in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 22) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 22)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேர் தரிசனம்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

முனா வீடு..! 

ராமலிங்கம் உற்சாகமாக சொன்னான். “யமுனா… இன்னிக்கு சந்தோசமான சேதி. அந்த மீசைக்கார போய்ட்டான்டி.. பொய்க்கணக்கு எழுதுனதுனாலயும் கிஸ்ன மேல பொய் சொல்லி வேலைய விட்டு அனுப்பியதுனாலயு மேலிடமே அவன தண்டிச்சிடுச்சு. இப்போ எங்க பழைய பாலச்சந்தர் சாரே வராரு…” என்றான். 

யமுனாவிற்குக் கூட சந்தோஷம் தான். வேலைக்குப் போய் விட்டு வரும் கணவன், அங்கு நிம்மதியாக வேலை செய்து விட்டு வந்தால் தானே மனைவிக்கு நிம்மதி.

“பாலச்சந்தர் ஐயா இருந்த போது, குடும்ப நெளிவு சுளிவுகளை எல்லாம் அனுசரித்து நடந்து, உறுப்பினர்களைத் தன் உறவினர் போல் நடத்துவார். வேலையும் ஜோராக நடக்கும். களைப்புந்தட்டாது. அவர் புண்யத்தில் தானே இந்தோனேசியா வரை பார்க்க முடிந்தது..” என்று அவள் பங்குக்கு அவளும் புகழ்ந்தாள். 

ராமலிங்கம் துள்ளி குதித்து, நேற்றிரவு வேலை சோர்வைக் கூட பொருட்படுத்தாது, சங்கத்திற்கு முதல் ஆளாகச் சென்றான். 

ர்வோதயா சங்கம்..!

அங்கு சரியாக 8.30 மணிக்கு செகரெட்ரி நாற்காலியில் பாலச்சந்தர் அமர்ந்திருந்தார். யாரும் அந்த விஷயத்தைக் கவனியவில்லை. ராமலிங்கம் நாலு இடம் போவதால், செய்தி காதுக்கு எட்டி இருக்கிறது.

அவன் நேரே கடைக்குள் போய், பாலச்சந்தர் அய்யாவிடம், “ஐயா…! நீங்க இல்லாத கொஞ்ச நாள், ரொம்ப வருத்தப் பட்டுட்டோம்யா..” என்று சத்தமாகச் சொல்லவும் வடிவேலு, வேம்பு எல்லோரும் பார்த்தார்கள்.

அங்கு அய்யா இருப்பத்தைக் கண்டு, மகிழ்ச்சியில் வெள்ளம் போல் பொங்கி வழிந்தார்கள். நலம் விசாரிப்பின் இறுதியில் வடிவேலுவிடம் பாலச்சந்தர், “ஏன் யா.. அந்த கிருஷ்ணம் பைய எங்க? ஆளே காணோம்..” என்று கேட்டார். 

வடிவேலு எல்லாரையும் ஒரு முறை பார்த்துவிட்டு, “அட என்னங்கயா? உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னுல்ல நினைச்சோம். மீசைக்கார ஓவரா முரண்டு பண்ணிட்டான். கண்ணானத்துக்கு மொத நாள் வரிக்கும், கிருஷ்ண இங்க வேலையில் இருந்தா. பொறவு, ‘எனக்கே என் கல்யாணத்துக்கு லீவு இல்ல. நான் எப்டி உங்கள வாய் நிறைய வாங்கன்னு கூப்பிடுறது.?’ன்னு வருத்தப்பட்டு போனவன் தான்.  வேலையே வேணாம்ன்னு எழுதி குடுத்துட்டு போய்ட்டான்..” என்று புருவத்தை வளைத்து நெளித்து விஷயத்தைக் கூறி முடித்தான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பாலச்சந்தர் முடிவு செய்து விட்டார். “இந்த வார என்கூட கிருஷ்ண வீட்டுக்கு எல்லாரும் வரீங்களா?” என்று கேட்கவும், சுற்றி இருந்தவர்கள் ரொம்பவும் சந்தோஷப்பட்டு ஆர்ப்பரித்தனர். 

ஞாயிற்றுகிழமை வந்தது..! 

செகரெட்ரி தனது மூன்று கார்களைப் பயணத்திற்கு எடுத்து வந்தார். கார் அதிகாலையிலே அவரவர் வீட்டு வாசலுக்குச் சென்று, வேண்டியவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. வழியெங்கும் பாட்டு, ஆட்டம் பாட்டம் என்று ஒரே குஷியாக உறுப்பினர்கள் சென்றனர். நேரம் போனதே தெரியவில்லை.

ஆற்காடு செட்டியார் கடையில் கார் நின்றது. “ஆளுக்கு ரெண்டு மக்கன் பேடா..” ருசித்தனர். வடிவேலு மட்டும் தனியே கடைக்குள் சென்று, “கால் கிலோ மக்கன் பேடா கட்டி கொடுங்க..” என்றான்.

பாலச்சந்தர் அதைப் பார்த்தவுடன் அவனிடம் வந்தார். வடிவேலு, அவர் பார்வையைப் புரிந்து கொண்டு, “எல்லாமே நீங்களே செஞ்சிட்டா எப்டிங்கய்யா? என் நண்பனுக்கு நா செஞ்சதுன்னு இது இருந்துட்டு போவட்டும்..” என்று சொன்னான். 

அன்றிலிருந்து கிருஷ்ணனைப் போல், வடிவேலுவும் பாலச்சந்தர் மனதில் தனி இடம் பிடித்திருப்பான் என்பதில் ஐயமில்லை. மாலை 4.00 மணியளவில் கார் கிருஷ்ணனின் வீட்டை அடைந்தது. 

வெளியே கார் சத்தம் கேட்டு, லட்சுமி எட்டிப் பார்த்தாள். எல்லோர் மேலும் தன் பார்வையைப் பதித்தவள், வடிவேலுவின் முகத்தைப் பார்த்ததும், “அடடே..! வாங்கண்ணே..! உங்கள கல்யாணத்திற்கு முன்பு ஒரு முறை கடைக்கு வந்த போது பார்த்தது. எல்லோரும் உள்ற வாங்க..!” என்று வரவேற்றாள். 

கிருஷ்ணன் படுத்திருந்த ஈசி சேரிலிருத்து வெடுக்கென்று எழுந்து வெளியே போனான். அந்த ஓட்டு வீட்டின் முன் மூன்று கார்கள். சங்க உறுப்பினர்கள் எல்லாம் வாசலண்டை வந்து நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில், கிருஷ்ணனின் நெஞ்சமதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பாலச்சந்தர் ஐயா, நின்றிருந்தார்.

கிருஷ்ணன், உடனேயே, “ஐயா..” என்று கட்டிக் கொண்டான். லட்சுமிக்கு அப்போது தான் அவர் அந்தப் பெரிய மனுஷர் என்பது புரிந்தது.

அனைவருக்கும் ஜோராக சாப்பாடு போட்டாள் லட்சுமி. வடிவேலு லட்சுமியிடம் தான் வாங்கி வந்த சுவீட்டை கொடுத்தான். பாலச்சந்தரும், “மா.. உன் கல்யாணத்துக்கு தான் வர முடில. கிருஷ்ண வேல வேணான்னுட்டானாம். உங்க கல்யாணப் பரிசா, புது ஆர்டரோட வந்திருக்கேன். அவனுக்கு அதே வேலைய திருப்பித் தரேன். இப்போ நாந்தா அங்க செகரெட்ரி. ஏமாத்துனவ ஏமாந்து போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு..” என்று சுருக்கமாகவும் சூசகமாகவும் பேசினார். 

கிருஷ்ணனுக்கு லட்சுமிக்கும் அதில் அளவில்லாத மகிழ்ச்சி. பார்வதிக்கும் அவ்வாறே என்றாலும், கிருஷ்ணனுக்குத் தாயைப் பிரிய மனமில்லை.

அதையும் பாலச்சந்தர் புரிந்து கொண்டு லட்சுமியிடம் திரும்பி, “மா.. லட்சுமி..! உம் புருஷ ரொம்ப தூர வேலைக்குப் போறான். உன் விருப்பப்படி நீயு அவனோட வருவியா? இல்ல இங்கேர்ந்து அத்தைய பாத்துப்பியா?” என்றார்.

லட்சுமி பளிச்சென்று சொன்னாள். “நா இங்க தாங்க இருப்பேன். இது தான் என் வீடு. அவுங்கள பிரிஞ்சி இருக்க முடியாது தான்.. அப்பொப்பா அவர இங்க அனுப்பி வையுங்க. நான் காத்திருப்பேன். எல்லா கஷ்டமு கொஞ்ச நாளுக்கு தான்..” என்று சொல்லி அப்படியே டிகிரி சான்றிதழ் வாங்குவது பற்றியும் வேண்டுதல் பற்றியும் சொன்னாள். கேட்ட அனைவருக்குமே சந்தோஷம் தான். 

பார்வதி தன் ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்க, பாலச்சந்தர், “லட்சுமியும் கிருஷ்ணனும் ஊருக்கு வந்து அம்பலத்தான தரிசிக்கட்டும். திரும்ப வரும்போது, லட்சுமி கார்லே ஊருக்கு வந்துருவா. கிருஷ்ணனுக்கு தேவையானதுலா எடுத்து வெயுங்க..” என்று பணிவாக உரைத்தார்.

பார்வதி உடனே அழுதுவிட்டாள். “ஏம்பா.. என் வயித்துல நீ பொறந்திருக்க கூடாதா?” என்று ஏக்கமாக கேட்டாள்.

பாலச்சந்தரும் கண்ணீர் விட்டுச் சொன்னார். “இல்லீங்க. நா ஒரு அனாத. பொறந்து சரியா மூணு வயசுல நடந்த கார் விபத்துல அப்பா, அம்மா ரெண்டு பேரும் போய்ட்டாங்க. எப்படியோ கஷ்டப்பட்டு பொழச்சிட்டேன். எனக்கு எல்லா இருக்குன்னு தோன்ற நிலைமை வந்ததுகப்ரோ, என்ன மாறி கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்றேன். அவ்ளோதான். நீங்க தாராளமா என்ன சொந்தம் கொண்டாலாம். ஏன்னா நா யார்க்கும் சொந்தமில்லாதவன்..” என்று குழந்தை போல் அழுதார். 

பார்வதி அவரை சிறுபிள்ளை போல் அணைத்துக் கொண்டு, “எல்லாரும் சாப்பாடுறது பாத்து சந்தோஷப்பட்டியே. இந்தாய்யா.. என் கையால நீயும் ஒரு வாய் சாப்பிடு..” என்று ஊட்டினாள்.

இந்தச் சம்பவத்தை வடிவேலு மட்டும் மறைந்திருந்து பார்த்து விட்டான். பின்பு, “இது வெளியே தெரியாமல் இருப்பதே நல்லது..” என்று கண்ணோடு சேர்த்து, அந்த விஷயத்தையும் துடைத்துப் போட்டுவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

பாலச்சந்தர்க்கு வெகு நாளாய் இருந்த பசி, அன்று அடங்கியது போல் உணர்வு. பார்வதிக்கு, தான் வெகு நாளாய் பார்க்கத் தவித்த, மூத்த பிள்ளையைப் பார்த்து விட்டதாய் ஒரு பூரணம்.

கிருஷ்ணனையும் லட்சுமியையும் தன் மூத்தப் பிள்ளையுடன் அனுப்பி வைப்பது போல், பார்வதி அனுப்பி வைத்தாள்.

பாலச்சந்தரின் கண்கள் கலங்கிய நிலையில் பார்வதியைப் பார்த்து, “போய்ட்டு வரேம்மா..” என்றது. அவளும் அவ்வாறே விடை கொடுத்தாள். திரும்பவும் அந்தக் கார், சிதம்பரத்திற்குப் பறந்தது.

ரொம்ப நாளாய் காலம் அமைதியாக இருந்து விட்டதை நினைத்து, கவலை அடைந்திருந்தது. இப்போது, இவர்கள் அம்பலத்திற்கும் குடியேற்றத்திற்கும் மாறி மாறி வந்து போவதைப் பார்த்துக் காலம் தனக்குள் சிரித்துக் கொண்டேன்.

மேலும், தன் சந்தோஷத்தைக் கொண்டாட, அது கிருஷ்ணன் செல்லும் கார் சக்கரங்களை, காலச் சக்கரங்களாக மாற்றுகிறது.

மார்கழி குளிர், கார் ஜன்னல்களை மீறிக் கொண்டு வந்து உள்ளே புகுந்து வாட்டி எடுக்கிறது. ஒரு காரில், பாலச்சந்தர், கிருஷ்ணன்-லட்சுமி, வடிவேலு இருந்தார்கள். மற்ற இரண்டு கார்களில் உடன் வந்தவர்கள் இருந்தார்கள். குளிர் தாளாமல், லட்சுமிக்கு வழிலேயே உடம்பு ஜில்லிட்டு விட்டது.

கிருஷ்ணனுக்குப் பயம் தொற்றிக் கொள்ள, வண்டியை ஒரு ஹோட்டல் அருகில் நிறுத்தச் சொன்னான். மயக்க நிலையில் இருந்த லட்சுமியை கிருஷ்ணன் மடியில் சாய்த்துக் கொள்ள, வடிவேலு தான் வாங்கி வந்த டீ டம்ளரை நீட்டினான். கிருஷ்ணன் குழந்தைக்குக் கசாயம் கொடுப்பது போல், சொட்டுச் சொட்டாக கொடுத்தான். தேநீர் சூடு உடம்பினுள் சென்றதும், அவள் லேசாக கண்கள் திறந்தாள். 

பிறகு, “சாரிங்க.. என்னன்னு தெரில..” என்று சொல்வதற்குள், கிருஷ்ணன் “அப்பாடா..! இப்போதா நிம்மதியா இருக்கு. என் லட்சுமி கண் முழிச்சிட்டா..!” என்றான். அவளுக்கு லேசாக வெட்கம் வந்தது. 

வண்டி கிளம்பியது. பொழுது விடிகையில் அம்பலம் போய்ச் சேர்ந்தனர். கிருஷ்ணன் தங்கிய அதே அறையில் லட்சுமியும் உடன் தங்கிக் கொண்டாள். நண்பர்கள் யாரும் இல்லை. லட்சுமி வியப்போடு கேட்டாள்.

“என்னங்க..! நா இருக்கறதால, உங்க பிரண்ட்ஸ்லாம் போய்ட்டாங்களா?”

கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “அப்டிலாம் இல்லம்மா.. இனிக்கு ஆருத்ரால்ல..! மறந்துட்டியா? தேர் பாக்க இங்க மாடிக்கு தான் எல்லாரும் வருவாங்க..! மார்கழி மாச திருவாதிரை நட்சத்திரத்துல தான் ஆருத்ரா வழக்கமா நடக்கும். அதான் எல்லோரும் வீட்டுக்குப் போயிட்டாங்க. கடை கூட இனிக்கு லீவு தான். நம்ம ராவோட வந்ததால உனக்கு தெரில. இப்போ வெளிய போய்ப் பாரேன். வீதி முழுக்க கோலம் போட்டிருப்பாங்க..” என்றான். 

லட்சுமியும் வெளியே போய்ப் பார்த்தாள். அவள் கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அத்தனைப் பெரிய ரோட்டை, ஆங்காங்கு சிலர் கூட்ட, சிலர் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். அதுவும் மகா கோலங்கள்.

இதெல்லாம் நினைக்கையிலேயே கிருஷ்ணன் அவள் பக்கத்தில் வந்து, “இந்த வீதில தான் சாமி தேர் வரும். பிள்ளையார், முருகர், சண்டிகேஸ்வரர், சிவகாமி, நடராஜர்..!” 

லட்சுமிக்கு ஆச்சரியமெல்லாம் ஒன்றுமில்லை. “போதும்.. போதும்..! என்னங்க..! நாங்க இங்கேர்ந்து தான குடியாத்தம் வந்தோம். ஆனா, இப்டி மேலேர்ந்து கோலம்லாம் நான் பாத்ததில்ல. எப்பா..! எவ்ளோ அழகு..! இங்கே இருந்து பாத்துட்டு, பொறுமையா சான்றிதழ் வாங்கிக்கிட்டா என்ன?” என்று தன் கண்களை சிமிட்டிக் கொண்டு கேட்டாள்.

கிருஷ்ணனும் அந்த சிமிட்டலைத் தாளாமல், சரி என்றான். 

தேர்த் திருவிழா..!

ராமலிங்கம், வேம்பு, வடிவேலு, பாலச்சந்தர் என அனைவரும் கடையின் முதல் மாடியில் நின்று கொண்டு தேரைப் பார்க்க ஆர்வப்பட்டார்கள். உடன் கிருஷ்ணனும் லட்சுமியும் குளித்து விட்டு, நண்பர்களோடு ஐக்கியமாக சிறிது நேரம் பற்றியது.

ராமலிங்கம் தன் மனைவியையும் மகனையும் கூட அங்கே கூட்டி வந்திருந்தான். யமுனாவும் லட்சுமியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். 

தேரின் வருகையை எதிர்ப்பார்த்து, கூட்டம், அலையில் பொங்கி வரும் நுரை போல் நாற் திசையிலும் வழிந்து கிடக்க, தேரை இழுப்பதற்கு முன் மந்திரங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன. டி.வியில் நேரடி ஒளிபரப்பிற்கு வேறு, ஏக பத்திரிகை நிறுவனங்கள் வரிசை கட்டி நின்றிருப்பது தெரிந்து. மேலே இருந்து பார்ப்பதற்கு, அனைவரும் சிறிது சிறிதாக தெரிந்தார்கள். 

தேர் வடம் இழுக்கும் சப்தம் கேட்டு, “நடராஜா..! நடராஜா..!” என்று மக்கள் பக்தியோடு சொல்ல, சப்தத்தின் எதிரொலி பிரபஞ்சத்தின் எதிரொலி போலிருந்தது லட்சுமிக்கு.

“இந்த அம்பலத்தான் தான் என்னையும் இவரையும் சேர்த்து வைத்திருக்கிறார். பிறகு, போன வேலையும் இப்போது கிடைத்து விட்டது. என் மனமார்ந்த நன்றி..!” என்று பரவசப்பட்டுக் கொண்டிருந்தாள்.

தேர் அருகே வரவர, மக்கள் கூட்டம் இன்னும் அதிகமாகவே ஆகியது. இதில் தேர் வடம் இழுக்கும் ஒரு கூட்டம் மட்டும்…

(தொடரும் – வெள்ளி தோறும்)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மலரே மௌனமா ❤ (சிறுகதை) – ✍ ராஜஸ்ரீ முரளி, சென்னை

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 10) – ✍ விபா விஷா, அமெரிக்கா