல் எந்தப் பிரச்சனையும் வராதில்ல டா.”

“வரக்கூடாது. நாலு பேருமே மொபைலை ஆஃப் பண்ணிட்டுத் தூங்குவோம். நாளைக்குக் காலேஜ் போகணும்.”

“சரி, குட்நைட். எல்லாருமே மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணிடுங்க. காலைல ஆன் பண்ணாப் போதும்.”

சொல்லிவிட்டு நான்கு பேரும் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு பயத்தோடு படுத்தார்கள். அவர்கள் படுத்த ஐந்து நிமிடத்தில் நான்கு பேருக்கும் மதனின் இன்னொரு நம்பரிலிருந்து மாடசாமி என்ற பெயரில் அழைப்பு வந்தது.

மதனுக்கும் வந்தது. அவன் மொபைலில் ஒரு சிம்மில் இருந்து இன்னொரு நம்பருக்கு அழைப்பு வந்தது.

இரவு இரண்டு மணி. நான்கு பேர் மொபைல் திரையிலும் “மாடசாமி காலிங்க்” என்றிருந்தது.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முதல் சவாரி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    இழிந்த அந்நியன் (சிறுகதை) – தோமிச்சன் மத்தேய்கல் (தமிழில் பாண்டியன் புதுக்கோட்டை )