in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14

ரிசப்ஷன் எல்லாம் முடிந்த பிறகு அடுத்த வாரம் தேநிலவிற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல டிக்கெட் வாங்கி வைத்து இருந்தான் சபரீஷ்வர்.

அதனால் பார்வதியின் மாமனாரும், மாமியாரும், மீனாட்சியின் பெற்றோரும் அதற்குள் முக்கியமான சடங்குகள் செய்து விட்டுத் தான் அவர்களை அனுப்ப வேண்டும் என்றனர்.

முதலிரவு அன்று சபரீஷ்வர், “கிருத்திகா எனக்கு உன்னை முதன் முதலாகப் பார்த்தாற் போல் இல்லை. பல நூறு ஜென்ம ஜென்மங்களாக கணவன், மனைவியாக இருப்பது போல் தோன்றுகிறது” என்று உணர்ச்சி பொங்கக் கூறி அன்புடன் அணைத்துக் கொண்டான்.

“நான் சொல்ல நினைப்பதெல்லாம் நீங்கள் சொன்னால் நான் என்ன பேசுவது?” என்று வெட்கத்துடன் தலைகுனிந்து மென்மையாக சிரித்தாள்.

“கிருத்திகா, என்னிடம் இப்படி வெட்கப்பட்டால் நான் என்ன செய்வது?” என்று அவளை இறுக அணைத்து கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.

ரிஸப்ஷன், தேன்நிலவு எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து இரண்டு மாதம் தான் விடுமுறை எடுத்திருந்தாள் கிருத்திகா. ஐரோப்பிய நாடுகளுக்கு ‘டூர்’ போவதற்கு ஒரு வாரம் தான் இருந்தது.

“சபரீஷ், எனக்கு வீட்டில் ரொம்ப போர் அடிக்கிறது. அங்கிள் கன்ட்ரோலில் இருக்கும் ஒர்க் ஷாப்புகளுக்குப் போய் பார்த்து விட்டு வரலாமா?”

“ஓ.எஸ். இப்போது இளங்கோ வேலையை விட்டுப் போன பின் எல்லாக் கம்பெனிகளுமே கருத்திருமன் அங்கிள் கன்ட்ரோலில் தானே இருக்கிறது. நாம் போய் பார்த்து விட்டு வரலாம். கம்பெனிகளின் வளர்ச்சிக்கு உனக்குத் தோன்றும் ஐடியாவைச் சொல்லலாம், கிளம்பு” என்றான்.

லைட் வயலட் நிற ஷிஃபான் சில்க் புடவையும், அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து, காதில் சிறிய முத்துத் தோடுகளும், கழுத்தில் ஒற்றை முத்துச் சரமும்  உள்ளத்தைக் கொள்ளையடித்தன.  ஒரு கையில் வாட்ச், ஒரு கையில் திருமணத்திற்காகப் போடப்பட்ட முழங்கைவரையிலான கலகலக்கும் கண்ணாடி வளையல்கள். கழுத்தில் புதிய கனமான மஞ்சள் கயிறிலான திருமாங்கல்யம். லேசான பௌடர் பூச்சு, நெற்றியில் வகிட்டின் ஓரத்தில் குங்குமம். அவள் வழக்கப்படி இறுகப் பின்னப்பட்ட ஒற்றைப் பின்னல். அதில் தொங்கும் மல்லிகைப்பூச் சரம்.

தங்க வைர நகைகள் இல்லாமல், ஆடம்பரமான பட்டுப் புடவையோ அல்லது டிசைனர் புடவையோ இல்லாமல், இவளால் மட்டும் எப்படி இவ்வளவு சிம்பிளாக ஆனால் அழகாக வரமுடிகிறது என்று ஆச்சர்யப்பட்டான் சபரீஷ்வர்.

“பெரிய கம்பெனிகளின் முதலாளி, ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீஸர் இப்படியா தங்க வைர நகைகள், பட்டுப்புடவை எதுவுமில்லாமல் உன் கம்பெனிகளைப் பார்க்க வருவது?” என்றான் கிண்டலாக.

“அதெல்லாம் என் நினைவிற்கு வரவில்லை. நான் இப்போது உங்கள் மனைவி, திருமதி சபரீஷ்வர். என் கணவர் கம்பெனியில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்களின் சகோதரி. அவர்களிடமிருந்து நான் விலையுயர்ந்த புடவையாலும், ஆடம்பரமான நகையாலும் விலகிப் போகக் கூடாது. அவர்கள் என்னிடம் சுலபமாக நெருங்கிப் பழக வேண்டும். இதுவே என் விருப்பம். இது சரியா தவறா?”  என்றாள்  தலையைச் சாய்த்து அவனருகில் வந்து.

அவள் தலையை அப்படியே பிடித்து நெற்றியிலும், கன்னங்களிலும் தன் இதழ்களைப் பதித்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“என் பெண்டாட்டி எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்” என்றான்.

இருவரும் தொழிற்சாலைக்குக் கிளம்பினார்கள். தொழிலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு இருவரும் ஏதோ ஒரு மனநிறைவுடன் வீடு திரும்பினர். அங்கே கருத்திரமனும் வந்திருந்தார்.

“அங்கிள் சாப்பிட்டீர்களா?”.

“ஓ. எஸ். சாப்பிட்டுத் தான் வந்தேன் கிருத்திகா”

“உங்களுக்குப் பிடித்த இட்லியும், வெங்காயச் சட்னியும் செய்திருக்கிறேன்” என்றார் சாம்புத் தாத்தா.

அப்போது சபரீஷ்வர், “அங்கிள், நீங்கள் எங்களுடன் இந்த வீட்டிலேயே இருங்களேன். அந்த வீட்டில் நீங்கள் ஏன் தனியாக இருக்க வேண்டும்?” என்றான் .                  

“அது எப்படி முடியும்? தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறே இல்லையா?  பார்வதி, மாப்பிள்ளை, குழந்தை எல்லோரும் அங்கே வந்தால் சுதந்திரமாக இருப்பார்கள்” என்றார்.

“அப்படியானால் என்னை இரண்டாவது மகள் என்று ஏற்றுக் கொண்டதெல்லாம் வெறும் வாய் வார்த்தையா அப்பா?”

“நிஜமாகவே நீ என் இரண்டாவது மகள் தானம்மா. எந்த அப்பாவும் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு கூடவே போய் விடுவதில்லையே” என்றார் கருத்திருமன் சிரித்துக் கொண்டே.

“நாங்கள் இருவரும் சேர்ந்து தான் அங்கிள் நீங்கள் எங்களோடே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இது என் தனிப்பட்ட விருப்பமல்ல. உங்கள் மகளும், மாப்பிள்ளையும் சேர்ந்து வெளியிடும் விருப்பம்” என்றான் சபரீஷ்வர்.

“இனிமேல் உங்களை மாப்பிள்ளை என்றே கூப்பிடுகிறேன். ஆனாலும் மாப்பிள்ளை வீட்டில் வந்து தங்குவது மாமனாருக்கு அழகில்லை” என்றார் சிரித்துக் கொண்டே.

“உங்கள் வாதத்திற்கு நான் தீர்வு சொல்கிறேன். வாரத்திற்கு ஒரு நாள் அல்லது பார்வதி அம்மா வீட்டிற்கு வரும் போது மட்டும் கருத்திருமன் அவர் வீட்டிற்குப் போய் வரட்டும். மற்ற நாட்கள் இங்கே இருந்தால் எனக்கும் பேச்சுத் துணையாக இருக்கும்” என்றார் சாம்புத் தாத்தா. அதற்கு அரை குறை மனதோடு ஒத்துக் கொண்டார் கருத்திருமன்.

அடுத்த நாள் அவரையும் அழைத்துக் கொண்டு, அவர் பொறுப்பில் இருந்த கம்பெனிக்கு கிளம்பினார்கள். ஆண்களும், பெண்களுமாக இருநூறு தொழிலாளர்களும் அவருடைய ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர் .

“மதிய சாப்பாட்டிற்குப் பிறகு எல்லாத் தொழிலாளர்களையும் பொதுவாக ஒரு ஹாலில் உட்கார வைத்து அவர்களின் குறைகளைக் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள் கிருத்திகா.

கருத்திருமனுக்கு, கிருத்திகாவின் போக்கு மிகவும்  பிடித்திருந்தது.  தொழிலாளர்களிடம் வேலை மட்டும் வாங்காமல், அவர்கள் நலனிலும் அக்கறை காட்டும் அவளின் பெருந்தன்மையை உள்ளுக்குள் பாராட்டினார்.

அன்று பிற்பகல் கூட்டம் கூட்டப்பட்டது. தொழிலாளர்களுக்கு சம்பளத்திலோ போனசிலோ ஒன்றும் குறைவாகத் தெரியவில்லை. கம்பெனிகள் நகரை விட்டு கொஞ்சம் தொலைவில் இருந்ததால் பெரும்பாலோரால் நேரத்தில் வந்து சேரமுடியவில்லை என்பது குறை. அதற்குப் பொதுவாக கம்பெனியே ஒரு பஸ் விட்டால்  வசதியாக இருக்கும் என்று அபிப்பிராயம் தெரிவித்தனர். அதற்கு சபரீஷ்வர் ஒத்துக் கொண்டான்.

அங்கு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு ‘டே கேர் சென்டர்’ ஒன்று திறந்தால் தங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் திறம்பட வேலை செய்யலாம் என்று கிருத்திகா யோசனை தெரிவித்தாள்.

அதைக் கேட்டு பெண் தொழிலாளர்கள் எல்லாம் சந்தோஷத்தில் குதித்தார்கள். இப்படிப்பட்ட ஒரு பெண் தங்கள் முதலாளியாக வந்ததில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

“ஒவ்வொரு கம்பெனிக்குள்ளும் ஒரு சிறிய கான்டீன், கம்பெனி மான்யத்துடன், அதாவது ‘சப்சிடைஸ்ட் புட்’ குறைந்த கட்டணத்தில் சிற்றுண்டியும் உணவும் ஏற்பாடு செய்தால், தொழிலாளிகள் கான்டீனிலேயே சாப்பிட்டுக் கொள்ளலாம். அதற்கும் ஏற்பாடு‌ செய்ய முடியுமா?” என்று கேட்டாள் கிருத்திகா.

“கட்டாயம் செய்ய வேண்டும். இந்த வசதிகள் எல்லாம் நாம் ஏன் இத்தனை நாள் செய்யாமல் போனோம்?” என்று வருந்தினான்  சபரீஷ்வர்.

கருத்திருமன், ஒரு நோட்டுப் புத்தகத்தில் கிருத்திகா கூறிய விஷயங்களையும் குறித்துக் கொண்டார். தன் உதவியாளர்களுடன் எல்லா தேவைகளையும் செய்து முடிப்பதாகக் கூறினார். அன்றைய கூட்டம் முடிந்து காரில் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிருத்திகா, “இந்த தொழிலாளர்களுக்கு  பீரியாடிகல்  ஜெனரல் செக்-அப் செய்ய டாக்டர்களைக் கூட ஏற்பாடு செய்யலாம், இல்லையா சபரீஷ்? காலையில் வந்து உழைத்து விட்டு மாலையில் வீடு திரும்பும் இவர்களுக்குத் தங்களை கவனித்துக் கொள்ளக்கூட நேரம் இருக்காது” என்றாள் பரிதாபமாக.

கருத்திருமன் முதலாளியைப் பார்த்தார். “என்னைப் பார்க்க வேண்டாம் அங்கிள், இதற்கும் உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் நன்றாக ஆரோக்யமாக இருந்தால் தான் கம்பெனியும் ஆரோக்யமாக இருக்கும். எதற்கும் செலவைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் மேற்பார்வையில் எல்லாக் கம்பெனிகளுமே நல்ல லாபத்தை கொடுக்கின்றன” என்றான் சபரீஷ்வர்.

“உன்னைப் போல் மனம் யாருக்கும் வராதம்மா!  ஒரு பெண்ணுக்கத் தான்  ஒரு தாயின் வேதனை புரியும். குழந்தைகளை அருகிலேயே வைத்துக்கொண்டால் தாய்க்கு இன்னும் மகிழ்ச்சி தான். தொழிலாளிகள் சந்தோஷமாக வேலை செய்தால் கம்பெனி வேலையும் நன்றாக நடக்கும்” என்றார் கருத்திருமன்.

“இது மட்டுமல்ல அங்கிள்.  கிருத்திகாவிற்கோ அல்லது உங்களுக்கோ தொழிலாளர்களுக்கு வேறு ஏதாவது செய்ய வேண்டுமென்று மனதில் தோன்றினால் உடனே நிறைவேற்றி விடுங்கள்.  என் சம்மதத்திற்காகக் காத்திருக்க வேண்டாம்” என்றான் சபரீஷ்வர்.

தன் திருமணத்திற்காக விடுப்பில் இருந்த கிருத்திகாவிற்கு மீனாட்சியைப்  பார்க்காமல் இரண்டு வாரங்கள் இருந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது, அதனால்  அவளைப் பார்க்க அலுவலகம் போனாள்.

“கல்யாணம், ஹனிமூன் என்று இரண்டு மாதம் விடுப்பு எடுத்திருக்கிறாய். ஒவ்வொரு வருடமும் நிறைய ஐ.ஏ.எஸ். ஆபீஸரஸ் பரீட்சையில் தேர்வாகி வருவதால் மீண்டும் உனக்கு இதே ஸீட் கிடைப்பது கஷ்டம்” என்று மீனாட்சி அறிவுறுத்தினாள்.

“அப்படியா?”

“ஆனால் நீ வேண்டுமானால்  உன் ஜாயின்ட் செக்ரட்டரியையோ அல்லது செக்ரட்டரியையோ உனக்கு மாற்றம் ஏதும் வேண்டாம் என்று கேட்டுப் பார்க்கிறாயா? அவர்களுக்கு  உன் வேலையில், உன் கடுமையான உழைப்பில்  நல்ல நம்பிக்கை இருக்கிறதென்று நினைக்கிறேன். அவர்கள் சிபாரிசு செய்தால் உனக்கு எந்த மாற்றமும் இருக்காது” என்றாள் மீனாட்சி.

“அதெல்லாம் வேண்டாம் மீனாட்சி மேடம். எந்த வீட்டில் இருந்தாலும் வேலை செய்யப் போகிறோம். ஏதாவது தெரியவில்லையென்றால் உங்களைப் போன்ற சீனியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். இதில் என்ன இருக்கிறது?”

“தட்ஸ் குட்” என்றாள் மீனாட்சி.

ஆஃபீஸ், கம்பெனிகள், வீடு எல்லாவற்றையும் கருத்திருமனிடமும், சாம்புத் தாத்தாவிடமும் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு ஜாலியாக ஹனிமூன் ட்ரிப் கிளம்பி விட்டனர் சபரீஷ் தம்பதிகள்.

கிருத்திகாவிற்கு விடுமுறை இரண்டு மாதங்கள் தான். ஆதலால் லண்டனில் முக்கியமான, புகழ்பெற்ற இடங்கள் மட்டும் பார்க்க திட்டமிட்டனர்.

லண்டன் மிகப்பெரிய அப்சர்வேஷன் வீல் நானூற்று நாற்பத்தி மூன்று அடி உயரச் சக்கரம், பார்த்து விட்டு வாயைப் பிளந்தது நின்றாள் கிருத்திகா. எதைப் பார்த்தாலும் பிரமித்து நின்றாள். சபரீஷ்வர் பலமுறை லண்டன் போயிருப்பதால் டவர் ஆஃப் லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அபே, பக்கிங்காம் அரண்மனை, டவர் பிரிட்ஜ் போன்ற முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றான். அங்கேயே பத்து நாட்கள் ஆகிவிட்டன.

பிறகு பாரீஸ் சென்றனர். பாரிஸில் உள்ள ஈபில் டவருக்கு அழைத்துச் சென்றான். பாரீஸின் புகழ்பெற்ற சாலைகளில் இரவு ஒரு மணிக்கு கை கோர்த்து நடந்து சென்றனர்.

ஒவ்வொரு தெருவிலிருக்கும் புகழ் பெற்ற மியூசியம்கள், ஓவியம், சிற்பங்களில் மனதைப் பறிகொடுத்து நின்றாள். பிரெஞ்சு மக்களின் ரசனையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். அதுவும் நோட்ரடாம் கதீட்ரல் கண்களுக்கு விருந்து.

கிருத்திகா வெனிஸில் உள்ள கிராண்ட் கனாலைப் பார்க்க விரும்பினாள், ஆகவே இத்தாலியில் உள்ள வெனிசிற்குப் போனார்கள். அங்கே ‘கொண்டாலாரைட் ‘ என்னும்  படகுச் சவாரியும் செய்தார்கள்.

இரண்டு மைல் நீளமும் எண்பது அடி அகலமும் உள்ள அந்த செயற்கை ஆற்றில்  இரண்டு பக்கமும் முக்கியமான அரசு அலுவலகங்களும், மாதா கோயில்களும் பார்க்கும் போது, உலகில் மக்கள் எப்படியெல்லாம் அழகை அனுபவிக்கிறார்கள் ‌என்று ஆச்சர்யப்பட்டாள். கூடவே ஷேக்ஸ்பியரின் ‘மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ்’ கதையும் ஞாபகத்துக்கு வந்தது.

அருகில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சபரீஷ், பல்வேறு சிந்தனைகளால் கிருத்திகாவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை, வானவில்லின் வர்ணஜாலங்களை ரசிப்பது போல் ரசித்தான். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு அவளைத் தன் செல்போனில் நிரப்பினான்.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில்,  ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானத்தில்  இந்தியா வருவதற்காக கஸ்டம்ஸ் செக்கிங் எல்லாம்  முடித்து  குறிப்பிட்ட கேட்டில் காத்திருந்தனர்.

இரண்டு மாத விடுமுறை முடிய இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தன.

“கிருத்திகா, ஏறக்குறைய முக்கியமான இடங்களைப் பார்த்து விட்டோம். இன்னும் சுற்றினால்  நீ மிகவும் களைத்து விடுவாய். நாற்பத்தி ஐந்து நாட்கள் வெளியில் சாப்பிட்டாகி விட்டது, மீதமிருக்கும் இந்த பத்து நாட்கள் தான் நாம் சென்னைக்குத் திரும்பி ஜெட்லாக் எல்லாம் முடித்து ஓய்வு  எடுத்து அலுவலகம் போவதற்கு சரியாக இருக்கும்”

விமானத்தில் இருவர் இருக்கையில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டாள், பக்கத்து சீட்டில் சபரீஷ்வர். விமானம் இன்னும் டேக்ஆப் ஆகவில்லை.

சபரீஷ்வர் மெதுவாகக் கிருத்திகாவின் காதுகளில், “நம்மால் அடுத்த வருடம் எங்கும் போக முடியாது, ஆனால் அதற்கு அடுத்த வருடம் நாம் அமெரிக்கா போய் லாஸ் ஏஞ்ஜலீஸ், கிராண்ட் கான்யன், வாஷங்டன், நியூயார்க் எல்லாம் ஜாலியாக சுற்றி விட்டு வரலாம்” என்றான்.

“ஏன் அடுத்த வருடம் எங்கும் போக முடியாது?”  புரியாமல் கேட்டாள் கிருத்திகா.

“அடுத்த வருடம் நம் வீட்டிற்கு ஒரு முக்கியமான வி.ஐ.பி. வரலாம் என்று எதிர்ப் பார்க்கிறேன்” என்ற சபரீஷ்வர் குறும்பாக சிரித்தான். அவன் தோள் மேல் தலை சாய்த்துக் கொண்டிருந்த கிருத்திகா, முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

“யாரந்த வி.ஐ.பி?”

“திருமணமாகி ஒரு வருடம் முடிந்தால் வரும் வி.ஐ.பி. வேறு யார்? நம் மகனோ அல்லது மகளோ தான்” என்றான் சிரித்துக் கொண்டே.

“சே !  இப்படியா கலாட்டா செய்வீர்கள்?” என்றாள் முகம் குங்கும்மாக சிவக்க.

“இது கலாட்டா இல்லையடி மக்குப் பெண்ணே, இதற்காகத்தான் நான் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றவன் அவளைப் பார்த்து சிரித்தான். அவள் காதைப் பிடித்து லேசாகத் திருகினான். கிருத்திகாவின் முகம் அந்த வானமாகச் சிவந்து, நாணித் தலைகுனிந்தாள்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 15) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    அவள் வீடு (சிறுகதை) – ✍ மலர் மைந்தன், கல்பாக்கம்