in , ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 17) – ஜெயலக்ஷ்மி

  இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

து அந்தப் பொண்ணோட கையெழுத்து இல்ல, மேடம். நாங்க என்கொயர் பண்ணப்ப அந்தப் பொண்ணுகிட்ட கையெழுத்து வாங்கியிருக்கோம்.  இங்க பாருங்க! என்று கோப்பிலிருந்த தாளை எடுத்துக் காட்டினாள்.

   ”சரி அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராகனும்” என்று பிரபலத்திடம் சொல்லிவிட்டு, அழைப்பை துண்டித்தார் ஜெயஶ்ரீ.

    நித்யாவைப் பார்த்து, ”உங்ககிட்ட இருக்கிற டாக்குமெண்ட்ஸ் எல்லாத்லயும் ஒரு காப்பி கொடுங்க, இப்ப சொன்னதெல்லாம் ஒரு ஸ்டேட்மெண்டா எழுதிக் கொடுங்க” என்றார் ஜெயஶ்ரீ.

    ”ஓ.கே. மேடம்” என்றாள் நித்யா.

    ”எல்லாருமா சேர்ந்து எல்லாத்தையும் சொதப்பி வச்சிட்டாங்க. அந்தப் பொண்ணுங்களுக்கும் இப்போ என்ன சொல்லணும்னு எல்லா டிரெயினிங்கும் கொடுத்திருப்பாங்க.  இனி கேஸ் நிக்கறது கஷ்டம். பார்க்கலாம்” என்றார் ஜெயஶ்ரீ.

      “நீங்களும் 14 வயது முடிஞ்சிடுச்சுனு, நான் ஹசார்டஸ் கேசஸ்ல குழந்தைகள ரெஸ்க்யூ பண்ணாம விடாதீங்க. சி.டபிள்யூ.சி.ல ப்ரட்யூஸ் பண்ணுங்க. ஜெ.ஜெ.ஆக்ட் வயலேஷன் இருக்கான்னு அவங்கதான் முடிவு செய்யணும்” என்றார் ஆணையத் தலைவர்.

       ”ஓ.கே.சார்” என்றாள் நித்யா. இந்த வழக்குக்கு ஒரு நல்ல நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஆனந்தமாய்த் திரும்பினாள் நித்யா.  பின்னர் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை.

       வேறேதோ காரணத்துக்காக ஆணையமே கலைக்கப்பட்டுவிட்டதாக சில நாட்களில் தகவல் வந்தது.

       புதிய ஆட்சியர் பொறுப்பேற்றதும் நடைபெற்ற கூட்டத்தில் போராளி வழக்குரைஞரால் இந்த வழக்கு குறித்து விவாதம் எழுந்தது.

       உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

      ”ஆர்.டி.ஓ. கம்ப்ளய்ண்ட் கொடுத்தா எப்.ஐ.ஆர். போடறோம்” என்றார் காவல்துறை துணை ஆணையர்.

      ”உடனே கம்ப்ளய்ண்ட் கொடுங்க” என்று கோட்டாட்சியருக்கு கட்டளையிட்டார் ஆட்சியர்.

       ஆட்சியரிடம் வழக்கு குறித்து விவரமாய் எடுத்துரைத்தாள் நித்யா.

      ”கடைசிவரை இதை விடக்கூடாது, நித்யா. பார்த்துக்கலாம்! இன்னும் நிறைய பண்ணனும்” என்றார் ஆட்சியர்.

      ”ஸ்யூர் மேடம். தேங்க் யூ மேடம்” என்றாள் நித்யா.

     ”சென்னையிலிருந்து குழந்தை தொழிலாளர்களையும், கொத்தடிமை தொழிலாளர் முறையையும் முழுசா அகற்றியே தீருவோம்னு இப்போ நாமெல்லாரும் உறுதிமொழி எடுத்துக்கணும்” என்றாள், குழு உறுப்பினர் அனைவரையும் பார்த்து.

            ”சைல்டு லைன், என்.ஜி.ஓ.ஸ்லாம் இன்னும் தீவிரமா வேல பார்க்கனும்.  ஏதோ கடையிலயோ, ஹோட்டல்லையோ குழந்தைங்க வேல பார்த்தாங்கண்னா நார்மல் இன்ஸ்பெக்‌ஷன்லயே கண்டு பிடிக்கலாம்.  ஆனா இந்த மாதிரி அபார்ட்மெண்ட்ஸ்ல இருக்கிற டொமஸ்டிக் லேபர்ஸ கண்டுபிடிக்கறது ரெம்ப கஷ்டம்.  இன்ஃபார்மர்ஸ் தகவல் சொன்னாதான் உண்டு. ஸோ, நிறைய இன்ஃபார்மர்ஸ என்கேஜ் பண்ணனும். செக்யூரிட்டிஸ், வாட்டர் கேன் போடறவங்க, கேஸ் சிலிண்டர் போடறவங்க, ப்ளம்பர்ஸ், எலக்ட்ரிஷியன், டொமஸ்டிக் லேபர்ஸ் இந்த மாதிரி வீடுகளுக்குள்ள போற ஆக்டிவிட்டீஸ் இருக்கிறவங்களோட கான்டக்ட்ஸ் வச்சிக்கோங்க. முதல்ல எங்க இருக்காங்கற இன்பர்மேஷன்தான் நமக்கு முக்கியம்.  அது தெரிஞ்சாதான் ஜாய்ண்ட்ரெய்டு பண்ண முடியும்.  நல்லா வொர்க் பண்றவங்களுக்கு அப்ரிசியேஷனும் கிடைக்கும்” என்றாள் நித்யா.

            மாதம் ஒரு முறை குழுவினர் இணைந்து கூட்டாய்வு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

            மீட்பு பணியில் அவளுக்கு தீவிர உறுதுணையாக செயல்படும் சமூக சேவகரைத் தொடர்பு கொண்டாள்.

            ”ஏதாவது இன்பர்மேஷன்ஸ் கிடைச்சுதா, ஸர்?”

            “எஸ் மேடம் சைல்டு லைன்ல பார்த்து வச்சிருக்காங்க. நாளைக்கு போலாம் மேடம்” என்றார்.

            காவல் துறை, தொழிலகப் பாதுகாப்பு, கோட்டாட்சியர், சர்வ சிக்ஷா அபியான், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

           பங்குனி மாதம். பகலவன் தனது லேசர் கரங்கள் கொண்டு சுட்டெரித்தான்.  ‘ஓசோன் அடுக்கில் ஓட்டை மட்டும் தான் விழுந்ததா? இல்லை ஓசோன் அடுக்கே தாக்குப் பிடிக்க இயலாமல்  ஓடிப்போய்விட்டதா?’ என்று தவித்தது தடுப்புப் படை. சிவனின் ஜடாமுடி அவிழ்ந்து கங்கை தரையில் ஓடியது போல பெருக்கெடுத்த வியர்வை கண்களுக்குள்ளும் ஓடியது! பெண் உறுப்பினரெல்லாம் வாடிய பூவாய் உதிர்ந்து விடுவார்கள் போலிருந்தது.

            எல்லாம் இந்த சைல்டு லைன் சந்தானத்தால் வந்த வினை. குழந்தை  கொத்தடிமைகள் இருக்கிறார்கள் என தகவல் கொடுத்து கூட்டி வந்து, இடத்தை மறந்து, கதிரவனின் காய்ச்சும் கணையால் கொத்த விட்டான்;  தெருத்தெருவாய் சுற்ற விட்டான்.

            சமூக சேவகர், அனைவரையும் ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, அந்தப் பகுதி ஆய்வருடன் சென்று இடத்தைக் கண்டறிந்தபின் அனைவரையும் அழைத்தார்.

            அது ஒரு நிறுவனம் அல்லது அங்கு ஏதோ தொழில் நடைபெறுகிறது, என்பதற்கான எந்த அடையாளமும் இன்றி பாழடைந்த அடுக்கு மாடி குடியிருப்பு போன்ற ஒரு கட்டிடத்தின் மூன்றாவது தளம். உட்புறமாக பூட்டியிருந்தது. தட்டினால் திறக்கப்படவில்லை. உள்ளிருந்து கொண்டே யாரென்று வினவினார்கள்.

     “போலீஸ் டிபார்ட்மெண்ட்லருந்து வந்திருக்கோம். திறங்க” என்றார் ஒரு காவல் அலுவலர்.

     “ஓனர் இல்ல” என்று பதில் வந்தது.

      ஏட்டையா இரும்புக் கதவைத் தட்டினார். ஒருவர் எட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டார்.

      மீண்டும் தட்டினார்.  எந்த சத்தமும் இல்லை.

       “இன்னும் வேகமாகத் தட்டினார்.  கதவைத் திறக்கிறீங்களா, இல்ல உடைச்சிட்டு வரணுமா என்று சத்தமிட்டார்“.

        மீண்டும் ஒருவர் எட்டிப் பார்த்தார்.

       “திறடா“ என்று சத்தம் போட்டார் உதவி ஆய்வாளர்.

       “சாவி ஓனரிடம் இருக்கிறது“ என்று ஹிந்தியில் சொன்னார் எட்டிப்பார்த்தவர்.

       “கால் பண்ணி வரச் சொல்லு“ என்றார்.  சிறிது நேரத்தில் ஒருவர் வந்து பூட்டை திறந்து விட்டார்.

      பத்து குழந்தைகள் அழுக்கு உடைகளுடன் அமர்ந்து, பள்ளிப் பைகள் தைத்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் வெட்டிப் போட்ட ரெக்ஸின் துண்டுகள். அவர்களுக்கு பின்புறம் தையல் இயந்திரங்கள். ஒருபுறம் கழிவறை, மேற்புறம் மர அடுக்கில் அவர்கள் படுப்பதற்கான பாய்கள் வைக்கப் பட்டிருந்தன. அவர்களை அழைத்து விசாரித்த போது, பேசக் கூட ஜீவன் இல்லாதது போல் பெயரைக் கூட யோசித்து,  யோசித்துக் கூறினர். சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லையெனவும், சாப்பாடு மட்டுமே வழங்கப் படுவதாகவும் தெரிவித்தனர். வேலை, சாப்பாடு, தூக்கம் எல்லாம் அந்த ஒரே அறையில் மட்டுமே எனத் தெரிவித்தனர்.

      “மேடம் இந்தப் பையன் வாயே திறக்க மாட்டேங்றான்“ என்றார் ஒரு ஆய்வாளர்.  அருகில் அழைத்து விசாரிப்பதற்காக, அவன் முகத்தைப் பார்த்ததும் நித்யாவின் இருதயம் அதிர்ந்து நின்று போனது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரகசியமானது காதல் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    ஈஸ்டர் மகிழ்ச்சி! (சிறுகதை) – இரஜகை நிலவன்