in ,

புஜ்ஜியின் புத்திசாலித்தனம் (சிறுவர் சிறுகதை) – ✍ மாலா ரமேஷ், சென்னை

புஜ்ஜியின் புத்திசாலித்தனம் (சிறுவர் சிறுகதை)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காடு ஒரே அமர்க்களமாக இருந்தது… ஏன் தெரியுமா?

அன்று ஒரு பெரிய திருவிழா நடக்க இருந்தது. அதனை சிங்கராஜாவே தலைமையேற்று நடத்தப் போகிறார் என்பதால் எல்லோரும் ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 

குரங்கார் கடுவனின் வழிகாட்டுதலில் ஒரு குரங்குப்படை இங்குமங்கும் கிளைக்குக் கிளைதாவி காடு முழுவதும் தோரணம் கட்டிக் கொண்டிருந்தன.

யானை அண்ணா கஜா சொன்னபடி, அவருடைய யானைக் கூட்டம் வழியில் விழுந்து கிடந்த மரங்களையும், காய்ந்து போன மரக்கிளைகளையும் தும்பிக்கையால் தூக்கிச் சென்று  அப்புறப்படுத்தியதும்.

“அட…!!!” காட்டில் கரடு முரடாக இருந்த இடத்தில், ஒரு அழகான பாதை அமைந்தது.

காட்டின் மற்றொரு பகுதியில் நிறைய மூலிகைச் செடிகள் இருந்தன. அந்த  இடத்தில்  ஒரு வற்றாத காட்டாறு  சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த தண்ணீரின் குளிர்ச்சி யானைக் கூட்டத்துக்கு மிகவும் பிடிக்கும்.

யானைக் கூட்டத்திலிருந்த குட்டி யானை சந்துரு எப்போதும் தண்ணீரை விட்டு வெளியே வரவே வராது. அதில் ஆட்டம் போடுவது தான் அதற்கு மிகவும் பிடித்த விளையாட்டு. 

சந்துருவின் பெஸ்ட் ஃப்ரெண்ட் தான் புஜ்ஜி, அது ஒரு குட்டி முயல். புஜ்ஜியும் அதன் குடும்பமும் வேறு ஒரு காட்டிலிருந்து ஆறு மாதத்துக்கு முன்புதான் இங்கே வந்திருந்தார்கள். வந்ததிலிருந்து சந்துருவும் புஜ்ஜியும் ரொம்ப ஃப்ரெண்ட் ஆகி விட்டார்கள்.

இன்று காட்டில் திருவிழா என்பதால், சந்துருவைத் தவிர எல்லோரும் அவரவர் பங்குக்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.  அது மட்டும் வழக்கம் போல் தண்ணீரிலேயே ஆடிக் கொண்டிருந்தது.

மரக்கிளைகளையெல்லாம் அப்புறப்படுத்தி பாதை அமைத்த யானைக் கூட்டம் காட்டாற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு வந்து,  அந்த வழியில் பீய்ச்சியடித்து,  வழியை சரிப்படுத்தினார்கள்.  அப்போது அங்கே மான்களும் குட்டி முயல்களும் வந்தன. அதில் புஜ்ஜியும் இருந்தது.

“எங்களுக்கும் ஏதாவது வேலை கொடுங்கள், நாங்களும் செய்கிறோம்” என்று எல்லாம் சேர்ந்து கோரஸாக கூறின.

அப்போது மயிலக்கா வந்து,  நீங்கள் எல்லோரும் பூக்களைக் கொண்டு வந்து இந்தப் பாதையில் போடுங்கள் என்று சொன்னது.  உடனே மான்களும் முயல்களும் உற்சாகமாகத் தாவிக்குதித்தபடி ஓடிப்போய் பூக்களைச் சேகரிக்க ஆரம்பித்தன.

ஆனால், புஜ்ஜி மட்டும் கவலையாக இருந்தது.  “சந்துரு வரேன்னு சொன்னானே, இன்னும் காணுமே” என்று.

எல்லோரும் பூக்களை சேகரிப்பதில் பிசியாக இருக்க, புஜ்ஜி மட்டும் குதித்து குதித்து காட்டாற்றுக்குப் போனது.  எப்படியும் சந்துரு அங்கேதான் இருப்பான் என்று. ஆனால், அங்கே சந்துருவைக் காணவில்லை. 

அதனால் முடிந்த வரை தாவித்தாவி அவர்கள் விளையாடும் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தது. ஆனால், அவனைக் காணவில்லை.  ஏமாற்றத்திலும் கவலையிலும் புஜ்ஜிக்கு அழுகையாய் வந்தது. 

“காட்டில் இவ்வளவு பெரிய திருவிழா நடக்கிறது, ஜாலியாக ஆடலாம் என்று பார்த்தால், இவனைக் காணுமே”  என்று கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்தது. 

அப்போது சற்று தூரத்தில், யாரோ ஒரு வேட்டைக்காரன், சந்துருவை இம்சைப் படுத்தி இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தது புஜ்ஜி.

“பாவம் சந்துரு, அதோட தும்பிக்கையை சுருட்டிக் கட்டி விட்டார்கள். இதைப் பார்த்த புஜ்ஜிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னோட ஃப்ரெண்டாயாடா இழுத்துட்டுப் போறீங்க?  இருங்கடா உங்கள என்ன பண்றேன் பாரு“ என்று சொல்லிக் கோபமாகக் குதித்தது.  

பிறகு, ஒரு கணம் யோசித்தது.  “நான் ஒரு குட்டி முயலாக இருப்பதால், இவர்களோடு சண்டை போடப் போனால், என்னையும் அவர்கள் கறி சமைத்து சாப்பிட்டு விடுவார்கள், இவர்களை வேறு வழியில்தான் மடக்கவேண்டும்” என்று நினைத்தது. அதற்கு ஒரு யோசனை தோன்றியது.

புஜ்ஜி சின்ன முயலாக இருந்தாலும், ரொம்ப புத்திசாலி, தைரியசாலி.  அதனால், பயப்படாமல் நேராக சிங்கராஜாவின் குகைக்குப் போனது.

சிங்கராஜாவின் குகை கோலாகலமாக காணப்பட்டது.  நன்றாகக் குளித்து காய்ந்திருந்ததால், பிடறி முடி பொன்னிறத்தில் தகதகவென மின்னியது.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் சிங்கராஜா. 

அங்கே அவரை குஷிப்படுத்த குயில்கள் பாடிக் கொண்டிருந்தன.  அதற்கேற்ப மயில்கள் ஒயிலாக அசைந்து ஆடிக் கொண்டிருந்தன.  அப்போது குட்டி புஜ்ஜி குதித்து குதித்து உள்ளே போனது.

அதைப் பார்த்த குயில்கள் பாட்டை நிறுத்த, மயில்களும் ஆட்டத்தை நிறுத்தின.  

சிங்கராஜா,  “திடீர்னு இவங்களுக்கு என்ன ஆச்சு?” என்று பார்த்தது,  அங்கே ஒரு முயல், அதுவும் மிகவும் குட்டி முயல் வந்து அதன் முன்னால் நின்று கொண்டிருந்தது.  

புஜ்ஜி மிகவும் பணிவாக, “வணக்கம் சிங்கராஜா… என்னோட பேரு புஜ்ஜி, நான் உங்க காட்டோட தெற்குப் பகுதியில இருக்கேன்” என்று தைரியமாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டது.  உடனே சிங்கராஜாவுக்கு வியப்பு ஏற்பட்டது.

“இவ்வளவு குட்டி முயல், இங்கே என்னுடைய குகைக்கு, அதுவும் தனியாக வந்திருக்கிறது. கொஞ்சமும் அச்சப்படாமல் அறிமுகம் வேறு செய்து கொள்கிறது, பரவாயில்லையே. ஐ லைக் இட்” என்று நினைத்து சந்தோஷமாக…

“சொல்லு புஜ்ஜி, என்ன வேணும் உனக்கு? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உனக்கு பழங்கள் தரச் சொல்லவ?” என்றது சிங்கராஜா.

“வேண்டாம் ராஜா, இவ்வளவு பெரிய திருவிழா நடக்க இருக்கும்  நேரத்தில், நம்முடைய காட்டில் ஒரு அநியாயம் நடக்கிறது.  அதைச் சொல்லத்தான் ஓடி வந்தேன்”

“என்னது? நம்ம காட்டுல அநியாயமா?  என்ன சொல்ற புஜ்ஜி? தெளிவா சொல்லு”

“சிங்கராஜா, நீங்கதான் என்னோட ஃப்ரெண்ட் சந்துருவைக் காப்பாத்தணும் ப்ளீஸ்”

“யாரு சந்துரு? அவனுக்கு என்ன ஆச்சு சொல்லு”

“சந்துரு என்னை மாதிரியே ரொம்ப குட்டி யானை. நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். இன்னிக்கி காட்டுல திருவிழான்றதால எல்லாருமே அந்த வேலைல மூழ்கிட்டாங்க. இதான் சரியான நேரம்னு ஒரு வேட்டைக்காரன் வந்து, என் ஃப்ரெண்டை இழுத்துட்டுப்  போறான் ராஜா. நீங்க மட்டும்தான் அவனைக் காப்பாத்த முடியும், ப்ளீஸ் ராஜா. என் ஃப்ரெண்ட் சந்துருவைக் காப்பாத்துங்க” என்று தன்னுடைய இரண்டு முன்னங்கால்களையும் குவித்துக் கொண்டு கண்களில் கண்ணீரோடு கேட்டதும் சிங்கராஜாவுக்கு அந்த வேட்டைக்காரன் மேல் பெரும்கோபம் வந்தது. 

சிங்கராஜா குகையிலிருந்து வெளியே வந்து பெரிதாக கர்ஜித்தது.  அதைக் கேட்ட அனைத்து விலங்குகளும் எல்லா இடங்களிலிருந்து வேலையை விட்டுவிட்டு ஓடிவர, “போங்க, எல்லோரும் போங்க. எல்லாப் பக்கமும் போய் தேடி,  இந்தக் குட்டி முயல் புஜ்ஜியோட ஃப்ரெண்ட், குட்டி யானை சந்துருவை உடனே மீட்டுக் கூட்டிட்டு வாங்க ம் சீக்கிரம்” என்று உத்தரவு போட்டதும்,  எல்லா விலங்குகளும் சிதறி ஓடின. அடுத்த பத்தாவது நிமிடம் சந்துரு மீட்கப்பட்டு  அங்கே வந்தது. 

கட்டிப் போட்டிருந்த அதன் தும்பிக்கையை எலியார் கடித்து விடுவித்ததும், அது சந்தோஷமாக தலையை ஆட்டி, தும்பிக்கையை மேலும் கீழும் ஆட்டி, தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தது. 

உடனே, புஜ்ஜி ஓடிப்போய் அதன் மேல், தாவி ஏறிக் கொண்டது.  பின்னர் இருவரும் சேர்ந்து வந்து சிங்கராஜாவை வணங்கி நன்றி தெரிவித்தனர். எல்லோரும் சந்துரு கிடைத்த மகிழ்ச்சியில், இன்னும் உற்சாகமாகத் திருவிழாவுக்குத் தயாரானார்கள்.  

புஜ்ஜியின் சமயோசித புத்தியும், தைரியமும், தெளிவான முடிவும்தான் சரியான நேரத்தில் சந்துருவைக் காப்பாத்திச்சு இல்லையா ஃப்ரெண்ட்ஸ், அதனால, நாமும் அது போலத்தான் இருக்கணும்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

20 Comments

  1. மிகவும் நன்றாக இருந்தது உங்களது கதை எழுதி எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👏👏👏💐

  2. புஜ்ஜி கதை சூப்பரோ சூப்பர். பஜ்ஜி சாப்பிட்டது போல ஒரு feel. ஏன்னா பஜ்ஜி எல்லாருக்கும் பிடிக்கும் இல்லையா? அதனால புஜ்ஜி கதையும் பிடிக்கும். நன்றி மாலா ரமேஷ்.

  3. அனைவரும் ரசித்து, விரும்பத்தக்க, நட்புக்கு பெருமை சேர்க்கும் பஜ்ஜி கதை அருமை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

  4. அனைவரும் ரசித்து , விரும்பத்தக்க நட்புக்கு பெருமை சேர்க்கும் பஜ்ஜி, சந்துரு
    சிறுவர் கதை அருமை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்

  5. அனைவரும் ரசித்து, விரும்பத்தக்க நட்புக்கு பெருமை சேர்க்கும் புஜ்ஜி, சந்துரு
    சிறுவர் கதை அருமை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.👏👏

  6. அனைவரும் ரசித்து, விரும்பத்தக்க நட்புக்கு இலக்கணம் வகுக்கும் புஜ்ஜி, சந்துரு
    சிறுவர் கதை அருமை. எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.👏👏

  7. புஜ்ஜி….பெயரைப் பார்த்ததும் சிறுவர்கதை என்றுத் தெரிந்தாலும்
    பெரியவர்க்கான பாடமும் இருந்தது
    சிறப்பம்சம். விலங்குகளின் பெயர்கள் கனகச்சிதம் மற்றும் நகைச்சுவையாக சூட்டியிருந்தார் ஆசிரியர். மிக அருமை. வாழ்த்துக்கள்!!

  8. காட்சிகள் கண் முன் தெரிகின்றன. அருமையான கதை. வாழ்த்துக்கள்.

புதிரின் விடை (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன்

மனிதகுல மாணிக்கம் (சிறுவர் பாடல்) – ✍ வளர்கவி, கோவை