sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

அவனும் நானும் அமுதும் தமிழும் (சிறுகதை) – ✍ பவித்ரா புருஷோத்தமன், புதுச்சேரி

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 101)

 முகமறியா உன்னில் 

என்னைக் கண்டேன் 

உன் நட்பிலே என்னில்

உண்டான காதலை கண்டேன்

என் மனதை தொலைத்து 

உனக்காக காத்திருக்கிறேன்

நீ வருவாய் என….

என்ற கவிதையை தன் அலைபேசியில் கண்ட மலர்விழி, தன் எதிரே அமர்ந்திருக்கும் கவிதாவை முறைக்க, அவளோ இவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தனது அலைபேசியில் மூழ்கியிருந்தாள்.

“கவிதா” என்று மலர்விழி அழைக்க, தன் அலைபேசியில் முழுவதுமாய் மூழ்கியிருந்தவளின் செவிகளில் இவளது குரல் எட்டவில்லை என்று தான் கூற வேண்டும்.

“கவி…” என்று கோபமாக மலர்விழி கத்த 

“சொல்லு மலர்” என்று தன் அலைபேசியை பார்த்தவாறே கவிதா கூற

அவளை கண்டு முறைத்த மலர்விழி, தன் அலைபேசியை காட்டி, “இந்த கவிதைக்கு என்ன அர்த்தம்?” என்று கோபமாக கேட்க, என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள் கவிதா

கவிதாவும் மலர்விழியும் கல்லூரி தோழிகள், தங்களின் கல்லூரி படிப்பை நன்முறையில் முடித்து விட்டு, சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாகப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர்.

கவிதாவின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கவிதையை கண்டு தான் மலர்விழி தன் தோழியின் மேல் கட்டுக்கடங்காத கோபத்தில் சுழன்று கொண்டிருக்கிறாள்.

தன் தோழியிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் கவிதா அமைதியாக அமர்ந்திருக்க, “என் கிட்ட என்ன சொல்லி சமாளிக்கலாம்னு யோசிக்குறியா?” என்று மலர்விழி கேட்க 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மலர்” என்றாள் கவிதா

“அப்போ இதுக்கு என்னடி அர்த்தம்? உன் ஃபேஸ்புக்ல இந்த கவிதையை எதுக்கு போஸ்ட் பண்ணியிருக்க?” என்று மலர்விழி வினவ, அமைதியாக அமர்ந்திருந்தாள் கவிதா

“அவனுக்காக தானே இந்த கவிதையை போஸ்ட் பண்ணியிருக்க?” என்று மலர்விழி கேட்க

“நண்பேன்டா…” என்று கூறி தன் தோழியை மெச்சும் பார்வை பார்த்தாள் கவிதா

“லூசா கவி நீ? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?” என்று கவிதாவை மலர்விழி திட்டத் தொடங்க

“ரொம்ப டென்ஷனாகாத மலர் அப்புறம் உனக்கு தலைவலி வந்துரும், நான் போய் உனக்கு காபி வாங்கிட்டு வரட்டுமா?”

“இப்போ காபி ரொம்ப முக்கியமா?”

“பின்ன இல்லையா? காபி குடிக்க தானே கேன்டீன் வந்தோம், இன்னும் பத்து நிமிஷத்துல நம்ம ப்ரேக் டைம் முடிஞ்சிடும் மலர். நீ இங்கேயே இரு, நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று கூறி கவிதா எழுந்து செல்ல, அவளது கைகளை பற்றி இருக்கையில் அமர வைத்தாள் மலர் 

“ஏன் இப்படி இருக்க? இத்தனை நாள் என்கிட்ட எதையும் மறைக்காம எல்லாத்தையும் சொல்லுவ, ஆனா இப்ப எதுவும் சொல்லாம உன் மனசுக்குள்ளயே ஏன் பூட்டி வைக்குற?” என்று மலர்விழி கத்த, மீண்டும் மௌனமானாள் கவிதா

தன் தோழியின் மனதை சரியாக புரிந்து கொண்ட மலர்விழி, “நீ அவனை லவ் பண்றியா கவி?” எனக் கேட்க, தன் தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தாள் கவிதா

“இங்க பாரு கவி, லவ் பண்றது தப்பில்லை, ஆனா உன் லவ் சக்ஸஸ் ஆக நூத்துல பத்து சதவீதம் கூட வாய்ப்பில்லை. இது உனக்கே நல்லா தெரியும், அப்புறம் ஏன் உன் மனசைப் போட்டு வீணாக் கஷ்டப்படுத்துற?”

“ஏன் மலர்? நீ என் பெஸ்ட் ஃபிரண்ட் தான? என் லவ்க்கு நீ உதவி பண்ணமாட்டியா?”

“உன் லவ்க்கு நான் உதவி பண்ணாம வேற யாருடி உதவி பண்ணுவாங்க? ஆனா உன் லவ், சரி அதை விடு, அவனை பத்தி உனக்கு என்ன தெரியும்? அவனை இதுவரைக்கும் ஒரு தடவையாவது நேர்ல பார்த்திருக்கியா?

நீ அவனை ஃபேஸ்புக்ல பார்த்து பேசி பழகி அதுக்கு அப்புறம் என்கிட்ட வந்து அவனை லவ் பண்றேன்னு சொல்லியிருந்தாக் கூட அவன் யாரு எந்த ஊரு இப்படி எதாவது அவனை பத்தி விசாரிச்சியிருக்கலாம். ஆனா நீ உன்னோட மெயில் மூலமா அவன்கிட்ட பேசிட்டு இருக்க. அவன் பெயராவது என்னென்னு உனக்கு தெரியுமா?”

“அவன் பெயர் அமுதழகன்……….”

“இது எங்களுக்கு தெரியாதா? அவன் உண்மையான பெயரென்ன?”

“ஏன் இந்த பெயர் அவனோட உண்மையான பெயராயிருக்க கூடாதா?”

“ஓஹோ அப்படியா, உங்களோட பெயர் என்ன? கவிதான்னு சொன்னப் பல்லை தட்டி கையில் கொடுத்துடுவேன். நீயே உன் உண்மையான பெயரை மறைச்சி வேறோரு பெயர்ல தானே கதை எழுதுற, அவனும் உன்னை மாதிரியே வேறோரு பெயர்ல அவனோட கதையை எழுதியிருந்தா? நான் சொல்றதை நல்லாப் புரிஞ்சிக்கோ கவி அவன் யாரோ நீ யாரோ”

“நீ சொல்றது எனக்கு நல்லாவே புரியுது மலர் ஆனா அதை ஏத்துக்குற நிலையில நான் இல்லை. எனக்கு அமுதழகனை ஒன்றரை வருஷமாத் தெரியும், கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா அவனோட கதைகள் எல்லாத்தையும் நான் படிச்சியிருக்கேன்.

அவனோட கதை எல்லாமே எனக்கு எந்தளவுக்கு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், அவனை ஏன் இந்தளவுக்கு நான் நேசிக்கிறேன்னு எனக்கு சத்தியமாத் தெரியல. இந்த ஆசை நிறைவேற சாத்தியமே இல்லைன்னு மூலை சொன்னாலும் மனசு ஏத்துக்கமாட்டுது” என்று கண்கள் பனிக்க கவிதா கூற, அவளை கண்டு மலர்விழி ஒருபக்கம் கவலை கொண்டாலும் அவளின் நிலையை எண்ணி மனதில் பயம் எழச் செய்தது.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு…

“மலர்… அடியேய் மலர் பக்கி…” என்று கவிதா கோபமாக அவளது முதுகை சுரண்ட

தன் கணினியின் முன் கண்களை பதிந்திருந்த மலர்விழி, எரிச்சலாக கவிதாவின் பக்கம் திரும்பி, “ஏன் இந்த கத்து கத்துற? என்னை ஒழுங்கா எந்த வேலையும் செய்ய விடமாட்டியா? முதல் வேலையா இந்த டீம் விட்டு போனா தான் எனக்கு நிம்மதியே” என்று மலர்விழி கத்த

அவளை கண்டு சிரித்த கவிதா, “அதுக்கு சத்தியமா வாய்ப்பில்லை ராஜா. நீ எங்க போனாலும் நானும் வருவேன் மலர், உன்னை விடாது கருப்பு”

“மலர் பேபி, உனக்கொன்னு தெரியுமா?”

“என்னன்னு சொன்னா தானே தெரியும்”

“நான் அமுதழகனோட கதைக்கு விமர்சனம் பண்ணேன்ல அதுக்கு அவங்க ரிப்ளை பண்ணியிருக்காங்க”

“நிஜமாவா?” என்று மலர்விழி அதிர்ச்சியாக கேட்க, அவளை கண்டு சிரித்த கவிதாவோ அமுதழகனுக்கு அவள் அனுப்பிய மின்னஞ்சலை தன் அலைபேசியில் காண்பித்தாள்.

கவிதாவின் அன்றாட நாளின் பொழுதுபோக்கு என்றால் அது  புத்தகங்கள் படிப்பது தான், அதிலும் கதை புத்தகமென்றால் அவளுக்கு அலாதி பிரியம். புத்தகங்கள் மற்றும் வார இதழ்களில் வரும் கதைகளை படிப்பதில் தொடர்ந்து இப்பொழுது அனைவரின் கைகளில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் அலைபேசியின் வாயிலாக தனக்கு பிடித்த எண்ணற்ற கதைகளை கவிதா படிக்க ஆரம்பித்தாள்.

அதில் அவளுக்கு பிடித்தமான பல எழுத்தாளர்களின் கதைகளை வாசிக்க தொடங்க, கவிதாவின் மனதிற்கு பிடித்தமான எழுத்தாளர்களின் பட்டியலில் முதலிடத்தை அமுதழகன் பெற்றிருந்தான். ஒரு நாள் எதிர்ச்சையாக அமுதழகனின் மின்னஞ்சல் முகவரி கவிதாவின் கண்களுக்கு சிக்க, அவனின் கதைகளுக்கு தன் மனதில் தோன்றிய விமர்சனங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தாள்.

கவிதாவின் மின்னஞ்சல் முகவரியை கண்ட மலர்விழி, “என்ன கவி வேற பெயர் இருக்கு?” என்று கூறி புரியாமல் பார்க்க

“நான் தான் வேற பெயர் போட்டு மெயில் க்ரியெட் பண்ணேன் மலர். என்ன தான் அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளரா இருந்தாலும் என்னோட பெர்சனல் மெயில் உபயோகப்படுத்த கொஞ்சம் பயமாயிருக்கு. அதுவுமில்லாம என் அப்பா அடிக்கடி என் மெயில் உபயோகப்படுத்துவாரு, அதான் வேற பெயர் போட்டு மெயில் க்ரியெட் பண்ணேன். இப்போ அமுதழகன் அனுப்புற மெயில் எனக்கு மட்டும் தான் வரும். எப்படி என்னோட பிளான்?”

“நீ அவருக்கு மெயில் பண்ணேன் சொல்லும் போதுக் கூட அவங்ககிட்டயிருந்து எந்த பதிலும் வராதுன்னு நினைச்சேன். பரவாயில்லை கவி, உன் விமர்சனத்தை படிச்சிட்டு அவரும் உனக்கு பதில் அனுப்பியிருக்காரு, அதுவும் உன்னோட கேள்வி எல்லாத்துக்கும் ஒன்னுவிடாம தெளிவா பதில் சொல்லியிருக்காரே”

“உண்மை தான் மலர், அமுதழகன்கிட்டயிருந்து எனக்கு பதில் வரும்னு நான் நினைக்கவேயில்லை. நான் இன்னிக்கு எவ்ளோ சந்தோஷமாயிருக்கேன் தெரியுமா? சொல்ல வார்த்தையே இல்லை மலர், அவ்ளோ சந்தோஷமாயிருக்கேன்” என்று கவிதா கூறி அமுதழகனிற்கு மின்னஞ்சலில் பதில் அனுப்பத் தொடங்கினாள்.

மின்னஞ்சல் மூலமாக ஆரம்பித்த இவர்களின் உரையாடல், மெல்ல மெல்ல நட்பென்னும் வட்டத்தில் அழகிய மலராய் பூக்க தொடங்க, அமுதழகனின் எழுத்துக்களுக்கு இரசிகயாய் இருந்த கவிதா, சிறிது சிறிதாக அவனின் இரசிகயாகவே மாறிப்போனாள். இன்றோ அது காதலென்னும் பெயரில் வேர்விட்டு அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது

தன் தோழியின் நிலையை எண்ணி கடந்த காலத்தில் மூழ்கியிருந்த மலர்விழியோ தன்னை தானே சுதாரித்து கொண்டு

“இங்க பாரு கவி, நிதர்சனத்தை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. அந்த அமுதழகன் யாரு? என்ன பண்றான்? நல்லவனா கெட்டவனா? இந்த மாதிரி நிறைய கேள்விக்கு உன்கிட்ட ஒரு பதில் கூட இல்லை கவி.

தேவையில்லாத ஆசைகளை உன் மனசுல நீ வளர்த்து வச்சியிருக்க, எனக்கு உன்னை பார்க்கும் போது ரொம்ப பயமாயிருக்கு. உன்னோட ஆசையெல்லாம் நிராசையா ஆச்சுன்னா நீ அதை எப்படி தாங்கிப்பன்னு என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல”

“என்னை நினைச்சா எனக்கே வியப்பாதான் இருக்கு மலர். யாருன்னு தெரியாத ஒருத்தனை அதுவும் ஒன்றரை வருஷமா வெறும் மெயில் மூலமா மட்டுமே பேசி பழகி இப்போ அவனை லவ் பண்றேன்னு உன்கிட்ட வந்து சொல்லுவேன்னு நான் சத்தியமா கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லைடி.

ஒருவேளை நான் அமுதழகனை நேர்ல பார்த்து லவ் பண்ணியிருந்தா, இது வெறும் ஈர்ப்பு தான் நினைச்சு அவனை நான் கடந்து போயிருப்பேன். ஆனா அமுதழகனை ஏன் எனக்கு இந்தளவுக்கு பிடிச்சியிருக்குன்னு எனக்கே தெரியல. வெறும் கதை மட்டுமே படிச்சிட்டு இருந்த என்னை எனக்குள்ளையும் ஒரு எழுத்தாளர் இருக்காங்கன்னு அடையாளம் காட்டுனதே என் அமுதழகன் தான்

சின்ன சின்ன சந்தேகத்தையும் தீர்த்து, கதை எப்படி எழுதனும் அதுக்கு என்னென்ன பண்ணனும் எப்படி எப்படியெல்லாம் எழுதலாம் இந்த மாதிரி என்னோட எல்லா கேள்விக்கும் விடையா இருந்ததே அவர் தான்.யாரோ தெரியாதவங்ககிட்ட ரெண்டு நாள் ஃபேஸ்புக்ல சும்மா மெசேஜ் பண்ணாலே உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமான்னு கேட்டு நிக்குறவங்க மத்தியில, ஒன்றரை வருஷமா என் அமுது என்கிட்ட பேசிட்டு இருக்கான், இதுவரைக்கும் என் ஃபோன் நம்பர் கேட்டதில்லை

என் மனசு சந்தோஷப்பட்டாலும் கவலைப்பட்டாலும் முதல என் அமுதுவை தான் தேடுது, நான் என்ன பண்றது மலர்? அவரோட பேசுனா நான் எல்லாத்தையும் மறந்துடுறேன், சொல்லப் போனா சில நேரம் என்னையே எங்க மறந்திடுவேனோன்னு கொஞ்சம் பயமாயிருக்கு” என்று கூறி கவிதா சிரிக்க, அவளை முறைத்தாள்  மலர்

“அப்ப உன் அமுதுகிட்ட உன் லவ்வை சொல்ல வேண்டியது தான?” என்று மலர்விழி சிடுசிடுக்க

“எதுக்கு? நான் லவ் சொல்லி எங்க ரெண்டு பேரோட ஃபிரண்ட்ஷிப் பிரியனுமா? எனக்கு என் அமுதுவை பிடிக்கும், அதுக்காக அவனுக்கும் என்னை பிடிக்கனும்னு அவசியம் இல்லையே”

“இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடௌன்லேயே இருந்திருக்கலாம்” என்று முணுமுணுத்தாள் மலர்விழி

“அப்புறம் அமுது எனக்கு…” என்று கவிதா ஏதோ கூற வாயெடுக்க

“அம்மா தாயே, உன் அமுதுவோட புராணத்தை கேட்க எனக்கு இப்போதிக்கு சுத்தம்மா தெம்பில்லை. நான் போய் நம்ம ரெண்டு பேருக்கும் காபி வாங்கிட்டு வரேன், ஏற்கனவே என் தலை வேற பயங்கரமா வலிக்குது” என்று மலர்விழி அவ்விடத்தை விட்டு வேகமாக சென்றுவிட, சிரித்தாள் கவிதா

கவிதாவிடமிருந்து தப்பித்து வேகமாய் வந்த மலர்விழி, தன் எதிரில் வந்தவரின் மேல் மோதிவிட, தன்னை சுதாரித்து கையில் இருந்து தேநீரை காப்பாற்றிக் கொண்டார்

தன் எதிரில் நிற்கும் மலர்விழியை பாராது, “என்னம்மா பார்த்து வர மாட்டியா? இந்நேரம் இந்த டீ உன் மேலயோ இல்ல என் மேலயோ கொட்டிருந்தா என்னாயிருக்கும்?” என்று அவன் சிடுசிடுக்க

அவன் அருகில் நின்றிருந்த இன்னொருவன்,”டேய் சரத், என் மேலிருந்த கோபத்தை அந்த பொண்ணு மேல ஏன்டா காட்டுற?” என்று அவன் காதில் இரகசியமாக கூற, அவனை முறைத்தவனோ அப்பொழுது தான் முகத்தில் சற்றும் பயமில்லாமல் சிரித்து கொண்டே நிற்கும் மலர்விழியை கண்டான்

“ஹேய், தங்கச்சி நீயா? நான் வேற‌ யாரோன்னு நினைச்சேன்,ஏதோ ஒரு டென்ஷன்ல இருந்தேன் அதான் திட்டிட்டேன் தப்பா எடுத்துக்காதடா‌” என சிரித்தான் சரத் 

“பரவாயில்லை விடுங்க சரத் அண்ணா, நானும் கொஞ்சம் பார்த்து வந்திருக்கனும். அதுவுமில்லாம இந்த இடத்துல நான் இருத்தேன்னு சந்தோஷப்படுங்க, இதுவே கவி மட்டும் இங்க இருந்திருந்தா…” என்று மலர்விழி கூறி முடிப்பதற்குள்

“வேணும்னே காபியை என் மேல ஊத்திருப்பா, நீங்க ரெண்டு பேரும் என் டீம்ல இல்லாம எனக்கு தான் செம போர் தெரியுமா?” என்று சரத் பாவமாக கூற, இவ்விருவரும் பேசுவதை சரத் அருகில் நின்றிருந்தவனால் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

“ஹான் மலர், இவன் என் பெஸ்ட் ஃபிரண்ட் கிருஷ்ணன். இப்ப தான் மூணு மாசத்துக்கு முன்னாடி நம்ம கம்பெனியில ஜாய்ன் பண்ணான்” என்று கூறி, தன்னருகில் இருந்த நண்பனை அறிமுகம் செய்தான்

“எனக்கு இவரை முன்னாடியே தெரியும்” என்று மலர்விழி கூற

“எப்படி சிஸ்டர்?” என்று புரியாமல் கேட்டான் கிருஷ்ணன்

“அன்னிக்கு கவி மேல காபி ஊத்திட்டு அவகிட்ட திட்டு வாங்கி திருதிருன்னு முழிச்சிட்டு இருந்தீங்களே, அப்ப நானும் அங்க தான் இருந்தேன்” என்று மலர்விழி கூற

“ஓஹோ, அப்போ அன்னிக்கு உன்னை திட்டுனது நம்ம கவி தானா? உனக்கொன்னு தெரியுமா மலர்? வேலைக்கு சேர்ந்த முதல் நாளே  ஒரு பொண்ணுகிட்ட திட்டு வாங்கிட்டேன்னு என்கிட்ட புலம்பி தள்ளிட்டான். அதுக்கப்புறம் இந்த பையன் எந்த பொண்ணுகிட்டயும் பேசறதில்லை, அந்த அளவுக்கு நம்ம கவி இவனுக்கு வேப்பிலை அடிச்சியிருக்கா” என்று கூறி சரத் சிரிக்க, கிருஷ்ணன் அசடு வழிய, மலர்விழி வாய்விட்டே சிரித்து விட்டாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு தனக்கும் தன் தோழிக்கும் காபி கோப்பைகளை வாங்கி கொண்டு சரத் மற்றும் கிருஷ்ணனிடமிருந்து மலர்விழி விடைப்பெற்று செல்ல, அவள் சென்றவுடன் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியவன், “இப்ப சொல்லு கிருஷ், அந்த பொண்ணு யாரு? எங்க இருக்காங்க?” என்று கோபமாக கேட்டான் சரத்

“அதான் சொன்னேனே, அந்த பொண்ணு என்னோட கதையை படிச்சிட்டு எனக்கு மெயில் மூலமா மெசேஜ் பண்ணாங்க. அப்படியே நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட் ஆகிட்டோம், இப்போ எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு மச்சான்” என்று கிருஷ்ணன் கூற, முறைத்தான் சரத்

“டேய் மச்சான், நீ அந்த பொண்ணை லவ் பண்றது பிரச்சனை இல்லை ஆனா அவ யாரு, எங்கருக்கா? இப்படி எதாவது தெரியுமா? ஒருவேளை அவளுக்கு கல்யாணமாகிருந்தா என்னடா பண்ணுவ?”

“அவளுக்கு இன்னும் கல்யாணமாகல மச்சான், அவளோட கதையில வர ஒரு லவ் சீன்க்கு நான் ஒரு கவிதை சொன்னேன். அப்ப ‘சிங்கிளா இருந்துட்டு லவ் சீன் எழுதுறது ரொம்ப கஷ்ட்டமாயிருக்குனு’ பேச்சு வாக்குல சொன்னா”

“அந்த பொண்ணு பெயர் என்ன?”

“தமிழழகி”

“அதான் அவளோட உண்மையான பெயரா மச்சான்?” என்று சரத் கேட்க தெரியாதென்பதை போல் தன் தலையை அசைத்தான் கிருஷ்ணன்

“இங்க பாரு கிருஷ், லவ் பண்றது தப்பில்லை. ஆனா அந்த பொண்ணு யாருன்னு தெரியாம, முக்கியமா அவளோட உண்மையான பெயர் கூட தெரியாம கண்மூடித்தனமா நீ லவ் பண்ற மச்சான். எப்படி டா அவ மேல இந்தளவுக்கு உனக்கு லவ் வந்துச்சு?”

“நீ சொல்றது உண்மை தான் மச்சான். அவ யாரு எப்படி இருப்பானு எனக்கு சத்தியமா தெரியாது, என்னோட கதையை படிச்சிட்டு மெயில் மூலமா விமர்சனம் பண்ணா. அவளோட விமர்சனத்துக்கு நான் பதில் அனுப்பினேன், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸ் ஆகிட்டோம்

என் தமிழ் மேல எனக்கு எப்போ லவ் வந்துச்சுன்னு கேட்டா, என்கிட்ட அதுக்கான பதில் சத்தியமா இல்லை மச்சான். ஆனா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும், என் தமிழ்கிட்ட பேசுனா எனக்கு எங்கிருந்து அப்படியொரு சந்தோஷம் வருதுன்னே தெரியலடா. அவளை என் வாழ்க்கையில மிஸ் பண்ணிட கூடாதுன்னு என் மனசு சொல்லுது”

“அந்த பொண்ணுகிட்ட இதுவரைக்கும் ஒரு தடவைக் கூட ஃபோன் நம்பர் கேட்டதில்லையா?”

“எப்படி மச்சான் கேட்க முடியும்? பழகின கொஞ்ச நாளுலேயே தெரியாத பொண்ணுகிட்ட நம்பர் கேக்குறான்னு என்னை பத்தி என் தமிழ் தப்பா நினைச்சிட்டா? அதான் இத்தனை நாள் அவளோட நம்பர் நான் கேக்கல‌, ஆனா ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் என்னோட ஃபோட்டோவை என் தமிழுக்கு அனுப்பினேன். எங்கேயாவது என்னை பார்த்தா என்கிட்ட மறக்காம பேசுங்கனு சொல்லியிருக்கேன், ஆனா இன்னும் அவகிட்டயிருந்து ரிப்ளை வரல” என்று கிருஷ்ணன் வருத்தமாய் கூற, நண்பனை எவ்வாறு தேற்றுவதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான் சரத்

தன் தோழி அமர்ந்திருக்கும் இடத்திற்கு காபி கோப்பைகளுடன் வந்த மலர்விழியை பாராது, எங்கோ வெறித்து கொண்டிருந்தாள் கவிதா 

“ஏய் கவி, அங்க என்ன பார்வை?” என்று மலர்விழி கேட்க

“அமுதழகன்” என்று கவிதா கூறி கை காட்ட, அங்கு சரத் மற்றும் கிருஷ்ணன் இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

“யாரு கவி? சரத் அண்ணன் தான் உன் அமுதழகனா?” என்று மலர்விழி அதிர்ச்சியாக கவிதாவிடம் கேட்க

“இல்ல மலர், சரத் அண்ணன் பக்கத்துல இருக்கிறவர்”

“எப்படி அவரு தான் அமுதழகன் சொல்ற?”

“ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் அவரோட ஃபோட்டோவை எனக்கு அனுப்புனாரு. இதை உன்கிட்ட சொல்றதுக்குள்ள நீ காபி வாங்க போயிட்ட”

“அப்போ கிருஷ்கிட்ட போய் நீ தான் தமிழழகின்னு சொல்லு” என்று மலர்விழி மகிழ்ச்சியாக கூற

“அவர் பேரு கிருஷ்ணா வா?” என ஒரு கணம் சிலாகித்தவள்,  “நான் தான் தமிழழகின்னு சொல்லி என்னாகப் போகுது மலர்? என் லவ்வை அவரு ஏத்துப்பாரா? என் லவ் என்னோடவே இருந்துட்டு போகட்டும், அவரோட ஃபிரெண்ட்ஷிப்பை இழக்க நான் விரும்பல” என்றாள் கவிதா

“லூசு மாதிரி பேசாத கவி, உன் லவ்வை சொன்னா தான தெரியும். அட்லிஸ்ட் நீ தான் தமிழழகின்னு உன் அமுதுகிட்ட சொல்லேன்”

“வேண்டாம் மலர், இதை இப்படியே விட்டுடு. நான் என் அமுதழகனோட தமிழழகியாவே இருக்கேன், என்னை கொஞ்ச நேரம் தனியா விடு மலர்” என்று கவிதா கூறி அங்கிருந்து சென்றுவிட, அவள் கூறியதை கேட்ட மலர்விழி கோபமாக நின்றிருந்தாள்.

சில மாதங்களுக்கு பிறகு…

“டேய் கிருஷ், ரெடியாகிட்டியா இல்லையா?” என்று சரத் கத்த

“நான் ரெடி மச்சான், ஆனா என் தமிழ்கிட்ட பேசனுமே” என்று கூற

“அட எருமையே, அந்த தமிழழகி பெயரை மறந்து தொல. உனக்கு கல்யாணம் நிச்சயமாகப் போகுது, இந்த நேரத்துல வேறோரு பொண்ணு பெயர் சொல்லி அவள்கிட்ட பேசனும்னு மாப்பிள்ளை கேக்குறாருன்னு உன்னை தான் தப்பா பேசுவாங்க” என்று சரத் நக்கலாக கூறி முடிக்கவும், மணமகன் அறைக்குள் மலர்விழி மற்றும் கவிதா நுழையவும் சரியாக இருந்தது.

“நிச்சயமாகப் போற பொண்ணுக்கு இங்க என்ன வேலை?” என்று கவிதாவிடம் சரத் கேட்டு முறைக்க

“நல்லாக் கேளுங்க அண்ணா, நான் சொன்னா எங்க கேக்குறா? கிருஷ் அண்ணனை பாத்தே ஆகணும்னு ஒரே பிடிவாதம்” என்று மலர்விழி சலிக்க

அவர்கள் பேசுவதை காதில் வாங்கி கொள்ளாத கவிதா தன்னவனின் அழகை ரசித்து கொண்டிருக்க, கிருஷ்ணணும் தன்னவளின் அழகில் தன்னை தொலைத்திருந்தான்

அவர்களை கண்ட சரத் மற்றும் மலர்விழி தலையில் அடித்து கொள்ள கிருஷ்ணனின் அருகில் வந்த கவிதா, “நான் மலர்கிட்ட கடைசியா பேசினதோட கதை அப்படியே நிக்குது அமுது” என வருந்த

“நீ ஒன்னும் கவலைப்படாதே தமிழ், நம்ம நினைச்ச மாதிரியே நம்மளோட நிச்சயம் அன்னிக்கு நம்ம கதையை எழுதி முடிக்கிறோம்” என என கிருஷ் கூறியதும், இருவரும் கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்தனர்

சில மாதங்களுக்கு முன்னான அந்த நாளில்… மலர்விழியிடம் பேசிவிட்டு வந்த கவிதா, ஜன்னல் வழியாக தெரியும் வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருக்க, அவள் விழிகளில் வழிந்த கண்ணீரோ, அனுமதியில்லாமல் அவளது கன்னத்தை தொட்டு சென்றது.

“கவி, ஏன்டி உன்னை நீயே வருத்திட்டு இருக்க? நீ தான் தமிழழகின்னு அவங்ககிட்ட சொல்லு, கண்டிப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க”

“நீ சொல்றது உண்மை தான், ஆனா என் அமுது என்னை அவனோட ஃபிரண்டா பார்க்கும் போது நான் அவனை லவ் பண்றேன்னு சொன்னா என்னை அவன் தப்பா நினைக்க மாட்டான்?” என்று கேட்டாள் கவிதா 

“அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்கோ தமிழ்” என்ற குரலை கேட்ட கவிதா திரும்பி பார்க்க, அங்கு தமிழழகியின் அமுதழகன் நின்று கொண்டிருந்தான்.

கிருஷ்ணனை அங்கு எதிர்ப்பார்க்காத கவிதா, என்ன கூறுவதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருக்க, அவ்விருவருக்கும் தனிமை தரவேண்டி சரத் மற்றும் மலர்விழி இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

அவர்கள் சென்றவுடன் கவிதாவின் அருகில் வந்த கிருஷ்ணன், “ஹாய் தமிழ், சாரி தமிழழகி… இல்லை கவிதா” என பிதற்ற, மௌனமாய் சிரித்தாள் கவிதா

அவளது சிரிப்பை ரசித்தவன், “மலர் சிஸ்டர் என்கிட்ட எல்லாத்தையும் சொன்னாங்க. நீ தான் என் தமிழழகின்னு அவங்க சொன்னதும், நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? நீ எனக்கு மெயில் அனுப்பி  ரெண்டு நாளாச்சு, இந்த ரெண்டு நாள் நான் நானாவேயில்லை. என் மனசு உன்னை ரொம்ப தேடுது தமிழ், நான் உன்னை அந்தளவுக்கு லவ் பண்றேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா தமிழ்?” என்றவன் கேட்க

மௌனமாய் அவனருகே வந்து உரிமையுடன் தோளில் சாய்ந்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் தமிழழகி எனும் கவிதா

“எப்பா டேய், உங்க ஃபிளாஷ்பேக்லிருந்து கொஞ்சம் வெளிய வாங்கடா” என்று சரத் கத்த, பழைய நினைவில் இருந்து மீண்ட கவிதாவும் கிரிஷும் அசடு வழிய சிரித்தனர்

கிருஷ்ணன் மற்றும் கவிதாவின் காதலுக்கு அவர்களின் பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்ட, இன்று அவர்களுக்கு உற்றார் உறவினர் சூழ நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது

இருவரும் ஒன்றாக ‘தமிழமுது’ என்ற பெயரில் தங்களின் காதலை கதையாக எழுதி கொண்டிருக்கின்றனர்.

“கதையோட தலைப்பு என்னன்னு இப்பயாவது என்கிட்ட சொல்லு தமிழ்?” என்று கிருஷ்ணன் கேட்க

“அவனும் நானும் அமுதும் தமிழும்” என்ற கவிதா, தன்னவனை காதலுடன் பார்த்து சிரிக்க, தன்னவளை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான் கிருஷ்ணன்

கிருஷ்ணன் என்கிற தமிழழகியின் அமுதழகனிற்கும், கவிதா என்கிற அமுதழகனின் தமிழழகிக்கும் வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற, மணமக்கள் இருவரும் மகிழ்ச்சி கடலில் காதலுடன் மிதந்து கொண்டிருந்தனர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

2 thoughts on “அவனும் நானும் அமுதும் தமிழும் (சிறுகதை) – ✍ பவித்ரா புருஷோத்தமன், புதுச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!