தொடர்கதைகள்

காதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 3) – ✍️ சஹானா கோவிந்த்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“வண்டி எடுத்துட்டு போகாட்டி, ஆட்டோ வரச் சொல்லி போனா என்ன?” என முன் வாசலில் அமர்ந்து கால் வலி தைலம் தடவிக் கொண்டிருந்த இமயாவின் தந்தையை பெற்றவள் கேட்க

“சொன்னா உங்க பேத்தி கேட்டாத் தான அத்த” என புகார் வாசித்தார் தேவி 

“மாமியாரும் மருமகளும்  கொஞ்ச நேரம் போய் டிவி சீரியல் பாருங்க, அதுக்குள்ள நாங்க வந்துருவோம்” என கேலி செய்து விட்டு, வண்டி சாவியை விரலில் சுழற்றியவாறே அத்தை மகளுடன் வெளியேறினாள் இமயா

“ஸ்ஸ்ஸ்ப்பா… கஷ்டம் டா சாமி. நான் என்ன இதுக்கு முன்னாடி தனியா போனதே இல்லையா? ஓவரா பண்ணுது அம்மா, இந்த பாட்டி அதுக்கு மேல” என இமயா சலித்துக் கொள்ள 

“ஏய், சும்மா இருடி. அவங்க பயம் அவங்களுக்கு, இந்த சமயத்துல ஏதாச்சும் வம்பானா எல்லாரும் அத்தையத் தான் திட்டுவாங்க” என, திருமணமான பெண் என்பதால், நிதர்சனம் உணர்ந்து மாமன் மனைவிக்கு பரிந்து பேசினாள் உஷா 

“அதுக்குனு இப்படி குட்டி பாப்பா மாதிரியா ட்ரீட் பண்ணுவாங்க? சாப்பிடு சாப்பிடுனு நச்சு வேற”

“உனக்கு இது இப்ப புரியாதுடி இமயா, கல்யாணத்துக்கு பின்னாடி நீயே செஞ்சு சாப்பிடுவ பாரு… அப்பத் தெரியும் அம்மாவோட அருமை” என கேலி செய்தாள் உஷா 

“நானெல்லாம் சூப்பரா செய்வேன்” என இமயா பழிப்பு காட்ட 

“அதையும் பாக்கத் தான போறேன்” என கேலியும் கிண்டலுமாய் நேரம் கழிய, அழகு நிலையம் வந்து சேர்ந்தனர் 

அங்கேயே சில மணி நேரங்கள் கழிய, அதன் பின் வாங்க வேண்டிய பொருட்களையெல்லாம் வாங்கி முடித்து, மாலை ஐந்து மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தனர்  

வீட்டினுள் நுழையும் போதே அங்கு நிலவிய அசாதாரண அமைதி, ஏதோ சரியில்லை என்பதை இமயாவிற்கு உணர்த்தியது 

‘பிள்ளை பள்ளியில் இருந்து வந்திருப்பான்’ என இமயாவின் அத்தை மகள் உஷா வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, இவள் மட்டுமே வீட்டினுள் நுழைந்தாள் 

வாசலில் தந்தையின் வண்டி இருப்பதைக் கண்டதும், ‘அப்பா இந்நேரத்துக்கு போர்டிகோல தான பேப்பர் படிச்சுட்டு இருப்பாரு. அதிசியமா பாட்டிய கூட காணோம்’ என நினைத்தாள் இமயா 

சூழல் மனதை உறுத்த, “ம்மா…” என அழைத்துக் கொண்டே சென்றாள்

“வரேன் பாப்பா” என்ற அன்னையின் குரலில் ஏதோ வேறுப்பாட்டை உணர்ந்தவள், விரைந்து அறைக்குள் நுழைந்தாள்

கவலை தோய்ந்த முகத்துடன் பெற்றவர்கள் அமர்ந்திருக்கக் கண்டதும், “என்னம்மா ஆச்சு?” என்றபடியே தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள் 

“ஒண்ணுமில்ல பாப்பா” என வாஞ்சையுடன் மகளின் தலையை கோதினார் தந்தை 

“அப்புறம் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? உண்மைய சொல்லுங்கப்பா, ஏதாச்சும் பிரச்சனையா?” என கண்ணில் கலவரத்துடன் மகள் கேட்க, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அவளின் பெற்றோர், நொடியில் முகத்தை மாற்றிக் கொண்டனர் 

மெல்லிய கேலி சிரிப்புடன் மகள் அருகே வந்த அவளின் அன்னை, “உன்னை விட்டு பிரியணும்னு உங்கப்பாவுக்கு கவலை” எனவும் 

“அது கல்யாணம் பேசின அன்னைக்கே தெரியும் தானே ம்மா. அதுவும் இப்ப மும்பை கூட போக வேண்டியதில்லை, அவருக்கு சென்னைல வேலை கிடைச்சுடுச்சே ப்பா?” என கேள்வியாய் பார்த்தாள் இமயா

பெற்றோர் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க, “உண்மைய சொல்லுங்கப்பா, வேற எதுவும் பிரச்சனையா?” என்றாள் கண்ணில் கூர்மையுடன் 

“ச்சே ச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்லடா. நாள் நெருங்க நெருங்க உன்னை விட்டு பிரியணும்னு வருத்தம் அதிகமாகுது அதான்” என்றார் 

இன்னும் நம்பாத பார்வையுடன் பார்த்த மகளை, “என்னடி பேஷியல் பண்றேன்ன, பெருசா வித்தியாசம் ஒண்ணும் தெரியலியே” என பேச்சை மாற்றினார் அவளின் அன்னை தேவி 

“ஏன்… நல்லா தானம்மா இருக்கு?” என இமயா விரைந்து கண்ணாடி முன் சென்று பார்க்க

அந்த தருணத்தை பயன்படுத்தி கணவரிடம் ஜாடை காட்டிய தேவி, “சரி நான் போய் காபி வெக்கறேன், அப்பாவுக்கு சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வந்து குடு வா” என மகளை கையோடு அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் தேவி 

திருமணத்திற்கு முன் தினம் நடக்கும் நலங்கு வைபவத்திற்கு தயாராகி வந்த மகளைக் கண்டதும், தேவியின் கண்கள் பனித்தது 

“என் கண்ணே பட்டுடும் டி” என மகளை நெட்டி முறித்தார் 

அதே நேரம் இமயாவின் தந்தை சண்முகம் அறைக்குள் வர, “அப்பா” என அருகில் சென்று சலுகையாய் தோளில் சாய்ந்தாள் இமயா 

அதை ரசித்த போதும், “நான் எத்தனை செஞ்சாலும் இவளுக்கு அப்பா தான்” என பொய்  கோபம் காட்டினார் தேவி 

“எல்லாம் இன்னைக்கு ஒரு நாள் தான் ஆன்ட்டி, நாளைக்கு இந்நேரம் என் புருஷன் என் வீடுனு டயலாக் பேசுவா பாருங்க” என கேலி செய்தாள் இமயாவின் தோழி தாரணி 

 தோழியின் கேலியில் முகம் சிவக்க, “போடி அதெல்லாம் ஒண்ணுமில்ல, எனக்கு எங்கப்பா எப்பவும் ஸ்பெஷல் தான்” என இன்னும் அதிகமாய் பெற்றவரிடம் ஒட்டிக் கொண்டாள் இமயா 

“சரி சரி, உங்கப்பாவை அப்புறம் கொஞ்சலாம், நலங்குக்கு நேரமாயிடும் மணவறைக்கு போ. உன்னை தேடிட்டு தான் நான் வந்தேன்” என தேவி கூற 

“இதோ கூட்டிட்டு போறோம் ஆண்ட்டி” என தோழி பவித்ரா கூற, தோழிகள் புடைசூழ சிரிப்புடன் பெற்றவர்களுக்கு கையாட்டிவிட்டு சென்றாள் இமயா 

அறையில் இருந்த அனைவரும் இமயாவுடன் வெளியேறியிருக்க, “இந்த சிரிப்பு அவ முகத்துல நிக்க எந்த கஷ்டத்தை வேணா நான் தாங்கிக்குவேன் தேவி” என கண்ணில் நீர் பனிக்க கூறினார் சண்முகம் 

“என்னங்க ஆச்சு, பேசினீங்களா? என்ன சொன்னாங்க?” என பதட்டத்துடன் வினவினார் தேவி 

“கடவுள் என்னை கை விடமாட்டார்னு நம்பறேன் தேவி, பாப்போம்” எனும் போதே 

“மாமா… உங்களை அம்மா கூப்பிட்டாங்க” என்றபடி வந்து நின்றாள் இமயாவின் அத்தை பெண் உஷா 

“இதோ வரோம்மா” என கணவர் வெளியேற, பின்னோடு நடந்தார் தேவி 

கேலியும் கிண்டலுமாய் நலங்கு வைபவம் நடந்தேற, கன்னங்களில் சிவப்பும், கண்களில் கனவுமாய் அமர்ந்திருந்தாள் இமயா

அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தான் மாப்பிள்ளை கார்த்திக்.

முன் தினம் தான் ஊர் வந்து சேர்ந்திருந்தான் என்பதால், தனியே சந்திக்கும் வாய்ப்பு அமையாது போக, அதற்காக காத்திருந்தனர் இருவரும் 

நலங்கு முடிந்த கையோடு ரிசப்ஷன் ஆரம்பிக்க, சற்று முன் இருந்த தோற்றத்திற்கு நேர் எதிராய் வந்து நின்றாள் இமயா.

டிசைனர் புடவை, தோளில் வழியும் கேசம் இயல்பான சிரிப்புபென, நவநாகரீக மங்கை தோற்றம் அவள் அழகுக்கு அழகு சேர்த்தது 

“இந்த காஸ்டியும்ல நீ இன்னும் அழகா இருக்க இமயா?” என கிடைத்த வாய்ப்பில் கண்ணில் ரசனையுடன் கார்த்திக் கூற, கன்னச் சிவப்புடன் ஏற்றுக் கொண்டாள் இமயா 

தோற்றத்தில் நாகரீகம் வந்தாலும், மணக்க இருப்பவனின் புகழ்ச்சிக்கு நாணுவதில், எந்த யுக பெண்ணும் விதிவிலக்கல்ல போலும்

ஒருவழியாய் ரிசப்ஷனும் அதைத் தொடர்ந்த போட்டோ சூட்டும் முடிய, களைத்து தான் போயினர் இருவரும்

வாழ்வில் ஒரே ஒரு முறை நடக்கும் வைபவம் அல்லவா திருமணம். ஆகையால், களைப்பையும் மீறிய வனப்பும் ஆவலும் இருக்கத் தான் செய்தது இருவருக்கும் 

“நாளைக்கு இந்நேரம் யு ஆர் மைன் இமயா” என போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சாக்கில் குனிந்த கார்த்திக் கண் சிமிட்டலுடன் கூற, தன்னை சமாளித்துக் கொள்ள பெரும்பாடுபட்டாள் இமயா 

அவளைக் கண்டு கொண்ட தோழிகள் கிடைத்த இடைவெளியில் நெருங்கி வந்து, “ஆஹா அதுக்குள்ள ரொமான்ஸ் ஆரம்பிச்சாச்சா? இன்னும் தாலி கட்டல இமயா” என தாரணி வம்பு செய்ய 

“தாலி கட்டின அப்புறம் நம்மகிட்ட நின்னுட்டு இருப்பாளா இப்படி?” என கிடைத்த வாய்ப்பை விடாமல் கேலி செய்தாள் பவித்ரா 

சலிப்பது போல் நடித்தாலும் உள்ளூர தோழிகளின் கேலியை இமயாவின் மனம் ரசிக்கத் தான் செய்தது. எல்லா பெண்களும் இந்த கட்டத்தை கடந்து தானே ஆக வேண்டும் 

முயன்று முகச் சிவப்பை சமன்படுத்திய இமயா, “ஆரம்பிச்சுட்டீங்களா?” என பொய் கோபம் காட்டினாள் 

“ஆரம்பிச்சது நாங்க இல்ல நீங்க தான்” என மீண்டும் கேலி செய்தாள் தாரணி 

அதே நேரம், “இமயா…” என கார்த்திக் அழைக்க

“போங்க மேடம் போங்க” என கேலியுடன் விலகினர் தோழிகள் 

கார்த்திக் அழைத்ததும் திரும்பியவள், அங்கு ஒரு இளம் தம்பதி நிற்பதைக் கண்டு அருகில் சென்றாள் 

“இமயா, இவன் என்னோட பெஸ்ட் பிரெண்ட் அருண்” என அறிமுகம் செய்தான் கார்த்திக் 

“ஹாய் சிஸ்டர், அயம் அருண். இவங்க என் ‘பிட்டர்’ ஹாப் அகிலா” என கிடைத்த வாய்ப்பில் மனைவியை கேலி செய்ய 

“அப்படியா சார், அப்புறம்?” என மிரட்டலுடன் பார்த்தாள் அகிலா 

“சேச்சே டங் ஸ்லிப் பேபி” என அருண் சமாளிக்க 

“ஆகும் ஆகும், வேற என்னவெல்லாம் இன்னைக்கி ஸ்லிப் ஆகுதுன்னு வீட்டுக்கு போனதும் சொல்றேன்” என சிரிப்புடனே அகிலா மிரட்ட

“ஆஹா… நானே ஆப்பு வெச்சுட்டேன் போலயே” என பதறினான் அருண்

“ரெம்பத் தான் பயம் உங்களுக்கு, சும்மா நடிக்காதீங்க” என செல்லமாய் கணவனின் தோளில் அகிலா அடிக்க, அந்த இளம் தம்பதியின்  ஊடலை சுவாரஷ்யமாய் பார்த்து நின்றாள் இமயா 

அதை உணர்ந்த அகிலா, “இவங்கெல்லாம் இவ்ளோ தான் இமயா, கெஞ்சினா மிஞ்சுவாங்க மிஞ்சினா கெஞ்சுவாங்க. என்னோட பர்சனல் அட்வைஸ், எப்பவும் நம்ம கைல லகான் இருக்கற மாதிரி பாத்துக்கணும்” என கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அகிலா கூற

“அவ்ளோ தாண்டா கார்த்தி வாழ்க்கை” என அருண் பொய்யாய் சலிக்க, மற்ற மூவரும் வாய் விட்டு சிரித்தனர் 

“நாளைக்கு எங்க பெரியப்பா பையனுக்கு கல்யாணம் இமயா, அதான் இப்பவே வந்தோம்” என அகிலா கூற 

“ஆமாண்டா கார்த்தி, கல்யாணம் ஆகிட்டா பிரெண்ட்ஸ்  எல்லாம் செகண்டரி தான், மேடம் வீட்டு விஷேஷம் தான் முக்கியம், இப்பவே மனசை தயார் பண்ணிக்க” என மீண்டும் வம்பு செய்தான்

“சும்மா சீன் போடாதீங்க, மாப்பிள்ளை தோழனே இவர் தான், அதான் அவாய்ட் பண்ண முடியல” என அகிலா வருத்தம் தெரிவிக்க 

“இட்ஸ் ஓகே சிஸ்டர்” என முறுவலித்தான் கார்த்திக் 

சற்று நேர அரட்டைக்கு பின் அவர்கள் விடைபெற்று விலக, “நீயும் இப்படி தான் மிரட்டுவியா இமயா?” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கார்த்திக் கேட்க, சட்டென சிரித்து விட்டாள் இமயா 

“பதில் சொல்லு” என்றவன் ஊக்க

“அது நீங்க நடந்துக்கறதை பொறுத்து இருக்கு?” என கேலிச் சிரிப்புடன் கூறினாள் 

அதே நேரம், “நாளைல இருந்து பேசிட்டே இருங்க யாரும் கேக்க போறதில்ல, இப்ப போலாமா இமயா?” என்றபடி அவளின் தோழிகள் அருகே வர, பிரிய மனமின்றி விடைபெற்று விலகினர் இருவரும் 

முகம் கொள்ளா சிரிப்புடன் தோழிகளுடன் மணப்பெண் அறைக்கு திரும்பிய இமயா, பெற்றவள் தன்னை கண்டதும் அவசரமாய் கண்களை துடைத்துக் கொள்வதை கண்டு கொண்டாள் 

‘நாளை இந்நேரம் மகள் வேறு வீட்டுக்கு சென்று விடுவாள்’ என்ற வருத்தம் போலும் என தானே யூகித்த இமயாவுக்கு, தன்னையும் அறியாது கண்கள் கரித்தது

பெற்றவள் இங்கு அழுது கொண்டிருக்க, தான் அங்கு கார்த்திக்குடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேனே என மனம் குற்ற உணர்வில் சுருண்டது 

ஒற்றை பெண்ணை பெற்று, தாரை வார்த்து கொடுப்பது அத்தனை சுலபம் அல்லவே. பாவம் தான் தன் பெற்றோர் என்ற நினைவுடன், “அம்மா…” என சிறு கேவலுடன் அன்னையை நெருங்கியவள், தோளில் சாய்ந்து விசும்பினாள் 

“என்னடா கண்ணு, என்னாச்சு?” என தேவி பதற 

“நான் உங்களை விட்டு போக போறேன்னு தான அழுதுட்டு இருக்க, எனக்கும் கஷ்டமா இருக்கும்மா” என மகள் தேம்ப, தேவியாலும் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் போக, மகளை அணைத்துக் கொண்டு அழுதார் 

அதே நேரம் அறைக்குள் வந்த இமயாவின் தந்தை, மகள் மற்றும் மனைவி இருந்த நிலையைக் கண்டு, தானும் மௌனமாய் கண்ணீர் உகுத்தார் 

“நல்லாருக்குடா சண்முகம் நீங்க கல்யாணம் பண்ற லட்சணம். உன் பொண்டாட்டி தான் புரியாம ஒப்பாரி வெச்சுட்டு இருக்கான்னா, அவளை அதட்டறதை விட்டுட்டு இப்படி நீயும் கண்ணை கசக்கிட்டு நிப்பியா? ஊர் உலகத்துல யாரும் பொண்ணை தாரை வார்த்து குடுக்கலியா? ஏய் தேவி, மொதல்ல அழறத நிப்பாட்டு” என அதட்டினார் இமயாவின் அத்தை ஈஸ்வரி (சண்முகத்தின் அக்கா)  

“இல்லக்கா, ஒத்த புள்ள…” என தேவி மீண்டும் ஆரம்பிக்க 

“இங்கப் பாரு தேவி, நீயும் இப்படி தான அழுதுட்டு வந்த, இன்னைக்கு நாலு நாள் சேந்தப்பல அங்க தங்க முடியுதா உன்னால. எல்லாம் அப்படி தான், போகப் போக பழகிரும்.

புள்ளய சமாதானம் செஞ்சு போய் தூங்கச் சொல்லிட்டு, நீங்களும் போய் நேரங்காலமா தூங்குங்க. ஏய் புள்ளைங்களா, எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க அவ தூங்கணும்” என இமயாவின் தோழிகளையும் கிளப்பியவர், வீட்டின் மூத்தவளுக்கே உரிய தோரணையுடன் அறையை விட்டு வெளியேறினார் ஈஸ்வரி 

“அத்தை சொல்றது சரிதான் பாப்பா, காலப்போக்குல எல்லாம் பழகிரும்” என மகளை சமாதானம் செய்த சண்முகம்

“தேவி, பாப்பா சீக்கரம் தூங்கணும், காலைல நேரத்துலயே முஹூர்த்தம் இருக்கே” என மறைமுகமாய் மனைவிக்கு சமாதானத்தோடு அறிவுறுத்தினார் 

“சரிங்க” என்ற தேவி, “நீ போய் துணி மாத்திட்டு வா” என மகளுக்கான இரவு உடையை எடுத்து நீட்டினார்

மகள் அகன்றதும், “என்னங்க… ஒண்ணும் பிரச்சனை இல்ல தான” என குரல் நடுங்க மனைவி கேட்க, மௌனமாய் அவளின் கரம் பற்றி அழுத்தினார் சண்முகம்

கணவரின் முகத்தில் இருந்து விஷயத்தை கிரகிக்க முயன்று தோற்ற தேவி, மௌனமாய் கடவுளிடம் தன் கோரிக்கையை 1000மாவது முறையாய் வைத்தாள்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்…ஜூன் 15, 2021)

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

              

                  

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 thousand Visitors) &

Promoted across our Social Media Platforms

Similar Posts

2 thoughts on “காதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 3) – ✍️ சஹானா கோவிந்த்
  1. என்ன கேட்கிறாங்க மாப்பிள்ளை வீட்டில்? அந்த விஷயம் கல்யாணப் பிள்ளைக்குக் கூடத் தெரியாதோ? இல்லைனா அவர் தலையிட்டிருக்கலாம். அல்லது அப்பா/அம்மா சொல்றது தான் சரினு இருக்காரா? தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன். :))))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!