sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

மௌனமாய் ஒரு நீதி (சிறுகதை) – ✍ ஜெயா சிங்காரவேலு, கரூர்

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 78) 

ந்த கிராமம் பாரதிராஜா படத்தில் வரும் கிராமம் போல் பச்சைப் பசேலென்ற வயல்களும், நீர் நிறைந்த ஆறுகளும் உடையது கிடையாது

மழை வந்தால் தான் விவசாயம். மற்ற பொழுதுகளில் விவசாய கூலியாக அந்த ஊர்மக்கள் பக்கத்து மாவட்டங்களில் வேலை செய்ய கிளம்பி விடுவார்கள்

பக்கத்து டவுனில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தாலும் பெரும்பாலும் ஊர் பெரியவர்கள் கூடிப் பல பிரச்சனைகளைப் பஞ்சாயத்து செய்வது வழக்கமான ஒன்று.

இன்றும் ஒரு பஞ்சாயத்துக்காக ஊர் பெரியவர்கள் அந்த ஊரின் பள்ளிக் கூட ஆலமர நிழலில் அமர்ந்திருந்தனர். சம்பந்தப்பட்ட பெண் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. திருமணம் ஆகாதவள்

புகார் என்னவென்றால், அவள் இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் யாரென்று கண்டறிய வேண்டும்.

அவள் பெயர் கௌரி, பிறந்ததில் இருந்து வாய் பேச வரவில்லை. வேலைகள் அவ்வளவு சுத்தமாக செய்வாள்

அவளின் அப்பா கோவில் பூசாரி, அவளுக்கு தங்கை ஒருத்தி அக்கா ஒருத்தி உண்டு. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது

இவளுக்கும் மாப்பிள்ளை வந்தது. இவள் தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து விட்டாள்.

தவறி கூட யாரும் அவளை யாரும் வேறு நோக்கத்தில் பார்க்க முடியாது. கண்டபடி  கத்தி சந்தி சிரிக்க விட்டுடுவாள்

இப்படி ஒரு வழக்கு, அதுவும் கௌரி கொண்டு வருவாள் என்று யாரும் நினைக்கவேயில்ல. என்ன செய்வது? பேதைப் பெண் ஆசை வார்த்தையில் மயங்கி இப்போது இங்க நிற்கிறாள் என்று பெண்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள்.

இந்த விஷயம் முதலில் கௌரியின் தங்கை சுமதிக்குத் தான் தெரிய வந்தது. அவள் பிள்ளைப்பேறுக்காக இங்கு வந்திருந்தாள். இவள் குளிக்கும் நாள் தள்ளிப் போனது அவளுக்குத் தெரிந்து கேட்டாள்.

இன்னும் தலைக்குக் குளிக்கும் சமயம் வீட்டுக்கு வெளியில் இருப்பது அவர்கள் கிராமத்தில் பழக்கமான ஒன்று. ஏதோ சொல்லி சமாளித்தாள் கௌரி.

“ஏதோ நீ தப்பு செய்யற மாதிரி இருக்கு ஒழுங்கா உண்மையைச் சொல்லு” என்றாள் சுமதி.

அப்போதும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள் கௌரி.

“தயவு செய்து உண்மையை சொல்லு, அவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்”

நிமிர்ந்து பார்த்தாள் கௌரி, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தங்கை நமக்கு புத்தி சொல்ற மாதிரி நடந்துக்கிட்டேனே. உண்மையைச் சொல்லிட வேண்டியது தான் என முடிவெடுத்து “ஆமாம்” என்று ஒப்புக் கொண்டாள்

“யார் அவன்?”

“நம்ம பக்கத்து வீட்டு மாமா” என்று சைகையில் கூறினாள்

சில வார்த்தைகள் அவளால் பேச முடியும். மாமா, அம்மா என்று சொல்லுவாள்.

“அவனா? உனக்கு அறிவேயில்லையா? அவன் பொண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.இப்போது போய் உன்னை ஏமாத்தி இருக்கானா? பாவிப்பய. அவன் பொண்டாட்டி இதுக்கு என்ன சொல்லப் போறாளோ? சும்மாவே அவளுக்கும், நம்ம குடும்பத்துக்கும் ஆகாது”

அவள் கர்ப்பம் தரித்தது தெரிந்தவுடன், அவள் அப்பா கந்தசாமி, “சத்தம் போடாமல் கலைத்து விடலாம்” என்று யோசனை சொன்னார்

இரண்டு நாளாக வீட்டில் ஒருவரும் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஊரில் இருக்கிற அக்கா சித்ராவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவளும் வந்து கௌரியைத் தன் பங்குக்கு இரண்டு  திட்டி விட்டு, முதுகில் நாலு அடி போட்டு சத்தமாக அழுக ஆரம்பித்தாள்.

கருவைக் கலைக்க கௌரி சம்மதிக்கவில்லை.

“இனி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, இன்னிக்கு தெரியலன்னாலும், நாளைக்கு தெரியத் தான் போகுது. கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்” என்று சொன்னாள் சித்ரா

“அவனிடம் பேசிப் பார்க்கலாம்” என்றார் கந்தசாமி.

“அவன் மனைவிக்குத் தெரியாம கூப்பிட்டு கேப்போம்” என்றாள் சுமதி.

இரு குடும்பங்களும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான் என்ற முறையில், உறவு சொல்லி அழைத்துக் கொள்வர்.

அவன் பெயர் ராகவன். அவன் ஆடு, மாடு மேய்த்து வருகிறான். அவன் மனைவி கோழிகள் வளர்த்து வருகிறாள். முட்டையும், கோழியும் வியாபாரமும் செய்வாள். கொஞ்சம் நிலமும் இருக்கிறது, அவர்கள் சாதியில் கொஞ்சம் வசதியானவர்கள் இவர்கள்

ராகவனை மனைவி வெளியே சென்றிருக்கும் சமயம் கூப்பிட்டார் கந்தசாமி.

“கௌரி மாசமா இருக்கா, நீதான் காரணம்னு சொல்றா. நீ என்ன சொல்ற?” என்று நேராகவே கேட்டு விட்டார்

“கருவை கலைக்கச் சொல்லுங்க, காசு வேணா தரேன். நான் இல்லன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க. ஒழுங்கா நான் கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு பேசாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது” என்றான் ராகவன்.

ஒன்றும் பேச முடியாமல் தலையில் அடித்துக் கொண்டார் கந்தசாமி.

‘ஐயனாரே உனக்குத் தினமும் பூசை போடறேன். ஊர்ல காசு, பணம் இல்லைன்னாலும் மதிப்பு குறையாமத் தான் வச்சிருக்காங்க. எல்லாத்தையும் குழியில் தோண்டிப் புதைச்சிட்டாளே பாவி’ என்று கௌரியை அவர் பங்குக்கு அடித்துத் துவைத்தார். 

“இது தான் என் முடிவு, பத்தாயிரம் தரேன், பேசாம கருவைக் கலைச்சிட்டு வேற மாப்பிள்ளைப் பார்த்து சத்தம் போடாம கட்டி வச்சிருங்க”

கண்களில் வெறியுடன் கத்திக் கொண்டே அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் கௌரி. அவன் அவளை உதறி விட்டு வெளியேறினான்

அழுது அழுது முகம் வீங்கிப் போன கௌரிக்கு, சித்ரா பழைய சாதத்தில் மோர் விட்டுக் கரைத்து குடிக்க எடுத்து வந்தாள்

“அம்மா இறந்து பத்து வருடம் ஆகுது. அவ இருந்தா உனக்கு ஏதாவது ஒரு வழி பண்ணியிருப்பா. நானும் சுமதியும் உன் கண்ணு முன்னாடி சந்தோசமா இருக்கிறதைப் பார்த்து உனக்கும் ஆசை வந்திருச்சு. போனது போகட்டும், இந்த கருவை கலச்சிடுவோம்” எனவும், தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள் கௌரி

வேறு வழியில்லாமல் பஞ்சாயத்து கூட்டி இருந்தனர்

ராகவன், அவன் மனைவி குமாரி, மச்சினன் ராஜா ஒரு புறமும், கௌரி, சுமதி, சித்ரா, கந்தசாமி ஒரு புறமும் நின்றிந்தார்கள்.

புகார் சொன்னவுடன், முதலில் கத்தியவள் ராகவன் மனைவி குமாரி தான். கௌரியை இழுத்துப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்

“வாய் கூசாம இப்படிப் பொய் சொல்லுறீயே, அதான் வாயே பேச வராதே. உனக்கு நான் என்னடி பாவம் பண்ணினேன். அபாண்டமா என் புருசன் மேல பழி சொல்றீயே”

அங்கிருந்தவர்கள் குமாரியிடமிருந்து கௌரியைப் பிரித்து குமாரியை அதட்டினார்கள்

“நாங்க விசாரிக்கத் தான் கூப்பிட்டு இருக்கோம். பேசாம அங்க போய் நில்லுமா”

“எங்க பணத்து மேல இவங்களுக்கு ஒரு கண். அந்த ஊமைப் பொண்ணு என்னப் பார்த்துக் கூட தான் சிரிக்கும், அது குணம் சரியில்லாத பொண்ணு” என்று கூறினான் ராஜா.

கூட்டத்தில் கூப்பிட்டு விசாரித்தவுடன், துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்தான் ராகவன், ‘தான் இதற்கு பொறுப்பில்லை’ என்று.

கௌரியிடம், “உன் தரப்பு சொல்லு?” என்றார்கள்.

அவள் எல்லோர் முன்னும் காலில் விழுந்து கதறினாள். ராகவன் சட்டையைப் பிடித்து இழுத்து, “இவன்தான் என்னைக் கெடுத்தான்” என்று கூறினாள்.

“ஒரு தாலியைக் கட்டி விடு, அந்த புள்ள பாட்டுக்கு வேல பார்த்துப் பொழைச்சுக்கும். உன் சொத்து எதுவும் தர வேணாம்” என்று தீர்ப்பு சொன்னார்கள்.

 “முடியவே முடியாது, இதுக்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன். நாளைக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணும், இப்ப போய் இந்த ஆளுக்குக் கல்யாணமா? அதுவும் என் இடத்துக்கு எவளையும் வர விட மாட்டேன். நான் இந்த பஞ்சாயத்துப் பேச்சு எல்லாம் கேட்க மாட்டேன், வேணும்னா போலீசுல கேஸ் கொடுங்க, நான் கோர்ட்டில் பார்த்துக்கிறேன்” என்றாள் குமாரி

“நாங்க ஒரு தீர்ப்பு சொன்னப்புறம் நீ என்னமா போலீஸ், கோர்ட்ன்னு சொல்ற?”

“நாங்க போலீஸ்ல கேஸ் கொடுக்கிறோம்” என்றாள் சித்ரா

“நீங்க இரண்டு பேரும் ஊர் வழக்கத்துக்கு மாறா பேசறீங்க. அப்புறம் அதால வர சாதக, பாதகத்துக்கு நாங்கப் பொறுப்பேற்க மாட்டோம்” என்று பஞ்சாயத்தார் கூறினார்கள்.

போலீஸ் ஸ்டேஷக்கு போய், மாற்றுத் திறனாளிப் பெண் கற்பழிப்பு என்று வழக்கு பதிந்தார்கள். அவர்களுக்கு வழக்கு ஏற்று நடத்த அரசாங்கம் ஒரு வக்கீல் ஏற்பாடு செய்தது

கௌரி சார்பாக சாட்சி சொல்ல பதினைந்து பேரை ஏற்பாடு செய்யச் சொன்னார் வக்கீல் குணா.

தன் காதில் கிடந்தத் தோட்டை அடமானம் வைத்து, காசு வாங்கி, தன் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என பதினைத்துப் பேரைக் கோர்ட்டுக்குக் கூட்டி சென்றாள் சித்ரா.

ராகவன் மச்சினன் ராஜா, “நான் பார்த்துகிறேன் மாமா. இன்ஸ்பெக்டர்,வக்கீல் எல்லாரையும் நான் கவனித்துக் கொள்கிறேன். இந்த கேஸ் என் பொறுப்பு” என்று சொன்னான்.

ராஜாவுக்கு ராகவன் மகள் சுந்தரி மேல் ஆசை. ‘அவளைக் கல்யாணம் செய்யணும்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்த சமயம் மாமாவுக்கு உதவினால், தன்னை மாப்பிள்ளையாக்கச் சம்மதிப்பார் என்று கணக்குப் போடுகிறான்.

ஒரு புறம் நீதியும், மறுபுறம் பணமும் மோதிக் கொண்டன. கௌரியின் வக்கீல் தனக்கு காசு எதுவும் வேண்டாம் என கூறி விட்டார்.

நீதிபதியின் முன்னே சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கௌரி அழுது கொண்டே இருந்தாள்.அவளையும் விசாரித்தனர்.

ராகவனிடம் விசாரித்த போது, “அவ பொய் சொல்றாங்க, என் பொண்டாட்டியைத் தவிர வேறு யாரையும் கண் கொண்டு பார்க்க மாட்டேங்க” என்று கூறினான்.

நீதிபதி பெண் ஆதலால் இந்த வழக்கில் தன்னால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். மாற்றுத்திறனாளி பெண் என்பதும் கூடுதல் கனிவுடன் தன் தீர்ப்பைக் கூறினார்.

கௌரி கர்ப்பமாக இருப்பதால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு பரிந்துரைத்தார் நீதிபதி

 “குழந்தையின் ரத்த மாதிரியும், ராகவன் ரத்த மாதிரியும் எடுத்து சோதித்துப் பார்ப்பார்கள், அப்போது குழந்தைக்கு யார் அப்பா என்பது தெரிந்து விடும்” என்று நம்பிக்கை அளித்தார் வக்கீல் குணா

உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று நிம்மதி அடைந்தார்கள் கந்தசாமி குடும்பத்தினர்.

ஏழைகளுக்கு நீதியும் பாரபட்சம் என்று கையூட்டு பெற்ற இன்ஸ்பெக்டர் நிரூபித்தார்.

வீட்டுக்கே வந்து விசாரணைக்கு அழைப்பதாக கூறி கான்ஸ்டபிள் கௌரியையும், சித்ராவையும் அழைத்துச் சென்றார்.

“ஒழுங்கா இந்த கேசில் இருந்து விலகிடுங்க, உங்களுக்குத் தேவையான காசு வாங்கித் தரேன்” என்று கூறினார் இன்ஸ்பெக்டர்.

நடுவில் கேசை வாபஸ் வாங்கக் கூடாது என்று வக்கீல் ஏற்கனவே கூறியிருந்தார். அவர்களாக சமாதானம் பேச வந்தால், “என்னிடம் சொல்லுங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றும் கூறினார்.

“எங்க வக்கீல் சொல்லி இருக்கார் சார், கேசை வாபஸ் வாங்கக் கூடாதுன்னு” என்றாள் சித்ரா.

இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு ஒன்றும் அவர்களிடம் பேசவில்லை. “நீங்க கிளம்புங்க” என்று சொல்லிவிட்டார்.

யார், யாருக்கு எவ்வளவு கொடுக்கணுமோ கொடுத்து நீதியை வாங்கி விட்டனர். ரத்த மாதிரி ஒத்துப் போகவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார் நீதிபதி.

நீதிமன்றத்தின் வாசலில் கௌரி ராகவனின் காலில் விழுந்து கதறியதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஊருக்குள் கௌரியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு பேசினர். அவள் முன்னே போக, பின்னால் சிரித்தார்கள்.

சுமதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பிறந்த பத்தாம் நாளில் கணவனும், மாமியாரும், “நாங்க பார்த்துக் கொள்கிறோம்” என்று கூட்டிச் சென்றார்கள்.

சித்ராவும் தன் வீட்டுக்குச் சென்று விட்டாள். கந்தசாமிக்குப் புதிதாக குடிப்பழக்கம்  வந்தது. கௌரி வயல் வேலைக்கும், சில வீடுகளில் பாத்திரம் விலக்கியும் தன் ஜீவனை  ஓட்டிக் கொண்டிருந்தாள்.

வழக்கு முடிந்த மறுமாதமே ஊரே வியக்கும் வண்ணம் தன் மகள் சுந்தரிக்கும், ராஜாவுக்கும் திருமணம் செய்து வைத்தான் ராகவன்.

ராகவனுக்கும் குமாரிக்கும் எந்தவித குற்ற உணர்வும் இல்லை.

வயலில் வேலைப் பார்க்கும் போதே பிரசவ வலி எடுத்து அங்கேயே பெண் குழந்தையும் பெற்றாள் கௌரி.

அப்பன் பெயர் தெரியாதப் புள்ள என்ற பெயரோடு வளர்ந்தாள் குழந்தை. தன்னைப் போலவே தன் மகளுக்கும் பேச முடியாமல் இருக்குமோ என்று பயந்தாள் கௌரி.

நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வயதில் அழகாக பேசியது. ‘மீனா’ என்று பெயர் வைத்தாள்

மீனா ராகவனை உரித்து வைத்திருந்தது. அவன் நிறம், அவனைப் போலவே கைகளில் ஆறு விரல்கள், அவன் முகச்சாயல் எல்லாம் கௌரியின் நியாயத்தைச் சொல்லாமல் சொல்லியது

ஊர் மக்கள் “இந்த புள்ள அப்படியே ராகவனை உரிச்சு வைச்சுருக்கு” என்று பேசிக் கொண்டார்கள்.

ராகவனை மாடு முட்டி வயிற்றில் காயத்துடன் கிடந்தான். ரத்தம் நிறைய போய் இருந்தது. மனசு கேட்காமல் கௌரி சென்று பார்த்தாள். அப்போதும் அவளை விரட்டி அடித்தாள் குமாரி.

குமாரி வெளியே சென்றிருந்த நேரம், கௌரி அவனைப் பார்க்கச் செல்ல, ராகவன் தன்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டான்.

அருகருகே இருந்தும் தன் மகளை இப்போது தான் நேராகப் பார்த்தான். ஊரில் உள்ள சிலரைக் கூப்பிட்டு, “நான் தான் மீனாவுக்கு அப்பா” என்று கூறினான்.

காலம் கடந்த நீதி. “மீனா என்னுடைய மகள்” என்று அவன் கைப்பட எழுதி வாங்கினார்கள்.

இது மட்டும் போதும் என்று கௌரி அங்கிருந்து கிளம்பினாள். மெல்ல ராகவனின் உயிரும் பிரிந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Similar Posts

One thought on “மௌனமாய் ஒரு நீதி (சிறுகதை) – ✍ ஜெயா சிங்காரவேலு, கரூர்
  1. இந்த கதையை எழுதிய கதை ஆசிரியருக்கு , D.N.A Test பற்றி தெரியவில்லை. குழந்தை பிறந்த பிறகு தான் செய்யப்படும் . அதை இங்கே யாரும் செய்வதில்லை . பெரிய நகரங்களில் மட்டுமே செய்வார்கள் . மேலும் அதில் கதையில் எழுதி இருப்பது போல் பணம் கொடுத்து மாற்ற முடியாது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!