in

புதிரின் விடை (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன்

புதிரின் விடை (சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ருடம் 1910.

வசுமதிக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. அவளுடைய நண்பர்களை இன்னும் காணவில்லை. மச்சு வீட்டு அக்காவிற்கு பிரசவம் பார்க்க சென்றிருக்கும் பாட்டி வருவதற்குள்  கொடுக்காப்புளியையும்  கொய்யாக்காயையும் சாப்பிட்டு தீர்க்க வேண்டும். 

ராமு, சேது, முருகன், பாலு இவர்களுக்கெல்லாம் கொடுக்காமல் அவள் சாப்பிட்டதே இல்லை. எல்லாம் இந்த பாட்டியால் வந்தது என்று பாட்டியை கறுவினாள் 9 வயது சிறுமி வசுமதி.

“பள்ளிக்கூடத்துக்கு எல்லாருமா சேர்ந்து போனா எவ்வளவு நல்லா இருக்கும்” குழந்தையின் பிஞ்சு மனம் ஏங்கியது.

படித்தது  போதும் என்று தாய் வழி பாட்டி ஜனகம், மூன்றாம் வகுப்போடு அவளுடைய படிப்பை நிறுத்தி விட்டாள். ஆண்பிள்ளை பசங்களுடன் சேர்ந்துகொண்டு கில்லி தண்டா விளையாடுவது காட்டுப் பகுதிக்குள் போய் கொய்யாக்காய் கொடுக்காப்புளி முதலியவை பறிப்பது போன்றவைகளில் நாட்டம் அதிகம் இருந்தது.

“வயசுக்கு வர்ற நேரம். இன்னும் ரெண்டு வருஷம் போனா ஒருத்தன் கையிலே பிடிச்சு கொடுக்கணும். இன்னும் என்ன இஸ்கூலு?” என்று சொல்லி ஜனகம் அவள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள். மற்ற சிறுவர்கள் அவளுக்காக பாட்டியிடம் வக்காலத்து வாங்கினர்.

“பொட்டச்சி, ஆம்பள பசங்களோட சேர்ந்துக்கிட்டு கும்மாளமா போடுற” என்று வசுமதிக்கு  அடி விழுந்ததுதான் மிச்சம்.  இந்தியாவே இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்காத போது வசுமதிக்கு ஏது சுதந்திரம்? 

சேர்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஜனகத்திற்கு அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் வசுமதிக்கு நிறைய ஆசைகள் இருந்தன.

காட்டிற்குள் சென்று கொய்யாக்காய் நெல்லிக்காய் கொடுக்காபுளி எல்லாம் அடிக்க வேண்டும். ஆண்பிள்ளை பசங்களை போல் வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மரத்தில் ஏறி பையன்கள் தொங்குவது போல் தலைகீழாக தொங்க வேண்டும். ஆனால் பாவாடை சட்டை இதற்கெல்லாம் தடையாக இருந்தது. பையன்களுடன் போய் விளையாடுவது தெரிந்தால் பாட்டி தோலை உரித்து விடுவாள்.

கொடுக்காப்புளி மூட்டையோடு பையன்களை தேட கிளம்பினாள் வசுமதி. ராமுவின் வீட்டில் அவனை  பொம்பள சிறுக்கியோட என்ன விளையாட்டு என்று திட்டியதால் வசுமதியை இனிமேல் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அவன் சொல்லிவிட்டான்.

ராமு தான் கொஞ்சம் பசையுள்ளவன். அவ்வப்போது ஒரு பைசா 2 பைசா கொண்டுவந்து பொட்டிக் கடையில் மிட்டாய் வாங்கித் தருவான். அதனால் முருகன் சேது பாலு மூவரும் அவன் சொல்வதை தான் கேட்டனர். இன்று வசுமதிக்கு தெரியாமலேயே நால்வரும்  காட்டுக்குள் ஓடிவிட்டனர்.

காட்டின் நடுவில் அருவியும் ஏரியும் உண்டு. அருவியில் குளிக்கலாம் என்ற திட்டத்துடன் நான்கு சிறுவர்களும் சென்றுவிட்டனர். சோ என்ற சத்தத்துடன் அருவி கொட்டிக் கொண்டிருந்தது. நால்வரும் அருவியின் அணைப்பில் கிறங்கினர். தலையின் மீது விழுந்த அருவியின் குளிர்ந்த நீர் மத்தளத்துக்கு விழும் அடி போல் சுகமாக இருந்தது.

“போறுண்டா அருவியில குளிச்சது. வாடா ஏரியில நீச்சல் அடிக்கலாம்” ராமுவின் ஆணைக்கு உட்பட்டு மற்ற மூவரும் ஏரியை நோக்கி சென்றனர்.

ராமு தான் முதலில் ஏரியில் இறங்கினான். மறுகணம் அவனை யாரோ பிடித்து இழுப்பது போல் தோன்றியது. ஏரியின் ஆழத்தில் அவன் அமிழத் தொடங்கினான்.

“டேய் காப்பாத்து காப்பாத்து டா” அவனுடைய கூச்சல் எங்கும் எதிரொலித்தது. மறுகணம் எங்கிருந்தோ வந்தான் முறுக்கு மீசையும் குடுமியுமாக ஒருவன். ஏரியில் பாய்ந்து குதித்து ராமுவின் குடுமியை பிடித்து தூக்கினான்.

அதற்குள் ராமு நிறைய தண்ணீர் குடித்து விட்டு இருந்தான். அவன் வயிற்றை அமுக்கி தண்ணீரை எல்லாம் வெளியேற்றிவிட்டு மற்ற சிறுவர்களின் அருகில் வந்து அவர்களை ஒரு அறை விட்டான் அந்த குடுமி மனிதன்.

“எங்கடா வந்தீங்க தனியா? வீட்டுக்கு போங்க. இன்னொரு தடவை வந்தீங்க தோலை உரிச்சுப்புடுவேன்.”

அவனுடைய குரலுக்கும் ஆகிருதிக்கும் நடுங்கிப் போய் நான்கு சிறுவர்களும் ஓட்டம் எடுத்தனர் வீட்டை நோக்கி. காட்டிற்குள் போய் ஏரியில் விழுந்தோம் என்று தெரிந்தால் வீட்டில் தோலை உரித்து விடுவார்கள்.

மேலும் யார் காப்பாற்றியது என்று கேட்டால் என்ன சொல்வது? யார் நம்மைக் காப்பாற்றியது?  நான்கு சிறுவர்களும் திருதிரு என்று தமக்குள் விழித்தனர்.

“டேய் அது ஆவி சாமி தாண்டா நம்பள காப்பாத்திச்சு. வீட்ல சொன்னா நம்பவும் மாட்டாங்க, ரொம்ப அடிப்பாங்கடா. ஒருத்தனும் ஒன்னும் சொல்லாதீங்கடா” ராமு  ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டான். நான்கு சிறுவர்களும் பேசி வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை மறைத்து வைத்து பின்னர் மறந்தும் போய் விட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் வசுமதியோடு அதிகம் விளையாடவில்லை.

வசுமதிக்கு தான் வெகு தூரம் நடந்து வந்து விட்டோம் என்று தோன்றியது. வெளிச்சம் லேசாக குறையத் தொடங்கியது. வசுமதிக்கு பயமும் அழுகையும் வந்தது.

“சேது முருகா பாலா எங்கடா இருக்கீங்க?” என்று கூவினாள்.

அவள் குரல் தான் எதிரொலித்ததே தவிர யாரும் வரவில்லை. அப்போது “என்ன பாப்பா தனியா காட்டுக்குள்ள வந்திருக்கே?”  என்று ஒரு ஆண் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் வசுமதி.

ஆஜானுபாகுவாக ஒருவன் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கட்டுக்குடுமியும்,  முறுக்கு மீசையும், நெற்றி நிறைய திருநீறும் வசுமதியின் பிஞ்சு நெஞ்சை ஆட்கொண்டது.

“நீங்க சாமியா?” என்று ஆச்சரியத்துடன் வினவினாள். அவனருகில் ஒரு நாய் வேறு நின்று கொண்டிருந்தது. “நாய் கடிக்குமா?” என்று அடுத்த கேள்வியை வீசினாள்.

“நானு சாதாரண ஆசாமி தான். இந்த நாய் குரைக்கும் ஆனா  கடிக்காது ” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தான் அவன்.

“ஆமா நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல. தனியா எங்க வந்த?” முறுக்கு மீசை வசுமதியை வினவினான்.

“என் கூட விளையாடுற பசங்கள தேடி வந்தேன்”

“அவங்களை நான் தான் வீட்டுக்கு போங்கடான்னு அனுப்பி வச்சிட்டேன். இப்ப நீயும் வீட்டுக்கு போ. ஆமா மடியில நிறைய கொடுக்காப்புளி வச்சிருக்க போல இருக்கு”

“வேணுமா தர்ரேன் ஆனா பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவ? இவ்ளோ பெரியவனா இருக்கியே. எனக்கு பாடம் சொல்லி தரியா?”

வசுமதியை கூர்ந்து நோக்கின அவன் கண்கள்.

“நாளைக்கு வா சொல்லித் தாரேன்”

“என் பேரு வசுமதி உன் பேரு என்ன?”

“உனக்கு புடிச்ச சாமி எது?”

“மாடசாமி “

“அப்ப அதுதான் என் பேரு”

“பின்ன முதல்ல நான் சாமி இல்லன்னு ஏன் சொன்னே.”

“சாமி மாதிரின்னு வெச்சுக்கயேன்”  என்றான் அவன் மீண்டும் சிரிப்புடன்.

“சரி வசுமதி, ஊருக்குள்ள போய் யாருகிட்டயும் என்னை  பாத்ததெல்லாம் சொல்ல கூடாது. மீறி சொன்னேன்னா இந்த நாயை விட்டு கடிக்க வச்சிடுவேன்.”

“சொல்லமாட்டேன் இந்தா கொடுக்காப்புளி வச்சிக்க.”

அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே கிளம்பினாள் வசுமதி.

வசுமதி மாடசாமியையும் அந்த நாயையுமே நினைத்துக் கொண்டிருந்தாள். மறுநாள் போகும்பொழுது நாயை ஒரு முறை தொட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். 

மறுநாள் பாட்டி ஏதோ பரபரப்பாக இருந்தாள். பக்கத்துத் தெரு அடுத்த தெருவில் இருந்து வந்திருந்த செல்லாயி மூக்காயி தனலட்சுமி எல்லோரும் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

“சுட்டு போட்டுட்டாங்களாம்” என்ற வார்த்தை அடிக்கடி காதில் விழுந்தது வசுமதிக்கு.

“என்ன பாட்டி? “

“நம்ம ஊரு பெரிய தேவர பரங்கி சிப்பாய்காரங்க  அவங்க கேட்ட பணத்தை குடுக்கலன்னு நேத்து இழுத்துட்டு போயிட்டாங்களாம். சின்ன தேவரு எங்கேயோ ஓடி போயிட்டாராம்.”

வசுமதிக்குப் புரிந்தது போல இருந்தது.  பாட்டி அசந்த நேரம் பார்த்து காட்டுப்பக்கம் ஓடினாள். அவளுக்காக சில புத்தகங்களுடன் காத்திருந்தான் மாடசாமி.

அவன் பேசுவதையெல்லாம் ஆவென்று ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள் வசுமதி. இங்கிலீஷ் எழுத்துக்கள் தமிழ் செய்யுள்கள் என்னென்னவோ அவனும் நிறைய கற்றுக் கொடுத்தான். நாட்கள் வேகமாக கழிந்தன.

“உங்கள நான் அப்பான்னு கூப்பிடலாமா?” என்று ஒருநாள் வசுமதி கேட்டாள் அவனிடம்.

கண்களில் கண்ணீருடன், “கூப்பிடு தாயி, என்னைய நைனான்னு கூப்பிடு” என்றான் அவனும்.

வசுமதி பெரிய மனுஷி ஆனாள். அவள் வெளியே போவது தடை செய்யப்பட்டு விட்டது. மாடசாமியின் நினைவுகளும் உருவமும் அவள் மனதிலேயே தங்கிப் போயின. சில வருடங்களில் திருமணமாகி கணவன் வீட்டிற்கும் பயணப்பட்டு விட்டாள். 

சின்ன தேவர் பின்னர் எங்கிருந்தோ வந்து குடும்பத்துடன் சேர்ந்து கொண்டதாகவும் கேள்விப்பட்டாள். ஆனால் தான் சந்தித்த மாடசாமிதான் சின்ன தேவரா என்ற சந்தேகம்  அவளுக்கு கடைசி வரை  தெளியவில்லை.  

மாடசாமியின் உருவத்தை காகிதத்தில் வரைந்து இவர்தான் நம் குலசாமி என்று தன் குழந்தைகளிடம் சொல்லி வைத்தாள்.

காலப்போக்கில் கிராமம் நகரமாக மாறியது. குடிசை வீடும் பங்களாவாக மாறியது. ஹாலில் குலசாமியின் படம் மிக அழகாக வரையப்பட்டு பிரேம் செய்யப்பட்டு நடுநாயகமாக தொங்கியது.

வசுமதியின் கொள்ளுப் பேத்தி சீதா இப்போது அந்த வீட்டில் வசித்து வந்தாள்.

வருடம் 2022

“சவிதா, டிபன் பாக்ஸ் எடுத்துண்டியா?” சீதாபாட்டியின் குரல் உள்ளிருந்து ஒலித்தது.

“எஸ் பாட்டி நான் இன்னிக்கு என் ஃப்ரண்ட கூட்டிட்டு வரேன்”

ஹாலில் மாட்டி இருந்த குலசாமியின் படத்திற்கு கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினாள் சவிதா.

“இன்னிக்கு வேண்டாம் சவி. மாறன் மாமாவும் புவனா அத்தையும் சாயந்திரம் வர்றாங்க”

“யாரு பாட்டி அவங்க?”

“என்னோட அம்மா வழி தூரத்து சொந்தம். அவங்களும் வடக்கேதான் எங்கேயோ இருந்தாங்களாம். டில்லி பக்கத்துல போல. உங்க அப்பா தான் எப்படியோ அட்ரஸை கண்டுபிடிச்சு போன் நம்பரை வாங்கிட்டாரு. இப்போ இங்க கோயம்புத்தூருக்கு வந்துட்டாங்க. இன்னிக்கி சாயந்திரம் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க”

“சரி சரி பாட்டி” சவிதா துள்ளி ஓடினாள். கோவையில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவி அவள்.

பம்பாய் பெரிய நகரத்தில் வளர்ந்தாலும்  சவிதாவிற்கு  பாவாடை தாவணி தான் பிடித்திருந்தது.

பானிபூரிக்கு நோ… பாட்டியின் கைப்பக்குவத்திற்கு எஸ்.  அதற்கு மயங்கியே பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்து கல்லூரியில் சேர்ந்திருந்தாள் சவிதா. அழகான அமைதியானதொரு  வசீகரம் இருந்தது சவீதாவிடம்.

ரொம்ப புத்திசாலி, எல்லாவற்றிலும்  முதல் மார்க்  அப்படி எல்லாம்  எதுவுமில்லை.  சராசரி,  சுட்டியான பெண். எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்பாள். சிலவற்றில் பரிசு. பலவற்றில் தோல்வி. ஆனால் எதையும் பொருட்படுத்த மாட்டாள். பரோபகாரி. எல்லோருக்கும் தெரிந்தவள். 

ரெக்கார்ட் நோட் தூக்கிக் கொண்டு வருவதிலிருந்து கேன்டீனில் காபி வாங்கி வருவது வரை எல்லா வேலையையும் சவீதா உற்சாகத்துடன் செய்வாள். பெண்கள் கல்லூரி என்பதால் ஆண்களுக்கு அங்கே இடமில்லை. எல்லா பெண்களிடமும் நட்பும் அன்பும் பாராட்டுவாள்.

கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே பேராசிரியைகளுக்கு மிகவும் பிடித்தமானவளாக ஆகிப் போனாள் சவீதா. இப்படிப்பட்ட சவீதா இன்னொரு பெண்ணினால் ஆகர்ஷிக்கப்பட்டது அதிசயமே.

நேற்று கேண்டீனில் சந்தித்த அந்த பெண்ணின் ஞாபகம்   சவிதாவை தொடர்ந்தது.

காபி அருந்திக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். இதற்குமுன் அவளை அந்தக் கல்லூரியில் சவீதா பார்த்ததில்லை.

என்ன உயரம்!!  ஆறு அடிக்கு மேல் இருப்பாள் என்று நினைத்து பிரமித்து கொண்டிருந்தாள் சவீதா. அதற்கேற்ற உடல்வாகு. பெண்மையின் நளினத்தை விட ஒரு கம்பீரமே அவள் உடல் அழகில் தெரிந்தது.

அந்தப் பெண்ணை போல் நானும் அவ்வளவு உயரமாக இருந்தால் ஒரே ஜம்ப்பில் காலேஜுக்கே சென்று விடலாமோ? 

ஏனோ அந்தப் பெண்ணின் முகம் எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது சவிதாவிற்கு. நெருங்கி போய் பேசுவதற்குள் கல்லூரி மணி அடித்து விடவே அந்தப் பெண் பாதி குடித்துக் கொண்டிருந்த காப்பியையும் வைத்து விட்டு வேகமாக சென்று விட்டாள்.

முதல் வருட மாணவி என்று பார்த்தவுடன் தோன்றியது. ஆனால் அவளுடைய உயரத்தையும் ஆகிருதியையும் பார்த்தால் புதிதாக வந்திருக்கும் உடற்பயிற்சி ஆசிரியையோ என்ற சந்தேகம் சவீதாவிற்கு லேசாக ஏற்பட்டது.

இன்று சந்தித்தால் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் சவிதா. அவளைத்தான் இன்று வீட்டிற்கு அழைத்துப் போகலாம் என்று நினைத்திருந்தாள் சவீதா. ஆனால் பாட்டி, வேறு விருந்தினர் வருவதாக கூறியதால் அந்த எண்ணத்தை தள்ளிப் போட்டாள்.  யோசித்துக் கொண்டே கடைசியாக கல்லூரி பேருந்தை விட்டு  இறங்கினாள்.

மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி உடலமைப்பு என்று அந்தப் பெண்ணை பற்றி எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள் சவீதா.

“ஏதோ ஒரு பெண்ணிற்காக நாம் ஏன் இப்படி தவிக்கிறோம்? அந்தப் பெண் ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் தொடர்புடையவளோ?” சந்தேக கேள்விக்கணைகள் சவீதாவின் மனதில் சூழ்ந்தன.

“சீ  ஒரே பெண்ணாக பிறந்தது தப்பு. எனக்கு மட்டும் ஒரு அண்ணன் இருந்தால் இந்தப் பெண்ணை என் அண்ணியாக ஆக்கி கொள்ளலாமே”.

தன் எண்ணங்களின் போக்கை நினைத்து சவீதாவிற்கு சிரிப்பு வந்தது. மாலையில் சவீதாவிற்கு ஒரு இனிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.

மாலையில் மாறன் தம்பதியுடன் வந்த பெண்ணைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள் சவீதா. கேன்டீனில் பார்த்த அதே பெண். அவர்களும் உள்ளே வந்தவுடன் ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த குலசாமியின் ஓவியத்தைப் பார்த்து பிரமித்து நின்றனர்.

“இவுகள எப்படி தெரியும் உங்களுக்கு?” மாறன் வியப்புடன் வினவினார்.

“என்னோட அம்மாச்சி, கொள்ளுப்பாட்டி எல்லாரும் கும்பிட்ட குலசாமி இதுதான்” சீதா பதிலுரைத்தாள்.

“ஆனா இவரு எங்க முப்பாட்டனாரு. எங்க வீட்டில இவரு போட்டோவே இருக்குது” மாறன் கூறிய பதிலில் எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். 

அப்போது அந்தப் பெண் வேணி நிதானமாக பேசினாள்.

“இவரு சின்ன வயசுல இங்கிலீஷ்காரங்ககிட்டே இருந்து தப்பிக்கறத்துக்காக காட்டுக்குள்ள போயிட்டாரு. அப்போ உங்க எள்ளுப்பாட்டியை சின்ன பொண்ணா பார்த்து இருக்காரு.  என்னோட கொள்ளுப்பாட்டி கதை சொல்லி இருக்குது. பாடம் எல்லாம் சொல்லி கொடுத்தாராம். அப்புறம் அவங்க மீட் பண்ணவே இல்ல. ஆனா இந்த  எள்ளு தாத்தா ஒரு சின்ன பொண்ண பத்தி சொன்னது எங்க பாட்டிக்கெல்லாம் தெரியும். அந்தப் பொண்ணை பத்தி  ரொம்ப பெருமையா பேசுவாராம். இங்கிலீஷ் எழுத்து, தமிழ் பாட்டெல்லாம் இந்த தாத்தாகிட்ட அந்தப் பொண்ணு கத்துக்கிச்சாம். அவர தான் அப்பான்னு கூப்பிட்டுச்சாம் அந்த பொண்ணு. எங்க பாட்டி அவங்க அம்மா சொன்னதெல்லாம் எங்களுக்கு சொல்லி இருக்காங்க. என்னய பாருங்க, நான் அந்த தாத்தா ஜாடையில் தான் இருப்பேன்” என்று கூறி முடித்தாள்.

 “அட ஆமாம் அதே உயரம், இந்த தாத்தா மாதிரியே தான் ஜாடையில் இருக்க” என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள் சீதா.

“அப்போ இனிமே குலசாமி தாத்தா அப்படின்னு இவங்கள  சொல்லலாமா?”  என்று சவீதா சொல்லவும் சிரிப்பலை பொங்கியது அங்கே.

என்றோ போடப்பட்ட ஒரு புதிரின் முடிச்சு அவிழ்ந்தது அங்கே. கொள்ளுப்பாட்டி வசுமதிக்கு மாடசாமி யார் என்று இப்போது புரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் சீதா.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

  1. மிகவும் அற்புதமான கதை எழுதிய எழுத்தாளருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👏👏👏💐

  2. கதையில் வரும் வசுமதியாகவே
    நான் மாறியது போன்ற உணர்வு. புதிரின்விடை கதையின் உயிரோட்டம் அப்படி நினைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

  3. இக்கதை படிக்க ஆர்வமாக இருந்தது. தலைப்பிற்கேற்ப அருமையான நல்ல கதையாக உள்ளது👌. எழுதியவருக்கு வாழ்த்துகள் 💐 .

பிள்ளை மனம் (சிறுகதை) – ✍ பீஷ்மா

புஜ்ஜியின் புத்திசாலித்தனம் (சிறுவர் சிறுகதை) – ✍ மாலா ரமேஷ், சென்னை