in ,

ஆணாதிக்கமா பெண்ணடிமையா? (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“முடிவா என்னதான் சொல்றே சஞ்சனா?”

“அதுதான் முதலிலேயே சொல்லிட்டேனே விக்ரம், நமக்குள்ள ஒத்து வராது. நாம பிரியறது நல்லது.”

“எப்படி உன்னால இவ்வளவு சுலபமா ஒரு முடிவெடுக்க முடியுது? கொஞ்சம் ஆற அமர யோசிச்சு முடிவெடு. அவசரப்பட்டு முடிவெடுத்து நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டு, அப்புறம் வருத்தப்படக் கூடாது.”

“சத்தியமா வருத்தப்பட மாட்டேன். என்னோட எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நீங்க இல்லவே இல்லை. கொஞ்சம்கூட ஒத்து வராத உங்ககூட எப்படி நான் வாழ்க்கையைத் தொடர முடியும்? இதென்ன ஒரு நாள், ரெண்டு நாள் ஏதோ ஃப்ரெண்டுகூட வெளில போயிட்டு வர மாதிரியா? வாழ்க்கை. முன்னப்பின்ன தெரியாத உங்களை, அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நாம பேசும்போது நீங்க நல்லாத்தான் பேசினீங்க. சரி, நான் எதிர்பார்க்கற மாதிரிதான் நீங்களும் இருக்கீங்கன்னு நினைச்சுகிட்டேன். ஆனா இப்போ அப்படியே மாறிட்டீங்க. எப்படி உங்ககூட நான் நிம்மதியா வாழ முடியும்? அதனாலத்தான் சொல்றேன், பிரிஞ்சுடலாம். டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடலாம்.”

“சஞ்சனா, நீ ஒரு மாயையான உலகத்துல வாழ்ந்துட்டிருக்கே. கல்யாண வாழ்க்கையை சினிமால எல்லாம் வர மாதிரி நீ கற்பனை பண்ணி வெச்சிருக்கே. நம்மளோட தினசரி வாழ்க்கைக்கு நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமே கிடையாது. அதைப் புரிஞ்சுக்காம பேசிட்டிருக்கே. சினிமா வேற, நிஜம் வேற.”

“அப்படின்னு நீங்கதான் சொல்றீங்க. நிஜத்துல இருக்கறதைத்தான் சினிமால காட்டறாங்க. படத்துல வர மாதிரி டூயட் பாடறதுக்கு வெளிநாட்டுக்கோ, ஊட்டி கொடைக்கானல்னு போறாங்களே, அந்த மாதிரியா நான் கேட்டேன்?”

“அதெல்லாம் நீ கேட்கலதான். ஆனாலும் உன்னோட எதிர்பார்ப்பு நம்மளோட தினசரி வாழ்க்கைல எல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது சஞ்சனா.”

“என்ன பெருசா எதிர்பார்த்துட்டேன். தினமும் எப்போ எல்லாம் என்கிட்ட பேசுவீங்களோ அப்பெல்லாம் ஐ லவ் யூ சொல்லணும்னு எதிர்பார்க்கறேன். என்கூட உட்கார்ந்து நிறைய நேரம் நீங்க பேசணும். படத்துல எல்லாம் ஹீரோ, ஹீரோயின்கூட எவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசறாங்க. ஆசையா ஓடிப் பிடிச்சு விளையாடறாங்க. தூக்கறாங்க. சும்மாவாவது நேரம் போகலைன்னா ஷாப்பிங் போறாங்க. நைட் பீச்ல கை கோர்த்துட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டே பேசிட்டு இருக்காங்க. இந்த மாதிரி எல்லாம் சின்னச் சின்ன ஆசைகளைத்தானே செய்யச் சொல்றேன்.”

“இதெல்லாம் டெய்லி எப்படி பண்ண முடியும் சஞ்சனா? காலைல வேலைக்குப் போனா நைட் ஏழு மணிக்குத்தான் திரும்பி வரேன். இதுல நீ சொல்ற எல்லாத்தையும் தினமும் எப்படி பண்ண முடியும்?”

“அதுதான் நானும் சொல்றேன். தினமும் இதெல்லாம் உங்களால செய்ய முடியல. அப்போ நான் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போய் அப்படியே வாழ்க்கையைக் கழிக்கணும்னு நினைக்கறீங்களா?”

“நான் அப்படிச் சொல்லல. உன்னுடைய எதிர்பார்ப்புகள்தான் அதிகமா இருக்குன்னு சொல்றேன். அதை எல்லாம் நீ குறைச்சுட்டா நாம சந்தோஷமா வாழ்க்கையைத் தொடரலாம். நம்மளைப் பெத்தவங்க எவ்வளவு எதிர்பார்ப்புகளோட நமக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. உங்க வீட்டுலயும் கொஞ்சம் நஞ்சமா செலவு பண்ணாங்க? கொஞ்சம் யோசிச்சுப் பாரு. கல்யாண மண்டபத்துல இருந்து, சாப்பாட்டுச் செலவு, உனக்குத் துணிமணிகள், நகைன்னு எவ்வளவு பாடுபட்டிருப்பாங்க. அவ்வளவு சொந்த பந்தங்களைக் கூட்டி, ஊரறிய உலகறிய பிரம்மாண்டமா கல்யாணத்தைப் பண்ணிட்டு ஆறு மாசத்துலேயே ஒத்து வரலேன்னு சொன்னா, உன்னைப் பெத்தவங்க ஏமாந்து போய் நொறுங்கிப் போவாங்க இல்லையா. அது பரவாயில்லையா?”

“அதெல்லாம் நான் சொன்னா அவங்க புரிஞ்சுப்பாங்க. எனக்கு ஒத்து வரலேன்னுதானே நான் ஒதுங்கிப் போறேன். உங்களைவிட என்னை எங்க அப்பா, அம்மா நல்லாப் புரிஞ்சுப்பாங்க.”

“நானும் நிறைய எதிர்பார்ப்போடத் தானே உன்னைக் கல்யாணம் பண்ணியிருப்பேன். என்னை ஏமாத்திட்டுப் போவியா?”

“நானே ஏமாந்துட்ட போது நீங்க ஏமாந்தா என்ன, ஏமாறலைன்னா என்ன. அதைப்பத்தி எனக்கு என்ன கவலை?”

“அவசரப்படாதே சஞ்சனா, நீ சொன்ன எல்லாம் கூட நான் நிறைவேத்த முயற்சி பண்றேன். ஆனா நமக்குள்ள நடக்கற சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட நீ ஃபோட்டோ எடுத்து ஸ்டேட்டஸ்ல போடறே. நான் பூ வச்சு விடறது, உனக்கு நான் காஃபி போட்டுத் தரது, உன் பின்னாடி டூ வீலர்ல நான் உட்கார்ந்து வரது, இப்படி எல்லாத்தையும் மத்தவங்களுக்குத் தெரியப்படுத்தணுமா? அதுக்கு நான் திட்டினதும் நீ வரிசையா என் மேல நிறைய குறைகளா அடுக்க ஆரம்பிச்சுட்டே. நீ செஞ்சது தப்பே இல்லையா?”

“இதுல என்ன தப்பிருக்கு? ஒவ்வொருத்தரும் என்னவெல்லாம் வீடியோ போடறாங்க தெரியுமா? வைஃபுக்குத் தலை சீவி விடறது, சமையல் செஞ்சு குடுக்கறது, துணி மடிச்சு வைக்கறது, இப்படி ஏதேதோ போடறாங்க. இதெல்லாம் இப்ப சகஜம். நான் போடற ஃபோட்டோவுக்கு இன்ஸ்டாக்ராம்ல எவ்வளவு லைக்ஸ் வருது தெரியுமா? இதெல்லாம் உங்களுக்குப் புரியல, பிடிக்கல. அதனாலத்தான் ஒத்து வராம சேர்ந்திருந்து பிரயோஜனமே இல்ல. சந்தோஷமும், நிம்மதியும் இல்லாம லைஃப்பை வேஸ்ட் பண்ண முடியாது. பிரியணும்னு முடிவு பண்ணா பண்ணதுதான். சும்மா விளக்கம் கேட்டுட்டு இருக்காதீங்க.”

“இதெல்லாம் ஒரு காரணமா சஞ்சனா. வாழ்க்கைன்னா விட்டுக் கொடுத்து, அனுசரிச்சுட்டுப் போனாத்தானே நிம்மதியா இருக்க முடியும்.”

“அதெல்லாம் பழைய காலம். ஒத்து வராத புருஷன்கூட வேற வழியில்லாம காலம் முழுக்க வாழ்க்கையைத் தொலைக்கற பெண்கள் எல்லாம் இப்போ இல்ல. பெண்கள் இப்போ தெளிவா யோசிக்கறாங்க. இனியும் இந்த ஆணாதிக்க மனப்பான்மையை வச்சுட்டு எங்களை ஏமாத்தலாம்னு நினைக்காதீங்க. நான் நாளைக்கே எங்க வீட்டுக்குக் கிளம்பறேன்.”

“சஞ்சனா, இதெல்லாம்தான் புத்திசாலித்தனம்னு நினைக்கறியா? உனக்கும் எனக்குமான அன்யோன்யத்தை வெளியிடாம நமக்குள்ள வச்சுக்கோன்னு சொல்றது ஆணாதிக்கமா? இதுலதான் சுதந்திரத்தை நீ எதிர்பார்க்கறியா? உங்க அப்பாவும், அம்மாவும் இப்படித்தான் இருந்தாங்களா? உங்க அப்பா பேச்சைக் கேட்டு வாழ்ந்ததால உங்க அம்மாவுக்கு நிம்மதி இல்லையா? இல்ல உங்க அம்மா சொன்ன கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்ததால உங்க அப்பாவுக்கு நிம்மதி இல்லாம போச்சா?”

“அதான் சொல்லிட்டேனே, இந்தத் தலைமுறை வேற மாதிரி யோசிக்கறோம். நாங்க இப்போ தெளிவா யோசிக்கறதை உங்களால ஏத்துக்க முடியல. மேல் ஷாவனிஸம். அந்த புத்தி மாறவே மாறாது. ஆளை விடுங்க. என்னால முடியல. குட் பை.”

“உன்னை மாதிரிதான் இப்போ நிறைய பெண்கள் அவசர முடிவு எடுக்கறாங்க. இதுதான் பெண் விடுதலைன்னு நினைக்கறீங்க. இவ்வளவு வருஷம் உங்க அப்பா, அம்மா இந்த மாதிரி எந்த விஷயத்துக்கும் உனக்குத் தடை போட்டதே இல்லையா? உன்னைத் திட்டினதே இல்லையா? நீ எதிர்பார்த்த, ஆசைப்பட்ட எல்லாத்துக்கும் வெறுமனே தலையாட்டிட்டுத்தான் இருந்தாங்களா? அப்போ இந்த பெண் அடிமை, ஆணாதிக்கம்ங்கற வார்த்தை எல்லாம் உங்க அப்பாகிட்ட பேசிட்டிருந்தியா? அதெப்படி கணவன்கிட்டயும், மாமியார்கிட்டயும் மட்டும் இந்த வார்த்தை எல்லாம் பேசறீங்க? குடும்பங்கறதும், வாழ்க்கைங்கறதும் ரெண்டு சக்கரமும் ஒரே சீரா ஓடற வண்டி மாதிரி சஞ்சனா. உனக்காக நான் ஏன் மெதுவா ஓடணும்னு ஒரு சக்கரம் மட்டும் வேகமா ஓட நினைச்சா எப்படி? அதுக்காக அது இன்னொரு சக்கரத்துக்கு அடங்கிப் போறதா அர்த்தமா? பொறுமையா யோசிச்சு முடிவெடு. அப்புறம் உன் இஷ்டம்.”

“நீங்க ஆயிரம் காரணங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிச்சு சொன்னாலும் என் முடிவை மாத்திக்கறதா இல்ல. ரசனையில்லாத ரொமான்ட்டிக்கா இல்லாத உங்களோட நான் வாழ விரும்பல. இதுக்கு மேல இதைப்பத்தி பேச வேண்டாம்.”

அதற்குமேல் எப்படிப் பேசுவதென்று விக்ரமிற்குத் தெரியவில்லை. அவனுக்கும் பொறுமை போய் கோபம் வந்தது. என்னவோ செய்து கொள்ளட்டும் என்று வெளியே கிளம்பி விட்டான்.

சஞ்சனா பிறந்த வீட்டிற்குக் கிளம்புவதற்குத் தயாரானாள்.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என் கனவுகள்… உன் காலடியில் (கட்டுரை) – இரஜகை நிலவன்

    நந்தகுமாரா (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி