2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18
ராம்குமார் வீடு திரும்பிய போது ஈஸ்வரபவனமே இருளில் ஆழ்ந்திருந்தது .ஒன்றிரண்டு இரவு விளக்கு தவிர ,எந்த லைட்டும் எரியவில்லை. செக்யூரிட்டி கேட்டை திறந்து சல்யூட் பண்ண, கார் உள்ளே நுழைந்து போர்ட்டிகோவில் நின்றது.
வழக்கமாக மகா அவன் கார் சத்தம் கேட்டு ஓடி வந்து கதவை திறப்பாள்…இப்போது அவள் இருக்கும் மனநிலையில் இதையெல்லாம் அவளிடம் எதிர்பார்க்க முடியாது. தன்னிடம் இருந்த சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் ராம்குமார். வீட்டைப் போலவே அவன் மனமும் இருண்டிருந்தது .
இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைக்கவில்லை. வந்தனா அம்மா சந்தியா கூறும்போது அந்த நேரம் அவனுக்கு சரியாகபட்டது, நிதானமாக யோசிக்கும் போது மனது நெருடியது.
என்னதான் இருந்தாலும், எவ்வளவு அன்பு வந்தனா மேல் வைத்திருந்தாலும், மகாவுக்கு அப்படி ஒரு காரியத்தை செய்ய அவன் மனம் தடுமாறியது. ஈஸ்வர் மாமா படம் கண்ணில் பட தலை தானாக கவிழ்ந்தது.
இறுதியாக ஒருமுறை மகாவிடம் பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. அவள் பிரச்சனை பண்ணாமல் தான் வந்தனாவுடன் வாழ்வதற்கு சம்மதித்தால்… அவள் குழந்தையுடன் இந்த வீட்டில் வாழட்டும்.என்று நினைத்தவன், மகாவை தேடி ஈஸ்வர் மாமா ரூமுக்கு போனான்.
“மகா.. மகா” என்று இரு முறை அழைத்தான்.
பதில் ஒன்றும் வராததால் கைப்பிடியில் கையை வைக்க கதவு தானாக திறந்து கொண்டது .கதவை உள்ளே தாழிடவில்லை போல மகா ..லைட்டைப் போட்டான். மகா இன்னும் தூங்கவில்லை.
தலையை தூக்கி பார்த்தவளிடம் “மகா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் “
எழுந்து உட்கார்ந்தவள் “பேசுறதுக்கு என்ன இருக்கு…என்னைப் பொறுத்தவரை எல்லாமே முடிஞ்சு போச்சு உங்களுக்கும் எனக்குமான உறவு, மணவாழ்க்கை எல்லாம் ” என்றாள் விரக்தியாக.
“ஒன்னும் முடியல மகா.. ஏன் இப்படி பேசுற? உன் வயித்துல என் குழந்தை வளருது ..நீ இந்த வீட்டிலேயே நிம்மதியா எப்போதும் போல இருக்கலாம். நான் உன்னையும், குழந்தையும், கவனிச்சுக்குவேன். மாமா என்னை வளர்த்தவர். நீ அவருடைய மகள் .. உன்னை விட்டுடுவேன்னு எப்படி நினைக்கிற? ஏதோ நடந்தது நடந்து போச்சு! நீ இத பெருசுபடுத்தாத ..நீ எப்போதும் என் மேல எவ்வளவு அன்பா பிரியமா இருப்பே…”
“ஆனா நீங்க அப்படி இல்லையே! எவ்வளவு மாறி போய்ட்டீங்க! முன்பு இருந்த ராம்குமார் இல்ல… இப்ப இருக்கிறது வந்தனாவோட காதலன்… அதுவும் கள்ளக்காதலன் . ஒரு நடிகையோட மாய வலையில் சிக்கி.. வீட்டை மறந்து, கடமையை மறந்து, மனைவியை மறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தரங்கெட்ட மனுஷன்.”
மகாவுடைய பேச்சு ராம்குமாரின் பொறுமையை சோதித்தது. அவள் வந்தனாவை பற்றி பேசியதும் அவனுள் இருந்த மிருகம் தலை தூக்க ஆரம்பித்தது.
“இதோ பார் மகா இந்த மாதிரி நீ பேசுறது சரியில்ல.. ஆம்பளைங்க அப்படி இப்படி இருக்கிறது உலகத்துல இல்லாத விஷயம் ஒன்னும் இல்ல ..வீட்டுல சாப்பிட்டாலும் ஆசைக்காக வெளியில போயி ஹோட்டல்ல சாப்பிடறது இல்லையா? அது மாதிரிதான் இதுவும்.. பாவம் உன்னை கைவிடக்கூடாது.. உன்னுடைய நிலைமையை எண்ணி அதுவும் நீ குழந்தையை சுமந்துகிட்டிருக்கங்கிற பரிதாபத்தில் உன் கிட்ட பேசினா நீ ரொம்ப ஓவராத் தான் பேசுற “
கொதித்துப் போனாள் மகா ..”யாருக்காக யார் பரிதாபப் படுறது .இந்த வீடு ‘ஈஸ்வர பவனம்’ எங்கப்பா கட்டினது. இந்த சொத்து எங்கப்பா ஒவ்வொரு பைசாவா சம்பாதித்தது. நீங்க எம்.டி ங்கிற அந்தஸ்தான பதவியில் உட்கார்ந்து இருக்கீங்களே, அந்த எம்.டி பதவி எங்க அப்பா உங்களுக்கு விட்டுக் கொடுத்தது. நன்றி என்ற வார்த்தை தான் உங்களுடைய அகராதியிலேயே கிடையாதே
எங்கப்பா தன் பெயரில்’ ஈஸ்வர் டிரஸ்ட் ‘அமைச்சதே இல்லாதவங்களுக்கு உதவி செய்யத்தான் ..அவர் காலத்துல அவருடைய பணத்துல எத்தனை பேரை படிக்க வைச்சாரு.. எத்தனை பேருக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு… எத்தனை குடும்பத்தை வாழ வெச்சாரு ..அவர் அந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப் பட்டாரு.. பாடுபட்டாரு…எங்கப்பா பிறந்தப்பவே பணக்காரர் இல்ல அடிமட்டத்திலிருந்து வந்து உழைப்பால முன்னேறியவரு.. மகாமார்பிள்ஸ்ஸ இந்த அளவு கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டார்..அப்படி பாடுபட்டு சம்பாதிச்ச பணத்தை நீங்க உங்க இஷ்டத்துக்கு செலவு செய்றீங்க.. யார் பணத்தை எடுத்து யாருக்கு வாரியிறைக்கறீங்க!”
“போது மகா நிறுத்து! என்ன வார்த்தைகள் எல்லை மீறுது.. உன் நிலைமையை இப்ப என்னனு உன் மனசுல இருக்கா இல்லையா? எங்க அம்மா தானே உன்னை வளர்த்தா அந்த நன்றியை மறந்துட்டியா?”
“இல்லைன்னு சொல்லல ராம் ..அத்தைதான் என்னை வளர்த்தாங்க. அந்த புண்ணியவதி மாதிரி நீங்க இல்லையே! அத்தைக்குள்ள நல்ல குணங்கள் உங்ககிட்ட ஒன்னுமே இல்லையே.. அத்தைய மனசுல வெச்சுட்டு தான் நான் இத்தனை நாள் உங்ககிட்ட நேரடியா சண்டை போடலை.. கோபப்படலை. நான் ஒதுங்கித் தான் போறேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னு தான் இருக்கிறேன்.
இப்பவும் நீங்க ஏதோ நியாயமா பேசப் போறீங்க! அவளை தொலைச்சு தலைமுழுகிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்துறேன்னு சொல்ல போறீங்க அப்படின்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்க என்னமோ எனக்கு வாழ்க்கை பிச்சை போடுற மாதிரியும்.. போனாப்போது வாழ்ந்துட்டுப் போன்னு சொல்ற மாதிரியும் பேசுவது எனக்கு அதிர்ச்சியா இருக்குதுங்க.
உங்க மேல உள்ள நம்பிக்கை சுத்தமா போயிடுச்சு! நாலு வருஷமா வராமல் இருந்த குழந்தை வந்தது கூட உங்களுக்கு பெருசா தெரியல! அந்த அளவுக்கு நீங்க அவ மேல உள்ள மோகத்தில் மூழ்கி இருக்கீங்க… உங்ககிட்ட நியாயத்தை எதிர்பார்த்தது என் தப்புதான்.
ரெண்டுல ஒண்ணு தெளிவாவே கேட்கறேங்க.. அந்த வந்தனாவ தலைமுழுகிட்டு ஒழுங்கா என்கூட குடும்பம் நடத்துவீங்களா.. என்னுடைய பிள்ளைக்கு அப்பாவா.. மகா மார்பிள்ஸ் எம்.டி.யா பழைய ராம்குமாரா உங்களால இருக்க முடியுமா முடியாதா? முடியாதுன்னா தயவுசெய்து என்ன விட்டுருங்க… விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தாரேன். இதோட நம்ம ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம். “
மிரண்டு போனான் ராம்குமார். அதட்டிப் பேசியோ..அன்பாகப் பேசிய மகாவை ஒரு வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவன் அவளுடைய தெளிவான, அதிகாரமான பேச்சு அவனை ஸ்தம்பிக்க வைத்தது. அவளுக்கு ஒரு முடிவைத் தான் கொடுக்கலாம் என்பது போக அவள் தனக்கு ஒரு முடிவை கொடுத்து ..சம்மதமா என்கிறாள்.
முதலில் வந்தனா கூறியதால் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கினாலும் பிறகு அவளை விவாகரத்து பண்ணினால் தனது நிலைமை என்ன என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. சொத்துக்கள் பூரா மகா பேர்ல இருக்க தான் ஒன்றும் இல்லாதவனாகி விடுவோம் என்கிற பயம் அவனை விவாகரத்து முடிவு தவறானது என்று யோசிக்க வைத்தது ..
இனி தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான் இவளை எதிர்த்து பேசினால் அவள் விவாகரத்து முடிவுக்குத் தான் வந்து நிற்பாள். அதனால் அன்பாக இருப்பது போல நடித்து வேறு வழியை தான் தேட வேண்டும் …
அந்த வேறு வழி சந்தியா கூறிய வழிதான்… ராம்குமாருக்கு இருந்த மனிதம் அழிந்து மிருகம் தலைதூக்கியது …என்ன ஆவாள் மகா …???
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings