சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 50)
அன்னைக்கு இரவு முழுசும் என்னால சரியா தூங்க முடியல. கண்ணு ரெண்டும் திகுதிகுன்னு எரிஞ்சுக்கிட்டேயிருந்துச்சு. பாய சுருட்ட மனசில்லாம அப்படியே எந்திரிச்சு ஒக்காந்துகிட்டு இருந்தேன். பக்கத்துல படுத்துருந்த என்னோட பொஞ்சாதி வீரம்மா எழுந்திருச்சு நா ஒக்காந்து இருக்கிறத பார்த்துட்டு லைட்ட போட்டுட்டு எம் பக்கத்துல வந்து ஒக்காந்தா.
ஏம் பக்கத்துல வந்து ஒக்காந்தவ, என்ன பாவமா ஒரு பார்வ பாத்துட்டு, “மாமா ஏன் இப்புடி ஒக்காந்து இருக்க? இன்னும் சரியாக விடியலயே. மணி அஞ்சு தானே ஆவுது? ஏன் இப்புடி முழிச்சு கெடக்க. கண்ணெல்லாம் செக்கச் செவேன்னு செவந்து கெடக்கு. நைட்டு செரியா தூங்கலையா?”
என்னோட தலையை கோதி விட்டு, கையை புடிச்சுக்கிட்டு ஏம் மொகத்த அவ பக்கம் திருப்பி, என்ன பாத்து கேட்டா.
“ஏம் மாமா அந்த ஞாபகமா வருதா? வாங்கி வச்சதல்லாம் தீந்து போச்சா?” என்ன பாத்து கரிசனையா கேட்டா
நா தெனசரி வீட்டுக்கு குடிச்சிட்டு வந்தாலும் சரி வாங்கிட்டு வந்தாலும் சரி, திட்டுற ஏம் பொஞ்சாதி வீரம்மா, இன்னிக்கு இப்புடி கேட்டது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு
நா இல்லைன்னு தலையை ஆட்டிட்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா தான் ஒக்காந்திருக்கேன்”னு அவகிட்ட சொன்னதை அவ நம்பல.
“இல்ல மாமா, நீ பொய் சொல்ற. நேத்து சாயந்தரத்துலருந்து ஒன்ன பாத்துட்டு தான் இருக்கேன், நீ எதையோ பறிகொடுத்தது மாதிரி இருக்க. ஒன்னால தண்ணி அடிக்காம இருக்க முடியல”
அவ அப்படி சொன்னத கேட்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ பேசாம கெட”னு கோவமா பேசிப்புட்டு, பேசாம தலையை என்னோட கால்களுக்கு இடையே கவுத்தபடி இருந்தேன்.
கொரானா நோவு வந்ததால ஊரடங்குனு கவர்மெண்ட் சொன்னவுடனே ஏங் கையில இருந்த காச வச்சு அஞ்சு குவாட்டரு பாட்டுலு தான் வாங்க முடிஞ்சுச்சு. ஊரடங்கு ஆரம்பிச்சதுல இருந்து, அஞ்சு நாள்ல நாளுக்கு ஒன்னா குடிச்சு தீத்துட்டேன். வாங்கினதெல்லாம் தீந்ததுக்கு அப்புறம், எனக்கு பைத்தியம் புடிச்சது மாதிரி இருந்துச்சு
வீரம்மா இந்த நேரத்துல வலிய வலிய என்கிட்ட பேசினாலும், அவகிட்ட மொகத்தை கொடுத்து செரியா நா பேசுறது இல்ல
வீரம்மா நல்லவ, வீட்டுச் செலவெல்லாம் அவ தான் பாத்துக்குவா. எனக்கு பெயிண்டர் வேலை. மாசத்துல பத்துலருந்து பதினஞ்சு நாள் தான் வேலை வரும். அப்புடி வேலையில வர்ற காச வச்சு தான் நா மாசம் முழுசும் குடிக்க வச்சுக்குவேன்
எப்பவாது அத்தி பூத்த மாதிரி வீரம்மாக்கிட்ட வீட்டுச் செலவுக்கு ஆயிரமோ ஐநூறோ கொடுப்பேன். வீரம்மாளும் அந்த காச வாங்கிட்டு என்ன திட்டுவா.
“ஒரு குடும்ப ஆம்பள செய்யற காரியமா இது? இந்த காச வச்சு என்ன பண்ணுவ நானு, வீட்டு வாடக கொடுப்பனா இல்ல பலசரக்கு சாமான வாங்கி ஒனக்கு பொங்கி போடுவேனா? சொல்லு பாக்கலாம், நானும் வேலைக்கு போகலனா அவ்வளவு தான். சோத்துக்கு மங்க தூக்கிகிட்டு வீடு வீடா போக வேண்டியது தான்
நல்ல வேளடா சாமி, கொழந்த குட்டிங்க இல்ல. இருந்திருந்தா அதுகளும் சேந்து இந்த நரகத்துல ஒன்னால கஷ்டப்பட்டு கெடக்க வேண்டியதா இருந்திருக்கும். ஏதோ நா இந்த வேலைக்கு போறதுனால கொஞ்சத்துக்கு கொஞ்சம் கவுரவமா இருக்கு” அப்படின்னு அடிக்கடி சொல்லி என்ன திட்டுவா
என்ன தான் அவ என்ன திட்டினாலும், ஒரு நா கூட எனக்கு சமைச்சு கொடுக்காம இருந்ததில்ல. ஏம் வயித்த அவ பட்டினி போட்டதே கெடையாது.
வீரம்மாவ பாத்தா எனக்கு பாவமா தான் இருக்கும்.என்ன செய்ய? என்னால இந்த குடிய விட முடியல.
வீரம்மாவுக்கு பக்கத்துல உள்ள இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில ஆயாம்மா வேல. மாசம் அய்யாயிரம் வாங்குறா. அதுலேயே வீட்டு வாடக கொடுத்துகிட்டு, மத்த செலவுகளையும் பாத்துக்கிறா. எப்படித் தான் சமாளிக்கிறாளோ தெரியல
வீரம்மா பள்ளிக்கூடத்தில சின்ன புள்ளைங்ககிட்ட ரொம்ப அன்பா நடந்துக்குவாளாம். அதுக ஒண்ணுக்கு ரெண்டுக்கு போனா கொஞ்சம் கூட மொகம் சுளிக்காம தாம் பெத்த புள்ள மாதிரி பாத்துக்குவாளாம்.
அதனால அங்க படிக்கிற சில வசதியான வீட்டு புள்ளைங்களோட பெத்தவுங்க, மாச மாசம் “இந்தா வச்சுக்க செலவுக்கு ஆகும்”னு சொல்லி வீரம்மா கையில திணிச்சுட்டு போவாங்களாம். அந்த காசையும் வச்சு தான் வீரம்மா குடும்பத்த நல்லபுடியா நடத்திக்கிட்டு வாறா
எங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் கொழந்த பாக்கியம் கெடைக்கல, அத நெனச்சு வீரம்மா கலங்காத நா இல்ல.
அன்னைக்கு காலையில நா ஏந்திருச்சதிலிருந்து பேசாம சோகமா இருந்தத பாத்துட்டு, “மாமா கண்டத நெனைச்சு ஒளட்டாம போயி பல்ல வெளக்கிட்டு வா. நா ஒனக்கு காப்பி போட்டு எடுத்தாரேன்”னு சொல்லிட்டு போனா.
நானும் பேசாம எந்திரிச்சு போயி பல்ல வெளக்கிட்டு திரும்ப வந்து பாயில அப்டியே அமதியா உட்கார்ந்துடேன்.
அதுக்குள்ள வீரம்மா வரகாப்பி போட்டு நாலஞ்சு ரசுக்கு துண்டுகள எடுத்து ஒரு தட்டில் வைச்சுக்கிட்டு எம் பக்கத்துல ஒக்காந்துகிட்டு ஒரு ரசுக்கு துண்ட எடுத்து வர காப்பியில நனைச்சு, “இந்தா மாமா, ஆக்காட்டு, இந்தா சாப்புடு”ன்னு வாயருகே ஊட்ட வந்தா
அவ அப்புடி செய்யறத பாத்து எனக்கு என்னவோ போல இருந்துச்சு. ”கொண்டா நானே சாப்புடுறே”னு அவகிட்ட இருந்து ரசுக்க வாங்க போனேன்
நா எவ்வளவோ தடுத்தும் கேட்காம, அவளே வற்புறுத்தி எனக்கு ஊட்டி விட்டா.
“ஆ…ஆக்காட்டுங்க”னு சொல்லி ஒவ்வொரு ரசுக்கு துண்டையும் காப்பியில நனைச்சு எனக்கு ஊட்டிவிட்டா. அந்த நேரத்துல, சின்ன வயசுல நா எங்க அம்மாகிட்ட ஊட்டிக்கிட்ட ஞாபகம் வந்துச்சு
ஒரு தாயைப் போல கருணையோடு அன்னைக்கு எனக்கு ஊட்டி விட்டா. அந்த நேரத்துல என்னையும் அறியாம நா உணர்ச்சிவசப்பட்டுட்டேன். லேசா கண்ணு கலங்கிடுச்சு.
ஊரடங்கு ஆரம்பிச்ச நாள்ல இருந்து வீரம்மா எனக்கிட்ட காட்டுற பாசத்தை நினைச்சு நினைச்சு சந்தோசப்பட்டேன். நா தான் வீரம்மாவோட பாசத்த புரிஞ்சிக்காம குடிகாரனா ஊதாரியா இருந்துட்டேன்.
ஒருநாள் வீரம்மா தெருவுல தள்ளுவண்டியில வெங்காயம் வித்துட்டு போறவருகிட்ட வெங்காயம் வாங்கிக்கிட்டே கேட்டா, “அண்ணே நா கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, எங்க வீட்டில கொஞ்சம் குடிப்பழக்கம் உள்ளவரு கொஞ்ச நாளா எதுவும் சாப்பிடாம இருக்கிறதால என்னமோ போல இருக்காரு. கைகாலெல்லாம் நடுக்கமா இருக்கிறாரு. அது தான் அவருக்கு என்னமோ ஆயிடும்னு எனக்கு பாவமா இருக்கு. அதனால, காசு தறேன் எங்கயாவது கெடைச்சா நாளைக்கு வர்றப்ப வாங்கியாந்து தர்றியா அண்ணே”னு தயங்கி தயங்கி கேட்டா.
அதுக்கு வெங்காய வண்டிக்காரரு வீரம்மாவ திட்டினாரு. “இந்தாம்மா… பேசாம கெட. அதெல்லாம் எங்கேயும் கெடைக்காது. புருஷனுக்கு வாங்கி கொடுத்து நீயே அந்த ஆள கெடுக்க பாக்குறியா? ஒன்ன மாதிரி ஆளாலதாம்மா இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் திருந்த மாட்டேங்கிறாங்க” வெங்காய வண்டிக்காரரு கோவமா சொல்லிட்டு போயிட்டாரு
நான் வீரம்மாவ உள்ள கூப்பிட்டு திட்டுனேன். “என்னை என்ன அவ்வளவு கேவலமா நினைச்சுட்டியா வீரம்மா, நான் குடிகாரந்தான் ஒத்துக்குறேன். குடிக்காததால புத்தி பேதலிச்ச மாரி தான் இருக்கு. அதுக்காக நீ போறவங்க வர்றவங்க கிட்டல்லாம் எனக்காக நீ இப்புடி கீழ எறங்கி போகணுமா? அதுக்கு நீ எனக்கு வெசத்த வாங்கி குடு, குடிச்சிட்டு செத்துப் போறேன். ஏங் கண்ணு ரெண்டும் கலங்கிடுச்சு, கொஞ்சம் கொஞ்சமா நான் இத விட்டுட்டு வர மாட்டேனா என்ன, நம்பலியே நீ. எனக்காக நீ சாராயம் வாங்கி கொடுத்து அத நா குடிச்சிட்டு சந்தோசபடணுமா?”னு கோவமா பேசுனேன்.
அதுக்கு வீரம்மா என்ன கட்டி புடிச்சுகிட்டு, “ஐயோ என்ன மன்னிச்சிடு மாமா. அதுக்கில்ல மாமா, டெய்லி குடிக்கிற நீ, குடிக்காம பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயிடுவியோனு எனக்கு பயம். பிள்ளையா? குட்டியா? எனக்கு ஒன்ன விட்டா வேற ஏது நாதி? நீ உசுரோட இருக்கிற தைரியத்துல தான நானும் இருக்குறேன். நீ வீட்ட கவனிக்காட்டியும் ஒன்ன நா கவனிச்சுக்கிறேன். நீ உசிரோட இருந்தா அது போதும் எனக்கு”னு வீரம்மா ஏங் கால்ல விழுந்து கதறி அழுகுறத பாக்குறப்ப, ஏம் மனச என்னமோ பண்ணுச்சு
அவளோட ஒவ்வொரு வார்த்தையும் அழுகையும் ஏம் மனசுக்குள்ள நெருஞ்சி முள்ளா குத்திருச்சு. அப்பவே நா வைராக்கியமா ஒரு முடிவ எடுத்தேன்
ஏங் கால்ல விழுந்து கெடந்த வீரம்மாவ கையை பிடிச்சு மேலே தூக்கி, “இத்தோடு நா குடிய விட்டுடறேன் வீரம்மா, ஒனக்கு முன்னாடி குடி எனக்கு பெருசுல்ல. ஓம் அன்புக்கு முன்னாடி அது வெறும் தூசி, நீ காட்டுற இந்த பாசத்துக்கு ஈடா வேற என்ன இருக்கு? ஓம் மேல சத்தியம் வீரம்மா, இனி நான் குடிக்க மாட்டேன். என்ன நா மாத்திக்கிறேன்”னு சொல்லி வீரம்மா தலையில அடிச்சு சத்தியம் பண்ணுனேன்.
அதுலலிருந்து வீரம்மா ரொம்ப சந்தோசபட்டு என்ன கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிட்டா. டெய்லி விதவிதமா ஏதாவது பலகாரம் செஞ்சு குடுப்பா. தாம் பெத்த புள்ள மாதிரி யென்ன பாத்துக்கிட்டா
என்னோட கை கால் நகங்களை வெட்டி விட்டா, ஒன்னு ரெண்டு தடவ எனக்கு எண்ணெய் தேச்சு குளிச்சு விட்டா. எங்க தான் காசு வச்சிருந்தாலோ தெரியல, நல்லவிதமா எனக்கு சமைச்சு குடுத்து எலும்பு தெரிஞ்ச ஏம் ஒடம்பு கொஞ்சம் தசையை மூடுற மாதிரி செஞ்சா.
முகமெல்லாம் நல்லா குண்டு குண்டா ஆயிடுச்சு. அடிக்கடி கண்ணாடியில பாத்துக்குவேன். கண்ணாடியில பாக்க பாக்க எனக்கு சந்தோசமா இருந்துச்சு. இம்புட்டு அழகா ஆயிட்டோமே நாம அப்புடின்னு
ஊரடங்குக்காக கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூவாய வீரம்மா என்னத் தான் போயி வாங்கியார சொல்லுச்சு. எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. இத்தன வருசமா காச ஏங் கண்ணுல காட்டினதுல்ல, நா காச களவாண்டு குடிச்சுருவேன்னு எனக்கு தெரியாம தான் காச பத்தரமா எங்கேயாவது ஒரு எடத்துல வீரம்மா ஒளிச்சு வச்சுரும்.
ஆனா வீரம்மா இப்ப ஏம் மேல எம்புட்டு நம்பிக்க வச்சிருந்தா, ரேசன் கடைக்கு போயி கொடுக்குற ஆயிரம் ரூவாய வாங்கிட்டு வர சொல்லும். எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.
நானும் ரேசன் கடையில கொடுத்த ஆயிரம் ரூவாய வாங்கிட்டு வந்து வீரம்மா கிட்ட கொடுத்தேன். “நீயே போயி பத்திரமா வய்யி மாமா”னு சொல்லுச்சு
ஒரு நா, “தெருமுனையில ஒருத்தரு முருங்கக்கா விக்கிறாரு, போய் வாங்கிட்டு வா மாமா”னு சொல்லி காசு கொடுத்துச்சு
இப்படி வீரம்மா ஏங்கிட்ட காசு குடுத்து சாமான் வாங்கியார சொன்னது இது தான் மொத தடவ, எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.
நானும் பைய எடுத்துக்கிட்டு தெரு முனையில முருங்கக்கா வித்துக்கிட்டு இருக்கிறவருகிட்ட போனே. கிட்ட போயி பாத்தப்ப முருங்கக்கா வித்தவரு வெறும் கூடையோட காச எண்ணிக்கிட்டுருந்தாரு.
காயி இல்லையான்னு கேட்டப்ப,“கொண்டு வந்த காயெல்லாம் வித்துப் போச்சு. ரெண்டு மவராசனுங்க வந்து கொண்டு வந்த எல்லா காயையும் அவுங்க வீட்டுக்கு மொத்தமா வாங்கிட்டு போயிட்டாங்க, புண்ணியவான்க நல்லா இருக்கணும். எனக்கும் நேரம் மிச்சம்”னு முருங்கக்கா விக்க வந்தவரு பணத்த பையில வைச்சுக்கிட்டு வெறுங் கூடய எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.
எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. வாழ்க்கையில முதமுறையா இப்பத் தான் வீரம்மா ஏங்கிட்ட காசு கொடுத்து காய் வாங்கியாரச் சொல்லுச்சு. அதையும் சரியாக செய்ய முடியலையே அப்படின்னு வருத்தமா இருந்துச்சு
பக்கத்துல தேடி பாத்தேன், எங்கேயும் ஒரு காய்கடையும் இல்ல. வெறுங்கையோடு போயி வீரம்மாகிட்ட தயங்கி தயங்கி சொன்னேன்.
வீரம்மா அத பெருசா எடுத்துக்கல. “அதனால என்ன மாமா, ஒனக்கு இன்னிக்கி காய் இல்லாமலே நல்ல கொழம்பா வச்சு தாரேன். இந்த பணக்கார பயலுக ஏன் இப்புடி அலையுறானுகளோ தெரியல? ஊரடங்கு வந்ததும் போதும், கடையில சாமான் செட்டல்லாம் வித்து தீந்ததும் போதுமுன்னு ஆயிடுச்சு.
எத வித்தாலும் அப்புடியே மொத்தமா வாங்கிட்டு போயிடுறானுக, ஏழ பாள கையில இருக்குறத வச்சு சாமான வாங்கி சாப்பிட முடியல. அடுத்தவங்களுக்கு எதுவும் விட்டு வைக்காம தானே வாரி வாங்கிட்டு போறானுக. வாங்கி வீட்டுல ஐஸ் பொட்டியில நாள் கணக்கில வெச்சு அழுகிப் போயி வீணா ஒருத்தருக்கும் பயன்படாம தூக்கி எறிவானுக
என்னமோ இன்னையோட எந்த சாமானும் ஒலகத்துல கெடைக்காமலேயே போய்டும் அப்பூடிங்கற மாதிரி நடந்துக்கிறானுக.போயிட்டு போறானுக கெட்ட புத்தி உள்ளவனுக. விடு மாமா ஒனக்கு இன்னிக்கி சூப்பர் கொழம்பா வைச்சு தாரேன்”னு சொல்லிட்டு, அன்னிக்கு ரொம்ப வாசமா நல்ல ருசியா ஒரு கொழம்பு வச்சிருந்தா வீரம்மா
கொஞ்சமா பருப்பு போட்டு, சின்ன வெங்காயம் பத்து பதினஞ்சு உறிச்சு அதுல போட்டு, நாலே நாலு வரமிளகா கிள்ளிப் போட்டு, ரெண்டு தக்காளிய வெட்டி அதுல போட்டு, ஒரு ஸ்பூனு சீரகம் சேத்து, லேசா புளிய கரைச்சு ஊத்தி, கடுக வெடிக்க விட்டு தாளிச்சு, வீரம்மா கொழம்ப எறக்கி வச்சப்ப, வீடே வாசமா நல்லா மணத்துக் கெடந்துச்சு
சுடச்சுட சோத்த போட்டு கொழம்ப ஊத்தினதும் கை வாய்க்கும் மங்க்குக்கும் பறவயா பறந்துச்சு, அம்புட்டு ருசி. வழக்கத்தை விட அன்னைக்கு அதிகமா சாப்புட்டேன்.
ஒரு நா எனக்கு வீரம்மா முடி வெட்டி விட்டுச்சு. ஏந் தலையை அப்புடியே போலீஸ் கணக்கா மாத்திடுச்சு. அத்தன அழகா எனக்கு முடி வெட்டி விட்டுச்சு.
ஊரடங்கு ஆரம்பிச்சு ஒரு முப்பது நாள் ஆகியிருக்கும். ஒரு நா வீரம்மா காலையில வெள்ளனவே எந்திரிச்சு சமையக்கட்டுல எதையோ உருட்டிக்கிட்டு இருந்துச்சு
கொஞ்ச நேரத்தில பாத்ரூம்ல ‘உவ்வே…உவ்வே’னு வீரம்மா ஒமட்டுற சத்தம் கேட்டுச்சு. படுத்துகிட்டு இருந்த நா, வாரி சுருட்டி எழுந்து ஓடிப் போய் பாத்தேன்
டக்குன்னு வீரம்மாவோட நெத்திய என்னோட ரெண்டு கையாலும் புடிச்சுக்கிட்டேன். அப்ப வீரம்மா என்னோட ரெண்டு கையையும் ஆதரவா புடிச்சுகிட்டு, எச்சி எச்சியா வாந்தி எடுத்துச்சு
பொறவு வீரம்மாவ கைத்தாங்கலா தூக்கி மொகத்தை கழுவி விட்டு, வாய் கொப்பளிக்க தண்ணீ கொடுத்து, கொஞ்சம் தண்ணி குடிக்க வச்சு “என்னாச்சு வீரம்மா வவுரு கிவுரு சரியில்லையா?”னு கேட்டேன்
அதுக்கு அவ இல்லைன்னு தலையை ஆட்டிட்டு, “ஒண்ணுமில்ல மாமா, நீ பதறாத”னு ஏம் மொகத்தை பாத்து சொன்னா
“இந்த மாசம் தள்ளிப் போயிடுச்சு மாமா, நா முழுகாம இருக்கேன்”னு சொல்லி, என்ன கட்டி புடிச்சு அழ ஆரம்பிச்சுட்டா
எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அஞ்சு வருசமா கெடைக்காத இந்த கொழந்த பாக்கியம் இப்போ கிடைச்சிருக்குனு சந்தோசப்பட்டேன். உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு புல்லரிக்கிற மாதிரி இருந்துச்சு
ஏம் வாயில இருந்து எந்த வார்த்தையுமே வரல, நானும் வீரம்மாவ கட்டி புடிச்சு தேம்ப ஆரம்பிச்சுட்டேன்.
அந்த நிமிசத்தில இருந்து, நா வீரம்மாவ கண்ணும் கருத்துமாக கவுனிச்சுக்கிட்டேன். தண்ணி தூக்கி வைக்கிறது, சோறாக்குறப்ப வீரம்மாவுக்கு ஒத்தாசையா இருக்குறதுனு, என்னால ஆன மட்டும் உதவியா இருந்தேன்.
வீரம்மாவும் எனக்கு அது வேல செயுற பள்ளிக் கூடத்திலேயே “வாட்சுமேனு வேல காலியா இருக்கு, அத உனக்கு வாங்கித் தாரேன். ரெண்டு பேருமே ஒரு எடத்திலேயே நிம்மதியா வேல பாக்கலாம்”னு சொல்லிச்சு. நானும் சரின்னு சம்மதிச்சேன்.
“நீ கொழந்த பெத்துக்கிற வரைக்கும் வேலைக்கு போக வேண்டாம், நானே வேலைக்கு போயி சம்பாதிக்கிறேன்” அப்படின்னு வீரம்மா’கிட்ட சொன்னேன். அதுக்கு வீரம்மா ரொம்ப சந்தோசப்பட்டு, ஏந் தலைய கோதி விட்டுச்சு.
அப்புறம் ஒருநா வீரம்மா ஏங்கிட்ட பணம் குடுத்து, “போயி பழங்க ஏதாவது வாங்கிட்டு வா”னு கடைக்கி அனுப்புச்சு
நானும் பைய எடுத்துக்கிட்டு பழம் வாங்க கடைக்கு போனேன். ஊரடங்குனால இம்புட்டு நாளா பூட்டிருந்த ஒயின் சாப்பெல்லாம் அன்னைக்கு தான் கவர்ன்மெண்ட் திறந்திச்சு. ஒயின் சாப்ப தாண்டித் தான் பழக்கடைக்கு நா போகணும்
அப்படி நடந்து போய்க்கிட்டு இருக்கிறப்ப ஒயின்சாப்பில பாட்டுலு வாங்க ரொம்ப தூரத்துக்கு எல்லாரும் வரிசையா நின்னுகிட்டு இருந்தாங்க. நா வருசையில நிக்கிறவுங்கள பாத்துக்கிட்டே நடந்து போய்கிட்ருந்தேன்
ஒயின்சாப்புல அடிக்கடி நா சந்திக்கிற எனக்கு தெரிஞ்ச பெரியவரு ஒருத்தரு என்ன பாத்து கூப்பிட்டாரு.
“மச்சக்காள, ஏன் இவ்வளவு லேட்டு? வரிசையில போயி நில்லு” ன்னாரு
நா திரும்பி பாத்து சிரிச்சேன். அவரு கிட்ட போயி, “நல்லா இருக்கீங்களா?”னு கேட்டேன்
தலையாட்டின பெரியவரு, “மச்சக்காள ஒனக்கு வெசயம் தெரியுமா? போன வாரம் நம்ம ராசு, முத்து, பழனி மூணு பயலுகளும் போயி சேந்துட்டானுங்க”னு மொகத்த சோகமா வைச்சுக்கிட்டு சொன்னாரு
நா பதறிப் போயி, “என்ன சொல்றீங்கய்யா?”னு கேட்டேன்.
“பாட்டுலு கெடைக்காம என்னமோ மெத்தனாலோ? செத்தனாலோ? எதையோ கலக்கி மூணு பேரும் சேந்து குடிச்சிருக்கானுங்க. மூணு பயலுகளுக்கும் கண்பார்வ போயி ஆஸ்பத்திரியில அஞ்சு நாளா கெடந்து, ஒருத்தன் பின்னாடி ஒருத்தனா மூணு பயல்களும் செத்துட்டானுங்க
நா போயி பாத்துட்டு வந்தேன்.அவங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் கதறுனத பாத்து எனக்கு என்னவோ போல இருந்துச்சுப்பா மச்சக்காள. கட தொறக்குற வரைக்கும் அவனுகளுக்கு பொறும இல்லாம போயி சேந்துட்டானுங்க. நல்ல வேளப்பா நீயும் அவனுங்க கூட போகாம இருந்தியே, அதுவரைக்கும் பரவாயில்ல. சரி சரி நீ போயி லைன்ல நில்லு”னு சொன்ன பெரியவரு, லைன் நகரவும் மெதுவா நகந்துக்கிட்டே போனாரு.
பெரியவரு சொன்ன அந்த செய்திய கேட்டதும், எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. செத்துப் போன என்னோட மூனு பிரண்டுகளையும் நெனைச்சு வருத்தப்பட்டேன்
அப்புறம் நா வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிக்கிட்டு வீட்டுக்கு போனேன். வீட்டுக்கு போறதுக்கு கொஞ்ச நேரம் அதிகமாயிடுச்சு. நா தெருமொனையில நடந்து போறப்பவே கவனிச்சேன், வீரம்மா எனக்காக வீட்டு வாசப்படியிலேயே நின்னு நா வரேனானு பாத்துகிட்டு இருந்துச்சு.
நா வீட்டுக்கு போன ஒடனேயே வீரம்மா, “ஏம் மாமா இவ்வளவு லேட்டு?”னு கேட்டுச்சு
“கடையில லேட்டாயிடுச்சு, இந்தா புடி”னு அவகிட்ட பைய குடுத்தேன்
பைய கையில வாங்கின வீரம்மா அதிர்ச்சியில கோவமா என்ன பாத்து கத்துச்சு. “ஏம் மாமா இப்புடி பண்ணுன? இதுக்கா ஒங்கிட்ட காசு கொடுத்து அனுப்புனேன். இத்தன நாளா குடிக்காம இருந்த நீ இனிமே குடிக்கவே மாட்டேனு சத்தியம் பண்ணுனியே. இப்ப இப்படி பாட்டுலும் கையுமாக வந்து நிக்கிறியே?”னு கத்துச்சு.
வீரம்மாவோட அந்த செயல பாத்து எனக்கு சிரிப்பா வந்துச்சு. நா சிரிச்சுகிட்டே வீரம்மாகிட்ட சொன்னேன் “நல்லா எடுத்து பாரு அது என்ன பாட்டுலுனு”
உடனே வீரம்மா பைக்குள்ள இருந்த பாட்டில வெளியயே எடுத்து பாத்துச்சு
“நீ கர்ப்பமா இருக்கியே சத்து வேணும்னு மெடிக்கல கேட்டு சத்து டானிக் வாங்கிட்டு வந்தேன். அந்த பாட்டுலு தான் அது”னு சொல்லி சத்தமாக சிரிச்சேன்.
“சீ…போ மாமா, கொஞ்ச நேரத்துல என்ன பதற வச்சுட்டியே”னு சொல்லி வெக்கப்பட்டு செல்லமா சிணுங்கி அழுதுச்சு
“ஒன்ன விடவும் ஒம் வயித்துல வளர்ற நம்ம கொழந்தைய விடவும் எனக்கு இனி குடி பெருசா வீரம்மா? என்ன என்ன அவ்வளவு மோசமானவனா நினைச்சுட்டியா?”னு நா சொன்னத கேட்டு ரொம்ப சந்தோசப்பட்டுச்சு வீரம்மா
அப்புறம் வீட்டுக்குள்ள போயி அது சத்து டானிக் பாட்டில அலமாரியில வச்சுட்டு, நா வாங்கிட்டு வந்த மாதுளம் பழத்தை எடுத்து உரிக்க ஆரம்பிச்சுச்சு.
அதுல இருந்த மாதுளை முத்துகளை எடுத்து எனக்கு கொஞ்சம் கொடுத்துட்டு அது கொஞ்சம் வாயில போட்டு சாப்பிட்டுச்சு. மாதுளம் பழ முத்துகள சாப்புட்டுகிட்டே நா வீரம்மாவ பாத்து சொன்னேன்.
“ஒரு பூ பிஞ்சாகி பொறவு காயாகி கடசியில பழமாகி இத்தனை நாளா சிறைக்குள் அடைபட்டு கெடந்து வெளியே அது வரும் போது, எத்தன அழகாகவும் சுவையாகவும் ருசியாகவும் இருக்குது பாத்தியா வீரம்மா”னு நா சொன்ன ஒடனே
“அடடா இங்க பாருடா ஏம் மாமா பேசுற தத்து வத்த. ஏம் அன்பு சிறையில அகப்பட்டு கெடக்கிற நீயும் ஒரு ஜொலிக்கிற முத்து தானே மாமா”னு சொல்லிக்கிட்டே, என்னோட கன்னத்த செல்லமா கிள்ளி அதோட உதட்டுல ஒத்திக்கிச்சு
நானும் சிரிச்சுகிட்டே வீரம்மாவ கட்டிப் புடிக்க போனேன். அப்ப வீரம்மா தன்னோட வலது கைய அவளோட வயித்துமேலயும் இடதுகையை என்னோட நெஞ்சுலயும் வச்சு தடுத்து, “போதுமான சமூக இடைவெளி தேவை”னு செல்லமா சொல்லி கன்னம் செவக்க சிரிச்சுச்சு
வீரம்மா கூட சேந்து நானும் சிரிக்கிறப்ப, என்னோட மனசுல மின்னல் வெட்டு போல ஒரு ஞாபகம் வந்துச்சு. மெத்தனால குடிச்சு இறந்து போன என்னோட மூணு நண்பர்களுடைய ஞாபகம் தான் அது
இந்த ஊரடங்கு நேரத்துல, தன்னோட அன்பு சிறைக்குள் என்ன அடச்சு வெச்சு, என்ன பக்குவப்படுத்தி பாசம் காட்டி, என்ன குடும்பத்துக்கு தகுந்த ஒரு நல்ல மனுசனா மாத்தின ஏம் பொஞ்சாதி வீரம்மா மாதிரி, செத்துப் போன என்னோட அந்த மூனு நண்பர்களுக்கும் வாழ்க்கை துணைகள் அமஞ்சிருந்தா, ஒருவேள செத்துப் போகாம இருந்திருப்பார்களோ?
என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை, வீரம்மாவுக்கு தெரியாம தொடைச்சுக்கிட்டேன்
(முற்றும்)
#ads – Deals in Amazon👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நல்ல கதை, சமுதாயத்தில் இதே மாதிரி எத்தனை குடும்பங்கள் வசித்து வருகிறது.
குடிகார பெருமக்கள் தாங்கள் திருந்த நினைத்தாலும் இந்த சமுதாயமும் அரசாங்கமும் திருந்தி வாழ விடுவதில்லை….
அருமையான உண்மை கதை அண்ணா
Good Real story Anna
*இலக்கியம்- சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி* என கூறுவதுண்டு.
அதற்கு ஏற்ப தங்களது சிறுகதையான
*”இடைவெளியில் பூத்த மலர்”* அமைந்தது.
*கொரோனா* பேரிடர் காலத்தில் ஏற்பட்ட அன்றாட அவலங்கள், குறிப்பாக தொடர் ஊரடங்கால் , அத்தியாவசிய பொருள்களை பணம் படைத்தோர் வாங்கி குவித்ததால் ,வறுமைகோட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குரியானதை பதிவு செய்வதாக இருந்தது.
ஒரு பெண் மனது வைத்தால் ஏதும் செய்வாள் .ஒரு மனைவியின் அன்பு மட்டுமே அவளது குடிகார கணவனை திருத்தி நல்வழியில் கொண்டு வர இயலும் என *வீரம்மா* கதாபாத்திரத்திம் மூலம் பெண்ணியத்தை உணர்த்தி உயர்த்திய தங்களது கதை ,ஒரு பெண்ணின் அறிவும் ஆற்றலும் முழுமையாக பயன்படுத்தபட்டால் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்ற வித்தையும் மனதுள் விதைத்து செல்கிறது.
“இடைவெளியில் பூத்த மலர் ” என்ற தலைப்பு கதைக்கு நன்கு பொருந்தியது.
இச்சிறு கதையானது பேச்சு வழக்கில் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
இருப்பினும் சில வார்த்தைகள் எளிதில் புலப்படவில்லை . சான்றாக “மங்க தூக்கிட்டு வீடு வீடாக போக வேண்டியது தான் ” என்ற தொடரை முழுமையாக இருமுறை வாசித்த பின்னரே பொருள் புலப்பட்டது .
இனி மேல் வரும் கதைகளில் வட்டார வழக்கு சொற்களுக்கு
அடிக்குறிப்பில்
பொருள் விளக்கம் அமைந்தால் சிறப்பு .
வாழ்த்துக்கள் ஐயா!
தொடரட்டும் சமூகத்தின் பதிவுகள்.
மிக்க நன்றி