அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
குளிர் மழையின் இதமான தேநீராய் நான் உனக்கு..
நீ என்னைப் பருகிடும் ஒவ்வொரு நொடியிலும்,
நிரம்பி வழிகிறது நம் காதல் கோப்பை!!
கிருஷ்ணா அவளைத் தனியாக அழைத்து வந்ததன் காரணம் தனக்குத் தெரியும் என்று அபி கூறியதும், காருக்கு வெளியே ஒரு மின்னல் கீற்று. அதன் நீட்சி, கிருஷ்ணாவின் இதயத்திலும் தான்.
கண்கள் பளபளக்க, “உனக்குத் தெரியும் தான அபி? அப்போ நீயே சொல்லிடு, எதுக்காக நான் உன்ன வெளில கூட்டிட்டு வந்தேன்னு…” என்று அவன் ஆசையும், தவிப்புமாக வினவிட
அவனை மேலும் கீழுமாகப் பார்த்தவள், “ஹ்ம்ம்… இப்படி மழை பெய்யறப்போ சூடா மிளகா பஜ்ஜி சாப்ட்டா நல்லா இருக்கும். அதுக்குத் தான என்னை கூட்டிட்டு வந்துருக்க” என்று கூலாகப் பதில் சொல்லவும், கிருஷ்ணாவிற்கு வந்ததே ஆத்திரம்.
“உன்னை எல்லாம் தலையிலேயே நங்கு நங்குனு கொட்டணும்டி. ஒரு மனுஷன் எத்தனை நாளா தவிச்சுட்டு இருக்கேன், உனக்கு என்னைப் பாத்தா விளையாட்டா தெரியுதா?” என்று கோபத்தில் அவன் சீற, மீண்டும் அவனை அமைதியாக நோக்கியவள்… சட்டெனக் கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
அதைக் கண்டு சலிப்புடன் தலையைக் கோதியவன், தானும் அவசர அவசரமாகக் காரை விட்டு வெளியேற, அதுவரை தூறலாய்ப் பெய்து கொண்டிருந்த மழை, இப்பொழுது அவர்களது காதலுடன் சேர்த்துப் பெருமழையாய்ப் பிடித்துக் கொண்டது.
அந்த மழையிலும், காற்றிலும்.. கார் மேகம் கண்டு, களி நடனம் பயிலும் மயூரமாய் எவ்வித தயக்கமுமின்றி அந்த மழையை அணுஅணுவாய் ரசித்தபடி, ஒரு கரத்தைக் கொண்டு மென்மேனியை அணைத்தபடி, மற்றொரு கரத்தால் மழைநீரைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தவளின் பேரழகை, இமைக்க இயலாது ரசித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
அவள் வெகுதூரம் அந்த மழையில் நடந்து சென்ற பிறகே, சுற்றுப்புற உணர்வின்றி மழையோடு தன் மனதையும் கரைக்கும் அவளை… அவனின் மனம் கொண்டவளை… தேடி, நாடி, ஓடிச் சென்றான்.
வேகவேகமான சில எட்டுக்களில் அபியை அடைந்த கிருஷ்ணா, அவன் அவளருகில் வந்ததையும் அறியாது, அறிந்தாலும் அதை அசட்டை செய்யாது, ஏதோ மழையில் நனைவதற்கென்றே இப்பிறவி எடுத்தது போல நனைந்து கொண்டிருந்தவளை, அந்த மழையைக் கைச்சிறைக்குள் அடைக்க முயன்று கொண்டிருப்பவளை அவளது வலக்கரம் பற்றியே, வெடுக்கென அவன் புறம் திருப்பினான்.
இதையே எதிர்பார்த்திருந்தவளைப் போல அவனைத் திரும்பி பார்த்தவள், “ம்ம்ம்.. ஒருவழியா நான் மழையில நனையறது சாருக்கு உறைச்சுடுச்சு போலிருக்கு?” என்று புருவம் உயர்த்திப் படு நக்கலாகக் கேட்கவும்
ஒரு முடிவெடுத்த கிருஷ்ணா தான் பற்றிய கரத்தை விடாமலேயே, “அபி… போதும்.. இதுக்குமேல நீயும் எதுவுமே தெரியாத மாதிரி நடிக்க வேண்டாம். நானும் தயக்கத்துலயே சாக வேணாம். நான் உன் திமிருக்கு அடங்கணும்னு எதிர்பார்க்கற நீ. உன்கிட்ட என்னோட மொத்த கர்வமும் அழியணும்னு நினைக்கற நீ. ஆமா… நான் உன் திமிருக்கு அடங்கிட்டேன். ஒரு பொண்ணுகிட்ட தலைகுப்புற கவுந்துட்டேன். உன்கிட்ட காதல்ல விழுந்துட்டேன். எஸ்.. I LOVE YOU அபி… என்னோட எல்லாமும் நீயா தான் இருக்கற. அதே மாதிரி உன்னோட எல்லாமாவும்.. உன்னோட சந்தோசம், சிரிப்பு, அழுகை, கோபம், திமிர், காதல், ஏன் உன்னோட தாய்மை கூட எனக்குத் தான் முதல்ல கிடைக்கணும்னு நினைக்கறேன். என்ன சொல்ற நீ?” என்று அவளது விழியோடு விழி சேர்த்து அவன் கேட்க, வேறென்ன வேண்டுமாம் அவளுக்கு.
மழையில் மொத்தமாய்க் கரைந்து கொண்டிருந்தவள், அவனின் அந்தக் காதல் உரைப்பில் முழுதும் உருகிட, மழையோடு கலந்த அவள் விழியின் உவர் நீர் அவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்து விட, அதிலே உணர்ந்தான் அவனுக்கான அவளது காதலை.
அவனது காதலுக்காக அவள் சிந்தும் கண்ணீர் நிலம் சேரும் முன், தன் இதழ் கொண்டு அதை நிறுத்தினான்.
அவளது அந்த மீன்விழிகளுக்கு முத்தமெனும் அணைகட்டி அவளது கண்ணீர் பெருக்கினை கட்டுப்படுத்தியவன், “இவ்வளவு காதலை வச்சுட்டு ஏண்டி இப்படி?” என்று சிறு ஆதங்கத்துடன் கேட்க
அப்பொழுது “க்ளுக்”கெனச் சிரித்தவளோ, “என் மனசுல இவ்வளவு காதலிருக்குன்னு உனக்குத் தெரியாதா க்ரிஷ்? அது தெரிஞ்சும் கூட, நீ ஏன் என்கிட்டே இது நாள் வரைக்கும் எதுவும் சொல்லல? நீ பயந்து நடுங்கிட்டு, இப்போ என்கிட்ட வந்து கேள்வி கேட்கறியா?” என்று மீண்டும் அவள் அவனை வாற
“ஏய்… என்னடி விட்டா ரொம்பத் தான் ஓட்டற? இரு இரு இன்னைக்கு உன்ன நான் சும்மா விடறதா இல்ல” என்று கூறிக்கொண்டே அவளை அந்த மழையில் அங்கும் இங்கும் துரத்த, அவள் ஓட.. அப்படி அவர்களது காதல் விளையாட்டிலேயே அந்தி சாய்ந்து பகல் கரைந்து இரவும் வந்துவிட, அப்பொழுது தான் அவளை விட்டு தான் பிரியும் நேரம் நெருங்கிவிட்டதென உணர்ந்தான் கிருஷ்ணா.
அது ஒரு தற்காலிகப் பிரிவு என்றே அப்பொழுது நினைத்திருந்த இருவருக்கும், அது நீண்டதொரு பிரிவுக்கான ஒத்திகை என்பது தெரிந்திருக்கவில்லை.
எனவே மிகவும் சோகத்துடன் என்றில்லாமல், அப்பொழுது தான் காதலைப் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்திலேயே அப்போதைக்குப் பிரிந்தார்கள்.
பிரிவே காதலைப் பெருக்கும் என்பது நிஜம் தானே. ஆனால் அந்தப் பிரிவிலேயே… காதல் பெருக்கெடுத்த பொழுதிலேயே, அதை வலிக்க வலிக்க, விலக்க நினைத்தாள் அபி.
சட்டென்று கணமாய் ஒரு இடி இடிக்க, அன்றைய நினைவிலிருந்து நடப்புக்கு மீண்டனர் அபியும் கிருஷ்ணாவும்.
அன்று அவனது காதலி என்ற பட்டம் தந்த மகிழ்வும், கர்வமும், இன்று அவனது மனைவியாயிருக்கையில் முழுதாய் இருக்கிறதா? என்று கேட்டால், அவளது பதில் ‘இல்லை’ தான்.
ஏனென்றால், காதலை சொல்லவே அவ்வளவு தயங்கிய கிருஷ்ணாவிற்கும், அவளுக்குத் தெரியாமலேயே அவளை மனைவியாக்கிய கிருஷ்ணாவிற்கும் இருந்த பெருத்த வேறுபாடு அவளது மனதைக் குடைந்தது.
இதற்கும் மேலாக இவையெல்லாம் அரங்கநாதன் தாத்தாவுடைய திட்டமாகவோ அல்லது குறைந்தபட்சம் யோசனையாகவோ இருக்குமோவென்ற எண்ணமும் அவளை அலைகழித்தது.
அந்த அலைக்கழிப்பு அவளுக்குத் தலைவலியைத் தந்தது. அவளது மற்ற எண்ணவோட்டங்கள் எதுவும் தெரியாத கிருஷ்ணாவோ, “எனக்கு நிஜமாவே உன்ன புரிஞ்சுக்கவே முடியல அபி. அன்னைக்கு நான் முதன் முதலா உன்கிட்ட என் காதலை சொன்னப்ப அவ்வளவு சந்தசப்பட்ட. ஏன் சந்தோஷத்துல உனக்குக் கண்ணீர் கூட வந்துச்சு. ஆனா, அந்தச் செமஸ்டர் லீவ் முடியறதுக்குள்ள என்ன ஆச்சுன்னு தெரியல. மறுபடியும் காலேஜ்க்கு வந்த நீ… பழைய அபியா வரல.
என்னை… என்னோட காதலை வேணாம்னு சொல்லிட்ட. அதுக்கான காரணம் கூடச் சொல்லாம என்னை விலக்கிட்ட. அவ்வளவு ஏன் உன்னோட முழுப்பேர், உன்னோட அட்ரஸ், போன் நம்பர் எதுவுமே தர மாட்டேன்னு சொல்லிட்ட.
நானுமே, உனக்கும் ரொம்பச் சின்ன வயசு அதனால சரியா ஒரு முடிவு எடுக்க முடியாம தடுமாற்றமா இருக்கன்னு நினச்சு உனக்கு அஞ்சு வருஷம் டைம் தந்தேன். எனக்கும் அப்போ சின்ன வயசு தான் அபி. ஆனா, என் முடிவு என்னைக்குமே மாறாதுன்னு எனக்கு உறுதியா தெரியும்.
நான் டைம் கொடுத்தது, உன்னோட அறிவு முதிர்ச்சிக்காகத் தான். அந்த அஞ்சு வருஷம் முடியறதுக்கு இப்போ இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. ஆனா அதுக்குள்ளே நீ எனக்குப் பொண்டாட்டியாவே ஆகிட்ட. சரி… நான் தான் உன் சம்மதம் இல்லாமலேயே உன்னை என் பொண்டாட்டியா ஆக்கிட்டேன். போதுமா?
ஆனா நீ என்ன புருஞ்சுக்கோ அபி… நான் உன்னை இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கவே இல்ல. எனக்கு நம்மள பத்தி நிறையக் கனவுகள் இருந்துச்சு. இன்னும் ஆயிரம் ஆயிரம் கனவுகள் இருக்கு. அதுல முக்கியமா உன்னோட சந்தோஷமும் அடங்கியிருக்கு.
இத நீ தயவுசெஞ்சு நம்பனும் அபி. இப்பக் கூட நீ எந்த மனநிலையில் என் கூடப் பழகிட்டு இருக்கனு எனக்குத் தெரியல. ஆனா ஒண்ணே ஒன்னு மட்டும் உண்மை. அது என் காதல். அப்போ.. இப்போ.. எப்பவும் மறையாத, மாறாத காதல்” என்று அவன் மிக உணர்ச்சி பூர்வமாய்ப் பேசவும், அவளுள் அந்த மாயக் கண்ணனுடைய குழலுடன் கலந்த காணத்தின் லயமாய், அவன் மனதோடு இயைந்த இவள் காதலும் துளிர்விட ஆரம்பித்தது.
அவள் சாய்வதற்கெனவே காத்திருக்கும் அவன் தினவெடுத்த தோளில் துவண்டு, அவனது கைச்சிறைக்குள் சுருண்டு கிடக்கத் துடிக்கும் மனதை எவ்வளவு காலம் தான் கட்டுப்படுத்தி வைப்பது.
அது இனி மேலும் ஆகாது என்று எண்ணி தனது தளைகளைத் தானே தகர்க்கும் நேரமதில், அவளது அந்த முயற்சியைத் தடுக்கும் விதமாக அவனது எந்திர சிட்டுக்குருவி குரலெழுப்ப, சலிப்பான பெருமூச்சுடன் அதை எடுத்தவன், திரையில் தோன்றிய எண்ணை பார்த்ததும் அதை இயக்கி ஸ்பீக்கர் மோடில் போட்டான்.
அங்கு மறுமுனையில் இருந்தது அரங்கநாதன் தாத்தா தான். அதுவரை கிருஷ்ணாவின் காதலில் கனிந்திருந்த அபியின் முகம், தாத்தாவின் குரலில் கடினப்பட்டு விட்டது.
அதை உணராத கிருஷ்ணாவோ தாத்தாவிடம், “என்ன தாத்தா? இப்ப தான் நானும் அபியும் வெளில வந்தோம். அதுக்குள்ளே போன் பண்ணிட்டீங்க?” என்று கேட்க
அதற்குச் சிரித்தபடியே அவர், “என்ன இப்ப தான் நீங்க ரெண்டு பெரும் வெளில போனீங்களா? நீங்க வெளில போய் மூணு மணி நேரம் ஆச்சு. அதான் பா கூப்பிட்டேன்” என்று கூற, அப்பொழுது தான் மணியைப் பார்த்த இருவரும் அதிர்ந்து, பின் உடனே வீடு திரும்ப முடிவெடுத்தனர்.
வீடு திரும்பும் வழியெங்கும் ஏதோ யோசனையிலேயே இருந்தாள் அபி. அதைக் கண்டும் காணாமல் கிருஷ்ணா இருந்திட, திடீரென ” உங்க தாத்தாக்கு உங்கள தான் ரொம்பப் பிடிக்குமா கிருஷ்ணா?” என்று கேட்டாள்.
அவளது கேள்வியில் லேசாகப் புருவத்தை உயர்த்திய அவன், “என்ன உங்க தாத்தான்னு சொல்ற? அவர் உனக்கும் தான தாத்தா?” என்று கூற
“சரி சரி… நம்ம தாத்தா தான். சொல்லுங்க? நம்ம தாத்தாக்கு உங்களத் தான் ரொம்பப் பிடிக்குமா?” என்று மீண்டும் அதே கேள்வியையே கேட்க, இம்முறை சற்று யோசித்தான் அவன்.
“அப்படிச் சொல்லிட முடியாது அபி. தாத்தாக்கு ரொம்பப் பிடிச்ச ஒருத்தர் இருக்காங்கன்னா அது அவரோட பொண்ணு தான்” என்று அவன் கூற
“பொய் சொல்லாதீங்க” என்று ஆவேசத்துடன் இரைந்தாள் அபி.
அவளது அந்தக் கோபக் கத்தலை கேட்ட கிருஷ்ணாவோ சிறுஅதிர்வுடன் அவளைப் பார்க்க, அந்தப் பார்வையில் நிகழ்காலம் உறைக்க, “இல்ல கிருஷ்ணா.. வந்து.. அப்படிப் பொண்ணு மேல அவ்வளவு பாசம் இருந்துச்சுன்னா.. இவ்வளவு நாள் பொண்ணு எங்க இருக்கா? எப்படி இருக்காள்ன்னு கூடப் பார்க்காம எப்படி இருந்துருப்பாருன்னு யோசிச்சேன். அதான்…” என்று கூறி சமாளித்தவள்
அவன் சமாதானமாகி விட்டான் என்று உணர்ந்ததும், “அதனால தான் சொல்றேன். தாத்தாக்கு உங்கள தான் பிடிக்கும். உங்களன்னா நீங்க மட்டும் இல்ல. உங்க அப்பாவ, உங்கள.. உங்க ரெண்டு பேரையும் தான் அவருக்கு ரொம்பவே பிடிக்கும்” என்று அவள் ஆணித்தரமாகக் கூறவும், அவள் எதற்காக இதையெல்லாம் கூறுகிறாள் என்ற குழப்பத்துடன் ஏறிட்டான் கிருஷ்ணா.
இறுதியில் இருவரும் வீடு வந்து சேர்ந்திட, வீட்டின் வாயிலிலேயே சோபாவில் அமர்ந்திருந்த அரங்கநாதன், அவர்கள் இருவரும் ஜோடியாய் வருவதைக் கண்டு பேருவகைக் கொண்டு, “நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒத்துமையா சந்தோசமா வெளில போயிட்டு வரதப் பாக்கறதுக்கு எனக்கு மனசுக்குள்ள எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?” என்று உணர்ந்து கூறினார்.
அவர் கூறியதைக் கேட்ட கிருஷ்ணாவோ, ஆனந்தத்துடன் அபியை நோக்க, அவளது கண்களிலோ தாத்தாவை நோக்கி இகழ்ச்சி பரவியது.
அந்தப் பார்வையினூடே, “உங்க பேரன்.. ஒரு ஆம்பள பையன்.. இப்படிக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவன் அவனோட பொண்டாட்டி கூடச் சந்தோசமா இருக்கறத பார்த்து உங்களுக்கு இப்படிப் பேரானந்தமா இருக்கு. இதே உங்க வீட்டு பொண்ணு இப்படிக் காதலிச்சு, உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்து உங்க முன்னாடி நின்னா, இதே மாதிரியா அவளை நடத்துவீங்க? உடனே வீட்டை விட்டு வெளில போனு கழுத்த பிடுச்சு வெளில தள்ளியிருக்க மாட்டீங்க?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்கவும், அங்கிருந்த அனைவருக்கும் உயரழுத்த மின்சாரம் பாய்ந்தது போன்ற அதிர்வு.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14
GIPHY App Key not set. Please check settings