in

கலையாத மேகங்கள் ❤ (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர்

கலையாத மேகங்கள் ❤ (சிறுகதை)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்தி விட்டு நடந்த தனஞ்செயன், படிகளில் ஏறி இரண்டாவது தளத்தில் இருந்த அவன் ஃப்ளாட்டை அடைந்தான். வீட்டைத் திறந்து லைட்டை போட்டவனுக்கு மனம் கசந்தது.

மனைவி சந்தியா இருந்தால் இரவு உணவு ரெடியாக இருக்கும் என நினைத்தவன், ‘ராக்ஷஸி பிடிவாதக்காரி, அவளை ஏன் நினைக்கணும்’ மனத்தின் முரண்பட்ட எண்ணங்களால் தலையை குலுக்கிக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

சந்தியா, அவள் பிறந்த வீட்டுக்கு சென்று ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. 

தனஞ்செயன் மனம் அவனையுமறியாமல் பின்னோக்கி நகர்ந்தது. திருமணத்தையே நினைக்காமல் வேலையின் பின்னே ஓடிக் கொண்டிருந்தவனை, அவன் பெற்றோர் நம் சொந்தத்திலேயே பெண் இருக்கிறாள் என அழகியான சந்தியாவைக் காட்டியதும், மறுப்பேதும் சொல்லாமல் தனஞ்செயன் தலையாட்டினான்.

சந்தியாவின் வீட்டிலும் சொந்தத்தில் வரன் கிடைத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. இரு வீட்டாருக்கும் மதுரை தான் சொந்த ஊர் என்பதால் அங்கேயே வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. 

முதல் மூன்று மாதங்கள் விருந்து தேனிலவு என கொஞ்சி குலாவியதில் தனஞ்செயன், சந்தியாவுக்கு நாட்கள் தித்திப்புடன் இறக்கை கட்டிப் பறந்தன.

அதன் பின் இருவரும் வேலைக்குப் போய்க் கொண்டு சென்னையில் தனியாக குடித்தனம் நடத்திய போது தான் அவர்களின் மாறுபட்ட எண்ணங்கள், சுவைகள் அவ்வப்போது முட்டிக் கொண்டன.

சந்தியா எப்போதும் எந்த விஷயத்தையும் தன்னிச்சையாக முடிவு செய்து விட்டு அதை ஒரு செய்தியாகத்தான் மற்றவர்களிடம் கூறுவாள். ஆனால் தனஞ்செயனோ எல்லா விஷயத்தையும் மற்றவர்களிடம் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அனைவருக்கும் உகந்ததாக ஒரு முடிவு எடுப்பான்.  அப்போதிலிருந்து தொடங்கியது பிரச்சினை.

இது என்ன “தான்தோன்றித்தனம் “என தனஞ்செயன் அவளிடம் கடுகடுப்பான்.

சந்தியாவோ, “நான் என்ன சின்ன பெண்ணா உன்கிட்ட கேட்டுத்தான் எல்லாம் செய்யணுமா?” என அவனைத் திருப்பிக் கடிப்பாள்.

சில நேரங்களில் சமைக்க மூடு இல்லாமல் சந்தியா இரவு உணவை ஆபீஸீலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து விடுவாள். ஆனால் தனஞ்செயனோ அன்று தான் இருவரும் இணைந்து ஏதாவது ஒரு புது வகை டிஷ் செய்யலாம் என ஆபீஸீலிருந்து ஆசையாக வருவான். அதனால் ஆர்டர் செய்த உணவை சாப்பிட முடியாது என அடம் பிடிப்பான்.

சந்தியாவோ சற்று நேரம் பார்த்து விட்டு இன்று இது தான், என அவள் சாப்பிட்டு படுத்து விடுவாள். இப்படி ஏதோ ஒன்று சங்கிலித்தொடர் போல, பத்து நாட்கள் சுமுகமாக இருந்தால், பத்து நாட்கள் முறுக்கிக் கொள்வர்.

இதைப் போன்ற சின்னச்சின்ன பிரச்சினைகள் அவர்களுக்குள் மெல்ல மெல்ல பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கை சண்டிமாடுகள் பூட்டிய வண்டியாக நொண்டியடித்தது. 

ஆபீஸுக்கு சில நாட்கள் களையிழந்த முகத்துடன் வரும் தனஞ்செயனை பார்த்து அவன் மேனேஜர், “என்ன புது மாப்ளே, முகம் பொலிவாயில்லையே என்ன ஆச்சு” என விசாரிப்பார்.

தனஞ்செயனோ, “வெறுப்பாயிருக்கு ஸார், கல்யாணம் செஞ்சுட்டதே தப்போன்னு தோணுது” என்பான் கலங்கிய குரலில்.

“என்னப்பா நீ, பொண்ணுங்க புது நாத்து மாதிரிப்பா. அது மண்ணுல  வேர் பிடிச்சு வளர கொஞ்சம் டைம் எடுக்கற மாதிரி உன் மனைவி உன்னை புரிஞ்சுக்க கொஞ்சம் நாளாகும். இதுக்கெல்லாம் இப்படி மூஞ்சியை தூக்கி வைச்சுக்கறதா ஃபீரீயா விடு சரியாயிடும்” என ஆறுதல் கூறுவார். 

சந்தியா இன்னும் ஒரு படி மேலே யோசித்தாள்

‘ஜாலியா ஃப்ரண்ட்ஸ் ஷாப்பிங் மால்ன்னு சுத்திட்டு இருந்தவளை கல்யாணம் என்ற விலங்கைப் பூட்டி என்னை ஒரு கூண்டு பறவையாக்கி வைச்சுட்டாங்களே. எதை  செய்ய நினைச்சாலும் ஒரு கட்டுப்பாடு, எதையும் நான் சுயமாக முடிவெடுக்க கூடாது. எல்லாத்துக்கும் புருஷன் கிட்ட அனுமதி வாங்கணும். இதுதான் திருமண வாழ்க்கையா?’ என மனம் வெதும்பி புலம்பினாள்.

அன்று சந்தியா ஆபீஸிலிருந்தே அவள் தோழியின் வீட்டுக்குப் போய், தோழியின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு இரவு பதினோரு மணிக்கு மேல் வீடு திரும்பினாள். தனஞ்செயன் கோபத்தில் கொதித்திருந்தான்.

சந்தியா வீட்டினுள் நுழைந்ததும் அவளிடம், “இப்படியெல்லாம் உன் இஷ்டத்திற்கு இருப்பேனோ அதுக்கு நான் தயாரில்லம்மா, பொம்பளைங்கன்னா கொஞ்சம் அடக்கம் வேணும்”  என்று எரிச்சலுடன் கத்தினான். 

 “இப்ப அடக்கமில்லாம நான் என்ன செய்துட்டேன், கன்சர்வேடிவ்” என சந்தியாவும் பதிலுக்கு கத்த

“காலம் ரொம்ப மோசமாயிருக்கு, நான் எதுக்கு கோவப்படறேன்னு கூட புரிஞ்சுக்க முடியாத முட்டாளா நீ” என ஆத்திரத்தில் கையை உயர்த்தி விட்டான் தனஞ்செயன்.

சந்தியா அவனை முறைத்துப்  பார்த்து விட்டு பெட்ரூமில் நுழைந்து கதவை அறைந்து சாத்தினாள். இருவருக்கும் தூங்கா இரவாக இருந்தது அந்த நாள். 

மறுநாள் இருவரும் பேசிக் கொள்ளாமலே ஆபீஸ் கிளம்பினர். அன்று மாலை வீடு திரும்பிய தனஞ்செயனிடம், “நான் மதுரைக்கே போகலாம்னு இருக்கேன். ஆபிஸில் டெப்டேஷனுக்கு கேட்டாங்க நான் ஓகே சொல்லிட்டேன்” என்ற சந்தியா, “இது போல ஒரு வெறுமையான கசந்த வாழ்க்கையை நாம ஏன் தொடரணும்? அவரவர் பாதையை பார்த்துட்டுப் போகலாம்” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

“ம்…. இதையும் நீயே முடிவு செய்துட்ட, சரி நான் உன்னைத் தடுக்கலை” என்றான் தனஞ்செயன் வீம்பாக.

இரு பெற்றோரும் அவர்களிடம் மாறி மாறி பேசிப் பார்த்தனர். ஆனால் இருவரும் பிடி கொடுக்கவில்லை. சரி கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என அவர்களும் பேசாமலிருந்தனர்.

மதுரை வந்த சந்தியாவுக்கு முதலில் இறுக்கம் குறைந்து சுதந்திரமாக இருப்பது போல் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு தன் பிறந்த வீடே அந்நியமாகத் தெரிந்தது. எதையோ இழந்தது போல் மனம் பாரமாக இருந்தது. மன அழுத்தம் ஏன் எனப் புரிந்தாலும் ஏற்றுக் கொள்ள அவள் ஈகோ பெறும் சுவராகத்  தடுத்தது. 

அன்று ஆபீஸ் லன்ச் டைமில் சந்தியாவின் பக்கத்து ஸீட் ஸ்வேதா டேபிள் மேல் லன்ச் பாக்ஸை ‘டொம்’ என வைத்தவள்

“வெறுப்பாயிருக்கு, என்ன லைஃப்?” என்றாள் சலிப்புடன்

“என்னாச்சுப்பா?” என்றாள் சந்தியா ஆர்வமாக.

“தினமும் என் ஹஸ்பெண்ட் கூட சண்டை. இன்னும் பேச்சுலர் மாதிரி பிரண்ட்ஸ் கூட அரட்டை அடிச்சட்டு நைட் லேட்டா வரார். சனி, ஞாயிறுன்னா பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து பிக்னிக் போறது. சில சமயம் தண்ணியடிக்கறதுன்னு இருக்காரு. நான் ஏன்னு கேள்வி கேட்டா, இதெல்லாம் ஜஸ்ட் ஃபன், மேரேஜ் ஆகிட்டா இதை எல்லாம் விட்டுடணுமாங்கறாரு”  என்ற ஸ்வேதாவை இடைமறித்து சந்தியா

“ஏய், உன் வீட்டுக்காரர் தண்ணியடிப்பாரா?” என ஆச்சரியமாக கேட்டாள்.

“ம்.. இதுக்கே அசந்தா எப்படி ” என்று கடுப்புடன் கூறிய ஸ்வேதா, “சில நேரம் அவர் இஷ்டத்துக்கு எதையாவது ஆன்லைன்ல ஆர்டர் செய்துடுவாரு. அது எனக்கு பிடிக்குமா, பிடிக்காதான்னு கூட கேட்க மாட்டாரு. நான் பிடிக்கலைன்னு அந்தப் பொருளை யூஸ் பண்ணலைன்னா வீட்டில ஒரே சண்டை தான். இது கூட பரவாயில்லப்பா, எனக்கு நல்ல தலைவலி ஆக இருக்கும், அன்னைக்குத் தான் தியேட்டருக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வருவார், நான் வரலைன்னா என் கூட ஒரே தகறாருதான். முன்னாடியே ஒரு போன் செய்து என் கிட்ட கேட்டிருக்கலாமில்லன்னு சொன்னா ‘ஓ… உன் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் நான் எல்லாம் செய்யணுமோ’னு கேட்பாரு. எல்லாம் ஆம்பளத்  திமிரு, எனக்கு பேசாம டைவர்ஸ் வாங்கிடலாம்ன்னு இருக்கு” என்றாள் ஸ்வேதா எரிச்சலுடன். 

எந்த வகையிலும் ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கொள்கை உடையவன் தனஞ்செயன். ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என் தனா, சந்தியா அவளையும் அறியாமல் இதை தனஞ்செயனுடன் ஒப்புமை செய்தாள்.

தியேட்டருக்கு போக டிக்கெட் வாங்கும் முன் என்னிடம்  இந்த டைம்  உனக்கு ஒத்து வருமா, இந்தப் படம் பிடிக்குமா என எத்தனை கேள்விகள் கேட்பான். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருவதென்றாலும் அல்லது அவன் அங்கு செல்வதானாலும் என்னிடம் அனுமதி கேட்பானே, நான் தான் தனாவை சரியாக புரிந்து கொள்ள வில்லையோ , சந்தியா குற்ற உணர்ச்சியில் திகைத்தாள். 

ஸ்வேதாவின் புலம்பலைக் கேட்டுக் கொண்டிருந்த ஹெட் க்ளார்க்   ராதா, “அபத்தமா எதையாவது பேசாதடி” என்று அவளை அதட்டினாள்.

ராதா ஆபீஸில் சீனியர், வயதிலும் பெரியவள் ஆனதால் சற்று உரிமையுடன் பேசுவாள். எழுந்து ஸ்வேதாவின் அருகில் வந்த ராதா, “ஸ்வேதா நான் ஒண்ணும் உனக்கு புதுசா சொல்லப் போறதில்லப்பா” என்றவள், “உனக்கு திருமணமாகி ஒரு பத்து மாதம் ஆகியிருக்குமா? “எனக் கேட்டாள்

“ம்.. அடுத்த மாதம் வெட்டிங் டே வருது ” என்றாள் ஸ்வேதா அலுப்புடன்.

ராதா சிரித்தபடி ஸ்வேதாவிடம், “மணமான புதிதில் தம்பதிகளுக்கு அவர்களுடைய சுதந்திரம் பறி போனது மாதிரி இருக்கும். கணவனோ மனைவியோ உடனடியாக மத்தவங்களுக்கு தகுந்த மாதிரி மாற முடியாது. நான் மாறணுன்னும்  சொல்லல. கொஞ்சம் புரிதல் இருந்தா ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து இந்த சூழலை சமாளிக்க முடியும்.

வாழ்க்கை ஒரு அழகான பயணம் ஸ்வேதா. அதில் திருமணம் ஒருவழிப் பாதைம்மா. அதை இறுதி வரைக்கும் சேர்ந்தே கடப்போம்னு அக்னி சாட்சியா உறுதி எடுத்துக்கறாங்க மணமக்கள். அதனால நடுவில் பிரிஞ்சு போறது, வேறு பாதை மாறுவது பற்றியோ யோசிக்க கூடாது.

ரொம்ப கேஷீவலா டைவர்ஸ் வாங்கிடலாம் போல இருக்குன்னு சொல்றயேப்பா, ஆத்திரத்தில் அவசரப்பட்டு டைவர்ஸ் வாங்கிட்டு சிங்கிளா இருக்கிறவங்க  மேல் விழும் இந்த சமூகப் பார்வை எவ்வளவு மோசமானதாயிருக்கும் தெரியுமா? இளம் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் கூண்டுப் பறவையாக இருக்கோம்ன்னு நினைக்காம நாம ஒரு பாதுகாப்பான கூட்டுக்குள் இருக்கோம்ன்னு மகிழ்ச்சியாக இருக்கணும்.

அதனால பொறுமையா உன் பக்கத்து நியாயத்தை உன்னவருக்குப் புரிய வை. மணவாழ்க்கை ரொம்ப இனிமையானது. அதை தக்க வைத்துக் கொள்வது நம் கையில தான் இருக்கு” என அவளுக்கு அறிவுறுத்தினாள்  ராதா.  

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தியா அருமையான நல்ல வாழ்க்கையை தன் அகங்காரத்தினால் இழந்து விடக் கூடாது என மனதில் தோன்றிய அடுத்த நொடி தன் கணவனைப் பார்க்க வேண்டும், அவனுடன் பேச வேண்டும் என்ற ஏக்கமும் தாபமும் அவளின் ஒவ்வொரு செல்லிலும் பரவியது.

எப்போது ஆபீஸ் வேலை நேரம் முடியும் எனக் காத்திருந்த சந்தியா முதல் ஆளாக வீட்டுக்குக் கிளம்பினாள். 

வீடு வந்த சந்தியா அவள் அம்மா ஏதோ சொல்வதைக் கூட காதில் வாங்காமல் போனில் தன் கணவனுடன் பேசுவதற்காக மாடியில் உள்ள தனது அறைக்கு விரைந்தாள். கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே தனஞ்செயன் கட்டிலில் அமர்ந்து அவர்களின் திருமண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் பேச வேண்டிய அனைத்தும் சந்தியாவுக்கு கண்ணீராக வந்தது.

தனஞ்செயன் அவளருகில் வந்து அவளை இறுக்கி அணைத்து, “என்னை மன்னிச்சுடு தியா” என்றான் உள்ளார்ந்த அன்புடன்.

அந்த ஒரு வார்த்தையில் உருகியவள் “நீங்க எப்படி இங்க?” என்றாள் சந்தியா விம்மியபடி.

“உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியுமா சொல்லு?” என அவளைக் கொஞ்சிய தனஞ்செயனுக்கு முதல் நாள் அவன் ஆபீஸ் மேனேஜர் கூறியது நினைவிலாடியது

“கணவன் மனைவிக்கு இடையே நீயா நானாங்கிற போட்டியோ யார் பெரியவன்ங்கற ஈகோவோ வரக் கூடாது. மன்னிப்புக் கேட்க தயங்கவே கூடாது. கணவனும் மனைவியும்  எப்போதும் கலையாத மழை மேகம் போல இருக்கணும், ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பை பொழிஞ்சுக்கணும். நாளை உங்களுக்கு லீவு தரேன்,  முதல்ல உங்க மனைவியை ஊரிலிருந்து கூட்டிட்டு வாங்க” என அன்புக் கட்டளையிட்டார்.

இன்று ஊடல் மறைந்து இணைந்த அந்த இருவரையும் பொதிகைத் தென்றல் தாலாட்டியது.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காயும் நிலாக்கள் (கவிதை) – ✍ தூரா.துளசிதாசன், தூத்துக்குடி

    சாதியும் சுடுகாடும் (கட்டுரை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு