டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இடத்தை தக்கவைத்தல்
அவ்வளவு எளிதல்ல…
அறையில் ஊதுபத்தி
எரிந்து முடிந்து
பத்து நிமிஷமாகிறது…
இப்போதும்
தன் இருப்பை
இனம் காட்டிக் கொள்கிறது
அது …
ஜன்னல் வழி வீசிய
சாயம் போன துண்டுகள்
ரெயிலில் பஸ்ஸில்
ஏராள ஏராளமாய்…
சில இடம்மாறுகின்றன
சில அத்தாட்சியற்று
எங்கோ வீசப்படுகின்றன…
வசவுகள்
உக்கிரப்பார்வைகள்
நற நறக்கும் பற்களில்
ஆக்ரோஷம்…
விஷம்.
விஷப்பிராண்டல்…
பிச்சைகாரர்கள்
பற்றி சொல்ல வேண்டாம்
புது வரவுக்கு
ஒருக்காலும்
அனுமதியில்லை….
ஆளுகைகள்
ஆர்ப்பாட்டங்கள்
அத்துமீறல்கள்….
இடத்தை தக்க வைத்தல்
அவ்வளவு எளிதல்ல ….
நாலு பிணங்கள்
சேர்ந்து விழுந்தால்
இடுகாட்டில் தர்க்கம்
குதர்க்கம்
தள்ளு முள்ளுகள் ….
முகங்களில் லேசாய்
இருக்கிறது போல்
தெரிகிறது இடங்கள்…
சொல் நகர்வில்
புன்னகை நகர்வில்
உள்ள நகர்வில் ….
இடங்கள் முக்கியமானவை
இடங்களுக்கு
ஒரு உத்தரவாதமும்
இல்லை….
சொல்மாறும்
புன்னகை மாறும்
உள்ளம் மாறும்
பிடித்தது பிடிக்காமல் போகிறது
பிடிக்காதது பிடிக்கிறது ….
பருக்கையொன்றை
பங்கு போட-
வந்த பயந்தேறி அணில்
வேடிக்கை பார்த்த
காகத்திற்கு
முதுகுப்புறம் காட்டுகிறது …
காகம்
கண்டும் காணாதது
போல் பராக்கு
இடுகிறது ….
பிறகு நகர்கிறது
மரக்கிளையினின்று
வேவு பார்க்கிறது….
அணில் தையர்யமாய்
வருகிறது
ஒவ்வொரு பருக்கைக்கும்
நாலடி தள்ளி
ஓடி திரும்புகிறது….
நெஞ்சம் அடித்து
கொள்வது
துடிதுடிப்பது
ரசனைக்குரியதாகிறது
காகத்திற்கு
புன்னகையூடே பறக்கிறது ….
கொய்யாவை வெறியாய்
கொறித்து
வன்மம் தீர்த்து கொள்கிறது
அணில் என்றால்
நம்ப கஷ்டமாகத்தான்
இருக்கும்.
நன்றாக இருந்தது உங்கள் வரிகள் எழுதி எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்👌👏👏👏💐