மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இந்த தலைப்பைப் பார்த்தவுடன் பலர் அவசர அவசரமாக அடுத்த பக்கத்தைப் புரட்டுவார்கள். ஒரு முணுமுணுப்பும் இருக்கும். ‘காலங்காத்தால சாவு, சுடுகாடுன்னுட்டு’ என்பதே அந்த முணுமுணுப்பாயிருக்கும். ஆனால் வாழ்க்கையின் நிலையாமையை அறிந்தவர்கள், மற்றும் ஞானிகள் இந்த வார்த்தைகளைப் பெரிதுபடுத்த மாட்டார்கள்.
என்றாவது ஒருநாள் சந்திக்க வேண்டிய நிகழ்வும், போக வேண்டிய இடமும் தானே என்ற புரிதல் நிலை அவர்களுக்கு இருக்கும்.
கடந்த 24-10-2021 அன்று தினமணி நாளிதழில் வெளியான “இறப்பிற்குப் பிறகும் சாதி மனிதனை விடவில்லை” என்ற செய்திக் குறிப்பே இந்தக் கட்டுரை எழுத தூண்டு கோலாயிற்று. இந்தச் செய்தியின் சுருக்கம் இது தான்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலூக்காவில் உள்ள ஏரிப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தன் கணவருக்குச் சொந்தமான நிலத்திற்குச் செல்லும் வழியில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ள போதிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அதைப் பயன்படுத்த அனுமதிக்காததால், சாலை ஓரங்களில் பிணங்களை எரிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதாக அறிவித்தார்.
தீர்ப்பில் நீதிபதி, விளிம்பு நிலை பிரிவில் உள்ளவர்களும் பொது மயானத்தைப் பயன்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்ற இடங்களில் அடக்கம் செய்வதைத் தடுக்க முடியும் என்று கூறியதோடு அல்லாமல், “இறந்த பிறகும் கூட ஜாதி மனிதனை விடவில்லையே?” என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
இது முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்பும் பல்வேறு கால கட்டங்களில், இது போன்ற சம்பவங்கள் நடந்து, பின் அரசும், நீதிமன்றமும் தலையிட்டு நீதியை நிலை நாட்டியுள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய ஆற்று பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கிய செய்தி சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
சாதியின் அடிப்படையில் சுடுகாடு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும் நாம் ஒவ்வொருவரும் அவமானப்பட வேண்டியதுமாகும். கோவில்களிலும், மருத்துவமனைகளிலும் பார்க்கப்படாத ஜாதி மயானத்தில் மாத்திரம் பார்க்கப் படுவது ஏன்?
சாதி இல்லாத சமுதாயம் உருவாக்க பல நூற்றாண்டுகளாக, பல தலைவர்கள் போராடியும் இன்றும் அது வேரோடி இருப்பது கிராமங்களில் என்பது ஒரு கசப்பான உண்மை.
பெரு நகரங்களிலும்,நகரங்களிலும், சிறுநகரங்களிலும் இந்த சாதிய மயானம் என்பது இல்லை. காரணம் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் என்ன ஜாதி என்று ஆராயும் அளவிற்கு நேரம் இல்லாமல் தங்கள் வேலையைப் பார்ப்பவர்கள் நகரவாசிகள்.
அப்படியே பார்த்தாலும் எல்லா மதத்தினரும், சாதியினரும் பரவிக் கிடப்பதால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பெரும்பான்மையினராக ஒரே பகுதியில் குடியிருக்கும் வாய்ப்பும் குறைவு. ஆனால் கிராமத்தில் இன்றும் கூட உயர் சாதியினர் ஒரு பகுதியிலும், பட்டியலினத்தவர் தனிப்பகுதியிலும் வாழ்ந்து வருவதால் பொது மயானப் பயன்பாட்டில் சிக்கல் இருந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு ஒரே தீர்வு நவீன மின்மயானம் தான். இங்கு சாதியில்லை. மதம் இல்லை. இங்கு உடல்களை எரிக்க தேவை என்னவென்றால் இறப்புச் சான்றிதழ், இறந்தவரின் ஆதார் அட்டை, உறவினர்கள் ஓரிரண்டு பேரின் ஆதார் அட்டை, அவ்வளவு தான்.
மின்மயானங்கள் அந்தந்த ஊரில் உள்ள லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற சேவை அமைப்புக்களால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், திருப்பூர் தெற்கு மின் மயானம் சென்று பார்த்தால் தெரியும். மயானம் என்று சொல்ல முடியாது. ஒரு அழகிய, சுத்தமான பூங்காவில் நுழைந்து வெளி வந்த அனுபவமே ஏற்படும்.
நீதிபதி அவர்களின் வேதனை வெளிப்பாட்டைப் படித்தவுடன் உடன் ஞாபகத்திற்கு வந்தது, சதீஷ் குமரன் அவர்களின் ‘சாதிய சுடுகாடு’ என்ற தலைப்பில் படித்த கவிதை வரிகள்:
காதல்
ஒரே ஊர்
ஒரே பள்ளி
ஒரே வயது
ஒரே வகுப்பு
ஒரே ஆசை
ஒரே எண்ணம்
ஒரே கனவு
ஆனாலும் சேர்ந்தே எரித்தோம் எவருக்கும்
தெரியாமல்
ஊருக்கே தெரிந்த தனித்தனியாக
எரிந்து கொண்டிருக்கும் சாதிய சுடுகாட்டில்.
காதல் தீயை.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇