sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

சிதறிய கனவு (சிறுகதை) -✍ கரோலின் மேரி, புதுச்சேரி

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 8)

ண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தாள் மிதுனவதி

பொலிவு இழந்த முகம், சோகத்தை பூசிக் கொண்ட விழிகள் என்று தன் நிலை மாறிப் போனதை நினைத்து, ஒரு பெருமூச்சை வெளியிட்டாள், ஒருவாறு தயாராகி, தன் அறையை விட்டு வெளியே வந்தாள்

“அம்மா நான் கிளம்பறேன்” என சமையல் அறையில் இருக்கும் அன்னைக்கு குரல் கொடுத்தாள்

“சரி மா, பார்த்து போயிட்டு வா” என்றவாறு அவளை வழியனுப்பி வைக்க வெளியே வந்தார் யமுனா

தாய்க்கு தலையசைத்து திரும்ப, அப்போது எதிர் வீட்டில் இருப்பவரும் அலுவலகம் செல்ல தயாராக வந்தார்

பின்னால் வந்த அவர் மனைவி மிதுனவதியைக் கண்டவுடன், “ஏங்க உள்ளே வாங்க, அவ வெளிய நிக்கறா” என்று அவர் கரத்தை பிடித்து இழுத்து சென்றார்

இதைக்கண்ட அவள் தாய் வாயை பொத்திக்கொண்டு உள்ளே செல்ல, இது தனக்கு பழகிய ஒன்று தான் என்பதைப் போல் வண்டியில் ஏறினாள் மிதுனவதி

நேரே சாமி முன்னாடிப் போய் நின்ற அவளின் தாய்,  “என் மகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள். அவளுக்கு இப்படி கஷ்டங்கள் வரும் என்று தெரிந்து இருந்தால் அவளை பெற்று இருக்க மாட்டேனே” என்று வாய் விட்டே கதறினார்

தான் பணிபுரியும் வங்கிக்கு வந்தவள், அன்றைய தின வேலைகளை பார்க்கத் தொடங்க, சிறிது நேரத்தில் அவள் தோழி சுமித்ராவும் வந்தாள்

“ஹாய் மிது, சீக்கிரமே வந்துட்ட போல” என புன்னகையுடன் கேட்டவாறு அவளருகில் அமர்ந்தாள்

“ஆமாம் சுமி” என்று பதிலளித்துவிட்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்

சுமித்ரா அவள் முகத்தையே சில நிமிடங்கள் உற்று நோக்கினாள்

‘எப்போதும் புன்னகை தவழும் முகத்தோடு, வாய் ஓயாமல் பேசிக் கொண்டு இருப்பவள். இன்று பேசா மடந்தையாக மாறிவிட்டாளே. இந்த விதியை என்ன செய்வது’ என்று அவள் கவலையாக பார்க்க

“போதும் சுமி. என்னைப் பற்றி யோசித்தது, நீ வேலையை பாரு” என்று பைலை பார்த்து கொண்டே கூற

“உனக்கு எல்லாம் புரியும் டி, ஆனால் நான் சொல்வது மட்டும் புரியாது” என்று சிடுசிடுக்க

“சுமி” என்று அவளை ஒரே பார்வையில் அடக்கினாள் மிதுனவதி

“சரி எதுவும் சொல்லவில்லை” என்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்

வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது “ஹாய்” என்று ஒரு குரல் கேட்க, திரும்பி பார்க்காமலே அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை உணர்ந்து, “பை” என்று கூறிவிட்டு கிளம்பினாள்

பின்னால் வந்த சுமித்ரா இந்த காட்சியை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

“ரஞ்சித்” என சுமித்ரா பல்லைக் கடிக்க

“ஏய்… நீயும் இங்கே தான் இருக்கிறாயா?” என்றவாறு அவள் பக்கம் சென்றான் 

“டேய் நடிக்காதே” எனவும் 

‘ஹிஹி’ என்றான் அசடுவழிய

“ஏண்டா இந்த காக்கி சட்டையில் வந்து இப்படி நின்றா அவள் என்ன செய்வாள்”

“ஆமாம். நான் கலர் சட்டை போட்டால் மட்டும் அப்படியே உன்னுடைய ஆருயிர் தோழி பேசிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள், போ சுமி”

“அவள்கிட்ட எப்படி பேசி புரிய வைப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று கவலையாக சுமி கூற

“நானும் ஒரு வருடமாக அவளிடம் பேச முயற்சி செய்கிறேன், எங்க என்னை பார்த்தாலே ஓடுகிறாள்”

“சரி விடு, நீ கவலைப்படாதே பார்க்கலாம்” என்று அவனை தேற்ற முயன்றாள்

சற்று சோர்ந்த முகத்துடன் அவன் கிளம்பினான்.

ஜீப்பில் செல்லும் போது மனம் முழுவதும் மிதுனவதியே நிரம்பி இருந்தாள்.

‘என் முகத்தை கூட பார்க்காமல் ஓடுகிறாள். அப்படி என்ன செய்துவிட போகிறேன் என்று இந்த ஓட்டம்’

‘மாமா மாமா என்று ஆசையாக பேசி வந்தவள், இப்போது இப்படி மாறி போனதற்கு தானும் ஒரு காரணமே’ என்று தன்னையே நொந்து கொண்டான்.

வீட்டுக்கு நுழைந்தவுடன் “அம்மா ஒரு கப் காபி” என்று குரல் கொடுத்து விட்டு சோபாவில் சாய்ந்தான்.

மகனின் குரல் கேட்டு வந்த வானதி, “என்ன பா. ஒரு மாதிரி இருக்கிறாய்” என்று கவலையுடன் கேட்க, எதுவும் சொல்லாமல் தாயை மட்டும் ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வையில் தெரிந்த வலியை உணர்ந்த அவர் தாயுள்ளம் கலங்கியது.

“மிதுவை பார்த்தாயா?” என்று சரியாக புரிந்துக் கொண்டு பெற்றவள் கேட்க, மெளனமாக ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான்.

“நான் ஏதாவது பேசி…” என்று அவர் மேலே கூறும் முன், அவன் கையை உயர்த்தி, “வேண்டாம் மா” என தடுத்தான்.

“இல்லை கண்ணா அது…”

“அவள் கோபத்தில் தவறு இல்லை மா. கொஞ்ச நாள் ஆகட்டும் பார்க்கலாம்” என்று கூறி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான் ரஞ்சித்

மகன் பற்றிய சிந்தனையில் நடக்க, எதிரே வந்த கணவரை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டார்.

மனைவியின் பாரா முகமும், மகனின் மெளனமும் தன்னால் தான் என்ற குற்றவுணர்வில் செய்வதறியாது தவித்தார் சீனிவாசன்

அந்த இரவு நேரத்தில் வானத்தின் இருளை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.

‘இந்த வானம் போல என் வாழ்வும் இருளாகி விட்டது’

‘அன்றைக்கு மட்டும் எல்லாம் சரியாக நடந்து இருந்தால், இன்று அவள் திருமதி.ரஞ்சித் குமார். ஆனால் விதியோ சதி செய்து விட்டது’

வள் நினைவுகள் ஓராண்டு பின்னோக்கி  சென்றது.

அவளின் குடும்பம் அழகான குருவிக்கூட்டை போன்றது.

அவளின் தந்தை தமிழ்வாணன் தமிழ் பேராசிரியராக பணிபுரிகிறார். தாய் யமுனா வீட்டை பார்த்துக் கொள்கிறார்.

அண்ணன் கதிரவன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருவான். 

அண்ணனுக்கு அடுத்து மிதுனவதி, வங்கியில் பணிபுரிகிறாள்.

காலையில் செய்தித்தாளை படித்துக்கொண்டு இருந்தவரிடம் காபியை நீட்டினார் யமுனா

புன்னகையுடன் வாங்கியவர், “வானதி வீட்டுக்கு போய்ட்டு வரலாம்” என்று கூற

“போகலாம்… ஆனால் ரொம்ப அவசரப்படுகிற மாதிரி இருக்கே” என்று சற்று தயக்கமாக யமுனா சொல்ல

“அவசரம் இல்லை மா, இது இப்போது அவசியமான ஒன்று தான்”

“எல்லாம் சரி, இருந்தாலும் எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு”

“நீ தேவை இல்லாமல் மனதை குழப்பிக் கொண்டு இருக்கிறாய். போய் தயார் ஆகும் வேலையை பாரு” என்று மனைவியை அனுப்பி வைத்தார்.

இருவரும் வானதி வீட்டுக்கு சென்றனர்.

அண்ணனை கண்டவுடன், “வாங்க அண்ணா, வாங்க அண்ணி ” என்று இருவரையும் வரவேற்று உட்கார வைத்தார்

வானதி, தமிழ்வாணன்  இருவரும் உடன்பிறந்தவர்கள்

சீனிவாசன் – வானதிக்கு இரண்டு பிள்ளைகள். முதலில் ரஞ்சித் குமார் போலிஸாக இருக்கிறான். அடுத்து அகல்யா, பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள்

ரஞ்சித் மிதுனவதிக்கு சிறுவயதில் முடிச்சு போட்டது போலவே, ரஞ்சித்தின் தங்கை அகல்யாவிற்கும் மிதுனாவின் அண்ணன் கதிரவனுக்கு திருமணம் என, சிறுவயதிலேயே பெற்றவர்கள் முடிவு செய்திருந்தனர் 

“காபி எடுத்துட்டு வரேன் அண்ணா”

“அதெல்லாம் இருக்கட்டும் மா, எங்க மச்சானை காணோம்?” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே

“இதோ வரேன் மச்சான்” என்றவாறு வந்தார்

“என்ன மச்சான் விஷயம்?” என்று கேட்க

“நாம் முன்பே பேசி வைத்த மாதிரி பிள்ளைகளுடைய கல்யாண வேலையை பார்க்க ஆரம்பிக்கலாமா?”

அதைக் கேட்டதும், வானதிக்கு அப்படி ஒரு சந்தோஷம். அவருக்கு பிடித்த மிதுக்குட்டியே அவர் வீட்டுக்கு மருமகளாக வரப் போவதை எண்ணி

சீனிவாசன் சற்று யோசனையாக இருக்க, “என்னங்க” என அழைத்தாள் வானதி 

“ஆரம்பிக்கலாம் மச்சான், ஆனா இரண்டு கல்யாணத்துக்கும் இடைவெளி விட்டு பண்ணலாமே. வேலை அதிகமாக இருக்கும் அதான் யோசிக்கிறேன்”

தமிழ்வாணனின் முகம் சற்று வாட, அதை உணர்ந்த வானதி “ஏங்க… இரண்டு குடும்பமும் சேர்ந்து தானே செய்ய போகிறோம், அப்புறம் என்ன”

“அது இல்லை மா” என்று இழுக்க

“எல்லாம் பார்த்து கொள்ளலாம், நீங்கள் வேலையை தொடங்குங்க அண்ணா”

மனைவியின் வார்த்தைக்கு கட்டுபட்டு,  “சரி மச்சான்” என சம்மதித்தார் சீனிவாசன் 

“அப்புறம் அண்ணி… மிது எப்படி இருக்கிறாள்?” என்று வருங்கால மருகளை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் வானதி 

“நல்லா இருக்கா யமுனா, என்னுடைய மருமகள் எப்படி இருக்கா?” என்று அவரும் தன் பங்குக்கு விசாரித்தார்

எல்லோரும் சிரித்து பேசிக் கொண்டு இருக்கும் போது, மடியில் இருந்து இறங்கி வந்தான் ரஞ்சித் குமார் 

காக்கி உடையில் கம்பீரமாக வரும் மருமகனை கண்டு எழுந்து நின்றார் தமிழ்வாணன்

அவரின் செயலில் பதறியவாறு, “மாமா என்னை பார்த்து எதுக்கு இப்படி பண்றீங்க?” என்றான் 

“அது ஒன்றும் இல்லை பா. இந்த உடையில் உன்னை பார்க்கும் போது, என்னை அறியாமலே ஒரு மரியாதை வருது. ரொம்ப பெருமையாக இருக்கு ரஞ்சித்” என்று மனதார பாராட்டினார்

“எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்” என்றவன், தனக்கு நேரம் ஆகுவதை உணர்ந்து, “நான் கிளம்புகிறேன் மாமா, வரேன் அத்தை” என்று கூறி விடைபெற்று சென்றான்

இரு திருமணங்கள் என்பதால் வேலைகள் அதிகமாக இருக்க, நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

மிதுனவதியின் மனம் முழுவதும் ரஞ்சித் மட்டுமே நிறைந்து இருந்தான்.

என்ன தான் அத்தை மகன் என்றாலும் ஒரு அளவு தான் பேசுவாள்

அவளின் ‘மாமா’ என்ற அழைப்பே, அவன் மீது அவளுக்கு இருக்கும் காதலை சொல்லாமல் சொல்லியது.

இருவருமே காதல் என்ற உணர்வை மனதில் பூட்டி வைத்துக் கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற நினைத்தால், கண்களால் மட்டும் பேசி கொள்வார்கள்.

மிதுனவதியின் தோழி சுமித்ரா, “கண்களால் பேசுபவர்களே” என கிண்டல் செய்வாள் 

கதிரவனும் – அகல்யாவும், ஏனோ எப்போதும் அதிகம் பேசி பழகவில்லை 

இப்படியே காதலோடு, கல்யாண கனவுகளோடு நாட்கள் நகர்ந்தது.

திருமண நாள் அன்று அனைவரும் பரபரப்பாக வேலையில் இருந்தனர்.

மணமக்கள் தயாராகி மணமேடைக்கு வரும் நேரம் கதிரவனை காணவில்லை.

அவன் அறையில் ஒரு கடிதம் மட்டுமே இருந்தது.

அதில், “என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. நான் வெண்பா என்ற பெண்ணை காதலிக்கிறேன். எவ்வளவு முயன்றும் என்னால் கூற முடியவில்லை. நான் சூழ்நிலை கைதி ஆகி விட்டேன். இப்போதும் மனதை மாற்றிக் கொண்டு, அகல்யாவை திருமணம் செய்து கொண்டாலும், அவளை மனதார மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது. என் காதலியை தேடி போகிறேன்,  தேட வேண்டாம். மிதுவின் திருமணத்தை மட்டும் நடத்துங்கள். மீண்டும் ஒரு முறை மன்னிப்பை கேட்கிறேன்” என்று அந்த கடிதம் முற்று பெற்று இருந்தது

“அய்யோ கதிரு…  இப்படி எங்கள் தலையில் இடியை போட்டு விட்டாயே” என பெற்றவள் கதற, கல்யாணக் கனவுகளை சுமந்து தயாராகி வந்த அகல்யா, அதிர்ச்சியில் மயங்கினாள்

“அம்மாடி அகல்யா” என்று வானதி அவளை தாங்கிக் கொள்ள

“நீங்கள் அவளை உள்ளே கூட்டிட்டு போங்க” என்று கூறி தாயை அனுப்பி வைத்தவன், தமிழ்வாணன் முன்னால் சென்று “உங்களுடைய அவசரத்தால் இன்று என்னுடைய தங்கச்சி வாழ்க்கை  கேள்விக் குறியாகி விட்டது” என ரஞ்சித் கேட்க, தலைகுனிந்து நின்றார் தமிழ்வாணன் 

அப்போது கூட்டத்தில் இருக்கும் உறவினர் ஒருவர் “ஒரு கல்யாணம் தான் நின்று விட்டது, இன்னொரு கல்யாணத்தை செய்து விடுங்கள்”  என்று சொல்ல

“அதுவும் நின்றுவிட்டது” என்றார் சீனிவாசன் கோபமாய் 

“மச்சான்” என்று அதிர்ச்சியாக தமிழ்வாணன் பார்க்க

“மச்சானா? இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. இந்த கல்யாணமும் நடக்காது” என்றார் அதீத கோபத்துடன் 

வெளியே வந்த வானதி, ” என்னங்க இப்படி சொல்றீங்க?” என பதற 

“நீ பேசாத” என மனைவியை அடக்கியவாறு, “என்னுடைய மகள் இப்படி நிற்கும் போது, என்னால் எப்படி இந்த திருமணத்தை நடத்த முடியும்?” என்று கேள்வி கேட்க, யாரிடமும் அதற்கு பதில் இல்லை.

“மாப்பிள்ளை” என தமிழ்வாணன் ரஞ்சித்தின் கரத்தை பிடிக்க அருகே வர

அவன் சட்டென்று நகர்ந்து, “அந்த முறையை சொல்லி கூப்பிட வேண்டாம், உங்கள் மகளுக்கு வேறு இடத்தில்…” என்ற அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல், அங்கே கண்களில் எதிர்ப்பார்ப்போடு நின்றுக்கொண்டு இருந்த மிதுனவதியை பார்த்தவாறே…  “வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறி முடித்தான்

இதை கேட்ட மிதுனவதியின் இதயத்தில் ஏதோ ஒரு கூர்மையான ஆயுதம் தாக்கிய வலியை உணர, நிற்க முடியாமல் அருகே இருந்த சுமித்ராவின் கரத்தை பிடித்துக் கொண்டாள்

ரஞ்சித், மிதுனா இருவருமே சுமித்ராவின் நண்பர்கள் தான். ஆனால் இந்த சூழ்நிலையில் யாருக்கு சாதகமாக பேசுவது என்று புரியாது நின்றாள்

“ரஞ்சித் நீயும் இப்படி அவசரப்படுகிறாயே, கொஞ்சம் யோசித்து…” என்று அவன் தாய் எவ்வளவு தூரம் கெஞ்சியும், அவன் மனம் இளகாது, இரும்பாக இறுகியது

“இனி யோசிக்க எதுவும் இல்லை” என்று கூறிவிட்டு மண்டபத்தின் வாயிலை நோக்கி நடந்தான்

காரில் ஏறி புறப்படும் முன், மிதுனவதியை ஒரு பார்வையும் பார்க்காமல் சென்றான்.

அவர்கள் சென்ற அடுத்த நொடி நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார் தமிழ்வாணன்

“அப்பா அப்பா” என்று அவரிடம் மிதுனவதி ஓட

“என்னங்க என்னங்க” என யமுனா அவரை எழுப்ப முயல, அவசரமாக அவரை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

விஷயம் கேள்விப்பட்டு அண்ணனை காண, மகனோடு வந்தார் வானதி

யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல், கண்ணீரோடு நின்று கொண்டு இருக்கும் போதே,  மருத்துவர் வெளியே வந்து “அவர் இறந்து விட்டார்” என்று கூறி இடியை இறக்கினார்

“அப்பா” என்று அதிர்ச்சியில் மிதுனா கத்த

“அவருடைய இதயத்தில் அடைப்பு இருக்கு, சீக்கிரமே ஆபரேஷன் பண்ண சொல்லி முன்னாடியே சொல்லி இருந்தேன். அவரும் பிள்ளைகள் கல்யாணம் முடிந்தவுடனே பண்றேன் என்று சொன்னார்… ஆனால் இப்போ” என்று கூறி கையை விரித்தார் மருத்துவர் 

எதனால் கல்யாண விஷயத்தில் இத்தனை அவசரம் காட்டுகிறார் என்று எல்லோரும் கேள்வி கேட்டும் பதில் கூறாமல் ஏன் தமிழ்வாணன் ஏன் சிரித்து மழுப்பினார் என்று இப்போது எல்லோருக்கும் புரிந்தது

“என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே” என அழதார் யமுனா 

அதைக் கேட்ட மிதுனவதி, சிலையாக அமர்ந்து விட்டாள்

‘உங்களுடைய ஆசை இப்படி நிராசையாக போய்விட்டதே அப்பா’ என்று மனதிற்குள் கதறினாள்

ரஞ்சித் அவளிடம் ஏதோ பேச வர, “என்கிட்ட நீங்கள் பேச எதுவும் இல்லை. இனிமேல் நீங்கள் யரோ, நான் யரோ” என்று தெள்ளத்தெளிவாக கூற

“மிது” என கெஞ்சலாய் பார்த்தான் ரஞ்சித் 

“தயவுசெய்து இங்க இருந்து போங்கள்” என்று கையை எடுத்து கும்பிட

அவன் அசையாமல் நிற்பதை உணர்ந்து, “நானும் என்னுடைய அப்பாகிட்ட போகணுமா?” என கண்ணீரோடு அவள் கேட்க, அவன் மனதளவில் உடைந்தான்

மிதுனவதி கூறியதை கேட்டு பதறிய வானதி, “வேண்டாம் டா. அந்த வார்த்தையை சொல்லாதே. நாங்கள் கிளம்புறோம்” என்று மகனின் கரத்தை பிடித்து இழுத்து கொண்டு சென்றார்.

சிறிது நேரத்தில் அவருடைய உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

‘எந்த முகத்தை வைத்து கொண்டு உரிமையாக காரியங்களை செய்வது’ என, ஒரு ஓரத்தில் ரஞ்சித்தின் குடும்பம் வெறும் பார்வையளர்களாக நின்றிருந்தனர் 

ந்தையின் மறைவில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வர முயன்றாள். ரஞ்சித் பக்கம் செல்ல நினைத்த மனதை  இழுத்துப் பிடித்து வைத்தாள். இருவரின் குடும்பத்துக்கும் நடுவில் பேச்சு வார்த்தை அற்று போனது

வானதியும் யமுனாவும் பார்த்து கொண்டாலும், பேசி கொள்ள மனம் வரவில்லை.

நடுவில் அகல்யாவின திருமணம் நடந்து முடிந்தது

இப்படியே நாட்கள் நகர, கதிரவனின் நண்பனிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது 

“மிது நான் வெற்றி பேசறேன் மா”

“சொல்லுங்க அண்ணா”

“நீயும், அம்மாவும் நான் சொல்கிற இடத்துக்கு வந்துருங்க”

“என்ன அண்ணா? எங்க?”

“ஹஸ்பிடலுக்கு மா”

“அண்ணா… யாருக்கு என்ன ஆச்சு? ப்ளீஸ் சொல்லுங்க”

“நீ வா மா” என்று கூறி இணைப்பை துண்டித்தான்

பதறியவாறு அங்கு செல்ல, உயிரற்ற உடலாக கதிரவனை கண்டனர் 

“என்னுடைய பிள்ளை” என்று அவன் தாய் கத்த

“அண்ணா” என்றவளுக்கு, அதிர்ச்சியில் அடுத்த வார்த்தை வரவில்லை.

“உங்களை பார்க்க தான் மா இரண்டு பேரும் வந்தாங்க வழியில் எதிர்பாராத விதமாக இப்படி ஆகிவிட்டது”

“அந்த பொண்ணு”

“அவளும் இப்போது இல்லை” 

“இதுக்கா டா எங்கள் விட்டு விட்டு போய் கல்யாணம் செய்தாய்”

‘எங்கோ ஒரு ஊரில் அண்ணன் இருக்கிறான் என்ற நினைத்து வாழ்ந்த மிதுனவதிக்கு அடுத்த அடி’

அண்ணன் மகனின் இழப்பில் கவலையாக இருந்த வானதியிடம், “இப்படியே இருந்தால் எப்படி? அடுத்து ரஞ்சித்துக்கு ஏதாவது வரன் பார்க்க

வேணாமா?” என்று சீனிவாசன் சூழ்நிலை புரியாமல் கேட்க

“உங்களுக்கு மனசு கல்லில் தான் செய்து இருக்கு. என்னுடைய அண்ணன் அவ்வளவு சொல்லியும் அந்த திருமணத்தை நிறுத்தி விட்டு இப்போது வந்து இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வருது”

“என்னுடைய பொண்ணு அழும்போது எனக்கு வேற எதுவும் பெரிதாக தெரியவில்லை” என்றார் அந்த தந்தை 

“மிது இப்போ எல்லாத்தையும் இழந்து விட்டு  நிற்கிறாள், அதற்கு யார் காரணம்” என்று ரஞ்சித்தின் குரல் கேட்க, பேச முடியாமல் நின்றார்.

“தயவு செய்து இனிமேல் என்னுடைய கல்யாணத்தை பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம். எனக்கு மனைவி என்றால் அது மிது மட்டும் தான். வேறு யாருக்கும் அந்த உரிமையை என்னால் தர முடியாது” என்று உறுதியாக கூறி விட்டு நகர்ந்தான்.

வானதிக்கு கணவரின் செயலில் கோபம் இருந்துக் கொண்டே இருந்தது. அதை தன் பாராமுகத்தால் வெளிப்படுத்த, மகனோ மெளனம் ஆனான்.

மிதுனவதியின் கனவு கோட்டை சிறுக சிறுக சரிந்தது. முதலில் திருமணம் நின்றதால் தந்தையை இழந்தது. இப்போது அண்ணன் மற்றும் பார்த்திராத அண்ணியின் மறைவு.

அவள் சிரிப்பு மட்டும் அல்ல, பேச்சும் குறைந்து போய் விட்டது. அடுத்து அடுத்த இழப்புகளை சந்தித்தால், அவர்களை அக்கம் பக்கத்தினர் கூட சற்று தள்ளி வைத்தனர்.

தன் நினைவில் இருந்து மீண்டவள் நேரத்தை பார்க்க, அது ஆறு என்று காட்டியது. வழக்கம் போல் தன் பணிக்கு கிளம்ப சென்றாள்.

அன்று மாலையும் ரஞ்சித் வர, அவனை பார்க்கும் போது அனைத்து நிகழ்வுகளும் நினைவில் வந்தது 

அவன் பேசுவதற்குள், “என்னை நிம்மதியாக வாழ விட மாட்டீர்களா? நீங்க தான் போலிஸ் ஆச்சே, உங்கள் துப்பாக்கியால் சுட்டு என்னை சாகடிச்சுடுங்களே” என கோபமாக அவள் பேசிக்கொண்டே போக

“மிது” என்ற அவன் குரல் அவளை தடுத்து நிறுத்தியது

“போதும் மிது, இனிமேல் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். என் முகத்தை பார்க்கும் சூழ்நிலை உனக்கு வராது, உன் நிம்மதியை இனி நான் கெடுக்க மாட்டேன். பை… இல்ல குட் பை” என்று கூறி விட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றான்.

பேசி புரிய வைத்து அவள் மனதில் இருக்கும் வலிக்கு மருந்திடலாம் என்ற முயற்சியில் இறங்கியவனுக்கு, மிதுவின் இந்த வார்த்தைகள் அவன் மனதை பலமாக தாக்க, அதன் தாக்கத்தால், ‘இனி பார்க்க வர மாட்டேன்’ என்று கூறி விட்டேனே தவிர, அவளை காணாமல் அவனால் இருக்க முடியாது என்பதே நிதர்சனம்

“ஏண்டி இப்படி பேசுன?” என சுமித்ரா தோழியை அதட்ட

“சுமி” என்று அவளை கட்டி கொண்டு அழுதாள் மிதுவனதி 

அவளை வீட்டில் விட்டு, யமுனாவிடம் விஷயத்தை சொல்லி விட்டு சென்றாள் சுமித்ரா 

மகள் படும் வேதனையை கண்டு, அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

அடுத்த நாள் காலையில் சீனிவாசன், வானதி இருவரும் அவள் வீட்டுக்கு வந்தனர்.

“வானதி வா, வாங்க அண்ணா” என்று இருவரையும் வரவேற்றார்.

“வாங்க” என்று பொதுவாக கூப்பிட்டாள் மிது 

“என்ன வானதி முகமே ஒரு மாதிரி இருக்கு?” என்று யமுனா பேச்சை ஆரம்பிக்க

“என்ன சொல்றது அண்ணி, ரஞ்சித் மும்பைக்கு போறேன் என்று சொல்லிட்டு இருக்கிறான்” என வானதி வருத்தமாய் கூற 

“எதுக்கு அங்க?” என புரியாமல் கேட்டாள் யமுனா 

“அவனுக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லையாம், அதான் அங்க போகிறேன் என்று சொல்லிட்டு இருக்கிறான்”

“எவ்வளவு நாள் வானதி?” என யமுனா கேட்க 

“இனிமேல் அங்க தான்னு சொல்றான் யமுனா” என சீனிவாசன் பதிலளித்தார் 

“அவன் மனதில் ஏதோ இருக்கு, அதான் இப்படி ஒரு  முடிவு எடுத்து இருக்கிறான்” என்று மிதுவை ஒரு பார்வை பார்த்து கொண்டே அவர் கூற

அனைவரின் பார்வையும் தன் பக்கம் திரும்புவதை உணர்ந்து, “நான் இப்போ வரேன் ” என்று கூறி விட்டு, தன் அறைக்கு சென்று விட்டாள் மிதுனவதி 

அறைக்குள் நுழைந்தவள், ‘நான் உங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன் இல்லையா மாமா? அதனால் தானே இப்படி ஒரு முடிவு’ என்று கண்ணீர் வடிந்தாள்

உடனே சுமித்ராவிற்கு அழைத்து விஷயத்தை கூற, “பரவாயில்லை விடு மிது. அவன் அங்கே போயிட்ட, நீ இங்கே நிம்மதியாக இருப்ப தான” என வேண்டுமென்றே கூற, மிதுனாவிற்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது

‘அவர் இல்லாமல் நான் எப்படி இருப்பேன். கோபம் மட்டும் இருந்தால் பரவாயில்லை, காதலும் இருக்கே. நான் என்ன செய்வது’ என மனதிற்குள் புலம்பினாள் 

ஒரு வாரமாக உணவு, உறக்கம் இன்றி தவித்தவள், அதற்கு மேல் தாங்க இயலாமல் ஒரு முடிவுக்கு வந்தாள்

காலையில் எழுந்து கிளம்பி ரஞ்சித் வீட்டுக்கு சென்றவள், உள்ளே நுழையும் முன்னே, “அத்தை அத்தை” என்று அழைக்க, எந்த பதிலும் வரவில்லை.

நேரே ரஞ்சித் அறைக்கு செல்ல, அவன் பெட்டியில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்

அவள் வரவை உணர்ந்தும் எதுவும் பேசாமல் நிற்க,” எப்போ கிளம்பப் போறீங்க?” எனக் கேட்டாள் 

“நாளைக்கு”

“என்னை விட்டு போறதுக்கு எதுக்கு என்னுடைய வாழ்க்கையில் வரணும்” என்று கேள்வி கேட்க, அவன் சிலையாக நின்றான்.

“சொல்லுங்க ரஞ்சித்” என்று அவன் தோளைப்பற்றி உலுக்க

“இனி உன்னுடைய வாழ்க்கையில் வர மாட்டேன். நீ நிம்மதியா இரு”

“நிம்மதியா? நீங்கள் இல்லாமல் அது இல்லை”

”      “

“என் மனதில் எவ்வளவு ஆசை வைத்து இருந்தேன் அது எல்லாம் கலைந்து போன விரக்தியில் உங்கள் மேல் கோபமாக இருந்தேன், ஆனால் நான் வைத்த காதலில் ஒரு துளியும் குறையவில்லை”

“வேண்டாம் மிது. நீ என்னை தடுக்க தான் இப்படி சொல்லுகிறாய்” என கூறிவிட்டு அவன் நகர

“ப்ளீஸ் மாமா” என அவன் கரம் பற்றினாள் மிதுனா 

அவளின் விழிப்பை கேட்டதும் முகத்தில் புன்னகை தவழ திரும்பியவன், “இந்த வார்த்தையை கேட்கத் தான் ஓராண்டாக காத்திருந்தேன்” என்று அவள் முகம் பற்றி கண்கள் கலங்க கூற

“மாமா” என்றவளை, அணைத்து கொண்டான்

இத்தனை நாட்கள் தவித்த தவிப்பு, இந்த பந்தம் தொடராமல் போய்விட்டதே என்ற ஏக்கம், அனைத்தும் கண்களில் இருந்து அருவியாக கொட்டியது 

அவள் முகத்தை நிமிர்த்தி, “நான் உன்னிடம் ஒன்று சொல்வேன், கோபப்பட கூடாது” என்றவன் கூற, ‘சரி’ என்று தலையசைத்தாள்.

“நான் மும்பைக்கு போகவில்லை, பொய் சொன்னோம்” எனவும் 

“சொன்னோமா? அப்படி என்றால்” என்று புரியாது பார்க்க

“எல்லாம் எங்கள் திட்டம் தான்” என ஒருமித்த குரல் கேட்டு திரும்பினாள் மிதுனா 

அங்கே அவள் தாய், ரஞ்சித்தின் பெற்றோர், அவள் தோழி சுமித்ராஅனைவரும் நின்று இருந்தனர்.

“மா நீங்களுமா?” என்று வியப்பாக மிதுனா பார்க்க

“நீ படும் கஷ்டத்தை பார்த்து எனக்கு வேற வழி தெரியவில்லை” என பாவமாக கூறினார் 

“சுமி” என்று தோழியை மிதுனா முறைக்க 

“ஹிஹி போதும் பாசமா பார்த்தது” என கேலி செய்தாள் சுமித்ரா 

“உன்கிட்ட அப்புறம் பேசி கொள்கிறேன்” என பொய்யாய் முறைத்தாள் அவள் 

“விடு டா மிது, எல்லாம் நல்லதுக்கு தான்” என்று வானதி அவளை சமாதானப்படுத்தினார்

“சீக்கிரமே நல்ல நாள் பார்க்க வேண்டும்” என்று கல்யாண வேலையில் இறங்கினார் சீனிவாசன்

அடுத்த வந்த முகூர்த்தத்தில் திருமதி. ரஞ்சித் குமார் ஆனாள் மிதுனா

சிதறிய அவள் கனவு, சிறுகச் சிறுக மீண்டும் ஒன்றாய் இணைந்தது  

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

   

                    

                    

Similar Posts

error: Content is protected !!