in ,

தலைக்கு மேல் ஆபத்து (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘மேஷ ராசிக்கார்களே, உங்கள் தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது ‘ என்று டி.வி ஜோதிடர் சொன்னதைக் கவனித்த உடனேயே தலையைத் தொட்டுப்பார்த்துகொண்டு, ‘ ஐயோ ‘ என்றான் ஜீவா.

கல்யாணம் ஆகி ஒரு மாதம்தான் ஆகிறது. வயது முப்பதை நெருங்குகிறது.  முன் நெற்றியில் முடி மேலேறிவிட்டது.  இதில் ஆபத்து வேறேயா… புலம்பிக்கொண்டான் அவன்.

இன்றைக்கு தலைக்கு குளிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துகொண்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போனான்.  தலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். நிமிர்ந்து ஷவரைப் பார்த்தான்.   அது தலையில் படாத உயரத்தில் தான் இருந்தது. பேசாமல் உட்கார்ந்தே குளிக்கலாமா என்று யோசித்தான். ஆனாலும் குனிந்து நிமிரும்போது டேப்பில் தலை பட்டுவிட்டால் ? தலைக்கு ஆபத்துதானே. யோசித்துவிட்டு நின்றுகொண்டே குளித்து முடித்து வெளியேறினான்.

அம்மா பார்த்துவிட்டு கேட்டார்கள், ‘ ஏன்டா தலைக்கு குளிக்கலையா… இன்னிக்கு சனிக்கிழமைடா… ‘ சனி நீராடு… ‘னு தெரியாதா உனக்கு… ‘

‘ தலையில சனி வந்து உட்காரப்போகுதுங்கறமாதிரி டி.வி.ல ஜோசியர் சொல்லியிருக்கார்… நீ வேற சனி நீராடனும்னு சொல்றே…’ என்று சொல்ல வந்தவன், பிறகு ’ நாளைக்கு  லீவுதானேம்மா, ப்ஃரீயா குளிச்சுக்கறேன் விடு… ‘ என்றுவிட்டு, ‘ சரி சரி… போயி தட்டுல இட்லியை போட்டு வை, இதோ வந்துடறேன்… ‘ என்றுவிட்டு படுக்கயறைக்குள் இருக்கும் நிலைக்கண்ணாடி முன் போய் நின்றான்.

கண்ணாடியில் பார்த்தபடியே சீப்பை எடுத்து தலைவாரப் போனவன், டக்கென் சீப்பை பார்த்தான்.  நான்கைந்து பற்கள் ஏற்கனவே ஒடிந்து விழுந்துவிட்டன.  ஒடிந்து போன பல் தலையை காயப் படுத்துமோ.  உடனே புது சீப்பு வாங்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.  சீப்பைத் தூத்தி எறிந்துவிட்டு ரஜினி ஸ்டைலில் கையாலேயே தட்டிக்கொண்டு சாப்பிடப் போனான்.

நாற்காலியில் உட்காரும்போது அண்ணார்ந்து பார்த்தான். காத்தாடி க்ராக் க்ராக் என்று சத்தமிட்டபடி சுற்றிக்கொண்டிருந்தது.

‘ ச்சே முதல்ல இந்த காத்தாடியை ரிப்பேர் பண்ணனும்… ஏதோ பேய் படத்துல வர்ற மாதிரியே சுத்துது… ‘ என்று முனகியபடி காத்தாடிக்கு கீழே உட்காரவேண்டாமே என்று சற்றே தள்ளி உட்கார்ந்து கொண்டான். சாப்பிட்டு முடித்து டிரெஸ் செய்துகொண்டு ஆபீஸ் கிளம்பினான்.

‘ மறக்காம ஹெல்மெட் எடுத்துக்கங்க…’ என்று நினைவூட்டினாள் மனைவி.  ஆமாம் டி.வி.ஜோதிடரும் சொல்லியிருக்கிறாரே தலைக்கு மேல் ஆபத்து என்று.

வாசல் கதவு நிலையில் சட்டென குனிந்து போனான். பிறகு சிரித்துக்கொண்டான்.  ‘ ச்சே… அது நம்ம உயரத்துக்கும் மேலே இருக்கு… அது எப்படி நம்ம தலையை இடிக்கும்… ‘  என்று சிரித்துக் கொண்டான்.

மொபெட்டை உசுப்பினான்.  ரொம்பவும் உஷாராக வண்டியை ஓட்டினான்.   சட்டென்று யோசனை வந்தவனாக ஒரு ஓரமாய் நின்று ஹெல்மெட் பெல்ட்டை சரியாக போட்டிருக்கிறோமா என்று உறுதி படுத்திக் கொண்டு பிறகு கிளம்பினான்.

ஆபீஸ் வந்ததும், முதல் வேலையாக ராமசாமி அண்ட் கோ ஃபைலை பார்க்கவேண்டும். ‘ அந்த பாரட்டியோட கணக்கை முடிச்சு மிச்சம் மீதி இருந்தா செட்டில் பண்ணிடுங்க ஜீவா ‘ என்று முதல் நாளே மேனேஜர் சொல்லியிருந்தது நினைவில் வந்து நின்றது.

போய் பீரோவைத் திறந்தான். தேடினான். அந்த ஃபைல் கிடைக்கவில்லை. அநேகமாய் மேல் அடுக்கு வரிசையில் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் எக்கி கையை உயர்த்தியவன், சட்டென பின்வாங்கிக் கொண்டான்.

கிட்டத்தட்ட ஆறு ஏழு ஃபைல்களாக வரிசையாய் அடுக்கி இருந்தார்கள். டி.வி.ஜோதிடர் சொன்னது ஞாபகம் வந்தது. நம்ம கிரகாச்சாரம் ஃபைல் கலைஞ்சு தலைமேல விழுந்துடுச்சுன்னா…

அந்தப் பக்கமாய் போய்க்கொண்டிருந்த பியூன் மூர்த்தியைக் கூப்பிட்டு அந்த ஃபைலை எடுத்து வரச் செய்தான். ஃபைல் முழுதும் அலசி ஆராய்ந்து மூவாயிரம் சொச்சம் அந்தக் கம்பெனிக்கு போய்ச் சேரவேண்டும் என்று கணக்குப் போட்டு பார்த்துவிட்டு ஒரு சிறு பேப்பரில் தான் போட்ட கணக்கை குறித்து எடுத்துக்கொண்டு நேரே மேனேஜர் ரூமிற்குப் போனான்.

அவர் ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

மெல்ல, ‘ சார்… ‘ என்று குரல் கொடுத்தவன், அவர் ஜன்னல் வழியாக என்னத்தை பார்த்துக் கொண்டிருகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் இவனும் கொஞ்சம் எக்கி பார்க்க முயற்ச்சித்தான்.

‘ நம்ம கார் பார்க்கிங் ஏரியால ஒரு போஸ்ட் ஆடிக்கிட்டே இருந்ததில்லையா… அது கொஞ்சம் முன்னாலதான் சாய்ஞ்சி விழுந்திடுக்கு. உடனே செக்யூரிக்கு போன் போட்டு சொல்லிட்டேன்… அதான் என்ன பண்றாங்கன்னு பார்த்திட்டிருந்தேன்… சரி அதென்ன ஃபைல்…’ என்றார்.

சட்டென தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.  

‘ அய்யோ…அந்த போஸ்ட்டை தாண்டித்தானே நாம நம்ம மொபெட்டை நிறுத்துவோம்… ஒருவேளை நம்ம தலையில விழுந்திருந்தா…’ யோசித்துக்கொண்டே மறுபடியும் தலையைத் தடவிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தவன் திடுக்கிட்டு சுயநிலைக்கு மாறி… ‘ ஸாரி சார்…’ என்றபடியே ஃபைலை எடுத்து விரித்தான்.

அன்றைய தினம் வேலையே ஓடவில்லை.  மூன்று நான்கு மேஜைகள் தள்ளி இரண்டு பேர் பேசிக்கொண்டனர். ‘ என்னது பேங்க் நோடீஸ் விட்டுட்டாங்களா… சரி… தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு… இனி சாண் என்ன முழம் என்ன… ’

டீ குடிக்கும் நேரம் வந்தது.  கீழே இறங்கி போனான்.  ‘ நல்ல வேலை தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு… ‘ என்று இருவர் பேசிக்கொண்டே போனார்கள்.

டீயைக் குடித்துக்கொண்டே அங்கிருந்த தினசரி பேப்பரைப் புரட்டினான்.

‘  காரும் மொபட்டும் மோதிக் கொண்டதில் ஹெல்மெட் போடாத மொபெட்காரரின் தலை பலமாக அடிபட்டு…. ‘

பேப்பரைத் தூக்கி எறிந்துவிட்டு திரும்பினான். ச்சே… தலை…தலை..தலை…!

சாயங்காலமானதும் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். பெல்ட்டை நன்றாகப் போட்டுக்கொண்டான். பார்க்கிங்கில் புதிதாக போஸ்ட் நட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஹெல்மேட்டுக்கும் மேல் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

வீடு வந்து சேர்ந்தான்.

‘ ஏங்க டல்லா தெரியறீங்க…  ஆபீஸ்ல ரொம்ப வேலையா… தலைவலியா…’

பேசாமல் நடந்தான். முகம் அலம்பிக் கொண்டு ஷவரைப் பார்த்தான். முகத்தைத் துடைத்துக் கொண்டு உள்ளே வந்தான். டீ கப்பை நீட்டினாள் கவிதா. வாங்கிக் குடித்தான்.

போய் மெத்தையில் படுத்தான்.

‘ மேஷ ராசிக்கார்களே, உங்கள் தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது‘

அப்படியே காத்தாடியைப் பார்த்தான். சட்டென நகர்ந்து படுத்தான். அப்படியே தூங்கிப் போனான்.

அவனைத் தட்டி எழுப்பினாள் கவிதா.

‘ மணி ஏழுங்க… தோசை ரெடி… வந்து சாப்பிட்டிட்டு அப்புறம் வந்து படுங்க… ‘

தோசை சாப்பிடும்போது ‘ க்ராக் க்ராக் ‘ என்ற சத்தத்துடன் சுத்தும் காத்தாடியை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். 

புரிந்து கொண்ட அவள், ‘ அத்தை மத்தியானமே எலெக்ட்ரீஷியனுக்கு போன் பண்ணிட்டாங்க… நாளைக்கு காலைல வர்றேன்னிருக்கார்… ‘ என்றாள்.

எல்லா வேலைகளையும் ஒழித்துவிட்டு வந்து மெத்தையில் படுத்தாள். அவன் தூங்காமல் படுத்துக்கொண்டிருந்தான்.

‘ ஏங்க தூங்கலையா… ‘ என்றாள். அண்ணார்ந்து மேலே பார்த்தாள். ‘ ஏங்க பேன் போட்டுக்கலையா… வியர்க்கலையா உங்களுக்கு… ஏங்க ஒரு மாதிரியாவே இருக்கீங்க… அப்படி என்னதான் ஆச்சு… ‘  என்றாள்.

அவன் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் மல்லார்ந்து படுத்தபடியே நடந்தவைகளை  சொல்லி முடித்தான்.

சிரித்தாள். ‘ சரி… உங்க ராசிதான் ரிஷபமாச்சே… நீங்க ஏன் நாள் பூரா வீணா மண்டையை போட்டு உடைச்சிக்கிட்டீங்க… ‘

திடுக்கிட்டு திரும்பிப் படுத்தவன், கேட்டான். ‘ அப்போ என் ராசி மேஷம் இல்லையா… ‘

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. ஒரு வேளை கிரித்திகை நக்ஷத்திரமோ? அதுதான் மேஷம், ரிஷபம் இரண்டிலும் இருக்கும்

செகண்ட் ஹேண்ட் (சிறுகதை) – தி.வள்ளி

தீம் தரிகிட பாரதி மகள்கள் (அத்தியாயம் 1) – பாரதியின் பைத்தியம்