sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

என் பெயர் தமிழரசி (சிறுகதை) – ✍பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 7)

“அப்பா, நீங்கள் செய்த பெரிய தப்பு அவளுக்கு தமிழ் என்று பெயர் வைத்தது தான். எப்போது பார்த்தாலும் தமிழ் மொழியின் பெருமையைத் தவிர வேறே பேச்சே பேச மாட்டேன் என்கிறாள்” என்றாள் மூத்தவள் மிருதுளா சலிப்புடன்

“பெயரில் என்னடி இருக்கு?  அப்படிப் பார்த்தால் உனக்கு அலோபதி என்றும் எனக்கு கம்ப்யூட்டர் என்றும் தான் பெயர் வைத்திருக்க வேண்டும். ” என்றாள் இரண்டாவது பெண் ஷீதளா

நடேசனுக்கு மூன்று பெண்கள். மூத்தவள் மிருதுளா. மருத்துவம் நான்கு ஆண்டுகள் முடித்து ஹௌஸ் சர்ஜன் கோர்ஸ் செய்து கொண்டிருக்கிறாள். இரண்டாவது மகள் பிரபல தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் பி. டெக். கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்கில் இரண்டாம் ஆண்டு மாணவி. அவர்களின் மூன்றாவது மகள் தான் தமிழரசி என்னும் தமிழ்

கடைக் குட்டியானதால் ‘செல்லக் குட்டி’ என மற்றவர்கள் கொண்டாடினாலும், அவள் பழகுவதற்கு இனிமையாகவே இருப்பாள். தென்றல் போல் மென்மையாக இருந்தாலும், புயல் போல் வேகமாகவும் இருப்பாள். ஒரு முறை முடிவு செய்தால், எந்த காரணத்திற்காகவும் அதிலிருந்து பின் வாங்க மாட்டாள்.

குணம் தான் அப்படியென்றால், உருவமும் கொள்ளை அழகு தான். பழைய சினிமா கவிஞர் பாடியது போல் கட்டித் தங்கத்தை வெட்டியெடுத்து செய்த தங்கச் சிலை தான்.

சிவந்த, மெல்லிய கொடி போன்ற உருவம். அறிவுத் திறனைக் காட்டும் பரந்த அழகான நெற்றி. அதில் கட்டுக்கடங்காமல் கொஞ்சி ஊஞ்சல் ஆடும் சிறிய குழல் கற்றைகள்.

ஏரிக்கரைக்கு காவல் நிற்கும் தென்னை மரங்கள் போல் அழகாக மூடித் திறக்கும் இமைகள். மெல்லிய கூரிய மூக்கு. மொத்தத்தில் பார்த்தவர்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஏன், சமயத்தில் அவள்  இரண்டு அக்காக்களுமே அவளை வியந்து பார்ப்பார்கள்

அப்படிப்பட்ட தமிழ்,  தன் சகோதரிகள் பேசுவதைத் துளியும் கண்டு கொள்ளாமல் அம்மா கொடுத்த குலோப்ஜாமுனை எடுத்து ருசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  அவள் அப்பாவோ சின்னக் குழந்தையை ரசிப்பது போல் அவளை ரசித்துக் கொண்டிருந்தார். இன்னும் இரண்டு நாட்களில் அவளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு  முடிவுகள் வெளியாக உள்ளது

தமிழரசியை மருத்துவக் கல்லூரியில் தான் சேரவேண்டும் என பெரியவள் வற்புறுத்தினாள். ஷீதளாவோ, அவளைப் போலவே தங்கை கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள்

தமிழோ தான் பாஸ் செய்வதே பெரிய விஷயம் என்றும், ஏதாவது நல்ல டியூடோரியலில் சேர அப்ளிகேஷன் வாங்க வேண்டும் என்றும் கவலையில்லாமல் ஜாலியாகக் கூறிக் கொண்டு அம்மாவின் முந்தானையைச் பற்றிக் கொண்டு வளைய வந்து கொண்டிருந்தாள்

தமிழின் அப்பா எப்போதும் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்.

“உங்கள் இருவருக்கும் காலேஜ் பீஸ் கட்டவே தலையைப் பிய்த்துக் கொள்கிறேன். போதுமே, இந்த  ‘ ப்ரபொஷனல் ‘ கோர்ஸ். அவள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துத் தான் படிக்கட்டுமே ” என்றார் நமுட்டுச் சிரிப்புடன். அம்மா படிக்காதவள்

“பெரியவள் டாக்டராகவும், இரண்டாவது பெண் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயராகவும் கொள்ளையாக சம்பாதித்தால், செல்ல மகள் மட்டும் கஷ்டப்பட வேண்டுமா?” என்று மூக்கை சிந்திக் கொண்டிருந்தாள்.

தேர்வு முடிவுகளும் வெளியானது. நல்ல வேளையாக தமிழரசி  தேர்ச்சிப் பெற்றிருந்தாள். மதிப்பெண் பட்டியலைப் பெற்று கொண்டு வீட்டிற்கு திரும்பினாள். முகம் மட்டும் கடுகடுவென்று எள்ளும் கொள்ளும் வெடித்தது

“மூஞ்சி ஏண்டி இப்படி வெங்கலப் பானை போல் இருக்கிறது” என்றாள் அம்மா கலவரத்துடன்

“எல்லா டீச்சர்களுமே சரியான டோஸ் கொடுத்தார்கள். இந்த மார்க் வாங்கியதற்கு நீ பெயிலாகியிருக்கலாம். மானம் போகிறது, என்று தலையில் அடித்துக் கொண்டார்கள்” என முனகினாள்

மார்க் ஷீட்டை அவள் கையிலிருந்து வாங்கிப் பார்த்த அவள் தந்தை அவளை முறைத்தார். பிறகு தமிழரசியிடமே  அந்த மதிப்பெண் பட்டியலைக் கொடுத்தவர், அமைதியாகப் போய் அமர்ந்து கொண்டார்

புயலுக்குப் பின்னே அமைதி என்பது போல வீட்டில் திடீரென்று நிலவிய அமைதியை அவர்கள் அம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“ஏ மிருதுளா, ஷீதளா! இரண்டு பேரில் யாராவது ஒருவர் அவள் மார்க் ஷீட்டை வாங்கித் தான் பாருங்களேன் ” என்றாள் அழமாட்டா குறையாக

ஷீதளா தான் வேகமாக வந்து தமிழரசியின்  கையில் இருந்த மார்க் ஷீட்டை பிடுங்க வந்தாள், அதற்குள் தமிழரசி ஓடிப்போய் தன் தந்தையின் பின்னால் நிற்க, ஷீதளா மார்க் ஷீட்டைப் பிடுங்கினாள்

பார்த்த விழி பார்த்தபடி என்பார்களே அது போல் அவள் கண்கள் அகல விரிந்து நின்றன.

“என்னடி ஆயிற்று? நிறையப் பாடங்களில் போயிடுத்தா?” என்று பதறினாள் அம்மா.

‘இல்லை’ என்று தலையசைத்தாள் ஷீதளா

“அம்மா, இவள் எங்களை விட எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாள். ஸ்காலர்ஷிப்பிலேயே டாக்டருக்கு படிக்கலாம்” என்ற மிருதுளா, பூர்த்தி செய்யப்பட்ட ஒரு மனுவை கையெழுத்திற்காக தமிழரசியிடம் நீட்டினாள்.

மற்றொரு மனுவை ஷீதளா நீட்டினாள். ஆனால் தமிழோ தன் பங்கிற்கு ஒரு மனுவை தந்தையிடம் கையெழுத்திட கொடுத்தாள்.

“எதற்கம்மா இந்த மனு? ” என்று கேட்டார் தந்தை

“படித்துப் பாருங்கள் அப்பா. நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கப் போகிறேன்” என்றாள் தமிழரசி

“என்ன?” என அம்மாவும் இரண்டு அக்காக்களும் அலறினார்கள்.

“யாரும் அதிர்ச்சி அடையவேண்டாம். ஆசைக்கு ஒரு பெண் டாக்டர். ஓரு பெண் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் என்று படிக்கிறார்கள் அல்லவா? நான் எனக்குப் பிடித்த தமிழ் இலக்கியமும், கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சியும் படிக்கப் போகிறேன். யாரும் இதைத் தடுக்க வேண்டாம்” என்றாள் நிதானமாய்

“தமிழ் எடுத்துப் படித்தால் உன்னை யார் மதிப்பார்கள்?. உன் அக்காக்கள் டாக்டரையும், இஞ்ஜினீயரையும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக, செல்வாக்காக இருப்பார்கள். நீ மட்டும் தமிழ் படித்து ஒரு தமிழ் வாத்தியாரைக் கல்யாணம் செய்து கொண்டு வறுமையிலும் தரித்திரத்திலும் வாழ வேண்டுமா? உன் இஷ்டம் போல் நடக்காதே ! நான் உன்னை தமிழ் படிக்க அனுமதிக்க மாட்டேன்” என்று அழுது கலாட்டா செய்தாள் அம்மா

“தாய் தடுத்தாலும் விடேன்” என்று வீர வசனம் பேசி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை முதுகலை பின் முனைவர் (டாக்டரேட்) பட்டமும் வாங்கினாள் தமிழரசி

இப்போது அவள் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்

மிருதுளா, ஒரு டாக்டரைத் திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியில் நிரந்தரமாக தங்கி விட்டாள். அவளுடைய மைத்துனரும் அங்கேயே அவர்களுடன் தங்கி யிருக்கிறார் . அவரும் மருத்துவரே

“என் மைத்துனர் மிக நல்லவர். உன்னைத் திருமணம் செய்து கொள்ள அவருக்கு பூரண சம்மதம். நீ என்ன சொல்கிறாய்? நான் பேசி முடிக்கட்டுமா?” என தமிழரசியிடம் ஒரு நாள் கேட்டாள்

“அதெல்லாம் வேண்டாம். அகநானூறுக்கும், ஆர்த்ரைட்டீஸிற்கும் ஒத்துப் போகாது” என்றவள், கலகலவென்று சிரித்து போனை வைத்து விட்டாள். அதாவது தமிழ் பேராசிரியருக்கும் டாக்டருக்கும் ஒத்துப் போகாதாம்

ஷீதளா ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் ஸிலிகான் வேலி என்றழைக்கப்படும் கலிபோர்னியாவில் தங்கி விட்டாள். அவள் பங்கிற்கு அவளும் அமெரிக்காவில் ஒரு கம்ப்யூட்டர் மாப்பிள்ளையின் போட்டோ அனுப்பினாள்

“அமெரிக்காவும் வேண்டாம், அன்டார்டிகாவும் வேண்டாம். எல்லோரும் வேலை தேடி ஒவ்வொரு நாடாகப் போய் விட்டால் அம்மா, அப்பாவிற்கு யார் துணை?” என மறுத்துவிட்டாள் தமிழரசி

“நீ ஒன்றும் அவ்வளவு பெரிய பரோபகாரி இல்லையே?ஏய் ! உண்மையைச் சொல், உன்னை மாதிரியே யாராவது ஒரு ஏமாந்த சோணகிரி தமிழ் வாத்தியாரைக் காதலிக்கிறாயா என்ன?” எனக் கேலியாக கேட்டாள் ஷீதளா      

“சீ சீ… இது வரை அப்படியில்லை. இனிமேல் அப்படி நடந்தால் அழைப்பிதழ் அனுப்புகிறேன், வந்து சாப்பிட்டு விட்டுப் போ” என்றாள் தானும் கேலியாக

“கொழுப்புடி உனக்கு” என்றவள் சிரித்தபடி போனை வைத்தாள்.

தன் அக்காக்களை மிகவும் ரசித்தாள் தமிழரசி. அன்புடன் அரவணைக்கும் அம்மாவைப் போலவும் இருக்கிறார்கள், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் தோழிகளாகவும் இருக்கிறார்கள். பொறாமையில்லாத  அற்புதமான இறைவன் படைத்த  இனிமையான  உறவு

அவள் அம்மாவும் எப்போதும் அவள் திருமணத்தையே வற்புறுத்தினாள். அப்பா தான் அம்மாவைக் கண்டித்தார். ‘என் பெண் பாரதியாரின் புதுமைப் பெண். நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட பெண். அவளை எதற்காகவும் வற்புறுத்தாதே’ என்பார்

ன்று வகுப்பு வெகு உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி வழக்குரை காதை நடத்திக் கொண்டிருந்தாள் தமிழரசி. கண்ணகியை நேரில் பார்த்தது போல் மாணவ, மாணவிகள் வைத்த கண் வாங்காமல்  பார்த்தபடி, வாயைத் திறந்த படி கேட்டுக் கொண்டிருந்தனர்

“பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன். யானே கள்வன் கெடுக என் ஆயுள்” என்று பாண்டியன் நெடுஞ்செழியன் வீழ்ந்தான். இதனால் ‘அரசியல் பிழைத்தோற்கு, அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்ற சிலப்பதிகார நீதி நிரூபணம் ஆயிற்று” என்று முடித்தாள்

அப்போது பலத்த கைதட்டல் ஓசை கேட்கவும், வகுப்பு மொத்தம் திரும்பி பார்த்தது.

கதவருகில் கல்லூரி முதல்வரும், வேறு ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். “கண்ணகியே நேரில் பார்த்தது போல் இருந்தது ” என்ற முதல்வர், தன்னுடன் நின்ற அந்த மனிதரை புதிய பேராசிரியர் பிரபு என அறிமுகம் செய்தார்.  ஆனால் அவர் பேச்சு இருவர் காதுகளிலும் ஏறவில்லை

‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.        

“என்னடி நடக்கிறது? ” என்று ஒருத்தி கேட்க, “சிலப்பதிகாரம் முடிந்து கம்பராமாயணம் நடக்கிறது” என்று கூறி ‘களுக்’ கென்று சிரித்தாள் இன்னொருத்தி.

தமிழரசியின் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. பேராசிரியர் பிரபு, மாணவிகளின் பேச்சை வெகுவாக ரசித்தார். ‘காவிரியும் தமிழும் விளையாடும் ஊர் ‘என்று சிரித்தார்

அதன் பின் சில நாட்கள், கல்லூரியில் பார்க்கும் போதெல்லாம் இருவருக்கும் புன்சிரிப்புடன் கழிந்தன. ஒரு நாள் பிரபு தமிழரசியைத் தேடி வந்தார்.

“உங்களுடன் கொஞ்சம் பேசலாமா?” எனக் கேட்டார். ஆசிரியர்கள் ஓய்வு அறையில் மாணவர்களின் மாதாந்திர டெஸ்ட் பேப்பர்களைத் திருத்திக் கொண்டிருந்தாள் தமிழரசி

இது வரையில் பிரபுவைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் அவளை பிரமிக்க வைத்திருந்தன. அவர் அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லே பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார் என்றும், அப்போது சில புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் என்றும் அறிந்து கொண்டாள். அந்த புத்தகங்களை தமிழரசியும் படித்திருக்கிறாள், பிரமித்திருக்கிறாள்.

சொற்களின் தொகுப்புகள் இப்படி இதயத்தைக்  கொல்லுமா ? அவன் எழுத்துக்கள் இவளை மிரள வைத்தன. அவன் எழுதிய புத்தகங்கள் அவனுக்கு பல பரிசுகளைத் தந்திருக்கின்றன. அதெல்லாம் கூகுள் மூலம் தெரிந்து கொண்டிருந்தாள்

இப்போது ஏதோ குடும்ப சூழ்நிலை காரணமாக இந்தியா வந்து அண்ணாமலையில் பணிபுரிகிறான் என்றும் தெரிந்து கொண்டாள். ஆனால் இப்போது ஏன் தன்னிடம் பேச வந்திருக்கிறான் என குழப்பமாய் ஏறிட்டாள்

எதிரில் உள்ள ஒரு நாற்காலியைக் காட்டி அமரும்படி வேண்டினாள்.

“ஸாரி, உங்களை ஒன்றும் டிஸ்டர்ப் செய்யவில்லையே?” என பிரபு கேட்க

‘இல்லை’ என மறுப்பாய் தலையசைத்தாள்         

“நம் கல்லூரியில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மாலை தமிழ் இலக்கிய அரங்கம் நடக்கின்றதல்லவா? அதில் இதுவரை மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இனிமேல் பேராசிரியர்கள் நாமும் அந்த விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நம் முதல்வர் விரும்புகிறார். அவரவர் விரும்பிய தலைப்பில் பேசலாம். என்ன சொல்கிறீர்கள்?” என்றவன் கேட்க

“நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அவரவர் விருப்பம் போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் விவாதம் செய்தால் நன்றாக இருக்கும். உதாரணமாக, ‘தமிழும், மூன்று சங்கங்களும்’ போன்று பேசலாமே. நிறைய பாயின்ட்ஸ் கிடைக்கும், என்ன சொல்கிறீர்கள்?” என்றாள் தமிழரசி

பிரபு அவளை ஆர்வத்துடன் பார்த்து சிரித்தான். “உங்களுக்குத் தமிழரசி என்று பொருத்தமான பெயர் தான் வைத்திருக்கிறார்கள் “என்றான்

அந்த வெள்ளிக்கிழமை அவர்கள் தமிழ் இலாக்காவே களை கட்டியது. தமிழரசியின் பேச்சாற்றல் அக்கல்லூரியைச் சேர்ந்த எல்லோருக்கும் தெரியுமாதலால், மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை குழுமி விட்டனர்

தமிழின் தொன்மை பற்றியும் முதல் சங்கம் தோன்றிய தென் மதுரை, இரண்டாம் சங்கம் தோன்றிய கபாடபுரம் பற்றியும் அவை கடல் கோள்களால் அழிந்ததைப் பற்றியும், மூன்றாம் தமிழ் சங்கம் தற்போதுள்ள மதுரையில் தோற்றுவிக்கப்பட்டதையும் விரிவாக பேசினாள்

தமிழ் படித்த எல்லோருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் தமிழரசி பேசிய பேச்சில் மயங்காதவர் யார்? எல்லோரும் பலமாகக் கை தட்டி பாராட்டினர். பேசி முடித்த பிறகு பிரபுவைப் பார்த்தாள், எந்தவொரு உணர்ச்சியும் தெரியவில்லை.

நன்றி நவிலுதலுடன் தன் பேச்சினை முடித்துக் கொண்டான். தன் பேச்சினைப் பற்றி பிரபு எந்த ஒரு கருத்தும்  கூறாதது தமிழிற்கு வருத்தமே. ‘ஒரு வேளை அவர் எதிர்பார்த்தது போல் என் பேச்சு இல்லையோ ‘ என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அவள் விட்டாலும்  மாணவ சமுதாயம் அவனை விடவில்லை. ஏதோ ஒரு புத்தகம் வாங்க தமிழரசி பிரபுவின் அறைக்கு வரும் போது அங்கே நின்ற கூட்டத்தையும், இவள் மனதில் தோன்றிய சந்தேகங்களை அவர்கள் கேட்டதும் கண்டு, தமிழ் தயங்கி நின்றாள். மாணவர்களுக்கு பிரபு அளித்த பதில் அவளைத் திக்குமுக்காட வைத்தது.

“நான் எங்கே அங்கிருந்தேன்? மடை திறந்த வெள்ளமாக வந்த அவர்கள் பேச்சில் நான் அடித்துச் செல்லப்பட்டேன். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.  பேச்சு மூச்சின்றி நின்றிருந்தேன், அதனால் தான் நன்றி நவிலுதலுடன் நிறுத்திக் கொண்டேன்” என்றான் பிரபு

அப்போது அங்கு வந்த தமிழரசியைப் பார்த்து, “நான் சொல்வது சத்தியம் தமிழ்” என்றான். அவளும் சிரித்துக் கொண்டு அதை ஏற்றுக் கொண்டாள்.

அதன் பிறகு பல கல்லூரிகளில், பல மேடைகளில், பல பட்டி மன்றங்களில் இவர்கள் போட்டிப் பேச்சுக்கள் ஒலிக்கலாயின. யூ ட்யூப் மூலமாக கூகுள் மூலமாக இவர்கள் புகழ் பரவியது.  ஒரு வருடத்தில் அவர்கள் நெருக்கம் அதிகமானது

ஒரு முறை மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிவிட்டு இருவரும் விமானத்தில் அருகருகே அமர்ந்து வரும் போது, பிரபு அவளையே பார்த்துக் கொண்டு வந்தான்.

வானத்திலிருந்து வழி தவறி வந்த தேவதை போல் இருந்தாள். மிகுந்த களைப்பினால் கண்களை மூடிக் கொண்டிருந்தாள். சுருண்ட அவள் தலைமுடி, காற்றில் பரந்து நெற்றியில் விளையாடி கண்களைத் தொட்டுத் தொட்டு விளையாடியது. அந்த சுருண்ட முடியை ஒதுக்கிவிட அவன் கை பரபரத்தது.

அப்போது கண்களைத் திறந்த அவள், பிரபு தன்னையே பார்ப்பது அறிந்து கன்னம்  சிவந்தாள்.

“என்ன ஸார் அப்படி பார்க்கிறீர்கள்?” என்றவள் கேட்க

“நான் நேரடியாக் கேட்டால் தப்பாக நினைக்க மாட்டாயே? என்னை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வாயா? உன்னால் மட்டுமே என் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்றான் திடுதிப்பென்று

“தோட்டத்து சொந்தக்காரரிடம் தான் கேட்க வேண்டும்” என்றாள் கேலியாய்

“கட்டாயம். ஆனால் அதற்கு முன்னால் இந்த ரோஜாவிற்கு சம்மதமா என்று தெரிய வேண்டும்” என்றான் அவனும் குறும்பாய்

தன் அழகிய சிரிப்பில் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் தமிழரசி. அதைக் கண்டு பிரபுவின் முகம் மலர்ந்தது

“வெள்ளிக்கிழமை மாலை நீ உன் பெற்றோரைப் பார்க்க சென்னை போகும் போது நானும் என் மாமா, மாமியைப் பார்க்க வருகிறேன். சம்மதமா? ” என்றான்

அன்று இரவே பிரபுவிற்கு தமிழிடமிருந்து போன்

“அப்பாவிற்கு உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதால் உடனே சென்னை செல்ல வேண்டும், ஏதாவது டாக்ஸி கிடைக்குமா? ” என்றாள் குரல் கம்ம.

“டாக்ஸி வேண்டாம். என் காரில் போய் விடலாம், உடனே கிளம்பு” என்றான் பிரபு

ஐஸியூ’வில் கணவர் இருக்க, அழுது கொண்டு வெளியே உட்கார்ந்து இருந்தாள் தமிழரசியின் அம்மா

மகளைப் பார்த்த பிறகு தான் அவளுக்கு உயிர் வந்தது. பிரபுவும், தமிழும் ஒரு வாரம் கல்லூரியில் விடுமுறை சொல்லி விட்டு, அவளின் அப்பா குணமாகி  வீடு திரும்பிய பின் தான் கல்லூரிக்கு திரும்பினார்

அந்த நிலையில் தன் விருப்பத்தை சொல்லத் தயங்கினான் பிரபு. ஆனால் நடேசன் அதை புரிந்து கொண்டார்

தன் மனைவியையும் அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு, தங்கள் சம்மதத்தைத் பிரபு தமிழரிசி இருவரிடமும் தெரிவித்தார்

அவள் அம்மா மட்டும் இன்ஜினியரோ, டாக்டரோ இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள் தன் கணவரிடம் ரகசியமாக

“அசடே… இன்ஜினீயரோ, டாக்டரோ நம்முடன் இல்லை. தமிழ் தான் நம்முடன் கூட துணையாய் நின்றது, என் உயிரைக் காப்பாற்றியது, புரிந்ததா? ” என்றார் அவர்

தமிழரசியும் பிரபுவும் மௌனமாய் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

   

Similar Posts

10 thoughts on “என் பெயர் தமிழரசி (சிறுகதை) – ✍பானுமதி பார்த்தசாரதி, சென்னை
 1. இப்படி வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சோகம், கவலை ஏதுமில்லாமல், தென்றல் போன்ற கதை. கன்னித் தமிழ் ஆயிற்றே..! எங்கள் வீட்டிலும் சொன்ன அதே மறுப்புக் காரணம். ஆனாலும், தமிழை விடுவதற்கு மனமில்லை..!

 2. கல்வியை காசுக்காக மட்டும் கற்று வரும் பலருக்கும் இது ஒரு நல்ல பாடம்…

 3. தமிழின் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.

 4. Unga story writing romba arumai. Each paragraph ennai think pannavum impress pannavum seithathu. Neenga best script writer.
  Ungal story all parents and kids will appreciate.

 5. Unga story romba arumai. Each paragraph makes me to think and impress me lot.
  You are the best script writer.

  Neenga parents and kids attract panniduvinga.

 6. அழகான மொழி நடை! நிகழ்காலத்தின் உண்மையை மென்மையாக உணர்த்தும் அருமையான கதை! வாழ்த்துகள் திருமதி. பானுமதி பார்த்தசாரதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!