மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வீட்டு வேலை செய்யும் ஜானம்மாவின் மகன்கள் கருணாகரனும், கார்வேந்தனும். தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்ததாலோ என்னவோ, அருமையான குணத்துடன், பெருமையாய் வளர்ந்தார்கள்.
தந்தை இறப்பிற்குப் பின், தாய் ஜானம்மாவின் அத்தனை வேலைகளையும் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் கருணாகரனுக்கு இயல்பாகவே இருந்தது. இளையவன் கார்வேந்தன் குழந்தை என்று கருதி தாயும் மகனும் அவனைக் கண் போல் பார்த்துக் கொண்டனர்.
முத்தவனான கருணாகரன் பெயருக்கு ஏற்றார் போல் கருணை குணம் கொண்டவர். தாய் வீட்டு வேலைக்கு போகுமிடத்தில் கொடுக்கும் பழைய துணிமணிகளைக் கூட தனக்குப் போக பிறருக்கு கொடுக்கும் குணம் கொண்டவர். அதில் அவருக்கு மட்டும் அல்ல, அதைப் பெறுபவருக்கும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதற்காகவே தானம் அளித்து விடுவார்.
தன் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் கருணாகரனும் பகுதி நேர வேலை செய்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானம் போதுமான அளவு அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவியது என்றே கூறலாம்.
ஜானம்மாவாள் முன்பு போல தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. அவரின் உடல்நிலை மற்றும் வயதின் காரணமாக, அது போன்ற சூழ்நிலையில் கருணாகரனே ஜானம்மா வேலை செய்யும் வீடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டியது இருக்கும்.
ஒருநாள் வேலைக்காக சென்ற ஜானம்மா, திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே சாய, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.
முழுப்பொறுப்பும் மூத்தவன் ஆன, பத்தாம் வகுப்பு படிக்கும் கருணாகரனின் தலையில் விழ, எந்த சங்கடமும் இன்றி, தன் படிப்பினைத் துறந்து, தம்பி கார்வேந்தனை படிக்க வைக்கும் பொறுப்பினை ஏற்றார்!.
தாய் வேலை செய்யும் இடத்தில் கிடைத்த சிறிய தொகை கொண்டு ரோட்டில் பழைய புத்தகக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.
கருணாகரனின் கடின உழைப்பாலும் நல் உள்ளத்தாலும், சிறந்த செயலாலும் நல்ல முறையில் முன்னேறினார். தம்பியையும் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தார்.
அவரைப் பற்றி யோசிக்கும் முன், அவரின் முன் மண்டையில் வழுக்கை விழ, இனித் தனக்கு ஒரு குடும்பம் எதற்கு? தம்பி குடும்பமே தன் குடும்பம் என நினைத்து வாழ ஆரம்பித்தார்.
அவரின் அள்ளி வழங்கும் குணம் ஊரில் பெரும் மதிப்பும் மரியாதையும் பெற்றுத் தர, பெயர் புகழோடு இருந்தவரைக் கண்ட தம்பி மனைவிக்கு பயம் உண்டாயிற்று!.
எங்கே… சொத்து மொத்தமும் தானதர்மத்திற்கேப் போய் விடுமோ என்று எண்ணத் தொடங்கினாள்?. விளைவு, கணவனிடம் பேசி அவன் மனதையும் கலைக்க ஆரம்பித்தாள்.
கார்வேந்தனும் யோசிக்கத் தொடங்கினார். சொத்து, பிள்ளை குட்டி இல்லாத அண்ணனுக்கு எதற்கு? என்று கேள்வி எழ, எப்பொழுதும் வியாபாரத்திற்கு வாங்கும் கையெழுத்துடன், இடையில் இரு பத்திரங்களை வைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
சிறிது நாட்களுக்குப் பிறகு தனது கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்தவரின் திருமணத்திற்கு பரிசாக அருகில் இருந்த சின்ன கடையை பரிசாக அளிக்க முற்பட்டார் கருணாகரன். ஆனால், அது தம்பி கருணாகரன் பெயரில் இருப்பதாக வக்கீல் கூற, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்
நினைவு திரும்பியவர், தன் நிலை மோசமடைவது கண்டு உறுப்பு தானத்திற்கு தன் உடலை வழங்கியது மட்டுமின்றி தம்பியின் சிறுநீரகம் செயலிழந்து வருவதால், அதை தன் தம்பிக்கு தானமாக வழங்கி மகிழ்வோடு மறைந்தார்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇