எழுத்தாளர் பாண்டியன் ராமையா மொழியாக்கம் செய்த மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கேரளாவில் ‘தட்டுக்கடா’ என்கிற சாலையோர உணவகத்தின் அருகே நான் எனது காரை நள்ளிரவில் நிறுத்தும்படி ஒரு வேளை வந்தது. கூகுள் வரைபடத்தின்படி நான் இன்னும் 27 கிலோமீட்டர்களுக்கு ஆக்சிலேட்டரின் லீவரை மிதித்தாக வேண்டும்.
கூகுள் மேப்பை நான் எப்போதும் நம்பாததால், தட்டுக்கடாவில் சிற்றுண்டியுடன் பாலில்லலா டீ அல்லது காபி பருகும் ஓரிரு ஆண்களில் ஒருவரிடம் கேட்க முடிவு செய்தேன்.
“ஆனக்காடு இங்கிருந்து எவ்வளவு தூரம்?”
என் நண்பர் வர்கீஸ் வசித்த இடம் ஆனக்காடு. பத்தனம்திட்டாவில் காவி கானகத்தின் அடிவாரத்தில் இருக்கும் கடவுளால் கைவிடப்பட்ட அந்த சிற்றூரில், தன்னுடன் ஒரு நாளைக் கழிக்க என்னை அழைத்திருந்தார். நான் காடுகளை விரும்புகிறேன். அத்துடன் எனக்கு இரவில் காரோட்டவும் பிடிக்கும்.
“ஆனக்காட்டில் இருந்து சில கிலோமீட்டர்கள் வரை உங்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்கும்” என்று வர்கீஸ் கூறியது, எனக்கு ஊக்கமளித்தது – எனது இரவுப் பயணம் பற்றி கவலைப்பட ஏதுமில்லை. அது பெரும்பாலும் மாநில நெடுஞ்சாலையாக இருந்ததால் நான் அதிகம் விசனப்படவில்லை.
“ஆனால் எனக்கு கொஞ்சம் பயம் வேண்டும்” நான் வேடிக்கையாக ஒலிக்கும் நோக்கத்தில் அவரிடம் சொன்னேன். “உதாரணமாக, என்னிடம் ஒரு பேய் ‘லிப்ட்’ கேட்டால் என்ன செய்வது? அடுத்த வலைப்பதிவு இடுகைக்கு அது நன்றாக இருக்கும் அல்லவா!”
“அது ஒரு ஆண் பேய் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” வர்கீஸ் சிரித்தார். “ஒருவேளை நீங்கள் வம்பில் சிக்கிக்கொண்டால், பெண் பேய்கள் இன்னமும் அதிகப்படியான சட்டச் சிக்கல்களை கொண்டு வந்து விடும்.”
வர்கீஸ் ஒரு வடிகட்டிய பகுத்தறிவுவாதி. அவர் மற்ற மனிதர்களிடமிருந்து வெகு தொலைவில் ஒரு வெறிச்சோடிய இடத்தில் வாழ முடிவெடுத்ததற்கு ஒரு காரணம் – அவர் மக்களின் மூடநம்பிக்கைகளையும் ‘வெட்கமற்ற காரணமின்மைகளையும்’ (அவரது வார்த்தைகளில்) வெறுத்தார்.
ஆனக்காட்டுக்கு எவ்வளவு தூரம் என்று நான் விசாரிப்பதைக் கேட்ட ஒருவர், போகும் வழியில் ஒருசில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த தான் செல்லும் இடத்திற்கு என் காரில் கூட பிரயாணிக்க இயலுமா என்று கேட்டார். சற்றுத் தயக்கத்துடன் அவரை நோக்கினேன். நான் லிப்டுக்கு ஒரு பேயைத்தான் விரும்பினேன், அருவருப்பான மனித சகவாசத்தை அல்ல. தட்டுக்கடையில் இருந்த மற்ற ஆண்கள் வேறு என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பிச்சைக்காரர் இலவச லிப்ட் கேட்பது அவர்கள் அனைவருக்கும் ஒரு பொருட்டென தோன்றவில்லை என்றாலும், அவர்கள் முன் நான் மனிதாபிமானம் அற்றவனாகத் தோன்ற விரும்பவில்லை. “ஏன் கூடாது?” என்று நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், அந்த மனிதரின் தோற்றம் என்னைக் கவரவில்லை என்றாலும் கூட. அழுக்கு முண்டு மற்றும் குர்தா அணிந்திருந்த அவர் அந்த உடையில் முழுதும் இழிந்தவராகத் தோன்றினார். அவருடைய தலைமுடி சுருண்டு பரட்டையாக இருந்தது. தாடையில் தொங்கிய நீண்ட தாடியில் புழுதி வேறு படிந்திருந்தது!
நான் என்னுடைய ஒரு கப் எழுமிச்சை தேநீருக்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டு என் காரில் ஏறிக்கொண்டேன். அந்த இழிந்த அந்நியர் என் அருகில் முன் இருக்கையில் அமர்ந்தார். ஒரு அழுகிய துர்நாற்றம் காரை அடைத்தது. அல்லது அது என் உணர்வு மட்டும்தானா?
“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த சாலையில் விளக்குகளே கிடையாது,” என்று அவர் கூறினார். அவரது குரல் மெல்லியதாக இருந்ததோ? நான் மிகவும் அசௌகரியமாக அல்லது வினோதமாக உணர ஆரம்பித்தேன். “சாலையின் இருபுறமும் உயரமான மரங்களால் இருப்பதனால் எப்போதும் சரியான இருட்டாக இருக்கும். இத்தகைய இருளில் பூனைகளால் மட்டுமே என்ன ஏதென்று பார்க்க முடியும். அந்தக் காலத்தில் எல்லாம் மக்கள் இரவு நேரங்களில் சாலையை பயன்படுத்துவதில்லை. எப்படியிருந்தாலும், கடத்தல்காரர்கள் மற்றும் சட்ட விரோதிகள் தவிர இந்த இரவில் இப்படிப்பட்டஒரு காட்டிற்குள் யார் செல்வார்கள்?”
நான் எதுவும் சொல்லிக்கொல்லவில்லை. நான் இப்படி ஒன்றைக் கேட்கலாமா என நினைத்தேன் : “இந்த இரவில் வாகனம் இன்றி நீங்கள் எங்கே போகிறீர்கள்?”
என் சந்தேகத்தை அவர் உணர்ந்ததாகத் தோன்றியது. “என் வீடு அருகில்தான் உள்ளது. நான் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருகிறேன்.”
அடுத்த சில நிமிடங்கள் மற்றும் சில கிலோமீட்டர்கள் கடந்த உடன், காரை நிறுத்தச் சொன்னார். “எனது வீடு சாலையின் அடுத்த பக்கத்தில்தான் உள்ளது. நன்றி.”
கதவு திறந்த நிலையில் காரின் வெளியே நின்று, “உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார்.
“ஆ..?” என் வயிற்றுக் குழியிலிருந்து ஒரு பயம் பிரளயமாக எழுவதை உணர்ந்தேன்.
“எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று அவர் கூறினார். அப்புறம் அவர் மறைந்து போனார். அப்படியே. ஒரு தடயமும் இல்லாமல். காரின் கதவை திறந்து விட்டு. அத்துடன் காரின் இயந்திரம் நிறுத்தப்பட்டது. அதனைப் பற்றவைக்க விசையைத் திருப்பினேன், ஆனால் பலனில்லை. முன் விளக்கை அணைத்துவிட்டு, பார்க்கிங் லைட்டைப் போட்டுவிட்டு வெளியே வந்து சுற்றிப் பார்த்தேன். அவ்வழி சென்ற பாதையின் குறுக்கே ஒரு வீடு இருந்தது. அதன் உள்ளே நல்ல ஒளிவெள்ளம் தெரிந்தது. என் அச்சத்தையும் மீறி நான் அதை நோக்கி நடந்தேன். எனக்கு உதவி தேவைப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு வேண்டியிருந்தது ஒரு உதவி அல்ல, ஒரு மனித சகவாசம்!
நான் அதை நெருங்கும் போது அந்த வீட்டில் வெளிச்சம் மங்கியது. நான் முன் முற்றத்தில் நின்று, “யாராவது இருக்கிறீர்களா?” என்று அழைத்தேன். பதில் இல்லை. நான் கேள்வியை மீண்டும் கேட்டேன். நான் முன்பு கவனிக்காமல் இருந்த போது, திறந்திருந்த சாளரத்தில் ஒரு பூனை தோன்றியிருக்க வேண்டும். என்னைத் தொலைந்து போகச் சொல்வது போல் அது என்னைப் பார்த்து கோபமாக ‘மியாவ்..’ என்று கத்தியது. நான் மீண்டும் என் காருக்கு ஓடினேன்.
இம்முறை எந்த இடையூறும் இல்லாமல் கார் கிளம்பியது. வர்கீஸின் வீட்டின் முன் காரை நிறுத்தியபோது எனது அலைபேசி 3.59 ஐக் காட்டியது. அவரது வீட்டைத் தாண்டி பின்புறம் அந்த தடைசெய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட காடு காரிருளில் விரிந்து கிடந்தது.
வர்கீஸ் முதலில் நன்றாக உறங்கச் சொன்னார். அதை அவர் வலியுறுத்திச் சொன்னார். “உங்களுக்கு ஓய்வு தேவை.”
எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. ஒரு இழிந்த மனிதர், பூனைகளைப் பற்றிய அவரது குறிப்பு, பேய்கள் பற்றிய அவரது கேள்வி அத்துடன் அவர் உடனடியாக காணாமல் போனது… மற்றும் ஜன்னலில் அந்தப் பூனை. இவை அனைத்தும் என்னைத் தூங்க விடாமல் இம்சித்தன.
***
“பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டில் ஒருவர் வசித்து வந்தார்,” என்று வர்கீஸ் கூறினார், . நாங்கள் எங்கள் காலை உணவுக்கு அமர்ந்திருந்தோம். “பூனைகள் மீது அவர் கொண்ட பிரியத்தால் அவர் பூச்சக்காரன் (பூனைக் காரன்) என்று அழைக்கப்பட்டார். யாரையும் அவரவர் பெயரைக் கொண்டே அழைக்கும் அளவிற்கு வெகு சிலரே இந்த ஊரில் வசிக்கின்றனர் என்பதாலும் பூச்சக்காரனால் – அவரது நீண்ட முடி மற்றும் தாடி மற்றும் அழுக்கு ஆடை அணிந்திருந்த விதத்தாலும் – யாருடைய கவனத்திலிருந்தும் தப்ப முடியவில்லை.
“அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது உறுதியாகத் தெரியுமா?”
“நிச்சயமாக. அவர் ஒரு வாகன விபத்தில் இறந்தார். இங்குள்ள வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை கடத்தி வந்த சில மாஃபியாக்களுக்குச் சொந்தமான வாகனம். எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவனுடன் அவனது பூனை ஒன்றும் கொல்லப்பட்டது. பூனைகளைப் பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்?”
என் இழிந்த லிப்ட் ஆசாமி மற்றும் ஜன்னலில் இருக்கும் பூனை பற்றி நான் சொன்னதை வர்கீஸ் நம்ப மாட்டார். “அந்த மனிதனின் வீடு இன்று ஒரு பாழடைந்த குட்டிச்சுவராக உள்ளது, நீங்கள் சென்று பார்த்தால் தெரியும்.” அவர் அதை நோக்கிய எங்கள் பயணத்தை வலியுறுத்தினார், உடனே!
சில நிமிடங்களில், முந்திய இரவு நான் யாருடைய வீட்டு முற்றத்தில் நின்றிருந்தேனோ, அதே வீட்டின் முன் நின்றோம். இரவில் திறந்திருந்த ஜன்னல் இப்போது மூடியிருந்தது. மூடி மட்டும் இருக்கவில்லை. பல ஆண்டுகளாக இது திறக்கப்படவேயில்லை போல. அது ஒரு கரையான் புற்றுகளின் குவியல்.
வர்கீஸ் பகுத்தறிவுவாதியாகவே தொடர்கிறார். நான் ஒரு சந்தேகவாதியாகவே தொடர்கிறேன்.
“உங்கள் மனம் பேய்கள் மற்றும் கடவுள்கள் மற்றும் எதையும் உருவாக்கும்,” வர்கீஸ் வலியுறுத்திக் கூறினார்.
கரையான் புற்றுக் குவியல்களின் பழுப்பு நிறத் தீற்றுக்களை நான் நினைவு கூர்ந்தவாறே என் தலையை அசைத்தேன்.
***
ஆசிரியர்: தோமிச்சன் மதேய்கல்: சுமார் நான்கு தசாப்தங்களாக ஆங்கில மொழி மற்றும் இலக்கிய ஆசிரியராக உள்ளார். அவர் இந்திய வலைப்பதிவு உலகத்தில் நன்கு அறியப் பெற்ற பதிவரும் கூட. அரை டஜன் புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்.
மொழி மாற்றம்: பாண்டியன் இராமையா
எழுத்தாளர் பாண்டியன் ராமையா மொழியாக்கம் செய்த மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings