மார்ச் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10
ஒரு நாள் சபரீஷ்வர் கிருத்திகாவைத் தேடி தலைமைச் செயலகம் வந்தான். அப்போது கிருத்திகா சபரீஷ்வரிடம் மீனாட்சியை அறிமுகப்படுத்தினாள்.
“என் குரு… என் தோழி” என்றாள்.
மீனாட்சியோ “இந்த சபரீஷ் என் ப்ரெண்ட் கிருத்திகா” என்றாள் சிரித்துக் கொண்டே .
“நிஜமாகவா? ஏற்கனவே நீங்கள் நண்பர்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் கிருத்திகா.
“ஆம் , படிக்கும் போது பேச்லர் டிகிரியில் கிளாஸ் மேட்ஸ். பிறகு நல்ல நண்பர்கள். நான் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று அட்மினிஸ்ட்ரேடிவ் லைனில் வந்து விட்டேன். அவனோ பிஸினஸ் லைனில் போய் விட்டான். என் பெற்றோர்களும், அவர்கள் வீட்டுப் பெரியவர்களும் எங்களுக்கு மணமுடிக்கப் பார்த்தார்கள். நான் அப்போது சுந்தர் ஐ.பி.எஸ்.ஸை, இப்போது என் கணவர் – விரும்பினேன். அது சபரீஷ்வருக்கு நன்கு தெரியும். இவனும் சுந்தரும் நல்ல நண்பர்கள், அதனால் நாங்கள் இருவரும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை” என்று தங்கள் நட்பின் கதையைக் கிருத்திகா கூறினாள்.
“என்ன சபரீஷ், நான் கூறியது சரிதானே? உங்கள் தங்கை ஷீலா எப்படி இருக்கிறாள்?”
“நன்றாக இருக்கிறாள். அவளுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள்” என்றான் சபரீஷ்.
“உங்களுக்கு ஷீலாவைத் தெரியுமா மீனாட்சி?” என கிருத்திகா கேட்க
“நன்றாகத் தெரியும். இவன் தான் தங்கை என்று ரொம்ப உருகுவான். அவள் சரியான திமிர் பிடித்த ‘செல்பிஷ்’ பெண்” என்றாள் மீனாட்சி. சபரீஷ் புன்னகைத்துக் கொண்டான்.
“வேலை முடிந்தால் எல்லோரும் லஞ்சிற்கு வெளியே போகலாமா?” சபரீஷ்வர்.
“ஷ்யூர்” என்றாள் மீனாட்சி.
“இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே? தலைமைச் செயலகத்தில் ஏதாவது வேலையா?” என கிருத்திகா கேட்க
“ஏய், சரியான லூசாடி நீ ! உன்னைப் பார்ப்பதற்குக் தான் இவ்வளவு தூரம் ஓடோடி வருகிறார். அது தெரியவில்லையா?” என்று கலாட்டா செய்தாள் மீனாட்சி.
“ஆம் கிருத்திகா, மீனாட்சி சொல்வது உண்மைதான். உன்னோடு லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் மும்தாஜின் திருமணத்திற்கு அழைப்பிதழ் நேரில் வந்து கொடுக்கப் போவதாக மெயில் அனுப்பி இருக்கிறாள். உனக்கும் வயலெட்டிற்கும் மெயில் வந்திருக்குமென்று நினைக்கிறேன்” என்றான்.
“எந்த ஊரில் திருமணம்? விடுமுறை வேண்டும் என்றால் ஒரு வாரம் முன்பே விடுமுறை விண்ணப்பம் கொடுத்து விடு” என்றாள் மீனாட்சி.
“காரைக்கால் தான் அவள் சொந்த ஊர். அநேகமாக அங்கு தான் அவள் திருமணம் நடக்கும்”
அவர்களோடு மதிய உணவை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு சபரீஷ்வர் தன் அலுவலகம் திரும்பினான் சபரீஷ்வர்.
அங்கிருந்து கிளம்பிய பிறகு மீனாட்சி, கிருத்திகாவைப் பார்த்து சிரித்தாள்.
“என்ன?” என்ற கேள்விக் குறியோடு கிருத்திகா அவளைப் பார்த்தாள்.
“சபரீஷ்வர் சின்ன வயது தானே, அதனால் ரொம்ப உணர்ச்சி வசப்படுவான். ஆனால் அவன் மிக நல்லவன். ரொம்ப அன்பானவன் கிருத்திகா. நீ அவனைக் கணவனாக அடைவதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இவன் பெரியப்பா, சித்தப்பா எல்லோருக்கும் இவன் பணத்தில் தான் குறி. அந்தப் பெண் ஷீலாவிடம் இந்த சபரீஷ் மிகவும் அன்பாக இருப்பான். அவள் கேட்டு இவன் எதையும் மறுக்க மாட்டான்” என்று மீனாட்சி அவனைப் பற்றி முழுமையாக விவரித்தாள்.
அன்று மாலை மீண்டும் கிருத்திகாவை பிக்கப் செய்ய வந்து விட்டான் சபரீஷ்.
“எனக்காக நீங்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டுமா? நான் பஸ்ஸில் வந்து விடுவேனே!” என்றாள் கிருத்திகா.
“நான் செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் இனி உன்னுடன் மட்டும் தான் என்று என் மனம் ஆசைப்படுகிறது கிருத்திகா” என்றான் உணர்ச்சிப்பூர்வமாக.
“உங்கள் முகம் மிகவும் சோர்வாக இருக்கிறதே, ஏன்?”
“நான் கருத்திருமன் அங்கிளை அழைத்துக் கொண்டு என் பெரியப்பா, சித்தப்பா வீட்டிற்குப் போய் நம் திருமண விஷயம் பற்றிப் பேசி விட்டு வந்தேன்” என்று நிறுத்தினான். ஆனால் அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
“ஏன் திடீரென்று கோபப்படுகிறீர்கள்?”
“அவர்கள் பேசும் முறை எனக்குப் பிடிக்கவில்லை கிருத்திகா”
மீனாட்சி சொன்னது கிருத்திகாவின் நினைவில் ஓடியது.
“ஏன், அவர்கள் நம் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையா? ஓர் அநாதைப் பெண்ணை ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்களா? ஆனால் அவர்கள் சொல்வதும் உண்மை தானே. நம் மனம் தான் அதை ஒத்துக் கொள்ள மறுக்கிறது”
“கிருத்திகா, உனக்கு எத்தனை முறை சொல்வது? நீ அனாதை என்றால் நானும் பெற்றோர் இல்லாத அனாதை தான். உறவினர்கள் என்ற முறையில் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை, அதைத் தெரிவித்து விட்டேன். அவ்வளவு தான். நாம் ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கலாம். மும்தாஜின் திருமணத்திற்கு முன்பு நம் ரெஜிஸ்டர் திருமணம் முடிந்து விடும். சாம்புத் தாத்தா, ஐயரிடம் சொல்லி முகூர்த்த நாள் கூடப் பார்த்து விட்டார். அடுத்த வாரம் புதன்கிழமை நம் ரெஜிஸ்டர் கல்யாணம். மும்தாஜிடமும் , வயலட்டிடமும் சொல்லி விடு. யாரையாவது ஒருவரை சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்ல வேண்டும்” என்றான் சபரீஷ்.
“என்னது? அடுத்த வாரம் புதன்கிழமையா? இன்று வியாழக்கிழமை ஆயிற்றே? வேலைகள் புயல் வேகத்தில் நடக்கின்றதே?”
“ஆம் கிருத்திகா, நாளை மாலை ஒரு மணி நேரம் முன்னதாக ஆஃபீஸிலிருந்து வந்து விடு. நான் கீழே காரில் வெயிட் பண்ணிக்கொண்டு இருப்பேன். கொஞ்சம் திருமண உடைகள், நகைகள் வாங்க வேண்டும். பாதரிடமும் போனில் சொல்லி விட்டேன். கருத்திருமன் அங்கிளிற்கும், சாம்புத் தாத்தாவிற்கும் கூடச் சொல்லி விட்டேன். எனக்கு அவர்கள் இருவரும் தான் சாட்சிக் கையெழுத்துப் போடப் போகிறார்கள்” என்றான்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, தலைமைச் செயலகத்தில் பணியில் சேர்ந்த பிறகும் கூட கருத்திருமன் வீட்டில் தான் தங்கியிருந்தாள் கிருத்திகா.
மேல் வேலைக்கு மட்டும் வேலைக்காரியை வைத்துக் கொண்டு, அவர்கள் இருவருக்கும் இவளே சமைத்து விடுவாள்.
“ஒரு ஐ.ஏ.எஸ். ஆஃபீஸர் எனக்கு சமைத்துப் போடுவதா? இது ரொம்ப அநியாயம்” என கருத்திருமன் கூற
“உங்கள் இரண்டாவது மகள் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டவள் தானே நான். நான் சமைத்துப் போடாமல் வேறு யார் சமைப்பார்கள்? வேறு யார் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்?” என்று வாதிடுவாள் கிருத்திகா.
அடுத்த நாள் காலையில் எழுந்து அலாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தைக் காட்டியது. எழுந்து பிரஷ் பண்ணி விட்டு, டிகாக்ஷன் இறக்கி விட்டுப் பிறகு குளிக்கலாம் என்று சமையலறைக்குப் போனால், இவளுக்கு முன்பே கருத்திருமன் அங்கிருந்தார்.
“நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் அங்கிள்?”
“நீ செய்வது போல் இமிடேட் செய்யப் பார்க்கிறேன் கிருத்திகா. இங்கே பார், பில்டரில் டிகாக்ஷன் ரெடி. பருப்பும் வேக வைத்து விட்டேன். சாம்பாருக்கு பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கிறது. ஒரு ஸ்டவ்வில் இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது”
“உங்களை யார் அடுப்படிக்கு அடுப்படிக்கு வரச் சொன்னது? நான் ஒருத்தி இங்கிருப்பது மறந்து விட்டதா உங்களுக்கு?”
“அது எப்படி மறக்கும்? இன்று என் பெண்ணுக்குத் திருமணத்திற்கு புடவைகளும், நகைகளும் வாங்க வேண்டும் என்றும், அதனால் மாலை நான்கு மணிக்கு நான் தயாராக இருக்க வேண்டும் என்று நேற்றே என் மாப்பிள்ளை உத்தரவு போட்டு விட்டார். சொன்ன நேரத்திற்குள் தயாராக இல்லையென்றால் என் மாப்பிள்ளை கோபித்துக் கொள்வார்” என்றார் சிரித்தபடி கருத்திருமன்.
அவரைப் பார்த்து கண் கலங்க நின்றாள் கிருத்திகா.
“இப்படியெல்லாம் அடிக்கடி உணர்ச்சி வசப்படக் கூடாது கிருத்திகா. நீ ஒன்றும் எந்த நன்றி வார்த்தையும் சொல்ல வேண்டாம். உனக்கு நான் துணை, எனக்கு நீ துணை… நம் இருவருக்கும் சபரீஷ்வரரே துணை. சரிதானா? காலையில் சிரிக்க வேண்டும். உணர்ச்சிப் பெருக்கால் கூட கண் கலங்கக் கூடாது, சரியா ?” என்றார் கருத்திருமன்.
தன் வரிசைப் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே, ‘சரி’ என்று தலையாட்டி விட்டுப் போனாள் கிருத்திகா.
சிறுவயதில் ஹோமில் உள்ள ஆயா வரிசையாக எல்லோரையும் உட்கார வைத்து விட்டுத் தினம் ஏதாவது ஒரு கஞ்சியை அலுமினியத் தட்டில் ஊற்றும் போதும், வீட்டுப் பாடத்தில் எழும் சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் தப்புத் தப்பாக கணக்குப் பாடத்தை செய்து விட்டு டீச்சரிடம் அடி வாங்கும் போதும், டார்மெட்ரியில் வரிசையாக எல்லோருடனும், ஆனால் மனத்தளவில் தனியாகத் தூங்கும் போது கனவில் பேயைக் கண்டு அலறிப்புடைத்துக் கொண்டு எழும் போது தன்னைத் தட்டித் தூங்க வைக்கத் தாயில்லாமல் தனித்து விட்ட போதும், கடவுளே இல்லை என்று திடமாக நம்பினாள்.
தன் உழைப்பினால் படித்து ஒரு நல்ல வேலை தேடிக் கொண்ட பிறகு, பாதர், கருத்திருமன், சபரீஷ்வர் போன்றோர் காட்டும் அன்பில் மெய்சிலிர்த்துப் போனாள். ‘ஒரு வேளை கடவுள் உடலுழைக்கப் பாடுபவர்களிடம் தான் இருப்பாரோ’ என்று இப்போது ஒரு சந்தேகம் மெல்ல அவள் மனதில் எழுந்தது.
தன் மனமாற்றத்தை சபரீஷ்வரிடம் சொன்னால் என்ன சொல்வான் என்று ஒரு நிமிடம் நினைத்தாள்.
“போடி பைத்தியம், கடவுள் எப்போதும் நம்முள்ளே இருக்கிறார். நாம் நம் மனதை உணர்ந்து கொள்வதைப் பொருத்தது” என்பான்.
இப்போதெல்லாம் அவன் கிருத்திகாவை ‘போடி வாடி’ என்று சொல்வது சகஜமாகிவிட்டது. உரிமை எடுத்துக் கொண்டு அவன் அவ்வாறு பேசுவது, இவளுக்கு மனதிற்குள் சந்தோஷமாக இருந்தாலும், வெளியே கோபித்துக் கொள்வாள்.
அப்போதெல்லாம் அவன் அவளை இறுக அணைத்து அவள் காதில் ரகசியமாய், “அப்படிச் சொன்னால் நீ இப்போது என் பெண்டாட்டி என்று அர்த்தம். ஒருவேளை உனக்கு அது பிடிக்காவிட்டால் ‘போடா வாடா’ என்று பதிலுக்கு சொல்லி விடு” என்று அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதிப்பான்.
அதைப் பெறுவதற்காகவே கிருத்திகா சபரீஷ்வரை அடிக்கடி கோபித்துக் கொள்வது வழக்கம்.
இவ்வாறு பலவும் யோசித்து, குளித்து, சமையல் அறையில் மீண்டும் புகுந்து கருத்திருமனுக்கு உதவி செய்து அவருக்கும் லஞ்ச் பேக் செய்துவிட்டு இவளுக்கும் எடுத்துக் கொண்டாள்.
வழக்கமாக சுடிதரில் அலுவலகம் போகும் இவள் இன்று சின்னச் சின்ன பூக்களால் பிரின்ட் செய்யப்பட்ட ஒரு ஜார்ஜெட் புடவையில் வந்தாள். இன்னும் மெலிதாகத் தோன்றினாள்.
அவசரமாகத் தன் லஞ்ச் பாக்ஸை எடுத்து ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டு, “அப்பா, நான் ஆபீஸிற்குப் போய் வருகிறேன். இன்று மாலை ஒரு மணி நேரம் அனுமதி வாங்கிக் கொண்டு சீக்கிரம் வர வேண்டும் என்று சபரீஷ் உத்தரவு போட்டிருக்கிறார்” என்று கூறிக் கொண்டே தனக்கெனக் காத்திருந்த அரசுக்காரில் தலைமைச் செயலகம் விரைந்தாள்.
‘லிப்ட்’டில் ஏறி அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் போய் அமர்ந்தாள். கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகளும், மேலதிகாரிகளுக்கு கையெழுத்திற்காக அனுப்ப வேண்டிய கோப்புகளும் அவள் மேசை மேல் குவிந்து கிடந்தன. அவற்றையெல்லாம் ஒரு வழியாகப் பரிசீலித்து முடித்த போது சரியாக மணி ஒன்றைக் காட்டியது.
மீனாட்சியும் தன் ‘லஞ்ச்’ பாக்ஸை எடுத்துக் கொண்டு கிருத்திகாவின் அறைக்கு வந்தாள். வந்தவள் கிருத்திகாவைப் பார்த்து மெல்லிய விசிலடித்தாள்.
கிருத்திகா ஏதோ யோசனையில் இருந்தாள். தன் டிபன் பாக்ஸை எடுத்து டேபிள் மேல் வைத்துத் திறந்தாள். இன்னொரு எவர்ஸில்வர் டப்பா ‘தெர்மோஸ்’ போலிருந்தது. ஒரு டப்பாவில் இட்லியும், தெர்மோஸ் டப்பாவில் சாம்பாரும் சூடாக இருந்தது.
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings