sahanamag.com
சிறுகதைகள்

பழனி என்கிற பழனிச்சாமி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்தக்  கிராமத்து ஆரம்பப் பாடசாலையில் பழனியோடு நட்பாய் இருந்தது நான் மட்டுமே. அங்கு நான்காம் வகுப்புப் படிக்கும் பத்துப் பேரில், நான் மட்டுமே அவன் பக்கத்தில் உட்காருவேன்.  மற்றவர்கள் பழனியோடு சேராமல் இருந்ததற்குக் காரணம் சாதியோ, மதமோ காரணமில்லை.  அந்த வயதில் அதெல்லாம் எங்களுக்குப் புரிந்ததும் இல்லை. 

பழனியிடமிருந்து எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் வேப்பெண்ணெய் வாசம்தான் (நாற்றம்?) எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தது. காலையில் பள்ளிக்கு கிளம்பி வரும்போது அவன் அம்மா, அவனுக்கு வேப்பெண்ணையை தலையில் வழிய வழிய அப்பி விட்டு விடுவார். 

அவன் இரண்டு மைல் நடந்து பள்ளி வருவதற்குள், அந்த வேப்பெண்ணெய் பழனியின் கிருதா வழியாக வழிந்து, காதின் பின்புறம் இறங்கி சட்டை காலரில் படிந்துவிடும்.  மாலை பள்ளி விடும் வரை அந்த வாசம் அவன் எங்கு சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

இதையெல்லாம் மீறி, கட்டையான உருவமும், உள்ளடங்கிய சிறுத்த கண்களும், சற்றுப் பெரிதான உருண்ட தலையும், எதையும் சட்டென புரிந்து கொள்ளாத மந்த புத்தியும், தட்டையான சப்பை மூக்கும் கொண்ட அவனுடன் நான் ஏன் தேடிச் சென்று நட்பு பாராட்டினேன் என்றால் அதற்குக் காரணம் ஏட்டிக்குப் போட்டியான என் பிறவிக் குணம்தான். 

பிறப்பிலிருந்தே என்னிடம் உள்ள குணம் அது.  அதாவது பெரும்பான்மையானவர்கள் விரும்பாதது, எனக்குப் பிடிக்கும்.  உதாரணத்திற்கு, எங்கள் வீட்டில் உப்புமா யாருக்கும் பிடிக்காது.  எனக்கோ ரொம்பப் பிடிக்கும்.  இதே குணம்தான் பழனியை எனக்குப் பிடித்ததற்கு காரணமாய் இருக்கலாம்.  அவனது அறியாமையும், வெகுளித்தன்மையும் கூட மற்றுமொரு காரணமாக இருக்கலாம்.

எங்கள் வகுப்பாசிரியர் ஒரு முறை, ‘பழனி’ என்று உரக்க கூப்பிட்ட போது பள்ளியில் இருந்த‌ இரண்டு மூன்று பழனிகள் அவரைச் சூழ்ந்து கொண்டதைக் கண்டு, அரண்டு போய், மீண்டும் அந்த நிலைமை வரக் கூடாது என்று எங்கள் வகுப்புப் பழனிக்கு அவனின் சப்பை மூக்கையும், சிறிய கண்களையும் பார்த்து  ‘ஜப்பான் பழனி’ என்று பெயர் சூட்டிவிட்டார். 

அது முதல் என்னைத் தவிர, எல்லோரும் பழனியை ‘டேய் ஜப்பான் ‘ என்றே கூப்பிடத் தொடங்கினர்.  அவனும் வழக்கம் போல, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் உண்டு தன் வேப்பெண்ணெய் உண்டு என்று இருந்தான்.

என்னை அவன் அழைக்கும் விதமே வேடிக்கையாய் இருக்கும்.  வீட்டில் ‘பாசு’ என்றும், நண்பர்கள் ‘பாஸ்கர்’ என்றும் அழைக்கும் என்னை பழனி மாத்திரம் நீட்டி முழக்கி, ‘பாஸ்கரூ ‘ என்றழைப்பான். ஒரு நாள் காலை பள்ளி இடைவேளையின் போது, ‘பாஸ்கரூ, இங்கே வா ‘ என்று தனியாக அழைத்துச் சென்றான். 

அழுக்கடைந்த, கிழிந்து நூல்கள் தொங்கிக் கொண்டிருந்த அரைக்கால் டவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு காய்ந்த புளியங்காயை எடுத்துக் கொடுத்து, ‘ இது இனிக்கும் புளி… நல்லாருக்கும் சாப்பிடு’ என்றான்.  நான் யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்,

‘இரு நானே உரிச்சுத் தர்ரேன்’ என்று கூறி மெதுவாக, காய்ந்த அந்த புளியங்காயின் மேல் ஓட்டை பக்குவமாக உடைத்து, உள்ளே ஒட்டிக்கிடந்த‌ நார்ப்பகுதியை அழகாகப் பிரித்து, நசுக்காமல் மென்மையாக புளியம்பழத்தைப் பிளந்து உள்ளே உள்ள கொட்டைகளைக் கீழே வீசிவிட்டு, புளியங்காயை என் கையில் கொடுத்தான். 

வேண்டா வெறுப்பாக வாயில் வைத்தவுடன் தான் தெரிந்தது அதன் இனிப்புச் சுவை.  முழுவதும் தின்று முடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பழனி சொன்னான், ‘தினமும் கொண்டு வர்ரேன்’.

பலநாள் அவன் புளியங்காயைச் சாப்பிட்ட நன்றி உணர்ச்சியில் ஒரு நாள் நான் பழனியிடம் கேட்டேன், ‘உனக்கு என்ன பிடிக்கும்? நான் கொண்டு வர்ரேன்’.

உடன் பதில் வந்தது, ‘தேன் மிட்டாய்’.  நீண்ட நாள் ஏக்கமாக இருக்கும். கிராமத்துப் பெட்டிக் கடைகளில் கிடைக்கும் தேன் மிட்டாயை வாங்க அவனிடம் காசு இல்லை போலும்.

‘நாளைக்கு நான் வாங்கி வருகிறேன்.. சரியா?’

கண்ணில் ஒளியுடன் தன் உருண்டையான தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான் பழனி.

அந்த நான்காம் வகுப்பு முடிய ஒரு மாதம் இருக்கையில் ஒரு நாள் பழனி என்னிடம் சொன்னான், ‘பாஸ்கரூ.. இந்த வருசத்தோட நான் இங்கே சரி.  அஞ்சாம் வகுப்பு படிக்க‌ மெட்ராஸ் போறேன்.    அங்கே என் போலீஸ் சித்தப்பா இருக்காரு.  அவரு என்னைப் படிக்க வைப்பாராம். எங்கப்பன் சொன்னாரு’.              

சொன்னதைப் போலவே ஐந்தாம் வகுப்புக்கு அவன் வரவில்லை.  அதற்குப் பிறகு பழனி என் வாழ்க்கையில் வரவே இல்லை. நாவலில் படித்த ஒரு கதாபாத்திரமாக, மங்கலாக எப்போதாவது மனதில் நிழலாடுவதுண்டு. காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. 

பல உயிர்களைப் பிறப்பித்தும், அவர்களைத் தன்னுள் விழுங்கியும் ஓடிக் கொண்டிருந்தது.  அடித்துப் பிடித்து, பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே அப்பனால் என்னைப் படிக்க வைக்க முடிந்தது.  பிறகு நான் பிழைப்புக்காக பரம்பரைத் தொழிலான விவசாயத் தொழிலில் முழு மூச்சாக இறங்க வேண்டி வந்தது. 

அக்காவின் கல்யாணத்திற்குப் பிறகு அப்பன் தன் வயதை உத்தேசித்து, நிலத்தை அண்ணனுக்கும், எனக்கும் பிரித்துக் கொடுக்க நினைத்தார்.  அந்தத் தகவல் தெரிந்ததும், அக்கா தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் விட்டாள்.

வீண் சண்டையை விரும்பாத அப்பன், தன் ஆறு ஏக்கர் நிலத்தை அக்கா, அண்ணன், எனக்கு மற்றும் அவருக்கு என்றும் நான்காகப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒன்றரை ஏக்கரைக் கிரயம் செய்து வைத்து விட்டார். 

கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தைகளும் பிறந்த பிறகு, இந்த ஒன்றரை ஏக்கரில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது எனக்கு மிகச் சிரமமாகவே இருந்தது.    விவசாயச் செலவுக்குக் கூட அருகிலுள்ள கிராமிய வங்கியில் பயிர்க்கடன் வாங்கியே பயிர் செய்யும் நிலைமை.

பலமுறை கிராமிய வங்கிக்கு  நடந்து, பல பேப்பர்களை எழுத்தால் நிரப்பி, கேட்ட இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டு, பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிர பாக்கிச் சொத்துக்களையெல்லாம் அடமானம் வைத்து கடன் வாங்கி பயிர் செய்திருந்த பருத்தி, நோயில் விழுந்து கருகி, அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருவாயைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. 

போதாததற்கு,  வங்கியில் இருந்து வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் கட்டாததற்குக் காரணம் கேட்டு நோட்டீசும் வந்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், பக்கத்துத் தோட்டத்துப் பரமசிவனிடம் யோசனை கேட்டதற்கு அவன் ஒரு வழி சொன்னான்.

‘பாஸ்கரா.. நீ நேராக பேங்க்குக்குப் போய் நிலைமையை விளக்கிச் சொல். அவர்களே ஏதாவது யோசனை சொல்வார்கள். நீ போகலேன்னா, மூன்று நோட்டீஸ் கொடுத்திட்டு ஜப்திக்கு வந்திருவானுங்க. ஊருக்குள்ள நம்ம மானம் கெட்டுப் போகும்’.

அவன் கூறியது சரியாகப் படவே, அடுத்த நாள் காலை பேங்க்குக்குப் போய்  ஏதாவது முயற்சி செய்ய முடிவெடுத்தான்.

அடுத்த நாள் காலை அந்த வங்கிக்குள் நான் நுழைந்தபோது வங்கி பிசியாக இயங்கிக் கொண்டிருந்தது.  கடைசியாக லோன் வாங்கும் போது வந்தது.  மடிப்புக் கலையாத உடையுடன், மின்விசிறிக்கு அடியில் சொகுசுச் சேரில் உட்கார்ந்து வேலை செய்யும் அவர்களைக் பார்க்கும் போது பொறாமையாக இருந்தது.

நம் அப்பனும் இன்னும் கொஞ்சம் படிக்க வைத்திருந்தால், நாமும் உடம்பில் மண் படாமல் இப்படி சொகுசாகக் காலம் தள்ளியிருக்கலாமோ? இதெல்லாம் விதி என்று படைத்தவனை நொந்து கொண்டு, லோன் சாங்சன் செய்யும் கிளர்க்கிடம் சென்று எனக்கு வந்திருந்த நோட்டீசை நீட்டினேன்.

‘நோட்டீஸ் வந்தாத்தான் வருவீங்களோ?’ என்று கோபப்பட்டார் அவர்.  நான் அவரிடம் விளையாமலே காய்ந்து குச்சியாய் நிற்கும் பருத்தியின் கதையை சொல்லி முடிப்பதற்கு முன், கிளர்க் பொறுமையில்லாமல் சொன்னார், ‘புதிதாக வந்திருக்கிற மேனேஜர்தான் வட்டி கூட கட்டாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பச் சொன்னார். நீங்க ஏதாவது பேச நினைத்தால் அவரிடம் போய் பேசுங்க’. 

இடத்தைக் காலி பண்ணய்யா என்று சொல்லாமல் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு மேனேஜர் ரூமை நோக்கிப் போனேன்.

‘எம்.பழனிச்சாமி  எம்.காம்.’ என்று பெயர்ப்பலகை வைத்திருந்த மானேஜரின் அறைக் கதவைத் திறந்தவுடன் ஜில்லென்று ஏ.சி. காற்று என் முகத்தை அறைந்தது.  நீண்ட மேஜைக்குப் பின்னால், குஷன் நாற்காலியில் புதைந்து உட்கார்ந்து இருந்தவர்தான் மேனேஜராக இருக்க வேண்டும்.  கோட்டும், டையும் அவர் ஒரு உயர் அதிகாரி என்று பறை சாற்றியது. 

நோட்டீசை வாங்கிப் படித்துவிட்டு என்னை உற்று நோக்கினார் அந்த புதிய மானேஜர்.  அந்தச் சிறு கண்களும், உருண்ட தலையும், சப்பை மூக்கும் எனது நினைவலைகளை சிலுப்பி விட்டது. அதற்குள் அந்த உருவம், ‘பாஸ்கரூ’ என்று கூவி எழுந்தவுடன் எனக்கும் தெரிந்துவிட்டது அது ஜப்பான் பழனியென்று. 

கையைப் பிடித்துக் கொண்டு, ‘எப்படி இருக்கே பாஸ்கரூ? எத்தனை வருசத்துக்கப்பறம் பார்க்கிறோம்?’ என்று உணர்ச்சி வசப்பட்ட பழனி, நான் பார்த்த பழைய பழனியாகவே இல்லை.  முடியை படிய வாரி, அதிக எண்ணெய் போடாமல் (முக்கியமாக வேப்பெண்ணெய் போடாமல்) ட்ரிம் செய்யப்பட்ட மீசையுடன் இருந்தான்(ர்?). பியூனை அழைத்து காபி வாங்கி வர அனுப்பிவிட்டு, காபி வருவதற்குள் தன் கதையைக் கூறி முடித்து விட்டான் பழனி. 

மெட்ராஸ் சித்தப்பா அவனை எம்.காம். வரை படிக்க வைத்ததுடன், வங்கிக்கான தேர்வுகளையெல்லாம் எழுத வைத்து இந்த பேங்கில் கிளர்க்காக சேர்த்து விட்டு விட்டார்.  பல ஊர்களில் பணி புரிந்து, மேனேஜராகப் பதவி உயர்வு பெற்று தன் சொந்த ஊருக்கு அருகில் உள்ள இந்த வங்கிக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது. 

காபியைக் குடித்து முடிப்பதற்குள் நான் என் சோக சுயசரிதையைச் சொல்லி முடித்து விட்டேன்.  திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவன் போல பழனி கேட்டான்,’தேன் மிட்டாய் கொண்டு வந்திருக்கிறாயா?’

நானும் பட்டென்று கேட்டேன், ‘நீ புளியங்காய் கொண்டு வந்திருக்கிறாயா?’.

சிரிப்பை அடக்க முடியாமல் இருவரும் சிரித்து விட்டோம். எங்களின் மனம் அந்த குளிரூட்டப்பட்ட சொகுசான அறையிலிருந்து விலகி, ஓடு போட்ட,  காற்றோட்டமில்லாத பள்ளியில், அரைக்கால் டவுசருடன் உட்கார்ந்திருந்த காலத்திற்கு ஓடியது.  காலம் அப்படியே இருந்திருக்கக் கூடாதா? 

என்னை பழனியின் முன்பு இன்று நின்று யாசிக்கும் நிலையில் உட்கார வைத்துவிட்டதே? லோன் செக்சன் கிளர்க்கை வரவழைத்து எனக்கு அனுப்பியிருந்த நோட்டீசை கான்சல் செய்யச் சொன்னான்.   அடுத்து அவன் கிளர்க்கிடம் சொன்னதுதான் ஹைலைட்.

‘இவர் கட்ட வேண்டிய தொகையை நான் கொடுத்து விடுகிறேன். இனி நோட்டீஸ் அனுப்ப வேண்டாம்’.

என்னைப் பார்த்து பழனி சொன்னான், ‘இனி ஏதாவ்து உதவி தேவைப்பட்டால் எங்கிட்ட வா.  நான் கொடுக்கிறேன்.  நாங்க உங்ககிட்ட கை நீட்டி எத்தனை வாங்கியிருப்போம்?’

அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் எதார்த்தமாக வந்ததாகத் தெரியவில்லை.  கொஞ்சம் குத்தல் கலந்திருந்தது.  ஒருவேளை அது என் கற்பனையோ என்றும் தோன்றியது.

அதற்குள் இரண்டு மூன்று பேர் அவனைப் பார்ப்பதற்காக கதவைத் திறந்து மூடுவதைக் கண்டதும் நான் எழுந்தேன்.

‘வரட்டுமா பழனி? ‘. செல்வதற்குக் கதவு வரை வந்தவனை பழனி கூப்பிட்டான்.

‘பாஸ்கரூ, இதைப் படி’  அவன் கை அவன் டேபிள் மேல் வைக்கப் பட்டிருந்த அவனின் பெயர் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை நோக்கி நீண்டிருந்தது.

‘பழனிச்சாமி’ என்று நான் படித்தேன்.

‘இன்னொருமுறை படி’ என்றான்.  எதற்கு சிறு பையனைப் போல் நடந்து கொள்கிறான் என்று தெரியாமல் மீண்டும் படித்தேன்.

‘பழனிச்சாமி….’

‘கடைசி இரண்டு எழுத்தை மாத்திரம் உரக்கப் படி’ என்றான்.

‘சாமி’ என்று படித்தவுடன் பழனியின் முகம் தாமரை மலர்வதைப் போல் மலர்ந்தது. 

‘முன்னாடி நாங்கெல்லாம் இப்படித்தானே கூப்பிடுவோம்’ என்று கூறிய பழனியின் முகத்தைப் பார்த்தேன்.  அது நான் விரும்பிய கள்ளமில்லாத, வெகுளித்தனமான‌  பழனியின் முகமாகத் தெரியவில்லை.  காலமும்,இந்த சமுதாயமும் அவன் மனதில் ஏதோ காயத்தை ஏற்படுத்தி ஒரு சாயத்தைப் பூசியிருப்பது தெரிந்தது.  மொத்தத்தில் என் மனதில் இருந்த பழனி காணாமல் போய் ஒரு புதிய பழனிச்சாமி வந்து உட்கார்ந்தான்(ர்?).      

அடுத்த நாள் அந்த வங்கி கிளர்க்கின் முன் நின்றிருந்தேன்.  பருத்திப் பயிருக்கு வாங்கியிருந்த அசல் மற்றும் வட்டியுடன் நான் அடைத்திருந்த ரசீதைப் பார்த்து திகைத்துப் போய் கேட்டார், ‘உங்க கடனைத்தான் மேனேஜரே கட்டி விடுவதாகச் சொன்னாரே? நீங்க ஏன் கட்டுனீங்க?’

அவரைப் பார்த்து மென்மையாகவும், மெதுவாகவும் சொன்னேன், ‘அய்யா.. எங்களைப் போல விவசாயிகளுக்கு பரம்பரையாக ஒரு குணம் உண்டு.  நாங்க உங்களுக்கெல்லாம் உணவு தானியமும், காய்கறிகளும் விளைவித்துக் கொடுப்போம். கொடுத்தே பழக்கப்பட்ட எங்களுக்கு, எத்தனை ஏழ்மையிலும் கையேந்தி மற்றவர்களிடம் வாங்கப் பிடிப்பதில்லை.  அதன் விளைவுதான் அதிகமாக நாட்டில் நடக்கும் விவசாயிகளின் தற்கொலை.  சரி அதையெல்லாம் விடுங்க .. நன்றி.. வரேன்’.

கடைவீதியில்  நடந்து கொண்டிருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது…மனைவிக்கு இரண்டு கவரிங் வளையல் வாங்கிச் செல்ல வேண்டும் என்பது.

விக்ரமாதித்யன் தோளில் தொங்கியபடி வேதாளம் சொன்னது, ‘நான் கூறிய கதையில், பழனி தன் முன்னோர்களுக்கு என்றோ ஏற்பட்ட அவமானங்களுக்குப் பதிலாக பாஸ்கரிடம் தற்போது நடந்து கொண்ட விதமும், பாஸ்கர் தன் பால்ய கால நண்பன் அளித்த சலுகையைக் கூட ஏற்காமல் அதை நிராகரித்த  ரோசமான செயலும் சரியானவையா?  இதற்கு சரியான பதில் கூறாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்’.

விக்கிரமாதித்யன் பதில் கூறினான், ‘காலம் காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த வர்க்கத்தின் ஒரு பிரதிநிதி, தளையிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தைக் கொண்டாடுவது ஒரு குற்றமல்ல.  பழனியின் செயல் அப்படிப்பட்டதுதான். அதேபோல், யாருக்கும் அடிமைப் பட்டுக் கிடக்காமல் சுதந்திர எஜமானாக இருக்கும் விவசாயிகளின் ஒரே சொத்து சுயமரியாதைதான்.  அதற்குப் பங்கம் வரும்போது பொங்கி எழுவது அவர்கள் இயல்பு.  அந்த விதத்தில் மனைவியின் வளையலை விற்று கடனை அடைத்த பாஸ்கரின் செயலும் சரியானதுதான்’.

‘அடப்போப்பா… எப்போதும் நீ இப்படித்தான்குழப்புவாய்’ என்று சலித்துக் கொண்ட வேதாளம், விக்கிரமாதித்யன் தோளிலிருந்து கிளம்பி, அருகிலிருந்த முருங்கை மரத்தில் ஏறி, மீண்டும் தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது.

(முற்றும்)

Similar Posts

One thought on “பழனி என்கிற பழனிச்சாமி (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு
  1. மிகவும் அருமையான கதை 💐எழுதி எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிகவும் ஊக்கம் கொடுக்கக்கூடிய சிறுகதை👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!