சன்னலோரமாய்...
மேகங்களுடனான மௌனப் பேச்சுவார்த்தை
கரங்களின் சிறிதுநேர உரையாடல் கம்பிகளுடன்
காற்றின் இனம்புரியாத தலைகோதல்
வழியெங்கும் வரும் மரங்களின் நட்பு
கதிரவனின் கண் கூசும் தரிசனம்
ஒருநாள் பூக்களின் மெல்லிய புன்னகை
கடைகளின் பொருட்களை கண்களால் வாங்கிய மகிழ்ச்சி
பெயர் தெரியாத குழந்தையின் குறு புன்முறுவல்
மழைநேர சாரலின் இயற்கையான முத்தம்
முழுமதியின் முகம் காண சரியான இடம்
தூரத்து மலைகளைப் போல் உயரத் தோன்றும் எண்ணம்
என்னை மட்டும் கடந்தால் போதுமா என
சாலைகள் மனவலிமையை கேள்வி கேட்டபோது,
என்னை விட பெரிய துணை ஏதுமில்லை
என்கிறது இயற்கை சன்னலோரமாய்!
அவனின் இருபது!
பத்தொன்பதின் சாரல் மழை சற்றே தொடங்கியது
சட்டைப்பைக்கு துணையாக 50ரூபாய் தோள் கொடுத்தது
அப்பாவிடம் மீண்டும் வேண்டாம் என கைகள் எச்சரித்தன
அம்மாவின் நகைகள் பல வங்கியில் இளைப்பாறின
ஆனாலும் நண்பர்களின் வெளித்தோற்றத்திற்கு சளைக்காதிருந்தான்
தன்னையும் சேர்த்துக் கொள் என
காதல் கொண்டிருந்தன அவனோ? அவன் வயதோ?
அவள் இதழ் மீட்டா இன்னிசையும்
தனக்கு கேட்கும் என கோட்டை கட்டியது அவன் மனம்
மௌனமே அவள் சம்மதம் என்றதும்
வாழ்க்கையின் முதல்வனாய் காதல் பதவி எற்றது
பத்தொன்பதின் சாரல் சற்று ஓய்ந்தது
காதல் பதவி விலக, கண்கள் மழை பொழிந்தன
நகர்ந்த நாட்கள் வாழ்க்கை பாடம் எடுத்தன அவனுக்கு
வலிகளைத் தாங்கிக் கொள் என விடைபெற்றது பத்தொன்பது
இன்னும் சவால்கள் அதிகம் என இனிதே சிரித்து இருபது!
என்னுள் அந்த காதல்...❤
ஊமையின் மௌன பாசை
வகுப்பறையின் கடைசி மேசை
மழைக்காலத்தின் சாலையோரத் தேநீர்
கோடையின் நீங்காத் தாகம்
காய்ந்த மரத்தின் புதுதளிர்
மலைப்பிரதேசங்களின் நீங்காக் குளிர்
பேருந்தின் சன்னலோர இருக்கை
பிடித்த உணவின் கடைசி பருக்கை
பரிட்சையின் படிப்பில் இடைமறிக்கும் எண்ணம்
என் திருவிழாவின் திருக்கல்யாணம்! ❤
மகள் ❤
பத்து திங்கள் நிலவாம் இவள்
என் வாழ்வெனும் பெருமரத்தின் புது தளிர்
உயிர்பெற்ற பூவாய் என்
கரங்களில் தவழும் பூமகள்
அழும் முகம் பார்த்தும் பதறவில்லை நான்,
ஏனோ மனம் நெகிழ்கிறது சிறு புன்னகையுடன்
உடல் நொந்து கொண்டாலும் மனம் நோகவில்லையே
முத்தமிட்ட போதும் விளக்க முடியவில்லை என் உற்சாகத்தை
இன்னும் மனம் ஆர்பரிக்கிறது
அம்மா..... என்றழைக்கும் நாள்
அருகில் வரப்போகிறது என்று !❤
Like this:
Like Loading...
மிகவும் அருமையான கவிதைகள் எழுதிய எழுத்தாளர் ஆர்த்தி கவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐👏👏👏