in ,

என்ன நடக்கிறது வங்கியில்! (சிறுகதை) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“காலைல 11 மணிக்கு வந்தேன். மணி இப்போ 1 ஆகுது. இன்னும் உக்கார வெச்சிட்டே இருக்காங்க.. இந்த பேங்க்குக்கு வந்தாலே இப்படி தான் பொழுதே போய்டும். வேலை மட்டும் ஆகாது” வாடிக்கையாளர் ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தது அப்பொழுது வந்த ராஜுவின் காதில் விழுந்தது.

ராஜுவின் மனைவி வித்யா அந்த வங்கியில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவ்வப்போது ராஜு இங்கு வருவதுண்டு. அவர்கள் மகள் கீர்த்தன்யா சாப்பிட அடம் பிடித்ததால் சாப்பிட்டு முடித்ததும் அம்மாவிடம் கூட்டிச் செல்கிறேன் என்று கூறியிருந்த ராஜு அவளை சாப்பிட வைத்து அழைத்து வந்தான்.

ஐ.டியில் பணிபுரியும் ராஜுவிற்கும் இன்று விடுமுறை என்பதால் சிறிது நேரம் வங்கியில் செலவழித்து விட்டுச் செல்ல வந்தான். இப்படி அவன் வரும்பொழுது யாராவது உதவி கேட்டாலோ அல்லது படிவம் நிரப்பித் தரச் சொன்னாலோ அவர்களுக்கு உதவுவான்.

ராஜு அந்த பெரியவரின் புலம்பலை கேட்டு அவர் அருகே வந்தான்.

“நீங்க என்ன வேலையா வந்திங்க ஐயா”

“நகை கடன் கேட்டு வந்தேன்”

“என்ன சொன்னாங்க”

“டோக்கன் குடுத்து உக்கார சொன்னாங்க தம்பி”

“அப்புறம்”

“டோக்கன் நம்பர் வந்ததும் போனா.. நகையும் பேங்க் புக்கும் வாங்கிட்டு உக்கார சொல்றாங்க.. எவ்ளோ நேரம் தான் உக்காரது.. கிட்டப் போய் கேட்டா நாங்களே கூப்பட்றோம் உக்காருங்கன்னு சொல்றாங்க”

“நீங்க என்ன வேலை பண்றிங்க ஐயா”

“நான் ஹோட்டல் நடத்துறேன் தம்பி.. கொஞ்சம் கடைய பெருசு பண்லாம்னு நகைய வெச்சு கடன் வாங்க வந்தா… அவங்க பணத்த கேக்கற மாதிரி அலய விட்றங்க.. நேத்து வந்து கேட்டதுக்கு இன்னிக்கு வான்னு சொன்னாங்க.. இன்னிக்கி வந்தா காலைல இருந்து உக்கார்ந்தே இருக்கேன் பணத்தை தர மாட்டிக்கிறாங்க”

அமைதியாக இருந்தான் ராஜு. தன் மகள் கீர்த்தனாயாவிடம் விளையாடிக் கொண்டிருந்தான்.

“ஏன் தம்பி நான் சொன்னது சரிதான”

“ஐயா உங்க கடைக்கு ஒட்டுக்கா இருபது முப்பது பேர் வந்துட்டா.. நீங்க மொதல்ல யாருக்கு சாப்பாடு போடுவிங்க”

“மொதல்ல வந்தவனுக்கு தான்”

“அப்போ முப்பதாவதா வந்தவன் அவங்க எப்பவும் இப்படித்தான் காக்க வெப்பாங்கன்னு சொன்னா அதுல அர்த்தம் இருக்கா”

“அதும் இதும் ஒண்ணா கண்ணு.. இங்க வேலை நடக்கிற மாதிரியே தெரிலயே.. நகைய வாங்கிட்டு பணத்தை எடுத்து குடுக்க வேண்டியது தான”

“இவங்களுக்கு கோல்ட் அப்பறய்ஸர்ன்னு ஒருத்தர் இருப்பாங்க.. நீங்க குடுக்கிற நகை தங்கமான்னு சரி பார்க்கணும். உங்களுக்கு முன்னாடி வந்தவங்களுது பாத்துட்டு சரியா இருக்கானு செக் பண்ணிட்டு அவங்களுக்கு குடுத்துட்டு அப்புறம் உங்களுது பாத்துட்டு உங்க கணக்குல அத ஏத்திட்டு கொடுக்கணும். ஒருத்தர் பதிவு பண்ணனும். மேனேஜர் அத சரி பாக்கணும். இந்த வேலை முடிச்சுட்டு அவங்களா குடுப்பாங்க”

“நேத்து வந்ததுக்கு இன்னிக்கு வர சொல்லிட்டாங்க தம்பி”

“நகைக்கடன் போட அவங்களுக்கு ஒரு சாப்ட்வேர் இருக்கு. அதுல தான் போடணும். நேத்து அது ஒர்க் ஆகலன்னு போகச் சொல்லிட்டாங்க”

“என்னவோப்பா.. பத்து நிமிஷ வேலையாம். அதுக்கு இப்படி நாள் முழுக்க உக்கார வைக்கறாங்க”

“லோன் வாங்கிற கஸ்டமர்ஸ்லாம் அவங்களுக்கு ரொம்ப முக்கியம். அவங்கள காரணம் இல்லாம உதாசினம் படுத்த மாட்டாங்க”

“அங்க பாரு.. அந்த கவுண்டர்ல இருக்க தம்பி எவ்ளோ சிடுசிடுன்னு உக்கார்ந்துக்காருன்னு”

“ஒரு சந்தேகம் ஐயா. வெறும் கொழம்பு கட்டித் தாங்கன்னா நீங்க என்ன சொல்லுவீங்க”

“நாங்க அப்படி குடுக்கிறது இல்லப்பா.. பரோட்டா வாங்கணும் அப்போதான் குழம்பு.. பக்கத்து கடைல குருமா மட்டும் தருவாங்க அங்க போ சொல்லுவேன்”

“வித்தா காசு நேரடியா உங்களுக்குத் தான்.. நீங்களே குழம்பு தனியா கேட்டா கோவப் படுவீங்க.. இல்லன்னு சொல்லுவீங்க.. உங்களாலயும் எல்லா நேரமும் சிரிச்ச மாதிரி இருக்க முடியாது. கோவம் வரும் கூட்டத்தப் பார்த்து பதட்டமாகும். எது பண்ண முடியுமோ அதுதான் பண்ண முடியும்”

“சரிதான்ப்பா வெளில அப்படித்தான்ப்பா பேசிக்கிறாங்க.. சும்மாவே இருக்காங்க எந்த வேலையும் செய்யாம.. வேலைனு போய் நின்னா காக்க வெக்குறாங்க”

“இங்க எல்லாரும் கம்ப்யூட்டரதான் பாக்குறாங்க.. அவங்க கம்ப்யூட்டர்ல பேங்க் சம்பந்தப்பட்டது தவிர வேற எதும் வராது. அவங்களால என்ன பண்ண முடியும். அப்போ அவங்க பேங்க் வேலை தான் பாக்குறாங்க. பணம் போடறது எடுக்குறதுலாம் பொறுமையா பண்ண வேண்டிய விஷயம். அப்புறம் அவசரப்பட்டா எப்படி. ஒருதடவை கம்ப்யூட்டர் ஆஃப் ஆயிட்டா திரும்ப அவங்க சாப்ட்வேர் உள்ள போக கால் மணி நேரம் ஆகும்.. அவ்ளோ பொறுமையா எல்லாம் செக் பண்ணித்தான் எடுக்கும். கஷ்டம் நிறைய இருக்கு. இப்போவும் கூட்டம் கம்மியா இருக்க பேங்க்கு போனா உடனே உடனே வேலை செஞ்சி குடுக்குறாங்க”

இருவரும் பேசிகொண்டிருக்கும் பொழுது அந்த பெரியவரை அழைக்க அவரும் கவுண்டருக்குச் சென்று பணத்தை வாங்கிக் கொண்டு வந்தார்.

கிளம்பும் பொழுது ராஜுவைப் பார்த்து ஒரு முழுமையான சிரிப்பை தந்துவிட்டு போனார்.

ராஜுவின் அருகில் இன்னொரு நடுத்தர வயது பெண் வந்தார்.

“ரொம்ப தூரத்துல இருந்து வரேன் கண்ணு.. காசு எடுத்து தர சொன்னா ஆதார் கார்டு கேக்கறாங்க”

“நீங்க ரொம்ப நாளா வரவு செலவு வெச்சிக்லல்ல அதனால கேக்கறாங்க மா”

“கொண்டு வரலையே பா.. மறுபடியும் ஊருக்குல போனும்”

“வீட்ல யாரவது இருந்தா போட்டோ அனுப்ப சொல்லுங்கமா.. இங்க பிரிண்ட் போட்டுக்கலாம்”

“யாரும் இல்லையேப்பா… பையனும் பள்ளிகூடம் போய்ட்டான்”

“கட்டாயம் ஜெராக்ஸ் வேணுமே மா.. இன்னிக்கு போய்ட்டு நாளைக்கு கொண்டு வாங்க செஞ்சி குடுப்பாங்க”

அந்த பெண்மணி தலையை ஆட்டி விட்டு கிளம்பினாள். அப்பொழுது வித்யா சாப்பிட எழுந்தாள். அவளுக்கு முன் நின்ற ஒருவர் தனக்குப் பணம் கொடுத்துவிட்டு சாப்பிடச் செல்லுமாறு வித்யாவிடம் கேட்டுக்கொண்டார். வித்யாவும் அவருடைய கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொடுத்தாள்.

காலையில் நேரமின்மையால் சாப்பிடாமல் வந்த மனைவி மதிய உணவு உண்ண முடியாமல் வேலை பார்ப்பதை கண்டு மனம் கலங்கினான் ராஜு.

இருபது நிமிடங்கள் கழித்து உணவு உண்ணச் சென்ற வித்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ.. சொல்லு வித்யா”

“பேங்க்லயா இருக்கிங்க.. இல்லை கிளம்பிட்டிங்களா”

“இங்கதான் இருக்கேன். சொல்லு வித்யா”

“சட்னி கெட்டுருச்சு.. எதாவது ஸ்னாக்ஸ் வாங்கி குடுத்துட்டு போறிங்களா”

“எட்டு மணிக்கு செஞ்ச சட்னி மூணு மணிக்கு நல்லாருக்குமா.. சரி வெளிய வரியா.. அஞ்சு நிமிஷத்துல சாப்பிட்டு போயிரலாம். பாப்பாவையும் நீ பார்த்த மாதிரி இருக்கும்”

“கரெக்ட் தான்.. வரேன்”

இருவரும் வங்கிங்கு எதிரே உள்ள கடைக்குச் சென்றனர்.

“கீர்த்தன்யா ஆப்பு சாப்டியா”

“சாப்பிட்டேன்மா”

“வீட்டுக்கு போய்ட்டு சாப்பாடு கொஞ்சம் ஊட்டுங்க அவளுக்கு.. நான் வரதுக்கு இன்னிக்கு 7 மணி மேல ஆயிடும்.. ஆஃபீஸர் ஒருத்தர் வாராக் கடன் கஸ்டமர் பாக்க போயிருக்காங்க.. அவர் சீட் ஒர்க்கும் கொஞ்சம் சமாளிக்கனும்”

“இன்னிக்கி ரொம்ப கூட்டம் போல.. மேனேஜரும் காணோம்”

“அவருக்கு ரீஜினல் ஆபீஸ்ல பிசினஸ் மீட்டிங்.. அது வேற செம்ம பிரஷர் எங்களுக்கு.. நிறைய ஸ்கீம் லான்ச் பண்ணிருக்காங்க.. இந்த கூட்டத்துல இன்சூரன்ஸ் போடுங்க.. மியுசுவல் ஃபண்ட்ல பணம் போடுங்கனு எப்படி சொல்றது.. முடில.. இதுல ஆயிரம் ரூபாய் பணம் வரலன்னு எங்களை கேட்டா நாங்க என்னப் பண்றது”

“பாத்துக்கலாம்”

“சரிங்க.. நான் போறேன்.. லேட் ஆயிடும்.. நீங்க பாப்பா கூட்டிட்டு கிளம்புங்க”

“உள்ள ஹெல்மெட் இருக்கு. எடுத்துட்டு போறேன் வித்யா”

ராஜு உள்ளே வரும்பொழுது வங்கி ஊழியர்களுக்கு தேநீர் வழங்கிக் கொண்டிருந்தாள் அங்கே வேலை செய்யும் பெண் ஒருத்தி.

வித்யாவின் இருப்பிடத்திற்கும் தேநீர் சென்றது. வித்யாவும் தனக்கு இருந்த சோர்விற்கு இதமாக இருக்கும் என்று பருகத் தொடங்கினாள்.

“இப்போ தான் லஞ்ச் போய்ட்டு வந்தாங்க.. வெளில வேற பத்து நிமிஷம் நின்னாங்க.. இப்போ டீ குடிக்கிறாங்க.. நாலு மணிக்கு கிளம்பிடுவாங்க.. என்ன வேலை பாரு கஷ்டமே இல்லாம.. நம்ம தான் இப்படி புக்க வெச்சிட்டு நின்னுட்டே இருக்கனும்”

ஹெல்மெட் எடுக்கச் சென்ற ராஜுவின் காதில் இது விழுந்தது. அவரவர்கள் பார்வையில் அவரவர்கள் அர்த்தம் என்று நினைத்துக் கொண்டு எதையும் நியாப்படுத்த விரும்பாமல் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 8) – தி.வள்ளி, திருநெல்வேலி