sahanamag.com
சிறுகதைகள்

பிள்ளை மனம் (சிறுகதை) – ✍ பீஷ்மா

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ஜெகநாதனின் ரிட்டயர்மென்ட் பெனிபிட்ஸ்ஸைக் குறி வைத்து மூன்று மகன்களும் தங்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்து மூன்று தினங்களாகி விட்டது.

ஒரு மருமகளும் சமையலுக்கோ, காபி முதலானவைகளுக்கோ ஜெகநாதனின் மனைவியும், தங்கள் கணவனின் அம்மாவும், தங்களுக்கு மாமியாருமான பர்வதத்திற்கு உதவி செய்ய முன் வராமல், வேளாவேளைக்கு காபி, டிபன், சாப்பாடு ஆகியனவற்றை ஹோட்டலில் ஆர்டர் செய்வது போல் கிட்சன் கூடச் செல்லாமல் டைனிங் ரூமில் அமர்ந்து… போனால் போகிறதென்று தாங்கள் சாப்பிட்ட தட்டுக்களை மட்டும் அலம்பி வைத்து அதையே பெரிய வேலை செய்தாற் போல் அலம்பல் செய்து அறைக்குள் சென்று விடுவர் அல்லது TV முன் உட்கார்ந்து விடுவர்.

மனைவி பர்வதத்தைப் பார்க்க பாவமாயிருந்தது ஜெகநாதனுக்கு. தன் பிள்ளைகள் என்ற ஒரே பாசத்தில் சுயநலமிக்க அவர்கள் குடும்பத்தையே அவள் இப்படித் தாங்குவது வெறுப்பாயிருந்தது. பிள்ளைகளும் தங்கள் மனைவிகளை அம்மாவுக்கு ஒத்தாசை செய்யுமாறு ஒரு சின்ன ஜாடையில் கூட சொல்லவில்லை.

மூன்றாம் நாள் மாலை, அம்மா செய்து கொடுத்த நொறுக்குத் தீனியை வாயில் அரைத்துக் கொண்டே மூத்தவன் மெல்ல ஆரம்பித்தான்.

“ம்ம்ம்.. அப்பா, நீங்களும் அம்மாவும் நாலு நாலு மாசம் எங்க எல்லார் வீட்லயும் தங்கி உங்க மிச்ச காலத்தில சந்தோஷமா நிம்மதியாயிருக்கலாமே”

“ஏன்? இங்கேயே நாங்க இருந்தா அந்த சந்தோஷமும், நிம்மதியும் இருக்காதா?”

“அதுக்கில்லை… இவ்ளோ பெரிய வீட்ல நீங்க ரெண்டு பேர் மாத்ரம் இருக்கறத விட எங்களோட சேர்ந்து நாலு நாலு மாசம் இருக்கலாமே” என்று இழுத்துப் பின்

“இந்த வீட்டயும் ஒரு நல்ல விலைக்குக் கொடுத்து உங்க ரிட்டயர்மென்ட் காசோட சேர்த்து எங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்திட்டீங்கன்னா உங்களோட மொத்தக் கடமையும் முடிஞ்சிடும் இல்லயாப்பா?”

ஆர்வமாய் பிள்ளைகள், மருமகள்கள் அவர் முகத்தைப் பார்க்க, சற்று நேரம் மௌனமாயிருந்தவர், “வீட்டயும், என்னோட சர்வீஸ் காசையும் நான் இப்போதைக்கு யாருக்கும் கொடுக்கறதாயில்ல. என்னோட கடமை உங்களுக்கு எதுவும் பாக்கியில்ல…”

சொல்லி முடிக்கு முன், அவர் மனைவி, தன் தாய்ப் பாசத்தைக் காண்பித்தாள்.

“ஏங்க, அவன் சொல்ற மாதிரி நாம இனிமே அவங்க கூட போயிருப்போம்ங்க. இவ்ளோ பெரிய வீட்ட என்னால பெருக்கி சுத்தம் செஞ்சு மாளலங்க. எல்லாத்தையும் அவங்ககிட்ட கொடுத்துட்டு நிம்மதியா இருப்போங்க”

“அதுக்கு வீட்ட வித்துட்டு காசைக் கொடுத்துட்டுத்தான் போகணும்னு அவசியமில்லம்மா. இங்க வந்து மூணு நாளாச்சுல்ல, ஒரு நாளைக்காவது உன் மருமகள்ங்க யாராவது உனக்கு ஒத்தாசைக்கு வந்து ஏதாவது செஞ்சாங்களா? அவங்ககிட்ட போனாலும் நீதான் அவங்களுக்கு வேலைக்காரி, அதப் புரிஞ்சுக்க”

மூன்று மருமகள்களும் ஒரு சேரப் பாய்ந்தனர், “கொடுக்க வேண்டியதக் கொடுக்கறதுக்கு மனசில்லை, குத்தம் குறை சொல்றதுக்கு மாத்ரம்”

கைகளை உயர்த்தி அவர்களை அடக்கிய ஜெகநாதன், “உங்க ஆசைப்படியே நாங்க ஒவ்வொரு நாலு மாசமும் உங்க ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கோம். முதல்ல யார் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறீங்க?”

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அனைவரும் தயங்கினர்.  மூத்த மருமகள் மற்ற மருமகள்களை ஜாடையில் கூப்பிட்டு அறைக்குள் சென்றாள்.

பின்னாலேயே மூன்று மகன்களும் அசட்டுச் சிரிப்புடன் அறைக்குள் நுழைந்தனர். கொஞ்ச நேரம் குசுகுசுவென்று அவர்களுக்குள் பேசிக் கொண்டது ஒன்றும் புரியாமல் முழித்த பர்வதத்தைப் பரிதாபமாய்ப் பார்த்தார் ஜெகநாதன்.

“பர்வதம்… நம்ம வீட்ல நீ எஜமானி. அவங்க நம்ம பிள்ளைகளாகவே இருந்தாலும் உன்னை வேலைக்காரியாதான் மதிப்பாங்க. வீணான அனாவசிய எதிர்பார்ப்புகளை விட்டுடு, அவ்ளவ்தான் நான் சொல்லுவேன்”

உள்ளேயிருந்து ஒவ்வொருவராய் வெளியே வந்தனர். அனைவரும் வந்ததும், “எங்களுக்குச் சேர வேண்டியதை எப்ப தரப் போறீங்க? அதப் பத்தி முதல்ல பேசலாமே. இந்த வீட்ட விக்கலேங்கற போது நீங்க இங்கயே இருக்கலாமே. உங்களுக்குத் தங்க இடம் இல்லேன்னாத் தான் எங்ககிட்ட வரணும். அதுதான் இப்ப இல்லேனு ஆயிடுச்சே, உங்களுக்கு வந்துருக்கற சர்வீஸ் காசயாவது பிரிச்சுக் கொடுத்து எங்கள சந்தோஷமா அனுப்பலாமே” என்ற மூத்த மருமகளைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்த பர்வதம்.

“நீங்க எல்லாம் கிளம்புங்க, அவர் சொன்னது தான். இப்ப இதப் பத்தி பேச வேணாம், நாங்களும் யார் வீட்டுக்கும் வரத் தயாரில்ல”

அம்மாவின் அதிரடி மனமாற்றம் பிள்ளைகளுக்கும், மருமகள் களுக்கும் அதிர்ச்சியைத் தர, “என்னம்மா நீயும் இப்படிச் சொல்ற?  ஒவ்வொரு அப்பா, அம்மா புள்ளைங்களுக்கு என்னல்லாம் செஞ்சு வைக்கிறாங்க. நீங்க என்னன்னா வந்துருக்கற காசையும், எங்களுக்குச் சேர வேண்டிய வீட்டயும் கூட கொடுக்க மாட்டேங்கிறீங்க”

“அதைத்தான்டா நானும் சொல்றேன். ஒவ்வொரு பிள்ளைங்க தங்களோட அம்மா, அப்பாவுக்கு என்னல்லாம் செய்யறாங்க. நீங்க மூணு நாளா அம்மாவுக்கு செய்ய வேண்டிய ஒத்தாசையக் கூட செய்யாம உரிமைய மாத்திரம் கேக்கறீங்க?”

“உங்களுக்கு எதுக்குப்பா இவ்ளோ பெரிய வீடு? இந்த வீட்ட வித்துட்டு உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு Flat பார்த்து அதில இருக்கலாமே? நாங்க நாலு பேரும் வாடகைய ஷேர் பண்ணிக் கொடுத்துடறோம். இப்ப நல்ல விலைக்கு இந்த வீட்டக் கொடுத்து எங்களுக்கு ஆளுக்கு ஒரு Flat வாங்கிக்கறோம்ப்பா”

அவனையே உற்றுப் பார்த்த ஜெகநாதன், “என்னோட சொந்த வீட்ட நான் வித்துட்டு ஒரு வாடகை வீட்டுக்கு, அதுவும் உங்க கையை வாடகைக்கு எதிர்பார்த்து… என்னை என்ன முட்டாப் பயனு நெனச்சியா?  நான் உங்களுக்கு அப்பன்டா”

“இப்ப முடிவா என்னதான் சொல்றீங்க?”

“எங்க காலம் முடிஞ்சதும் உங்களுக்குச் சேர வேண்டியது தன்னால கிடைக்கும். இப்ப நீங்க எங்களத் தொந்தரவு பண்ணாமக் கிளம்பறீங்களா?”

பிள்ளைகளின், மருமகள்களின் நிஜமுகம் கண்ட பர்வதம், தன் பாசமும் நேசமும் ஒரு வழிப்பாதையானதை ஏற்க முடியாமல் தவித்துத் தன் கணவனை முழுமனதுடன் சரணடைந்தாள்.

“பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்

பேரா இடும்பை தரும்”

ஆற்றல் மிகுந்த பெரியோரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது  நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

“குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து”

மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

(முற்றும்)

Similar Posts

4 thoughts on “பிள்ளை மனம் (சிறுகதை) – ✍ பீஷ்மா
 1. “தன் சொந்தத் தாய் , தகப்பனாரிடமே இவ்வாறு மூன்று மகன்களும் நடந்து கொள்வது மிகவும் வியப்பாகத்தான் உள்ளது. எனக்கு என்ன அச்சமென்றால் இது ஒரு தவரான சிக்னலைக் கொடுத்துவிட்டதோ என்பது தான். கிணறு வெட்ட பூதமா? அந்த ‘பர்வதம்மாவின்’ திடீர் மன மாற்றம் அவர்கள் பிள்ளைகளுக்கெல்லாம் ஒரு நல்ல படிப்பினையைக் கொடுத்துவிட்டது அல்லவா? இது ஒரு பிளஸ் பாயிண்ட் தான் ‘பீஷ்மாவுக்கு.’! “.

  -“ம.கி. சுப்ரமணியன்.”

 2. மிகவும் அருமையான கதை மிக மிக அவசியமான கதையும் கூட எழுதிய எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👏👏👏💐

  1. தங்கள் வாழ்த்துக்கு மிக மிக மகிழ்ச்சி.., நன்றி திவ்யா ஸ்ரீதர் சகோ!..,
   இந்தக் கதையின் தொடர்ச்சியும் உண்டு..,
   Once again Thanks and Pleasure..,

 3. மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..,
  ம. கி. சுப்ரமணியன் சகோ!..
  பிள்ளைகள் தங்கள் உரிமையை மட்டும் எதிர் பார்த்து கடமையை நழுவும் காலமிது..,
  தாய்ப் பாசத்தினால் தந்தையின் கைகளைக் கட்டிப் போட்டுப் பின் மீளா வேதனையில் இருக்கும் பெற்றோர்களும் உள்ளனர்..,
  இந்தக் கதையின் தொடர்ச்சியும் உண்டு..,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!