in ,

அக்ரஹாரத்தில் பிரம்மஹத்தி😊 (சிறுகதை) – ✍ தேவிகா குலசேகரன், சேலம்

அக்ரஹாரத்தில் பிரம்மஹத்தி😊 (சிறுகதை)

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 77) 

ர் திருவிழா தொடங்கிவிட்டது.  கோவில் மாட வீதிகள், பஜார் தெருக்கள், புதன் சந்தை, ஞாயிறு சந்தை நடக்கும் மைதானங்கள், ஏன் அந்த ஊர் மகாஜனங்கள் குடியிருக்கும் எல்லா தெருக்களுமே  திருவிழா களேபரத்தில் அமர்க்களப்பட்டது.

திருவிழாவிற்கு புதுத்துணி எடுத்துத் தருவதாகக் கூறி இருந்த அத்தனை அம்மா அப்பாக்களையும் வாண்டுகள் நச்சரிக்க ஆரம்பித்தனர். வாலைக் குமரிகள் பட்டுப்பாவாடை தாவணிகளுக்கு ஏற்றவாறு, எந்த கலரில் வளையலும் ரிப்பனும் வாங்கலாம் என பட்டியல் போட்டனர்.

பத்து நாள் திருவிழா குறித்து நோட்டீஸ் அச்சிடப்பட்டு, வேற்று ஊரில் உள்ள சொந்தங்களுக்கு தபால் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

தாத்தா பாட்டிகள் வேற்று ஊரில் உள்ள அண்ணா, அக்கா, தம்பி, தங்கை, மகன், மகள், பேரன், பேத்தி, மாமன், மச்சான் என அனைவரும் சொந்த ஊரில் கூடுவது கோவில் திருவிழாவில் தானே

ஒவ்வொரு வருடத்தையும் போலவே, இந்த ஆண்டும் திருவிழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தர்மகர்த்தாக்கள் தலைமையில் கோவில் நிர்வாகம் முடிவு எடுத்து,  கடைகடையாக,  வீடு வீடாக,  பண்ணைபண்ணையாக,  மஞ்சளில் பச்சை நிற எழுத்துக்கள் கொண்ட ரசீது புஸ்தகங்களை மங்களகரமான மஞ்சள் பையில் போட்டு எடுத்துக் கொண்டு வீதி வீதியாக வலம் வந்தனர்

எல்லாக் கடைகளிலும் திருவிழாவுக்கு வரும் கூட்டத்தை எதிர்நோக்கி அதிகபட்ச சாமான் செட்டுகள் ஸ்டாக் ஏற்றப்பட்டன.

பஞ்சு என்கிற பஞ்சாபகேசன் மாமா, தனது ‘சுத்த பிராமணாள் ஹோட்டல்’ கடையில், புத்தம் புது  ஸ்வீட், கார வகையறாக்களை  தயார் செய்தார். டவுனுக்குப் போய் பீபெரி காப்பிக் கொட்டையும், சிக்கிரியையும் மூட்டை மூட்டையாக வாங்கி சேமித்து கொண்டார்.

ஒவ்வொரு திருவிழாவின் போதும் அவரது ஹோட்டல் கடையில் அப்போதே  வறுத்து அரைக்கப்படும் காப்பிக்கொட்டையின் வாசத்துக்கே கூட்டம் அலை மோதும்

இது ஒருபுறம் என்றால், உமையாள் ஆச்சியின் ‘காரைக்குடி மெஸ்’ஸில்  கந்தரப்பம், கருப்பட்டிப் பணியாரம்,  அம்மிணிக் கொழுக்கட்டை,  பால் கொழுக்கட்டை,  இடியாப்பம் தேங்காய்ப்பால், மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் என்று ஆயுசு பரியந்தம் சாப்பிடும் அளவுக்கு வெரைட்டியாக இருக்கும்

ரங்கராட்டினம் சிறியதும் பெரியதுமாய் வந்து இறங்கியதும், களைகட்டத் தொடங்கியது திருவிழா

“என் தோப்பனார், ‘கல்யாணத்துக்கு இருக்கற பொண்ணு ரங்கராட்டினம் ஏர்றதாவது?’னு  சொல்லி, என்ன பல வருஷம் ரங்கராட்டினத்தில் சுத்த விடலை. ஏன்னா… நீங்களான்ன என்னெ ரங்கராட்டினம் ஏறவிடுங்கோ”னு மாங்குடி கிராமத்துல, புதுசா கல்யாணமான பாகி என்கிற பாகீரதி மாமி மையலாய்க் கேட்டதும்

முப்பத்தைந்து வயது புது மாப்பிள்ளை யக்ஞா என்கிற யக்ஞராமசுப்பிரமணியம், அதனை எடுத்துக் கொண்டதும், மாங்குடியில் ஒரு புது புரட்சி ஏற்பட்டு, ரங்கராட்டினம் ஓட்டுபவனுக்கு  ஒரு மிரட்சி ஏற்பட்டது

ஏனென்றால் பாகி மாமியை ஒரு ‘அன்எக்ஸ்பெக்டட் ப்ரீசீடென்ட்’ ஆக ஏற்றுக் கொண்டு பல மாமிகள், ‘சின்னச் சின்ன ஆசை … சிறகடிக்கும் ஆசை … முத்து முத்து ஆசை … டொடொய்ங் … முடிந்து வைத்த ஆசை … ‘ என்று மடிசாரோடு  ரங்கராட்டினம் ஏறத் தலைபட்டனர்

அப்போதிலிருந்து மாங்குடி கிராமத்தில் பாகீ மாமி பெயர் திரிந்து ரங்கராட்டினம் மாமி என்றே அழைக்கப்பட்டாள்

கோவிலிலும் ஆறு கால பூஜைக்கும் பக்தர்கள் வந்தனர். ஒவ்வொரு முறையும் தட்டில் ‘ணங் ணங்’  என்று சில்லறை விழும் சத்தத்தால் குருக்கள் குருமூர்த்தி மாமா காதில் தேன் வந்து பாய்ந்தது.

மாமா திருவிழா முடியும் வரை தட்டு சில்லரையை எடுத்துப் போக,  சதுர முனைகள் கொண்ட ஒரு பெரிய முரட்டு ஊதுவத்தி பையை நடையை சாத்தும் போது சைக்கிளில் வைத்து தள்ளிக் கொண்டு போனார்

கோவில் வாசலில் ஒத்தை நெய்விளக்கு கடை வைத்திருந்த பாப்பம்மா, இப்போது ஒவ்வொரு மாட வீதியிலும் நெய்விளக்கு கடை போட்டு, நெய்யில் டால்டாவைக் கலந்தடித்து நல்ல லாபம் கண்டாள். 

கூடவே வியாபாரத்துக்காக “கல்யாண அகல் ஏத்துங்கம்மா!  கல்யாண அகல் ஏத்துங்கப்பா” என்று ஒரு ‘ப்ராண்ட் க்ரியேஷன்’ செய்து கட்டிளம் கன்னியரையும் காளையரையும் கூவி அழைத்து, டீக் கடைகளில் இருந்த உதவாத தகர மேஜைகளை வாங்கிப் போட்டு,  ‘டெம்பரரி’ விளக்கேற்றும் மாடங்களைத் தயார் பண்ணினாள். 

இந்த ‘காம்போ பேக்கேஜினால்’  அங்கே கன்னியரும் காளையரும்,  பரம பவ்யமாக விளக்கேற்றி,  குடும்பத்துக்கு ஏற்ற குலக் குத்துவிளக்குகளாக  ‘ஆக்ட்’ கொடுத்ததில், பாப்பம்மாவின் ‘சேல்ஸ் டெக்னீக்’ சூடு பிடித்து. பல ‘சம்பந்தங்கள்’ உருவாகின.

இந்தப் புறம் பஞ்சு மிட்டாய்க் கடைகளில் புசுபுசுவென கூட்டம். பால் ஐஸ்,  ரோஸ் மில்க் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாயில் ஐஸும் ஜலமும் சேர்ந்து ஜொள்ளாக ஒழுக மூன்று சக்கர சைக்கிளில், வட்ட வடிவ மூடி கொண்ட ஐஸ் பெட்டியை வைத்துக் கொண்டு,  ஒரு பத்து பதினைந்து இடத்தில் பங்குனி வெயிலிலே குளுகுளுவென்று ஐஸ் வியாபாரம் ஜோராக நடைபெற்றுக் கொண்டிருந்தது

“கயிறு மேலே நடக்குறா பாரு கடல்கன்னி. இவ காத்துலே நடப்பா, ஆத்துலே மிதப்பா. குட்டிக்கரணம் போடு கடல்கன்னி! கயிறு மேலே ….
குட்டிக்கரணம் போடு கடல்கன்னி” என, கலர் கலராய் தலைப்பாகை கட்டி ஒரு பட்டாணிக்காரன் பாட்டு பாட

நீண்ட கழியை கையில் பிடித்த சிறுமி, மெல்லிய கயிற்றில் நடுவழி வந்ததும்,  அந்தரத்தில் குட்டிக்கரணம் போட, எங்கே சிறுமி விழுந்து விடுவாளோ என பதைத்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்

புதிதாகத் தைத்த,  ஜரிகை போட்ட பட்டுப் பாவாடை தாவணியில்,  நீள தலைமுடியை  குதிரைவாலாய் மடித்துப் போட்டிருந்த பூமாவை, அவள் பக்கத்து வீட்டு செண்பகத்தம்மாவின் அக்கா பூங்காவனத்தம்மா, போன வருஷம் திருவாரூர் போகும் பஸ் கண்டக்டரோடு ஓடிப் போன பூமாவின் சித்தி மகள் பாமாவைப் பற்றி, ‘ப்ரிலிமினரி இன்டர்ரோகேஷன்’ பண்ணிக் கொண்டிருக்கும் போது தான் அது நடந்தது

சாம்பமூர்த்தி என்கிற சாம்பு மாமா,  வயசு முப்பத்தஞ்சு. அப்போது தான் பஞ்சு மாமா ஹோட்டல் கடையில் நெய் ரவா தோசையும்,  அடையும், முள்கத்தரிக்காய் கொத்சும் மொசக்கி விட்டு செகண்ட் டோஸ் காப்பி முடித்து திருவிழாக் கூட்டத்தில் போய்க் கொண்டிருந்தவரை, கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி வாண்டு தடுத்து நிறுத்தியது

“மாமா, உங்களுக்கு ஒரு மாமி  ஒரு சேதி சொல்லி அனுப்பினா”

“ஏன்டா… செத்த முன்னாடி தானே தப்பிச்சுண்டு  வந்தேன்! அதுக்குள்ள ஒன்னெ அனுப்சுவுட்டுட்டாளா மாகாளி”

“அதெல்லாம் உங்க ஆத்து மாமி கூப்பிடல மாமா. இது வேற மாமி”

சாம்பு மாமா மனசுல சில்லுன்னு ஒரு சிலிர்ப்பு

“பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா?” முதல் மரியாதை சிவாஜி மாதிரி நின்னார் மாமா

“கூப்பிட்டது யார்ரா அம்பீ, எங்காத்து மாமிய தெரியுமா தெரியாதா நோக்கு?” என வினவினார்

“உங்காத்து மாமிய நேக்கு நன்னா தெரியும் மாமா. பூக்காரக்காவோட,  கறிகாய்க்காரரோட,  சைக்கிள் ரிக்க்ஷா மாமாவோட, தெனக்கும் சண்டை போடுமே சம்பூரணி மாமி. அவா தானே உங்காத்து மாமி?”

“டேய் கிச்சா!  என்ன ‘ஆக்யூரிட்டா’  எங்காத்து மாமிய தெரிஞ்சு வச்சிருக்கே!  பாக்கற ஒனக்கே இப்படி இருக்குன்னா, கூடவே வாழற நேக்கு எப்படி இருக்கும்டா!” சாம்பு மாமா சுயபச்சாதாபத்தில் கோர்க்க,  ‘செவாலியே’ சிவாஜியை விட அதிக உணர்ச்சி காட்டினார்

“அதெல்லாம் தெரியாது! இந்த புது மாமி மூணு முழம் பூவும் முக்கால் கிலோ அல்வாவும் வாங்கி ஒங்கள டூரிங் டாக்கீஸ் சாயந்தரம் ஷோவுக்கு வரச் சொன்னா”

அல்டிமேட் ஸ்டார் அஜித் போல கிச்சாவை உற்றுப் பார்த்தார் சாம்பு மாமா. ‘இதென்ன கலாட்டா!’  மல்லிப் பூவும் அல்வாவுமா

‘நாகிர் தானா திரனனா …  னா ….!”நாகிர் தானா திரனனா … னா! அவரது ஆசை மனம் ஆட்டம் போட்டது.

சம்பூரணி கல்யாணம் ஆன புதிதில் சாம்பு மாமாவுக்கு உடம்பு துவட்டும் போது, ‘மன்மதனுக்கு மாலையிட்டா…. ள் …. கோதை நாயகி மன்மதனுக்கு மாலையிட்டா… ள்’ என்று பாடியது ஞாபகத்துக்கு வந்தது

“என் தம்பி சாம்பு திருமண் கொழச்சு கோபி இட்டுண்டான்னா  சாக்ஷாத் பெருமாளே தான்!”  என்று கோமூக்கா கையால் திருஷ்டி எடுத்து நெட்டி முடிப்பாள்.  

அப்படிப்பட்ட என் அழகுக்கு மங்கையர் மயங்குவதில் என்ன குற்றம்! இருந்தாலும் சந்தேக சந்தேகமாய் வந்தது சாம்புவுக்கு

“டேய் கிச்சா!  அந்த புது மாமி எந்த ஆத்துல இருக்கா?’ என சும்மா ‘லைட்டாக’ கேட்டு வைத்தார்

“அந்த மாமிய இந்த ஊரு இல்ல மாமா. வடக்கு மாடவீதியில் வக்கீலாத்து மாமா வீட்டுக்கு வந்திருக்கிற ‘கெஸ்ட்’”

“அது சரிடா!  என்னாண்ட தான்  சொல்லச் சொன்னாளான்ன?” செருப்பைக் கழட்டி விட்ட வாக்கில் கால் கட்டை விரலால் கோலம் போட்டார் சாம்பு

“ஆமாம், அந்த மாமி ‘குச்சிஐஸ்காரனாண்ட தேஜஸா ஒரு மாமா தொப்பையோட நிக்கராறோல்லியோ… அவரண்ட சொல்லிட்டு வாடா’ன்னு எனக்கு ரெண்டு ரூபாய் கொடுத்தாளே”

ரோஸ் கலர் இரண்டு ரூபாவை காட்டி,  “டேய் நில்லுடா” என்று சாம்பு மாமா கூப்பிடக் கூப்பிட, கிச்சா ஓடிப் போயிட்டான்.

‘சரி யாருன்னு தான் போய் பார்ப்போமே! டூரிங் டாக்கீஸில் சாயந்தர ஆட்டத்துக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே’ என்று வடக்கு மாட வீதி நோக்கி கம்பீர நடை நடந்தார்  பத்து பதினைந்து வயது குறைந்து விட்ட மாமா.

குறுக்கும் நெடுக்குமாய்  போய் ராயர் கடையில் ஒரு காப்பி வாங்கி குடித்து கொண்டே நோட்டம் பார்த்தார். வக்கீல் வீடு திறந்து கிடந்ததே ஒழிய, ஒருத்தர் கூட வெளியே வரவில்லை.

ஆயிற்று,  சாயந்தரம் ஆட்டத்திற்கான நேரம் வந்து விட்டது. சமர்த்தாக வீட்டிற்குச் சென்று இரவு டிபன் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்,  இல்லையென்றால் யாரான ஒரு ஆள விட்டு நான் ஆசையாக சினிமா பார்க்கும் நேரம் சம்பூரணி ‘சம்மன்’ அனுப்பி விடுவாள்.   

பலதும் நினைத்தவாறே வீட்டிற்குப் போனால் வீடு பூட்டியிருந்தது.  பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி, “சம்பூவோட சினேகிதி வந்திருக்காளாம். 9 மணிக்குதான் வருவாளாம். இந்தாங்கோ சாவி” என்றாள்

“வேண்டாம் மாமி, நேக்கும் வெள்ளெ வேலை இருக்கு, அவள சாப்டுட்டு படுத்துக்கச் சொல்லுங்கோ”

‘சரி… கரெக்டா என்னை பார்த்து பூவும் அல்வாவும் வாங்கி கொடுக்கச் சொல்லிய அந்த பைங்கிளி யாராக இருக்கும்?’  சாம்புவின் கற்பனையில் லலிதா பத்மினி ராகினி ரேஞ்சுக்கு அழகிகள் வந்து போனார்கள்.

பஞ்சு மாமா கடைக்குச் சென்று சுடச்சுட கோதுமை அல்வாவும்  மூன்று முழம் குண்டு மல்லிப்பூவும் வாங்கிக் கொண்டார்

டூரிங் டாக்கீஸில் ‘பந்தாவாக’ பெஞ்சு டிக்கெட் எடுத்துக் கொண்டு, பெண்கள் உட்காரும் இடத்தையும் ஆண்கள் உட்காரும் இடத்தையும் பிரிக்கும் வகையில்,  நடுவில் ஒரு அரை செங்கல் சுவர் இடுப்பளவு இருப்பதில், தன்னை அந்தப் ‘புது அவள்’  பார்க்க ‘ஈசியாக’ இருக்க ஓரமாக உட்கார்ந்து கொண்டார்

சற்று நேரத்திற்கெல்லாம் இன்னொருவர் இவர் வயதை ஒத்தவர்,  ஏனோ பம்மிப் பதுங்கி வந்தார். முன்பின் இந்த ஆளை நம்ம ஊரில் பார்த்ததில்லையே …. அவர்  மூன்று நான்கு வரிசை முன்னால் போய் உட்கார்ந்தார்.

கையிலே  துணிப்பை.  அதற்குள் எட்டி எட்டி,  எதையோ பார்த்த வண்ணம் இருந்தார். சாம்புவுக்கு பொறி தட்டியது. யாராவது தீவிரவாதியாக இருப்பானோ?  கோவில் திருவிழாவில் வெடிகுண்டு வைத்திருப்பதற்காக வந்திருப்பானோ? 

நினைத்த மாத்திரத்திலேயே சாம்பு மாமாவுக்கு வேர்த்துக் கொட்டியது.  மனதில் ஹீரோயிஸம் வெடித்தது. நானும் ரவுடி தான் என்பது போல நானும் ஒரு துப்பறியும் சாம்பு தான் என்று எண்ணிக் கொண்டே அவனை கவனிக்கத் தொடங்கினார்

அவன் கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை பின்னாடி பார்ப்பதும் பைக்குள் நோட்டம் விடுவதுமாக இருந்தான்.  ஒருவேளை ‘டைம் பாம்’ ஆக இருக்குமோ? சாம்பு மாமாவுக்கு மூக்கு சிவந்து விடைத்தது. 

போட்டு வைத்த காதல் திட்டம் எல்லாம் அவருக்கு மறந்தே போயிற்று. ஊரையும் திருவிழாவுக்கு கூடியுள்ள மகாஜனங்களையும் காக்கும் தார்மீகப் பொறுப்பு அவருக்கு இருந்தது

விளக்கு அணைக்கப்பட்டு நல்வரவு ஸ்லைட் போடப்பட்டது..   அந்த தீவிரவாதி இருட்டியது தான் சாக்கு என  மெல்ல எழுந்து சாம்புவுக்கு முன்னாடி வந்து அமர்ந்து தலையை அந்தத் தடுப்பு சுவர்ப் பக்கம் கொண்டு போய், ‘இஸ் இஸ் இஸ் இஸ்’ என கிசுகிசுத்தான்.

‘தீவிரவாதி கூட்டாளியை அழைத்து ரகசிய சமிக்ஞை கொடுக்கிறான்’ சாம்புவின் மூளையில் சிவப்பு பல்பு சுடர் விட்டு எரிந்தது

அவ்வளவு தான், சாம்பு, “திருடன் திருடன்” என கத்திக் கொண்டே  பெஞ்சின் மேல் ஏறி தடுப்புச்சுவர் மேல் குதித்து தீவிரவாதியின் காலரை கொத்தாகப் பிடித்துக் கொண்டார்

அந்தப் பக்கம் பெண்மணிகள் வீல் வீல் என கூக்குரல் இட்டனர்.

“எங்கே திருடன்?” என ஆண் பிள்ளைகள் திபுதிபுவென சாம்புவையும் அவர் பிடித்திருந்த ஆளையும் சூழ்ந்து கொண்டனர்.

“விஷ் விஷ்” விசில் சத்தம் காதைப்பிளந்தது.  டூரிங் டாக்கீஸ் குண்டு பல்புகள் படபடவென போடப்பட்டு படம் நிறுத்தப்பட்டது. அகப்பட்டவன் திருதிருவென முழித்தான். நாலு பேர் தர்ம அடி கொடுக்கத் தலைப்பட்டனர். 

சாம்பு, “இருங்க இருங்க, யாரும் அவன்கிட்ட போகாதீங்க. அவன்கிட்ட டைம் பாம் இருக்கு” எனவும்

“ஐயோ ஐயோ” என்று எல்லோரும் திடுக்கிட்டு அரைகாத தூரம் தள்ளிப் போனார்கள்

“இல்லை… அப்படி இல்லை” என்று பிடிபட்டவன் கூவ,  “அப்போ என்னடா உன் பைல  திருட்டுத்தனமா பாக்குற? பையை திறந்து காட்டுடா” என சாம்பு சிங்கம் பார்ட் 2வாய் கர்ஜிக்க

“நிறுத்துங்கோ… அவர் எங்க ஆத்துக்காரர். அவர் ஒண்ணும் திருடன் இல்லை” 

குரல் வந்த திசையை எல்லோரும் பார்க்க அங்கே அசப்பில் அவ்வை சண்முகி போல ஒரு மாமி நின்றிருந்தாள்,  சேப்பா,  ஆஜானுபாகுவா. அவள் பக்கத்தில் நின்றிருந்த அவள் …. !

“ஆமாம்… இவொ என் பால்ய சினேகிதி.  ஆத்துக்காரரோட நம்ம ஊர் திருவிழாவுக்காக ஸ்ரீ வாஞ்சியத்திலேந்து  வந்திருக்கா.  வடக்கு மாடவீதி வக்கீல் வரதராஜ மாமா ஆத்து கெஸ்ட்” என்றவள், சாட்சாத் சம்பூரணி மாமி தான்

சகதர்மிணியை பார்த்ததும் வெலவெலத்துப் போனது சாம்பு மாமா தான்

“அது சரீப்பா… ஒம்  பயில என்ன தான் இருக்கு? காட்டு!”  என்று கேட்டான் டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிக்கும் கோவிந்து.

இப்போது அந்த திருடன் ஙே என்று முழித்து திக்குமுக்காடிப் போனான். கையிலிருந்த மஞ்சப்பையை  இறுக்கிப் பிடித்துக் கொண்டான். கோவிந்து அசராமல் பையைப் பிடுங்கி உள்ளே பார்த்தவன் கெக்கே பிக்கே என்று சிரிக்க ஆரம்பித்தான்.

அவன் அருகில் இருந்த பாஷா பாய் வெடுக்கென அந்தப் பையை பிரித்துப் பார்த்தவர் “யா அல்லாஹ்! இதுக்கு போய் இவ்வளவு பேஜாரா?” என்று தாடியை தடவிக் கொண்டு இளித்தார்.

சஸ்பென்ஸ் தாளமுடியாத சாம்பு பையை ஒரே எட்டில் இழுத்து உள்ளே பார்வையை விட்டவர் வெலவெலத்துப் போனார்

“இங்கே குடுங்கோ பையை, ஆளாளுக்கு சிரிக்கறது எதுக்கு. எங்க ஆத்துக்காரர் தான் எனக்கு ஆசையா மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிண்டு வந்திருக்கார். ஆத்துல சித்தெ கூட ‘ப்ரைவஸி’ இல்லை” என்றாளே அந்த அவ்வை சண்முகி மாமி

சட்டென்று சாம்பு திருடனைப் பார்க்க, அவனும் இவரைப் போலவே பெரிய தொப்பையுடன் இருந்தான். நிமிஷத்தில் எல்லாம் விளங்கிவிட்டது சாம்புவுக்கு

பிரம்மஹத்தி அந்த கிச்சாப்பயல் செய்த கோளாறு தான் இது. நல்லவேளை, நொடிப் பொழுதில் தன் மானம் போயிருக்கும்

பிறகு அந்த அவ்வை சண்முகி மாமியும் அவள் மிஸ்டரும்,  அவர்களுக்கு இரண்டு வரிசை பின்னாடி சாம்பு மாமாவும் சம்பூ மாமியும் தடுப்புச் சுவருக்கு அந்தாண்டை இந்தாண்டையுமாய் மிச்சப் படம் பார்த்ததையும், மாமா தன் பையிலிருந்த மூன்று முழம் பூவையும் பாரியாளுக்கு கொடுத்து கரெக்ட் பண்ணதையும் சொல்லவா வேண்டும்

அந்த நேரம் பாத்து தானா அந்த பிரம்மஹத்தி கிச்சா ஓடிவர வேண்டும்?

சாம்பு சமயோஜிதமாக அந்த முக்கால் கிலோ அல்வா பாக்கெட்டையும் அவன் கையில் திணிக்க,  பையன் அப்படியே ஆஃப் ஆகி பொட்டலத்தை வாங்கிண்டு ஓடியே போனதில், சாம்புவின் குட்டு அம்பலம் ஆகவில்லை

‘தேங்க்ஸ் டூ அக்ரஹாரத்தில் பிரம்மஹத்தி’

வேணும் சுபம்!

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கோடை மழை (சிறுகதை) – ✍ துரை.தனபாலன், திண்டுக்கல் மாவட்டம்

    மௌனமாய் ஒரு நீதி (சிறுகதை) – ✍ ஜெயா சிங்காரவேலு, கரூர்